1.3K
“செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று
மு.வ விளக்க உரை: காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.”
கை எரிச்சலையும் தாண்டி உள்ளுக்குள் அத்தனை கோவம் நாச்சியாருக்கு. என்ன ஏதென சுதாரிப்பதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது என்பது மெதுவாய் மூளைக்குள் உரைத்தது.
கணவன் எப்படி தன்னை அனுப்பலாம் என்று மனதிற்குள் முனகிக் கொண்டேயிருந்தாள்.
வள்ளியும் முருகனும் வரும் வழியெல்லாம் பேசி வந்த எதுவும் அவள் காதில் ஏறவில்லை. வீட்டு வாசலிலே ஆட்டோ நின்றதும் மகள் இறங்காமல் ஏதோ யோசனையில் இருப்பதைக் கவனித்தவராய் வள்ளி அவளது முழங்கையைப் பற்ற வலியில் சட்டென கையை இழுத்துக் கொண்டவள் அவளாகவே உள்ளேச் சென்றிருந்தாள்.
“நாச்சி கையில் என்ன காட்டு?”, என்றவர் கையை மடக்கிப் பார்க்க நன்றாகத் தோல் உரிந்து சிறிது இரத்தமும் இருந்தது.
“ஐயோ என்ன டி இது!”
“ஏங்க பிள்ளையை என்னவோ பண்றாங்கங்க..”
“ம்மா கொஞ்சம் வாயை மூடுதியா..”
“!!”
“கீழே விழுந்துட்டேன். எல்லாத்துக்கும் அவங்களை எதாவது சொல்லிட்டு கிடக்க..”
“கீழே விழுந்துட்டியா? எப்படி? எப்போ?”
“…”
“கீழே விழுந்தவளுக்கு மருந்து கூட போடாம தான் அடிச்சாரா அந்த மனுசன்.”
“ம்மா.. எப்போ பார்த்தாலும் உங்களுக்கு தோணுறதை எல்லாத்தையும் பேசுவீங்களா..”
“!!”
“அத்தையை வண்டி ஓட்ட கத்து தரச் சொன்னேன். அவங்க முடியாதுனு தான் சொன்னாங்க. நான் தான் கட்டாயப் படுத்திக் கேட்டேன். தெரியாம வேகத்தை கூட்டினதுல விழுந்துட்டேன்.”
“!!”
“அத்தை கைக்கு எண்ணெய் எடுக்க போன நேரம் தான் அவங்க வந்துட்டாங்க. அடிபட்டதைப் பார்த்து தான் பதட்டத்துல திட்டுனாங்க. லேசா தலையில தட்டுனாங்க.”
“!!”
“அதுக்குள்ளே இரண்டு பேரும் என்னென்ன கூத்து பண்ணிட்டீங்க.. ஏன் மா இப்படி இருக்கீங்க. என்ன ஏதுனு விசாரிக்கவே மாட்டீங்களா?”
“!!”
“உங்களுக்கு தோணுனால் கல்யாணம் பண்ணி அனுப்பிருவீங்க. உங்களுக்குத் தோணுனா இங்கே கூட்டிட்டு வந்துருவீங்க. நான் மனுசியில்ல வெறும் பொம்மை அப்படி தான?”
“நாச்சி!”, என்ற தந்தையின் குரலில் அவரை ஏறிட்டவள் அமைதியாய் சோபாவில் அமர்ந்து விட்டிருந்தாள்.
கணவனிடமிருந்து அழைப்பு வரும் கணவன் வந்து அழைத்துச் செல்வான் என்று ஒவ்வொரு நிமிடத்தையும் அவள் கடத்த அகத்தியனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
வள்ளியும் முருகனும் அமைதியாய் மகளைத் தான் கவனித்துக் கொண்டு இருந்தனர். ஏழு மணியளவில் நாச்சியாரின் அலைபேசி ஒலியெழுப்ப வேகமாய் எடுத்தவளுக்கு மேகலையின் எண்ணைப் பார்த்து சற்றே ஏமாற்றம் தான்.
“அத்த..”
“எட்டி எப்படியிருக்க? என்னை பேசவே விடாம என்னென்னவோ நடந்துருச்சு. அவன் எதுக்கு டி உன்னை அடிச்சான்?”
“அவங்ககிட்டையே கேளுங்க..”
“அவன் எங்கே இங்கே இருக்கான். நீ போனதும் கிளம்பி போனவன் தான்.”
“உங்க புள்ளை ரொம்ப மோசம் அத்த..”, என்றவளுக்கு கண்கள் கலங்கத் தயாராக மேகலை அவளை அதட்டினார்.
“ஆத்தா புண்ணியவதி திரும்பவும் நீ அழுது உன்னை பெத்தவக அதைப் பார்த்து வம்பாயிரும். கம்முனு இருடி.”
“நான் எப்போ அங்கே வர்றது?”
“உன்னைப் பெத்தவுக ஒரு ரகம் கட்டினவன் வேற ரகம். ரெண்டும் ஒரு முடிவுக்கு வந்தா தான். என்னவோ போ. சரி ஒழுங்கா சாப்பிட்டு வலிக்கு மத்திரை எதாவது போடு என்ன. “
“ம்ம்..”
“அம்மா வீட்டில தான இருக்க ரொம்ப பண்ணாத டி. அவன் வந்து கூப்பிடுவான்.”
“சரி அத்த நான் வைச்சுறேன்.”, என்றவளுக்கு சொல்ல முடியாத கோவமும் எரிச்சலுமாய் வந்தது.
கழிவறைக்குச் சென்று வந்தவள் மீண்டும் அதே இடத்தில் அப்படியே அமர்ந்து விட வள்ளி இரவு உணவிற்காக அவளை அழைத்தார்.
“எனக்குப் பசிக்கல மா.. வேண்டாம்.”
“என்ன, நீ வந்தவுடனே உன் புருசன் அப்படியே தேடி ஓடி வருவாருனு உட்காந்துருக்கியாக்கும்”, என்று வள்ளி எரிச்சல் பட முருகன் அவரை அதட்டினார்.
“பின்ன என்னங்க கல்யாணம் வர இங்கேயிருந்து போகவே மாட்டேன்னு அழுதது என்ன இப்போ என்னவோ நெருப்பு மேல உட்காந்த மாதிரி உட்காந்துருக்கா. அப்படி என்ன டி பண்ணிடாங்க உன்னை?”
“..”
“நானும் நடந்ததெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டு சரி சரினு பொறுத்துப் போனால் ரொம்ப ஓவரா தான் போயிட்டு இருக்க நீ..”
“உனக்கு இப்பவும் என் நிலைமை புரியலை இல்ல மா?”
“என்ன டி பொல்லாத நிலைமை. தேவையில்லாம இழுத்து விட்டுக்கிட்டது நீ.”
“ஆமா நாந்தான். இல்லைனு சொல்லலையே..”
“இப்போ என்ன பண்ணணும்ங்கிற?”
“இங்கே இந்த இடத்தை பார்க்கும் போதே நீயும் அப்பாவும் என்னவெல்லாம் சொல்லித் திட்டினீங்கனு தான் எனக்கு நியாபகம் வருது. அதோ அந்த இடத்துல விசிறியை வைச்சு அப்பா என்னை போட்டு அடிச்சாரே அதான் தெரியுது.”
“!!!”
“அங்கே என் ரூமில இரண்டு வாரமா பேய் பிடிச்ச மாதிரி நான் உட்காந்துருந்தது தான் நியாபகம் வருது. யாராவது ஒருத்தர் வந்து என் கையை இறுக்கிப் பிடிச்சு சரி பரவால்ல இனி இப்படி நடக்காம பார்த்துக்கோ.
நாங்க உனக்குத் துணையா இருக்கோம்னு ஒரு இரண்டு வார்த்தை சொல்லுவாங்கனு ஏக்கமா உகாந்துருந்தேன்.”
“!!!”
“அங்கே சென்னைல நான்.. தனியா.. ரொம்ப பயந்துட்டேன். எப்படியாவது உங்ககிட்ட வந்துரணும்னு உயிரை கையில் பிடிச்சுட்டு பஸ்ஸில் உட்காந்துருந்தேன்.”
“நாச்சி!!!”
“வாழ்க்கையில நான் இவ்வளவு பயந்ததே இல்ல மா. எவ்வளவு வேணாலும் அடிங்க ஆனா ஒரே ஒரு தடவை என்னை இறுக்க கட்டிகிட்டு எங்ககிட்ட நீ வந்துட்ட டி அப்படினு சொல்லிருந்தா..”, எனும்போதே ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்திருந்தாள்.
“பேச்சி கூட என் பக்கத்துல வரல மா.. என்கூட பேசவே இல்ல.. இதெல்லாம் தான் எனக்கு இங்கே வர பிடிக்காம போச்சு. இங்கே இருக்கவே வேணாம்னு நான் தான் சொன்னேன்.”
“…”
“அத்தையும் அவங்களும் எனக்காக எதையும் யோசிக்காம அங்கே கூட்டிட்டு போயிட்டாங்க. உன்னை மாதிரியே ஏன் அதை விட ஒரு படி மேலேயே என்னைப் பார்த்துக்குறாங்க.
இப்பவும் நான் சொல்தை தப்பா எடுத்துறாத இப்போ எனக்கு என்ன தேவையோ அதை அவங்க கொடுக்குறாங்க மா..”, என்றவளுக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.
இத்தனைப் பேச்சில் இன்னுமும் தந்தையை திரும்பிக் கூட பார்த்திருக்கவில்லை. முருகனுக்கு அவள் தரப்பும் அவளது மன போராட்டமும் புரிய ஆரம்பித்திருந்தது.
அதன் பின் வெகுநேரம் அங்கு பெரும் அமைதி நிலவ வள்ளி தட்டில் உணவை வைத்துக் கொண்டு வந்து நாச்சியாரின் அருகில் அமர்ந்தார்.
“நாச்சி நடந்ததை மாத்த முடியாது அதையே போட்டு யோசிக்காத டி. சாப்பிடு.”, என்று ஒரு வாய் உணவை அவளது வாயருகில் கொண்டு வர மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
“நீ சொல்லு என்னை கல்யாணம் பண்ணவன் நடந்ததை சொல்லிக் காட்டியே என்னை கொன்னுருந்தா என்ன மா பண்ணிருப்ப?”
“என் பெத்தாரு கண்டதை யோசிக்காத டி.”, என்றவர் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
“நான் அப்படி தான் ஆகப் போகுதுனு நினைச்சேன். ஆனா அப்படி நான் செத்துருந்தா கூட உங்க கௌரவத்துக்கு குறையில்லாம போயிருக்கும். இல்ல மா?”, என்றதில் வள்ளி வெடித்து அழ ஆரம்பிக்க முருகனுக்கு அங்கு அமரவே முடியவில்லை.
“எனக்கு பெருசா எல்லாம் ஆசை அப்போ இல்ல மா. காலம் பூரா நீ பண்ணத் தப்புக்கு இப்படியே இந்த வீட்டில ஒரு ஓரமா கிடனு சொல்லிருந்தா கூட சந்தோசமா இருந்துருப்பேன்.”
“…”
“ஆனா என்னை நீங்க நம்பவே இல்லல?”, அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவராய் முருகன் எழுந்து அவளருகில் வந்திருந்தார்.
“எல இப்போ என்ன செய்யணும்ங்க?”, என்றவரின் பேச்சு சுள்ளென்றே வந்தது. அப்போதும் அவரை நிமிர்ந்து பார்க்காமலே இருந்தாள் நாச்சியார்.
“அதான் அப்பன் முகத்தை கூட பார்க்காம வீம்பா இருக்கியே இது போதாதா உனக்கு?”
அதற்கும் அவளிடத்தில் பதிலில்லாமல் போக முருகன் கோபமாய் உள்ளே சென்றிருந்தார். வள்ளி எத்தனைக் கூறியும் ஹால் சோபாவிலேயே படுத்துக் கொள்வதாய் நாச்சியார் கூறி விட வேறு வழியின்றி அவரும் சற்று தள்ளி தரையில் படுத்திருந்தார்.
நாச்சியாருக்குத் துளியும் தூக்கம் வருவதாய் இல்லை. மொத்த எண்ணமும் கணவனைச் சுற்றியே இருக்க காரணமேயின்றி அழுகை தான் வந்தது.
இரவு பதினொரு மணியைக் கடந்திருக்க வீட்டின் அழைப்பு மணி சத்தத்தில் தூக்கி வாரிப்போட பெண்கள் இருவரும் எழுந்து கொள்ள முருகன் வேகமாய் அறையிலிருந்து வெளியே வந்தார்.
எதுவும் பிரச்சனையோ இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என்று எண்ணிய படி கதவைத் திறந்தவர் அங்கு நின்ற அகத்தியனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து போனார்.
மருமகனை வரவேற்று உள்ளே அழைத்து வர கண்ட காட்சியை நம்ப முடியாமல் விழி விரித்து நின்றிருந்தவள் மனம் நிறைத்த கோவத்தோடு அவனருகில் சென்று பட்டென அவனது புஜத்தில் அடித்திருந்தாள்.
வள்ளியும் முருகனும் பதறிப் போனவர்களாய் மகளைத் தடுக்க முயற்சிக்க அவளோ கணவனிடம் இருந்து விழியகற்றினாள் இல்லை.
“கூப்பிட்டா நீங்க பாட்டுக்கு அனுப்பிட்டீங்க?”
“..”
“அப்போ நீங்களும் என்னை வைச்சு பந்தாடுவீங்க இல்ல?”
“…”
“உங்களுக்கு என் நிலைமை தெரியும் தான? ஏன் விட்டீங்க..”, என்றவள் அழுது கொண்டே அவனை அடித்து ஓய்ந்திருந்தாள்.
“சரி ஆரம்பிக்காத. வா போலாம். வீட்டுக்கு போய் மீதி அடியை வாங்குறேன்”
“மாட்டேன். நான் வரல..”
“நல்லது அப்போ இங்கனயே கிட..”, என்றவன் திரும்ப கரத்தை இழுத்து பக்கவாட்டில் இடுப்போடு கட்டிக் கொண்டாள்.
“சரி.. அதான் வந்தாச்சே அப்பறம் என்ன.. வா போவோம்.”
“மாப்பிள்ள.. நடந்தது தெரியாம..”
“நீங்க எப்போ தான் எதை தான் தீர விசாரிச்சுருக்கீங்க..”
“ரொம்ப நேரமாகி போச்சு. நீங்களும் இங்கேயே தங்கிட்டு காலையிலே போங்க.”, என்றதில் விட்டால் ஓடி விடுவான் என்று எண்ணி அவனருகிலேயே நின்ற மனைவியைத் தான் பார்த்தான் அகத்தியன்.
“என்ன இருப்போமா? போலாமா?”, என்றதில் நேரத்தையும் அவனது சோர்ந்த முகத்தையும் கவனித்தவளாய் அங்கேயே தங்கிக் கொள்ளலாம் என்று கூற இருவரையும் நாச்சியாரின் அறைக்கு அனுப்பி வைத்தனர் வள்ளியும் முருகனும்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Kutty ud ma
நல்லா பண்றிங்கடா ரெண்டு பேரும் 😏🤭😏😏😏😏
ஹாப்பா என்னா அடி 🤭🤭🤭🤭
ரொம்ப நல்லா இருக்குடா நீங்க ரெண்டு பேரும் பண்றது 😝😝😝😝
Nice
Ipdi thaan maru veedu varanum nu irukku pola
Nalla varuvinga rendu perum
நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️
Superb 👌
Semma naachi. Veetuku vandhapuram nachu nachu nu keta. Ipothan unga appa amma yosikave arambichu irukaanga. Innum avanga seidha thappu avangaluku puriyala. Agathiya semma. Un presence ipo evlo happy theriyuma. Adikira naachi nee. Avlo urimai vandhuruchu.