வசம்-13

by ஸ்ரீ
10 comments 1.3K views
A+A-
Reset

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்

மு.வ விளக்க உரை: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

“எப்படி நாச்சி உன்னால இப்படி உடனே மனசை மாத்திக்க முடிஞ்சுது?”

“…”

“கொஞ்சம் கூட உறுத்தலையா டி?”

“என் இடத்தில நீ இருந்திருந்தா இப்படியெல்லாம் பேசிருக்க மாட்ட.. யாரை நம்பி போனேனோ அவனால…”

“!!”

“நான் எதுவும் பேச விரும்பல. இதனால நான் தப்பானவளா தெரிஞ்சா அப்படியே நினைச்சுக்கோ.”, என்ற நேரம் ஆசிரியர் வந்ததில் அவர்கள் பேச்சு அப்படியே தடை பட்டிருந்தது.

இடைவேளையிலும் நாச்சியார் யாரோடும் பேசாமல் அமைதியாகவே இருந்து கொண்டாள். ஆனால் அவளைத் தெரிந்த அத்தனைப் பேருக்கும் அன்றைய தினம் அவள் தான் பேசு பொருளாகிப் போயிருந்தாள்.

“நீ எதையும் மனசில் வைச்சுக்காத நாச்சி.. என்னவோ இவங்க எல்லாம் உத்தமங்க மாதிரி பேசிட்டு இருக்காங்க..”, என்ற தோழிக்கு வெற்றுப் புன்னகையைப் பதிலாய் கொடுத்தாள்.

மாலை கல்லூரி முடிந்து அகத்தியனுக்கு அழைக்க பத்து நிமிடத்தில் வருவதாய் கூறினான். அதுவரை வெளியில் செல்ல வேண்டாம் என கல்லூரிக்குள்ளேயே காவல்காரரின் அறைப் பக்கத்தில் நின்றிருந்தாள்.

எதை எதிர்கொள்ள பயந்தாளோ அந்த சூழலும் உருவாகித் தான் போனது. அவன் நாச்சியாரைத் தேடி வந்திருந்தான். அவனைக் கண்டு நாச்சியார் அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான்.

தன்னையே திடப் படுத்திக் கொண்டவளாய் அவனை நேருக்கு நேர் எதிர் கொண்டாள்.

“நாச்சி என்னை மன்னிச்சுரு. அவசரத்துல போனதுல உன்னை ஒழுங்கா கவனிக்காம போயிட்டேன். இனி பொறுப்பா இருப்பேன் டி. என்னால நீ இல்லாம வாழ முடியாது நாச்சி..”

“…”

“நான் வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். உன்னை நல்லா பாத்துக்குவேன்..”

“ஏய்…”, என்றவள் பல்லைக் கடித்த படி அவனது பேச்சை நிறுத்தினாள்.

“கல்யாணமானவகிட்ட என்ன பேச்சு பேசுத?”

“உன் விருப்பமில்லாம நடந்த கல்யாணம்னு எனக்கில்ல ஊருக்கே தெரியும் நாச்சி. பிடிக்காத கல்யாணத்துல இருந்து கஸ்டப்படாத. என்னால நீ கஸ்டப்படுறதை பார்க்கவே முடியாது.”

“ஓ அப்படியா? அப்போ, கூட வந்தவ, ஒரு நாள் முழுசும் சாப்பிட்டாளா? இருக்காளா செத்தாளானு எதுவும் தெரியாம ஊரைச் சுத்திட்டு வந்தியே அப்போ தெரியலையா என் கஸ்டம்?”

“நாச்சி..”

“இங்கே பாரு. நடந்த எதிலேயும் என் தப்பு கிடையவே கிடையாது. இருந்தாலும் உன்கிட்ட நடந்த எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்குறேன். இதுக்கு மேல என் பின்னாடி வராத..”

“அப்படி தான் டி வருவேன் என்ன பண்ணுவ?”

“!!”

“நல்ல ஊமைக் கொட்டான் மாதிரி இருந்து எனக்கே விபூதி அடிக்க பாக்குறல நீ? உன் அப்பன் என்னைய அறைஞ்சுருக்கான். அந்த ஆளால என் வேலை போச்சு.

இப்போ நீ என்னடானா எதோ கதை சொல்லிட்டு இருக்க? இங்கே பாரு ஒழுங்கா மரியாதையா நான் சொல்றதைக் கேளு. இல்ல..”

“இல்லைனால் என்ன பண்ணுவ?”, என்ற படி நாச்சியாரின் அருகில் வந்து நின்றான் அகத்தியன்.

அத்தனை நேரம் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருந்தவனுக்கு வாய் ஒட்டிக் கொண்டது.

“சொல்லுல என்ன பண்ணுவ?”

“!!”

“உன்ட்ட அன்னைக்கே சொன்னேன் இனி உன்னை இவ பக்கமே பார்க்க கூடாதுனு.

அதை மீறியும் வந்துருக்கனால் எம்புட்டு ஏத்தம் இருக்கணும் உனக்கு.”, என்றவனின் தொனியே அடுத்து அவனை அடிக்கத் தான் போகிறான் என்பதை பறைசாற்ற நாச்சியார் பட்டென அவனது கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ஏங்க ப்ளீஸ் நாம போலாம்..”

“என் பொண்டாட்டியவே ஒருத்தன் மிரட்டிட்டு கிடக்கான். எங்க போக சொல்ற?”, என்ற படி அவள் புறம் திரும்பியவனின் கோப முகத்தைக் கண்டு பயந்து போனாள் நாச்சியார்.

“சொல்லுலே என்ன பண்ணுவ?”, என்றதில் இரண்டடி பின்னால் நகர்ந்தவன் அப்படியே அங்கிருந்து ஓடியிருந்தான்.

கோபத்தை அடக்க முயன்றவனாய் சட்டையை கீழே இழுத்து விட்ட படி அக்கம் பக்கம் இருந்தவர்களின் மேல் காரப் பார்வை வீசிய படி மீசையை முறுக்கி நின்றான்.

அகத்தியன் வண்டியைக் கிளப்ப ஒன்றும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டாள் நாச்சியார்.

“என்ன மறுபடியும் வாய்க்கு பூட்டு போட்டாச்சா?”

“இல்ல நீங்க கோவமா இருந்தீங்க..”

“இப்போ கோவம் இல்ல.. சொல்லு..”

“நீங்க ஏன் அவனளவு இறங்கிப் போய்.. அதனால தான் போலாம்னு சொன்னேன்.”

“சல்லிப் பயல ஒரு நாள் நல்லா வெளுத்து விட போறேன் அப்போ தான் அடங்குவான்.”

“என் மேலயும் தப்பு.. இருக்கு..”, என்றவளின் குரல் உள்ளே சென்றிருந்தது. வண்டியின் கண்ணாடி வழி அவளைக் கவனித்தவனாய்,

“உன் தப்பு பெருசா நீ பெருசானு யோசிச்சா எனக்கு நீ தான் பெருசா தெரியுத.”

“!!”

“காபி குடிச்சுட்டு போவோமா?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தாள் நாச்சியார்.

அங்கிருந்த கடையில் நிறுத்தியவன் காபி சொல்லி விட்டு அவளிடம் வேறெதுவும் வேண்டுமா என்று கேட்க வெங்காய போண்டாவை நோக்கி கை நீட்டினாள்.

ஒன்று மட்டும் வாங்கி வந்தவன் அவளிடம் அதைக் கொடுக்க அவனுக்காக நீட்டினாள் நாச்சியார். பெரிதாய் பிகு செய்யாமல் அதிலிருந்து பிய்த்து உண்ண ஆரம்பித்திருந்தான்.

அகத்தியனுக்கு ஏதோ அழைப்பு வர அதில் பேசிக் கொண்டிருந்தவனைத் தான் விழியகற்றாமல் பார்த்திருந்தாள். அவளது தந்தை இப்படியெல்லாம் கிடையாது.

அவளது தாயிடம் இது வேண்டுமா அது வேண்டுமா என்றெல்லாம் கேட்க மாட்டார். அவராகவே எதையாவது வாங்கி வந்து கொடுக்க அதை தான் வள்ளி உண்பார்.

பிள்ளைகள் சற்றே விதிவிலக்கு அதிலும் பேச்சியம்மாள் கேட்டதை வாங்கித் தரவில்லை எனில் சிறு வயதில் அப்படியே அழுது கரைய ஆரம்பித்து விடுவாள்.

நாச்சியாரோ பிடிக்காததை கொடுத்தால் பெயருக்கும் திரும்பி கூட பார்க்காமல் அதை வீணாக்கி விடுவாள். அதனால் அவர்களிடம் மட்டும் வேண்டியதைக் கேட்டு வாங்கித் தருவார்.

கொடுமைக்கார தந்தை இல்லை தான் ஆனால் ஏதோ ஓரிடத்தில் அவர்களின் பிடி அவரிடத்தில் இருப்பதான ஆளுமை தான் அவருடையது.

ஆனால் இப்போது அகத்தியன் அப்படி இல்லை. அவளுக்கான முழு சுதந்திரமும் அவனிடத்தில் இருப்பதாய் தோன்றியது நாச்சியாருக்கு.

அவளது உணர்வுகளுக்குப் பெரிதாய் மதிப்பு கொடுக்கிறான் என்பதும் உண்மை. அவனுக்கான உரிமையை அன்றைய முத்தமே அவளுக்கு உணர்த்தியிருந்தது.

இருந்தும் வரம்பு மீறாமல் அவளை அடக்க நினைக்காமல் அவன் தள்ளி நிற்பது அவளுக்கு அவன் மீது பெரும் மதிப்பைக் கொடுத்திருந்தது.

ஊருக்குத் தெரியும் அகத்தியன் இல்லை நிஜமானவன் என்று தோன்றியது. அழைப்பை முடித்தவன் அவள் முன் கையசைத்து சிந்தனைகளில் இருந்து திருப்பியிருந்தான்.

“அகத்தியன் ண்ணே..”

“வாலே ராஜா.. என்ன இந்தப் பக்கம்?”

“ஒரு வேலையா வந்தேன். உங்களைப் பார்த்ததும் இங்கன வந்துட்டேன்.”

“காபி எதுவும் சாப்பிடுதியா?”

“அதெல்லாம் வேண்டாம்ண்ணே..”, என்றவன் நாச்சியாரைப் பர்த்து தயங்கி நின்றான்.

“என் பொண்டாட்டியை மறந்து போச்சோ?”

அண்ணே மதினியை தெரியாம இருக்குமா?”

“அப்பறம் என்ன தயக்கம் விஷயத்தைச் சொல்லு..”

“ஒரு, ஒரு லட்சம் வேணும்ண்ணே.. அப்பாக்கு கை ஒடஞ்சுட்டு. ஆபேரேஷன் பண்ணணும்னு சொல்றாங்க..”

“இதுக்கா இம்புட்டு தயங்குன?”

“முன்னாடி பரவால்ல, இப்போ உங்களுக்கும் குடும்பம்னு வந்துட்டுல.. அதான்.”

“மூளையை ரொம்ப யூஸ் பண்ணாதலே எந்த உதவினாலும் எப்பவும் போல கேளு.”, என்றவன் கைப்பேசியிலிருந்து தலையை நிமிர்த்தி அவனிடம்,

“பணம் அனுப்பிட்டேன்ல வேற எதுவும் தேவைனாலும் சொல்லு என்ன?”

“ரொம்ப தேங்க்ஸ் ண்ணே.. மாச மாசம் சரியா பணத்தைக் கொடுத்துருவேன். வாரேன் மதினி.”, என்றவன் கிளம்பியிருந்தான்.

“வா போவோமா இல்ல இங்கனயே அடுத்த கடை போட்டுருவோமா?”, என்றதில் அவனோடு நடக்க ஆரம்பித்தாள் நாச்சியார்.

“அந்த பய என் ஸ்கூல் ஜுனியர். கஸ்டப்பட்ட குடும்பம். அவன் ரொம்ப நல்ல மாதிரி. பண நெருக்கடினால் கேட்பான். அப்பறம் சரியா திருப்பிக் கொடுத்துருவான்.”

“..”

“உன்ட்ட தான சொல்லுதேன். தேமேனு தலையை ஆட்டுத?”

“நீங்க சொல்றதை கேட்டுகிட்டேன். வேற என்ன பண்ண?”

“புருசன் காசை இப்படி கொடுக்கானேனு கோவமெல்லாம் வரலையோ?”

“உதவி தானே பண்றீங்க…”

“ஓ அப்போ ஊதாரியா செலவழிச்சா கோவம் வரும்?”

“உங்களுக்கு ஏத்த மாதிரி எனக்கு பேச வரலைங்க..”, என்றவளை கண்ணாடி வழி பார்த்தவனுக்கு மெலிதான புன்னகை.

வீட்டு வாசலில் நாச்சியாரை இறக்கி விட்டு அப்படியே வண்டியைத் திருப்பிக் கிளம்பியிருந்தான் அகத்தியன்.

“அத்த..”

“வாடி.. கை கால் கழுவி வா நான் காபி போடுதேன்.”

“வர்ற வழியில வங்கிக் கொடுத்தாங்க அத்த..”

“சரியான கஞ்சப் பய டி. ஆனா நீ வந்த பிறவு பரவால்ல. உனக்காக செலவு பண்ணுதான்.”

“ம்ம்..”

“என்ன டி யோசனை?”

“இன்னைக்கு காலேஜில்..”, என்றவள் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க மேகலையோ,

“எவ டி அவ உன் கூட படிக்குற அழகி. நாளைக்கு என்ட்ட காமி. என்ன பேசணுமோ என்ட்ட பேசட்டும். அந்த எடுபட்ட பய திரும்ப வந்தா நாலு அடி கொடுத்து விரட்டி விடு. இதுக்கெல்லாம் மூஞ்சியைத் தொங்கப் போட்டு இருக்காத டி..”

“இதைப் போய் எங்கம்மாட்ட சொல்லிருந்தேன்னா தோசை கரண்டியை வைச்சு பிரட்டி எடுத்துருப்பாங்க. நீங்க என்னனென்னா..”

“ஒரு வகையில் உங்க அம்மா அப்பா கோவம் நியாயம் தான. உன்னை எச்சரிக்கை பண்ணிருப்பாங்க பாதுகாக்க முயற்சி பண்ணிருப்பாங்க.

ஆனா அதை மீறி இப்படி ஒண்ணு நடந்துருச்சேங்கிற வயித்தெரிச்சல் இருக்க தான் செய்யும்.”

“நீங்க எனக்காக இருப்பேன்னு சொல்லிட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க?!”

“அடியேய் சப்போர்ட்டாவும் இல்ல கொய்யாவும் இல்ல. எதார்த்தத்தை சொல்றேன். எனக்கு என்னமோ உன் மூஞ்சியையும் கீச்சு குரலையும் கேட்டா திட்டவே தோண மாட்டேங்குது டி”

“என்னை கேலி தான பண்றீங்க?”

“அட.. நிஜமாவே குழந்தை பிள்ளை மாதிரி இருக்குற இந்தக் குரலைக் கேட்டு எப்படி கேலி பண்ணத் தோணும்.”

“சரி போய் ட்ரெஸை மாத்திட்டு வா. கோயிலுக்கு போயிட்டு வருவோம்.”, என்றவருக்குத் தலையசைத்து மாடிக்குச் சென்றாள்.

மொட்டை மாடிப்புறம் திரும்பியவளுக்கு சோற்றுக் கற்றாழை செடியும் துளசிச் செடியும் கண்ணில்பட்டது. ரோஜாக்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்ற கீழே சென்ற போது மேகலையிடம் கூறினாள்.

“அதுக்கென்ன வாங்குனா போச்சு. கோயிலுக்கு போயிட்டு வர்ற வழியிலேயே நர்சரி ஒண்ணு இருக்கும் வாங்கிட்டு வருவோம்.”, என்றவரோடு வண்டியில் கிளம்பியவள் ஆறேழு நிற ரோஜாச் செடிகளோடு தான் வீட்டிற்கு வந்தாள்.

மேகலையோடு சேர்ந்து வீட்டிலிருந்த தொட்டிகளில் அந்தக் கன்றுகளை மாற்றியவள் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டு போய் மாடிச் சுவற்றில் வைத்து விட்டு கீழே வந்து பார்த்து ரசித்து நின்றாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

10 comments

MalarMurugan August 15, 2026 - 3:59 pm

அகத்தியா 😍😍😘😘😘❤‍🔥❤‍🔥
பாருடா இவனா கஞ்சம் 😏😏
மேகலை 🤗🤗🤗
நாச்சியார் 🤗🤗🤗

SME August 15, 2026 - 4:05 pm

❤️❤️❤️❤️❤️❤️

Aandal Venkatraghavan August 15, 2026 - 5:28 pm

அடிபொலியா இருக்குதே எபிசோட்😍😍😍😍😍😍 எதை சொல்ல எதை விடனு கூட தெரியலை. அத்தனையும் அம்சம்.. அதுலயும் மேகலை தான் வேற லெவல்.. அகத்தியன்… இவனை நினைச்சாலே ஷை ஷை கமிங் 🙈🙈🙈

srichitra August 15, 2026 - 5:46 pm

மிகவும் அருமை. நல்ல மாமியார் நல்ல மருமகள். அகத்தியன் நல்லவனாக இருக்கிறான்.

suganyavel August 15, 2026 - 5:56 pm

Super💕

Fathima.ar August 15, 2026 - 6:26 pm

Nice update

Kavi Natarajan August 15, 2026 - 11:24 pm

Nalla mamiya and nalla husband

Raji Vijay August 16, 2026 - 7:31 am

Superb update sis. Megalai kalakureenga. Ippadi maamiyaar rai thaan manasu ethir paarkum. Agathiya romba nallavan pola.

gomathyraja August 16, 2026 - 5:17 pm

Superb

Mathy August 16, 2026 - 8:34 pm

சூப்பர் அப்டேட் 💕💕💕💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode