அன்பு-15

by ஸ்ரீ
0 comments 11 views
A+A-
Reset

மாலை எழுந்தவளுக்கு அவனே காபியை எடுத்து வந்து கொடுத்து அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்திருந்தான்.

“இப்போ போலாமா முடியுமா இல்ல டயர்டா இருக்கா?”

“இவன் சொன்ன விஷயத்துக்கு டயர்டா இருந்தா மட்டும் படுத்து ரெஸ்ட் எடுத்துட முடியுமா?எத்தனை பெரிய விஷயத்தை சொல்லிட்டு இப்படி ஹாயா கேக்குறான்.எங்க போக போறோம் அந்த குழந்தை யாரா இருக்கும்?!!”,இப்படி ஆயிரம் கேள்விகள் தன்னுள் போட்டி போட முகத்தில் ஒன்றையும் காட்டாமல் எழுந்து தயாராகச் சென்றாள்.

இருவரும் அறையிலிருந்து வெளியே வந்த நேரம் சாரதா கவலையாய் சோபாவில் அமர்ந்திருந்தவர் அவர்களிடம் திரும்பி,

“டேய் அபினா வேண்டாம் டா கொஞ்சம் பொறுமையா இரேன்.அவ இருக்குற நிலைமைக்கு ஏன் அவளை மேல மேல குழப்புற..”

“ம்மா தெளிவா இருக்குறவங்கள தான் குழப்ப முடியும் இவ குழப்பத்துக்குள்ளேயே முங்கி நீச்சல் அடிச்சுட்டு இருக்கா..அப்படி இருக்கும் போது நா சொல்றதை கேட்டு தெளிவு ஆகுறதுக்கு தான் வாய்ப்பு அதிகம் வரேன் மா..”,என்றவன் காருக்குச் செல்ல அமைதியாய் அவனை பின் தொடர்ந்தாள்.

அரைமணி நேரப் பயணம் கார் சென்று அந்த ஆசிரமத்து வாசலில் நின்றது.திஷானிக்கோ மனம் தாறுமாறாய் எகிறிக் கொண்டிருந்தது.காரை விட்டு இறங்கியவன் அவளை கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கு புல்வெளியின் மேல் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமரச் செய்தவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனைப் பார்த்து சிரித்தவாறே நடுத்தர வயது பெண் ஒருவர் வந்தார்.

“வாங்க சார்..எப்படியிருக்கீங்க.ரொம்ப நாள் ஆச்சே வந்து..இவங்க தான் உங்க வைஃப்பா லட்சணமா இருக்காங்க..”

“அக்கா கொஞ்சம் மூச்சு விட்டுக் கோங்க..நீங்களே இவ்ளோ பேசினா அந்த வாண்டு என்னை ஒரு வழி ஆக்கிடுவாளே..எங்க இருக்கா கூட்டிட்டு வரீங்களா?”

“ம்ம் இதோ வரேன் தம்பி..”,என்றவர் நகர அவளருகில் அமர்ந்தவன் ஒன்றும் பேசாமல் எங்கோ இலக்கின்றி வெறித்தான்.

அவளுமே மனம் ஒரு நிலையிலில்லாமல் சுற்றும் முற்றும் நடப்பது மறந்து அமர்ந்திருக்க,”அப்பா!!”என்ற அழைப்பில் இருவருமே நினைவிற்கு வந்தனர்.

குரல் வந்த திசையில் பார்த்த திஷானியோ கண்ணிமைக்க மறந்து அமர்ந்திருந்தாள்.

5-6 வயது மதிக்கதக்க பெண் குழந்தை வீல் சேரில் அமர்ந்திருக்க அந்த பெண்மணி அவளை அழைத்து வந்தார்.

திஷானிக்கு சட்டென கண்களில் நீர்கோர்த்துக் கொள்ள அபினவ் மெதுவாய் அதட்டினான்.

“திஷாம்மா அவ முன்னாடி அழாத..ப்ளீஸ்”,என்றவன் எழுந்து சென்று குழந்தையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.

“ஹலோ அகல்யா பேபி..எப்படியிருக்கீங்க?”

“போ ப்பா நா பேச மாட்டேன் உன்கூட..என்னை பாக்க வரவேயில்லை..என்ன மறந்துட்ட தான?”

“என் செல்ல பேபியை நா எப்படி டா மறப்பேன்.அப்பா தான் சொன்னேன்ல அம்மாவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரபோறேன்.கொஞ்ச நாள் வர முடியாதுனு..இப்போ பாரு அம்மாவும் உன்னை பார்க்க ஓடி வந்துட்டாங்க..”,என திரும்பி திஷானியை கண் ஜாடை காட்டி அழைக்க அவள் மெதுவாய் எழுந்து வந்தாள்.

அவளை பார்த்த அந்த பிஞ்சு முகத்தில் அத்தனை சந்தோஷம்.அவளை நோக்கி தன் பிஞ்சு கரங்களை நீட்ட மெதுவாய் தன் கையை இணைத்துக் கொண்டாள்.

“ம்மா எப்படியிருக்கீங்க..அப்பா உங்களை பத்தி சொல்லிருக்காரு..ரொம்ப ரொம்ப அழகா இருக்க தெரியுமா..இனி அப்பா விட்டு எங்கேயும் போகாத சரியா..அப்பா பாவம் தான நானும் இங்க இருக்கேன் நீயும் வீட்டுக்கு வரலனா அப்பா தனியா இருப்பாங்க தான..சரியா..”

என்ன பேசவென தெரியாமல் அவள் வெறித்திருக்க நியாபகம் வந்தவனாய் காருக்குள் இருந்து ஒரு டிபன் பாக்ஸை எடுத்து வந்து அவளை தூக்கி கல் பெஞ்சில் அமர்த்தினான்.

“பாட்டி உனக்கு பிடிச்ச பால் பாயாசம் செஞ்சு குடுத்தாங்க சாப்ட்டுடே பேசணும் ஓ.கே?”,என்றவன் குழந்தைக்கு கொடுக்க அவள் அதை சாப்பிட்ட வாறே திஷானியை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டு அபினவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“ப்பா என் ப்ரெண்ட்ஸெல்லாம் என்னோட நல்லா விளையாடுறாங்க தெரியுமா!எனக்கு கீதா தான் ரொம்ப பிடிச்ச ப்ரெண்ட் அவ என்கூடவே தான் இருக்கா..என்னோட தான் தூங்குறா..ஜாலியா இருக்குப்பா..”

“அப்படியா பேபி..வெரிகுட் அப்போ அப்பா வரலனாலும் நீ ஜாலியா தான் இருந்துருக்க..சரி அம்மா வந்துட்டாங்களே நீங்களும் என்னோட வீட்டுக்கு வந்துறீங்களா?”

இரு நிமிடம் திஷானியையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் என்ன தோன்றியதோ,”இல்லப்பா நா இங்கேயே இருக்கேன் இங்க தான் எனக்கு இவ்ளோ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.ஆன்ட்டி இருக்காங்க..நா உங்களோட வந்துட்டா எல்லாரும் ரொம்ப கவலை படுவாங்க தான..அதான் உங்க கூட அம்மா இருக்காங்களே..நா வந்துட்டா அப்புறம் கீதாக்கு யாருமே இருக்க மாட்டாங்க..அதனால தான் சொல்றேன்..நீ குட் பாய் தான நா சொன்னா கேட்பல..”

“ம்ம் அப்போ உனக்கு இங்க இருக்க தான் பிடிச்சுருக்குனா அப்பா இப்படி அடிக்கடி வந்து உன்னை பாத்துக்குறேன்.எப்போ பேசனும்னு தோணிணாலும் எனக்கு கால் பண்ணி பேசு சரியா..”

“ம்ம் சரிப்பா..ஆமா அம்மா ஏன் எதுவுமே பேச மட்றாங்க..என் மேல கோவமா இருக்காங்களா?”என பாவமாய் கேட்டவளை பார்த்தவளுக்கு மனதை அடைத்துக் கொண்டு வந்தது இருந்தும் பேச நா எழாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“ம்ம் அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லடா கண்ணா அதான் டயர்டா இருக்காங்க..”

“அச்சசோ என்னாச்சு காய்ச்சலா?ஊசி போடலையா?”,என அவள் கழுத்தில் கைவைத்துப் பார்க்க அடக்கியதையும் மீறி திஷானி கண்கலங்கிவிட்டாள்.

“ம்ம் ஊசி போட்டாச்சுடா செல்லம்..அடுத்த தடவை உன்னை பார்க்க வரும் போது நல்லா பேசுவாங்க சரியா..இப்போ டைம் ஆய்டுச்சு நீங்க போய் விளையாடுங்க அப்பா அப்பறமா வந்து உன்னை பாக்குறேன் சரியா”

“சரிப்பா பை..”,என அவனை இழுத்து கன்னத்தில் இழ்பதித்து விடுவித்தவள் திஷானியையும் இழுத்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

“டாடா அம்மா..அழாத அடுத்த தடவை வலிக்காம ஊசி போட சொல்லலாம் சரியா..”என்று அவளுக்கு சமாதனம் கூறியவளை வீல் சேரில் அழைத்துச் சென்றார் அந்த பெண்மணி.

அவள் செல்லும் பாதையை பார்த்திருந்தவன் ஒரு பெரு மூச்சோடு திஷானியின் அருகில் அமர்ந்தான்.

திஷானி அமைதியாகவே இருப்பதை கண்டவன் அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“என் பிறந்தநாளுக்கு எப்பவுமே ஆசிரமத்துக்கு ஒரு வேளை சாப்பாடு பொறுப்பு எடுத்துப்பாங்க அம்மா.இங்க தான் இப்படி தான்னு இல்லாம பிறந்தநாளுக்கு முந்தின நாளே ஹோட்டல சாப்பாடு சொல்லி வச்சுருவோம்.மறுநாள் காலைல கோவிலுக்கு போய்ட்டு தோணுற ஏரியாவுக்கு போவோம் அங்க கண்ல படுற ஆசிமத்துக்கு போய்ட்டு சாப்பாடை அங்க டெலிவர் பண்ண சொல்லிட்டு கொஞ்ச நேரம் அவங்களோட இருந்துட்டு வந்துருவோம்.

அப்படி ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி இந்தபக்கம் வந்தப்போ இங்க வாசல்ல ஒரே கூட்டமா இருந்தது.என்னனு தெரியலையேனு நாங்க மூணு பேரும் உள்ளே வந்து பாத்தப்போ பிறந்து ஒரு பத்து நாள் கூட ஆகாத ஒரு குழந்தையை வார்டன் கையில வச்சுருந்தாங்க..

விசாரிச்சதுல இந்த குழந்தையை யாரோ துணில கட்டி இங்க வாசல்ல போட்டுட்டு போயிருக்காங்க பெண் குழந்தை கால் வேற சாதாரணமா இருக்குற மாதிரி தெரிலனு பேசிட்டு இருந்தாங்க..

குழந்தையை பாத்தப்போ ஒரு நிமிஷம் மனசு உடைஞ்சு போச்சு அத்தனை குட்டியா கண்கூட ஒழுங்கா திறக்காத ஒரு குட்டி தேவதை மாதிரி இருந்தா.என்ன மனுஷங்க இவங்க எல்லாம் இந்த குழந்தையை தூக்கி போட எப்படி மனசு வந்ததுனு ஆத்திரமா வந்தது.

ஒண்ணுமே யோசிக்காம அம்மாகிட்ட சொன்னேன் ம்மா நாம அடாப்ட் பண்ணிக்கலாம் இந்த குழந்தையைனு..

அம்மா அப்பா சுத்தி இருந்தவங்கனு எல்லாருமே அதிர்ச்சியா என்னை பாத்தாங்க.அம்மாவும் அப்பாவும் என்கிட்ட பேச அதுகுள்ள வார்டன் கூட்டத்தை கலைச்சுட்டு எங்களை கூட்டிட்டு வந்து இதோ இதே பெஞ்சில உக்காந்து தான் பேசினாங்க..”

“யாரு நீங்க?எதுக்காக இங்க வந்துருக்கீங்க?”

“மேம் என் பேரு அபினவ் இன்னைக்கு என் பர்த் டே அதான் இங்க பசங்களுக்கு லஞ்ச்க்கு அரேண்ஞ் பண்ணலாம்னு வந்தோம்.”

“நல்லது..ரொம்பவே நன்றி..ஆனா அது மாதிரி இந்த குழந்தையை தத்தெடுக்குறது ஒண்ணும் அத்தனை ஈசியான விஷயம் இல்ல தம்பி..”

“மேம் எனக்கு தெரியும் உங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல சோ நா லீகல் கார்டியனா ஆக முடியாது..பட் அப்பா அம்மா பேர்ல ப்ரொஸீட் பண்ணுங்க..நா இவளை நல்ல படியா பாத்துப்பேன்..”

“மிஸ்டர் அபினவ் ரிலாக்ஸ் ..நீங்க சொல்றது மட்டும் காரணம் இல்ல..இந்த குழந்தையை பத்தி ஸ்டேஷன்ல டீடெயில் வாங்கிருக்காங்க.இங்க இந்த குழந்தையை கொண்டு வந்தது உண்மையான அம்மா அப்பாவா இல்ல இந்த குழந்தையை எதுக்காகவாவது திருடிட்டு வந்து இங்க போட்டுருக்காங்களா?இந்த மாதிரி எதுவுமே தெரில.

அப்படியிருக்க நீங்க அடாப்ட் பண்ணி எடுத்துட்டு போய் நாளைக்கே எதாவது ப்ரச்சனை வந்தா கோர்ட் கேஸ்னு அலையணும் இதெல்லாம் உங்களுக்கு தேவையா?அதுவும் போக உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல நாளைக்கே உங்க மனைவியா வர்றவங்களுக்கு இந்த குழந்தையை பிடிக்காம போச்சுனா அப்போ என்ன பண்ணுவீங்கக..”

“நீங்க சொல்ற எல்லாமே கரெக்ட் தான் மேம்..இருந்தாலும்..”

“அபினவ் நீ எமோஷனலா பேசுற..கொஞ்சம் பொறுமையா யோசிச்சா தான் உனக்கும் சரி அந்த குழந்தைக்கும் சரி எத்தனை பிரச்சனைகள் இருக்குனு புரியும்..கம் டவுண் டா”என ராகவன் அவனை அமைதிப்படுத்த சாரதா மெதுவாய் அந்த குழந்தையை தன் கைகளில் வாங்கிக் கொண்டார்.

ராகவன் ஏதோ கூறிக் கொண்டேயிருக்க அபினவின் கண்கள் மொத்தமாய் அந்த குழந்தையிடமே நிலைத்திருந்தது.பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வார்டனிடம்,

“மேம் இதை நா ஏதோ எமோஷனலா எடுக்குற முடிவுனு நினைக்க வேண்டாம்.யோசிச்சு தான் டிசைட் பண்ணிருக்கேன்.அந்த குழந்தையை நா அடாப்ட் பண்ணிக்க முடியாத பட்சத்துல நா அவளுக்கான ஸ்பான்சரா பொறுப்பு எடுத்துக்குறேன்.எப்படியும் இவளுக்கு ட்ரீட்மெண்ட் செலவு இருக்கும்”,என்றவாறே அந்த பிஞ்சு கால்களை வருடினான்.

என்னா முடிஞ்ச அளவு இவளுக்கான அத்தனை செலவும் பண்ண தயாரா இருக்கேன்.அதுக்கு என்ன ப்ரொசிஜரோ சொல்லுங்க ப்ளீஸ்..”

அதற்கு மேல் ஒன்றும் கூறாமல் அவர் அலுவலகத்திற்குச் செல்ல அபினவ் தன் தாய் தந்தையிடம்,

சாரிப்பா சாரிம்மா உங்களை கேட்காம இதை செய்றது தப்புதான்.ஆனா ஏன்னு தெரில இந்த குழந்தையை இப்படியே விட முடில.நாம எத்தனையோ ஆசிரமத்துக்கு போய்ருக்கோம் தான் ஆனா இப்படி ஒரு நிலைமைல இப்படி ஒரு குழந்தையை பாத்ததே இல்லையே ம்மா..ரொம்ப கஷ்டமா இருக்கு..இவளுக்காகவே கல்யணம் பண்ணிப்பேன்ப்பா..என் குழந்தையா இவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்..நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க தான?”

“அபினா இதுல எங்க முடிவை விட உனக்கு வாழ்க்கை துணையா வர போறவளோட முடிவு தான்ப்பா முக்கியம்.அதனால கண்டத போட்டு குழப்பாம இப்போதைக்கு இந்த குழந்தைக்கு ஸ்பான்ஸரா மட்டும் இரு..”,என்று கூறி அவனை பெரியவர்கள் அழைத்துச் சென்றனர்.

பின் சாரதாவையே பெயர் வைக்குமாறு அபினவ் கேட்க அகல்யா என்று பெயர் சூட்டினார்.

அன்றிலிருந்து அவனின் வார இறுதிகளில் மூன்று மணி நேரம் அகல்யாவிற்கு என்றானது..சாரதாவும் அவனோடு வந்து விடுவார்.

இப்படியாய் இருந்த நாட்களில் அகல்யாவின் 45வது நாளில் போட வேண்டிய தடுப்பூசிக்காக அவளை மருத்துவமனைக்கு தானே அழைத்துச் செல்வதாய் கூறி சாரதாவோடு அழைத்துச் சென்றான்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர் அபினவையும் சாரதாவையும் தயக்கமாய் பார்த்தார்.

“என்னாச்சு டாக்டர்??”

“குழந்தைக்கு ஹார்ட்ல ப்ராப்ளம் இருக்குமோனு டவுட் மிஸ்டர் அபி..”

“என்ன சொல்றீங்க டாக்டர்!!”

“ம்ம் புல் செக் பண்ணிட்டு சொல்றேன் வெயிட் பண்ணுங்க..”

அதன்பின் கடந்த ஒரு மணி நேரமும் அபினவிற்கு மனம் நிலையில்லாமல் தவித்தது..மருத்துவர் வந்து விஷயத்தை கூறும் போது மொத்தமாய் தளர்ந்து தான் போனான்.

“மிஸ்டர் அபி நான் சொன்ன மாதிரி ஹார்ட் ப்ராப்ளம் இருக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் தான் ஒரே வழி அதுவும் அவளுக்கு ஒரு மூணு வயசாவது பூர்த்தி ஆகணும்..அதுக்கப்பறம் அவ ப்ளட் குரூப் மேட்ச் ஆகுற ஹார்ட் கிடைக்கணும்.அப்பறம்தான் பண்ண முடியும்..அதுவரை அவளை..”

“நா பத்திரமா பாத்துக்குறேன் டாக்டர்..”,என்றவன் அத்தோடு வெளியே சென்றுவிட்டான்.

வார்டனிடம் விஷயத்தை கூறிவிட்டு அமைதியாய் வீட்டிற்கு சென்றுவிட்டான்.சாரதாவிற்கோ அவனின் மனவோட்டத்தை கணிக்கவே முடியவில்லை.வீட்டிற்கு சென்றதும் அவனை கட்டாயப்படுத்தி தன் மடியில் சாய்த்துக் கொள்ள மெதுவாய் வாய் திறந்தான்.

“ம்மா சில நேரங்கள்ல கடவுள் ஏன் இத்தனை கொடூர முகத்தை காட்றாரு..அந்த சின்ன பூவுக்கு இத்தனை கஷ்டங்கள் தேவைதானா?”

“கண்ணா..நம்மை மீறின விஷயங்கள் இதெல்லாம்..நம்மாள முடிஞ்ச உதவி செஞ்சு அந்த கடவுளை வேண்டிக்குறத தவிர எந்த வழியும் இல்ல டா..”

இப்படியாய் வருடங்கள் ஓட அவளது இரண்டரை வயதில் ஒருநாள் அவளை பார்க்கச் சென்ற அபினவிடம்,”நீ ஏன் எப்போவாவது தான் என்கூட இருக்க?உனக்கு இது வீடு இல்லையா?நா உன்னை எப்படி கூப்பிடனும்னு?”மழலை மாறாமல் கேள்விகளை அடுக்க அனைத்தையும் ஒதுக்கி கடைசி கேள்விக்கு மட்டும் பதில் அளித்தான் அப்பானு கூப்பிடு செல்லம்..

அதன் பிறகு அபினவ் அவளுக்கு எல்லாமுமாய் மாறிப் போனான்.அடுத்த சில நாட்களில்,

“என்னை ஏன் இங்கேயே விட்டுட்டு போற..உன்னோட கூட்டிட்டு போக மாட்டியா?நான் உன் கூடவே இருக்கேனே..”

“அகல்யா குட்டிக்கு இங்க நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க தான அப்பா வேலைக்கு போய்டுவேன் நீ என் கூட வந்தா உனக்கு போர் அடிக்குமே அப்பா காலைல போனா நைட் தான் வருவேன்.அதனால தான் உன்னை உன் ப்ரெண்ட்ஸ் கூடவே தங்க வச்சுருக்கேன் செல்லம்..”

அகல்யாவை பார்க்கும் நேரமெல்லாம் திருமணம் செய்து மனைவியோடு சேர்ந்து அவளை  தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணம் மேலோங்கும் ஆனால் வர்ற மனைவி இதை ஏத்துக்காம போய்டா என்ற எண்ணம் பின்னாடியே வந்து அவனை சோர்வு படுத்திவிடும்.

இப்படியாய் வருடங்கள் உருண்டோட இன்று திஷானியோடு இங்கு வந்திருப்பது அவனுக்கு கனவு போல் தோன்றியது.

“திஷாம்மா உன்னை முதல் தடவை பாத்தப்போவே ஏன் பிடிச்சதுனு கேட்டல உன் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு இல்ல நாளைக்கே என் அகல்யாவும் வளர்ந்தா உன்னைமாதிரி ஒருநல்ல நிலைமைல இருப்பாதானனு எனக்கு தோணிணதுனால தான்.

என்னை அறியாம என் மனசுக்குள்ள வந்த ரெண்டு பொண்ணுங்க ஒண்ணு நீ இன்னோன்னு அகல்யா தான்.ஏன் எதனாலனு எல்லாம் தெரில டா..உன்கிட்ட இதை மறைக்கணும்னு நினைக்கல இதை நீ எப்படி புரிஞ்சுப்பனு ஒரு பயம்..இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிருவியோனு ஒரு தயக்கம்..

சரி கொஞ்ச நாளுக்கு அப்பறம் சொல்லுவோம்னு நினைச்சுருந்தேன் அப்பறம் உன் பயத்தை பத்தி சாரு சொன்னப்போ மொத்தமாவே இதை உன்ட்ட சொல்லாம விட்றணும்னு முடிவு பண்ணிட்டேன்..”,என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.

“அவ்ளோ மோசமா நினைச்சுட்டீங்களா அபிப்பா?!!”கதற துடித்த மனதை உதடு கடித்து நிறுத்தினாள்.

தன் தோள் சாய்த்துக் கொண்டவன் நீண்ட பெரு மூச்சோடு தன் பேச்சை தொடர்ந்தான்.

“இல்ல டா அப்படி நினைக்கல..உலகத்துக்கு வராத குழந்தையை பத்தியே இத்தனை கவலை படுறவ நமக்கு ஒரு குழந்தை இருக்குனு சொல்லி அவ எப்போ வேணா நம்மளை விட்டு கடவுள்கிட்ட போய்டுவானு எப்படி சொல்ல சொல்ற?”

“என்னங்க???!!!!”

“ஆமா டா..அவ ரொம்ப வீக்கா இருந்ததால சர்ஜரி பண்ண முடில அது மட்டுமில்லாம கரெக்ட் டைம்ல அவளுக்கு ஏத்த ஹார்ட் கிடைக்கல ஷி இஸ் கவுண்டிங் ஹெர் டேஸ்..

அதனால தான் உன்கிட்ட சொல்லல..அவ விஷயத்துல இருந்தே என்னால இன்னும் மீண்டு வர முடில இதுல நீ வேற அபார்ஷன் அது இதுனு எனக்கு இதை தவிர உனக்கு புரிய வைக்க வேற வழி தெரில அதனால தான் இங்க வந்ததே..இப்போ சொல்லு என் பொண்ணு ஒருத்தியை நா தொலைக்க போறது பத்தாதா இப்போ இன்னொரு குழந்தை முகத்தை கூட பாக்காம அதையும் தொலைக்கணுமா??

கண்ணால பாக்குற தான அவ குறையையும் மீறி அவ எத்தனை சந்தோஷமா இருக்கா என்கிட்ட..நம்ம பிள்ளையையும் நா அதே மாதிரி பாத்துப்பேன் டீ..எந்த சூழ்நிலையிலையும் நீயும் நம்ம குழந்தையும் தான் டீ என் வாழ்க்கை என் உயிர்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ திஷாம்மா..”,என்றவனின் குரல் அடைத்து கண்களில் நீர்கோர்க்க அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“இல்லங்க நா ஏதோ லூசுதனமா யோசிச்சுட்டேன்.இனி மறந்தும்கூட அப்படியெல்லாம் யோசிக்க மாட்டேன்.ப்ளீஸ் நீங்க எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்குறவருனு நினைச்சுட்டு இருந்தேன்.. எனக்கு உங்களோட இந்த கலக்கம் பதற வைக்குது..ப்ளீஸ் கம் டவுண்..”

சற்றே தன்னை தேற்றியவன்,”ம்ம் பல நேரங்கள்ல ரொம்பவே ஜாலியா இருக்குறவங்க தான் அதிகமா உடைஞ்சுருவாங்க அது என் விஷயத்துலயும் உண்மை திஷாம்மா..அகல்யா எப்படி எனக்குள்ள இத்தனை பாதிப்பை குடுத்தானு இப்போ வரையுமே எனக்கு தெரில.அவளை காப்பாத்த முடியாதுனு சொன்னப்பறம் நா நானாவே இல்ல.

ரொம்பவே ஏதோ ஒரு டிப்ரஷன்..அதுக்கப்பறம் அம்மா அப்பாவும் வார்டன் ஆன்ட்டியும் சேர்ந்து என்னை இங்க வரவிடாம பண்ணிணாங்க.அகல்யாவை நா பார்க்க கூடாதுனு என்னவெல்லாமோ பண்ணி ஒன் இயர் ஆன்சைட் போக வச்சு அங்க கிடைச்ச தனிமை வாழ்க்கையை நிறையவே புரிய வச்சுது.இந்த உலகத்துக்கு வர்ற எல்லாருமே என்னைக்கோ ஒரு நாள் கண்டிப்பா போகத்தான் போறோம்.அகல்யா அதுல கொஞ்சமே முந்திக்குறானு புரிஞ்சுது..

அம்மா கால் பண்ணும் போதெல்லாம் அவங்க கஷ்டத்தையும் பயத்தையும் மறைச்சு பேசுவாங்க அப்போ ஒவ்வொரு செகண்டும் மனசு நொந்துடும் இப்படி கஷ்டப் படுத்துறோமேனு..என்னை நானே பழைய அபினவா மீட்டு எடுத்தேன்.அப்பா அம்மாக்கு நல்ல புள்ளையா இருக்கணும்னு முடிவு செஞ்சேன்.

எல்லாத்தையும் கடந்து ஆசிரமத்தின் மத்த பிள்ளைங்க மாதிரி தான் அவளும்னு கஷ்டப்பட்டு மனசை சமாதானப்படுத்தினேன்.

ஆன்சைட் முடிச்சு வந்தப்பறம் கொஞ்ச மாசதுக்கு நா இங்க வரவேயில்ல.அவ என்னை மறந்துருப்பா அவளை அப்படியே இருக்க வைக்குறது தான் நல்லதுனு முடிவு ண்ணிணேன்.

அதுக்கப்பறம் தான் உன்னை பார்த்தது.உன்னோட அந்த போல்டான முகமும் உன் அட்டிட்டூம் ரொம்பவே மனசுல பதிஞ்சுடுச்சு.அகல்யா எப்படி என்னை ஆக்கிரமிச்சாளோ அப்படிதான் இன்னதுனு சொல்ல முடியாத ஒருவித ஈர்ப்பு உன்கிட்ட வந்தது.எனக்கே எனக்கா பத்திரமா வச்சுக்க வேண்டிய எனக்கான பொம்மை நீ அப்படிதான் உன்னை நினைச்சேன்.

நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி தான் மறுபடியும் இங்க அவளை பார்க்க வந்தேன்.எல்லா குழந்தையையும் மாதிரி அவகிட்டயும் பேசிட்டு போலாம்னு வந்த எனக்கு அவ கொடுத்த அதிர்ச்சி,”அப்பானு கத்தி என்னை கட்டிபிடிச்சுகிட்டா..”

கிட்டதட்ட இரண்டு வருஷம் பாக்காம இருந்தும் அவ மனசுல இத்தனை ஆழமாய் பதிஞ்சுருக்கேனா அந்த ஒரு பீல் என்னால என்னனு சொல்ல முடில அவளோட அவ்ளோ பேசினேன்..அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன் கொஞ்ச நாள் உன்னை பார்க்க வர மாட்டேன்னு வெளிப்படையா பிரிவை சொல்லிட்டே போனேன்.

ஆனா அவ எதுக்குமே அசையல பாத்தியா இன்னைக்கும் எப்படி எந்த ஒரு வித்தியாசமும் இல்லாம என்கிட்ட வர்றா..

இந்த அன்புதான் என்னை ரொம்பவே உறுக வச்சது திஷாம்மா..கல்யாணம் பிக்ஸ் ஆனப்பறமும் சரி உன்னோட காதலை நீ உன்னை அறியாம எனக்குள்ள பதிச்ச அப்பறமும் சரி குழந்தையை பத்தி நா யோசிக்கல தான் நிச்சயமா ஆனா அன்னைக்கு பாண்டிச்சேரில நீ உன்னையறியாம குழந்தையை பத்தி பேசினப்போ தான் முதல் தடவையா தோணிச்சு அகல்யா என்னை விட்டு போனாலும் மறுபடியும் என் மகளாவே வந்து பிறப்பானு.

அந்த வார்த்தைல தான் நான் தடுமாறினது அதன் காரணமா தான் உன்னை மாதிரியே ரெண்டு குழந்தைங்க வேணும்னு சொன்னதும்.ஆனா அதுக்கு நீ அப்படி ஒரு அர்த்தம் எடுத்துப்பனு அப்போ நா நினைக்கல..

எல்லாத்தையும் தாண்டி சாரு நீ கர்ப்பபமா இருக்கனு சொன்னப்போ எப்படியிருந்தது தெரியுமா ஏதோ உலகத்தையே சாதிச்ச ஒரு பீல்..உன்னை ஸ்கூல வச்சு பாத்துருந்தேன்னா அப்படியே தூக்கி முகம் மொத்ததையும் முத்தத்தால நினைச்சுருப்பேன்.எல்லாமே மாறிப் போச்சு திஷாம்மா..”

அனைத்தையும் அவன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென கனவிலிருந்து மீண்டவனாய்,”ச்ச நா பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டே இருக்கேன்.சாரி பேபி..கண்டிப்பா இதெல்லாம் உன்கிட்ட ஒருநாள் சொல்லிருப்பேன் ஆனா இந்த நிலைமையில உன்னை கஷ்டபடுத்த வேண்டியதா போச்சு..தப்பா எடுத்துக்காத..”

“இல்லங்க..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..இதை நீங்க கல்யாணம் ஆனவுடனே சொல்லிருந்தா என்னோட அந்த தேவையில்லாத பயம்கூட வந்துருக்காதோனு தோணுது.என் புருஷன் அபினவையே அத்தனை பிடிக்கும் எனக்கு..ஆனா இப்போ அகல்யாவோட அப்பாவ சொல்ல முடியாத அளவு பிடிச்சுருக்கு..அவருக்காகவே சந்தோஷமா இந்த குழந்தையை பெத்தெடுத்து அழகா வளர்க்க போறேன்..

நீங்க எனக்காக செஞ்ச செய்துட்டு இருக்குற அத்தனைக்கும் என்னால திருப்பி செய்ய முடிஞ்ச ஒரே விஷயம் இதுமட்டும் தான்.ஆனாலும் அகல்யா பாப்பாவ வேற டாக்டர் யார்கிட்டையாவது காட்டலாமேங்க..”

“இல்லடா எல்லார்கிட்டயும் கன்சல்ட் பண்ணியாச்சு இதுக்கு மேல அவ பிரிவை ஏத்துக்குற பக்குவத்தை நாம வளர்த்துக்குறத தவிர வேற வழியில்லை..சரி நீ அதையே நினைச்சுட்டு இருக்காத..உன்னை தெளீவுபடுத்த தான் இவ்ளோ விஷயமும் சொன்னது..கடவுள் முடிஞ்சவரை அவளை காப்பாத்தட்டும்.ரொம்ப லேட் ஆச்சு போலாம் திஷாம்மா..”,என்றவன் எழுந்து தன்னவளோடு கிளம்பினான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode