அன்பு-13

by ஸ்ரீ
0 comments 11 views
A+A-
Reset

அழகிய கவிதைகளாய் நாட்கள் நகர்ந்தது கொண்டிருந்தது.அப்படி ஒரு நாளில் தான் திஷானியின் பிறந்தநாள் வந்தது.தன்னுடனான முதல் பிறந்தநாள் அந்த ஒரு காரணமே அபினவை பலவித ஆச்சரியங்களை அவளுக்கு அளிக்கத் தூண்டியது.

அவனுக்கு ஏற்றவாறு அவள் பிறந்தநாளின் முந்தைய நாள் அபினவின் நண்பன் ஒரு கெட்டுகெதருக்காக அவனை அழைத்திருந்தான்.திஷானிக்கு தெரியாமல் சாரதா ராகவனோடு சேர்ந்து தன் திட்டத்தை செயல்படுத்த தேவையான ஏற்பாடுகளை முடித்துவிட்டு அவளோடு மாலை ஆறு மணியளவில் கிளம்பினான்.

அழகிய பேபி பிங்க் நிற டிசைனர் புடவையில் அவள் அம்சமாய் தயாராக அபினவிற்கோ அவளிடமிருந்து விழியகற்றவே தோன்றவில்லை.

“திஷா டியர் வர வர நீ செமயாய்டே போறியே..அழகு டீ..”

“அபிப்பா போதும் ரோட்டை பார்த்து ஓட்டுங்க..”,என்றவளின் குரல் காற்றில் கலந்து கரைந்துதான் ஒலித்தது.

அடுத்த மூன்று மணி நேரமும் அத்தனை இனிமையாய் கழிந்தது திஷானிக்கு.பத்து மணியளவில் அங்கிருந்து கிளம்பியவன் நேராய் வீட்டிற்குச் செல்லாமல் காரை வேறுபுறம் திருப்ப கேள்வியாய் அவனை நோக்கினாள்.

“பொண்டாட்டி நா இன்னைக்கு சுத்தமா சரியே இல்ல..நீ வேற இவ்ளோ நேரம் என்னை உரசிக்கிட்டே உக்காந்துட்டு இருந்தியா..அத்தான் ரொம்ப பாவம் தான..”,என பாவமாய் வினவ பெண்ணவளோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி அமர்ந்திருந்தாள்.

“அதனால தான் ப்ளீஸ் கொஞ்ச நேரம் பீச் மணல்ல உக்காந்துட்டு போலாம் ஓ.கே வா?”

“ம்ம் “என முனகி வைத்தவளுக்கு வேறெதுவும் பேசத் தோன்றவில்லை.அபினவ் கூறியதில் பாதி உண்மைதான் எனினும் முக்ககிய காரணம் இப்போதே வீட்டிற்குச் சென்றால் அவளுக்கான சர்ப்ரைஸ் சொதப்பிவிடும் என்ற காரணத்தால் தான்.

கடற்கரைக்குச் சென்றவன் அவளையும் அமர வைத்து வேண்டுமென்றே அவளை இடித்தவாறே அமர்ந்தான்.

ஒரு மணி நேரம் கடற்கரை காற்றின் இதத்தில் வழக்கம்போல் ஏதேதோ பேசி கேட்டு முகம் சிவக்க வைத்து காதல் கொள்ள வைத்து இருவரும் ஒருவர் மேல் ஒருவர் தங்களின் காதலை அளவில்லாமல் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அதன்பின் மணியை பார்த்து இப்போது கிளம்பினால் சரியாய் இருக்கும் என முடிவு செய்தவன் தன்னவளை அழைத்துச் சென்றான்.

வீட்டுவாசலில் காரை நிறுத்தியவன் அவள் இறங்கியவுடன்,

“திஷா டியர் நீ போய் கதவை திற நா ஒழுங்கா பார்க் பண்ணிட்டு வரேன்.லேட் ஆச்சுல அப்பா அம்மா தூங்கிருப்பாங்க..”,என்று கூற மெதுவாய் சென்று கதவைத் திறந்தாள்.

கதவின் அழுத்தத்தில் மேலிருந்த பலூனிலிருந்து பூக்கள் அவள் தலையை நிரப்பியிருந்தது.எதிர்பாரா இந்த தாக்குதலை கண்டு முதலில் அதிர்ந்தவள் பூக்களின் நடுவில் நிற்பதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க அவள் பின்னிருந்து தோள் பற்றியவன் “ஹேப்பி பர்த்டே மை கருப்பழகி..”என்றவாறு அவளருகில் வந்து நின்றான்.

கண்களில் கண்ணீர் குளமாய் தேங்க ஆரம்பித்திருந்தது திஷானிக்கு.பிறந்ததே வேஸ்ட் என நினைத்திருந்தவளின் பிறந்தநாளை விழாவாய் கொண்டாடும் கணவன்.பேசக் கூட தோன்றாமல் அவள் கணவனையே பார்த்திருக்க மெதுவாய் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்

சாரதாவும் ராகவனும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஹாலின் நடுவில் போடப்பட்டிருந்த டேபிளில் அவளின் திருமண புகைப்படம் தாங்கிய போட்டோ கேக் அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் ப்ளேவரில் கண்முன் காட்சியளித்தது.

எவ்வளவோ முயன்றும் அவளின் கண்ணீர் கன்னம் தொட மூவருமாய் அவளை சமாதானப்படுத்தி ஆட்டம் பாட்டமென அவள் மனநிலையை மாற்றினர்.

திஷானியின் முகம் முழுவதுமாய் அபினவ் கேக்கை பூசிவிட.  அவளோ குழந்தையாய் ஆர்பரித்தாள்.அதன்பின் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் முடிந்து உறங்கச் செல்ல அறைக்குள் நுழைந்தவுடனே திஷானி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

“தேங்க் யூ சோ மச்..இப்படி ஒரு பிறந்தநாள் வாழ்க்கைல நினைச்சுகூட பாத்ததில்ல..தேங்க் யூ சோ மச்..”

“திஷா பேபி முதல்ல குளிச்சுட்டு வா உன் ஸ்மெலோட சேர்ந்து இந்த கேக் ஸ்மெலும் என்ன ரொம்ப இம்சை பண்ணுது..போ”,என கண்சிமிட்டியவன் ஒற்றை விரலால் அவள் கன்னத்தில் லேசாய் ஒட்டியிருந்த கேக்கை எடுத்து நாக்கில் வைத்துக் கொண்டான்.

குளியலறைக்குள் சென்றவள் வெகு நிமிடங்கள் கடந்தும் வராமலிருக்க கட்டிலில் அமர்ந்தவன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.கதவு திறக்கும் சத்தம் கேட்டவன் மொபைலில் இருந்து விழியகற்றாமல்,”ஒருபேச்சுக்கு கேக் ஸ்மெல்னு சொன்னா அதுக்காக இவ்ளோ நேரமாவா குளிப்ப”,என்று கேட்க மறுபுறம் பதிலில்லாமல் போகவே தலையை திருப்பி அவளை பார்த்தவன் வாய் பேச மறந்து அப்படியே அமர்ந்திருந்தான்.

அவளுக்காக அவன் பார்த்து பார்த்து வாங்கிய திருமண புடவையில் ஈரத்தலையை சென்டர் க்ளிப் போட்டு விரித்து விட்டிருக்க முகம் முழுவதுமாய் ஒருவித பதட்டம் வியாபித்திருக்க அப்படியே அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

முதலில் சுய உணர்விற்கு வந்தவன்,”ஓய் என்ன ஸ்பெஷல்..இப்போ இருந்தே பர்த்டே செலெப்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டியா..ஏன் அங்கேயே நிக்குற இங்க வா”,என கைநீட்டி அழைத்தான்.

மெதுவாய் அவனருகில் வந்தவள் கட்டிலின் ஓரமாய் அமர அந்த அறையின் ஏசி குளிறையும் மீறிய அவளின் வியர்வையும் அந்த ஆழ் கண்களின் மருட்சியுமே அபினவிற்கு அவளின் மனநிலையை உணர்த்தினாலும் பொறுமையை கடைப்பிடித்தே ஆக வேண்டுமென நினைத்தவனாய் தன் இடத்தை விட்டு அசையாது அவள் கையை மட்டும் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

“ஓய் டீச்சரம்மா எதுக்கு இப்போ நீ கழுத்து சுளுக்கின மாதிரி குனிஞ்சே உக்காந்துருக்க..”,என கேலியாய் கேட்க அவளோ ஒன்றும் கூறாமல் அவனை ஓரப்பார்வை பார்த்தாள்.

“ம்ஹும் நீ இப்படி நல்லவிதமா சொன்னா பேசமாட்ட போலயே..”,என்றவன் அவளருகில் அமர்ந்து தோளால் இடிக்க சட்டென அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

இந்த அதிரடி தாக்குதலை எதிர்பாராதவன் ஒரு நொடி திகைத்தாலும் தன்னவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

“ஹேப்பி பர்த்டே திஷா பேபி..”,வார்த்தைகள் கிசுகிசுப்பாய் அவள் காதுகளை வருட அவளின் கரங்களோ தன்னவனின் முதுகில் படர்ந்து மேலும் தன்னோடு இணைத்தது.

“திஷா..நீட் யூ டீ..”மேலும் மேலும் மெல்லியதாய் அவன் குரல் கிறங்கி ஒலிக்க திஷானியோ மொத்தமாய் தன்வசத்தை இழந்திருந்தாள்.

இன்ப அவஸ்தையாய் தன் உணர்வுகளால் போராட அவளவனோ தன் தேடலை அடைந்தே தீரும் வேகத்தை அவளிடம் காட்ட அதே நேரம் அவளை துளியும் ஹர்ட் செய்யக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.

ஏனோ சட்டென அவளின் பயம் நினைவிற்கு வர ஒரு நொடி நிதானித்தவன் தன்னவளின் விழி நோக்க அவன் விழியேந்தியிருந்த கேள்வி புரிந்தவளாய் இடவலமாய் தலையசைத்து அவனுள் புதைந்து கொண்டாள்.

அதன் பின்னான நிமிடங்கள் யுகங்களாய் அழகிய அவஸ்தையாய் அன்பின் இருப்பிடமாய் காதலின் கவிதையாய் நகர என்றோ அவன் கூறியது போல் அவனின் முப்பது வருட காதலின் தேடலை தன்னவளிடம் கண்டு கரை சேர்ந்தான்.

அதிகாலையிலே கண்ணயர்ந்தவர்கள் சிறிது நேரத்திலேயே அடித்த அலராத்தில் புரண்டு படுக்க எழப் போனவளை கையணைப்பிற்குள் வைத்து அலராத்தை நிறுத்தியவன்,”தூங்கு டீ பொண்டாட்டி இன்னைக்கு ரெண்டு பேருமே லீவ்”,என மீண்டும் தூக்கத்தை தொர்ந்தான்.

திஷானிக்குமே அத்தனை அசதியோடு எழுந்து கிளம்ப முடியும் என்று தோன்றாமல் போக அப்படியே அவனோடு உறங்கிப் போனாள்.

அதன்பின் அவள் லேசாய் தூக்கம் கலைந்த நேரம் அபினவின் குரல் எங்கோ ஒலிப்பதாய் தோன்ற மெதுவாய் கண்திறக்க முயற்சி செய்தாள்.

“திஷா பேபி சொல்றத கேளு கொஞ்சமா சாப்ட்டு தூங்கு..குட் கேர்ள் தான”,என்றவன் அவள் தலைகோதிக் கொண்டிருக்க மெதுவாய் எழுந்து அமர்ந்தவள் அருகிலிருந்த தட்டை பார்த்துவிட்டு,

“என்னப்பா காலையிலேயே சாப்பாடு செஞ்சுருக்காங்க ஏன் டிபன் செய்யலையா??”

“அதுசரி தான் மணி என்ன தெரியுமா மதியானம் ஒரு மணி டீ “

என்னது!!!!!அவசரமாய் மொபைலைத் தேடி மணி பார்த்தவள் தலையில் அடித்துக் கொண்டாள்.ஐயோ என்ன பண்ணித் தொலச்சுருக்கேன்..கடவுளே!!!என முகத்தை மூடிக் கொண்டாள்.

“இப்போ எதுக்கு இத்தனை வெட்கம் திஷா பேபி..”,என தன் தோள் சாய்த்துக் கொள்ள பாவமாய் அவனை ஏறிட்டவள்,

“அத்தை மாமா என்ன நினைப்பாங்க..எழுப்பிருக்கலாம் தான..எனக்கு வெளியே போகவே ஒருமாதிரி இருக்கு அபிப்பா..”

“திஷா..உனக்கு உடம்பு சரியில்ல புட் பாய்சன்னு சொல்லிருக்கேன்.அதனால யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க..ஆமா நீ ஏன் இவ்ளோ நேரம் தூங்கின நைட் தூங்கலையா பேபி”,என அவள் முன் தலைதாழ்த்தி கிண்டலாய் அவன் கேட்க..

“அபிப்பா..”,என்றவள் தன்னவனின் சட்டையை இழுத்து முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்தவனின் இறுக்கத்தில் இருந்தது அரவணைப்பு மட்டுமே..தன்னவள் மொத்தமாய் தன்னை ஏற்றுக் கொண்டுவிட்டாள் என்ற திருப்தி அவளின் பயம் மறந்து தன்னோடுடனான உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்ற பெருமிதம் இப்படி அனைத்துமாய் இருந்தது அந்த அணைப்பு..

தன்னிடமிருந்து அவளைப் பிரித்தவன் கலைந்திருந்த அவள் நீள் கூந்தலை கோதி கொண்டைப் போட்டு அந்த கிளிப்பை போட்டுவிட்டான்.

மெதுவாய் எழுந்தவன் தன்னவளை கையிலேந்தி குளியலறை நோக்கி நடக்க,”ஐயோ என்ன பண்றீங்க நானே போய்க்கிறேன்..விடுங்க..”

“காதுகுள்ள ஏன்டீ கத்துற ஒண்ணும் பண்ண மாட்டேன் போ போய் பல்லை தேய்ச்சுட்டு வந்து சாப்டு முதல்ல..”என்றவன் அவளை கீழே இறக்கியபின் தான் உயிரே வந்தது அவளுக்கு..

கதவை சாத்தியவள் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க அத்தனை பூரிப்பும் சந்தோஷமும் ஏதோ உலகையே வென்றுவிட்ட உணர்வு.தன்னவன் தன்னை நாடியது ஆசை தாபத்தை தாண்டிய காதலால் என்பதை அவனின் ஒரு தொடுகையுமே அவளுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது.இதை விட இந்தப் பிறவிக்கு எதுவும் வேண்டுமோ என்றே தோன்றியது.

நினைவுகளை பின்னுக்கு தள்ளியவள் வேகமாய் பல் துலக்கி குளித்து வெளியே வந்தாள்.தட்டை எடுத்து அவள் முன் வைத்தவன் அவளுக்காக உணவை கையில் எடுத்து ஊட்டிவிட ஆரம்பித்தான்.அவளும் அவனுக்கு கொடுக்க மறுக்காமல் உண்ண ஆரம்பித்திருந்தான்.

அறையை விட்டு அவள் நகருவதாய் இல்லை என்பதை உணர்ந்தவனுக்கு மதிய பொழுது முழுதுமே தன்னவளோடு கதைபேசி கையளந்து தலைகோதி சிறு சிறு சில்மிஷம் செய்து அழகாய் கழிந்தது.

மாலையில் ஒரு வழியாய் அறையை விட்டு வெளியே வந்தவளிடம் சாரதாவோ ராகவனோ ஒன்றும் கேட்காமல் இருந்ததே நிம்மதியாய் இருக்க ஓரளவு சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆனாலும் சாரதாவிற்கு அவளின் மலர்ந்த முகமே அனைத்தையும் தெளிவாய் உணர்த்தியிருந்தது.விரைவிலேயே வீட்டில் மழலைச் சத்தம் நிறைந்திருக்க வேண்டுமென மனமாற வேண்டிக் கொண்டார்.

அதன் பின்னான நாட்கள் சொர்க்கத்தின் வாயிலையே கண்முன் காட்டுவதாய் இருந்தது திஷானிக்கு..அபினவ் குழந்தையென அவளை சுற்றி வந்தான் என்றே கூற வேண்டும்.அதே நேரம் அதன் பிறகு  தாம்பத்திய மலர் தானாகவே ஒருமுறை மலராத வரை அவளை மீண்டும் எதற்கும் அவன் வற்புறுத்தவில்லை.அவன் காதலும் இம்மியளவும் குறைந்ததாய் தெரியவில்லை..

அவளும் அவளவனின் கதகதப்பு தன்மீது இருந்துக் கொண்டே இருப்பதையே விரும்பினாள்.வார இறுதிகளில் நிறைய நிறையவே ஊரைச் சுற்றினார்கள்.எந்தவித தயக்கமும் ஒதுக்கமுமின்றி அவனின் சரிபாதியாய் சந்தோஷமாகவே இருந்தாள்.

அனைத்தும் சரியாய் சென்ற நேரத்தில் தான் இறைவன் தன் ஆட்டத்தை துவங்க எண்ணினாரோ!

திஷானிக்கு அன்று விடுமுறை தினம் ஆதலால் பூஜையறையில் விளக்கிற்கு மாலை அணிவித்து பூஜைக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.விளக்கேற்றும் நேரம் வந்தமர்ந்த சாரதா பூஜையை முடித்துவிட்டு எழுந்தவளிடம்,

“ஏன்டா இந்தமாசம் நீ இன்னும் வீட்டுக்கு தூரமாகலையோ?!போன வாரமே நாள் தானடா உனக்கு?”,என்றவர் சில நாட்களாக தெரியும் மருமகளின் முகவாட்டத்தையும் அவளுக்கு உடம்பு சரியில்லை என்றுகூறிய நாளையும் மனதில் வைத்து அனைத்தும் சந்திக்கும் புள்ளி ஒன்றாய் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஒருவித எதிர்பார்ப்போடே அவளிடம் இதைக் கேட்டார்.

ஏதோ நினைவில் இருந்தவளுக்கோ இதை எதையும் கவனிக்க தோன்றாமல் போக,”ஆமா அத்தை என்னனு தெரில..எப்போவாவது இப்படி ஆகும்”,என்று சாதாரணமாய் கூறிவிட்டு நகர்ந்தாள்.

அறைக்குள் வந்தவள் வாட்சப்பில் வந்த வீடியோ என்னவென பார்க்க அதில் ஒரு ஆறு மாத  குழந்தை தாயின் மிரட்டலுக்கு பயந்து கண்நிறைந்த நீரோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.அந்த தாயும் விளையாட்டுக்குத்தான் செய்தார் என்றாலும் ஏனோ திஷானிக்கு மனம் ஒப்பவேயில்லை.

மொபைலைத் தூக்கி கட்டிலில் போட்டவள்,”ச்ச பாவம் பச்ச குழந்தையை விளையாட்டுக்காகவே இருந்தாலும் இப்படியா மிரட்றது நானெல்லாம் என் பாப்பாவ இப்படி பேச்சுக்கு கூட பண்ண மாட்டேன்ப்பா”,என யோசித்தவளுக்கு சட்டென சாரதாவின் கேள்வி மண்டைக்குள் ஆணி அடித்தாற் போன்று வந்து விழுந்தது.

கைகள் அவளறியாமல் தன் வயிற்றை வருட ஒரு நொடி சந்தோஷம் பயம் பேரானந்தம் அனைத்தையும் கடந்த தாய்மை உணர்வும் போட்டி போட கண்களில் நீர் கோர்த்திருந்தது.

“எனக்கு குழந்தையா..என்னையே பாறமா நினைச்ச இந்த உலகத்துக்கு என் மூலமா ஒரு உயிர் வரப் போகுதா..அது என்னை அம்மானு கூப்பிடும் என் அபினவை அப்பா அப்பானு சுத்தி வரும்.இதை அவன்கிட்ட சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவான்.என்னை தூக்கி சுத்துவானா என் முகம் மொத்தமும் முத்தத்தால் நனைப்பானா..என் பிள்ளையை இப்போவே பாக்கணும்டீனு குழந்தையாய் கெஞ்சுவானா..என்ன செய்வான் அவன்..”

நினைக்க நினைக்க நெஞ்செல்லாம்அடைத்துக் கொண்டு எழுகிறது ஒருவித பரவசம்.அடுத்த நொடி அவனை அழைக்க வேண்டும் என்றெண்ணியவள் கட்டிலில் தூரமாய் கிடந்த போனை நோக்கிப் பாய அப்போது தான் கவனம் சென்றது தன் கால் மீது.மொத்த சந்தோஷமும் போன இடம் தெரியாமல் போக அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“இதையெப்படி மறந்தேன்..என் குழந்தை என் ரத்தம் அதுவும் என் போலவே இருந்துட்டா..!!!அவனோ அவளோ என் போலவே இந்த உலகத்தின் சராசரி மக்ககளை போல வாழ முடியாம போய்ட்டா..இல்ல அது நடக்க கூடாது நடக்கவே கூடாது அப்பறம் அவருக்குதான் வாழ்க்கை முழுசுக்கும் கஷ்டம்.இல்ல இதை நா நடக்க விடவே மாட்டேன்.அவருக்கு இந்த விஷயம் தெரியகூடாது.இந்த குழந்தை எனக்கு வேண்டாம்.எனக்கு என் அபினவ் போதும்..”,என எண்ண எண்ண தலையை பிளந்துவிடும் ஒருவித வலி அவளை அதற்குமேல் யோசிக்கவிடாமல் அப்படியே மயங்கச் செய்ந்திருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode