1.2K
“எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
மு.வ விளக்க உரை: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.”
கல்லூரியில் நாச்சியாரின் சிந்தை மொத்தத்தையும் கணவன் தான் ஆக்கிரமித்திருந்தான். தங்களுக்குள்ளே நடந்து விட்டதை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.
உடல் தேவை எல்லாம் கடந்து அவள் மீதான அவனின் பிடித்தம் தான் பெண்ணவளை அவன் பால் மொத்தமாய் சாய்த்திருந்தது.
உரிமையை நிலை நாட்டியதை விட அவனின் அன்பின் தேடலுக்கான வடிகாலாய் அல்லவா அவளை ஏற்றுக் கொண்டிருந்தான்.
கடந்த காலத்தின் மீதான சிறு சிறு சுணக்கங்களை மொத்தமாய் தலை முழுகிவிட முடிவெடுத்திருந்தாள்.
தோழியும் கூறியது போல் கணவனுக்கும் தன்னை மகள் போல் பார்த்துக் கொள்ளும் மாமியாருக்கும் பிடித்த மாதிரி வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தாள்.
கல்லூரி முடிந்து ஒரு வித உற்சாகத்தோடு கிளம்பியவள் அகத்தியனுக்கு அழைக்க அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அத்தோடு அவனிடமிருந்து குறுஞ்செய்தியும் வந்திருந்தது.
“மீட்டிங்ல இருக்கேன் நாச்சியா.. நீ பஸ்ஸில் போயிடு..”, என்றதற்கு பதில் அனுப்பி விட்டு வந்து பேரூந்து நிறுத்தத்தில் நின்றாள்.
பேரூந்து வருகிறதா என்பதைப் பார்க்க திரும்பியவளின் கண்ணில் பட்டான் அவன். அன்று அவள் கத்தியதோடு காணாமல் போனவனை இன்று மீண்டும் பார்த்ததில் சிறு உறுத்தல் நாச்சியாருக்கு.
என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியமும் இருந்தது தான். அவள் நினைத்த படியே அவளருகில் வந்து நின்றவன் கையைப் பற்ற எத்தனிக்க சட்டென ஒரு அடி தள்ளி நின்றாள்.
“நீ முதல்ல இருந்தே தெளிவா தான் டி இருந்துருக்க..”
“..”
“காலேஜ் படிக்கும் போது சுத்துறதுக்கு ஒருத்தன். அப்பறம் நல்ல பசையுள்ள பார்ட்டியா பார்த்து கட்டிக்க ஒருத்தன்னு..”
“…”
“நான் தான் உன்னால வாழ்க்கையைத் தொலச்சுட்டு நிக்குறேன். எப்படி டி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம காலேஜுக்கு வந்து போற..”, என்றதில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இவர்களைக் கவனிப்தை அடிப்பார்வை பார்த்து நின்றிருந்தாள் நாச்சியார்.
“என்ன உன் புருசன் வந்து காப்பாத்துவான்னு நிக்குறியா? உன்னை விட பெரிய வெட்கங் கெட்டவனா இருப்பான் போல.. ஒருத்தனோட ஓடிப் போனவளை கட்டிகிட்டு..”, என்ற வாக்கியத்தை முடிப்பதற்குள் அவனை அடித்திருந்தாள் நாச்சியார்.
“வார்த்தையை அளந்து பேசு. என்னல வேணும் உனக்கு? இவ்வளவு பேசுறியே நீ என்ன என்னை உண்மையா காதலிச்சா கூட்டிகிட்டு போன? எங்கப்பாவை பழி வாங்க தான அப்படி செஞ்ச..”
“!!”
“உனக்கே வெட்கம் மானம் இல்லாதப்போ நான் ஏன்ல தலை குனியணும்? பணத்துக்கும் உன் திமிருக்கும் என்னை ஏமாத்த நினைச்ச நீ தான்ல போய் தொங்கணும்.”
“ஏய்…”
“இன்னும் ஒரு வார்த்தை பேசுனாலும் செருப்பு பிஞ்சு போயிரும்.”
“!!!”
“ப்ரெண்ட் அப்பா அம்மானு யார் பேச்சையும் நம்பாம போனதுக்கு தான் நல்லா அனுபவிச்சுட்டேன். இன்னமும் உன்னை நம்புவேன்னு நினைச்சியோ?”
“!!”
“இன்னொருத்தன் பொண்டாட்டிட்ட வந்து முதல்ல என்னல பேச்சு வேண்டியது இருக்கு உனக்கு? தரங்கெட்ட வேலையை நீ பண்ணிட்டு என் புருசனை பத்தி பேசுத?”
“..”
“இதோ பாரு.. இன்னொரு தடவை என் பக்கம் வந்தா நானே போலீஸில் பிடிச்சு கொடுத்து கம்பி எண்ண வைச்சுருவேன் பாத்துக்க.. போலே இங்கிருந்து..”, என்று நாச்சியார் கத்திக் கொண்டிருக்க தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த முருகன் மகள் நிற்கும் கோலத்தைப் பார்த்து வண்டியைத் திருப்பிக் கொண்டு வேகமாய் அவள்புறம் வந்திருந்தார்.
“நாச்சி!!”
“இந்தா எங்கப்பாவே வந்துட்டாரு. இவரு மேல தான உனக்கு ஆத்திரம். என்ன பண்ணலம்னு சொல்லுல..”
“எலே நாச்சி.. இவனோட என்ன பேச்சு வேண்டியிருக்கு. நீ வா..”
“ப்பா.. எனக்காக ஒண்ணு மட்டும் பண்ணிக் கொடுங்க..”! என்றவள் கோவத்தில் மூச்சு வாங்கிய படி தந்தையைப் பார்க்க முருகன் என்னவென்பதாய் இருவரையும் பார்த்து நின்றார்.
“இவன் வேலை பார்த்த இடத்துல சொல்லி திரும்ப சேர்த்துக்க சொல்லுங்க..”
“இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேலை நாச்சி.. நீ வா என் கூட..”
“ப்பா.. சொல்ல முடியுமா முடியாதா?”, என்ற மகளின் உறுதியில் பதில் கூறாமல் முருகன் விழித்து நிற்க,
“ஏல நாளைக்கு பழைய வேலைக்கு போ உன் முதலாளி சேர்த்துகிடலைனால் என்ட்ட வந்து சொல்லு. உனக்கு வேலை கிடைக்க நான் பொறுப்பு. அதோட உனக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு.
அதுக்கப்பறம் உன்னை நான் பார்க்கவே கூடாது.”, என்றவள் தந்தையின் வண்டியில் அமர்ந்து கொள்ள முருகன் அவனை முறைத்த வண்ணம் வண்டியை கிளப்பியிருந்தார்.
தன் வீட்டு வாசலில் முருகன் வண்டியை நிறுத்த நாச்சியார் கணவனிடம் தாய் வீட்டிற்கு வந்திருப்பதாய் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு உள்ளே சென்று தண்ணீரை எடுத்து மடமடவென குடித்து முடித்திருந்தாள்.
“நாச்சி அந்த சல்லிப் பயலோட உனக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கு?”, என்றபடி வேகமாய் உள்ளே வந்தார் முருகன்.
“ப்பா அந்த வேலைக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க..”, இத்தனை நாள் முகம் கூட பார்க்காதவள் நேருக்கு நேராய் தந்தையிடம் கோரிக்கை வைத்தாள்.
“உனக்கு கோட்டி பிடிச்சுருக்கா? நல்லா அமைஞ்ச வாழ்க்கையை நீயே மண்ணள்ளி போட்டுக்காத சொல்லிட்டேன்.”, என்ற சத்தத்தில் வள்ளி வெளியே வந்திருந்தார்.
“என்னங்க?”
“அந்த வீணா போவனோட ரோட்டுல நின்னு கத்திட்டு கிடக்கா. இதுல அவனுக்கு நான் வேலை வாங்கி தரணுமாம்..”
“நாச்சி என்ன டி?”
“ப்பா நல்ல வாழ்க்கையை கெடுத்துக்க நான் தயாரா இல்ல அதனால தான் அவனுக்கு வேலை வாங்கி கொடுக்கச் சொல்லுதேன்.”
“!!”
“நம்ம சங்கத்துல சொல்லி அவனை வேலையை விட்டு தூக்க வைச்சது நீங்க. நீங்க சொல்லாத வரை அவனுக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டாங்க.
வேலை கிடைக்கலைனால் அவன் என்னை நிம்மதியா இருக்க விட மட்டான். என்ன பண்ணலாம் சொல்லுங்க..”
“!!!”
“என்னால யாரு வாழ்க்கையும் கெட்டதா இருக்க வேணாம் ப்பா. இதை மட்டும் பண்ணிக் கொடுங்க. முடியாதுனால் நான் உங்க மருமகன்கிட்ட சொல்லி எதாவது பண்ண பாக்குறேன்.”
“அறிவிருக்கா நாச்சி உனக்கு? இதைப் போய் மருமவன்ட்ட சொல்லி வைக்காத..”, என்ற தாயைப் பார்த்தவள்,
“வேலை விசயமா இல்லைனாலும் இன்னைக்கு நடந்த எல்லாத்தையும் நான் கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லிருவேன் மா..”
“!!”
“எனக்கு அவங்ககிட்ட பயம் இல்ல. அவங்க என்னை பயமுறுத்த நினைக்கவும் இல்ல.. எதையும் நான் மறைக்க மாட்டேன்.
சொல்ல போனால் அடிச்சு சொல்றேன் நான் அவங்ககிட்ட அந்த பயலுக்கு வேலை வாங்கிக் கொடுக்க சொன்னா கண்டிப்பா வாங்கிக் கொடுப்பாங்க. ஆனா எனக்கு பிடிக்கலை.
எனக்காக இதை மட்டும் பண்ணுங்கப்பா. அப்பறம் அவன் விளங்குறதும் விளங்காம போறதும் அவன் தலையெழுத்து.”
“!!!”
“உங்களுக்கு நிறைய மனக் கஸ்டத்தை கொடுத்துட்டேன். என்னை மன்னிச்சுருங்க. பெத்த கடனுக்கு இதை மட்டும் பண்ணிடுங்க.
சத்தியமா நான் வேற எதையும் கேட்க மாட்டேன்.”, என்ற மகளின் உறுதியில் சில நொடிகள் அமைதியாய் இருந்தவர் யாருக்கோ அழைத்து பேசி விட்டு நாச்சியாரின் அருகில் வந்து அமர்ந்தார்.
நாச்சியார் அமைதியாய் தலை குனிந்து அமர்ந்திருக்க முருகன் தயக்கமாய் மகளின் தலையில் கை வைத்து அழுத்தினார்.
வெளி வந்த கண்ணீரை வேகமாய் துடைத்தவளாய் நிமிராமலே அமர்ந்திருந்தாள் நாச்சியார்.
“சாகாம இருக்கேன் நாச்சி. அவ்வளவு தான். அந்த அளவு மனசு ரணமாகி கிடக்கு.”
“…”
“ஆம்பளையா சில விஷயமெல்லாம் ஏத்துக்குறது சுலபம் இல்ல. இப்போ யோசிக்கும் போது உன் நிலைமை புரியுது.
நீ என்னோட பேசலைனாலும் பரவால்ல. ஆனா நடந்ததெல்லாத்தையும் மறக்கப் பாரு..”
“…”
“மாப்பிள்ள வீட்டுல உன்னை நல்லா பாத்துக்குறாங்களா?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“நீ சந்தோசமா இருந்தா அதுவே போதும் எனக்கு..”
“சீக்கிரமே எல்லாத்தையும் முழுசா மறந்துருவேன் ப்பா.. என்னைத் தப்பா நினைக்காதீங்க.. திடீர்னு அநாதையா நின்ன மாதிரி இருந்தது. அது தான் யாரோடவும் பேச முடிய மாட்டேங்குது.”
“!!”
“அங்கேயும் அப்படி தான் இருக்கேன். இனி அப்படி இருக்கக் கூடாதுனும் நினைக்குறேன். நான் பண்ணது பெரிய முட்டாள் தனம் என்னை மன்னிச்சுருங்கப்பா..”, என்றவளின் கரத்தை அழுத்தி விடுவித்து விட்டு முருகன் சென்று விட வள்ளி மகளின் அருகில் அமர்ந்தார்.
“நாச்சி அவங்க நல்லவங்க தான் அதுக்காக எல்லாத்தையும் சொல்லிகிட்டு கிடக்காத டி.”
“எல்லாரும் என் குறை சொல்லி ஒதுக்கி வைச்சப்போவே உனக்கென்ன டி குறைனு சொன்னவங்க மா..”
“!!”
“என் தப்பு பெருசா நான் பெருசானு யோசிச்சா நான் தான் பெருசுனு சொன்னவங்க..
என்னை குத்தம் சொல்லவும் என்னை கொடுமை படுத்தவும் அவ்வளவு சந்தர்ப்பம் இருந்தப்போவே என்னை நம்பின இரண்டு பேர் அவங்க.”
“!!”
“நீயில்ல அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் என்னை சந்தேகப்படவோ தப்பா பேசவோ மட்டாங்க மா..”, என்ற மகளின் வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சி வள்ளிக்கு.
“நாச்சி இருந்தாலும்..”
“ம்மா நாம எதனால பாதிக்கப்பட்டோமா அதை அடுத்தவங்களுக்கு செய்யாம இருக்குறது தான மா நியாயம். என்னை நீங்க எல்லாம் நம்பலைனு தான நான் இவ்வளவு வருத்தப்பட்டேன்.
அப்போ நான் அவங்களை நம்பாம போனா அது பெரிய தப்பு தான மா. எனக்கு என்னை விட அவங்க மேல அதிக நம்பிக்கை இருக்கு.
நீ கவலைப் படாத உன் மக நிச்சயமா நல்லா தான் வாழுவா.”, என்றதில் வள்ளியும் உள்ளிருந்த முருகனும் வாயடைத்துப் போயிருந்தனர்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Lovely update 🥰🥰🥰
Awesome
Nice ud ma
Very nice
Nice update sis. Ipothan naachi ku arivu velai seiyudhu. And thairiyamum vandhuduchu pola. Very good. Nalla change .all credits go yo agathiyan and megalai.
Nice update..
நாச்சியார் 😍😍😘😘❤🔥❤🔥❤🔥❤🔥 அவனுக்கு இன்னும் ரெண்டு சேர்த்து குடுத்துருக்கலாம் 😏😏😏
வள்ளி முருகன் 🤗🤗
நாச்சியார் சூப்பர் 😍😍😍