1.3K
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
மு.வ விளக்க உரை: செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.”
அன்றைய காலையும் அகத்தியன் தான் முதலில் எழுந்திருந்தான். நாச்சியாரின் மொத்த இடமும் காலியாய் இருக்கும் அளவிற்கு அவனோடு தான் ஒன்றிப் படுத்திருந்தாள்.
ஒருவித பாதுகாப்பு வளையமென தான் அகத்தியன் அவளுக்கு இப்போதும் தெரிகிறான். நேற்று நடந்ததும் முற்றிலும் அகத்தியனின் விருப்பத்திற்கானது தான் என்பதை அவனும் அறிவான்.
அவன் வயதுக்கு மனைவியை அருகில் வைத்துக் கொண்டு தள்ளியிருப்பதெல்லாம் இந்த பத்து பனிரெண்டு நாட்களுக்குத் தான் முடிந்தது. அது கூட நாச்சியாரின் மனநிலையினால் தான்.
நாச்சியாருக்கோ ஒன்றும் அறியாத உலகில் விட்டது போன்ற நிலை தான். அவளது தயக்கம் வெட்கமெல்லாம் கடந்து அவன் கூறியது படி அவனை நம்பி அவளைக் கொடுத்து விட்டிருந்தாள் என்பதும் அகத்தியன் அறிந்தே இருந்தான்.
அவள் வயதிற்கு அதீத பயம் அவளிடத்தில் வெளிப்டையாகவே அகத்தியனுக்குத் தெரிந்தது. இருந்தும் எந்த நிலையிலும் அவனை விலக்கவோ மறுக்கவோ இல்லாத அவள், மொத்தமாய் அவனுள் அரியணை அமைத்து விட்டிருந்தாள். மொத்தமாய் தன்னைக் கொடுத்து விட்ட பிறகும் அவனோடு ஒண்டிக் கிடந்தவளை தூக்கம் தொலைத்து பார்த்திருந்தான் அகத்தியன்.
அவளின் கேள்வியெல்லாம் நீ இப்படியே இருப்பாயா? மாறிவிட மாட்டாயே! எந்த நிலையிலும் என் துணையாய் என் அருகில் தானே இருப்பாய் என்பதான உறுதிகள் மட்டும் தான்.
இப்போது அனைத்தையும் நினைத்துப் பார்த்தவன் சட்டென அவளைத் திருப்பி அவள் புறம் திரும்பி படுத்த வண்ணம் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
லேசாய் அசைந்தவள் கணவன் தன்னைப் பார்த்திருப்பதைக் கண்டு தூக்கம் கலைந்தாளே ஒழிய வெகு இயல்பாய் அவனது கை வளைவிலேயே தான் இருந்தாள்.
“ஏன் என்னை எழுப்பல?”
“ராத்திரி தூங்கலையே அதனால தான்..”, என்றதில் விழி தாழ்த்திக் கொண்டாள்.
“சுண்டைக்கா இன்னைக்கு இன்னும் அழகா இருக்காளே..”
“…”
“காலேஜ் லீவ் போடுதியா?”
“பரீட்சை இருக்கு..”
“படிச்சுருக்கியா?”
“ம்ஹும்..”
“இப்போ படிக்க போறியா?”
“படிக்கட்டுமா? வேண்டாமா?”, என்றவளின் கேள்வியில் அகத்தியனின் முகத்தில் அழகான புன்னகை.
“பரவால்லையே ஒரே நாள்ல புருசன் என்ன நினைக்குறான்னு புரிஞ்சுக்குற அளவு வளர்ந்துட்டீங்களாக்கும்?”
“எனக்கு ஒண்ணு கேட்கணும்..”
“என்ன?”
“…”
“என்ன டி கேளு..”
“எனக்கு இங்கே ஒரு முத்தம் வேணும்..”, என்றவள் தனது நெற்றியைச் சுட்டி காட்டிய படி விழி தாழ்த்திக் கொள்ள அகத்தியனுக்கோ முகம் மலர்ந்து போனது.
தனது ஒரு கரத்தால் அவளது கன்னத்தைத் தாங்கிக் கொண்டவனாய் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்.
“வேற எங்கேயும் வேணாமா?”, என்றதற்கு அவசரமாய் இடவலமாக தலையசைத்தவளைப் பார்த்து சற்று சத்தமாகவே சிரித்திருந்தான்.
“ஏன் டி வேணாம்?”
“அப்பறம் காலேஜுக்கு நேரமாயிடும்..”, என்றவளின் இடைபற்றி நெருக்கிக் கொண்டவனாய் அவள் மூக்கோடு மூக்குரசிய படி நாச்சியாரையேப் பார்த்திருந்தான்.
“என்னை இவ்வளவெல்லாம் புரிஞ்சுக்காத.. அப்பறம் உன்னை என்கிட்ட இருந்து நகர்த்தவே மாட்டேன். ரொம்ப இம்சை பண்ணுவேன். படிப்பு கெட்டுடும் சுண்டைக்கா..”
“அதெல்லாம் நான் ஒழுங்கா படிச்சுருவேன்.”, என்றவள் மெலிதாய் புன்னகைக்க அவளது அதரங்களை வருடிய படி பார்வையால் அவளைக் களவாடிக் கொண்டான்.
எப்போதும் கீழே வரும் நேரத்தைத் தாண்டி வந்த மருமகளை கவனித்த வண்ணம் மேகலை சமையலைக் கவனிக்க கணவனின் நினைப்பில் தேவையில்லாத பதட்டத்தில் சுற்றியவளுக்கு மாமியாரிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேருக்கு எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.
“நாச்சி மதியத்துக்கு புளிசாதம் கட்டிருக்கேன் டி ஒழுங்கா மிச்சம் வைக்காம சாப்பிட்டு வா..”
“அத்தை நீங்க நிறைய வைக்குறீங்க.. எடுக்க எடுக்க வந்துட்டே இருக்கு..”
“ம்ம் டிபன் பாக்ஸ் வைக்குறேனா அக்க்ஷய பாத்திரமா? ஒழுங்கா சாப்பிடு இப்படி ஒடிஞ்சு விழராப்புலேயே இருக்க போறியா..”
“..”, பதில் கூறாமல் நின்றவளைத் தன்புறம் திருப்பியவராய் மேகலை மருமகளிடம்,
“இங்கே பாரு இன்னும் சின்னப் பிள்ளை இல்ல நீ.. ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை பாரு. இப்ப சாப்பிடுறது தான் என் வயசில எல்லாம் தாக்கு பிடிக்கும் டி.”
“சரி அத்த..”
“தினமும் தலைக்கு குளிச்சு கீழே வா டி இனிமே..”, என்றதில் முகம் சிவந்து போனது நாச்சியாருக்கு.
“அத்த.. நான்..”
“நானும் இதெல்லாம் கடந்து வந்தவ தான. உடம்புக்கு எதுவும் பண்ணுனா வாயைத் திறந்து என்ட்ட சொல்லு. கம்முனு இருக்காத சரியா?”, என்றதற்கு தலையசைத்தவளைப் பார்த்து புன்னகைத்தவராய் வெளியில் சென்று திருநீரை எடுத்து வந்து அவள் நெற்றியில் பூசி அனுப்பி வைத்தார்.
மாடிக்கு வந்தவள் தலையில் கட்டிய துண்டோடு வந்து கணவனிடம் முதுகு காட்டி நிற்க அகத்தியன் அவள் முகத்தைத் திருப்பி தன்னைப் பார்க்க வைத்தான்.
“எப்படியும் நான் ஒழுங்கா காய வைக்க மாட்டேன். அதுக்கு நீங்களே பண்ணி விட்டுருங்க..”
“சோம்பேறி..”, என்றவன் அவளுக்குத் தலை துவட்டி விட்டு இரு தோளிலும் லேசாய் தட்டி அனுப்பி வைத்தான்.
முடியைத் தளர பின்னிக் கொண்டவள் பையை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானவளை நிறுத்தியவன்,
“இந்த பவுடர் கண்மை இதெல்லாம் இருக்குனாவது தெரியுமா உனக்கு?”
“பழக்கம் இல்லாததுனால போட மறந்துரேன்ங்க..”
“இப்போ ஒழுங்கா போட்டுட்டு கிளம்பு..”
“அப்பறம் சொல்லனும்னு நினைச்சேன்ங்க..”
“என்னது?”
“அடுத்த மாசம் வாலி பால் மேட்ச் வருது ஸ்டேட் லெவல்.. சார் என்ட்ட சொன்னாங்க. நான் உங்கட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன்.”
“அதுக்கென்ன போயிட்டு வா. அவங்களே கூட்டிட்டு போவாங்களா இல்ல நாம போணுமா?”
“அவங்களே கூட்டிட்டு போவாங்க.. ஆனா எனக்கு அவங்க கூட போக வேணாம்.”
“அது ஏன்?”
“மேட்ச் நடக்குறது கன்னியாகுமரில.. இரண்டு நாள் ஆகும்.”, என்றவளின் எண்ணம் புரிந்தாலும் அவளிடம் வம்பு வளர்க்க நினைத்தவனாய்,
“இரண்டு நாளு தான போயிட்டு வா. இங்கேயிருக்கு கன்னியாகுமரி..”
“சரி வேணாம் நான் போகலை.”, என்றவளின் தாடையை அழுந்தப் பற்றியவனாய் அவளருகில் நெருங்கி நின்றவனைப் பார்த்து அவள் விழி தாழ்த்த எத்தனிக்க, விடாமல் பிடித்து அழுத்தினான்.
“ஏன் டி வேணாம்..”
“…”
“சொல்லு..”
“தனியா இருக்கணும்..”
“தனியா இருக்க வேணாமா? புருசனை விட்டு இருக்க வேணாமா?”
“அதான் உங்களுக்கே தெரியுதுல.. என்னை ரொம்ப ஓட்டுறீங்க..”
“சுண்டைக்கா ரொம்ப படுத்துற மனுசனை.. அப்போ எனக்கு வர முடியுமா தெரில.. உன் மாமியாரைக் கூட்டிட்டு போறியா?”
“ம்ம் சரி.. நான் அத்தைட்ட சொல்லுறேன்..”
“இந்த உடம்பை வைச்சுகிட்டு எப்படி விளையாடுத நீ.. நல்லா சத்தானதா சாப்பிடு. இந்த புரோட்டா சாப்பிடுத வேலையை விடு..”
“அதெல்லாம் நான் விளையாடிருவேன்.. நீங்க வாங்கிட்டு வாங்க..”
“ஏட்டி நாச்சி காலேஜுக்கு நேரமாவலையா?”, என்று மேகலை கீழிருந்து குரல் கொடுக்க வேகமாய் நகரச் சென்றவளை இழுத்து கன்னத்தில் முத்தம் பதித்து அனுப்பி வைத்தான் அகத்தியன்.
வண்டியில் அமர்ந்தவள் தன் போல் மாடியைப் பார்க்க மெலிதான புன்னகையோடு அவளுக்கு கையசைத்து நின்றான் அவளின் கணவன்.
“அத்த அடுத்த மாசம் மேட்ச் இருக்கு. அவங்களுக்கு வர முடியாதாம். உங்களை கூட்டிட்டு போக சொன்னாங்க..”
“சரி நாச்சி போவோம். எப்போனு சொல்லு.”
“நான் வண்டி ஓட்டட்டுமா?”, என்றவள் சிரிக்காமல் கேட்க மேகலையோ,
“வண்டியில கை வைச்சு பாரு.. அப்பறம் இருக்கு.”, என்று சிரித்து விட நாச்சியாரும் அவரோடு சிரித்திருந்தாள்.
கல்லூரி வாசலில் இறங்கிய நேரம் நாச்சியாரின் தோழியும் வர மேகலையிடம் அறிமுகப்படுத்தி விட்டு கையசைத்து உள்ளேச் சென்றாள்.
“என்ன டி மாமியாரோட காலேஜுக்கு வர்ற?”
“தினமும் அவங்க தான் கொண்டு வந்து விடுறாங்க.. பஸ் இந்த நேரத்துக்கு ரொம்ப கூட்டமா இருக்கும்ல அதான்.”
“..”
“என்ன டி அமைதியாயிட்ட?”
“இல்ல சொல்றேன்னு தப்பா நினைக்காத.. ஒரு வேளை உன் மேல நம்பிக்கை இல்லாம தான் அவங்களே கொண்டு வந்து விடுறாங்களா?”, என்றதில் தோழியைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள் நாச்சியார்.
“சாரி டி தப்பா நினைச்சுட்டியா? நான் மனசுல பட்டதைக் கேட்டேன். நீ நல்லாயிருக்க தான?”
“உன் அக்கறை புரியுது டி. இதே அக்கறையோட நீ முன்னாடியும் ஒரு அட்வைஸ் பண்ணின நான் தான் அதை காதுல வாங்காம வாழ்க்கையில பெரிய கரும்புள்ளியைக் குத்திகிட்டேன்.”
“..”
“அத்த, நீ நினைக்குற மாதிரி எல்லாம் இல்ல டி. உண்மையாவே என் மேல அன்பா தான் இருக்காங்க. நான் பழசில் இருந்து இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்ததுக்கு அவங்க தான் முக்கியமான காரணம்.”
“நீ சொல்றதை கேட்கவே சந்தோசமா இருக்கு தெரியுமா!”
“ம்ம் என்னை நினைச்சு எனக்கு இருக்குற குற்றவுணர்ச்சி மட்டும் மொத்தமா போயிருச்சுனால் இன்னுமே நல்லா இருக்கும் டி வாழ்க்கை.”
“இன்னுமா நீ அதையே கட்டி அலையுற?”, என்ற தோழியின் குரலில் கோபம் வெளிப்படையாகவே இருந்தது.
“சாகுற வரை இது என்னைத் துரத்திட்டே இருக்குமோனு தோணுது டி. எவ்வளவோ முயற்சி பண்றேன் ஆனாலும்..”
“நாச்சி.. வேண்டாம் அதை மொத்தமா தலை முழுகு அதான் உனக்கு நல்லது.”
“எனக்கும் புரியுது ஆனால் ராத்திரியில் கண்ணை மூடினாலே தேவையில்லாத எண்ணம் தான் வருது. அவங்களுக்கு எப்போவாவது என் மேல கோவம் வந்துருமோ நடந்ததெல்லாம் சொல்லி காட்டிருவாரோனு என்னென்னவோ யோசிக்குறேன்”
“உன் புருசன் அப்படி எதுவும் நடந்துகிட்டாரா உன்ட்ட?”, என்றவள் உண்மையான அக்கறையில் நாச்சியாரின் தோளைப் லேசாய் அழுத்தினாள்.
“ச்ச ச்ச அவங்க.. அவங்க ரொம்ப நல்ல மாதிரி தான். எனக்கு தான்.. இன்னும் முழுசா அவங்களோட சாதாரணமா பேச வரலை. ஆனா அவங்க கூட இருந்தா மட்டும் தான் நான் நிம்மதியா இருக்கேன் டி.”
“இங்கே பாரு இல்லாத பிரச்சனையை நினைச்சு உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத. எல்லாத்தையும் நாம இப்போவே யோசிச்சு வாழ முடியாது நாச்சி. எல்லாம் நல்லதாவே நடக்கும்னு நம்பு.
இப்போ தான் கொஞ்சம் பழைய நாச்சியை பாக்குற மாதிரி இருக்கு. அப்படியே இரு.
மாமியாரும் புருசனும் உன்னைப் பார்த்துக்குற மாதிரி நீயும் அவங்களுக்குத் தகுந்தாப்புல போய்க்கோ. எல்லாம் சரியாயிடும் டி.”, என்ற தோழியின் பேச்சு அந்த நேரத்துக்கு பெரிதும் நாச்சியாருக்குத் தேவையானதாய் இருந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
9 comments
Super update
நல்ல தோழி 😍😍😍🤗🤗🧡🧡🧡
அகத்தியா 😍😍😘
மேகலை இதுக்கு அப்புறமும் உன்ன வண்டி ஓட்ட விடுவாங்க 🤔🤔😏😏🤭🤭
Superb 👌
Naachi ipothan konjam konjama kutra unarchila irundhu velila vara. Nice
அருமையான பதிவு 💕💞
💞💞💞💞💞💞💞💞
Very nice.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு😍😍😍😍😍😍😍
நைஸ் அப்டேட் 😍😍😍
Super💕