மலர்-15

by ஸ்ரீ
2 comments 175 views
A+A-
Reset

குறள் 355:

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

மு.வ விளக்க உரை: எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

மறுநாள் அதிகாலை எழுந்த போதே ஒருவித உற்சாகமன மனநிலை தான் மங்கைக்கு கையில் இருந்த மருதாணியை நீக்கிவிட்டு பார்க்க அரக்கு நிறத்தில் அப்படிச் சிவந்திருந்தது.

பல்லைத் தேய்த்து விட்டு கீழே சென்றவள் காபியை வாங்க கைநீட்ட குணவதி பார்த்துவிட்டு விஜயலட்சுமியிடமும் காட்டினார்.

“பாப்பாக்கு இப்படி சிவந்ததே இல்லைல க்கா?”

“ஆமா விஜி ரொம்ப அழகாயிருக்கு. இந்த வருச திருவிழா என்னவோ மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குற மாதிரி இருக்கு.. போ கண்ணு சீக்கிரம் ரெடியாகி வா”

மொத்தக் குடும்பமும் தயாராகியிருக்க சிறியவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான வேட்டி சட்டையை எடுத்திருக்க பார்த்திருந்த பெரியவர்களுக்கு மகிழ்வாய் இருந்தது.

“தாத்தா”, என்ற குரலில் அனைவரும் வாசல்புறம் திரும்ப சந்தன வண்ண சட்டையும் வேட்டியுமாய் வந்து நின்றவனைப் பார்த்த பூங்கோதைக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

அவரின் மனநிலையை உணர்ந்தாரோ என்னவோ, கனியன் பூங்கோதையின் கரத்தை ஆதரவாய்  பற்றினார்.

“அடடா முகுந்தன் கலக்குறீங்க.”, என்ற சிறியவர்கள் அவனுக்கு கைகுலுக்கி நால்வருமாய் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

“கேரளா களை இப்போதான் அதிகமா தெரியுது. ஹேண்டசம் ப்ரோ”, என்ற கார்த்திக்கைப் பார்த்து லேசாய் காதைத் தடவிய வண்ணம் புன்னகைத்தவனின் விழிகள் தன்னவளுக்காய் அலை பாய்ந்தன. சரியாய் அந்த நேரம் திருமா,

“இவ இன்னும் என்ன பண்றா மா? நேரமாகுது.. பாப்பா!!”

“ஆங் வரேன் வரேன் ஏன் கத்துறண்ணே..”, என்றவளது குரலில் அனைவருமாய் மாடிப் படிகட்டை நோக்கினர்.

பூங்கோதை கொடுத்திருந்த காபிப் பொடி நிற பாவாடைச் சட்டையும் அடர் பிங்க் நிற தாவணியும் அதற்கு ஏற்றவாறு குடை ஜிமிக்கியும் நீள இரட்டைவடத் தங்க சங்கிலியுமாய் கொலுசு சத்தம் இனிதாய் இசைக்க, தோளுக்கு சற்று கீழிருந்த முடியை ஒற்றைப் பின்னலிட்டு பூவை ஹேர்பின்னால் குத்தியபடியே கீழே வந்திருந்தாள்.

“வந்துட்டேன். போலாமா?”, என்று நிமிர்ந்தவள் அப்போது தான் முகுந்தனை கவனித்தாள். உடையை  சுட்டிக்காட்டி அவனிடம் பிறரறியாமல் புருவம் உயர்த்த இரு கண்களையும் சிமிட்டி உதடு வளைத்து பிரமாதம் என்பதாய் சமிக்ஞை செய்தான்.

“ஏலே..”

“ப்பா எப்படியிருக்கு?”

“உனக்கென்னலே எது போட்டாலும் அழகு தான்.”

“அப்பத்தா உன் செலெக்ஷன் பிரமாதம் போ..”

“டேய் திருமா, மாறா நீங்க எல்லாம் போட்டோ எடுத்தீங்களே இவளையும் நிக்க வைச்சு எடு.”, என்றதும் திருமா தன் கைப்பேசியில் மங்கையைப் புகைப்படம் எடுத்தான்.

முகுந்தன் அவனிடமிருந்து கேமிராவை வாங்கிக் கொண்டு ஆண்கள் மூவரையும் அவளோடு நிற்குமாறு கூறி புகைப்படம் எடுத்துக் கொடுத்தான்.

பின் முகுந்தனோடு சேர்த்து அனைவருமாய் செல்பி எடுத்துக் கொண்டனர். அனைவருமாய் காரில் ஏறுவதற்கு தயாராக சிறியவர்கள் அனைவரும் ஒரு வண்டியில் வருவதாய் கூறி ஏறிக் கொண்டனர்.

திருமா ஓட்டுநர் இருக்கையிலும் அவன் அருகில் மாறனும் அமர்ந்து கொள்ள பின்னிருக்கையில் முகுந்தன் கார்த்திகேயனோடு மங்கை அமர்ந்து கொண்டாள்.

“ஏய் பாப்பா திருவிழானால் சல்லிப் பயலுகளும் இருக்கத் தான் செய்வானுங்க. எங்கேயாவது போய் வம்பு வளர்த்துட்டு வரக் கூடாது புரியுதா?”

“இது வேறயா?!”

“ஆமா கார்த்தி. போன வருஷமெல்லாம் பாவாடையைத் தூக்கிச் சொருகிட்டு ஒரு கடன்காரனோட அப்படி ஒரு சண்டை. அவனா, கழுத்து முட்ட குடிச்சுட்டு சுத்தி திரியுறான். அப்பறம் நாலு அடியைப் போட்டு அவனை அனுப்பி இவளை கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.”

“சொர்ணாக்காவா டி நீ. நான் கூட பாப்பா மாதிரி சாதுவா இருப்பனு நினைச்சேன்.”

“ம்ம் வம்பு பண்ணா பேசாம போக முடியுமா? அப்பறம் எப்படி இவனுகளுக்கு பயம் வரும்.”

“சரியாத்தா மலையேறாத. அப்பறம் இன்னொரு விஷயம் கூட்டம் அதிகமா இருக்கும் முகுந்தன் கூடவே இருங்க இரண்டு பேரும். புரியுதா?”

“சரி திருமா நான் பார்த்துக்குறேன்.”, என்று கார்த்திக் கூற அனைத்தையும் பார்வையாளனாய் பார்த்திருந்தவனுக்கு தானும் அந்தக் குடும்பத்தில் ஒருவனாய் ஆகும் நாள் வந்தால்  நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

திருக்கல்யாணம் நடக்கும் இடத்தை அடைந்தவர்கள் தங்களுக்கான இடத்தில் மொத்த குடும்பமுமாய் அமர்ந்து கொள்ள குணவதியோடு அமர்ந்திருந்தவளுக்கு பின்னால் கார்த்திகேயனோடு அமர்ந்திருந்தான் முகுந்தன்.

அவ்வப்போது தன்னவனைக் கடைகண் பார்வையில் நிரப்பிக் கொண்டவளாய் தனது கைப்பேசியிலும் புகைப்படமாய் எடுத்துக் கொண்டாள்.

முகக்கவசம் அணிந்திருந்தாலும் அவன் கண்களின் சிரிப்பில் தன்னைத் தொலைத்துப் போனாள். மீனாட்சி தாயின் கழுத்தில் தாலி அணிவித்த நொடி திருமணமான பெண்கள் அனைவரும் திருமாங்கல்ய சரடை அணிந்து கொள்ள அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் தன் கணவன் கையினால் சரடை கட்டச் சொல்லி வாங்கிக் கொண்டார்.

அதையேப் பார்த்திருந்த இருவருக்கும் இந்தநாள் எப்படியாய் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் பயமும் சேர்ந்தே மனதில் எழுந்தது.

திருக்கல்யாணம் முடித்து ஆண்கள் கடைக்குக் கிளம்பி விட தாமோதரனோடு பெரியவர்கள் வீட்டிற்கு கிளம்புவதாய் கூற கார்த்திகேயனும் அவசர வீடியோ கால் செய்ய வேண்டுமென வீட்டிற்கு கிளம்புவதாய் கூறினான்.

மங்கை சற்று நேரம் சுற்றிவிட்டு சீக்கிரமாகவே வந்துவிடுவதாய் கூற டிரைவரிம் அவளது வண்டியை கொடுத்தனுப்புவதாய் கூறிக் கிளம்பினார் குணவதி.

எங்கு காணிணும் மக்கள் தலைகளேத் தெரிய மங்கையோடு நடக்க ஆரம்பித்தவன் மெதுவாய் அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான். ஏதோ நினைத்து சலனத்தில் இருந்தவள் பற்றிய கரத்தை இன்னுமாய் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“மலரே..”

“…”

“இந் நாள் எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்குதுனு தெரியுமா?”

“…”

“எல்லாம் ஸ்பவனம் போல உண்டு..”

“…”

“இதெல்லாம் இப்போவே இப்படியே நின்னு போயிடக் கூடாதானு இருக்கு.”

“…”

“ஈவ்னிங் நான் கிளம்பணும் மலரே..”, என்றதில் சட்டென திரும்பியவளின் கண்ணீர் அவனது கரம் தொட்டது.

“இதுக்கு தான் சொல்லவே யோசிச்சேன். வேணாம் மலரே. ப்ளீஸ்.”, என்றபோது சற்றே ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் அவனோடு நின்றாள்.

“இனி நாம எப்போ பார்ப்போம்?”

“மலருக்கு எப்போ நினைச்சாலும் நான் வரும். இங்கே இருக்கு கேரளா. கரையண்டா.”

“எனக்கு பயமா இருக்கு. மனசு எதோ ஒரு மாதிரி இருக்கு. உன்னை பிரிஞ்சுடுவேனோனு தோணுது.”

“பைத்தியம்..”

“எனக்கு இதெல்லாம்.. சொல்லத் தெரியலை தங்கம். பேசாம வா அப்பாகிட்ட பேசிடலாம்.,”

“என்ட பொன்னு மோளே. நீ இனி தான் உன்னோட ப்யூச்சரையே ஆரம்பிக்க போற. என்னால அதில் எந்த பிரச்சனையும் வரக் கூடாது மலரே. நீ தெளிவா யோசிக்குறவ இப்போ என்னாச்சு.”

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

“ஆனால் எனக்கு என்ட மலர் வாழ்க்கையில் அவ நினைச்சதை அடையணும்.”

“…”

“இங்கே பாரு.. என்னைப் பாரு மலரே.”

“நான் உன்னை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என் வாழ்க்கையில் என்னோட பாரியா (மனைவி) நீ மட்டும் தான். தினமும் பேசினாலும் பேசலைனாலும் பார்த்தாலும் பார்க்கலைனாலும் நீ என்னோடயே தான் இருப்ப. நான் உன்னோடவே தான் இருப்பேன். மனசிலாயோ?”

 “ம்ம்..”

“என்ட சக்கரே இப்படி அழுது கரைஞ்சால் நான் எப்படி போகும்? மனசு நிம்மதியே இருக்காது”

“சரி நான் அழலை. நீயும் நிறைய நிறைய படம் நடிச்சு பெரிய ஆளா வரணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டில் பேசிடலாம் தங்கம்.”

“நேரம் பார்த்து கண்டிப்பா வீட்டில் சொல்லலாம். எனக்கு பிரஷ்ணயில்லா. உன் நிலைமை அப்படியில்லை. அதனால கவனமா இருக்கணும் சரியா?”

“ம்ம்..”

“இந்த மதுர மலர் என்னை பிராந்தாக்கி..”

“…”

“மேட்ச் எதுவும் கேரளாவில் நடந்தா மறக்காம பறையு”

“ம்ம்..”

“எடி உன்னோட பேசுறதுக்கு இந்த நேரம் கிடைச்சுதேனு சந்தோஷப்பட்டுட்டு இருக்கே.. நீ ம்ம் சொல்லிட்டு இருக்க.”

“தங்கமே திரும்பவும் சொல்றேன். உன்னைப் பிடிச்சது வேணா ஒரு நிமிஷத்தில் நடந்த விஷயமா இருக்கலாம். ஆனால் இனி நீயில்லைனு ஒரு நிலைமை வந்தா நான் உயிரோடேயே இருக்க மாட்டேன்.”

“ப்ராந்தனே போல சம்சாரிக்குறுனு (பைத்தியம் மாதிரி பேசுற). இந்த பொன்னு மோள் இல்லாத என்ட ஜீவிதம் இல்லை டி.”

“…”

“இன்னொரு தடவை இப்படி பேசாத.”

“ம்ம்..”

“ப்ச்…”

“சரி பத்திரமா போயிட்டு வா. தினமும் கால் பேச முடியலைனாலும் மெசெஜாவது பண்ணு. உடம்பை பார்த்துக்கோ என்ன?”, என்றவளின் கரம் தயக்கமாய் அவனது கன்னம் பற்ற அதை தன்னோடு இன்னுமாய் வைத்து அழுத்தியவனாய்,

“என்னை விட உனக்காக நான் நல்லா பார்த்துக்குவேன். உனக்கும் அதேதான். விளையாடும் போது கவனமா இரு. ரொம்ப ஸ்ட்ரெயின் வேண்டா. சீக்கிரமே இந்தியன் டீமில் மலரைப் பார்க்கணும்.”, என்றதில் புன்னகையோடு ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“கார்த்தி சொன்னது கரெக்ட். மலர் ஒருபாடு பொசசிவ் அல்லே?!”

“அது அப்படி தான். உண்மையைச் சொல்லணும்னால் என் அப்பாவை மாதிரி நீ எனக்கு முக்கியம். பாசம் காட்டத் தெரியுற எனக்கு அதை திருப்பி எடுத்துக்க எப்பவுமே தெரியாது.

அப்படியிருக்கும் போது இந்த காதல் இன்னும் அதிகமா ஸ்பெஷல் தான? அதான் இப்படி இருக்கேன்.”

“ஐ அம் சோ லக்கி மலரே..”

“நானும் தான் தங்கம்.”

 “ஆமா அதென்ன தங்கம்?”

“உன்னை அப்படி தான் கூப்பிட வருது. மரியாதை கூட வர மாட்டேங்குது. வாங்க போங்க சொன்னால் யாரோ போல இருக்கு.”

“என்ட மலர் எப்படி விழிச்சாலும் எனக்கு இஷ்டம்.”, என்றவனோடு மேலும் சிறிது நேரம் சுற்றிவிட்டு அவர்களது கடைக்குச் சென்று அனைவரிடமும் விடைப்பெற்றுச் செல்ல வந்தான் முகுந்தன்.

“என்ன தம்பி அதுக்குள்ளே?! ஆற அமர இருந்து எங்க ஊரைப் பார்த்துட்டு போங்க..”

“இல்லை அங்கிள் ஷுட்டிங் ஆரம்பமாகுது போயாகணும் அதான்.”

“புரியுது பா எப்போ மதுரை வந்தாலும் யோசிக்காம வீட்டுக்கு வந்துரணும் என்ன?”

“கண்டிப்பா வருவேன். இங்கே வந்து உங்களை எல்லாம் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.”

“திருமா, மாறன் வரேன். இனியன் அங்கிள் எல்லாரும் கேரளா வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும்.”

“சொல்லிட்டீங்களே நானே கூட்டிட்டு வரேன். அப்பறம் அடுத்த மாசம் கல்யாணம் பத்திரிக்கை அனுப்புவேன் நிச்சயம் வரணும்.”

“நான் இல்லாமையா?”, என்றவன் ஆரத் தழுவி விடைபெற்று மங்கையின் வண்டியில் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிலும் அனைவரும் அதுக்குள் கிளம்ப வேண்டுமா என்று கேட்க அனைவரின் பாசத்திலும் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது முகுந்தனுக்கு. மதிய உணவை மங்கையே அவனுக்குப் பரிமாற மன நிறைவோடு மதுரைப் பயணத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்தான் உன்னி முகுந்தன்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan July 21, 2026 - 3:00 am

💞💞💞💞💞💞💞💞

srichitra July 21, 2026 - 5:32 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode