அன்பு-12

by ஸ்ரீ
0 comments 11 views
A+A-
Reset

சாரதா கூறியது போலவே மறுநாள் தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.பள்ளியிலிருந்து வந்தவள் உடைமாற்றி தயாராகி வர அவர் வாங்கி வைத்ததையெல்லாம் பார்த்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்து சமையலறைக்குச் சென்று கப்போர்டில் போட்டு வைத்திருந்த பெரிய பாட்டில்கள் நான்கை எடுத்து வந்தாள்.

“அத்தை இது நா நெட்ல பாத்தேன்..ரொம்ப க்யூட்டா இருக்கும்..பட் இதுவரை செஞ்சு பாத்தது இல்ல..”,என்றவள் தன் கைப்பேசியில் அந்த படத்தை காட்ட சாரதாவுக்குமே உற்சாகம் ஒட்டிக் கொண்டது.

“ரொம்ப நல்லாயிருக்கு டா திஷானி..மொபைல் இருந்தா உலகமே நம்ம கையில தான் போல..சரி நா என்ன ஹெல்ப் பண்ணணும்னு சொல்லு செய்யலாம்..”,

“ம்ம் உண்மைதான் மொபைல்னால எத்தனையோ கெட்ட விஷயம் நடந்தாலும் நல்ல விஷயங்கள் அதை விட அதிகமாவே இருக்கு..நா இதை கட் பண்ணி தரேன் நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி பெயிண்ட் பண்ணுங்க அத்தை..”

மெதுவாய் பாட்டில்களின் அடிப் பாகத்தை கத்தரித்தவள் அதன் ஓரங்களை மழுங்கச் செய்து சாரதாவிடம் கொடுக்க அவர் அதற்கு வண்ணம் தீட்டி அலங்கரிக்க ஆரம்பித்திருந்தார்.

அழகிய பச்சை வண்ணத்தில் அதை அலங்கரித்து நடுவே சிவப்பும் வெள்ளையுமாய் சிறு சிறு பூக்கள் போன்று வரைந்தார்.

அதற்குள் திஷானி அந்த பாட்டிலில் காம்பு போன்றும்இலை போன்றும் வெட்டி எடுத்து அதை ஒட்ட வைத்து அதை ஒரு மூடியின் மேல் ஒட்ட வைத்தாள்.

அனைத்தையும் முடித்து அதை பார்த்தவர்களுக்கு திருப்தியாய் இருக்க சாரதாவிற்கோ உற்சாகம் தாளவில்லை.

“பாரு இதுக்குதான் வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும்ங்கிறது..குட்டியா எத்தனை அழகாயிருக்கு..இன்னும் உனக்கு என்ன தேவையோ சொல்லு திஷானி..நா வாங்கிட்டு வரேன் வீட்டையே மாத்திரலாம்..”என செய்ததில் ஒன்றை எடுத்துக் கொண்டு ராகவனிடம் காட்டுவதற்காகச் சென்றார்.

அனைத்தையும் க்ளீன் செய்துவிட்டு தங்களறைக்கு வந்தவள் அபினவிடம் இதை எப்படி காட்டலாம் என்ற சிந்தனையில் இருந்தாள்.சட்டென நினைவு வந்தவளாய் தன் பேக்கிலிருந்து அந்த மிட்டாய்களை எடுத்து அந்த பாக்ஸிற்குள் எடுத்து வைத்தாள்.

சற்று நேரத்தில் வந்தவன் ஹாலில் யாரையும் காணாமல் தங்களறைக்கு வந்தான்.

“ஓய் திஷா டியர் என்ன கதவை கூட லாக் பண்ணாம மாமியாரும் மருமகளும் என்ன பண்றீங்க உள்ளே!திருடன் வந்தா கஷ்டமே பட வேண்டாம் போலயே?!”

“இவ்ளோ நேரம் அங்க தான்ங்க இருந்தோம் இப்போ தான் உள்ளே வந்தோம்.இன்னைக்கு ஆபீஸ் எப்படிபோச்சு?”,என்றவாறு பையை வாங்கிக் கொண்டாள்.

“நத்திங் ஸ்பெஷல்டா வழக்கம் போல போர் தான்..சரி உனக்கு எப்படியிருந்தது.அம்மா என்னவெல்லாமோ வாங்க போறேன்னு சொன்னாங்களே காலைலேயே..என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்..”

“ம்ம் சூப்பரா போச்சு..சுகர் ப்ரீ கேண்டி சாப்டுறீங்களா?”

“நா என்ன கேட்டேன் நீ மிட்டாய் சாப்டுறியானு கேக்குற..சரி குடு சாப்டுவோம்..”

தன் பையிலிருந்து அந்த பாக்ஸை எடுத்து அவனிடம் திறந்து நீட்ட பார்த்தவனின் விழிகளில் வெகுவாய் பாராட்டு இருந்தது.

“வாவ் செம க்யூட்டா இருக்கு திஷா பேபி..இவ்ளோ க்ரியேட்டிவான ஆளா நீ..ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு..அம்மா என்ன சொன்னாங்க?”

“அத்தையும் நானும் சேர்ந்து தான் பண்ணிணோம் இதை..அவங்க அதை பாத்துட்டு சின்ன குழந்தைமாதிரி எக்ஸைட் ஆனாங்க..அவங்களும் வீட்ல கம்பனிக்கு ஆள் இல்லாம ரொம்பவே பீல் பண்ணிருப்பாங்கனு நினைக்குறேன்..”

“ம்ம் உண்மை தான் நானும் அப்பாவும் வீட்ல இருக்குற நேரமே கம்மி தான்.அவங்க தனியா எவ்ளோ தான் டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க..பட் முன்னாடியெல்லாம் ஸ்வெட்டர் வால் ஹேங்கிங்ஸ் எல்லாம் பண்ணுவாங்க..ஆனா இந்த மாதிரி ரீசைக்கிலிங் க்ரஃவ்ட் அவங்களுக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துருக்கும்..”

“ம்ம் ஆமா இனி டெய்லி இப்படி சர்ப்ரைஸ் தான் உங்களுக்கும் மாமாக்கும்.எனக்குமே ரொம்ப ரிலாக்ஸ்டான டைம் பாஸா இருக்கு..”

“சரி தான் நல்ல மாமியார் மருமகள் பின்றீங்க வீட்டின் பெண் புலிகள்..”

அன்றைய இரவு உணவு மேஜை வழக்கத்தை விட களை கட்டியது.பேச்சும் சிரிப்புமாய் உற்சாகமாய் கழிந்தது.திஷானியின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அபினவ் மாற்ற நினைக்க தன் புகுந்தவீட்டிற்கு ஒருவித நிம்மதியை கொண்டு வந்திருந்தாள் திஷானி.

திருமண பந்தத்தின் மந்திர வித்தையே இதுதான்.எங்கிருந்தோ ஒரு குடும்பத்திற்குள் வந்து அந்த குடும்பம் தளைத்து செழித்து வளர தன்னால் இயன்ற வாழ்நாள் முழுமைக்குமான முயற்சிகளை பெண்கள் செய்வதும் அதற்கு நிகராய் ஊதியமாய் குடும்பத்தாரின் மகிழ்வும் நிம்மதியுமன்றி வேறேதும் எதிர்பார்ப்பில்லை அவர்களிடத்தில்.

இப்படியாய் நாளுக்கு நாள் வீட்டில் பெண்களின் கைவண்ணங்கள் மிளிர ஆரம்பிக்க வீட்டிற்கு வரும் சொந்தங்களும் அக்கம் பக்கத்தாரும் பார்த்து வியந்து பாராட்டிச் சென்றனர்.

புதியதை கற்றுக் கொள்ளும் அவளின் ஆர்வத்தைக் கண்டவன் அடுத்து அவளுக்காக ஏதெனும் செய்ய வேண்டும் என யோசித்து அடுத்த முயற்சியை எடுத்தான்.

அன்று இரவு அறைக்குள் நுழைந்தவளிடம்,”ஹே பொண்டாட்டி இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“என்ன சார் நல்ல மூட்ல இருக்குற மாதிரி இருக்கு என்ன விஷயம்?”

“ம்ம் உனக்கு பிடிச்ச விஷயம் தான் புது விஷயத்தை கத்துக்குறது..கத்துக்குறியா??”

“கண்களில் ஒரு வித எதிர்பார்ப்பும் தன்னவனின்செய்கையின் மீதான காதலும் போட்டி போட அவனை ஆர்வமாய் பார்த்தாள்.

“கருப்பழகி கண்ணை உருட்டாத அப்பறம் சொல்ல வந்ததை விட்டுட்டு வேற வேலை தான் பாக்கணும்..”,என்று அவன் சிரிக்க,

“அடச்சே எப்போ பாத்தாலும் இப்படியே பேசிட்டு இருங்க..என்ன விஷயம் சொல்லுங்க..”

“ம்ம் நாளையிலிருந்து வாரத்தில மூணு நாள் ட்ரைவிங் க்ளாஸ் போகப் போற திஷா பேபி..என் ப்ரெண்ட்டோட ட்ரைவிங் ஸ்கூல் தான்.எய்தர் மார்னிங் ஆர் ஈவ்னிங் அது உன் இஷ்டம்..ஓ.கேதான?”

“என்னது ட்ரைவிங்கா நானா!!!ஏன் ஒரு கால் நல்லாயிருக்குனு பாத்துட்டீங்களா!அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நா போக மாட்டேன்..”,என சிறு குழந்தையாய் அவள் சிணுங்க அபினவிற்கோ வியப்பாய் இருந்தது.

திஷானியின் இந்த முகம் அவனிற்கு புதிது.அத்தனை தைரியமானவளிடம் இந்தபயம் ஏனோ பொருந்தாத ஒன்றாய் தோன்றியது.

“ஹே முட்டகண்ணி உன்னை என்ன இமயமலையா ஏற சொன்னேன்..ட்ரைவிங் தான?”

“ம்ம் ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு?என்னை கொன்னுட்டு வேற நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிக்குற ஐடியால இருக்கீங்களா?”,என அவள் கேட்டவிதத்தில் சிரிப்பை அடக்கமாட்டாமல் கட்டிலில் உருண்டு சிரிக்க ஆம்பித்திருந்தான்.

“ஏன் டீ உன்னால மட்டும் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??”என மேலும் சிரித்து கண்களில் இருதுளி நீர் வடிந்தது அபினவிற்கு.

எவ்ளோ வேணா சிரிச்சுக்கோங்க..கிண்டல் பண்ணிக்கோங்க ஆனா ட்ரைவிங் மட்டும் நா கத்துக்க மாட்டவே மாட்டேன்.”

“திஷா எதுக்கு இந்த பிடிவாதம் க்யர்லெஸ் வெகிக்கில்ஸ் ஓட்றது அவ்ளோ கஷ்டமான விஷயம் ஒண்ணுமில்ல..நா தான் இவ்ளோ தூரம் சொல்றேன்ல..”

“அபிப்பா ப்ளீஸ் இந்த ஒரு விஷயத்துல மட்டும் விட்டுருங்க வேற என்ன வேணும்னாலும் கத்துக்க சொல்லுங்க கத்துக்குறேன்.எனக்கு எப்பவுமே இந்த ட்ராபிக் ட்ரைவிங்கெல்லாம் ரொம்ப பயம்..எங்கேயாவது இடிச்சு அக்ஸிடெண்ட் ஆகி எனக்கு எதாவது ஆய்டுச்சுனா!!!!நா உங்களோட நிறைய நாள் வாழணும் ப்ளீஸ்..”

“”திஷா!!என்ன பேச்சு இதெல்லாம்..இன்னும் கத்துக்கவேயில்ல அதுகுள்ள எவ்ளோ யோசிக்குற..ரோட்ல போறவங்க எல்லாம் என்ன அக்ஸிடெண்ட் பண்ணிட்டா இருக்காங்க..இதெல்லாம் ஒரு காரணம்னு கத்துக்க மாட்டேன்னு சொல்ற.இதோ பாரு இதுதான் என் முடிவு காலைல தயாரா இரு நானே கூட்டிட்டு போறேன்..20 க்ளாஸஸ் போய் முடிச்சு லைசன்ஸ் வாங்கிதான் ஆகணும் உனக்கு வேற ஆப்ஷனே இல்ல..”,என பிடிவாதமாய் கூறிவிட்டு மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்.

மறுநாள் எழுந்து வேலையை முடித்தவளுக்கு இன்னுமே விருப்பமில்லாமல் இருக்க அதை தன்னவனின் மேல் கோபமாய் வெளிப்படுத்தினாள்.

“எழுந்துருங்க..டைம் ஆய்டுச்சு எங்கேயோ கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்களே”,என்றவள் தலையை உலர்த்தி தயாராக ஆரம்பித்தாள்.

எழுந்தமர்ந்தவன் தூக்க கலக்கத்தோடே,”ஏய் ஒரு குட் மார்னிங் கூட இல்ல என்ன டீ நினைச்சுட்டு இருக்க?”

“வேணாம் இருக்குற கடுப்புல காபியை எடுத்து முகத்துல கொட்டிருவேன் போய்டுங்க”,என்று அவனை பார்த்து முறைத்தவாறு கூற அவனுக்கோ சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் இருந்தது.

“ஏய் ஊமை கொட்டான் என்ன காலங்காத்தாலேயே செம காரமா இருக்க!!என்னையே திட்டுற சரியில்லயே..பயம் விட்டு போச்சா??”

“ம்ம் உங்க மேல பயம் இருந்ததுனு நா எப்போவாவது சொல்லிருக்கேனா?நீங்களா அப்படி நினைச்சுகிட்டா நா என்ன பண்ண முடியும்?”

“ஓ..அவ்ளோ ஆய்டுச்சா..ம்ம் பாத்துக்குறேன்..”என்றவன் குளித்து தயாராகச் சென்றான்.

கூறிய நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு ட்ரைவிங் ஸ்கூலிற்குச் செல்ல இவர்களுக்காக அபினவின் நண்பன் காத்திருந்தான்.

அபினவ் அங்கேயே அலுவலக அறையில் காத்திருப்பதாய் கூற அவனை முறைத்தவாறே திஷானி அவன் நண்பணோடு சென்றாள்.

ஒரு மணி நேர பயிற்சி முடிந்து வந்தவளின் முகத்தில் அப்படியாய் ஒரு கடுப்பு.ஒன்றுமே பேசாமல் வந்து அவனருகில் அமர்ந்தாள்.

“நல்லாவே பிக்கப் பண்ணிக்குறாங்க மச்சி..சீக்கிரமா கத்துப்பாங்க கண்டிப்பா..சரி டா நாளைக்கும் இதே நேரத்துக்கு வந்துடுங்க..அடுத்த பேட்ஜ் வந்துட்டாங்க நா போய் பாத்துட்டு வரேன்..”,என கைக்குலுக்கிச் சென்றான்.

“ஓய் அதான் நல்லா ட்ரைவ் பண்றியாமே அப்பறம் எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சுருக்க!”

“சொன்னா மட்டும் இவரு அப்படியே காது குடுத்து கேட்ருவாரு..போலாம் ஸ்கூல்க்கு லேட் ஆச்சு”,என்று முனகியவாறே எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

“ரொம்ப ஓவராதான் போகுது மகளே நைட் கவனிச்சுக்குறேன் உன்னை..”,என்று சத்தமாகவே கூறியபடி அவளை பின் தொடர்ந்தான்.

அன்று முழுவதும் அபினவிற்கு வேலையே ஓடவில்லை.ஏனோ அவளை விருப்பமில்லாத வேலையை செய்யச் சொல்லி வற்புறுதத்துகிறோமோ என யோசித்துக் கொண்டேயிருந்தான்.

ஆனால் அதையும் மீறி அவள் இதை கற்றுக் கொண்டேயாக வேண்டும் என்ற எண்ணமும் மனதைவிட்டு அகல மறுத்தது.

மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்தவனை ஹாலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தவள் ஆச்சரியமாய் பார்த்தாள்.இருந்தும் கண்டும் காணாமல் அங்கிருந்து நகராமல் அமர்ந்திருந்தாள்.இரவு உணவு முடிந்து அறைக்குச் செல்லும் வரையுமே அந்த கண்ணாமூச்சி தொடர அறைக்குள் நுழைந்தவள் படுக்கையை சரி செய்து உறங்கத் தயாரானாள்.

அதுவரையுமே அமைதி காத்தவன் பொறுமையிழந்தவனாய்,”ஏய் கருப்பழகி ரொம்ப தான் பிகு பண்ணிட்டு இருக்க இங்க வா முதல்ல”,என்றவனை காரமாய் பார்த்தவள் மறுக்காமல் பால்கனிக்குச் சென்றாள்.

“ம்ம் அப்பறம் மகாராணி உக்கார சொன்னா தான் உக்காருவீங்களா?”

நாற்காலி இல்லாததை உணர்ந்தவள் உள்ளே எடுப்பதற்காகச் செல்ல,”உன்னை உக்கார தான் சொன்னேன் சேர் எடுத்துப்போட்டு உக்கார சொல்லல..”

அவன் கூறியதின் அர்த்தம் உணர்ந்தவளுக்கு முகம்தானாய் மலர இருந்தும் வீம்பாய் உள்ளே செல்ல திரும்பினாள்.அவள் கைப் பற்றியவன் வேகமாய் தன்புறம் இழுக்க அவன் மடியில் வந்தமர்ந்தாள்.

“மேடம் இதுக்கு முன்னாடி இப்படி உக்காந்ததேயில்லையா!!ரொம்பதான் சீன் போடுறீங்க..”

“ப்ச்ச் நா கோவமா இருக்கேன்..விடுங்க நா போனும்..”

“நா உன்னை பிடிக்கவேயில்லையே பார் யுவர் இன்பர்மேஷன்..”,என்றவன் சிரிப்பை அடக்கியவாறு அவள் காதருகில் ஊதினான்.

அத்தனை கோபமும் சென்ற இடம் தெரியாமல் போயிருக்க மனம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தான் அவளின் மாயவன்.

அவள் முகத்தின் இலகுத்தன்மையை கண்டவன் தன் கைகளை அவளைச் சுற்றி போட்டவாறு,”ஹே பொண்டாட்டி இப்படியே இரு இதான் நல்லாயிருக்கு.நாளையிலயிருந்து ட்ரைவிங் போக வேண்டாம் சரியா?”

“இல்ல இல்ல நா போறேன்..”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் இப்படி அழுது வடிஞ்சுட்டு ஓட்டினா கண்டிப்பா இடிச்சுருவ.உனக்கு எப்போ தோணுதோ அப்போ கத்துக்கோ..”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க நேத்து  புல்லா கடுப்பா இருந்தது உண்மைதான்.ஆனா இன்னைக்கு அங்க போனவுடனேயே ரொம்ப பிடிச்சுருச்சு.நடக்கவே கஷ்டபடுற என்னை பறக்க வைக்க நினைக்குறீங்கனு புரிஞ்சப்போவே உங்ககிட்ட அதை சொல்லணும்னு நினைச்சேன் தான்.ஆனாலும் சொல்லல..”

“அடிப்பாவி என்னை ஏன்டீ பாடா படுத்தின அப்போ..வர வர உனக்கு ரொம்ப கொழுப்பு ஏறிடுச்சு”,என அவள் இடுப்பில் குறுகுறுப்பு மூட்ட அவளோ நெளிந்தாள்.

“அபிப்பா ப்ளீஸ் ஐயோ சிரிக்க முடில பண்ணாதீங்க..இல்ல சொல்லணும்னு தான் நினைச்சேன்.பட் உங்களோட அப்படி சண்டை போடுறது கொஞ்சம் பிடிச்சது அதான் சொல்லாம முகத்தை கஷ்டப்பட்டு அப்படியே வச்சுருந்தேன்.நா இப்டியெல்லாம் உரிமையா யார்ட்டையும் கோவிச்சுக் கிட்டதே இல்லையா அதான் இந்த அல்ப வேலையெல்லாம் பாத்தேன்..”,என்றவள் அபினவின் கண்களுக்கு நிச்சயம் குழந்தையாய் தெரிந்தாள்.

அவள் பின் தலையை செல்லமாய் தட்டியவன்,”பைத்தியம்..வர வர ஸ்கூல பசங்க கூடசேர்ந்து இப்படி ஆய்டியா நீ..சரியில்லையே..அத்தானோட ரொமான்ஸ் பண்ணி நாளாய்டுச்சோ அதான் இப்படியெல்லாம் யோசிக்க தோணுது..உன்னை என்ன பண்றேன்னு பாரு”,என்றவன் தன்னவளை அப்படியே கையில் அள்ளிச் சென்றான் அவளின் அலறலை பொருட்படுத்தாது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode