அன்பு-6

by ஸ்ரீ
0 comments 11 views
A+A-
Reset

மறுநாள் சீக்கிரமாகவே எழுந்தவள் குளித்து தனதறையை விட்டு வெளியே வர அதிகாலை ஆதலால் யாரும் எழுந்திருக்கவில்லை.மெதுவாய் சமையலறைக்குச் சென்றவள் பாலை காய்ச்சி காபி தயார் செய்து தனக்கு எடுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர சாரதா அறையிலிருந்து வெளியே வந்தார்.

அவருக்கு எடுத்து வருவதற்காக எழப் போனவளை தடுத்தவர் தானே சென்று கையில் காபியோடு வந்து அவளருகில் அமர்ந்தார்.

“ஏன்டா அதுகுள்ள எழுந்துட்ட?”

“இல்ல அத்தை எப்பவுமே இந்த டைம் எழுந்துருவேன் அப்போ தான் சமையல் முடிச்சு ஸ்கூல்க்கு கிளம்ப சரியா இருக்கும்..இன்னைக்கு என்ன சமைக்கட்டும்?”

“என்னது நீ சமைக்க போறியா அதெல்லாம் வேணாம் நானே பண்ணிக்குறேன்..நீயும் அவனும் எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்க..”

“அவரு அப்படி எதுவும் சொல்லல அத்தை.அப்படியே போனாலும் வேலையை முடிச்சுட்டு போலாம்..ப்ளீஸ் நானனே பண்றேன்..”

“ம்ம்சரி இன்னைக்கு ஒரு நாள் தான்..எனக்கு இருக்குற ஒரே வேலை சமையல் தான் அதையும் நீயே பண்ணிட்டா அப்பறம் எனக்கு பொழுது போக வேணாமா?”,என்றவர் சிரித்து நகர அவரோடு சமையலறைக்குச் சென்று வேலையை ஆரம்பித்தாள்.

காலை உணவையும் முடித்து மதியத்திற்கான சமையலை தொடங்கியிருக்க அபினவ் குளித்து தயாராகி வெளியே வந்தவன் அவளைத் தேடினான். கிட்சனில் கேட்ட சத்தத்தில் மெதுவாய் உள்ளே எட்டிப் பார்த்தவன் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்டுத்தியவாறு மெதுவாய் உள்ளே சென்று பின்னிருந்து லேசாய் அவள் இடுப்பை அணைத்தவாறு கன்னத்தில் இதழ்பதித்து குட்மார்னிங் திஷா டியர் என காதில் கிசுகிசுக்க,

சட்டென நடந்த இந்த அதிரடி தாக்குதலில் பயந்தே போனவள் கையிலிருந்த கரண்டியை கீழே  தவறவிட அது முன்னிருந்த பாத்திரத்தின் தண்ணீரோடு சென்று கீழே விழுந்து அடங்கியது..புடவையிலெல்லாம் தண்ணீர் கொட்டியிருக்க நடந்த களேபரத்தில் கண்களை இறுக மூடியிருந்தவள் விழி திறந்த போது அவனை அங்கு காணவில்லை..மாறாக சாரதாவும் ராகவனும் அடித்து பிடித்து ஓடி வந்தனர்.

“என்னம்மா ஆச்சு..உனக்கு ஒண்ணுமில்லையே?”

“இல்ல இல்ல அத்தை..கரண்டி தவறி கீழே விழுந்துருச்சு வேற ஒண்ணுமில்ல..”,என திக்கித் திணறி கூறி முடித்தாள்.

“அய்யோ சரி சரி பாரு புடவையெல்லாம் நனைஞ்சுருக்கு போ நீ போய் மாத்திட்டு வா..நா பாத்துக்குறேன்”,என அவளை அனுப்பி வைத்தார்.

அவனை ஒரு வழி பண்ணும் எண்ணத்தோடு உள்ளே சென்றவளுக்கு ஏனோ அவனை பார்த்த பின் வார்த்தை எழாமல் போக அதை மறைப்பதற்காக அவனை முறைத்தாள்.

“ஏன் டீ ஒரு குட்மார்னிங்க்கு இந்த அக்கப் போரா?”,என அவன் இவளை கேட்க..

“என்னதுடீ யா..??”

“பின்ன என்ன காபியா??ஐயோ காலைலேயே இப்படி மொக்க ஜோக்லா சொல்ல வைக்காத..உன்னை யாரு குட்மார்னிங் சொல்லாம வெளியே போக சொன்னது..??”

“இதெல்லாம் ரொம்ப ஓவர் இத்தனை வருஷமா நா குட்மார்னிங் சொல்லி தான் நீங்க எழுந்தீங்களா?”

“ம்ம் இத்தனை வருஷமா நீ சமைச்சுது தான் இங்க எல்லாரும் சாப்டாங்களா?”

“ப்ச்ச்ச்”

“இதுக்கு ஒண்ணும் குறைச்சலே இல்ல..நல்ல வேளை அம்மா பாக்கல என்னை கலாய்ச்சே கொன்னுருப்பாங்க..சரி ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்ட மன்னிச்சு விடுறேன்..இப்போ சொல்லு”என கன்னத்தை காட்ட அவனை எரிக்கும் பார்வை பார்த்தவாறே அவனை தாண்டிச் சென்று கபோர்டைதிறந்து வேறு புடவையை எடுத்து அவள் திரும்ப அப்படியே அவளை சிறை பிடித்திருந்தான்.

விரல்நுனி கூட படாமல் அவளின் இருபுறமும் கபோர்டில் கை ஊன்றி அவன் நிற்க அத்தனை நெருக்கத்தில் மூச்சடைக்க அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏய் டீச்சரம்மா இன்னைக்கு என்ன ஆனாலும் உன் குட் மார்னிங் எனக்கு வேணும்..அதுவர நகர மாட்டேன்..”என அவளை பார்த்தவனின் கண்கள் அவன் பேச்சின் தீவிரத்தை உணர்த்தியது.

மென்குரலில்,”நா போகணும்..”

முடிஞ்சா போய்க்கோ என அவன் அசராமல் நிற்க வேறு வழியின்றி தவித்தவள் தன் விரலால் அவன் முகத்தை லேசாய் திருப்பி சற்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து குட்மார்னிங்  என்றாள் உள்ளே சென்று விட்ட குரலில்..

“ஹா இதெல்லாம் ஒரு குட் மார்னிங் இதுக்கு இவ்ளோ நேரம் இப்படி ஒரு சீன்..ம்ம் போ போய் வேலையை பாரு..”,என்றவன் அசால்ட்டாய் அவளுக்கு வழிவிட்டு நகர்ந்து நிற்க பெண்ணவளுக்கோ அத்தனை கடுப்பையும் மீறி புன்னகை எட்டிப்பார்த்தது.

“மிரட்டல திட்டல சண்டை போடல ஆனா தான் நினைச்சதெல்லாம் செய்ய வைக்குறான் கேடி..”,என மனதில் முணுமுணுத்தவாறே சென்றவளை பின்னிருந்து ரசித்திருந்தான் அவளவன்.

இந்த சின்ன சின்ன சீண்டல்கள் நண்பர்களை கடந்த, தம்பதிகளுக்கு முந்தைய ஒரு நிலை தான் இருவருக்கும்.சொல்லப் போனால் அது ஒரு தெவிட்டாத அழகிய நிலை தானே.அனைத்து உரிமையும் இருந்தும் இல்லாத ஒரு நிலை..எல்லைகள் தாண்டி காதலை காட்டலாம் தான் ஆனாலும் ஒரு தயக்கமிருக்கும் நிலை..வாய் வழி பேச்சுக்களை விட விழி வழி உரையாடல்கள் ஆட்சி நடத்தும் ஒருநிலை..இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அதன் அழகை..

அவள் வெளியே சென்று சில நிமிடங்களில் உணவு மேடைக்குச் சென்றவன் ஒன்றுமே அறியாதவனாய் அமர்ந்திருக்க அவளுக்குத் தான் அவனருகில் அமர பெரும்பாடாய் இருந்தது.அவனோ அவளுக்கும் தனக்குமாய் உணவை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்திருந்தான்.

“வாவ் தோசை என்ன இவ்ளோ டேஸ்டா இருக்கு!”

“ஏன்டா வாழ்க்கைல இன்னைக்கு தான் தோசையை முதல் தடவை சாப்பிடுறியா?” என ராகவன் சிரிக்க,

“அட காரச் சட்னியா செம டேஸ்ட்”

“ஓ அப்போ இத்தனை வருஷம் என் சட்னி ரொம்ப கேவலமா இருந்துதா?”

“ம்மா பொண்டாட்டிக்கு இப்படியெல்லாம் ஐஸ் வைக்கணும் இல்லனா என் நிலைமை பாவமாய்டுமா இல்லையா?”,என அவன் சிரிக்க திஷானியோ அவனை வழக்கம் போல் முறைத்தாள்.

“ஆனாலும் நீ பொழைக்க தெரிஞ்சவன்டா மகனே..எனக்கெல்லாம் இந்த சாமர்த்தியம் இல்லாம போச்சே..”

“காலம் போன காலத்துல இப்போ உங்களுக்குஇந்த கவலை ரொம்ப தேவை தான்..”என்றவாறு சாரதா கை கழுவ எழுந்து செல்ல ராகவனும் உண்டு முடித்து எழுந்து சென்றார்.

“திஷா டியர் டிபனே அள்ளுது அப்போ லஞ்ச் என்ன ஸ்பெஷல்?”

“நீங்க நிஜமாவே பாராட்டுறீங்களா இல்ல கலாய்க்குறீங்களா?”

“அடப்பாவமே நல்லது சொன்னா கூட நம்ப மாட்டியா நீ?”

“சொல்றவிதம் அப்படியிருக்கு..”,என அவள் மெதுவாய் முனக,

“வேற மாதிரியும் சொல்லுவேன் நீ தான் என்னை முறைப்ப அதான் இப்படி சொல்றேன் ஓ.கே னா சொல்லு”,என அவள்புறம் சாய்ந்து காதருகில் கேட்க அவளுக்கோ தன்னை தானே குட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது..

“சும்மாவே ஆடுவான் இதுல நானே லீட் எடுத்து கொடுக்குறனே..கடவுளே..”,என மனதில் நினைத்தவள் ஒன்றும் கூறாமல் குனிந்து சாப்பிட சிரித்தவாறே அவன் சென்று கை கழுவச் சென்றான்.

அந்தநேரம் அவன் அலைப்பேசி டேபிளில் சிணுங்க அங்கிருந்தே அவளுக்கு குரல் கொடுத்தான்.

“யாரு திஷா கால்?”

எடுத்துப் பார்த்தவள் சாரு என்ற பெயரைப் பார்த்ததும் ஏனோ மனம் சுணங்கியது.

“சாரு கால் பண்றாங்க”

“ஓ இதோ வரேன்”,என்றவன் மொபைலை எடுத்துக் கொண்டுஅறைக்குச் சென்றுவிட அத்தனை நேரமிருந்த ரம்மிய நிலை ஏனோ சட்டென மாறிவிட்டதாய் இருந்தது திஷானிக்கு..

கிட்டதட்ட முக்கால் மணிநேரம் கழித்து வந்தவனை கண்டு கொள்ளாமல் ஹாலில் அமர்ந்து டீவி பார்பதாய் அவள் முகத்தை திருப்பிக் கொள்ள அவளருகில் அமர்ந்தவன்,

“அம்மா அப்பா எங்க?”

“கோவிலுக்கு போய்ருகாங்க உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க..”

“ஓ வாவ் என் பொண்டாட்டிய இப்படி என்கிட்ட தனியா மாட்டிவிட்டு போய்டாங்களே..சோ சேட்..”

“என்னாச்சு எதுவும் ப்ரச்சனையா?”

“யாருக்கு??”

“இல்ல உங்க ப்ரெண்டுக்கு..காலைலேயே கால் பண்ணிருக்காங்களே..”

அபினவிற்கு மனதிற்குள் உற்சாகம் தாளவில்லை..அவளின் கவிபாடும் அந்தகண்ணில் முதல்முறையாய் பொறாமை தீ சிறியதாய் தெரிகிறது..ஏனோ அதை மிகவும் ரசிக்க. தோன்ற விளையாட்டாய்,

“ம்ம் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அவ எப்பவுமே இந்த டைம்ல தான் கால் பண்ணுவா..பேசி ரெண்டு நாள் ஆச்சுல அதான் கொஞ்சம் லேட் ஆய்டுச்சு..”

“ஓ ரெண்டுநாள் ஆச்சா ஏதோ ரெண்டு வருஷம் மாதிரி இருக்கு நீங்க குடுக்குற பில்டப்..”

“ஹே என்ன இப்படி சொல்லிட்ட டெய்லி பேசிடுவோம் ஒரு நாள் பேசலனாலும் அன்னைக்கு நாள் நல்லாவே இருக்காது..”,எனமேலும் சோகமாய் அவன் கூற

ஓ என்றவள் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் எழுந்து உள்ளே செல்ல அவனுக்கோ ஒரு மதிரியான குளிர் காற்றின் உணர்வு அவளை அப்படி சீண்டியதில்..

“ரைட்டு டீச்சரம்மாவ வெறுப்பேத்த ஐடியா கிடைச்சுருச்சு..சாரி சாரு எருமை மாடே..தயவுசெஞ்சு அவ கண்ணுல பட்றாத உன்னை கொன்னாலும் கொன்டுருவா..”,என மனதில் நினைத்து சிரித்தவனுக்குத் தானே தெரியும் அவர்கள் இருவரும் பேசுவதே மாதம் ஒரு முறை தான் அதுதவிர எதேனும் உதவி வேண்டுமென்றால் தான் கால் செய்தே பேசுவாள்.

இன்று வேலை விஷயமாய் அவன் நண்பனை சந்திக்க வேண்டுமென்பதற்காக தான் பேசியதே..அதுகூட பேசும் போது ஆயிரம் சாரி கூறியிருந்தாள் டிஸ்டர்ப் செய்ததற்காக..

உள்ளே சென்றவளை பின் தொடர்ந்தவன்,”சரி சாரு…ஆங்ங்ங் சாரி திஷா டியர் நாம எங்கேயாவது வெளில போய்ட்டு வரலாம் வாயேன்..”

“ஏன் உங்க ப்ரெண்டையே கூட்டிட்டு போ வேண்டியது தான..”

வொர்க் அவுட் ஆகுது..”ம்ம் இங்க இருந்தா பரவால்லை அவ தான் வர ஒன் மந்த் ஆகுமே..அதுவரை உன்னை தான் தொல்லை பண்ணணும் என்ன பண்றது”,என சோகமாய் கூற அவன் விளையாட்டுக்கு பேசுவது தெரிந்தாலும் ஏனோ அதை ரசிக்கும் நிலைமையில்லை அவளுக்கு.

அவள் முக பாவத்தை கண்டவன் இதற்குமேல் இன்னைக்கு வேண்டாம் என நினைத்து,”டியர் நீ ரெடி ஆய்ட்டு வா நா ஆல்மோஸ்ட் ரெடி தான் ஹால்ல வெயிட் பண்றேன்..”,என்றவாறு சாவியை எடுத்துக் கிளம்பினான்.

“பெரிய ப்ரெண்ட் அப்படி என்ன தலை போற காரியம்..இவரு ஏதோ பேசுசுற என்கிட்டையே இவ்ளோ பேசுறாரு..அப்போ கேக்கவா வேணும்..”,என்று புலம்பியவாறே தயாராகி வெளியே வந்தாள்.

“வாவ் மை ப்ளக் ப்யூட்டி செமயா இருக்கு இந்த சுடி..போலாமா”,என்றவன் அவளோடு கிளம்பினான்.

காரில் ஒலித்த பாடல்களும் இருந்த வானிலையுமாய் அவளை ஓரளவு நிதானத்திற்கு கொண்டு வந்திருக்க சற்றே சகஜமாகியிருந்தாள்..அந்த தியேட்டர் வாசலில் காரை நிறுத்தியவன் அவளை காத்திருக்க சொல்லிவிட்டு டிக்கெட் கவுண்டருக்குச் செல்ல அருகிலிருந்த சில கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்குள் அவர்களைப் பார்த்து ஏதோ கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

அவளின் முகமாற்றத்தை உணர்ந்தவன் ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருக்க அவளோ சில நொடிகளில் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.இதை கவனித்தவன் டிக்கெட் எடுக்காமல் அவள் அருகே சென்று தோள் தட்ட திரும்பியவளின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தது.

“திஷா..”,என அதிர்ச்சியாய் அவன் அழைக்க,

“ப்ளீஸ் நாம இங்கயிருந்து போய்டலாமா..”

“பேபி..”

“ப்ளீஸ்ங்க..”,கண்களின் கெஞ்சல் அவனை அதற்கு மேல் பேசவிடாமல் ஆக்கியிருந்தது..ஒன்றும் பேசாமல் காரை கிளப்பியவன் நேராக வீட்டிற்குச் செல்ல குனிந்த தலை நிமிராமல் அப்படியே அறைக்குள் புகுந்து கொண்டாள்.சாரதா என்னவென மகனைப் பார்க்க கண்களாலேயே சமாதானப்படுத்தியவன் தங்களறைக்குச் சென்று கதவை தாளிட்டு திரும்ப கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முகம் இன்னுமே வாடிப் போயிருந்தது.

அமைதியாய் அவளை நெருங்கி அமர்ந்தவன் தோளை சுற்றி அணைத்து தன்னோடு அழுத்த அடுத்த நொடி அவன் சட்டையை கசக்கிப் பிடித்தவள் மார்பில் சாய்ந்து தன் கண்ணீரால் அவன் மார்பை நனைத்தாள்.

“திஷா!!”,சற்று கோபமாகவே வந்தது அவன் குரல்..

“நா ரொம்ப வீக் ஆய்ட்டேன்ப்பா..இது இல்ல நா..எனக்கு இது பிடிக்கல..”முகத்தை அவனுள் புதைத்தவாறே விம்ம ஆரம்பித்திருந்தாள்.

“திஷா ஏன் இப்படி பேசுற..நீ சொல்றத தான் நானும் சொல்றேன்..இது என் திஷா இல்லையே..நா பாத்த திஷாக்கு மனசு இவ்ளோ கோழை கிடையாதே..”

“இல்ல திஷானிக்கு அப்படி கிடையாது ஆனா இப்போ திஷானி அபினவ்க்கு மனசு ரொம்ப பலகீனமா ஆய்டுச்சு..”

தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன் அவள் முகம் நிமிர்த்தி,”சோ உன் இந்த நிலைமைக்கு காரணம் நா தான்..”

“அப்படி சொல்லல..அது..”

“வேற எப்படி சொல்றதா எடுத்துகிட்டும் நா..”,அவளை பேச வைத்தே தீர வேண்டும் என்ற உறுதி அவனிடம்..

“ப்ளீஸ் தப்பா எடூத்துக்காதீங்க..என்னோட இந்த குறையை யாராவது இரக்கத்தோட பாத்துட்டு போனா எனக்கு அது ஒரு விஷயமே கிடையாது.சொல்லப் போனா அதை பொருட்டா கூட மதிக்க மாட்டேன்.ஆனா இன்னைக்கு நடந்தது சின்ன விஷயமானாலும் அவங்க கிண்டல் பண்ணது என் குறையை இல்ல மனைவியா நீங்க என்னை தேர்ந்தெடுத்தததான்..அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..”

“இப்படி ஒவ்வொரு நாளும் நாம ஆயிரம் பேரை கடக்க வேண்டியது இருக்கும்..அது உனக்கும் தெரியும் அப்போ வாழ்க்கை மொத்தத்துக்கும் இப்படி அழுதுட்டு தான் இருக்க போறியா திஷா..”

“தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிணேன் ஒத்துக்குறேன் ஆனா நேர்ல நடக்கும் போது அதை அத்தனை ஈசியா கடந்து போக கஷ்டமா இருக்கு”,என கண்களைத் துடைத்தவள் சற்றே விலக எத்தனிக்க இன்னுமாய் தோள்பற்றி தன்புறம் சேர்த்தவன்,

“இங்க பாரு திஷா டியர் ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ அடுத்தவங்க பார்வைக்கும் பேச்சுக்கும் வாழ ஆரம்பிச்சா நம்மளால வாழவே முடியாது..ஒருத்தரோட பார்வையும் காதில் விழாத அவர்களின் பேச்சும் உன்னை இப்படி சோதிக்குதுனா இது நல்லதானு நீயே யோசிச்சுக்கோ..எனக்கு என் மூணுகால் கருப்பழகி தான் பிடிக்கும்..என்ன பாக்குற நா வயசாகி தள்ளாடி மூணுகால்ல நடக்க போறேன் நீ கொஞ்சம் சீக்கிரமா நடக்குற அவ்ளோ தான் வித்தியாசம்..என்ன புரியுதா?”

லேசாய் முகம் இலகுத்தன்மை அடைந்திருக்க மெதுவாய் அவனிடம்,”நிஜமாவே அவங்க பேசினது உங்களுக்கு கஷ்டமாயில்லையா?”

“ம்ம் கஷ்டமாதான் இருந்துச்சு அவங்க முன்னாடி நா நினைச்சத பண்ண முடிலையேனு..”

“என்ன அது?”

“ம்ம் நீ ரொம்ப பீலிங்க்ஸ் ஆப் இன்டியாவா மாறிருந்தனா அங்கயே அவங்க முன்னாடியே நச்சென்று ஒரு இச் வைக்கலாம்னு நினைச்சேன்..சோ சேட் அது நடக்கலை..”,என்றவன் தன்னையும் மீறி சிரிக்க அவன் மார்பில் செல்லமாய் குத்தியவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிட அமைதிக்குப் பின் தானிருக்கும் நிலையுணர்ந்தவள் சற்றே தயக்கமாய் அவனைவிட்டு எழுந்து கொள்ள இரு கைகளையும் கட்டிலில் பின்புறமமாய் ஊன்றியவாறு அமர்ந்தவன்,

“ம்ம் இவ்ளோ நேரம் அழுகாச்சி சீன் போட்டு என் சட்டையெல்லாம் கசக்கிட்டு இப்போ மேடம் ரொம்ப டீஸண்டா எழுந்து போறத பாரு..”,என்றதை கேட்டவாறே அறை கதவை திறந்தவள் நின்று திரும்பி,

“தேங்க்ஸ் பார் எவ்ரித்திங்”,என்று புன்னகைத்தவாறே வெளியே சென்றாள்.

அதன் பின்னான நாள் மொத்தமும் ஒருவித ரம்மிய நிலையே இருவருக்கும்.அவனின் ஆதரவான அந்த அணைப்பின் கதகதப்பும் தன்னவனின் வாசனையும் நாள் முழுவதும் தன்மேல் இருப்பதாய் ஒரு பிரமை திஷானிக்கு..சாரதாவை விட்டு நகராமல் அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..அதை அறிந்தவனும் முகத்தில் ஒட்டிய புன்னகையோடு விழியால் அவளை மொய்த்துக் கொண்டேயிருந்தான்.

மாலை வேளையும் அவள் அப்படியே இருக்க அவளை சீண்ட எண்ணியவனாய் மொபைலை எடுத்துக் கொண்டு தனதறைக்குச் செல்ல அவன் எதிர்பார்த்தபடி முகம் கழுவி ரிபெரெஷ் ஆக அவள் உள்ளே வரும் அரவம் கேட்டு சாருவுக்கு அழைத்தான்.

“ஹலோ சொல்லு பக்கி “,என அவள் தூக்கத்தில் உளர

“ஹே சாரு டார்லிங் என்ன பண்ற?”

“நாசமா போறவனே நடுராத்திரில போன் பண்ணி என்ன பண்றனு கேட்டா செத்துப் போன எங்க தாத்தாவோட டூயட் பாடுறேன் வரியா?”

“ஓ வாவ் எனக்கு தெரியும் அதனால தான் கால் பண்ணேன் பாத்தியா நம்ம கெமிஸ்ட்ரிய”

“செருப்பு பிய்ய போகுது டார்லிங் கெமிஸ்ட்ரினு என்ன தண்ணி அடிச்சுருக்கியா?? என்னதான்யா வேணும் உனக்கு..”

“ம்ம் புரியுது டா செல்லம் பட் என்ன பண்றது கல்யாண வேலையே செம பிஸியா போய்டுச்சு இப்போ தான் பேச டைம்..பீல் பண்ணாத டி”

“நீயெல்லாம் பேசினாதான் பீல் பண்ணுவேன்..ஒழுங்கு மரியாதையா போனை வச்சுரு இல்ல அசிங்கமா திட்டிருவேன்..”

“ஹே நோ நோ அதெல்லாம் நாம நேர்ல பேசிக்கலாம் டா..நீ பாத்து சேஃப்பா இரு..மிஸ் யூ டார்லிங்..”

“வேணாம் புதுசா கல்யாணம் ஆய்ருக்கு சாபம் கீபம் விட்ற போறேன் போய்ரு..ரெண்டு நாளுக்கு கண்ல பட்றாத கொன்ட்ருவேன்..பே..”

அவள் பேச்சை கேட்க கேட்க இங்க சிரிப்பை அடக்க முடியாமல் வெளிக் காட்டவும் முடியால் இவன் திணர அங்கு திஷானியோ காளி அவதாரமே எடுத்திருந்தாள்.

“காலைல என்ன டயலாக் எல்லாம் விட்டுட்டு இப்போ போய் யாரோ ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி மொக்க போடுது பாரு..அந்த பொண்ணுக்காவது அறிவு வேணாம்..இப்படியா..”,எனும் போதே தன் எண்ணத்தை எண்ணி தன்னை தானே கடிந்து கொண்டாள்.

“சே நா எப்போ இப்படி ஆனேன்..முகம் பார்க்காத ஒரு பொண்ணை திட்ற அளவு..அவங்க ப்ரெண்ட்ஸ் அவங்க பேசுறதே கேட்டதே தப்பு இதுல இத்தனை கோபம் வேற வர வர எல்லாமே தப்பா இருக்கு..இந்த அபினவ் விஷயத்துல எல்லாமே தலைகீழ் பாடமா நடக்குது எனக்கு..

புருஷன்ங்கிறத மீறி கண்டிப்பா அவர் மேல ஒரு அன்பு இருக்குதான்..ஆனா அதை அவர்கிட்ட காட்டவும் தோணல தள்ளியிருக்கவும் தோணல..கடவுளே..”,என நொந்து கொண்டே எங்கோ வெறித்த மாதிரியாய் அவள் நிற்க சட்டென அவள் பின்னிருந்து காதில் லேசாய் ஊதினான்.

உணர்வு பெற்றவளோ தடுமாறி விழப் போக,”ஏய் பாத்து..”என்றவன் கையை இறுகப் பற்றி நிறுத்தினான்..

“அத்தான் பக்கத்துலயேதான் இருக்கேன் அப்பறம் ஏன் கனவுல ரொமன்ஸ் பண்ற திஷா பேபி..”,என்று கண்ணடித்து கன்னம் கிள்ளி பதிலுக்கு காத்திராமல் வெளியே ஓடிவிட்டான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode