வசம்-14

by ஸ்ரீ
6 comments 1.3K views
A+A-
Reset

அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை

மு.வ விளக்க உரை: போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

அகத்தியன் வரக் காத்திருந்தவளாய் உணவு மேசையில் அமர்ந்திருந்தாள் நாச்சியார். உள்ளே வந்தவனின் கையில் உணவுப் பொட்டலம் இல்லாததைப் பார்த்து ஏமாற்றமாகிப் போனது அவளுக்கு.

அதைக் குறித்துக் கொண்டவனாய் கை கழுவி விட்டு வந்து நாற்காலியில் அமர அவனுக்கான உணவைப் பரிமாறினாள்.

“தினமும் புரோட்டா தின்னா உடம்பு என்னத்துக்கு ஆகும்?”

“…”

“வாங்கிட்டு வருவேன்னு ஒழுங்கா சாப்பிடலையா நீ?”

“ம்ம்… “

“உட்காரு..”, என்றவன் பக்கத்து இருக்கையை இழுத்துப் போட அதில் அமர்ந்தவளின் வாயருகில் உணவை நீட்டியிருந்தான்.

“நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் கொஞ்சம் சாப்பிட்டேன். அவ்வளவு பசியெல்லாம் இல்லங்க.”

“எவ்வளவு பசினு மூஞ்சியிலேயே தெரியுது சாப்பிடு.”

“நானும் அத்தையும் கோவிலுக்கு போனோம்.”

“ம்ம்..”

“வர்ற வழியில நர்சரியில் பூச்செடி வாங்கிட்டு வந்தோம்.”

“ம்ம்..”

“அத்தைகிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன்.”, என்றதில் மனைவியின் முகம் பார்த்தான்.

“அந்தப் பிள்ளையோட இனிமே பேசாதனு சொன்னாங்க.”

“கரெக்ட் தான். நல்ல ப்ரெண்ட் எப்பவும் நம்மளை நல்ல பாதைக்கு தான் கூட்டிட்டு போகணும்.”

“என் குரலையும் மூஞ்சியும் பார்த்தா அத்தைக்கு கோவமே வர மாட்டேங்குதாம்.”,

“..”

“உங்களுக்கும் அப்படி தான் இருக்கா? அதனால தான் என்ட்ட கோவப் படமாட்டிகீங்களா?”

“ஏன் உனக்கு நான் கோவப் படணுமா?”

“ம்ஹும்..”, என்றவள் அவசரமாய் பதிலளிக்க கை கழுவி விட்டு மாடிக்குச் சென்றவனோடு தானும் சென்றாள்.

மாடிச் சுவற்றில் அவள் வைத்திருந்த ரோஜா செடிகள் காற்றில் மெதுவாய் அசைந்தாடின.

அறைக்குள் வந்தவன் உடை மாற்ற குளியலறை புகுந்து கொள்ள கதவைப் பூட்டி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள் நாச்சியார்.

அகத்தியனும் அவளருகில் இடைவெளி விட்டு சுவற்றில் சாய்ந்து ஒற்றைக் காலை மடக்கி ஒற்றைக் காலை நீட்டிய வண்ணம் அமர்ந்தான்.

“இப்போ சொல்லு.. நான் இப்படி இருக்குறது நல்லாயில்லையோ?”

“அதெல்லாம் இல்ல நீங்க இப்படியே இருங்க. நான் சும்மா கேட்டேன். அதுவுமில்லாம உங்களை கோவமா பார்த்தா எனக்கு ரொம்ப பயம்.”

“இப்படியே இருந்துரலாம்.”, என்றவன் தனது கரத்தை அவள் புறம் நீட்ட சற்றே தயங்கிய வண்ணம் கரத்தை அவனிடத்தில் கொடுத்திருந்தாள்.

“இப்போ நீ இஸ்டப்பட்டு உன் கையைக் கொடுத்துருக்க இதே நான் உன்ட்ட கோவக்காரனா இருந்தா பயந்துட்டே கொடுத்துருப்ப. அது எனக்கு வேண்டாம்.

நான் யார்கிட்டேயும் நல்லவனாவோ நல்ல பேர் எடுக்கனும்னோ நினைக்கவே மாட்டேன் எப்பவும். ஏன்னால் அவங்க யாரும் என் வாழ்க்கைக்கு சம்மந்தப்பட்டவங்க இல்ல. ஆனா என் பொண்டாட்டிகிட்ட கெட்டவன் முரடன் மூர்க்கன்னு பேர் வாங்க கூடாதுனு நினைக்கேன்.

வாழ்க்கை முழுசும் கூட வரப்போறவ நீ மட்டும் தான். உனக்கும் நான் மட்டும் தான். அப்போ அதுக்குத் தேவையான நம்பிக்கையையும் நிம்மதியையும் நான் தரணும். சரி தான?”

“நல்லா பேசுறீங்க..”

“ஆனா நீ தான் பேசவே மாட்ற..”

“இவ்வளவு தான் எப்பவுமே பேசுவேன்.”

“அப்போ உன் மூஞ்சியைப் பார்த்தே நீ நினைக்குதை எல்லாம் நான் தெரிஞ்சுக்கணும்.”

“என்கிட்ட மாதிரியே அத்தைகிட்டேயும் பேசுங்களேன்..”

“…”

“சாரி..ஏதோ சொல்லணும்னு தோணிச்சு..”

“நானும் ரொம்ப காலமா முயற்சி பண்றேன். ஆனா வரவே மாட்டேங்குது.”

“உங்க ஆச்சியை ரொம்ப மிஸ் பண்றீங்களா?”

“ம்ம் இந்த உலகத்துல நான் மட்டுமே முக்கியம்னு நினைக்குற ஒரு உறவு ஆச்சி மட்டும் தான். அப்படி நான் நினைச்சுட்டு இருந்த அவங்களே என்னை இங்கே விட்டுடுடதுல ரொம்ப கஷ்டமா போச்சு.”

“..”

“அவங்களோடயுமே நான் பேசுறதை குறைச்சுகிட்டேன். என்னவோ நான் யாருக்குமே முக்கியமானவனா இல்லைனு ஒரு எண்ணம். அது கோவமா மாறி அந்த கோவம் பிடிவாதமா மாறிடுச்சு.”

“உங்க நிலைமை புரியுது. ஆனா அத்தையும் பாவம் தான.. உங்களைத் தனியா வளர்த்து ஆளாக்கி..”

“உண்மை தான். நிறைய நாள் யோசிச்சுருக்கேன். அவங்க வயசுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு அவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டு போகணும்னு நினைச்சுருந்தா நான் எல்லாம் இருந்த இடம் தெரியாம போயிருக்கும்.”

“..”

“ஆனா உனக்குத் தெரியுமா, இந்த ஆச்சி தாத்தாவோட அன்புல வளர்றவங்களுக்கு அன்பு மட்டும் எவ்வளவு கொடுத்தாலும் பத்தவே பத்தாது.

என்னை மட்டுமே பார்த்துக்கணும் எனக்காக மட்டுமே இருக்கணும்னு அன்பைத் தேடி தேடி ஓடிட்டே இருப்பாங்க.”

“..”

“மத்தவங்க எப்படியோ.. நான் அப்படி தான். நான் நினைக்குற அளவு, எனக்குத் தேவையான அளவு அன்பு எனக்கு கிடைக்கவே இல்லை இதுவரை.”

என்றதற்கு நாச்சியாரின் இடத்தில் அமைதியே பதிலாய் இருந்தது. அவள் வயதிற்கு அவனின் மறைமுக ஏக்கம் புரியவில்லை.

அவனது ஆச்சிக்குப் பிறகு அந்த இடத்தில் மனைவியான அவளை வைக்கிறான் என்பதை அவள் உணரவில்லை அந்த நேரத்தில்.

“சரி நேரமாச்சே தூங்கு.”, என்றவன் நகர்ந்து தனது இடத்தில் படுத்துக் கொள்ள சுவற்றை ஒட்டிப் படுப்பவள் இன்று சாதாரணமாய் அவன் புறம் திரும்பிப் படுத்திருந்தாள்.

“என்ன பயம் போயிடுச்சு போல?”

“நீங்களும் அத்தையும் என்னை ரொம்ப கேலி பண்றீங்க..”

“உங்க அத்தை சொன்னது சரி தான். குழந்தை புள்ள தான் நீ..”, என்றவன் லேசாய் உதடு விரிக்க நாச்சியாருமே மெலிதான புன்னகையோடு விழி மூடிக் கொண்டாள்.

அடுத்து வந்த நாட்கள் கல்லூரியில் கொடுமையாகவும் வீட்டிற்கு வந்தால் நிம்மதியாகவும் கழிந்தது நாச்சியாருக்கு.

முன்னாள் காதலன் மீண்டும் ஒருமுறை அவளைச் சந்திக்க முயற்சி செய்ய அவனைத் திட்டி சண்டையிட்டு பேசி நாச்சியாரே அனுப்பியிருந்தாள்.

மனது சரியில்லாமல் முகம் வாட்டமாய் மனைவியைப் பார்த்து விட்டால் போதும்,

அகத்தியன் அவளை அழைத்துக் கொண்டு எதாவது டீக்கடைக்குச் சென்று டீயும் போண்டாவும் வாங்கிக் கொடுத்து விடுவான்.

அது பெரிய விஷயம் இல்லை என்றாலும் அவளுக்குப் பிடிக்கிறது என்பதற்காக எவ்வித யோசனையும் இன்றி அதைச் செய்வான்.

எப்போதுமே எல்லா பெண்களையும் தந்தைச் செல்லம் கொடுத்து கெடுத்து வைப்பதில்லை. சில நேரங்களில் கணவனின் செல்லப் பிள்ளைகளாகி போகும் பெண்களும் உண்டு.

குறுகிய காலத்திலேயே நாச்சியாரை அப்படி தான் செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருந்தான் அகத்தியன். மனைவி அவனிடம் முரண்டு பிடிக்கும் அளவெல்லாம் இன்னும் முன்னேறி விடவில்லை எனினும் அவளது முக வாட்டம் போதும் அவளுக்குப் பிடித்ததை அவன் செய்து கொடுப்பதற்கு.

வாரத்தில் மூன்று தினங்களாவது பரோட்டா வாங்கி வருவான் அதிலும் என்றாவது அவள் எதிர்பார்த்து ஏமாந்து போனால் மறுநாளே வாங்கி வருவான்.

கணவனும் மனைவியும் இவ்வாறு எனில் மேகலையோ அகத்தியனை விட ஒரு படி மேலாகவே நாச்சியாரைப் பார்த்துக் கொண்டார்.

கல்லூரி முடித்து வருபவளுக்கு காபி கொடுப்பதில் இருந்து தலைவாரி விடுவது வரை அவராகவே அனைத்தையும் செய்வார்.

நாச்சியாரும் அத்தையை குழந்தையாய் சுற்றி வர அவர் மாமியாராய் நடந்து கொள்ள சந்தர்ப்பம் தான் ஏது!

மேகலையும் அவளுமாய் மாலை கோவிலுக்குச் செல்வது கடைக்குச் செல்வது என இருவருக்குள்ளும் நல்லதொரு பிணைப்பு உருவானது.

இரவு அகத்தியன் வந்த பின் அன்று நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் கூறி விடுவாள், அது நல்லதாயினும் சரி கெட்டதாயினும் சரி.

அவன் என்ன நினைத்தாலும் தன்னைப் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகமாகவே இருந்தது.

இப்படியாய் திருமணம் முடிந்து பதினைந்து தினங்களுக்கு மேல் ஓடியிருக்க அன்று மாலை கல்லூரியில் இருந்து வந்தவள் மேகலையிடம் அவரது வண்டியை ஓட்ட கற்றுக் கொடுக்கும் படி கூறினாள்.

“இந்த வேலையெல்லாம் வேணாம் டி. டிரைவிங் சொல்லித் தர்றவங்ககிட்ட போய் கத்துக்கோ..”

“அவங்க எல்லாம் சரியா ஓட்டலைனால் திட்டுவாங்களே அத்த..”

“அதுக்கு?”

“நீங்க தான் பொறுமையா சொல்லித் தருவீங்க..”

“எனக்கு பயமா இருக்கு டி கீழே விழுந்து வைச்சால் உன் புருசன் என்னைத் திட்டித் தீர்த்துருவான்.”

“அத்த… அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.”, என்று அப்படி இப்படியாய் பேசி அவரைச் சம்மதிக்க வைத்து வீட்டிற்கு அருகிலேயே இருந்த காலி க்ரவுண்டில் வண்டியோடு வந்து நின்றனர்.

மேகலை அவளுக்குப் பொறுமையாய் முதலில் அனைத்தையும் சொல்லிக் கொடுத்து ஒரு ஒரு அடியாய் வண்டியை நகர்த்த வைத்தார்.

நாச்சியாரின் முகத்தில் பதட்டத்தையும் கடந்த மகிழ்ச்சி வெளிப்படையாகவேத் தெரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டியவள் ஏதோ யோசனையில் வேகத்தை அதிகரித்திருக்க மேகலைக்கு அந்த நேரத்தில் என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி விட்டார்.

“ஏய் நாச்சி ப்ரேக்கை பிடி டி. ஸ்பீடை ஏத்தாத..”, என்று அவர் கத்த அதற்குள் வண்டியைப் போட்டு விட்டு விழுந்திருந்தாள் நாச்சியார்.

கையின் பின்புறம் நன்றாக சிராய்த்திருக்க கையை ஊன்றி மெதுவாய் எழுந்து நின்றாள்.

“நாச்சி ஒண்ணுமில்லல?”, என்ற படி மேகலை அவளருகில் ஓடி வந்திருந்தார்.

“அத்த எரியுது..”, என்றவளுக்கு வலியில் முகம் சுனங்கியது. வண்டியை ஓரமாய் வைத்து விட்டு மேகலை அவளது கைப் பற்றி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

“இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன். கேட்டியா டி. சொல் பேச்சு கேட்டா தான..”, என்றவர் அவளைத் திண்ணையில் அமர்த்தி விட்டு உள்ளே செல்ல காயத்தை ஊதி விட்ட படி அமர்ந்திருந்த நாச்சியாரைக் கவனித்த படி தன் வண்டியை விட்டு இறங்கினான் அகத்தியன்.

அவனைப் பார்த்தவள் சட்டென தன் கையை கீழேயிறக்கியதையும் கவனித்தவன் அவளருகில் வந்து நின்றான்.

“வாங்க என்ன இந்த நேரத்துல வந்துருக்கீங்க..”

“அது இருக்கட்டும் கையை காட்டு..”

“ஏன் என்னாச்சு?”

“ரொம்ப கேவலமா நடிக்காம கையை காட்டுறியா..”, என்றதற்கும் அவள் ஏதோ பேச வர சட்டென அவள் கையைப் பற்றி வேகமாய் மடக்கியிருந்தான்.

“ஸ்ஸ்..”

“என்னது இது எப்படி அடி பட்டுச்சு?”

“வண்டி ஓட்டிப் பழகும் போது.. விழுந்துட்டேன்..”

“உனக்குத் தான் அறிவில்லை அந்த பெரிய மனுசிக்கும் அறிவில்லாம போச்சா?”, என்று கத்தியவன் அவளது பின்னந்தலையிலேயே தட்டியிருந்தான்.

வேகத்தைக் குறைக்க நினைத்தாலும் கடுப்பில் சற்று வேகமாகவே தட்டியிருக்க அவன் கத்தியதில் நாச்சியாரின் கண்கள் தானாக கலங்கி விட்டிருந்தன.

மகனின் குரல் கேட்டு மேகலை கையில் தேங்காய் எண்ணையோடு ஓடி வர அதற்குள் மகளைப் பார்க்க வந்த வள்ளியும் முருகனும் கத்தியிருந்தனர்.

“என்னங்க இது எதுக்கு இப்படி அடிக்குறீங்க?”, என்ற படி வள்ளி விவரம் தெரியாமல் ஓடி வந்தார்.

ஏற்கனவே இரு வார காலமும் மனைவி புலம்பி அழுது கரைந்து முருகனுமே குற்றவுணர்ச்சியில் தவித்திருக்க இப்போது மகளை இப்படி பார்த்ததில் அவரும் குரலை உயர்த்தியிருந்தார்.

“எதுக்கு எம்மகளை அடிச்சீங்க? கேட்க ஆள் இல்லனு நினைச்சுட்டீங்களா?”

“எதுக்கு இப்போ இந்த சீனு?”, என்ற அகத்தியன் மாமனாரைப் பார்க்க அவரோ மருமகன் தன்னை மட்டம் தட்டுவதாய் எண்ணி விட்டார்.

“இப்படி உங்க இஸ்டத்துக்கு அடிச்சு மிரட்டதான் இங்கே கூட்டிட்டு வந்தீங்களா?”

“அண்ணாச்சி.. கொஞ்சம்..”

“என்ன ம்மா நீங்களும் ஒண்ணும் கேட்க மாட்டீங்களா? எம் மவ இப்படி கஷ்டப்படவா நான் கட்டிக் கொடுத்தேன்.”

“ஓ உங்க வீட்டில அவளை ராணியாட்டம் பாத்துக்கிட்டீங்களாக்கும்?”, என்ற மகனை நினைத்து மேகலை தலையில் அடித்துக் கொள்ள வள்ளியோ மகளின் கையைப் பற்றிய வண்ணம்,

“நீ வா நாச்சி. உன்னை இப்படி அடி வாங்கவா பெத்து வைச்சுருக்கேன். அப்போவே சொன்னேன் குணம் கெட்டவருக்கு எம்மவளை கட்டி வைக்காதீங்கனு. யாரு கேட்டா.”

“!!”

“நீ வாடி இனி இப்படி நடக்காதுனு உறுதிக் கொடுத்துட்டு வந்து எம்மவளை கூட்டிட்டு போங்க. இல்ல பெரிய மனுசங்களைக் கூப்பிட்டு நியாயம் கேட்பேன்.

கல்யாணம் ஆன அன்னையிலேயிருந்து எம்மவ கண்ணீரும் கவலையுமா தான் கிடக்கா.

“மதினி நான் சொல்றதை கேளுங்க..”

“என்னங்க கேட்கணும். வாசல்ல வைச்சு எம்மவளை இப்படி அடிக்காரு. இதுக்கு மேல என்ன கேட்கணும்.”, என்றவர் மகளைத் தன்புறம் இழுக்க நாச்சியாரோ நடப்பது ஒன்றும் புரியாமல் விழித்து நின்றாள்.

“ஐய்யய்யே.. சும்மா அனத்தாம மகளை கூட்டிகிட்டு கிளம்புங்க.”, என்ற அகத்தியன் உள்ளே சென்று விட நாச்சியாருக்கோ வந்தது கோவம். தன்னைப் போகச் சொல்லி விட்டான் என்ற கடுப்பிலேயே ஒன்றும் பேசாமல் தாய் தந்தையோடு கிளம்பியிருந்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

6 comments

Superb update sis.

Raji Vijay August 16, 2026 - 8:09 am

Ada arivu naachiyaa ..ipo pathil ku pathil pesi, unga appa amma ku thirupi kudupane nu paartha, po nu kovathil sonnathai ketu, ippadi kilambi poitiye

Kavi Natarajan August 16, 2026 - 8:49 am

😍😍😍😍😍😍😍

srichitra August 16, 2026 - 10:13 am

Nice

suganyavel August 16, 2026 - 10:46 am

Ada loosungala

Aandal Venkatraghavan August 16, 2026 - 11:25 am

அய்யா ரெண்டு நாளா சந்தோசப்பட்டது பொறுக்காது வேலையைக் காட்டிட்டீங்களாக்கும்?? இப்படியா அவனும் பேச இவளும் போவா.. இப்ப நான் அடுத்த நாள் வரைக் காத்திருக்கணுமா🥺

Mathy August 16, 2026 - 8:42 pm

நல்லா இருந்த குடும்பத்துல பிரச்சனை பண்ணவே கிளம்பி வந்துருப்பாங்க போல….
நாச்சி அவன் சொன்னா கோபத்துல கிளம்பி போயிடுவியா….

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode