வசம்-16

by ஸ்ரீ
11 comments 1.4K views
A+A-
Reset

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்

மு.வ விளக்க உரை: அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

அறைக்குள் வந்தவன் சட்டையை கழட்டி விட்டு குளியறைக்குள் சென்று முகம் கை கால் கழுவி வர அவனிடம் துண்டை நீட்டினாள் நாச்சியார்.

தன்னையே சற்று கோவத்தோடு பார்த்திருந்த மனைவியைக் கவனித்தவனாய் சட்டென இடை சுற்றி தன்னோடு நெருக்கியிருந்தான் அகத்தியன்.

இதைச் சற்றும் எதிர் பாராதவளாய் நாச்சியார் விழி விரிக்க இன்னுமாய் தன்னோடு நெருக்கினான்.

“என்ன பண்ணினா கோவம் போகும் மகாராணிக்கு?”

“இப்போதைக்கு போகாது. ஏன் என்னை அனுப்பினீங்க?”

“நான் வீட்டுக்கு வந்ததே திடீர்னு திருநெல்வேலி போற வேலை வந்துச்சுனு தான். வேண்டியதை எடுத்துட்டு போக வந்தேன். இருந்த அவசரத்துல உங்க ஐயாவும் அம்மாவும் அனத்துறதை கேட்க எல்லாம் பொறுமை இல்ல. சரி அதான் கூட்டிட்டு போங்கனு சொன்னேன்.”

“நேரா இங்க தான் வரீங்களா?”

“ம்ம்.. போன வேலை இப்போ தான் முடிஞ்சுது.”

“சாப்டீங்களா?”

“இந்த அழகியைப் பார்க்க ஓடி வந்ததில் சாப்பிட எல்லாம் நேரமில்ல..”

“ஐயோ இருங்க நான் போய் எதாவது கொண்டு வரேன்.”

“அதெல்லாம் வேண்டாம். அதுக்கு பதில் வேற ஒண்ணு இருக்கு.”

“என்னது?”, என்றவள் அவனைப் பார்த்திருக்க அவனது பார்வையோ அவளது அதரங்களில் பதிந்திருந்தது. அடுத்து எவ்வித பேச்சிற்கும் வழிவிடாமல் அவளது இதழ்களைத் தனதாக்கியிருந்தான் அகத்தியன்.

அன்று போல் அல்லாமல் இன்று இன்னுமும் அழுத்தமான முத்தமாய் தொடர நாச்சியாரோ விழிகளை இறுக மூடிய படி அவனது பின்னந்தலையைப் பற்றியிருந்தாள்.

சில நொடிகளுக்குப் பின் விடுவித்தவன் விழி மூடியிருந்தவளையே பார்த்திருக்க பெண்ணவள் மெதுவாய் விழி திறந்தாள்.

அதற்காகவே காத்திருந்தவனாய் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தான் அகத்தியன்.

“உன் அய்யா வீடு தான இருக்க முடியாதா?”

“ம்ஹும். நீங்களும் இருந்தா இருப்பேன்.”

“புருசன் மேல பயம் மொத்தமா போயிருச்சு?!”

“ஆமா.. இனி என்னை எங்கேயும் அனுப்பாதீங்க..”

“அனுப்ப முடியாம தான இப்படி நடுராத்திரியில் வந்து நிக்குறேன்.”

“சரி நான் சாப்பிட எதாவது பார்க்கேன். இருங்க..”, என்றவள் அவனது பிடியில் இருந்து விலக முயன்றாள். இன்னுமாய் தன்னோடு இறுக்கியவனாய்,

“இப்படியே ராத்திரி பூராவும் நீ இரு. சாப்பாடெல்லாம் தேவையில்ல.”, என்றதில் நாச்சியார் விழி தாழ்த்தியிருந்தாள். அவளது அடிப்பட்ட கையை மடக்கியவனாய்,

“இப்படியா விழுந்து வைப்ப..”

“அத்தையை ஒண்ணும் சொல்லாதீங்க. நான் தான் கட்டாயப்படுத்துனேன்.”

“உங்க அத்தைக்கு பெரிய பாதுகாப்பு தான் நீ..”

“எதுவும் சொல்ல மாட்டேன்னு சொல்றீங்களா?”

“சரி டி சொல்லல. போதுமா?”

“ம்ம்”, என்ற நேரம் அறைக் கதவு லேசாய் தட்டப்பட வேகமாய் விலகியவள் சென்று கதவைத் திறந்தாள்.

“மருமகன் எதுவும் சாப்பாட்டாங்களோ என்னவோ, இதுல  தோசையும் சட்னியும் இருக்கு”, என்று கொடுத்த தாயிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவள் கதவைச் சாற்றி விட்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

“நாச்சியாரோடு தரையில் அமர்ந்தவன் அதில் முதல் வாய் உணவை அவளுக்கு நீட்டி விட்டு கடகடவென உண்ண ஆரம்பித்திருந்தான்.

“இம்புட்டு பசி இருக்குல.. இதுல சாப்பாடு வேணாமாம்..”

“பொண்டாட்டி வேற விதமா கவனிச்சா இந்த பசி காணாம போயிருக்கும்.”

“…”

“பேசு டி.”

“எனக்கு இப்படியெல்லாம் பேச வராது..”

“அப்போ கத்துக்கோ..”

“ஐயே ஒண்ணும் வேணாம்..”

“ஐயே வா.. சரியா போச்சு.. படிப்பையே முடிக்க போற இன்னும் ஐயே நொய்யேனு..”

“..”

“படிப்பை பத்தி பேசவும் தான் நியாபகம் வருது எம்காம்க்கு அப்ளை பண்ண என்ன பண்ணணும்னு விசாரிச்சுட்டேன். சேர்ந்துரு..”

“..”

“இதுக்கும் ஏன் இடிச்ச புளி கணக்கா இருக்க?”

“செலவாகுமே.. நான் வேணா கரஸ்ல பண்ணுதேன்..”

“அவ்வளவு துப்பு கெட்டவனாவா நான் இருக்கேன்..”

“ஏங்க இப்படி பேசுதீங்க..”

“நீதான் பேச வைக்குற.. படினால் படி அவ்வளவு தான்.”, என்றவன் எழுந்து சென்று கை கழுவி வர ஒன்றும் கூறாமல் அவனருகில் சென்றவள் பக்கவாட்டில் இடுப்போடு கட்டிக் கொண்டாள்.

“என்னாச்சு இப்போ?”

“எனக்கு உங்க கூட இருந்தா தைரியமா இருக்கு. எந்த பயமும் இல்ல. நான் பண்ணின அந்தத் தப்பைத் தவிர என்கிட்ட..”, என்றவளின் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவனாய்,

“நாச்சியார் அகத்தியனா மட்டும் தான் நான் உன்னைப் பார்க்குறேன். இதை தாண்டி எதுவும் பேசாத.”, என்றதில் அவனை மார்போடு கட்டிக் கொண்டாள்.

எத்தனை முயன்றும் கண்ணீர் வெளி வந்து விட்டிருந்தது நாச்சியாருக்கு. வழக்கம் போல் அகத்தியன் அதைக் கண்டு கொள்ளாதவனாய் படுத்துக் கொள்ள அவனருகில் படுத்தவள் அமைதியாய் அவன்புறம் திரும்பி இறுக அணைத்த படி விழி மூடிக் கொண்டாள்.

அதாவது காதலோ காமமோ எதுவுமில்லாத இந்த நேரத்தின் உன் இருப்பும் அருகாமையும் அதிகமாய் எனக்குத் தேவை என்பதான அணைப்பாய் இருந்தது.

அதை உணர்ந்து கொண்டானோ என்னவோ அகத்தியன் தனது கரத்தை அவளது தலைக்கு மேல் உயர்த்த இன்னுமாய் அவனை நெருங்கிப் படுத்துக் கொண்டவள் அவனது பனியனை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“நாச்சியா..”

“ம்ம்?”

“என்னை உனக்குப் பிடிச்சுருக்கா?”, என்றதில் தலையை நிமிர்த்தி கணவனைப் பார்த்தாள் நாச்சியார்.

“என்ன டி தமிழ்ல தான கேக்கேன்..”

“ரொம்ப அடி பட்டுட்டேன். எனக்குத் தேவையானது அன்பு பாசம் இதெல்லாம் விட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத ஒரு அமைதி.

அது எனக்கு உங்ககிட்ட மட்டும் தான் கிடைக்குது. உங்களோட இருக்கும் போது மட்டும் தான் மனசு படபடனு இல்லாம நிதானமா இருக்கு.”

“..”

“எதை நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு பயந்து மறைக்க அவசியம் இல்லாம எல்லாத்தையும் உங்ககிட்ட கொட்டிட்டா எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இதெல்லாம் இந்த கல்யாணத்துல நான் எதிர் பார்க்கலங்க..”

“நான் கேட்டதுக்கும் நீ பேசுறதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?”

“யார்கிட்டேயும் கிடைக்காத எல்லாமே உங்ககிட்ட மட்டுமே கிடைக்குது. யாருமே வேணாம் நீங்க மட்டும் போதும்ங்கிற அளவு பிடிச்சுருக்கு.. எப்பவும் இப்படியே இருப்பீங்கல?”, என்றதற்கு பதில் அழுத்தமான அவனின் நெற்றி முத்தமாய் இருந்தது.

சிறிது நேரத்தில் நாச்சியார் உறங்கியிருக்க அகத்தியனுக்கோ மனதினுள் பெரும் மகிழ்ச்சி. அவள் பக்க துயரங்களையும் பயங்களையும் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் வெளிப்படுத்தி இருந்தாள்.

ஆனால் அகத்தியனுக்கும் இந்தத் திருமணத்தின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் ஆரம்பம் முதலே இருந்து கொண்டு தான் இருந்தது.

நாச்சியாரின் விஷயம் தெரிந்த போது பல வகையாய் யோசித்த பின் தான் முருகனிடம் பேசச் சென்றான். அவளிடம் கூறியது போல் அவள் பள்ளி சென்ற காலத்தில் இருந்தே அவளை கவனித்திருக்கிறான்.

ஒரு வகையில் சைட் அடித்திருக்கிறான் என்றும் கூறலாம். அந்த காதலனோடு பார்த்த போதெல்லாம் கிளியை குரங்கு கையில் பார்ப்பது போன்று தான் தோன்றும்.

ஆனால் அவள் ஊரை விட்டுச் சென்றதும் அடுத்ததாய் இரு தினங்களில் வந்து விட்டதையும் அறிந்த பின் அவள் மீது சற்று கோபமும் அதே நேரம் புத்தியோடு திரும்பி வந்தாளே என்ற எண்ணமும் தான் எழுந்தது.

அகத்தியனுக்கு இவளை விட்டால் பெண்ணே கிடைக்காது என்றெல்லாம் இல்லை தான் ஆனால் ஏனோ ஒருவித ஈர்ப்பு அவள் மேல் இருந்தது.

ஆனால் தனக்கு ஊருக்குள் இருக்கும் பெயரும் தன் குணமும் அவளுக்கு ஒத்துப் போகுமா? ஏற்கனவே காயப்பட்டு வந்தவளுக்கு அந்தக் காயத்திற்கு மருந்தாய் தன்னால் இருக்க முடியுமா?

கட்டாய கல்யாணமாய் இருக்கும் பட்சத்தில் தன் மேல் அவளுக்கு அளவில்லாத வெறுப்பு வந்து விடுமா என்றெல்லாம் பலவாறாக யோசித்தான்.

எந்த நிலையிலும் அவள் மீது சந்தேகமோ ஊர் உலகம் என்ன பேசும் என்ற எண்ணமோ அவனிடத்தில் இல்லை. அகத்தியனைப் பொறுத்த வரை மனைவி என்பவள் தான் அவன் வாழ்வதற்கு ஒரே காரணமாக இருக்கப் போகிறவள்.

தன் பாட்டிக்கு பிறகு தனக்கான ஒட்டு மொத்த அன்பையும் அரவணைப்பையும் தரப் போகும் ஒரு உறவு மனைவி என்பதில் தெளிவாக இருந்தான்.

ஆனால் குழைந்து பேசவோ காதல் வசனங்கள் பேசவோ சுட்டுப் போட்டாலூம் வராது. அப்படிபட்ட அவன் குணத்தை அவள் புரிந்து வருவதற்கு எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் ஆகும்.

ஒரு வேளை அவள் இந்த திருமணத்தையே ஏற்காமல் போகவும் வாய்ப்புண்டு எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் திருமணத்தை முடித்திருந்தான்.

அதிலும் திருமணத்தன்று அவள் தன்னைப் பார்த்து பயந்து ஒடுங்கியதில் சற்றே வருத்தம் தான் அவனுக்கு. இருந்தும் அவளது நிலை உணர்ந்து ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் போனான்.

ஆனால் அதன் பின் சிறிது சிறிதாய் அவள் மனதில் இருப்பது வெளிவந்த பின், அவள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதை உணர்ந்த பின்னான நாச்சியார் அவனை மனதளவில் மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தாள்.

குழந்தை உருவம் மட்டுமல்லாது மனதளவிலும் குழந்தையாகவே இருப்பவளை அள்ளிக் கொள்ள அவனது வயது பரபரத்தாலும் அவளுக்காகவே பொறுமை காத்தான்.

அனைத்தையும் மீறி இன்று அவள் உரிமையாய் தன்னை அடித்ததும் பெற்றோர் முன்னே இடுப்போடு கட்டி நின்றதும் உள்ளுக்குள் மொத்தமாய் சாய்த்து விட்டது ஆண்மகனை.

உன்னை விட்டு எங்கும் போக முடியாது என்பதிலேயே அவள் உறுதியாய் நிற்பதில் அத்தனை ஆனந்தம். தனக்குத் தேவையான அமைதி உன்னிடம் மட்டும் தான் உள்ளது என்றதில் பெரும் உவகை அகத்தியனுக்கு.

அந்த பரவசத்தின் நினைவில் அவளைச் சுற்றியிருந்த கை தானாகவே இன்னுமாய் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொள்ள வாகாய் முகத்தை திருப்பி தூக்கத்தை தொடர்ந்தாள் அவனின் நாச்சியார்.

காலையில் எப்போதும் போலவே அகத்தியன் தான் நாச்சியாரை எழுப்ப வேண்டியதாய் இருந்தது.

“கும்பகர்ணனுக்கே டஃப் கொடுப்பியா டி.. எந்திரி நேரமாச்சு..”, என்றதில் தூக்கம் கலைந்தவள் எழுந்து அமர அகத்தியனும் எழுந்து அமர்ந்தான்.

“உங்களுக்கு மட்டும் எப்படி சரியா முழிப்பு வந்துருது?”

“நியாயமா உனக்கு வரணும்..”

“எனக்கு காலையிலே எந்திரிக்கவே முடியாது. நைட் பூராவும் கூட முழிச்சு படிப்பேன் ஆனால் காலையில.. ம்ஹும்.. கஷ்டம்..”

“நைட் தூங்காம இருப்பியா? பேசிட்டு இருக்கும் போதே குறட்டை விட்டு தூங்கிட்டு பேச்சை பாரு..”

“நான் குறட்டை எல்லாம் விட மாட்டேன். சும்மா சொல்றீங்க.”

“நம்ம வீட்டுக்கு போய் இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவோம். இப்ப கிளம்பு..”

“அத்தகிட்ட சொல்லாதீங்க. சர்ப்ரைஸா போய் நிப்போம்.”

“உங்க அத்தைக்கு நான் ராத்திரி எங்கே இருந்தேன்னே தெரியாது. போய் ரெடி ஆகு டி..”, என்றவனைப் பார்த்த வண்ணம் கட்டிலை விட்டு அவள் இறங்க அவளை ஓரப் பார்வை பார்த்தவன் சட்டென இழுத்து கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்து விடுவித்திருந்தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

11 comments

Fathima.ar August 17, 2026 - 8:05 am

Oru epi oda part 1 morning la part 2 evening la..

Pathala suththama paththalaa

😍😍

ஸ்ரீ August 17, 2026 - 8:13 am

Ithuku mela na mothama than stry ya podanum akkow..😂

Fathima.ar August 17, 2026 - 8:30 am

Ithu nallarukke

MalarMurugan August 17, 2026 - 8:11 am

அகத்தியா 😍😍😘😘
நாச்சியார் 😘😘😍😍

Kavi Natarajan August 17, 2026 - 10:31 am

👌👌👌👌👌👌👌👌👌👌👌

SME August 17, 2026 - 9:45 am

Nice update 👍👍👍👍

Raji Vijay August 17, 2026 - 10:05 am

Superb update sis 👏 👌 ❤️

srichitra August 17, 2026 - 10:19 am

Very nice.

Aandal Venkatraghavan August 17, 2026 - 11:25 am

Epi romba cute ah iruku kka.. actually vasanam pesi urugi urugi thaan kaatanum nu illa.. love ah silent ah kaatina athu vera maari perzhagu.. antha perazhgoda padaipu thaan indha agathiyan😍🙈

suganyavel August 17, 2026 - 6:17 pm

Super💕

Mathy August 17, 2026 - 9:14 pm

லவ்லி அப்டேட் 💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode