432
“அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
மு.வ விளக்க உரை: தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.”
இரு தினங்களில் கனியன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப் பட்டிருந்தார். தன் குடும்பம் மொத்தத்தையும் ஒரே இடத்தில் பார்த்தவருக்கு எதோ ஒரு விதத்தில் நிம்மதி உணர்வு தோன்றியது.
முகுந்தனும் இன்று வருவதாய் இருக்க அனைவருக்குமான உணவு ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க சிறியவர்கள் தங்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
மங்கை தாத்தாவை காண அவரது அறைக்குச் சென்ற நேரம் முத்துப் பாண்டியும் இனியனும் அங்குதான் இருந்தனர்.
“தாத்தா எப்படியிருக்க?”, என்றவளை கைநீட்டி அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார் கனியன்.
“என்ன அப்படி பார்க்குற உன் பேத்தி மங்கை தான்.”, என்றவள் சிரிக்க இடவலமாய் தலையசைத்தவராய்,
“எஞ்சாமி…”, என்றவருக்குத் தொண்டை அடைத்தது. மகன்கள் இருவருமாய் மறுபுறம் சென்று அமர்ந்து அவரது கையை பற்றிக் கொண்டனர்.
“அப்பனா இருக்கும்போது இருந்த திமிரெல்லாம் தாத்தனா ஆனப்பறம் இல்லைலே. முகுந்தன் திருவிழாக்கு இங்கே வந்திருந்த அப்போ எல்லாம் உன் அப்பத்தா அப்படி ஒரு அழுகை அழுதா.
எம்மவளுக்கும் இந்த வயசில் பிள்ளையிருக்குமேனு சொல்லி சொல்லி வருத்தப்பட்டா. உண்மையைச் சொன்னால் ஒரு கட்டத்தில் அவளை நான் மறந்தே போயிட்டேன் தான் பாப்பா.
என்னை மீறி எவனோ முக்கியம்னு போனவ போகட்டும்னு இருந்துட்டேன். ஆனால் நீ வந்து எம்மவளைப் பார்த்தேன்னு சொன்னப்போ தான் மொத்தமா உள்ளுக்குள்ளே எதோ பண்ண ஆரம்பிச்சுது.
ஆடி ஓடி வயசாகி உட்காரும் போது தேவைப்படுறது குடும்பத்தோட அரவணைப்பு மட்டும் தான. அதிலேயும் நீ பேசாம இருந்ததை என்னால தாங்கவே முடியலை தெரியுமா.
அப்போ புரிஞ்சுது ஒருத்தரை ஒதுக்கி வைச்சால் எத்தனை வலிக்கும்னு. எம்மவளுக்கும் இத்தனை வருசம் அப்படி தான இருந்துருக்கும்.”
“அப்போ உனக்கு வந்த கோபம் நியாயம் தான் தாத்தா. ஆனால் இத்தனை வருசமும் அதை மனசில் அப்படியே வைச்சுருக்க கூடாது. அதைவிட அப்படி ஒருத்தி இல்லவே இல்லைனு உங்களை நீங்களே நம்ப வைச்சுட்டு வாழ்ந்ததை தான் என்னால தாங்கிக்கவே முடியலை.”
“ஏன் சித்தப்பா அதிலும் நீ கொலை பண்ணவே தயாரா இருந்தியாமே. மாமாவை போய் அடிச்சுருக்க! என்னால ஏத்துக்கவே முடியலை அதையெல்லாம்.”
“பாப்பா, அப்பத்தா உன்கிட்ட சொன்ன மாதிரி நீ பொறந்தப்பறம் நிறைய மாறிப் போச்சுலே. அதுக்கு முன்னாடி எல்லாம்.. இப்போ நினைச்சா அசிங்கமா தான் இருக்கு. ஆனால் அப்போ சாதிக்காரனை எதிர்க்கணும்ங்கிற யோசனை கூட இல்லாத காலம்.
இப்போ அனுபவத்தில் காசு பணம் தான் எல்லாம். காசு வைச்சுருக்குறவன் எவனா இருந்தாலும் இந்த உலகம் தலையில் தூக்கி வைச்சு ஆடும்னு நல்லாவே புரியுது.
நீ சொன்ன மாதிரி அண்ணனுங்க இருக்கானுங்கனு ரொம்ப நம்பியிருக்கும் இல்ல உன் அத்தை?”
“இன்னும் என்ன என் அத்தை? உன் தங்கச்சினு சொன்னா ஆகாதோ?”
“…”
“ப்பா.. உனக்கு கூட ஏன் பா அவங்களை பார்க்கணும்னு தோணலை?”
“சித்தப்பா சொன்னது தாம்லே காரணம். வருத்தம் கோபம் எல்லாம் இருந்தது. அதைவிட அப்பாவை எதிர்த்து பேச பயம். இத்தனை நாளா உன் அப்பத்தாவே ஒரு நாள் தாத்தாட்ட மகளைப் பத்தி பேசிருக்குமானு கேளு.
அன்னைக்கு நீ அத்தனை பேசும் போது எனக்கு எம்புட்டு ஆச்சரியம் தெரியுமா. எங்கப்பாவையே இப்படி கேள்வி கேட்குறாளே என் மகனு நினைச்சேன்.
அப்பாகிட்ட பார்வதியைப் பத்தி பேசி அவரைக் கோபப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ இஷ்டம் இல்லாம அப்படியே விட்டுட்டேன். “
“என்னவோ கதை சொல்லுங்க மூணு பேரும். உன்னைப் பத்தி அத்தை சொன்னதை வைச்சு எனக்கும் உன் மேல கொஞ்சம் கோபம் குறைஞ்சுது தான். ஆனால் அப்பறம் ஏன் என்கிட்ட பேசாமயே இருந்த?”
“அது…”
“சொல்லுப்பா?”
“நீ என் அளவுக்கு முக்கியமா யாரையும் நினைச்சது இல்லைனு எனக்கு எப்பவுமே ஒரு கர்வம் உண்டுலே.”
“!!”
“ஆனால் இப்போ அப்படி இல்லை தான?”
“ப்பா…”
“அன்னைக்கு நீ சொன்னலே என் அளவுக்கு முகுந்தன் உனக்கு முக்கியம்னு. அது ஒரு மாதிரி மண்டைக்குள்ளே குடைய ஆரம்பிச்சுடுச்சு.”
“என்னப்பா நீ. எப்பவும் நீயும் மத்தவங்களும் ஒண்ணா ஆகவே முடியாது. என் அப்பா மாதிரி யாரு வருவா சொல்லு!”
“முகுந்தனை ரொம்ப விரும்புறியாலே?”
“ம்ம் உன்னளவு பார்த்துக்க மாட்டான் தான். ஆனால் அவனை மாதிரி என்னை யாராலேயும் பார்த்துக்க முடியாதுப்பா.”
“ஒருவேளை அப்பாக்கு இதில் விருப்மில்லைனால்?”
“உன் சம்மதம் கிடைக்குற வரை காத்திருப்பேன்.”
“கடைசி வரை சம்மதிக்கலைனால்?”
“உன் பொண்ணாவே ஜாலியா இங்கேயே இருந்துருவேன்.”, என்றவள் கண்ணடித்துச் சிரித்தாள்.
“ஏலே???!”
“நிசமா தான் பா. எனக்கு உன் மருமகனைப் பிடிச்ச அப்பறம் ஒண்ணு சொன்னேன். நீயா இந்தக் குடும்பமானு ஒரு நிலைமை வந்துருமோனு பயமா இருக்குனு.
அதுக்கு அப்போவே உன் மருமகன் சொன்னான் எந்த சூழ்நிலையிலேயும் வீட்டை விட்டுட்டு வானு நான் சொல்ல மாட்டேன். உனக்காக எத்தனை வருஷம் வேணாலும் காத்திருப்பேன்.
எனக்கு என் மலர் சிரிச்ச முகத்தோட இருக்கும்போது அதை பார்த்துட்டே தான் தாலி கட்டணும்னு சொன்னான். நீங்க எல்லாம் அவனுக்கு யாருமா இல்லாத அப்போவே அவ்வளவு சொன்னவன் இப்போ அவனோட மாமாவை கஷ்டப்படுத்துவானா சொல்லு.”
“…”
“எல்லாத்தையும் விட எனக்கு என் கல்யாணம் மீனாட்சித் திருக்கல்யாணம் போல ஊரே கொண்டாட நடக்கணும். உன் விருப்பம் இல்லாம எல்லாம் யோசிச்சு கூட பார்க்காத ப்பா.”
“அப்பா வேற மாப்பிள்ளை பார்த்தா?”
“அவனை கல்லாலேயே அடிச்சு ஓட விடுவேன்”, என்றதில் இனியனும் கனியனும் சிரித்தனர்.
“இப்போ எனக்கு உன் மனசுல என்ன இருக்குனு புரிஞ்சுடுச்சு. நீ பொறுமையா டைம் எடுத்துக்கோ எப்போ என்னை சமாளிக்க முடியலை கல்யாணம் பண்ணிக் கொடுத்துரலாம்னு தோணுதோ அப்போ பெரிய மாம்ஸ்க்கு ஒரு போனை போடு பையனைக் கூட்டிட்டு ஓடி வந்துருவார்.
எப்படியும் இன்னும் நாலு வருஷத்துக்கு நோ கல்யாணம். நானே ஓகே சொன்னாலும் உன் மருமகன் ஒத்துக்க மாட்றான். இந்தியன் டீமில் நான் ஆடின அப்பறம் தான் கல்யாணம்னு சொல்லிட்டான் கல்நெஞ்சகாரன். சோ அதுவரை நீ ஜாலியா இரு சரியா?”
“ஏன்லே நீ இப்படியிருக்க??!”
“ஏன்னா நீ என் அப்பா..”, என்றவள் தந்தையை கழுத்தோடு கட்டிக் கொண்டாள். அந்நேரம் வெளியில் சத்தம் பலமாய் இருக்க,
“உன் மருமவனுக்கு வரவேற்பைப் பார்த்தியா? நான் போய் பார்த்து கூட்டிட்டு வரேன்”, என்றவள் குதித்தோட ஆண்கள் மூவருமாய் அவளையே பார்த்திருந்தனர்.
“பாப்பா போல பிள்ளை கிடைக்க நம்ம வம்சமே புண்ணியம் பண்ணிருக்குண்ணே..”
“…”
“பாண்டி என் பேத்தி குணத்துக்கு நான் கடுகளவு கூட பெருந்தன்மை இல்லாம போயிட்டேனே..”
“ப்பா வீணா உடம்பை கெடுத்துக்காதீங்க. போனது போகட்டும் இனி எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம் பா.”
அங்கு முகுந்தன் ஹால் சோபாவில் அமர்ந்திருக்க சிறியவர்கள் அத்தனை பேரும் அவனைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
“வாங்க ஹீரோ சார்..”, என்ற தன்னவளின் குரலில் முகம் ஒளிர அவளைப் பார்த்து புன்னகைத்தவனைத் தான் பெரியவர்கள் பார்த்திருந்தனர்.
“தாத்தாவைப் பார்க்க போலாம் வா”, என்றவள் கைநீட்ட அனைவரையும் எண்ணி லேசாய் முகம் சிவந்தவனின் கைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.
“தாத்தா…”
“எப்படியிருக்கீங்க அப்புச்சா?”, என்றவன் மாமன்கள் இருவரையும் பார்த்து தயக்கமாய் புன்னகைத்தான்.
பேரனின் முகத்தை வருடியவராய் தன்னருகில் அமர்த்திக் கொண்டவரின் கையை ஆதவாய் பற்றிக் கொண்டான் உன்னி முகுந்தன்.
தாத்தாவோடு இரண்டொரு வார்த்தைகள் பேசியவனாய் மாமன்கள் புறம் திரும்பி அன்று தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டான்.
“சாரி மாமா. அன்னைக்கு நான் அப்படி பேசினது எதையும் மனசில் வைச்சுக்காதீங்க.”
“நீயும் நான் பேசினதை மறந்துரு மாப்பிள்ளே..”, என்ற இனியனைப் பார்த்து பற்கள் தெரிய சிரித்தவன் முத்துப் பாண்டியைப் பார்க்க அவர் மகளையும் மருமகனையும் பார்த்திருந்தவராய்,
“என்ன இருந்தாலும் என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறவர். அதனால அதையெல்லாம் அப்பவே மறந்துட்டேன்.”, என்றதில் மங்கை விழிவிரித்து தந்தையைக் கட்டிக் கொள்ள முகுந்தனுக்கு அப்படியாய் ஒரு மகிழ்ச்சி.
“மாமா…”
“உங்களை விட எம்மகளை கண்டிப்பா யாரும் நல்லா பார்த்துக்கிட மாட்டாங்க. இரண்டு பேரும் இதே மாதிரி எப்பவும் இருந்தா போதும்.”, என்றவர் முகுந்தனின் தோள் தட்டிச் சென்றார்.
மேலும் சில நிமிடங்கள் தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தவளை பிறர் அறியாமல் கைப்பற்றி மாடிக்கு அழைத்துச் சென்றான் முகுந்தன்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
💞💞💞💞💞💞💞💞
Nice
Super💕