அன்பு-16

by ஸ்ரீ
0 comments 12 views
A+A-
Reset

அபினவின் பேச்சும் அகல்யாவும் திஷானியை நிறையவே யோசிக்க வைத்திருந்தது.இருந்தும் மனம் முழுதாய் தெளிவடைய இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டது அவளுக்கு.இதற்கிடையில் மார்னிங் சிக்னஸ் வேறு ஆரம்பித்திருக்க அவள் உடல்நிலை அதற்கு மேல் அவளை யோசிக்க விடாமல் செய்திருந்தது.

அன்றும் அப்படிதான் காலையில் எழுந்து பல் தேய்த்து வருவதற்குள் ஒரு வழி ஆகியிருந்தாள்.தூக்கம் கலைந்தவன் அவள் வெகு நேரமாய் வரவில்லை என உணர்ந்து பாத்ரூமில் எட்டிப் பார்க்க வாஷ் பேசின் அருகில் கண்களில் கண்ணீரோடு  நின்று கொண்டிருந்தாள்.அந்த நிலையில் அவளை பார்த்து பதறியவன்,

“ஹே என்னாச்சு திஷா..ஏன் அழற??என்ன பண்ணுது??”

“பிரஷ் பண்ணவே முடில வாமிட் வர்ற மாதிரி ப்ரஷர் பண்ணி வயிறு வலிக்குது”,என அவன்மேல் சாய்ந்து கொண்டாள்.

“சரி விடு அழாத டா ப்ரஷ் பண்ண வேணாம் வாயை துடைச்சுட்டு வா”,என்றவன் அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.சாரதாவிடம் சென்று விஷயத்தை கூற அவர் அவளுக்காக ஏற்கனவே கலந்து வைத்திருந்த மாதுளை ஜீஸோடு வந்தார்.

“திஷானி இதை சாப்பாடும்மா..கொஞ்சம் புளிப்பு வாய்க்கு நல்லாயிருக்கும்..”

“அத்தை காலைலேயே ஜீஸா!காபி வேணும் அத்தை..”

“காபி சாப்ட்டு இன்னும் வயித்தை பிரட்டும் டா கொஞ்சம் கஷ்டப்பட்டு இதை சாப்டு எல்லாம் சரி ஆய்டும்..”

அவர் கூறியதற்காக மறுக்காமல் வாங்கி அதை ஒரு வாய் பருக ஆரம்பித்தவளுக்கு மொத்தமாய் வயித்தை பிரட்டிக் கொண்டு வர வேகமாய் எழப் போனவளால் முடியாமல் போக அவளை அப்படியே தூக்கியவன் குளியலறைக்குள் நிறுத்தியிருந்தான்.

வயிற்றுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத ஓர் உணர்வு குடலே வெளிவந்துவிடும் அளவுக்கு தோன்ற அப்படியே சோர்ந்து போனாள் திஷானி.

அபினவ் அவளை பின்னிருந்து தாங்கிக் கொள்ள சாரதா மெதுவாய் அவள் முகம் துடைத்து விட்டார்.

சோர்வாய் கட்டிலில் அமர்ந்தவள் அப்படியே கால் சுருக்கி படுத்துக் கொள்ள அபினவிற்குத் தான் அவள் படும்பாடு தாங்க முடியாமல் போனது.சாரதா அவனை செய்கையால் வெளியே அழைத்துச் சென்றார்.

“அபினா ஒண்ணுமில்ல இதெல்லாம் ஆரம்ப காலத்துல சகஜம் தான் நீ என்னவோ பேயை பார்த்த மாதிரி முழிச்சுட்டு நிக்குற..உன் முகத்தை பார்த்தா எனக்கே பயமா இருக்கு.நார்மலா இருடா..அவளை இன்னும் பயமுறுத்தாத..இட்லி தட்டுல போட்டு தரேன் அவளுக்கு சாப்பிட குடு..”,என்றவாறு சமையலறைக்குச் சென்று எடுத்து வந்து கொடுத்தார்.

உள்ளே நுழைந்தவன் அவளருகில் என்ன செய்வதென தெரியாமல் பாவமாய் அமர்ந்திருக்க சில நொடிகளில் கண்விழித்தவள் அவனைப் பார்த்து புன்னகைக்க முயற்ச்சித்தாள்.

“இப்போ எப்படிடா இருக்க?டிபன் கொண்டு வந்துருக்கேன் சாப்டுறியா கொஞ்சம்?”

மெதுவாய் எழுந்து அமர்ந்தவள் தட்டை தன் கையிலெடுத்து ஒரு வாய் இட்லியை அவனுக்கு ஊட்டிவிட கை நீட்டினாள்.

“இப்போ எனக்கு இது ரொம்ப அவசியமா முதல்ல சாப்டு நீ..ஆனாலும் படுத்துறீங்க ஒரு மனுஷன..டேய் குட்டி ப்ளீஸ்டா அப்பாவ இப்படியெல்லாம் பயமுறுத்தாம உள்ளே பத்திரமா இருக்கனும்..நா பாவம் தான?”என்றவாறு அவளின் வயிற்றில் லேசாய் வருடினான்.

“அபிப்பா ஒண்ணுமில்ல இப்படியெல்லாம் இருக்கும்னு நான் கேள்வி பட்டுருக்கேன் தான்.இருந்தாலும் அடிவயித்தை பிரட்டி வாந்தி வரும்போது அழுகையும் வந்துருச்சு..மத்தபடி ஒண்ணுமில்ல..இதுக்கே இப்படி முகம் சுருங்கிப் போனா இன்னும் ஒன்பது மாசம் எத்தனையோ இருக்கு”,என்றவள் அந்த சோர்வையும் மீறி அழகாய் சிரித்தாள்.

“என்னவோ போ திஷாம்மா..எது எப்படியோ நா முடிவு பண்ணிட்டேன் ஒரே குழந்தை தான் இன்னோன்னு எல்லாம் வேலைக்கே ஆகாது..ம்ம் சொல்ல மறந்துட்டேன் அப்பறமா ஸ்கூல்க்கு கால் பண்ணி வேலையை ரிசைன் பண்றத பத்தி பேசிடு டெலிவரிக்கு அப்பறம் பாத்துக்கலாம்..”

“ஏன்ப்பா கொஞ்ச நாள் வரை போறனே..வீட்ல சும்மா இருந்து என்ன பண்ண போறேன்..”

“சும்மா யாரு இருக்க சொன்னா ஒழுங்கா உடம்பை பாத்துக்கணும் அதுவே எவ்ளோ பெரிய வேலைனு தெரியும்தான..அதையும் தாண்டி மாமியாரும் மருமகளும் தான் கைவசம் நிறைய தொழில் வச்சுருக்கீங்களே இந்த பழைய படத்துல எல்லாம் வர்ற மாதிரி பாப்பாக்கு ஸ்வெட்டர் ரெடி பண்ணு..”,என்றவனை முறைக்க நினைத்து சிரித்திருந்தாள்.

அவளை சாப்பிட வைத்து வாய் துடைத்து  கட்டிலை விட்டு இறங்க விடாமல் அவனே தட்டை எடுத்துச் சென்றான்.

திஷானிக்கோ தான் செய்ய நினைந்திருந்த தவறு இப்போது தெளிவாய் புரிந்தது.எத்தனை பாசமும் அன்புமாய் இருப்பவனிடம் கூட சொல்லாமல் என் பிள்ளையை என்ன செய்ய பாத்தேன்..கடவுளே!!!என்றவள் சட்டென தன் வயிற்றைப் பற்றிக் கொண்டள்.

இப்படியாய் ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் முதல் ஸ்கேனுக்காக அவளை வர சொல்லிருக்க அபினவோடு கிளம்பிச் சென்றாள்.

காலை அப்பாயிண்மெண்ட் தான் கிடைத்திருந்ததால் கஷ்டப்பட்டு அவள் சென்றிருக்க அப்டமண் புல்லா இருந்தா தான் ஸ்கேன் ரிப்போர்ட் கரெக்டா இருக்கும் நிறைய தண்ணி சாப்ட்டு வாங்க..இதுக்கு மேல முடியாதுனு நினைக்குறப்போ சொல்லுங்க ஸ்கேன் எடுக்கலாம் என நர்ஸ் கூறிச் சென்றார்.

அபினவ் காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவளிடம் கொடுக்க சிறிது சிறிதாய் பருக ஆரம்பித்தவளுக்கு பாதி பாட்டிலுக்கு மேல் குடிக்க முடியாமல் திணறினாள்.அதையும் இதையும் கூறி அபினவ் அவளை தண்ணீரை காலி பண்ண வைத்தான்.

ஒருபுறம் தண்ணீர் குடித்தது வயிற்றைப் பிரட்ட மறுபுறம் இயற்கை உபாதை படுத்தியது.அவள் நேரத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டிருந்த இருவர் வந்திருக்க காத்திருக்க வேண்டியதாய் போனது.

அவள் நிலையுணர்ந்தவன் அவள் கையை தன்னோடு பற்றிக் கொண்டு மெதுவாய் வருடியவாறே அழுத்தி அவளின் நிலையை சாதாரணமாக்க முயற்சித்தான்.ஒரு வழியாய் அவர்களின் முறை வர திஷானியை உள்ளே அழைத்துச் சென்றனர்.

பத்து பதினைந்து நிமிடம் கழித்து வெளி வந்தவள்,”அபிப்பா ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் முடில..அவங்க ரிப்போர்ட் தரேன்னு சொன்னாங்க நீங்க வாங்கிட்டு டாக்டர் ரூம்க்கு போங்க நா வரேன்..”,என்றவள் பதிலுக்கு காத்திராமல் சென்றாள்.

அவள் கூறியபடி ரிப்போர்ட்டை அவனிடம் கொடுக்க அவள் வரும்வரை காத்திருக்க முடிவு செய்தவன் ரிப்போர்ட்டை பார்வையிட பார்த்தவனின் கண்கள் ஓர் இடத்தில் அவனறியாமல் நிலைகொண்டது.

திஷானி அவனருகில் வந்ததை கூட உணரமால் அவன் அதை பார்த்திருக்க மெதுவாய் அருகில் அமர்ந்தவள் அவன் தோள்பற்றி,”என்னங்க எதுவும் ப்ரச்சனை இருக்கா..பாப்பாக்கு எதுவும் ப்ராப்ளமா?”,என பதட்டமாய் அவள் கேட்டாள்.

சட்டென உணர்வு பெற்றவன்,”அடச்சே லூசு நா இன்னும் டாக்டரையே பார்க்கல..வேற ஒண்ணு பத்துட்டு இருந்தேன்.இருந்தாலும் கன்பார்மா தெரில டாக்டரையே கேட்போம் வா..”,என்று அழைத்துச் சென்றான்.

ரிப்போர்ட்டை கையில் வாங்கிய மருத்துவரை ஒரு வித ஆர்வத்தோடு அபினவ் பார்க்க பயத்தோடு பதட்டமாய் திஷானி பார்த்தாள்.

“வெல் கங்க்ராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிஸஸ் அபினவ்..உங்களோட டூவின் பேபிஸ் அவங்க நாட்களுக்கான வளர்ச்சியோட நல்லாயிருக்காங்க..”,என்றவர் சிரிக்க திஷானி அபினவின் கையை இறுகப் பற்றிக் கொண்டள்.

அவள் கரத்தை அழுந்தப் பற்றியவன் அவள் மனவோட்டத்தை கணித்தவாறு டாக்டரிடம்,”தேங்க் யூ டாக்டர்.அண்ட் திஷாவோட ஹெல்த் ஓ.கே தான?ட்வின் பேபிஸ் அவளால??”

“ஷி இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட் அபினவ்..இப்போ மார்னிங் சிக்னஸ்னால டயர்டா இருக்காங்க மந்தஸ் ஆக ஆக அதெல்லாம் சரியாயாய்டும்.மத்தபடி கவலை படுறதுக்கு ஒண்ணுமில்ல.அண்ட் இன்னொரு விஷயம் நார்மல் டெலிவரிக்கு பாசிப்லிட்டீஸ் கண்டிப்பா கம்மி தான்.பிகாஸ் அவங்க இடுப்பு எலும்பு எந்தளவு உறுதியா இருக்கும்னு சொல்ல முடியாது..அதனால நோ வொரீஸ்..”

“டாக்டர் சிசிசேரியனா??”,என தயக்கமாய் அவரையும் திஷானியையும் அவன் பார்க்க லேசாய் முறுவலித்தவர்,

“மிஸ்டர் அபினவ் எந்த காலத்துல இருக்கீங்க..சீசெக் எல்லாம் இந்த காலத்துல ஒரு விஷயமே கிடையாது.நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இருக்குறவங்க கூட வலி பொறுக்க முடியுமா சிசேரியன் பண்ணிக்க தான் அடம் பிடிப்பாங்க..சோ பயபடாம பேரண்ட் ஹுட்டை என்ஜாய் பண்ணுங்க ரெண்டு பேரும்..

அடுத்த செக்அப் வர்ற வர போட வேண்டிய டேப்லெட்ஸ் எல்லாம் எழுதி தரேன்..விடாம போட்டுக்கனும் திஷானி..டயட் நார்மலா உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சாப்டுங்க..ஒரு மூணு மாசம் முடியுற வரை நல்லாவே ரெஸ்ட் எடுங்க..ரெண்டு குட்டீஸ் இல்லையா ரொம்பவே கவனமா இருக்கணும் சரியா?”,என தன் கடமையாய் அனைத்தையும் கூறி அனுப்பினார்.

திஷானிக்கு இன்னுமுமே நடப்பதை நம்ப முடியாமல் வயிற்றில் லேசாய் கை வைத்தவாறே வெளியே நடக்க அபினவோ இன்னதென சொல்ல முடியாத ஒரு நினைவில் இருந்தான்.காரினுள் நுழைந்த அடுத்த நொடி அவளை இறுக அணைத்துக் கொண்டான்.அப்போதுதான் தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவள் வாய் திறக்க எத்தனிப்பதற்குள் அவள் கழுத்து வளைவை நனைத்திருந்தது அவளவனின் கண்ணீர்..

“என்னங்க என்னாச்சு என்ன இது சின்னபுள்ளை மாதிரி..இங்க பாருங்க.. நல்லாயிருக்கேன்னுதான டாக்டர் சொன்னாங்க அப்பறம் ஏன் இப்படி பண்றீங்க..அபிப்பா..”

மெதுவாய் அவளைவிட்டு பிரிந்தவன் முகத்தை சீர்படுத்திக் கொள்ள அவனுக்கு தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.

“திஷா பேபி சத்தியமா நா எப்படி பீல் பண்றேன்னு எனக்கு தெரில..ஒருபக்கம் சந்தோஷமா இருக்கு இன்னொருபக்கம் சிசேரியன் அது இதுனு எனக்கு பயமா இருக்கு பேபி..”

“இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரில..ஒண்ணு இல்ல ரெண்டு புள்ளைக்கு அப்பா ஆகப் போறீங்க..இப்படியா பயப்படுவீங்க..இதெல்லாம் புள்ளை வர்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்..”,என்றவள் தன் முகச் சிவப்பை மறைக்க தலையை திருப்பிக் கொண்டாள்.

“அடிப்பாவி என்னவோ உனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லாத மாதிரி பேசுற..ஒரு சின்ன பையனை இப்படியெல்லாம் கலாய்க்குறியே”,என்றவன் சிரிக்க அவன் முகமுமே சற்று தெளிவடைந்திருப்பதாய் தோன்றியது.

வீட்டிற்கு வந்தவன் சாரதாவையும் ராகவனையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான்.”ம்மா நீதான் அவளை ஒழுங்கா பாத்துக்கணும்.ஹெல்தியா சமைச்சு கொடுக்கணும் அப்பறம் எப்போ எப்படி நடந்துகக்கணும்னு பாத்துக்கோ..

ப்பா நீங்க அம்மாக்கு ஹெல்ப் பண்ணணும் அம்மாவ தனியா வேலை செய்ய விடாம கூடஇருந்து அவங்களை கவனிச்சுசச்சணும் புரியுதா??”

“எல்லாம் காலக் கொடுமைடா சரிதான் இன்னும் ஒரு ஒன்பது மாசம் உன் படுத்தல் கொஞ்சம் ஓவராதான் இருக்கும் போலவே பேசாம நா எதாவது ஆன்மீக டூர் போய்ட்டு வரேன்”,என்று ராகவன் சிரிக்க சாரதாவோ,

“டேய் ஓவரா பண்ணாத டா வரப்போறது உனக்கு பிள்ளைங்கனா எங்களுக்கு பேரப் பிள்ளைங்க உன்னை விட பல மடங்கு பொறுப்பு எங்களுக்குத் தான் இருக்கு தெரிஞ்சுக்கோ..அதெல்லாம் நாங்க பாத்துப்போம் நீ போய் உன் ஆபீஸ் வேலையை ஒழுங்காப் பாரு”,என்று அவன் காலை வாரினார்.

திஷானியின் தாய்க்கு விஷயத்தை கூற அவரும் தம்பியும் அவளைப் பார்க்க வந்திருந்தனர்.

“சம்மந்தி என்ன தான் இருந்தாலும் அம்மா வீடுனா தனி தானே அவளுக்கும் எங்களோடஇருக்கணும்னு ஆசை இருக்கும் இல்லையா நாள் பர்த்து அவளை ஒருபத்துநாள் அங்க அழைச்சுட்டு போய்ட்டு வரேனே..”,என அவர் சாதாரணமாய் கூற அபினவிற்கோ முகம் விளக்கெண்ணை குடித்தார் போல் ஆனது.தன்னவளை தலைத் திருப்பி பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேண்டாம்னு சொல்லு என அவன் விழிகளால் பேச அவனையே பார்த்திருந்தவள்,”ம்மா இப்போதைக்கு வேண்டாம் மா அப்பறமா நா வரேன்.அங்கே வந்தா நீ தான் தனியா பாத்துக்கணும்.இங்கனா இவங்க எல்லாரும் இருக்காங்கல..”,எனக் கூறி முடிக்க அபினவோ கண்களால் அவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.

பெரியவர்கள் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க காதல் ஜோடிகளோ எதையும் கண்டு கொள்வதாய் இல்லை.அவர்கள் கிளம்பியவுடன் அறைக்கு வந்தவளை தன் அணைப்பில் வைத்தவன்.,

“தேங்க் யூ டீ கருப்பழகி..”

“எதுக்கு??”

“ம்ம் உனக்கு தெரியாதா??”

“ஒரு வாரம் நா போய்ட்டு தான் வரேனே..நீங்களும் ஜாலியா இருப்பீங்க தான?”

“”ஒரு வாரமா!!அவ்ளோ ஈசியா போச்சா உனக்கு..சும்மாவே உன்னை விட்டு நகர மாட்டேன் இப்போ நீங்க மூணு பேரும் என்னைவிட்டு அங்க இங்க நகரவே முடியாது தெரிஞ்சுக்கோ..”

“என்னை ஒரு வழி ஆக்காம விடமாட்டீங்கனு மட்டும் தெரியுது..ஆனா மனசு நிறைஞ்சு இருக்குங்க..எப்படி சொல்றதுனு தெரில..வயிறை தொட்டு பாக்கும் போதெல்லாம் ஒரு மாதிரி புல்லரிக்குது..”

பேசியபடியே அவன் கையை எடுத்து வயிற்றின் மேல் வைத்துக் கொண்டாள்.அவனுக்குமே அதே நிலைதான்.இரத்தமும் சதையுமாய் இரு உயிர் இந்த சிறு வயிற்றில் கடவுள் படைப்பின் அதிசயங்களில் உச்சகட்டமென தோன்றியது.

அதன் பின்னான நாட்கள் திஷானிக்கு அத்தனை உடல் உபாதைகளையும் தாண்டி மனதை உற்சாகமாகவே வைத்திருந்தது.அபினவின் காதலில் முங்கித் திளைப்பது ஒருபுறம் எனில் சாரதாவும் ராகவனும் மகளாய் அவளை தாங்கிக் கொண்டனர்.

சாரதாவின் கவனிப்பில் ஓரளவு தேறி வந்தவளுக்கு சற்று மேடிட்ட தன் வயிற்றை பார்த்து பார்த்து பூரித்துப் போனாள்.

நான்காவது மாத ஆரம்பத்தில் செக் அப்பிற்குச் செல்ல மருத்துவரின் அறையில் நாற்காலியில் அபினவ் அமர்ந்திருக்க தடுப்பு திரைக்குப் பின் திஷானியை செக் அப்பிற்கு அழைத்துச் சென்றார் மருத்துவர்.

சில நிமிடங்களில் வித்தியாசமான ஒரு ஒலி அறையை நிறைக்க அபினவ் என்னவோவென திரையை வெறிக்க உள்ளிருந்து மருத்துவர் குரல் கொடுத்தார்.

“சார் உங்க பேபிஸோட ஹார்ட் பீட்..ரெண்டு பேரும் சமத்தா இருக்காங்க ஓ.கே தான”,என்றவர் திஷானியை பார்த்து புன்னகைத்தார்.

அந்த ஒலி நின்ற பிறகும்கூட அபினவின் காதுகளில் அது தொடர்ந்து கொண்டேயிருந்தது…அதன்பின் டாக்டர் கூறிய அனைத்தையும் மூளை வாங்கிக் கொண்டாலும் மனம் முழுவதும் ஒருவித உற்சாகம் கரைபுரண்டு ஓடியது அவனுக்கு.

வீட்டிற்கு வந்த பின்பு தாய் தந்தையிடம் அதை பற்றி பேசி பேசி ஓய்ந்து போனான்.அறைக்குள் வந்த பின்பு திஷா செல்லமாய் அவன் தலை தட்டினாள்.

“சத்தியமா உங்க அட்டகாசம் தாங்கவே முடில அபிப்பா..ஹார்ட் பீட் கேட்டதுக்கே இப்படினா அடுத்த ஸ்கேன்ல பாப்பாவையே பாக்க போறோமே நீங்க என்ன பண்ணுவீங்க?”

“திஷா பேபி எனக்கு அதை நினைச்சா வயித்துல பால் பாலா உருளுது..பாக்கணும்னு ஆசை இருந்தாலும் அதெல்லாம் ஒரு மாதிரியான பீலா இருக்கு..”,என்றவனுக்கு பேசும் போதே உடல் சிலிர்த்தது.

திஷானி அவனை வகையாய் பெரியவர்களோடு சேர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

அடுத்ததாய் அந்த நாளும் வந்தது காலையிலிருந்தே அபினவிற்கு இருப்பு கொள்ளவில்லை.யாருடனும் ஒழுங்காக கூட பேசமால் பதட்டத்தை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.திஷானிக்கோ சிரிப்பை அடக்குவதே பெரும்பாடாய் இருந்தது எதற்கும் கவலைபடாமல் சுற்றித் திரிபவன் ஒரு ஸ்கேனிற்கு இந்த பாடு படுகிறானே என நினைத்து நினைத்து ரசித்தாள்.

மருத்துவமனைக்குச் சென்று அவர்கள் முறை வந்ததும் திஷானியை மட்டும் உள்ளே அழைக்க சற்றே நிம்மதிதான் அடைந்தான் என்று கூற வேண்டும்.வெளியில் நாற்காலியில் அமர்ந்திருந்தவனை பத்து நிமிடம் கழித்து நர்ஸ் வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

திஷானி அவனையே பார்த்திருக்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரையும் டாக்டரின் கணீர் குரல் நடப்பிற்கு அழைத்து வந்தது.

“வைப்பை வீட்ல போய் ஆசைதீர பாருங்க குழந்தையை பார்க்க ஆசை இல்லையா இங்க பாருங்க உங்க குட்டீஸ் இரண்டும் சமத்தா தூங்கிட்டு இருக்காங்க”,என்றவற்றை காதில் வாங்கியவாறு திரையை பார்த்தவனுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது.

இரண்டு பிஞ்சுகளும் ஒன்றையொன்று பார்த்தவாறு விழிமூடி படுத்திருந்தன..டாக்டர் ஒவ்வொரு பகுதியாய் காட்டி இது மூக்கு இது கண் இது வாய் என்றவர் கைகள் அருகில் வந்த நேரம் சற்றே சிரித்தவாறே,

“ம்ம் ரெண்டு பேரும் திக் ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டாங்க போலயே கையை பிடிச்சுட்டு இருக்குறத பாருங்க”,என திஷானியை பார்த்து சிரித்தார்.

லேசாய் விரல்களை அணைத்தவாறு இருந்ததை பார்த்தவனுக்கு அதற்குமேல் உள்ளே நிற்கத் தோன்றாமல் எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் என வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.

திஷானி மெதுவாய் வெளியே வர அவனை பார்த்தவளுக்கு அவனின் சிவந்த கண்கள் மனதை மேலும் உருக்கியிருந்தது..

ஒன்றும் பேசாமல் கேன்டீனிற்கு அழைத்துச் சென்றவள் மெதுவாய் அவனருகில் அமர்ந்தாள்.

“வர வர நீங்க ஏன் இப்படி ஆய்ட்டீங்க அபிப்பா..”

“தெரில திஷாம்மா இரண்டு உயிர் கைகோர்த்து கால் சுருக்கி அதை பார்க்க பார்க்க என்ன சொல்லனே தெரியாம நின்னேன் இதுல டாக்டர் வேற பேபிஸ் தூங்குறாங்க ப்ரெண்ட்ஸ் ஆய்டாங்கனு என்னென்னவோ சொன்னப்போ..”,எனும்போதே கண்கள் தானாய் ஆனந்தத்தில் கலங்கியது..

“ரிலாக்ஸ்ங்க..நானே என்ன நிலைமைல இருக்கேன் தெரியுமா இந்த குட்டி இடத்துல இரண்டு பேர் ஷேர் பண்ணிட்டு என்ன அழகா தூங்கி எழுந்து விளையாடினு எத்தனை எத்தனை அழகான விஷயம் இல்ல..அதுவும் எனக்கு இதெல்லாம் நடக்குறது கனவு மாதிரி இருக்குங்க..

உங்களுக்கு என்னை பிடிச்சுதுங்கிற ஒரு விஷயம் என் மொத்த வாழ்க்கையையும் எப்படி மாத்திருக்குனு உங்களுக்கு புரியுதா..அதையெல்லாம் நினைச்சு சந்தோஷப்படுறத விட்டுட்டு இப்படி கண்கலங்கிட்டு இருக்கீங்க..இது உங்களுக்கு செட்டே ஆகல..”,என இதழ் சுழித்துக் கூற சற்றே தன்னை மீட்டெடுத்தவன் அவளின் இதழில் பார்வையை பதித்தவாறே கரெக்ட் திஷா பேபி எப்படியெல்லாம் செலெப்ரேட் பண்ணணும் இந்த மொமண்டை அதை விட்டு நா ஏன் உன்ன மாதிரி வொர்ஸ்ட் ஆய்ட்டேன்…ச்ச வா வா போலாம்..”

“அய்யே தெரியாம சொல்லிட்டேன் ஆளை விடுங்க”,என்றவள் சலுகையாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode