மலர்-37

by ஸ்ரீ
3 comments 414 views
A+A-
Reset

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு

மு.வ விளக்க உரை: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

மங்கையோடு மாடிக்கு வந்தவன் அவளது அறைக்குள் நுழைய பதட்டமாய் கதவை சாற்றினாள் மங்கை.

“உன்னியேட்டா என்ன பண்ற நீ???”

“ஷ்ஷ்..”, என்று அவளின் உதட்டில் விரல் வைத்தவனாய் மறுகரம் கொண்டு அவளை இடையோடு இழுத்து தன்மேல் நெருக்கிக் கொண்டான்.

“தங்கம்.. நான் கீழே போணும்..”

“என்ட மலரே.. என்னை நோக்கு..”

“…”

“எடி ப்ளீஸ்..”, என்றதில் சட்டென விழி நிமிர்த்த அவனின் பிடித்தமான அந்தக் குண்டு கருவிழிகளில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

“இ மலரை நான் பத்திரமா பார்த்துப்பேனாம். அதை மலரோட அப்பாவே சொல்லி கேட்கும் போ ஒரு பாடு கர்வம் உண்டாயி..”

“…”

“ப்ராமிஸ் யூ சக்கரே நீயும் உன் அப்பா அம்மாவும் வைச்சுருக்கும் நம்பிக்கையை என்னைக்கும் நான் காப்பாத்துவேன்.”

“இதெல்லாம் நீ சொல்லணுமா தங்கமே..”

“என்ட அச்சன் அம்மையை போல கவிதை மாதிரி ஒரு வாழ்க்கை வாழணும். இ சுந்தரியோட என்ட பகலும் இரவும் கழிஞ்சு போகணும். ஊரையே மிரட்டும் இ ரௌடி மோகினி என்னிடத்தில் பேச்சு இழக்கும் அழகை எல்லாம் ரசிச்சு கிடக்கணும். இதெல்லாவற்றுக்கும் வில் யூ மேரி மீ என்ட மலரே?”

“!!!!”

“எந்தா வில் யூ மேரி மீ?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவளின்  கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தான்.

“நான் இன்னும் மறக்கில்லே சக்கரே. ஆ திவசம் மலர் நான் என்ன கேட்டாலும் தருவதாய் பரைஞ்சதல்லே?”

“உன்னியேட்டா நான் கீழே போகணும். நீ ரொம்ப மோசம். எனக்கு இதெல்லாம்.. ம்ஹும்.”

“டீல் இஸ் அ டீல்.. சொன்னதை செஞ்சே ஆகணும்.”

“தங்கமே..”

“ம்ஹும். நோ எக்ஸ்க்யூஸ் மலரே..”

“சரி சொல்லு என்ன?”

“எனக்கு ஒரு முத்தம் வேணும்.”

“ப்பூ இவ்வளவு தான..”, என்றவள் கன்னத்தைப் பற்றி திருப்ப எத்தனிக்க விளையாட்டாய் அவள் கையில் அடித்தவனாய்,

“கன்னத்தில் பாதி தாடிக்கு நீ கொடுக்குறதுக்கு பேர் முத்தமா? இங்கே வேணும்.”, என்றவன் உதட்டைச் சுட்டிக் காட்ட அதிர்ந்து விழித்தவளின் கண்கள் ஆணவனை வாரி இழுத்துக் கொண்டன.

“நான் மாட்டேன்.. நோ.”

“இத்தனை நாள் எப்படியோ இனி ஒவ்வொரு நாளையும் நீ பக்கத்தில் இல்லாம கடத்துறது கஷ்டம் என்ட மலரே. அதுக்கு இதெல்லாம் வேணும். உன்கிட்ட இனி நல்லவனாய் இருக்க வேண்டிய அவஷியம் எனக்கு இல்லல்லோ?”

“உன்னியேட்டா..”

“லேட் ஆகுது படுத்தாத டி. ஒரு முத்தத்துக்கு இது வல்லரே கூடுதலானு.”, என்றதில் விழி மூடிக் கொண்டவளாய் தன்னவனின் இதழ்களின் அருகில் சென்றது தான் நினைவில் இருந்தது.

அடுத்து வந்த நிமிடங்கள் எல்லாம் ஆணவனின் காதலின் வெளிப்பாடாய் தனது காதல் முத்திரையாய் அவளது அதரங்களில் அழுந்தப் பதித்துத் தன்னுள் உலகையே மறக்க வைத்திருந்தான்.

தளர்ந்து போனவளாய் தன்னவனையே பிடியாய் பற்றிக் கொள்ள, தன்னிடமிருந்து பிரித்த போதும் விழி மூடிய வண்ணமே நின்றவள் அவனது கண்களுக்கு அழகிய ஓவியமாய் காட்சியளித்தாள்.

சிவந்திருந்த பெண்ணவளின் அதரங்களை விரல் கொண்டு லேசாய் வருட உணர்வு பெற்றவளாய் சட்டென அவனைக் கட்டிக் கொண்டாள்.

தன்னவளின் நிலை உணர்ந்தவனாய் காதல் மயக்கமெல்லாம் கடந்து ஆதரவாய் அணைத்து நின்றான் முகுந்தன்.

“மலரே..”

“..”

“எந்தாயி?”

“…”

“நின்ட உன்னியேட்டன் அல்லே. எந்து கொண்டு இவ்வளவு நாணம்?”

“…”

“எடி பேடிச்சு (பயந்து) போயோ? நீ ஓகே அல்லே!”, என்றவனின் பதட்டத்தில் மெதுவாய் அவனிடமிருந்து பிரிந்து நின்றாள்.

“எந்தா மலரே? நினக்கு இஷ்டமல்லே?”

“அதெல்லாம் இல்ல தங்கம்..”

“பின்ன எந்தா டி இத்தனை அமைதியா இருக்குகா?”

“உனக்கு என்னை இவ்வளவு பிடிக்கும்னு நான் நினைக்கலை உன்னியேட்டா..”

“எந்தா??”, என்றவன் நிஜமாகவே குழம்பி போனான்.

“ம்ம் நான் தான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்னு நினைச்சேன். ஆனால் நீ.. இப்படி ஒரு அமைதியான நல்ல பையன்கிட்ட இருந்து இப்படி அடாவடியான முரட்டு காதலை எதிர்பார்க்கவே இல்லை உன்னியேட்டா..”, என்றவள் தன்னவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

“நான் மலர் போல எக்ஸ்ப்ரஸிவ் அல்லா. ஆனால் இப்போ மலரிடத்து மாத்திரமே என் எல்லாமும் வெளிப்படும். கூச்சம் தயக்கமெல்லாம் மலரிடத்து எனக்கு இல்லே சக்கரே.. இப்படி இருக்க தான் எனக்கு பிடிக்குது.”

“இப்படி ஒரு அல்ட்ரா ரொமேண்டிக் உன்னியேட்டனை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது.”, என்றதில் உன்னி முகுந்தனின் முகத்தில் விரிந்த புன்னகை தோன்றியது.

“உன்னியேட்டா உனக்காக நான் ஒண்ணு வைச்சுருந்தேன். நீ எல்லாத்தையும் மறக்கடிச்சுருவ போலேயே..”

“எந்தா அது?”

“எப்பவும் தங்கத்தையே பாட்டு பாட சொல்லிட்டு இருக்கேனே. அதான் தங்கத்துக்காக ஒரு பாட்டு பாடணும்னு தோணிச்சு.”

“ஆனோ?! எந்தா பாட்டு?”, என்றவன் தன்னருகில் இன்னுமாய் நிறுத்திக் கொள்ள அவனது விழிகளை தன் கரம் கொண்டு மூடியவளாய்,

பூவு கூட நாரு போல பூமி கூட நீரு
போல மாமன் கூட சேர்ந்திருப்பேன்

மதுரை வீரன் பொம்மி போலே

சேலையோட நூல போல சேர்ந்திருக்கும்
பந்தம் தான் திருமாலும் சொக்கரும் சேர்ந்து
தேடித்தந்த சொந்தம் தான் மாமாவே

நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்

“உன்னியேட்டா நான் வாழ நீ வேணும் ஆயுசுக்கும்.”, என்றவள் குரல் நடுங்க தன்னவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு,

மும்பையின் அந்த மிகப்பெரும் ஸ்டேடியத்தில் மும்பை அணிக்கு ஆதரவாக பார்வையாளர்கள் கரகோஷமெழுப்பிக் கொண்டிருக்க முகம் மொத்தமும் விரவிக் கிடந்த பதட்டத்தோடு தமிழக அணிக்கான உடையில் அமர்ந்திருந்தாள் மங்கை.

பெண்கள் ப்ரீமியர் லீக்கின் கேப்டனாய் அவளது முதல் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று. மொத்த அரங்கமும் அவளின் எதிர் அணிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்க கண்களை மூடித் திறந்து பெருமூச்சு விட்டவளாய் அடுத்த ப்ளேயரை உள்ளே அனுப்பி விட்டு சமாதானமாய் தலையசைத்தாள்.

அங்கு ஒவ்வொரு பந்திற்கும் இங்கு இவள் பதறிக் கொண்டிருக்க மட்டையிலேயே படாத பந்திற்காக அவுட் கொடுத்த அம்பயரை நோக்கி கோபமாய் கத்தியபடி மைதானத்திற்குள் இறங்கியிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் பலர் அவளது பெயர் சொல்லி ஆரவாரம் செய்ய அதை மேலே அமர்ந்து பார்த்திருந்த மலையாள சினிமாவின் முன்னனி நட்சத்திரமான உன்னி முகுந்தனின் உதட்டில் அழகிய புன்னகை இருந்தது.

இந்த நான்கு வருடங்களில் இருவருமே நினைத்ததை விட தங்களது லட்சியத்தில் பல மடங்கு முன்னேறியிருந்தனர். முகுந்தனின் படம் அத்தனையும் ஹிட் ஆகியிருக்க மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்கப்பட முடியாத நாயகனாகி விட்டிருந்தான்.

மங்கையோ போகும் அத்தனை மேட்சிலும் ஆட்ட நாயகியாய் விளங்கி இந்திய அணியில் அவளுக்கான இடத்தைப் பெற்றிருந்தாள்.

இந்த நான்கு ஆண்டுகளில் உன்னி முகுந்தனைப் பற்றிய கிசுகிசுக்களில் முக்கியமானது அவருக்கும் கிரிக்கெட்டர் ஒருவருக்கும் காதல் என்பது தான். இருந்தும் எந்தவித விவரமும் வெளியே தெரியாத வண்ணம் தங்களின் காதலை அழகான விருட்சமாக்கியிருந்தனர்.

அங்கு அம்பயரோடு காரசாரமாய் வாதம் செய்தவள் இறுதி வரை அவர் அவள் கூறியதில் உடன்பாடில்லாமல் பேச அந்தக் கடுப்புடனேயே தனது முறைக்காக களம் இறங்கினாள்.

நான்கு பந்துகளில் 22 ரன்கள் அவர்களது இலக்காக இருக்க தமிழக அணியின் மொத்த சுமையையும் இப்போது தாங்கியிருந்தது மதுரையின் மாமலர்மங்கை.

தன்னோடு களத்திலிருந்த அமெரிக்க பெண் ஆட்டக்காரரிடம் எதோ பேசிவிட்டு தனது மட்டையை பிடித்து குனிந்து நின்றவளின் மொத்த இலக்கும் வரும் பந்தை நோக்கியே இருந்தது.

முதல் பந்தில் 6, அடுத்ததாய் 4 அதைத் தொடர்ந்து வந்த அனைத்தும் சிக்ஸராய் முடிய இறுதிப் பந்து அங்கு காட்சிக்காக நிற்க வைக்கப்பட்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடியை நொறுக்கிச் சென்றிருந்தது.

அவ்வளவு தான் மொத்த தமிழக அணியும் மைதானத்திற்கு ஓட அத்தனை பெண்களுமாய் சேர்ந்து மங்கையைத் தோளில் தூக்கியிருந்தனர்.

ப்ரீமியர் லீக் போட்டிகளில் பெண்கள் அணிக்கு கிடைக்கும் முதல் வெற்றி என்பதில் அவர்களின் ஆரவாரமும் ஆர்பாட்டமும் இரட்டிப்பாகி இருந்தது.

இங்கு மொத்தக் குடும்பமும் கைத்தட்டி ஆர்பரிக்க கேரளாவில் பலராமின் குடும்பம் தன் மருமகளின் வெற்றியைக் கொண்டாடியது.

அத்தனை கொண்டாட்டங்களும் முடிந்து  பார்வையாளர் பகுதிக்கு வந்தவளுக்காக காத்திருந்தவனாய் கையசைத்து வணக்கம் வைத்தான் அவளின் உன்னியேட்டன்.

“சாமி சரணம்.”

“சாமி சரணம். வாழ்த்துக்கள் மலரே.”

“எல்லாம் சாமியோட அன்பு தான் காரணம்.”

“என்ட மலரை நினைச்சு ஒரு பாடு ப்ரௌட்டாயிட்டு உண்டு.”

“மலைக்கு போயிட்டு சீக்கிரம் வாங்க சாமி.”

“மலரிண்ட மேட்ச்காக தன்னே இந்த வேண்டுதல். இன்னும் இரண்டு நாளில் மலைக்கு கிளம்புறேன். பின்னே நோக்காம். வரட்டே..”

“சாமியே…”

“சரணம் ஐயப்பா..”, என்று முடித்தவனின் முகத்தில் உணர்ச்சிகளே இல்லாத புன்னகை. ஏனெனில் எங்கிருந்து யார் கேமராவில் பதிவாகுமோ என்ற முன்னெச்சரிக்கை.

அடுத்ததாய் வசந்த் மங்கையை அழைத்திருந்தான். அவனும் இந்திய அணியில் சேர்ந்ததோடு தனக்கென தனிப் பெயரை நிலை நாட்டியிருந்தான். தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும்  டெஸ்ட் மேட்ச்சிற்காக சென்றிருக்கிறான்.

“ வாழ்த்துக்கள் டி மங்கை.”

“தேங்க்ஸ் டா வசந்த். இன்னும் ஒரு மேட்ச் தான ஒழுங்கு மரியாதையா அடுத்த வாரம் ஊரில் இருக்கணும். இல்லைனு வை.”

“என் உடன்பிறப்பு கல்யாணத்துக்கு நான் இல்லாமயா? வந்தே தீருவேன் டி. ஆமா ஏன் இன்னும் மீடியாக்கு சொல்லல.”

“சாமி மலைக்குப் போயிட்டு வந்து சொல்லப் போறார்டா. இப்போவே சொல்ல வேண்டாம்னுட்டார்.”

“அதுவும் நல்லது தான். மேட்ச்சை ஜெயிச்ச சந்தோஷத்தோட போய் மூஞ்சிக்கு கடலை மாவு போட்டு ரெடியாகு டி. எங்க மாப்பிள்ளை பக்கத்தில் டிம் அடிக்காத.”

“ம்ம் வேணும்னா உன் மாப்பிள்ளையை மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுட்டு வர சொல்லுடா.”, என்றதில் இருவருமாய் சிரித்தனர்.

கூறியது படியே அடுத்த நான்கு தினங்களில் மீடியாவிற்கு தனது திருமண செய்தியைத் தெரிவித்திருந்தான் உன்னி முகுந்தன். இருவரும் தங்கள் சமூக வலைதளங்களிலும்  திருமண செய்தியைப் பதிவிட அன்றைய ட்ரெண்டிங் டாப்பிக் இவர்களாகிப் போயிருந்தனர்.

“அது எப்படி டி சிங்கிள் மாதிரியே சுத்திட்டு இருந்துட்டு பொசுக்குனு பத்திரிக்கையை போட்டுடான்.”

“ம்ம் அவன் உன் முறைப் பையன் பாரு எல்லாத்தையையும் உன்கிட்ட சொல்லிட்டு பண்றதுக்கு. தெரியுமா பொண்ணு அவனோட மாமா பொண்ணாம்.”

“ம்ம் நமக்கும் இருக்குதுங்களே அத்தையும் சரியில்லே அத்தைக்கு பையனும் இல்லை.”, இப்படியான கமெண்டுகளைப் பார்த்த வண்ணம் மதுரைக்கான விமானத்தில் குடும்பத்துடன் அமர்ந்திருந்தான் உன்னிமுகுந்தன்.

அங்கு மங்கையின் பதிவிலோ, ”மதுரையில் பையனுக்கா பஞ்சம் இப்படி கேரளத்து மருமகளாயிட்டேயே மா..”

“ஏலேய் அது முறைப் பையனாம் டே..”

“எங்க குடும்பமும் தான் இருக்கே. நேத்து தான் மாமன் மகளை ஸ்கூலில் சேர்த்துட்டு வந்தேன். நம்ம கொடுப்பனை அவ்வளவு தான்.”, என்ற இளசுகளின் ரவுசுகள் ஒருபுறம் தொழில்முறை நண்பர்கள் சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் இருவருக்குமாய் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகளின் மூலமும்  ஈமெயிலின் மூலம் தங்களின் வாழ்த்துக்களைப் பகிரத் தொடங்கியிருக்க கோலாகலமாய் தொடங்கியது மலர் முகுந்தன் திருமண கொண்டாட்ம்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan August 4, 2026 - 3:34 am

👌👌👌👌👌👌👌

suganyavel August 4, 2026 - 4:38 am

Super💕

srichitra August 4, 2026 - 10:17 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode