வசம்-21

by ஸ்ரீ
8 comments 1.3K views
A+A-
Reset

நாச்சியார் தாய் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே வந்த நேரம் அகத்தியன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியிருந்தான்.

வந்தவன் மூவரின் முகத்தையும் பார்க்க நாச்சியார் தன் பையை தோளில் இரு புறமும் மாட்டிக் கொண்ட வண்ணம் பைக்கின் அருகில் வந்தாள்.

“நான் தான் வந்துறேன்னு சொன்னேன்ல..”

“வேலை முடிஞ்சுது அதான் வந்துட்டேன். என்ன பிரச்சனை?”, என்றவனின் யூகத்தில் முருகனும் வள்ளியும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.

“பெருசா ஒண்ணுமில்ல போகும் போது சொல்றேன். அத்த போன் போட்டுட்டாங்க. கிளம்புவோமா?”

“சரி வா ஏறு.”

“மாப்பிள்ள உள்ளே வாங்க..”

“உங்க மவ தான் கிளம்பச் சொல்லிட்டாளே.. இன்னொரு நாள் வரேன்.”, என்றதில் நாச்சியார் கணவனை முறைத்து வைக்க அவனோ எப்போதும் போல் உணர்வற்ற முகத்தோடு பெரியவர்களிடம் தலையசைத்துக் கிளம்பியிருந்தான்.

தெருவைக் கடந்து மெயின் ரோட்டிற்கு வருவதற்காகவே காத்திருந்தவளாய் கணவனின் இடுப்போடு இறுகக் கட்டிக் கொண்டு அவனது முதுகில் தலை சாய்த்துக் கொண்டாள்.

எதிர்பாராமல் அவள் அணைத்துக் கொண்டதில் ஒரு நொடி தடுமாறியவன் பக்கவாட்டில் திரும்பி,

“என்ன நாச்சியா? அவன் வந்ததுக்கு உங்க அய்யா தையத் தக்கானு குதிச்சாரா மறுபடியும்?”

“அதெல்லாம் இல்லங்க. எனக்கு கொஞ்ச நேரம் இப்படி இருக்கணும்.”, என்றதற்கு ஒன்றும் கூறாமல் அவளது இடக்கரத்தை இன்னுமாய் இழுத்து இறுக்கிக் கொண்டான் அகத்தியன்.

வீட்டிற்கு வந்ததும் மேகலையிடம் இரண்டொரு வார்த்தை பேசி விட்டு மாடிக்கு வேகமாய் வந்தவள் அலமாரியில் எதையோ எடுத்துக் கொண்டிருந்தவனைப் பின்னிருந்து மீண்டுமாய் அணைத்துக் கொண்டாள்.

“இங்கே தான் இருக்கேன் டி சுண்டைக்கா..”, என்றவனின் முகத்தில் அவளுக்கே அவளுக்காக உதிக்கும் அழகான புன்னகை.

அப்படியே நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியிருந்தாள். அகத்தியன் இடையில் எதுவும் பேசாமல் அமைதியாய் கேட்டு முடிக்க அதன் பின்னரே அவனை விடுவித்து தன்புறம் திருப்பினாள்.

“பொண்டாட்டி ரொம்ப தெளிவா யோசிக்க ஆரம்பிச்சுட்டாளே..”

“இப்படியே இருக்கணும்னால் நீங்க என் கூட இப்படியே இருக்கணும்.”

“இப்படியே என்ன? இதை விட நெருக்கமா கூட இருக்கலாம்.”, என்றவன் இடுப்போடு அவளைத் தன்னருகில் இழுத்துக் கொண்டான்.

“எனக்கு இங்கே முத்தம் வேணும்..”, என்ற வாக்கியம் முடிவதற்குள் அழுத்தமாய் நெற்றியில் இதழ் பதித்திருந்தான் அகத்தியன்.

“அதென்ன இங்கே மட்டும்..”

“தெரியலை ஆனா நேத்து நீங்க இங்கே கொடுத்த முத்தம் இப்பவும் அப்படியே நியாபகம் இருக்கு. அது திரும்ப திரும்ப வேணும் போலவும் இருக்கு.”

“வேற என்ன வேணும் மகாராணிக்கு?”

“எங்கேயாவது கூட்டிட்டு போங்க..”

“அது சரி இப்படி சொல்லி ஊரை விட்டு வந்தாச்சு. இதுக்கு மேல போகணும்னால் எங்கே போக?”

“அவ்வளவு சலிப்பா நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்.”, என்றவள் கையை உதறி விட்டு கீழே செல்ல அகத்தியனின் அழகிய புன்னகை இன்னுமும் பெரிதாகியிருந்தது.

கீழே வந்தவள் மாமியாரிடம் அதே பல்லவியைப் பாட அவரும் அந்த முகம் தெரியாதவனுக்கு அர்ச்சனைகளை வாரி வழங்கினார்.

“எல்லாம் சரி தான். உங்கம்மா சொன்ன மாதிரி எல்லாத்தையும் ஏன் டி சொல்லிட்டு கிடக்க?”

“அப்போ தான நான் எதாவது தப்பு பண்ணினா எனக்கு நீங்க சொல்லுவீங்க.”

“அதான் உன் புருசன் இருக்கானே..”

“அவங்களுக்கும் முன்னாடி என்னை நீங்க தான் நல்லா பாத்துக்கிட்டீங்க அத்த..”, என்றவள் அப்படியே மேகலை மடியில் படுத்துக் கொண்டாள்.

“நல்ல பிள்ள டி நீ..”, என்றவர் லேசாய் தட்டி மருமகளை அணைவாய் பிடித்துக் கொண்டார்.

அகத்தியன் கீழே வந்த போது மனைவி தாயின் மடியில் படுத்திருப்பதைப் பார்த்து முறைத்த வண்ணம் அவர்கள் அருகில் வந்து நிற்க நாச்சியாரோ வேண்டுமென்றே எழுந்து கொள்ளாமல் இருந்தாள்.

அதில் இன்னும் கடுப்பானவனாய் அகத்தியன் தாயிடம்,

“ம்மா எனக்கு சாப்பிட என்ன இருக்கு? பசிக்குது..”

“இருல தோசை சுட்டு கொண்டு வாரேன்.”, என்றவர் எழுந்து உள்ளே செல்ல நாச்சியாரின் காதைத் திருகியிருந்தான்.

“ஆ.. வலிக்குதுங்க..”

“என்னையே வெறுப்பேத்துவியா நீ?”

“ஆமா நீங்க தான் எங்கேயும் கூட்டிகிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டீங்களே..”

“சொன்னா பதிலுக்கு இப்படி பண்ணுவியா நீ?”

“ஆமா..”

“சுண்டைக்காவை என்ன பண்றேன்னு பாரு..”, என்ற நேரம் கைப்பேசி அழைப்பு வர எடுத்து பேசிவிட்டு வந்தவன் நாச்சியாரிடம்,

“என்னோட மாடிக்கு வா ஒரு நிமிசம்..”

“எதுக்கு? நான் வர மாட்டேன்..”

“அவ்வளவு ஆயிடுச்சா..”, என்றவன் அவளைத் தூக்குவதற்கு வர வேகமாய் எழுந்து மாடிக்கு ஓடியிருந்தாள்.

சமையலறைக்குள் சென்றவன் மேகலை வைத்திருந்த தோசையில் ஒன்றை சுருட்டிக் கடித்து வைக்க மேகலையோ,

“உட்காருல தட்டுல போட்டு தரேன்..”

“அதெல்லாம் வேணாம். நான் நாச்சியாவோட வெளியே போறேன்.. நீ ராத்திரி கதவைப் பூட்டி படுத்துக்கோ..”

“இந்த நேரத்துக்கு பிள்ளையை எங்கே கூட்டிட்டு போற..”, என்றவர் சிறு இரும்பு ஆணியை அவனிடம் கொடுத்து நாச்சியாரை கையில் வைத்துக் கொள்ளுமாறு கூறினார்.

தங்களறையில் கட்டிலில் அமர்ந்திருந்தவள் கணவன் வந்தது தெரிந்தும் அப்படியே அமர்ந்திருக்க அவளருகில் வந்தவன் அவளோடு அப்படியே பின் சாய்ந்து கட்டிலில் விழுந்திருந்தான்.

நாச்சியார் ஏதோ பேச வருவதற்குள் அவளது அதரங்களைச் சிறை செய்து கொண்டவனாய் அவள் மீது மொத்தமாய் விழுந்திருந்தான்.

கணவனின் வேகத்தைத் தாங்க முடியாதவளாய் அவனிடமிருந்து விலக முயற்சித்தவளுக்கு தோல்வியே மிஞ்சியது.

சில நிமிடங்களில் தானாகவே அகத்தியன் விலகி அவளது முகம் நோக்க மனைவியவளின் தடித்த உதடுகளைக் கவனித்தவன்  தனது கீழுதட்டை லேசாய் பற்களால் கடித்துக் கொண்டான்.

அவன் நகர்ந்ததுமே நாச்சியார் எழுந்து அமர்ந்து கொள்ள அவளது கரத்தோடு தன் கரம் கோர்த்துக் கொண்டவனாய்,

“என்னைக் கடுப்பேத்தனும்னு இன்னொரு தடவை இப்படி பண்ணாத டி..”

“…”

“சரி ரெடியாகு வெளியே போணும்..”

“இப்போவா?!!”

“நீ தான கேட்ட..”

“எங்கே போறோம்?”

“அதெல்லாம் சொன்னா தான் மகாராணி வருவீங்களோ?”

“ஆமா.”

“என்னை ரொம்ப சீண்டி விடுற டி சுண்டைக்கா..”, என்றவன் அருகில் வர வேகமாய் தனது வாயை இரு கரம் கொண்டு மூடிக் கொண்டாள் நாச்சியார்.

அதைப் பார்த்தவனுக்கோ சிரித்து சிரித்து கண்களில் நீர் கோர்த்து விட்டிருந்தது.

அவனையேப் பார்த்திருந்தவளாய் தனது துப்பட்டாவை மட்டும் மேலே போட்டுக் கொண்ட வண்ணம் கிளம்பி நிற்க அகத்தியன் அவளிடம்,

“அன்னைக்கு கடையில் ஜீன்ஸ் வாங்கினோமே? உள்ளே வைச்சு பூஜையா பண்ண போற?”

“அதெல்லாம் நல்லாயிருக்குமோ என்னவோங்க..”

“எல்லாம் நல்லாயிருக்கும் மாத்திட்டு வா..”, என்றவனுமே டிஷர்ட் ஷார்ட்ஸை மாற்றியிருந்தான்.

ஜீன் பேண்ட்டும் ஷார்ட் குர்தாவுமாய் வந்து நின்றவளை விழிகளால் விழுங்கிக் கொண்டே கண்ணாடியில் தயாரானவனின் அருகில் வந்து நின்றவளாய்,

“நல்லாவா இருக்கு.. எனக்கு என்னவோ போல இருக்கு..”

“உனக்கு போட பிடிச்சுருக்கா இல்லையா?”

“ஆசைப்பட்டுருக்கேன் அதனால பிடிச்சுருக்கு தான்..”

“அதுக்கு மேல என்ன யோசனை.. கிளம்பு..”

“அப்போ நல்லாயில்ல தான? எனக்காக போட்டுக்க சொல்றீங்க..”

“நானே அமைதியா இருக்கணும்னு கஷ்டப்பட்டு இருக்கேன். ரொம்ப சீண்டி விட்டுட்டே இருந்தனு வை..”, என்றதில் வாயை மூடிக் கொண்டாள்.

மேகலையிடம் கூறிவிட்டு இருவருமாய் வண்டியில் கிளம்பும் போதே மணி இரவு ஒன்பதை தொட்டிருந்தது.

மாலையைப் போலவே கணவனைப் பின்னிருந்து இறுகக் கட்டிக் கொண்டவளாய் முதுகில் தலை சாய்த்து எதிர் காற்றில் தன்னைத் தொலைத்துப் போனாள்.

“தூங்குமூஞ்சி எந்திரி டி. இறங்க வேண்டிய இடம் வரப் போது..”

“நான் ஒண்ணும் தூங்கலை..”, என்றவள் தலை நிமிர்த்த ஒரு சில படகுககளும் சிலரும் நிற்பதைப் பார்த்து இங்கு எதற்கு என கேள்வியாய் பார்த்திருந்தாள்.

“அண்ணே வாங்க.. எல்லாம் ரெடி..”, என்றபடி அவனின் கல்லூரி ஜுனியர் ராஜா வந்து நின்றான்.

வண்டியில் இருந்து இறங்கியதுமே கணவனின் மணிக்கட்டில் இரு கைகளையும் வைத்துப் பிடித்துக் கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்து நின்றாள்.

கடலை நோக்கி நடந்தவனின் பின் அமைதியாய் வந்தவள் படகில் ஏறுமாறு அவளிடம் செய்கை காட்ட ஆச்சரியத்தில் விழி விரித்தவளாய் நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.

ராஜா ஏறிய பின் அகத்தியனுக்கு கை கொடுக்க அவன் ஏறி நாச்சியாருக்கு கரம் கொடுத்து உள்ளே ஏற்றினான். மற்றவர்களுக்கு கையசைத்து விடைபெற இவர்கள் மூவருமாய் அந்த படகில் கிளம்பியிருந்தனர்.

“அண்ணே நான் கீழே தான் இருப்பேன் எதுனாலும் குரல் கொடுங்க.. சாப்பாடு தண்ணி எல்லாம் அங்கன வைச்சுருக்கேன்.”, என்றவன் நாச்சியாரிடம் புன்னகைத்து படகின் கீழ் பகுதிக்குச் சென்றிருந்தான்.

அதற்காகவே காத்திருந்தவனாய் அகத்தியன் மனைவியின் இடைப்பற்றி தன்னோடு நெருக்க ஒரு நொடி பதறியவளாய் ராஜா இருந்த இடத்தைப் பார்த்துக் கொண்டாள்.

பௌர்ணமி முடிந்து இரு தினங்கள் ஆகியிருக்க அந்த பால் நிலவின் வெளிச்சம் கடல் அலையில் அலை அலையாய் நெளிந்து மினுமினுக்க காற்று மனதின் புழுக்கங்களை எல்லாம் அடியோடு அகற்றுவதாய் இருந்தது.

அதை விட தன்னை நெருங்கி நிற்பவன் உலகையே மறக்கச் செய்யும் ஒரு காரணியாக அருகில் நின்றிருந்தான்.

தன்போல் அவளின் கரம் கணவனின் கழுத்தைச் சுற்றிக் கொள்ள அவளின் விருப்பமான நெற்றி முத்தத்தை அளித்தவன் அவளை அழைத்துச் சென்று அமர்த்தினான்.

இன்னமும் நாச்சியாருக்கு தன் கண்ணில் பார்ப்பதை நம்ப முடியவில்லை. சுற்றிலும் தண்ணீரால் நிரம்பியிருக்க நிலவும் காற்றும் அமைதியும் என ரம்மியமான இரவு நேரம்.

கடற்கரையில் நின்று பார்க்கும் போது தெரியும் கடலாய் இப்போது இது இருக்கவில்லை. சிறு வயதில் பீச் போகலாம் என்று கேட்டால் வருடத்திற்கு ஒரு முறை அழைத்துச் சென்றாலே பெரிய விஷயம் எனுளவிற்கு தான் வாழ்க்கை இருந்தது.

நிறைய நிறைய கட்டுப்பாடுகள் நிறைந்தது தானே பெண்ணின் வாழ்க்கை. ஆனால் இன்று எங்காவது அழைத்துப் போ என்றதற்கு அந்த ஆழ்கடலின் அமைதியை அல்லவா பரிசாய் வழங்கி விட்டான் அவளின் கணவன்.

அந்த சிந்தனைகளில் இருந்தவளின் நாசியைத் தழுவியது அவளின் விருப்பமான புரோட்டாவின் வாசனை.

தலையை கணவனின் புறம் திருப்ப அவளுக்கான உணவை வாயருகில் நீட்டிப் புன்னகைத்தான் அகத்தியன்.

அமைதியான அவள் முகத்தில் அழகான சிறிதான புன்னகை குடியிருக்க உணவை வாங்கிக் கொண்டவள் தானுமாய் எடுத்து அவனுக்கு ஊட்டினாள்.

வேண்டுமென்றே விரல்களை மொத்தமாய் ஈரமாக்கிய படி அகத்தியன் உணவை வாங்கிக் கொள்ள நாச்சியாருக்கோ வெட்கத்தில் முகம் சிவந்தது.

“மகாராணிக்கு பிடிச்சுருக்கா?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்து புன்னகைத்தாள் நாச்சியார்.

“என்ன பிடிச்சுருக்கு கடலையா? நிலாவையா?”, என்றதற்கு பதில் கூறாமல் அவனை நோக்கி விரல் நீட்டியிருந்தாள்.

“சுண்டைக்கா.. இங்கே வா..”, என்றவனின் குரலே மாறியிருக்க அதை உணர்ந்தாலும் எவ்வித தயக்கமும் இன்றி அவன் முன் அமர்ந்து மார்போடு தனது முதுகு சாய்த்துக் கொண்டாள்.

அடுத்த நொடி அவளது கழுத்து வளைவில் அழுத்தமாய் அவன் கடித்து வைக்க வலியில் முனகியவளை தனது முத்தத்தால் அமைதிப் படுத்தினான்.

“உன் அத்தை மடியில் படுத்ததுக்கு தான் இந்த கடி..”

“…”

“பேசுடி.. நிறைய நிறைய பேசு.. நான் கேட்டுட்டே இருக்கணும் இந்த கீச்சு குரலை..”, என்றவனின் கரமோ அவளை பேச விடாத வண்ணம் வெற்றிடையில் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தது.

“எல்லாத்துக்கும் தேங்க்ஸ்..”, என்றவள் லேசாய் திரும்பி கணவனின் விழிகளை நேருக்கு நேராய் நோக்கினாள்.

“உங்களை இவ்வளவு பிடிச்சுரும்னு நான் நினைக்கவே இல்ல.. சின்ன வயசிலிருந்து எனக்கு பெருசா எந்த கஷ்டமும் கிடையாது.

அதனால தானோ என்னவோ ஒரு பிரச்சனை வந்து வாழ்க்கையை எனக்கு புரிய வைச்சுருக்குனு நினைக்குறேன்.”

“..”

“நான் ரொம்ப ரொம்ப பலகீனமான ஒருத்தியா தான் உங்ககிட்ட வந்தேன். ஆனால் எந்த நிலைமையிலேயும் நீங்க அதை பயன்படுத்திக்க நினைக்கல..”

“..”

“என் வயசுக்கும் அறிவுக்கும் எவனைப் பார்த்தா பயம் வருதோ அவன் தான் ஹீரோனு நினைச்சுருக்கேன்.

ஆனா உண்மையா எனக்கு பயமா இருக்கும் போது யாருகிட்ட எந்த யோசனையும் இல்லாம ஓடி வர முடியுதோ அவன் தான் ஹீரோனு புரிஞ்சுகிட்டேன்.”, என்றவள் அவனது கரத்தை தன்னோடு இன்னுமின்னும் இறுக்கிக் கொண்டு ஒன்றிக் கிடந்தாள்.

அவ்வளவு நெருக்கத்தில் பெண்ணும் பெண்ணின் பார்வையும் அகத்தியனை உள்ளுக்குள் வெறி பிடிக்க வைத்துக் கொண்டிருந்தன.

“இப்படி இருட்டுல இருக்க பயமில்லையா?”

“உங்க கூட இருந்தா எங்கே வேணாலும் இருப்பேன்.”

“நான் சரியான கடுவன் டி.. ரொம்ப கோவம் வரும்.. உன்னைச் சமாதானப்படுத்த கூட வராது. காதல் வசனமெல்லாம் சுட்டு போட்டாலும் பேச மாட்டேன்.”, என்றவன் தன்னவளை இன்னுமின்னும் தன்புறம் நெருக்கி வைத்துக் கொண்டான்.

“பரவால்ல.. எனக்கு எல்லாமுமா எப்பவும் இருங்க வேற எதுவும் வேண்டாம்..”

“இப்போ சொல்லுவ சுண்டைக்கா.. போக போக உனக்குத் தோணும் நான் இப்படியில்ல அப்படியில்லனு..”

“எப்படியும் இருக்க வேணாம் ஆயுசுக்கும் என் கூட இருந்தா போதும். எனக்கு நீங்க மட்டும் போதும்.”, என்றவளை அப்படியே தூக்கி தன் மீது அமர்த்திக் கொண்டான்.

அவளது பின்னங்கழுத்தை அழுத்திப் பிடித்திருந்தவனின் கரம் அவள் தலையில் இருந்த க்ளிப்பை எடுத்து விட அவளது முடிக்கற்றைகள் காற்றில் பறந்து இருவரின் முகத்தையும் மறைத்திருந்தது.

தலை தாழ்ந்திருந்தவள் நொடிநேர தயக்கத்திற்கு பின் தனது விழிகளை மூடிய வண்ணம், நெற்றி முட்டியிருந்தவனின் அதரங்களை தனது அதரங்களால் பட்டும் படாமல்  நெருங்கியிருக்க ஆணவன் மொத்தமாய் இதழ்களைக் களவாடியிருந்தான்.

“என்னை பைத்தியமாக்குற டி நாச்சியா..”, என்றவன் உதடுகள் அவளது காதுமடல் உரச பெண்ணவளுக்கோ அந்த நொடியை சமாளிப்பது பெரும் தவிப்பாய் இருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

8 comments

MalarMurugan August 20, 2026 - 8:21 am

நாச்சியார் அகத்தியா 😍😍😘❤‍🔥
நல்ல மாமியார் 🤗🤗🤗

Kavi Natarajan August 20, 2026 - 8:21 am

😍😍😍😍😍😍😍😍😍😍😍

SME August 20, 2026 - 8:25 am

Lovely update 🥰🥰🥰🥰

Superb update sis 👏

Raji Vijay August 20, 2026 - 8:31 am

Semma naachi.. Ivlo purithal, thelivu.. idhu agathiyan &megalai kudutha anbum, nambikaiyum naala naachiku kidaithadhu. Happy

srichitra August 20, 2026 - 10:44 am

Nice

gomathyraja August 20, 2026 - 11:58 am

Lovely epi

suganyavel August 20, 2026 - 3:50 pm

Super💕

Mathy August 22, 2026 - 9:14 am

Lovely update 💕💕💕💕
அகத்தியன் நாச்சியார் புரிதல் சூப்பர் 🥰🥰🥰

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode