அன்பு-17

by ஸ்ரீ
0 comments 19 views
A+A-
Reset

நாட்கள் மாதங்களாய் நகர எட்டாவது மாதம் மேடிட்ட பெரிய வயிறோடு சோர்வாய் அமர்ந்திருந்தாள் திஷானி.அவளுக்காக பால் எடுத்து வந்தவன் அவள் கைகளில் டம்ளரை கொடுத்துவிட்டு கால்களை நீவி விட்டு இதமாய் பிடித்து விட ஆரம்பித்தான்.

“சீக்கிரமா படுத்துக்கோ திஷா பேபி நாளைக்கு பங்கஷனுக்கு காலையிலேயே ஒரு வழி ஆக்கிடுவாங்க..ஒழுங்கா தூங்கு..”எனும் போதே அவள் வயிற்றை சுட்டிக் காட்டிச் சிரித்தாள் திஷானி.

“சரியான அப்பா புள்ளைங்க ரெண்டும் எப்படி உங்க குரல் கேட்டவுடனே ஆட்டம் போடுறாங்க பாருங்க… அபிப்பா இப்போவே சொல்லிட்டேன் நாளைக்கு உங்க புள்ளைங்க கூட சேர்ந்துட்டு என்னை தனியா விட்டீங்கனா அப்பறம் இருக்கு..”

அவள் பேச ஆரம்பித்த போதே கையை வயிற்றில் வைத்து தடவிக் கொடுத்தவன் புன்னகையோடே பார்த்திருந்தான் தன்னவளை..

“ஏண்டி நாள் புல்லா என்னை பத்தி மட்டுமே குழந்தைங்க கிட்ட பேசிட்டு இப்போ என்னை குறை சொல்றியா..”,எனச் செல்லமாய் காலை அழுத்தினான்.

அசடு வழிய சிரித்தவள்,”ம்ம் அவங்க இப்போவே அப்பாவ பத்தி தெரிஞ்சுக்கணும்.ஒருத்தரை உயிருக்கு உயிரா எப்படி காதலிக்கணும்னு தெரிஞ்சுக்கணும்.ஒரு நல்ல மகனா மகளா கணவனா அப்பாவா எப்படி இருக்கணும்னு சொல்லி கொடுத்து வளர்க்கணும் தான..”

“சரிதான் வயித்துக்குள்ள இருக்குற குழந்தைக்கு சொல்ல வேண்டிய ரொம்ப முக்கியமான கதை தான்.ஒழுங்கா தூங்கு டீ..”

இடதுபுறமாய் திரும்பிப் படுத்தவள் அவனையே பார்த்திருக்க தலையில் அடித்துக் கொண்டவன் அமைதியாய் அவளருகில் படுத்துக் கொள்ள நிதானமாய் கண் மூடினாள்.

மறுநாள் காலை பரபரப்பாய் தொடங்க திஷானியை தவிர வீடே சக்கரம் கட்டி பறந்து கொண்டிருந்தது.

அபினவோ ஹாலுக்கும் ரூம்க்குமாய் அலைந்து கொண்டிருந்தான்.

“ஏய் கருப்பழகி என்ன ஒரே நாள்ல என் கலருக்கு வரலாம்னு முடிவு பண்ணிருக்கியா?எவ்ளோ நேரம் டீ குளிக்குற..சளி பிடிச்சுக்க போகுது வெளியே வா..”,என கதவை உடைக்காத குறையாய் கத்திக் கொண்டிருந்தான்.

“ஏன்ங்க என் மானத்த வாங்குறீங்க சொந்தகாரங்க காதுல விழுந்தா என்ன ஆகும்.அப்பறம் என்ன சொன்னீங்க உங்க கலரா இதெல்லாம் ஒரு கலரா மைதா மாவு மாதிரி..கருப்புதான் நம்ம ஊரு கலர்..தெரிஞ்சுக்கோங்க..”

“ரொம்ப தேவைதான் இந்த விளக்கம்..வாடி வந்து புடவையை கட்டு சீக்கிரமா..”,என்றவன் தயாராகச் செல்ல மேல் மடிப்பு வைத்து முடித்தவளுக்கு கீழ் மடிப்புகளை  சரி செய்து விட்டான்.தலையை உலர துவட்டி விட்டு அவள் பின் நின்று தன் தலை வார ஆரம்பிக்க அவளோ அப்படியே அமர்ந்து அவனை கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.

“ஏன் டீ பொண்டாட்டி அப்படி பாக்குற சின்ன பையன் பாவம்..”

அழகாய் சிரித்தவள் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் நின்றவனிடமிருந்து விழியகற்றாமலே இருக்க அவள் முன் மண்டியிட்டு அமர்ந்ததவன் என்னவென்பதாய் புருவம் உயர்த்தினான்.

இடவலமாய் தலையசைத்தவள் அவன் முகத்தை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டாள்.

“அபிப்பா நம்ம பசங்க ரெண்டு பேரும் உங்க ஜாடையிலேயே பிறக்கணும்..”

“அப்போ நீ மட்டும் ஆட் மேன் அவுட்டா இருப்பியே பரவால்லையா பேபி..”,என்றவன் சிரிக்க கன்னத்தை இறுகப் பற்றி கிள்ளினாள்.

“ஸ்ஸ் ஆஆ வலிக்குது டீ..உண்மையை தான சொல்றேன்.பையனா பிறந்தா உன்னை மாதிரி இருக்கட்டும் பொண்ணு கிடைக்குறதுல பிரச்சனை இருக்காது.பொண்ணா பிறந்தா என்ன மாதிரி இருக்கட்டும் இல்லனா மாப்ள வீட்டுக்கு டௌரி குடுத்து முடியாது டா பேபி..உன் புருஷன் பாவம்.”

“ஐயேயே என்ன ஒரு சிந்தனை அடச்சே..என் பொண்ணுக்கும் எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு எடக்கு நாட்டான் கிடைக்காமயா போய்டுவான்..”

“அடிப்பாவி..உன்னை..இரு பங்ஷன் முடியட்டும் உன்னை ஒரு வழி ஆக்குறேன்..என்றவன் நெற்றியில் இதழ்பதித்து எழுந்தான்.

அவள் தயார் ஆனதும் அழைத்துக் கொண்டு ஹாலிற்குச் செல்ல அவர்களை பார்த்த  பெற்றவர்களுக்கு மனம்நிறைந்து போனது.வளைகாப்பு நல்ல முறையில் ஆரம்பிக்க அனைவருமாய் வளையலிட்டு நலுங்கு வைத்து திஷானியை ஆசீர்வதித்தனர்.

தாய்மை கொண்ட பெண்ணின் அழகே அழகு தான் நிச்சயமாய்.பட்டுப்புடவை சரசரக்க கன்னம் முழுவதும் சந்தன மணம் கமழ ஒப்பினையில்லாத முகம் மனதின் பூரிப்பை கொண்டே தங்கமாய் தகதகக்க பூக்களின் மனம் நாசியை வருடவென திஷானி பேரழகியாகவே தெரிந்தாள் அவளின் அபினவிற்கு.

சீரும் சிறப்புமாய் அழகாய் விழா முடிய திஷானி மொத்தமாய் சோர்ந்து போயிருந்தாள்.அபினவ் அவளை அறைக்கு அனுப்பிவிட்டு தட்டில் அவளுக்கான உணவை எடுத்துச் சென்றான்.

அவளிடம் உணவை கொடுத்துவிட்டு வந்தவர்களை கவனிக்கச் செல்ல அவள் பொறுமையாய் உண்ண ஆரம்பித்தாள்.வயிறு பசியாய் வெறுமையாய் இருப்பதை போன்ற உணர்வு இருந்தும் ஏனோ சாப்பிட தோன்றாமல் மெதுவாய் ஒவ்வொரு வாயாய் விழுங்கினாள்.

தட்டை வாங்குவதற்காக அபினவ் வர பாதி சாப்பாடு அப்படியே இருப்பதை கண்டவன்,

“திஷா பேபி வம்பு பண்ணாம ஒழுங்கா சாப்டு சாப்பாடு அப்படியே இருக்கே ஏன்??”

“இல்லங்க முடில என்னவோ போல இருக்கு நா கொஞ்சநேரம் படுத்துக்குறேன்..ப்ளீஸ்..”

அதற்கு மேல் வற்புறுத்த தோன்றாமல் புடவையை மாற்ற உதவியன் அவளை படுக்க வைத்துச் சென்றான்.

மதியதிற்கு மேல் வந்தவர்கள் அனைவரும் கிளம்ப திஷானியின் தாயும் தம்பியும் மட்டுமே இருந்தனர்.

அனைத்தையும் செட்ல் செய்துவிட்டு அபினவ் தனதறைக்கு வர திஷானி பல்லை கடித்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

“திஷாம்மா!!!”

“வலிக்குதுங்க..”

“”போன வாரம் தானடா டாக்டர் பாத்தோம் இன்னும் டைம் இருக்கு சொன்னாங்களே..பால்ஸ் பெயினா இருக்குமா!!”

“இல்லப்பா அப்படி தெரில..ரொம்ப ஒரு மாதிரி இருக்கு”,என்றவளுக்கு கண்ணில் நீர் கோர்த்திருந்தது.

அதற்கு மேல் அபினவ் எதையும் யோசிப்பதாய் இல்லை வேகமாய் பெரியவர்களுக்கு விஷயத்தை கூறி காரை எடுக்க விரைந்தான்.திஷானியை மெதுவாய் அழைத்து மற்றவர்கள் காரில் அமர்த்த பெண்கள் இருவரும் அவளோடு செல்ல ராகவன் டூவிலரில் திஷானியின் தம்பியை அழைத்துச் சென்றார்.

மருத்துவமனையை அடைந்து வீல் சேரில் அவளை அமர்த்தி உள்ளே செல்லும் வரையுமே அபினவ் அவளின் பற்றிய கரத்தை விடவேயில்லை..உள்ளே அழைத்துச் செல்லும் நேரம் அவளின் அந்த பார்வை அது இன்னதென கூற முடியாத ஒருவித பயத்தை விதைத்தது அவனுள்.

கையை பிசைந்தவாறே அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.நிமிடங்கள் நகர நகர மனம் பாடாய் படுத்தி எடுக்க சற்று நேரத்தில் அவனுக்கு வந்த அலைப்பேசி அழைப்பில் நிலையுணர்ந்தவன் திரையில் ஒளிர்ந்த எண்ணை கண்டு மொத்தமாய் நடுங்கிப் போனான்.

“ஹலோ ஆன்ட்டி சொல்லுங்க என்ன இந்த நேரத்துல?”

“எங்கயிருக்க அபினவ்..பிஸியா?”

“திஷாக்கு பெயின் வந்துருச்சு ஆன்ட்டி உள்ளே கூட்டிட்டு போய்ருக்காங்க..என்னாச்சு சொல்லுங்க?”

“ஓ..சாரி இப்போ நா பண்ணிருக்க கூடாது இருந்தாலும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது..அகல்யாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கோம்..”

“என்ன சொல்றீங்க எப்படியிருக்கா இப்போ??”

“உண்மையை சொல்லாம இருக்க முடில..ஷி இஸ் கவுண்டிங் ஹெர் மினிட்ஸ்..”

“ஆன்ட்டி!!!!”

“நீ அங்க நிலைமையை பாரு அபினவ்..இங்க நா பாத்துக்குறேன்..எனக்குத் தெரிஞ்சு அகல்யா உன் மகளாவோ மகனாவோ தான் வர போறானு தோணுது..தைரியமா இரு திஷானியை பாக்குற பொறுப்பு இருக்கு உனக்கு..”

கண்கள் அதுவாய் நீரை நிரப்ப ஆரம்பிக்க இமை சிமிட்டி கண்ணீரை கலைத்தான்.நீண்ட பெரு மூச்சை வெளியிட்டவன்,”சரி ஆன்ட்டி நீங்க பாத்துகோங்க இங்க டெலிவரி முடிஞ்சவுடனே நா அங்க வரேன்..ப்ரார்த்தனை பண்ணறத தவிர வேற என்ன பண்ணணும்னு எனக்கு தெரில..எதுவாயிருந்தாலும்..”,அதற்கு மேல் பேச நா எழாமல் தொண்டை அடைத்தது.

“நா உனக்கு கால் பண்றேன்..அவ தினம் தினம் படுற கஷ்டத்துக்கு இதுவே நிம்மதி அபினவ்..புரிஞ்சுக்கோ..நா வச்சுட்றேன்..”

அடுத்த முக்கால் மணி நேரம் கடந்திருக்க உள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் அபினவின் காதை எட்டியது அடுத்த இரண்டு நிமிடங்களில் இரண்டாவது அழுகுரல்.குடும்பமே தெய்வத்தை மனதார வேண்ட அபினவிற்கு அழுகையை தவிர ஒன்றும் செய்ய தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அதே நேரம் அகல்யா அங்கு மீளா உறக்கத்தை தழுவியிருந்தாள்..குழந்தைகளை குளிப்பாட்டி அவர்களிடம் எடுத்து வந்த நர்ஸ் பொண்ணும் பையனும் பிறந்திருக்காங்க..பொண்ணு தான் முதல்ல இந்த உலகத்துக்கு வந்துட்டாங்க..என்று கூறி சிரித்து அனைவரிடமும் குழந்தையை காட்டினர்.

இரண்டும் அப்படியே அச்சு அசல் அபினவின் ஜாடையில் ரோஸ் கன்னங்களோடு கண்திறக்க சிரமப்பட்டு அந்த பிஞ்சு கைகளை லேசாய் அசைத்தது.

பார்த்த அனைவருக்குமே அப்படியான ஆச்சரியம் அதெப்படி இப்படி ஒரு உருவ ஒற்றுமையென..பையன் சிறிதே சிறிதளவு திஷானியை போல் தோன்றினான்.

அபினவ் தன் ஒற்றை விரலால் லேசாய் அவன் கன்னம் வருட கையை அப்படி இப்டியாய் முகத்தின் அருகில் அசைத்தான்.

மகளை பார்த்தவனுக்கு அத்தனை நேரம் மனதை அழுத்திய பாரமெல்லாம் உடைத்தெறிந்து வெளிவர வேகமாய் அதேநேரம் மென்மையாய் அவள் கன்னத்தில் இழ்பதிக்க மீசையின் குறுகுறுப்பில் தூக்கம் கலைந்ததில் ஓ வென கத்த ஆரம்பித்திருந்தாள்.

திஷானியை அறைக்கு மாற்ற சற்றே மயக்த்தில் இருந்தவளை விட்டு அங்கு இங்கு நகராமல் கையை பிடித்தவாறே அவளையே பார்த்திருந்தான்.

சற்று நேரத்தில் விழிதிறந்தவள் அவனின் கையை அழுத்தமாய் பற்ற வேகமாய் எழுந்தவன் அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்திருந்தான்.

கண்களின் கண்ணீர் அவள் கன்னம் தொட மெதுவாய்,”அபிப்பா…”

“செத்துட்டேன்டீ மூணு பேரையும் பாக்குறதுக்குள்ள..அதுவும் உள்ளே போகும்போது ஏன்டீ அப்படி ஒரு பார்வை பாத்துட்டு போன..”

“திரும்ப உங்களை பாப்பேனோ மாட்டேனோனு பயந்துட்டேன் அபிப்பா..”

“பைத்தியம் உன்னை அப்படி விட்டுருவேன்னு நினைச்சியா..அந்த நிம்மதியெல்லாம் உனக்கு இந்த ஜென்மத்துல கிடைக்காது..”

“பாப்பா??!!”

சற்றே அவளைவிட்டு நகர்ந்தவன் குழந்தைகளின் தொட்டிலை அவளருகில் நகர்த்தினான்.

“என்ன பண்ணி வச்சுருக்க பாரு நீ கேட்ட மாதிரியே ரெண்டும் என் ஜாடையில தான் இருக்கு..ஏன்டீ இப்படி பண்ற?!!”

ஆர்வமாய் பார்த்தவள் குழந்தைகளின் தலை முதல் கால் வரை பதட்டமாய் ஆராய்ந்தாள்.பின்பே நிம்மதி பெருமூச்சோடு முகத்தில் பார்வையை பதித்தாள்.

அவள் எண்ணவோட்டம் உணர்ந்தவனோ திருந்தமட்டியா என்ற பொருளோடு தலையை இடவலமாய் அசைத்தான்.

பேச்சை மாற்ற எண்ணியவளாய்,”பையன் என்ன மாதிரியும் இருக்கான்ப்பா கொஞ்சம்..”

“ம்ம் ஆமா ஆமா கொஞ்சமே கொஞ்சம்..”என்று மென்னகைத்தான்.

அதன்பிறகு அவளை ஓய்வெடுக்க கூறிவிட்டு வெளியே வந்தவன் தன் அலைப்பேசியை எடுக்க தன் மகள் பிறந்த அதே நேரத்தில் அங்கு அகல்யாவின் உயிர் பிரிந்து விட்டதாய் குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஏனோ அத்தனை இன்னல்களையும் தாண்டி அகல்யாவின் ஆத்மா தன் மகளாய் தன்னிடமே வந்துவிட்டாள் என்று தான் தோன்றியது அவனுக்கு.அங்கிருந்த ரெஸ்ட் ரூமில் புகுந்து கொண்டவன் குளிர்ந்த நீரால் முகத்தை அடித்து தன்னை ஆசுவாசப்படுத்த முயன்று சில நிமிடங்களில் வெற்றியும் கண்டான்.

நிர்மலமான முகத்தோடு பெரியவர்களிடம் வந்தவன் உணர்ச்சிற்ற குரலில் விஷயத்தை கூறினான்.அவன் நிலை தெரிந்தாலும் அதை பெரிதுபடுத்தி விடக்  கூடாது என்ற காரணத்தால் அவர்களும் அமைதி காத்தனர்.

அடுத்த ஒரு வாரத்தில் திஷானியும் குழந்தைகளும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.சிசேரியன் என்பதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க நிறைவே சிரமப்பட்டாள்.கைகளில் வைக்கவும் முடியாமல் படுத்தவாறு கொடுக்க கூடாது என்றாலும் அவளால் முடியாத காரணத்தால் அதை முயற்சி செய்ய குழந்தையின் கால் அசைவில் தையில் இட்ட இடம் வலி கொடுக்க துடித்துதான் போனாள்.

ஒற்றை குழந்தையே அத்தனை சிரமம் எனும் போது இரட்டையர்கள் இன்னுமே படுத்தி எடுத்தனர்.ஒன்றின் அழுகையில் மற்றொன்று விழித்து அழும் இதற்கு உணவு கொடுப்பதற்குள் அது ஏக சத்தத்தில் கதற ஆரம்பிக்கும்.

அபினவோ தன்னவளின் நிலை கண்டு நொந்து போனான்.குழந்தைகளை கவனிப்பதோடு அவள் உடம்புமே தேறி வர வேண்டுமே என்ற கவலை அவனுக்கு.டாக்டரிடம் கேட்டு பால் பவுடர் கேட்டு அதை பழக்கப் படுத்தியே ஆக வேண்டும் என பிடிவாதமாய் கூறிவிட்டான்.

இரண்டு மூன்று வேளை மட்டும் அவளிடம் உணவிற்காக குழந்தைகளை கொடுக்கச் சொன்னான்.

அப்படி இப்படியாய் ஒருமாத காலம் கடந்திருக்க 30வது நாளில் பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அதற்குள் திஷானி மாமியார் மற்றும் அன்னையின் கவனிப்பில் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

அன்று காலை குழந்தைகளை தயார் செய்து தானும் தயாராகி அமர்ந்திருக்க வேலைகளுக்கு நடுவில் அபினவ் அறைக்குள் அவளுக்காக பாலோடு வந்தான்.

அதை வாங்கிக் கொண்டவள்,”அபிப்பா நம்ம குழந்தைகளுக்கு தான் பேர் வைக்க போறாங்க நியாகம் இருக்கா?இப்போ வர நீங்க ஒரு பேரும் சொல்லாம இருக்கீங்க..என்ன செலெக்ட் பண்ணிருக்கீங்க..”

தன்னவளை ரசனையாய் ஏறிட்டவன் அருகில் அமர்ந்தவாறே,”திஷா பேபி..அது உன் வேலை நீ என்ன பேர் வைக்குறியோ அதான் முடிவு..எத்தனை தடவை சொல்லிட்டேன் உன்கிட்ட..என்னை கேக்கவே கேட்காத..அதனால தான்இன்னும் பெர்த் சர்டிபிகேட் கூட அப்ளை பண்ணாம இருக்கேன் எல்லார் முன்னாடியும் நீ சொல்லும் போது தான் நானும் தெரிஞ்சுக்க போறேன் நம்ம பட்டூஸ் பேரை..சோ சீக்கிரமே டிஸைட் பண்ணிடு..”என்றவாறு கன்னத்தில் இதழ்பதித்து வெளியில் வேலையை கவனிக்கச் சென்றான்.

சில நிமிங்களில் குழந்தைகளோடு தம்பதி சகிதமாய் அமர பூஜை முடிந்து ஐயர் குழந்தைகளுக்கான பெயரை கேட்க அபினவ் திஷானியை ஒருவித ஆர்வத்தோடு பார்த்தான்.

சிறிதாய் புன்னகைத்தவள் அவனை பார்த்தவாறே,”அகல்யா,அகில்”,என்று கூறியது தான் தாமதம் சூழ்நிலை கருதி அபினவ் தன்னை சீர்படுத்திக் கொள்ள சாரதாவோ கண்கலங்கியே விட்டார்.

அபினவ் அதன் பின் ஒரு வார்த்தைகூட பேசவில்லை அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அனைத்தும் நல்லபடியாய் முடிந்து திஷானி அறைக்குள் செல்ல அப்போதும் அவன் வரவில்லை.அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அறை வாசலில் நின்று அவளே குரல் கொடுத்து அழைத்தாள்.

உள்ளே வந்தவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்தவள் பொய் கோபத்தோடு அவனை பார்க்காது அமர்ந்திருக்க வந்தவனும் ஒன்றும் கூறாமல் அவளருகில் அமர்ந்தான் சில நொடிகள் அவன் வாய்திறக்காமலே இருப்பதை கண்டு கோபமாய் திரும்பியவள்,

“ஓகோ சார்க்கு அகல்யா பேபி வந்தவுடனே திஷா பேபி வேண்டாம போய்டாளா?”,என்று சலிப்பு குரலில் கேட்க ஒருநொடி அவளை பார்த்தவன் இறுக அணைத்து கதறித் துடித்து விட்டான்.ஒரு மாதமாய் அவளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளிடம் விஷயத்தை கூறாமலே மறைத்தவனால் அழவும் முடியாமல் போனது..ஒரு மாத பாறத்தையும் அவள் தோளில் இறக்கி வைக்க எண்ணிணானோ கரைபுரண்ட வெள்ளமாய் கொட்டித் தீர்த்து விட்டான்.

“ஏங்க என்னாச்சு ஏன் இப்படி அழறீங்க..அகல்யா நல்லா இருக்கா தான??என்னாச்சு சொல்லுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு..”

சற்று நேரத்தில் தெளிவானவன் அங்கிருந்த தண்ணீரை குடித்துவிட்டு அவள் முகம் பார்த்து அமர்ந்தான்.

“திஷாம்மா அகல்யா நம்மயெல்லாம் விட்டு…”,குரல் தழுதழுத்தது..

“என்ன சொல்றீங்க எப்போங்க..ஏன் என்கிட்ட சொல்லல..நானும் வந்துருப்பேன்ல..”

“இல்ல டா அது நடந்து ஒரு மாசம் ஆகுது சரியா நம்ம அகல்யா இந்த பூமிக்கு வந்தப்போ தான் அவ…”

என்ன கூறவென தெரியாமல் திஷானி சிலையென அமர்ந்திருக்க,”இங்க பாரு திஷாம்மா என்னை கேட்டா அவ பட்ட சித்ரவதைக்கு இது அவளுக்கு நிம்மதிதான்.அது மட்டுமில்லாம அவ நம்மளவிட்டு போகலையே இதோ இங்கேயே என் கூடவே தான் இருக்கா..இன்னைக்கு நீ பெயரை சொன்னப்போ ஒருநிமிஷம் ஹார்ட் பீட் ஸ்டாப் ஆய்டுச்சு டா நிஜமா..தேங்க் யூ சோ மச்..”

“என்ன அபிப்பா நீங்க இப்படியா மனசுக்குள்ளேயே போட்டு உங்களை கஷ்டபடுத்திப்பீங்க..என்னாலயே சட்டுனு ஜீரணிச்சுக்க முடில நீங்க என்ன பாடுபட்டுருப்பீங்க..நம்ம அகல்யா நம்மகிட்ட தான் இருக்கா தைரியமா இருங்க எங்களுக்காக..”,என்றவள் தாயாய் தன்னவனை தோள் சாய்த்துக் கொண்டாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode