மலர்-28

by ஸ்ரீ
3 comments 404 views
A+A-
Reset

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

மு.வ விளக்க உரை: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

குளித்துத் தயாராகி கீழே வந்தவள் மெதுவாய் சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி படிகளில் இறங்க முத்துப் பாண்டி தனது வழக்கமான இடத்தில் அமர்ந்து பேப்பர் படித்து, இல்லை படிப்பது போல் எதோ யோசனையில் இருந்தார்.

“கடைக்கு கிளம்பலையா ப்பா?”

“போணும் லே..”, என்றவர் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. ஐந்து நிமிடம் அவர் அருகிலேயே அமர்ந்தும் அவர்போக்கில் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருக்க ஏமாற்றத்தில் அழுகை வந்தது மங்கைக்கு.

அவர் இரண்டு வார்த்தை திட்டியிருந்தால் கூட தாங்கியிருக்க முடியும் ஆனால் இந்த அமைதி மங்கையை வலுவிழக்கச் செய்தது.

அடுத்ததாய் சாப்பாட்டு மேசை பக்கம் செல்ல உணவருந்திக் கொண்டிருந்த மாறனும் இனியனும் ஒரு சேர அவளைத் தவிர்க்கும் விதமாய் எழுந்து சென்று விட்டிருந்தனர்.

மனதைத் திடப்படுத்தியவளாய் தனது அண்ணனைத் தேடி அவனது அறைக்குச் செல்ல அங்கு கன்னிகா மட்டுமே இருந்தாள்.

“அண்ணி அண்ணன் இல்லையா?”

“அவர் காலையிலேயே கடைக்குப் போயிட்டார் மங்கை.”

“ஓ!”, என்றவள் சோர்வாய் சமையலறைக்குச் செல்ல அங்கு குணவதியோடு விஜயலட்சுமி வேலையைக் கவனித்திருந்தார்.

“சித்தி..”

“வா பாப்பா. சாப்பிடுறியா?”

“உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா?”

“எனக்குத் தெரியலையே பாப்பா..”

“!!”

“உன் பேச்செல்லாம் சரியா தான் இருந்தது. ஆனால் நாங்க எல்லாம் எங்க புருஷங்க சொல்றதுக்கு சரி சொல்லியே பழகிட்டோமே. இப்பவும் அவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு தான் தலையாட்டணும்.”

“இங்கே பிரச்சனை ஆனாலும் ஒரு விதத்தில் நீ உன் அத்தைகிட்ட தான் போக போறனு நினைச்சு நிம்மதி எனக்கு. எல்லாம் நல்லதா நடக்கும். நீ கலங்காத என்ன..”

“ம்ம்”, என்றவள் தாயைப் பார்க்க அவர் தலையைத் திருப்பாமல் அழுது கொண்டு இருந்தது நன்றாகவே தெரிந்தது. காலையில் எழுந்த போது இருந்த உற்சாகம் மொத்தமாய் வடிந்து போக அமைதியாய் வெளியேறிவிட்டாள்.

தாத்தாவை மட்டும் சென்று பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அமைதியாய் பின்கட்டின் படியில் அமர தோட்டத்தைப் பார்த்தவளுக்கு முகுந்தனோடு அன்று காதலைப் பேசிய தருணங்கள் மனதை இதமாக்கியது.

“மங்கை..”

“வா அப்பத்தா..”

“என்ன முகமே சரியில்லை.”

“யாருமே என்னோட பேசலை கிழவி. திருமா அண்ணே கூட என்னைப் பார்க்காம கடைக்குப் போயிட்டான்.”

“இப்போ தான் ஆரம்பம் இதுக்கே கலங்கினால் எப்படி டி?”

“!!!”

“உனக்கு எதிரா அவங்க எடுக்குற ஆயுதம் தான் இதுவா இருக்கும். தைரியமா இரு. எங்கே போயிறப் போறாங்க..”

“ம்ம் அப்பத்தா. நீ இப்படி அனுசரணையா என்கூட பேசுற என்னால நம்பவே முடியலை.”

“அதானே உன் கொழுப்பு குறையுமா.”, என்றவர் முதுகில் அடித்துச் சென்றார்.

வீட்டில் அனைவரோடும் இந்த கண்ணாமூச்சி அடுத்து வந்த நாட்களும் தொடர அடுத்த  மேட்ச் சென்னையில் நடக்கவிருக்க இரு தினங்களுக்கு முன் மங்கை கிளம்ப வேண்டிய நேரம் மாறன் கடையிலிருந்து வந்திருந்தான்.

“ம்மா அவ கிளம்பிட்டானால் வர சொல்லு ஸ்டேஷனில் விட்டுட்டு வரேன்.”

“என்ன புதுசா? எப்பவும் நான் தானே போவேன்.?”

“எல்லாமே இங்கே புதுசா தான நடக்குது. சென்னை தான் போறியா இல்லை வேற எங்கேயுமானு யாருக்குத் தெரியும். நான் இங்கே ஏத்தி விடுவேன். அங்கே கார்த்தி வருவான். போலாமா ஆயிரம் வேலை இருக்கு எனக்கு.”, என்றதில் முனுக்கென கண்ணீர் தரை தொட்டது மங்கைக்கு.

“வரேன் மா..”

“பார்த்து போயிட்டு வா கண்ணு.”, என்றவருக்கு மகளை நினைத்து மனம் பாடாய் பட்டது.

இந்த நாட்களில் இங்கு நடந்த எதையுமே முகுந்தனிடம் கூறியிருக்கவில்லை. அனைத்தும் சாதாரணமாய் இருப்பதாகவே காட்டிக் கொண்டாள்.

சென்னையில் அவளை அழைத்துச் செல்வதற்காக கார்த்திகேயன் காத்திருக்க போலிப் புன்னகை முகத்தை நிறைக்க அவனோடு பேசியபடி நடக்க ஆரம்பித்தாள்.

“அப்பறம் புது மாப்பிள்ளை எப்படியிருக்கீங்க? டேட் குறிச்சாச்சா?”

“நான் இருக்குறது இருக்கட்டும். எவ்வளவு நடந்துருக்கு ஒண்ணும் சொல்லலை நீ?”

“அதான் உன் அருமை நண்பனுங்க எல்லாம் சொல்லிருப்பானுங்களே அப்பறம் என்ன மாமா?”

“பாப்பா..”

“ப்ளீஸ் மாமா எப்படியும் வீட்டில் அத்தை ஆரம்பிக்கும் அப்போ பேசிக்கலாமே..”, எனும் போதே முகுந்தனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வர இயல்பாய் அழைப்பை ஏற்றவளாய்,

“வந்துட்டேன் தங்கம். கார்த்தி மாமாவோட தான் போயிட்டு இருக்கேன். உன் அண்ணன்கிட்ட பேசுறியா?”, என்றவள் கார்த்தியைப் பார்த்து கண்சிமிட்ட அவளது தலையில் லேசாய் தட்டியவனாய் கார்த்தி போனை வாங்கிக் கொண்டான்.

“வாட்ஸ் அப் ப்ரோ?”

“கார்த்தி எப்படியிருக்க?”

“நல்லாயிருக்கேன். நீ எப்படியிருக்க?”

“நான் நல்ல இருக்கேன் கார்த்திக். நம்பவே முடியலை நாம இவ்வளவு க்ளோஸ் ரிலேட்டிவ்ஸா இருப்போம்னு.”

“ம்ம் நானும் நினைக்கவே இல்லை. எனிவே ஐ அம் சோ ஹேப்பி முகுந்தன். சீக்கிரமே நாம மீட் பண்ணலாம்.”, என்றதற்கு முகுந்தன் பதிலளித்து விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

போனமுறை இருந்த உற்சாகம் துளியும் இன்றி வீட்டினுள் நுழைந்தாள் மங்கை. கலைச்செல்வியும் தாமோதரனும் ஹால் சோபாவில் அமர்ந்திருக்க இருவருக்கும் லேசாய் கையைத் தூக்கி ஹாய் என்று செய்கை செய்தாள்.

“என்ன அத்தை நான் வந்தது பிடிக்கலைனால் சொல்லு அப்படியே கிளம்புறேன்.”

“ம்ம் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. வாடி. ரொம்ப பண்ணாத.”, என்றதில் மங்கைக்கு மொத்தமாய் வருத்தமாகி விட்டது.

“எப்படியிருக்கீங்க மாம்ஸ்?”

“நீ எப்படியிருக்க?”

“அவளுக்கென்ன நல்லா தான் இருப்பா..”

“ம்மா!?”

“என்ன டா அம்மா? நானும் பேசக் கூடாதுனு தான் நினைச்சேன். ஆனால் வீட்டில் எல்லாரையும் அந்தப் பேச்சு பேசினியாமே. உனக்கு சப்போர்ட்டு எங்கம்மா வேற”

“நான் பேசினதில் எது தப்புனு சொல்ற நீ?”

“பெரியவங்களை நிக்க வைச்சு கேள்வி கேட்குறதே தப்பு தான். அவங்க அவங்க சூழ்நிலையும் நியாயமும் அவங்கவங்களுக்கு. என்னவோ உன் அத்தைக்கும் அத்தை பையனுக்கும் ரொம்ப பேசிட்டு வந்தியாமே?”

“உன் அக்காகாக தான அத்தே பேசினேன். அதுக்கே இப்படி சொல்ற. நியாயமா நீ தான் இதெல்லாம் பண்ணிருக்கணும்.”

“நான் ஏன் பண்ணணும்? என்னைப் பத்தி அவ கவலைப்பட்டாளா? அவ பண்ணின காரியத்தால என் படிப்பு போச்சு. எதோ உங்க மாமா நல்லவரா இருக்கப் போய் என் பிழைப்பு ஓடிச்சு. இல்லைனால் என் நிலைமை? அதெல்லாம் யாரும் யோசிக்கலையே?”

“அதை யோசிச்சதுனால தான் விஷயத்தை நேரா வந்து வீட்டில் சொல்லிருக்காங்க. அவங்க நினைச்சுருந்தா அப்படியே சொல்லாம கொள்ளாம போயிருக்க முடியும் தான?!

“போயிருக்க வேண்டியது தான. யாரு வேண்டாம்னு சொன்னது. அத்தை அத்தைனு என்னை சுத்தி வந்த உன்னையே இவ்வளவு பேச வைச்சுட்டாளே!”

“இப்பவும் உன்கிட்ட இருக்குற உரிமையில் தான் இவ்வளவு தூரம் பேசுறேன்னு உனக்கு ஏன் புரியலை அத்தே. என்ன இருந்தாலும் அவங்க உன் கூட பிறந்தவங்க தான? அந்த பாசம் கொஞ்சம் கூட இல்லையா?”

“நான் பாசமே இல்லாத கொடுமைக்காரியாவே இருந்துட்டு போறேன் டி. வந்துட்டா பெருசா.. எங்கப்பாவே மன்னிச்சாலும் நான் அவளை மன்னிக்க மாட்டேன். என் படிப்பு கனவு எல்லாமே பாழா போனதுக்கு அவ தான் காரணம்.”

“சும்மா அதையே சொல்லாத. நீ இப்போ சொன்னதை வைச்சே கேட்குறேன். மாமா நல்லவரு தான அவர்கிட்ட கேட்டு படிச்சுருக்க வேண்டியது தான? ஏன் படிக்கலை?”

“!!”

“அவங்க மட்டும் என்ன படிப்பை முடிச்சுட்டா போனாங்க அவங்க புருஷன் தான் படிக்க வைச்சார். பிஜியும் சேர்த்து முடிச்சு இன்னைக்கு காலேஜில் வேலையும் பார்க்குறாங்க.

உனக்கு படிக்கணும்னு எண்ணம் உறுதியா இருந்திருந்தா எப்படியிருந்தாலும் படிச்சுருக்கலாம். எதோ கண்மண் தெரியாத கோபத்தை புடிச்சு தொங்கிகிட்டு இருக்காத அத்தே.

அங்கே உன் அண்ணனுக்கும் அப்பாவுக்கும் சொன்னதை தான் உனக்கும் சொல்றேன். இருக்குற கொஞ்ச காலமும் உறவு சொந்தம்னு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா அன்பா குடும்பமா இருந்து சந்தோஷமா வாழ்ந்து செத்துப் போயிடணும்.

இருக்குற அப்போ எல்லாம் கரிச்சு கொட்டிகிட்டு போன அப்பறம் இலை நிறைச்சு படையல் போட்டு ஒரு ப்ரயோஜனமும் கிடையாது சொல்லிட்டேன்.

உனக்கு அண்ணிங்க நல்லவங்களா இருக்குறதுனால இப்படி பேசுறியா தெரியலை. உன் அண்ணனுங்க பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுறவங்களா இருந்துருந்தா உனக்கு கடைசி வரை இருக்கப் போற ஒரே சொந்தம் உன் அக்கா தான்.

சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். பார்த்துக்கோ. நீங்க தப்பா நினைக்காதீங்க மாமா”, என்றவள் தனது பையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட கலைச்செல்வி அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டார்.

“எப்படி பேசுறா பாருங்க?!”

“ஒரு வகையில் அவ சொல்றதெல்லாம் சரி தான செல்வி.”

“என்னங்க? நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க.”

“அப்படியில்லை. இப்போ எனக்கும் என் தங்கச்சி குடும்பத்துக்கும் வராத சண்டையா ஆனா இப்போ சம்மந்தியாகலையா? அது மாதிரி தான் உன்னை யாரும் போய் உறவு கொண்டாட சொல்லலை. அதே நேரம் அவங்களாவே திரும்ப வரும் போது எதுக்கு பழசை யோசிச்சுட்டு இருக்கணும்.

அவங்க அளவுக்கு அதிகமாகவே தண்டனை அனுபவிச்சுட்டாங்கனு தோணுது. இதுக்கப்பறமாவது அவங்களை நிம்மதியாக வாழ விடுறதில் தப்பில்லை தானே.

எனக்கு தோணுறதை சொல்லிட்டேன். உனக்கு எது சரினு படுதோ பண்ணு”, என்றவர் எழுந்து சென்றுவிட கார்த்திக் மெதுவாய் மங்கையின் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

குளிப்பதற்காக பையிலிருந்து உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவள் அவனைப் பார்த்து புன்னகைக்க,

“குளிச்சு சாப்பிட்டுட்டு நாம வெளியில் போலாம் பாப்பா. வந்துரு.”

“சரி மாமா இதோ வந்துரேன்.”, என்றவளைப் பார்க்க பாவமாய் இருந்தது கார்த்திகேயனுக்கு.

இந்த வயதில் இத்தனை முதிர்ச்சியாய் அனைவரையும் சேர்த்துப் பார்க்க நினைக்கும் அவளது எண்ணம் பிரம்மிப்பாய் இருந்தது.

வந்து உணவை முடித்தவள் அமைதியாகவே உணவைப் பரிமாறிய அத்தையைக் கட்டிக் கொண்டாள்.

“நீ நல்லவ அத்தே. ஏன் சீரியல் வில்லி மாதிரி பேசிட்டு இருக்க. இதெல்லாம் உனக்கு செட் ஆகாது. அவங்களால தான் உன் படிப்பு போச்சுனு நீ நம்புறனால் அதுக்கான தண்டனையை அவங்க அளவுக்கு அதிகமாகவே அனுபவிச்சுட்டாங்க. மறப்போம் மன்னிப்போம் செல்லம்.”, என்றவள் கன்னத்தில் இதழ் பதித்து ஓடியிருந்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

suganyavel July 29, 2026 - 12:49 pm

Nice👍

Kavi Natarajan July 29, 2026 - 1:42 pm

Nice ud ma

srichitra July 30, 2026 - 5:46 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode