472
“அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
மு.வ விளக்க உரை: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.”
“தங்கமே அத்தையும் மாமாவும் இரண்டு நாள் இங்கே இருக்கட்டும். உனக்கு படத்தோட ப்ரோமோஷன் வேலை இருக்கு தான. நீ போய் அதை கவனி.”
“என்னது இங்கேயா???!”
“ஏன் இப்படி அலர்ற நான் தான் இருக்கேன்ல.”
“வேண்டா மலரே..”
“அட உன் மாமனுங்க எல்லாம் பார்க்க தான் ஐயனார் மாதிரி விரைப்பா இருப்பாங்க. ஆனால் ரொம்ப நல்லவங்க தங்கமே..”
“எனக்கு என்னவோ சரியா படலை.”
“சரி உன் மன திருப்திக்காக உங்க வீட்டு ஷெஃபையும் இங்கே விட்டுட்டு போ உன்னியேட்டா..”
“அவன் என்ன கொன்னுடுவான் சக்கரே..”
“எதுக்குமே ஒத்து வரலைனால் எப்படி. எனக்கும் ஒரே சமையலை சாப்பிட்டு போர் அடிக்குது. உன் தம்பியை வைச்சு கொஞ்சம் வெரைட்டியா சமைச்சு தர சொல்லலாம்.”
“எடி நினக்கு பயமே இல்லையோ?! நடக்குறதெல்லாம் சாதாரண விஷயமில்லா மலரே.”
“எல்லாரும் பயந்துட்டே இருந்தா பூனைக்கு யாரு தான் மணி கட்டுறது. இவங்களைப் பத்தி உனக்குத் தெரியலை. உன் அம்மா அப்பா வந்தது பிடிக்கலைனால் இந்நேரம் இந்த இடமே இரத்த பூமி ஆகிருக்கும்.
ஆனால் அண்ணனும் தம்பியும் துக்கம் தொண்டையை அடைக்க அதை காட்டாம இருக்கதான் தப்பிச்சு போயிருக்காங்க.
அவங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு பார்க்க தான் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி உங்களை இங்கே வர சொன்னதும்.
நீ வேணும்னா பாரு அண்ணனுங்க அப்படியே தங்கையை தூசு படாம தரையில் நடக்க விடாம பார்த்துக்குறாங்களா இல்லையானு. நீ யாரையும் நம்ப வேண்டாம்.
என்னை நம்பி அத்தை மாமாவை விட்டுட்டு போ. நான் பார்த்துக்குறேன்.”
“ஷெரி மலரே அப்பப்போ எனக்கு அப்டேட் செய்.”
“சரி அதெல்லாம் இருக்கட்டும். ப்ரோமோஷனுக்கு ஹீரோயினியும் வருமா?”, என்றதில் முகுந்தன் சிரித்திருந்தான்.
“என்ன சிரிப்பு?”
“லவ் மூவி அவங்க இல்லாம எப்படி சக்கரே..”
“ஆஹான். மகனே…”
“நான் கமிட்டட்னு பரைஞ்சு டி.”
“சும்மா எல்லாம் நீ சொல்ல மாட்டியே? அப்போ அவ எதோ சொல்லிருக்கா??!”
“ஆனாலும் நீ இவ்வளவு அறிவாளியா இருக்க வேண்டாம் என்ட பொன்னு மோளே..”
“பேச்சை மாத்தாமல் விஷயத்துக்கு வா பார்க்கலாம்.”
“அல்லா அது.. அவ ப்ரொபோஸ் செஞ்சு.. அப்போ ஞான்..”
“அடப்பாவி யோவ் தாடி.. என்னையா இத்தனை பெரிய விஷயத்தை இப்படி சாவுகாசமா சொல்லிட்டு இருக்க..”
“ஷ்ஷ்ஷ் கத்தாத டி. அவ தானே ப்ரோபோஸ் செய்தா. எதோ நான் பண்ணிணது போல் கத்துற.”
“ஓ நீ வேற பண்ணுவியா. இங்கே பாரு எங்க அப்பா சித்தப்பா மாதிரி நான் சாஃப்ட் எல்லாம் கிடையாது. ரொம்ப ரக்கட் ஆன ஆளு தெரிஞ்சுக்கோ..”
“போடி பிராந்து..”
“ஆமா பிராந்து உன்னியேட்டா மேல..”, என்றவள் கண்ணடிக்க டேபிளில் தலை சாய்த்து கவிழ்ந்தவனுக்கு முகமெங்கும் வெட்கம் விரவிக் கிடந்தது.
மீண்டுமாய் மாடிக்குச் சென்ற நேரம் பாசப் போராட்டங்கள் எல்லாம் முடிந்து பார்வதி தாயோடும் தங்கையோடும் பேசிக் கொண்டிருக்க பலராம் தாமோதரனோடும் கார்த்திகேயனோடும் பேசிக் கொண்டிருந்தனர்.
“சரி கிச்சு மாமா நீ இன்னும் இரண்டு நாள் இங்கே தான் இருக்க போற. போன் பண்ணி லீவ் சொல்லிடு.”
“எந்தா???! இ கூட்டத்தில் நானோ???!”
“ஏய் என்ன நாங்க ஆடா மாடா?”
“ஐயோ அண்ணி பாப்பா நின்ட காலை பிடிக்காம். என்னை விட்டுடு ப்ளீஸ்.”
“அண்ணி பாப்பாவா? ச்சை கேட்கவே சகிக்கலை. அதெல்லாம் நான் முடிவு பண்ணிட்டேன். நீ இங்கே தான் இருக்கணும். அம்மா அப்பாவை கூட்டிட்டு வா வீட்டுக்கு போலாம்.”
கிருஷ்ணன் அவசரமாய் தாயிடம் சென்று விஷயத்தைக் கூற பார்வதி தயக்கமாய் பலராமை பார்த்தார்.
“உன் அம்மா வீட்டுக்கு நீ வர்ற. எதுக்கு தயக்கம். கிழவி மகளையும் மருமகனையும் வீட்டுக்கு கூப்பிடு..”, என்றதும் பூங்கோதை பலராமை அழைக்க முதியவரை ஏமாற்ற மனமில்லாமல் அவர் மனைவியைப் பார்த்தார்.
“ஐயையே மாத்தி மாத்தி பார்த்துகிட்டு, வா அத்தே போலாம். அம்மா நீ சித்தி அத்தை எல்லாம் இவங்களை கூட்டிட்டு கிளம்புங்க இங்கே நானும் கார்த்தி மாமாவும் பார்த்துக்குறோம்.”, என்றதில் அனைவருமாய் கிளம்ப முகுந்தனும் கிளம்பத் தயாரானான்.
“கார்த்தி இவ ஏதோ தைரியத்தில் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கா. பிரச்சனை ஆகாமல் பார்த்துக்கோ. எனக்கு மனசே இல்லை.”
“நீ நிம்மதியா போயிட்டு வா முகுந்தா. நான் அப்பப்போ உனக்கு அப்டேட் பண்றேன். எப்படியும் இரண்டு நாள் நானும் இங்கே தான் இருப்பேன்.”, என்றவனின் பேச்சில் சற்றே நிம்மதி வரப் பெற்றவனாய் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினான்.
சரியாய் அவர்கள் அனைவரும் கிளம்பிய சிறிது நேரத்தில் திருமாவும் மாறனும் அங்கு வர மங்கையை எதிர்பாராதவனாய் திருமா நடையை மெதுவாக்கினான்.
“வாங்க டா என் பம்பரகட்டை மண்டையனுங்களா..”, என்றவள் அந்தப்பக்கம் வந்த செவிலியர் வைத்திருந்த ஊசி ட்ரேவில் இருந்து அறுவைச் சிகிச்சை செய்ய பயன்படுத்தும் கூர்மையான கத்தியை கையில் எடுத்துக் கொண்டாள்.
“ஏய் பைத்தியம் எதுவா இருந்தாலும் அதை அங்கே வைச்சுட்டு பேசு டி”, என்ற மாறன் நாலு அடி தள்ளி நின்றபடியே கத்தினான்.
“உன்னை இப்போ கிழிச்சு ஆப்ரேஷன் பண்ணாம விடப் போறதில்ல. வா டா கருவாப்பயலே.”
“டேய் திருமா காப்பாத்து டா..”
“அவனையே இப்போ நான் காப்பாத்தினால் தான் உண்டு. அவன் பொண்டாட்டியால தப்பிச்சான். உனக்கெல்லாம் அதுவும் இல்லை. வா டி மாப்பிள்ள..”
“லூசா டி நீ ஹாஸ்பிட்டல்ல நின்னு இப்படி அலப்பறை பண்ணிட்டு இருக்க.”, என்ற நேரம் ஒரு செவிலியரும் வந்து திட்டிவிட சற்றே அமைதியடைந்தவளாய் அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
திருமா தங்கையின் அருகில் செல்ல மாறன் கார்த்தியோடு நின்று கொண்டான்.
“பாப்பா..”, என்ற தமையனின் அழைப்பில் கண்ணீர் கண்ணை மறைக்க அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றவளாய் குனிந்து அமர்ந்திருந்தாள்.
திருமா தன் பக்கத்து நியாயத்தைக் கூற அண்ணனின் கரத்தைப் பற்றி தோளில் சாய்ந்து கொண்டாள்.
“இனி இப்படி பேசாம இருக்காத என்ன?”
“உன்கிட்ட பேசாம நான் மட்டும் சந்தோஷமாவா இருந்தேன். இனி இப்படி பண்ண மாட்டேன் பாப்பா. நீ அழாதையேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”
அப்படி இப்படியாய் சமாதானப்படுத்தி இருவருமாய் சேர்ந்து கொள்ள இப்போது மாறனை முறைத்து அமர்ந்திருந்தாள்.
“என்ன உன் அருமை அத்தை இதுதான் சாக்குனு வந்து ஒட்டி உறவாடிட்டு போயிட்டாங்களா?”
“ம்ம் உன் வீட்டுக்கு தான் போயிருக்கா. உன் ரூமை தான் கிச்சுக்கு கொடுக்க சொல்லிருக்கேன்.”
“யாரைக் கேட்டு என் ரூமை கொடுக்க சொன்ன? அப்போ நான் எங்கே போறது?”
“ம்ம் மொட்டை மாடியில் போய் உருளு அப்போ தான் புத்தி வரும்.”
“என் புத்திக்கு என்ன டி வந்துச்சு. நீ தான் தேவையில்லாத வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்க..”
“எது தேவையில்லாதது? உன்கிட்ட இருந்து அம்முவை பிரிச்சா உனக்கு எப்படியிருக்கும்? சித்திக்கு எப்படியிருக்கும்?”
“…”
“அதை தான் டா உன் தாத்தாவும் அப்பாவும் பண்ணிருக்காங்க. அது ஏன் ண்ணே உனக்கு புரியலை.”
“…”
“அவங்க முகுந்தனோட அம்மாங்கிறதுக்காக நான் இதெல்லாம் பண்ணலை. திருமா அண்ணே கல்யாணத்தில் தான் எனக்கு, என் தாத்தாக்கு இன்னொரு பிள்ளை இருக்குதுனே தெரியும்.
அப்போவே முடிவு பண்ணிட்டேன். எப்படியாவது என்ன விஷயம்னு கண்டுபிடிக்கணும்னு. ஒரு பொண்ணோட கண்ணீர் அந்தக் குடும்பத்தையே அழிச்சுரும் ண்ணே.
நாளைக்கு நமக்கு அடுத்து வரப்போற தலைமுறைக்கு காசு பணம் சேர்க்குறோமோ இல்லையோ பாவத்தை கட்டிவிட கூடாது இல்ல ண்ணே.
உன் பிள்ளைக திருமா பிள்ளைக எல்லாம் வம்சம் செழிக்க எந்த குறையும் இல்லாம நூறு வயசு வாழ வேண்டாமா. அப்பத்தா கடைசி வரை மனசிலிருக்குறதை சொல்லாமலேயே போயிருந்தா அந்தக் கண்ணீருக்கும் நாம தானண்ணே காரணமா இருப்போம்.
எனக்கு என் குடும்பம் எப்பவும் அந்த கடவுளோட அருளால நல்லா இருக்கணும். அதுக்காக நான் உனக்கு கெட்டவளா தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போறேன்.
உன் அப்பா தான் அந்த காலத்து மனுசன் கோபத்தை பிடிச்சு தொங்குறாரு. நீ ஏன்ண்ணே இப்படி ஆயிட்டே.”
“…”
“ஒண்ணு சொல்றேன். உன்னையும் உன் அப்பாவையும் பத்தி தெரிஞ்சதுனால தானோ என்னவோ அம்மு அவளுக்கு விரும்பி வந்த வாழ்க்கையை ஏற்காம போயிட்டா.”
“பாப்பா???”
“ஆமாண்ணே. இன்னைக்கு அவ நல்லா தான் இருக்கா. ஆனால் அவ ஆசைப்பட்ட வாழ்க்கையோட ஏக்கம் அவளுக்கு எப்பவுமே இருக்கும்ல. சத்தியமா உலகமே தெரியாம இருந்துருக்கேன்.
என்கிட்ட அவ இதெல்லாம் சொன்னதே இல்லை. சொல்லிருந்தா எப்பாடு பட்டாவது அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ வைச்சுருப்பேன்.”
“…”
“சரி நான் அம்மு எல்லாம் இந்த தலைமுறை இப்படி தான் துடுக்குத் தனமா பேசுவோம். உன் தாத்தாவும் அப்பாவும் கலை அத்தைக்கு என்ன பண்ணிணாங்க?
அவளுக்கு இப்போ வரைக்கும் தான் நினைச்தை படிக்கலையேனு மனசுக்குள்ளே வருத்தம் இருக்கு. கல்யாணம் கட்டி கொடுத்துட்டீங்க. மாமியர் மாமனார் நாத்தனார்னு இருக்குற குடும்பத்தில் போய் புருஷன்ட்ட படிக்குறேன்னு கேட்க பயம்.
ஏன்??? ஏன்னா அவளோட அப்பாவும் அண்ணனும் காட்டின ஆம்பளைங்க பத்தின பிம்பம் அப்படி. மாமனார் எதாவது சொல்லிடுவாரோ புருஷனுக்கு நாம காலேஜுக்கு போறது பிடிக்காதோ? பிடிச்சாலும் அங்கே யாரோடையாவது பேசினால் தப்பா நினைச்சுடுவாரோனு அவளுக்கு எத்தனை சிந்தனை இருந்திருக்கும்?”
“….”
“பார்வதி அத்தைகிட்ட உட்காந்து பொறுமையா பேசிப் பார்த்துருக்கலாம். அது காதலா ஈர்ப்பானு அவங்களுக்கு புரிய வைக்க முயிற்சி பண்ணிருக்கலாம். கலை அத்தை மனசில் என்ன இருக்குனு தெரிய முயற்சி பண்ணிருக்கலாம்.
உன்னை நாங்க சந்தேகப்பட்டு கல்யாணம் பண்ணலை மா. நீ என்ன நினைக்குற? உனக்கு விருப்பம் என்னனு கேட்டுருக்கலாம். அதெல்லாம் இல்லை. என் சாதி போச்சு என் கௌரவம் போச்சுனு குதிக்க வேண்டியது.”
“…”
“நீங்க எல்லாம் என்ன நினைக்குறீங்க பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது. நாடு கெட்டு கிடக்குது. அவளை காதல்ங்கிற பேர்ல ஏமாத்திருவாங்க. வாழ்க்கை வீணா போயிடும்.
நாம மட்டும் தான் அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியும். எல்லாத்தையும் விட சாதியும் சாதிக்காரனும்.”
“ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோண்ணே பெத்தவங்க பார்த்து வைக்குற கல்யாணமும் இந்த காலத்தில் அதிக அளவு பாதியிலேயே முறிஞ்சு போயிட்டு தான் இருக்கு.
எந்த சாதிக்கும் சாதிகாரனுக்கும் நீங்க பயப்படுறீங்களோ உங்க வீட்டு பிள்ளை உன் சாதிக்காரனையே கட்டிகிட்டு போய் வாழாவெட்டியா வந்து நின்னா அந்தச் சாதிகாரன் வந்து என்ன பண்ணுவான்?
அப்பவும் வந்து உன் வீட்டு பொண்ணை தான் குறை சொல்லுவான். இவளுக்கு ஒழுங்கா வாழத் தெரியலை. ஆம்பளையை அனுசரிச்சு போகத் தெரியலைனு தான் பேசுவானே ஒழிய உன் பிள்ளைக்கு நல்லது நடக்கணும்னு நினைக்க மாட்டான்ணே.”
“..”
“அதை விடு அத்தை கதையே எடுத்துக்கோ உன் அப்பா அடிச்சு மிரட்டி உன் சாதிக்காரனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருந்தார்னு வை.
இவங்களோட காதல் அந்த மாப்பிள்ளைக்கு தெரிய வந்துச்சுனா அப்போ அத்தையோட நிலைமையையும் வாழ்க்கையும் என்னாயிருக்கும்?”
“இங்கே பொண்ணுங்க பெத்தவங்க பேச்சை மீறியும் காதலைப் பிடிச்சுக்குறதுக்கு அதுவும் ஒரு காரணம். காதலிச்சவனுக்கும் உண்மையா இல்லாம கட்டினவனும் சந்தேகப்படுறவனா இருந்தா அவ வாழ்க்கை என்னாகும்னு பயம்.”
“அதாவது தாத்தா சித்தப்பா மாதிரி ஆளுக்கெல்லாம் என் வீட்டு பொண்ணு என் சாதிக்காரனைக் கட்டிகிட்டு வாழாவெட்டியா வந்தா கூட பரவாயில்லை.
அவ மனசுக்கு பிடிச்சவனை கட்டிகிட்டு சந்தோஷமா இருக்க கூடாதுனு எண்ணம். இதை எப்படி நீ சப்போர்ட் பண்ற?”
“சொந்தம் பந்தம் ஊர் சாதி எல்லாம் கண்டிப்பா வேணும் தான். ஆனால் அதை எல்லாத்தையும் விட உன் வீட்டு பொண்ணோட சந்தோஷம் உனக்கு வேணும்.
ஊருக்காக சாதி இருக்கலாம். உன் வீட்டு பொண்ணுக்கு உன்னைத் தவிர யாரும் இருக்க மாட்டாங்க. உங்களை தான் மலை போல நம்பியிருக்கும். அதை ஏமாத்த எப்படிண்ணே மனசு வரும்.”
“…”
“உன்னை எவ்வளவு நம்பியிருந்தா உன் வீட்டு பொண்ணு வந்து உன்கிட்ட எனக்கு ஒருத்தனைப் பிடிச்சுருக்குனு சொல்லும். ஆனால் நீங்க எல்லாம் என்ன பண்ணிடுறீங்க?? அந்தப் பொண்ணோட நம்பிக்கையை சல்லி சல்லியா நொறுக்கிடுறீங்க.
“…”
“உங்களை வம்சத்துக்கே சாதி மாத்தி கல்யாணம் பண்ணி வைக்க சொல்லல. சாதிச் சான்றிதழே வேண்டாம்னு சொல்ல சொல்லலை. உங்க குடும்பத்து பிள்ளைகளை ஸ்கூலில் சேர்த்தா சாதி போடாம இருக்கவும் சொல்லலை.
உன் வீட்டு பொண்ணோ பிள்ளையோ தன்னோட விருப்பத்தை வந்து சொன்னால் யாரு என்ன என் பிள்ளை வாழ்க்கைக்கு இது ஒத்துவருமா என் பிள்ளை சந்தோஷமா இருக்குமானு யோசிச்சு முடிவெடுங்கனு தான் சொல்றேன்.
அந்த இடத்தில் சாதியை பிரதானப்படுத்தி உன் வீட்டு பிள்ளையை ஒரு நிமிஷத்தில் அநாதையாக்கிடாதனு தான் சொல்றேன்.
ஒரு பிரச்சனை நடந்து போச்சுனால், அதை எப்படி கையாளணும்ங்கிறதில் தான் பெரியவங்க எல்லாம் தோத்து போறீங்க. நீயும் இப்போ அந்த நிலைமையில் தான் மாறாண்ணே இருக்க.
“தெரியலை. என்னை இப்படி வாயாடியா, எல்லாருக்கும் செல்லமா வளர்த்துருக்காட்டி நானும் அம்முவை மாதிரி தான் கிடைச்ச வாழ்க்கையை ஏத்துகிட்டு வாழ்ந்துருப்பேனோ என்னவோ!”
“நீ ஒண்ணு மட்டும் மனசில் பதிய வைச்சுக்கோ உனக்கும் கல்யாண வயசு வந்திருச்சு. பொண்டாட்டினு ஒருத்தி ஆயிரம் கனவுகளோட உன் கையைப் பிடிச்சு வருவா.
அவகிட்ட உன் தாத்தாவையும் அப்பாவையும் மாதிரி சண்டியரு தனம் பண்ணிட்டுத் திரியுறது இல்லை ஆம்பளைத்தனம். இதோ, தான் நேசிச்ச பொண்ணுக்கு வேலைக் கிடைக்குற வரை காத்து கிடக்குறான் பாரு காத்தி மாமா.
இதோ தன் பொண்டாட்டியோட ஆசையை மதிச்சு அவங்க குடும்பத் தொழிலை பார்த்துக்கோனு சொன்னான் பாரு திருமா அண்ணன்.
அவ்வளவு ஏன் நான் டீமில் விளையாடணும்னு என்னை விட வெறியா காத்திட்டு இருக்கான் பாரு என்னை விரும்புறவன் இதெல்லாம் மட்டும் தான் ஆம்பளைத்தனம்.
எனக்கு என் மாறா அண்ணன் அப்படி மட்டும் தான் இருக்கணும். தேவையில்லாத குப்பைக்கெல்லாம் மனசில் இடம் கொடுக்காத மாறாண்ணே..
“பொண்ணுங்களுக்கு வீட்டை விட்டு வெளியே காலை வைச்சா ஆயிரம் பிரச்சனை இருக்கு. வீட்டுக்குள்ளே இருக்குற நீங்க எல்லாம் தான் எங்களோட நிம்மதி.
புரிஞ்சு நடந்துக்கோண்ணே.”, என்றவளை கண்ணீர் மல்க மாறன் கட்டிக் கொள்ள கார்த்தியும் திருமாவுமாய் மங்கையோடு சேர்த்து மாறனையும் அணைத்துக் கொண்டனர்.
இவை அனைத்தையும் கேட்டு நின்ற முத்துப் பாண்டியும் இனியனும் அப்பனுக்கே பாடம் சொன்ன தன் பிள்ளையை நினைத்து பேச வார்த்தைகள் இன்றி நின்றிருந்தனர்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
Very true and nice.
Super💕