3
“காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
கவிதை பாடி வந்தேன்
“காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையில் மேகலை நடனமாடிடும்
ஊக்கத்தில் ஓடி வந்தேன்
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே”
எங்கோ ஒலித்தப் பாடலில் உடல் நடுங்கித் தூக்கிப் போட அதன் வரிகளை உள் வாங்கியவளுக்கு ஓவென அழ வேண்டும் போல் இருந்தது.
அவளரறியாமல் கத்த வாயெழுந்த நேரம் சூழ்நிலை கருதி இரு கை கொண்டு வாயை அழுந்த மூடிக் கொண்டாள்.
மனம் மொத்தமும் கண்ணா கண்ணா என அரற்றிக் கொண்டிருந்தது.
கண்ணனின் மனைவியாய் வாழும் தனக்கு வேறொரு ஆண்மகனுடன் திருமணம் என்று நினைக்கும் போதே அடிவயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர வாயை மூடிக்கொண்டு வேகமாய் பின்புறம் சென்றாள்.
தண்ணீரால் முகத்தை எத்தனை முறை துடைத்தும் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டேயிருந்தது.
தற்செயலாய் சத்தம் கேட்டு அங்கு வந்த வேதவல்லியோ மகளின் நிலை பார்த்து பயந்து போனார்.
“கிருஷ்ணா என்ன டீ இது கோலம்.. கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு..”,என்றவர் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு தன் மாமியாருக்குத் தெரிந்தால் மீண்டும் பிரச்சனை செய்வார் என்றறிந்து மகளை அழைத்துக் கொண்டு அவளறைக்குச் சென்று கதவைத் தாழிட்டார்.
அதுதான் தாமதமென தாயைக் கட்டிக் கொண்டு கதறினாள் ராதா.
“கிருஷ்ணா மா.. என்ன டா ஏன் இப்படி அழறாய்.. அம்மாக்கு பயமா இருக்குறது.. என்னனு சொல்லு மா..”
“ம்மா…இந்த கல்யாணம்…வேண்டாம் மா…”
“நேக்கும் தான் பிடிக்கலை ஆனா என்ன பண்றது உன் அப்பா இப்படி வாக்கு கொடுத்து வைப்பார்னு யாருக்குத் தெரியும்?
ஆனா அதுக்காக ஏன் இப்படி அழறாய்..எப்படியிருந்தாலும் ஒருநாள் நீ கல்யாணம் ஆகி ஒருத்தர் ஆத்துக்குப் போக வேண்டிய பொண்ணு தானே.. இதுக்காகவா இப்படி அழுதுண்டு இருக்காய்..”
“ம்மா…ம்மா..நான்..நான் கண்ணணோட மனைவி மா…அவனைத் தவிர வேற ஒருத்தரை என்னால எப்படிமா…”,என்று கதறத் துடித்தவள் மீண்டுமாய் வாயை மூடிக் கொண்டாள்.
“கிருஷ்ணா!!!!”
“நான் அவனுக்காக பிறந்தவ மா…என் கண்ணணுக்காகப் பிறந்தவள்…அவன் தான் மா என் வாழ்க்கையே…
என் கைப் பிடிச்சு நடந்தான். எனக்காக எதுவும் செய்வான்..என் மேல உயிரையே வச்சுண்டு இருக்கான் மா…
அவன் இல்லாத ஒரு வாழ்க்கை…இல்லை.. நான் செத்துருவேன் மா…”
“கிருஷ்ணா உன்னை இன்னும் நாங்க குழந்தையா நினைச்சுண்டு இருக்கோம்..
நீ இத்தனை பெரிய வார்த்தையெல்லாம் பேசுறாயே…அவன் உன்னைவிட சின்னவன் ராதா.. அவனை எப்படி…அப்பாவே இதுக்கு ஒத்துக்க மாட்டார்.”
“ம்மா..ம்மா..அப்படி சொல்லாதே மா..உன்னை கெஞ்சி கேட்குறேன்…என் கண்ணனை மட்டும் என்னன்ட கொடுத்துருங்கோ…நேக்கு வேற எதுவுமே வேண்டாம்..ப்ளீஸ் மா…மா..”
பைத்தியமென அரற்றுபவளைப் பார்த்தவருக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
தலையில் அடித்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு அப்படியே அமர்ந்துவிட்டார்.
பெரும் அமைதி அந்த அறையையே சூழ்ந்திருக்க இருவரும் ஆளுக்கொரு புறமாய் எங்கோ வெறித்திருந்தனர். அழுதழுது ஓய்ந்து போயிருந்தாள் ராதா.
கதவு தட்டும் ஓசையில் அதிர்ந்து எழுந்தவள் தாயைப் பார்க்க அவரோ அவளைப் படுக்குமாறு கூறி போர்வையைப் போர்த்திவிட்டு தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவை திறக்க ராமன் தான் நின்றிருந்தார்.
“ரெண்டு பேரும் உள்ளே கதவை பூட்டிண்டு என்ன பண்றேள்?”
“ஏன் னா கத்துறேள்.அவளுக்கு தலை வலினு படுத்துருக்கா.. நான் புடவை மாத்தனும்னு இப்போ தான் உள்ளே வந்தேன்.”
“என்னாச்சு உன்னோட கோவிலுக்குப் போகும் போது நன்னாதானே இருந்தா?”,என்றவாறு மகளைத் தொடப் போனவரை தடுத்தவராய்,
“தூங்குறா னா.. எழுப்பிறாதேள்.. வாங்கோ வெளிலே போய் பேசலாம்.”,என்று அவரை வெளியே அழைத்து கதவைச் சாத்திவிட்டு வந்தார்.
“ஏன் னா இன்னும் ஒரு தடவை யோசிக்கப்டாதா?கிருஷ்ணாவோட விருப்பத்தையும் ஒரு தடவை கேட்டுண்டா நல்லது தானே.”
“இதென்னடிம்மா புதுக்கதை… உன் ஆம்படையான் என்னனா உன்னைக் கேட்கனும்னு சொல்றான்.
நீ உன் அருமை மகளைக் கேட்கனும்னு சொல்றாய்.. இதெல்லாம் நல்ல குடும்பத்து மனுஷா பண்ற காரியமா நேக்குத் தெரியலை”
“ம்மா நீங்க வேற ஏன் எதாவது சொல்லி அவர் கோபத்தை அதிகப்படுத்துறேள்.
கல்யாணம் பண்ணி வாழப்போறவ அவ தான்.நம்ம காலம் மாதிரியா அவா நாலெழுத்து படிக்குறா..
நல்லது கெட்டது கேட்கணும் இல்லையா.. அதனால தான் சொன்னேன்..”
“இங்க பாரு வேதா..நம்ம ஆத்து பொண்ணுக்கு நல்லது கெட்டது எதுனு நமக்குத் தெரியும்.
இத்தனை வருஷம் வளர்த்த நேக்குத் தெரியாத நல்லதா அவளுக்குத் தெரியப் போறது.
அதுமட்டுமில்லாம கிருஷ்ணா என் பொண்ணு என் பேச்சை எப்பவும் மீற மாட்டா.. புரிஞ்சோண்டியா?
போ போய் அவளுக்கு எதாவது வேணுமானு கவனி..குழந்தை சட்டுனு கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சவுடன் பயந்துருப்பா..
போ..நான் போய் அத்திம்பேரைப் பார்த்து பேசிட்டு வந்துட்றேன்.”, என்றவர் வெளியே சென்றுவிட வேதவல்லியோ இருதலை கொள்ளியாய் தவித்துக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணணும் ஊரிலில்லை அதுமட்டுமன்றி அவனே பேசினாலும் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்வார் தன் கணவர் என்பது தெரியவில்லை.
வயதிலிருந்து வசதி வரை அனைத்துமே ஒத்துப் போகவில்லையே எனத் தனக்குள் தவித்துக் கொண்டிருந்தார்.
மகளைப் பார்க்கும் சக்தி சுத்தமாய் இல்லை என்று உணர்ந்தவருக்கு ஒன்றும் ஓடவில்லை.
இருந்தும் மகளுக்காக ஏதேனும் நல்லது நடந்துவிடாதா என அந்த அரங்கநானை மனமாற வேண்டினார்.
சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த ராமனின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி..
“வேதா..என் பொண்ணு எத்தனை அதிர்ஷடகாரி பார்த்தியா..பத்து வந்து விஷயத்தை சொன்ன போது கொஞ்சம் தயக்கம் இருந்தது.
அதுக்கு முக்கிய காரணம் அத்திம்பேர் தான். என்ன சொல்லுவாரோனு நினைச்சேன்.
ஆனா இப்போ என்னன்ட எத்தனை நிறைவாய் பேசினார் தெரியுமா..
எங்களுக்குப் பெண் குழந்தை இல்லாத குறையை ராதா தீர்த்து வைப்பா..
இன்னொரு தாய் தகப்பனாய் இருந்து அவளை நாங்க நன்னா பார்த்துக்குறோம்னு சொன்னார்.
இருந்த கொஞ்ச நஞ்ச கலக்கமும் போய்டுத்து நேக்கு.இனி முழு திருப்தியோட கல்யாண வேலையைப் பார்க்க வேண்டியது தான்.
வர்ற வெள்ளிக்கிழமை நாள் நன்னாயிருக்காம் அன்னைக்கேத் தட்டு மாத்திண்ட்ரலாம்னு சொல்லிருக்கார்.
படிப்பு முடிய சரியா ஒரு மாசம் இருக்கோன்னோ அதையடுத்து வர்ற முகூர்த்தம் இவா ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் நன்னா பொருந்தறதாம்.
அப்போவே கல்யாணத்தை வச்சுண்டரலாம்னு சொல்லிட்டார்.”
“ஏன்னா சொல்றேன்னு தப்பா நினைக்காதேள்.எல்லாமே அவசர அவசரமா நடக்குறா மாதிரி இருக்கு.
படிப்பை முடிச்சு கொஞ்ச நாள் அவ ஆத்துல இருக்கட்டுமே அதற்குப் பிறகு இந்த பேச்சை எடுக்கப்டாதா?”
“ஒரு அம்மாவா உன் நிலைமை புரியறது வேதா..ஆனா கல்யாண வேளை கூடி வந்தா எல்லாம் இப்படி தான் நடக்கும்.
அது மட்டுமில்லாம அபிமன்யூ ஜாதகப்படி இப்போ கல்யாணம் பண்ணலேனா இன்னும் இரண்டு வருஷத்துக்கு கல்யாண யோகம் இல்லையாம்.
எல்லாம் விசாரிச்சு தான் பத்து என்னன்ட பேச வந்துருக்கா..
கவலைப்படாதே.. ஒரு ஒருத்தரை போல நீ என்ன பொண்ணை கண் காணா இடத்துக்கா அனுப்பப் போறாய்.
நினைச்சா போய் பக்கத்துத் தெருவில் பார்த்துட்டு வரப் போறாய்.
எத்தனை பேருக்கு இந்த கொடுப்பனை கிடைக்கும் சொல்லு.
தேவையில்லாததை யோசிக்காம சந்தோஷமா ஆக வேண்டிய வேலையைப் பார் வேதா..”
“இல்லை னா அது வந்து..நம்ம கண்ணன்..”
“ம்ம் இந்த நேரம் பார்த்து இந்த கண்ணன் ஊரிலில்லாமல் போய்ட்டான்.
ராதாவோட கல்யாணம்னு சொன்னா நம்மை விட அவன் தான் இன்னும் சந்தோஷப்படுவான்.
அடுத்து அவனுக்கும் இது மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுடுத்துனா ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
நல்ல பிள்ளை..”,என்று வேதவல்லியை பேச விடாமல் அவரே தன்போக்கில் பேசிச் சென்றார்.
மகளின் திருமணம் என்ற மகிழ்ச்சி அவரிடத்தில் நன்றாகவேத் தெரிந்தது.
கடவுள் என்ன செய்ய காத்திருக்கிறார் என்று தெரியாமல் வேதவல்லி தான் குழம்பித் தவித்தார்.
இரவு அனைவரும் உறங்கச் சென்று விட வழக்கம் போல் தன் வேலையை முடித்துவிட்டு தனதறைக்குச் செல்ல நினைத்தவர் ஏதோ ஒரு உந்துதலில் ராதாவின் அறைக்குச் சென்று பார்த்து வரலாம் என செல்ல கதவு உட்புறமாய் பூட்டப்பட்டிருந்திருந்தது.
சட்டென ஏதோ விழுந்த சத்தமும் வேறு கேட்டது.
சர்வமும் அடங்கிப் போனவராய் கதவைத் திறக்க முயற்சிக்க அந்த காலத்து கதவென்பதால் சற்று அழுத்தித் தள்ளியதிலேயே திறந்து கொண்டது.
அங்கு அவர் கண்ட காட்சியில் இதயம் துடிப்பதே ஒரு நொடி நின்றுவிட்டிருந்தது.
மின்விசிறியில் தன் புடவையைக் கட்டியிருந்தவள் அதில் அப்படியே தொங்கியிருக்க அவள் ஏறியிருந்த முக்காலி விழுந்திருந்தது.
பதட்டத்தை ஒதுக்கியவர் அப்படியே அவள் காலைப் பிடித்திருந்தார்.
ஒரு கையால் அந்த முக்காலியை எடுத்து அவளின் காலடியில் வைத்துவிட்டு அவசரமாய் அவளை கீழே இறக்கியிருந்தார்.
“பாவி பொண்ணே என்ன காரியம் செய்யத் துணிஞ்சுட்ட..
இதுக்காகவா உன்னை இத்தனை வருஷம் என் கண்ணுக்குள் வச்சு வளர்த்துண்டு வரேன்.
ஒரு நொடியில் எங்களை அநாதை ஆக்கிட்டு போய்டலாம்னு நினைச்சுட்டாய்..இல்லை??”
“ம்மா…முடில மா…நான் வேற என்ன செய்யட்டும்..”
“கிருஷ்ணா!!”
“நீயும் அப்பாவன்ட என் நிலைமையை புரிய வைக்க முயற்சி பண்ணிண ஆனா எதுவும் நடக்கலையே மா..
உனக்கே இத்தனை தவிப்பு இருக்கும் போது அப்பா முகத்தைப் பார்த்து என்னால பேச முடியும்னு நினைக்குறாயா?
அதனால தான் இந்த முடிவெடுத்தேன்.இந்த ஒருநாளே வாழ்க்கையில் நரகமா இருக்கச்சே வாழ்க்கை முழுசும் எப்படிமா வாழ முடியும்.. வேண்டாம் மா என்னை விட்டுரு…”,என்றவள் அவர் மடியிலேயே விழுந்து அழுதாள்.
இதற்குமேலும் தான் திடமாகப் பேசவில்லை எனில் மகள் எப்போது வேண்டுமானாலும் எதுவும் செய்து கொள்வாள் என்று அறிந்தவர் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு ராதாவை எழுப்பி அமர வைத்தார்.
“கிருஷ்ணா இன்னொரு முறை இந்த மாதிரி ஒரு பைத்தியக் காரத்தனத்தை பண்ண மாட்டேன்னு அம்மாவுக்கு சத்தியம் பண்ணு.”
“….”
“சத்தியம் பண்ணு கிருஷ்ணா.. இந்த அம்மா மேல துளியேனும் பாசம் வச்சுருக்காய்னா இப்போவே சத்தியம் பண்ணு..”
உதடு துடிக்க அவரைப் பார்த்தவளுக்கு சற்றும் இரக்கமில்லா பார்வையை பதிலளித்தவர் கையை நீட்டியவாறே இருக்க மனதேயில்லாமல் அவர் கை மேல் தன் கை வைத்து அழுத்தினாள் ராதா.
“இதோ பார்..உன் அப்பாவை எதிர்த்து பேசுற திறன் நேக்கும் இல்லை..நோக்கும் இல்லை..
அதைவிட இந்த விஷயம் உன் அத்தைக்கும் பாட்டிக்கும் தெரிய வந்தா நரம்பில்லாத நாக்கால் பேசியே உன் அப்பாவை சாகடிச்சுருவா.
எல்லாத்துக்கும் மேல கண்ணன் மேல அப்பா வச்சுருக்க பாசமும் மரியாதையும் மொத்தமா போய்டும்.
நம்பிக்கைத் துரோகிங்கிற பட்டம்தான் அவனுக்கு மிஞ்சும்.இதுக்குத் தான் நீ ஆசைப்படுறாயா ராதா?”
“நீ சொல்ற எல்லாமே நேக்குப் புரியறது மா..அதனால தான் ஒரு பேச்சு கூட பேசாமல் உயிரை விடத் துணிஞ்சேன்.ஏன் மா ஏன் நேக்கு இப்படியெல்லாம் நடக்கணும்.
சின்ன வயசுலேருந்து நீங்க தானே என்னை கிருஷ்ணா கிருஷ்ணானு கூப்டுவேள்.
என் பேரிலேயே இருக்குற அவனை எப்படி மா என்னால மறக்க முடியும்.
மனசார நான் அவன் மனைவி மா.. அப்படியிருக்க இன்னொருத்தர் கட்ற தாலியை எப்படி என்னால் ஏத்துக்க முடியும்..
உடம்பெல்லாம் கூசறது மா…”,என்றவள் மேலும் அழுதாள்.
தன் மகளுக்கு அழத் தெரியும் என்பதே இப்போது தான் தெரிந்தது வேதவல்லிக்கு.
இவள் நிலைமையே இப்படி எனில் விஷயம் அறிந்த பின் கண்ணணின் நிலைமை!!
ஒன்றுமில்லாமல் இருப்பவனுக்குப் பற்றுகோல் ஒன்றைக் கொடுத்து அதைப் பாதியில் பறித்துக் கொள்ளும் இறைவனின் ஆட்டத்தை என்னவென்று சொல்ல!!!
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!