1.4K
“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
மு.வ விளக்க உரை: (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.”
காலை ஆறரை மணிக்கே கிளம்பி நின்ற மகளையும் மருமகனையும் பார்த்து வாள்ளியும் முருகனும் பதட்டமாயினர்.
“நாங்க கிளம்புறோம்.”
“என்ன மருமகனே அதுக்குள்ளே?! காபியாவது குடிச்சுட்டு போங்க.”
“இருக்கட்டும் இன்னொரு நாள் வாரோம். எனக்கு நாகர்கோவில் போற சோலி இருக்கு.”
“போய்ட்டு வரேன் மா..”, என்றவள் தந்தையையும் லேசாய் பார்த்து விட்டு முன்னே செல்ல அகத்தியன் பின் தங்கியவனாய்,
“சின்ன பிள்ளையாவே இருக்கா. நடந்ததை மறக்க நேரமெடுக்குது. சீக்கிரமே சரியாயிடுவா. வரேன்”, என்றதற்கு முருகன் கைகூப்பி ஆமோதிப்பாய் தலையசைத்தார்.
இருவருமாய் கிளம்பிய பின்னர் உள்ளே வந்த வள்ளியும் முருகனும் அமைதியாய் சோபாவில் அமர்ந்து விட்டனர்.
“நல்ல குணம் தான் போல. பேச்சு தான் வெடுக்கு வெடுக்குனு இருக்கு. என்னங்க?”
“ம்ம். இல்லைனால் இவ இப்படி தேடுவாளா அவங்களை.. அவ விஷயத்துல கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கணுமோ வள்ளி?!”
“…”
“எல்லாரும் வாய்க்கு வந்ததை பேசும் போது என்னால தாங்கிகிடவே முடியலை டி.”
“..”
“ஆனா நேத்து அவ பேசுனதெல்லாம்.. அந்தக் கண்ணோட்டத்துல நான் யோசிக்கவே இல்ல. ஒரு வேளை அவ சொன்ன மாதிரி குணங்கெட்டவன் கையில் சிக்கியிருந்தா!!”
“விடுங்க. நாம கும்பிட்ட சாமி கை விடல. இப்போ அவளுக்கு நல்ல வாழ்க்கை தான அமைஞ்சுருக்கு.”
“என்னவோ ராத்திரியில தூக்கமே வரல. அவ வயசுக்கு மீறி உள்ளுக்குள்ளே அடைச்சு வைச்சுருக்கா. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருந்தா..”, என்று புலம்பிய கணவனை சமாதானப் படுத்தும் வழி தெரியாமல் தவித்தார் வள்ளி.
அங்கு வண்டியில் சென்று கொண்டிருந்த அகத்தியனும் நாச்சியாரும் சில நொடிகளுக்கு ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு டீக்கடையைக் கவனித்தவளாய்,
“காபி வேணும்..”, என்றதில் அகத்தியன் அடுத்து வந்த டீக்கடையில் வண்டியை நிறுத்தியிருந்தான்.
“பசிச்சுருச்சாக்கும்?”
“ம்ம் ராத்திரி சரியாவே சாப்பிடல.. உங்களால தான்.”
“புரோட்டாவோட புருசன் சமாதானப்படுத்த வருவான்னு உட்காந்துருந்தியா?”
“அவ்வளவு பேராசை எல்லாம் இல்ல. வருவீங்களா மாட்டீங்களானு யோசிச்சதுல சாப்பிடல.”
“அண்ணாச்சி இரண்டு காபி..”
“..”
“அப்போ வர மாட்டான்னும் நினைச்சுருக்க?!”
“..”
“பதில் சொல்ல முடியலைனால் வாயை இறுக்க மூடிக்கோ. ராத்திரி மட்டும் அவ்வளவு வாய்.”
“ஐயே.. ஷ்ஷ்..”
“என்ன டி?”
“எங்கே நின்னு என்ன பேசுறீங்க..”, என்றவளுக்கு முகமெல்லாம் சிவந்து போக அதை உள்ளுக்குள் அத்தனை ரசித்தான் அகத்தியன்.
“வெட்கமெல்லாம் படத் தெரியுமா? நான் அழுமூஞ்சினுல நினைச்சேன்.”
“நீங்க வர வர ஒழுங்காவே பேச மாட்றீங்க..”, என்றவள் முனகிய படி காபியை ஒரு மிடறு விழுங்கினாள்.
“நான் சரியா தான் பேசுறேன். பொண்டாட்டி தான் இன்னும் வளர்ந்த மாதிரியே தெரியலை…”, என்றதில் வண்டியின் அருகில் சென்று அதன் மீது சாய்ந்து நின்று கொண்டாள்.
காலை நேரம் ஆதலால் பெரிதாய் கூட்டம் இல்லாமல் இருக்க அகத்தியனும் மனைவியிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தான்.
“சொல்லு விவரம் எதுவும் தெரியுமா? இல்ல.. அ ஆவே நான் தான்..”
“ஏங்க.. நாம வீட்டுக்கு போலாம்..”, என்றவள் காபியை அப்படியே வைத்து விட அவள் நிலை உணர்ந்தவனாய் மீண்டுமாய் அவளது கரத்தை உயர்த்தி பருகுமாறு செய்தான்.
சூடு இருந்தாலும் வேக வேகமாய் குடித்தவள் கிளம்பத் தயாராய் நிற்க சிரிப்பை அடக்கியவனாய் வண்டியை உயிர்பித்து அவள் ஏறுவதற்காக பக்கவாட்டில் முகத்தை திருப்பி பார்த்த படி அமர்ந்திருந்தான்.
நாச்சியாருக்கோ உள்ளுக்குள் ஏதேதோ செய்தது அவனின் பேச்சு. அந்த வயதிற்கு தெரிந்த ஒன்று இரண்டு விஷயங்களை தோழிகள் மேலோட்டமாக பேசினாலே காத தூரம் ஓடுபவள்.
அவர்களுக்கு பொழுதுபோக்கே நாச்சியார் தான். திருமணத்திற்கு பின் பிள்ளை வானத்தில் இருந்து வந்து குதிக்குமா என்று கேட்டு அவளைக் கடுப்பேத்தி வைப்பார்கள்.
இப்போது கணவன் ஒன்றும் தெரியாதா என கேலி பேசும் போது ஐயோவென்று இருக்கிறது அவளுக்கு. அந்த விஷயத்தில் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று எதுவும் தெரியாமல் கணவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறாள்.
“நாச்சியா கேட்குதா?”
“ஆங்ங் என்னங்க?”
“அது சரி இப்போவே கனவு காண போயிட்டியா நீ?”, என்றவன் அவளை சாதாரணமாக்க வேறு பேச்சுக்களைப் பேசிய படி வண்டியை ஓட்டினான்.
வீட்டு வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும் மேகலை உள்ளிருந்து வேகமாய் வர மருமகளைப் பார்த்தவருக்கு அப்போது தான் நிம்மதி ஆனது.
“அத்த..”, என்றவள் வந்து அவரது கரத்தைப் பற்றிக் கொள்ள அகத்தியன் அதை கவனித்த படி திண்ணையில் அமர்ந்தான்.
“ஏன் டி கை எப்படியிருக்கு? அங்கே போய் அழுதுட்டே கிடந்தியா? உங்க அம்மைட்ட அதுக்கும் வாங்கி கட்டினியா?”
“ம்ம் ஆமா.. அப்பறம் இருந்த கடுப்புல நானும் பேசிட்டேன்.”
“ஏன் டி உனக்கு இந்த தேவையில்லாத வேலை..”
“எனக்கு அப்பாட்ட சாதாரணமா பேசவே வர மாட்டேங்குது. நானும் நிறைய முயற்சி பண்றேன் அத்த.. “
“என்னவோ போ.. ஆமா இவன் காலங்காத்தாலேயே அங்கன வந்துட்டானா?”
“இல்ல நேத்து ராத்திரியே வந்துட்டாங்க. நடுராத்திரிகிட்ட ஆயிடுச்சு அதான் அங்கேயே தூங்கி எந்திரிச்சு வந்தோம்.”
“பரவால்ல. இவனை என்னவோனு நினைச்சேன்.”
“என்ன அத்த சொல்றீங்க?”
“சொன்னாங்க சுரைக்காய்க்கு உப்பில்லனு. போ டி போய் குளிச்சுட்டு வா..”, என்றவளோடு உள்ளே செல்லப் போனவர் மகனின் பேச்சில் அப்படியே நின்றார்.
“மதியத்துக்கு எதுவும் பண்ணாத மா. மூணு பேருமா கன்னியாகுமரி போயிட்டு வருவோம். காருக்குச் சொல்றேன் ரெடி ஆகு.”, என்று விட்டு அகத்தியன் மாடிக்குச் சென்று விட நாச்சியார் முகம் கொள்ளா புன்னகையோடு மாமியாரைப் பார்த்திருந்தாள்.
மேகலையோ மகனின் அம்மா என்ற அழைப்பிலேயே சிக்கிக் கொண்டார். சாதாரணம் போல் பேசிச் சென்றவனைத் தான் பார்த்திருந்தார்.
“அத்த.. நேரமாவுது போங்க ரெடி ஆவுங்க..”, என்றதில் நாச்சியாரின் கன்னம் வழித்து முத்தம் வைத்தவராய் மேகலை உள்ளே செல்ல நாச்சியார் மாடிக்குச் சென்றாள்.
அகத்தியன் மொட்டை மாடியில் நின்று யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க நாச்சியார் தனக்கான உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கத் தயாரானாள்.
“நாச்சியா..”
என்னங்க?”
“சேலை எதாவது கட்டிக்கோ..”
“அது..”
“கட்சி ஆட்கள் சிலர் பாக்குற மாதிரி இருக்கும்.”
“சரிங்க..”, என்றவள் குளித்து விட்டு கீழே செல்ல மேகலைக் குளித்துக் கொண்டிருந்ததில் நேரமாக்காமல் தலையை உலர்த்தி தயாராகலாம் என மீண்டுமாய் மாடிக்கே வந்திருந்தாள்.
அவள் வழக்கம் போல் ஏனோதானோவென தலையை உலர்த்த குளித்து விட்டு வெளியே வந்தவன் துண்டை வாங்கி அழுத்தித் துடைத்து எடுத்தான்.
“தலை காய வைக்கத் தெரியாதா உனக்கு? ஈரம் அப்டியே இருக்கு.”
“நான் நல்லா தான் தட்டி விட்டேன்.”
“ம்ம் கிழிச்ச.. ஆமா நேரமாவுது கிளம்பாம என்ன பண்ற?”
“அத்தை குளிச்சுட்டு இருக்காங்க அதான் தலையை காய வைக்கலாம்னு வந்தேன்ங்க..”
“புடவை எங்கே இருக்கு கொடு..”
“ஆங்!!! அதெல்லாம் வேணாம். நான் அத்தைட்ட கட்டிக்குவேன்..”
“ஏன் உங்கத்தைக்கு தான் உலகத்துலேயே சேலை கட்டத் தெரியுமா? குடு டி..”
“ஏங்க.. அதெல்லாம்.. ம்ஹும்..”
“ரொம்ப பண்ணாத சுண்டைக்கா.. இங்கே வா..”, என்றவனின் முகம் சாதாரணம் போல் இருக்க மனமோ அவளது நயனங்களில் சந்தோஷச் சாரலில் நனைந்திருந்தது.
“ஏங்க..”
“அப்போ நான் சொன்னா கேட்க மாட்ட?”
“அப்படியில்ல.. இது..”
“எது?”, என்றவன் எப்போது அருகில் வந்தான் கட்டிலில் வைத்திருந்த புடவையை எடுத்தான் என்பதை உணராத அளவிற்கு பதட்டத்தில் இருந்தாள் நாச்சியார்.
“நேரமாவுது டி…”, என்றவனின் வலக்கரம் அவளது கன்னத்தில் கோலமிட மொத்தமாய் கிறங்கிப் போனாள். இருந்த இடத்தை விட்டு அவள் நகராமல் நிற்க தன் கையிலிருந்த புடவையை அவளிடம் திணித்தவனாய்,
“சரி போ நேரமாகுது உன் அத்தைட்டேயே கட்டிக்க..”, என்றவன் சாதாரணம் போல் சென்று கண்ணாடி முன் நின்று தலை வாரத் தொடங்க நாச்சியார் தயக்கமாய் வாசல் புறம் சென்றவள் கதவை சாற்றி உள் தாழ்பாள் போட்டிருந்தாள்.
அகத்தியன் சட்டென அவளைத் திரும்பி பார்க்க தலை குனிந்துக் கொண்டவளாய் குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டியிருந்தாள்.
உண்மையில் அகத்தியனுக்கு முதலில் பெரிதாய் வேறெந்த எண்ணமும் இருந்திருக்கவில்லை. நான் இருக்கும் போது ஏன் தன் தாயிடம் செல்கிறாள் என்ற எண்ணத்தில் தான் பட்டென தானே கட்டி விடுவதாய் கூறியிருந்தான்.
ஆனால் அவளின் பதட்டமும் வெட்கமும் தான் அவளது நிலையை ஆணவனுக்கு உணர்த்தியிருந்தது. ஆனால் இப்போது தனக்காக அவள் யோசிக்கிறாள் என்றதில் இன்னுமாய் மனைவி மீதான பித்து அதிகரிக்கும் நிலை தான்.
குளியலறையிலிருந்து வந்தவளுக்கு அவனை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியமே வந்திருக்கவில்லை.
தன் மீது போர்த்தியிருந்த துண்டை இருபுறமும் இன்னுமாய் இறுக்கிப் படித்த படி வந்து நின்றவளை மேலும் கூச்சப்பட வைக்க விரும்பாதவனாய் புடவையை எடுத்து அவன் போக்கில் கட்டி விடத் தொடங்கினான்.
ஆனால் உள்ளுக்குள் ஆணுக்கேயுரிய உரிமை உணர்வு எக்குத் தப்பாய் தாளம் போட்டுக் கொண்டிருக்க அவளைச் சீண்டாமல் வேலையைச் செய்வது பெரும் பாடாய் இருந்தது.
அந்த அரக்கு வண்ண ரவிக்கைக்கும் புடவைக்கும் இடையில் இருந்த வெளிர் நிற சதைப்பற்றற்ற இடுப்பு அவனை மொத்தமாய் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது.
பட்டும் படாமல் விரல் தொடும் இடங்களும் அதற்கு சிலிர்த்து போகும் பெண்ணவளும் போதாதா ஆண்மகனை உணர்ச்சிக்குள் தள்ள!
“கொஞ்ச நேரம் நடுங்காம நின்னு தொலையேன் டி..”, பற்களைக் கடித்த படி அவளிடம் முணுமுணுத்து வைத்தான்.
இறுதியாய் தலைப்பை பின்னால் போடுவதற்கு கொண்டு வர துண்டை துளியும் நகர்த்தாமல் நின்றவளைப் பார்த்து இன்னும் கடுப்பானவனாய்,
“என்ன துண்டோட சேலை கட்டிக்க போறியா?”
“நீங்க கண்ணை மூடுங்க..”
“எல்லாம் என் நேரம் டி..”, என்றவன் விழிகளை மூடிக் கொள்ள புடவையைத் தோளில் வாங்கிக் கொண்டவள் அவனுக்கு முதுகு காட்டி ஊக்கை குத்தி விடுவதற்கு வாகாய் நின்றாள்.
கவனமாய் குத்தி விட்டவன் அப்படியே புடவை நடுவில் கை வைத்து இடுப்போடு அவளை இறுக்கியிருந்தான்.
“!!”
“ஒழுங்கா சாப்பிடு சுண்டக்கா குட்டியாவாவது தொப்பை இருக்க வேணாமா?”, என்றவன் நன்றாக தன்னோடு அழுத்திக் கொள்ள அதற்குள் மேகலையின் குரல் கேட்டதில் திரும்பி பார்க்காமல் ஓடியிருந்தாள் நாச்சியார்.
“அத்த..”, என்றவளை ஒரு நொடி பார்த்தவர் ஒன்றும் கூறாமல் கீழே சென்று விட முகத்தை கைகளுக்குள் மறைத்துக் கொண்டவளாய் அறைக்குள் வந்தாள்.
“போச்சு.. அத்த என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க..”
“என்ன மாதிரி பார்த்தாங்க? வா போய் கேட்போம்..”
“ஏங்க.. ஏங்க படுத்துறீங்க..”
“நீ தான டி சொன்ன என்னைப் பிடிக்கும்னு..”
“!!”
“என்ன சொன்னியா இல்லையா?”
“ஆமா சொன்னேன் அதுக்காக..”
“பிடிச்ச பிள்ளையை தள்ளி நின்னு ரசிக்க அவ யாரோ இல்லயே என் பொண்டாட்டி. அப்பறம் என்ன பிரச்சனை..”
“இதெல்லாம் தப்பில்ல?”
“இப்படியெல்லாம் இல்லைனால் தான் தப்பு..”, என்றதில் அவனது முகமே பார்க்க முடியாமல் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
💞💞💞💞💞💞💞💞💞💞
மேகலைக்கு வெக்கம் போகலையே…. சீக்கிரமே போக்கீருங்க MLA Sir 😝😝😝😝
😍😍
Megalai avanga amma murugesa…ha ha..😂😂😂😂😂 adutha epi la pokiruvar thalaivar..😛
Superb 👌
Wow..agathiyan na poi rowdy range ku buildup..acho evlo nalla paiyan.
Nice update
Super💕
Very nice
நைஸ் அப்டேட் 🤗🤗🤗