ராதை-10

by ஸ்ரீ
1 comment 11 views
A+A-
Reset

“என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசைக் கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை”

அந்த வருடத் திருவிழாவிற்கு கிருஷ்ணனை மேடைக் கச்சேரிக்காக அழைத்திருக்க அவனது பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

விழா ஒருங்கிணைப்பாளர்கள் மனமுவந்து அவனுக்காக கணிசமான ஒரு தொகையை ஊதியமாய் வழங்கினர்.

மகிழ்ச்சியோடு அதை எடுத்து வந்தவனுக்கு தன் முதல் வருமானத்தில் தன்னவளுக்காக ஏதேனும் வாங்க வேண்டும் என்று தோன்ற ராதாவிற்கு கண்ணாடி வளையல்கள் என்றால் கொள்ளை பீரியம் என்பதை அறிந்தவனாய் அவளுக்குப் பிடித்த நிறங்களில் இரண்டு டசன் வளையல்களை வாங்கி வந்தான்.

கல்லூரிக்குச் சென்றதும் அவளிடத்தில் அதை கொடுக்க எண்ணியவனாய் பொட்டலத்தில் கட்டியிருந்ததை நீட்ட ஆர்வமாய் அதை வாங்கிப் பிரித்தவளின் முகம் இன்னும் மகிழ்வாய் மலர்ந்து விட்டிருந்தது.

“ரொம்ப நன்னாயிருக்கு… ஆமா இதை வாங்க நோக்கு பணம் ஏது?”

“நேத்து திருவிழால பாடினதுக்கு சம்பளமா கொஞ்சம் பணம் கொடுத்தா.. என் முதல் சம்பளத்துல நோக்கு எதாவது வாங்கணும்னு தோணித்து.. உடனே போய் வாங்கிட்டேன்..

நேக்கு எப்பவுமே உன் வளையல் சத்தமும் கொலுசு சத்தமும் ரொம்ப பிடிக்கும் ராதா.

எத்தனை கூட்டத்தில் நீ இருந்தாலும் உன் சத்தம் மட்டும் நேக்குத் தனியா தெரியும் அது எப்படினு இப்போ வரையும் புரியல..”

“கண்ணா..எப்பவும் என் மேல இதே அன்போட இருப்பாய்தான?”

“என்ன கேள்வி இது?”

“இல்லை கோபப்படாதே.. ஏனோ கேட்கணும்னு தோணித்து.. வாழ்க்கையில் எந்த நிலைமையிலும் என்னை மட்டும் வெறுத்துடாதே..”

“பைத்தியம்..போ ஆசை ஆசையா வாங்கிண்டு வந்தா என்னென்னவோ பேசிண்டு இருக்காய்..”என்றவன் விளையாட்டாய் முகத்தைத் திருப்பிக் கொள்ள ராதாவோ சட்டென சிரித்திருந்தாள்.

அழகான இயல்பான குழந்தை தனம் நிறைந்த ஒரு உறவாய் உடனிருக்கும் நொடிகளெல்லாம் முதல் முறை பார்த்ததைப் போன்ற பரவசத்தைக் கொடுத்தது இருவருக்கும்.

இப்படியான சூழ்நிலையில் படிப்பு முடிய ஒரு மாத காலமே இருந்த நிலையில் அவனுக்குக் கொடுத்த சினிமாத் துறை நபரின் எண்ணுக்கு அழைத்துப் பேசினான் கிருஷ்ணன்.

அவரோ அவனை மெட்ராஸிற்கு வருமாறு அழைத்தார். இங்கு வந்து சிலரை நேரில் பார்த்துப் பேசினால் தான் வாய்ப்பு கிடைக்கும்.

முதலில் வந்து சந்தித்து விட்டுச் சென்றால் கூட போதும் அதன்பின் படிப்பு முடித்த விடுமுறையில் மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

ராதாவிடம் விஷயத்தைக் கூற ஏனோ அவளுக்கு கிருஷ்ணனை அங்கு அனுப்புவதற்கு மனம் வரவில்லை.

அவனது லட்சியம் அதுதான் எனத் தெரிந்தும் ஏதோ ஒன்று அவளுக்கு ஒருவித பயத்தை அளித்தது.

இருந்தும் அவனிடம் ஒன்றும் கூறாமல் தந்தையிடம் கூறி அவன் மெட்ராஸ் செல்வதற்கான செலவுக்குப் பணம் வாங்கிக் கொடுத்தாள்.

அவன் கிளம்பும் நாளில் எத்தனை முயன்றும் அடக்க மாட்டாதவளாய் தனிமையில் சந்தித்தவனிடம் அழுதுவிட்டிருந்தாள்.

“என்ன மா..இப்படி குழந்தையாட்டம் அழுதா என்னால எப்படி போக முடியும். அதிகபட்சம் நாலு நாள் ஓடியே வந்துருவேன்.”

“தெரில கண்ணா மனசு ஏதோ ஒரு மாதிரியா இருக்குறது.. ஏதோ ஒண்ணு நடக்கப் போறதா தோண்றது.

சரியா சொல்லத் தெரியலை.. இப்படியெல்லாம் இருந்ததே இல்லை…இன்னைக்குத் தான்…”

“என்ன ராதா என்னென்னவோ சொல்றாய்..அப்போ நான் போகலை..

இத்தனை குழப்பத்தில் உன்னை விட்டுட்டு அங்கே போனால் எனக்கும் நிம்மதி இருக்காது.”

சட்டென அவனை அணைத்துக் கொண்டவளின் எதிர்பாரா தீண்டலில் தடுமாறியவன் நொடிப்பொழுதில் சுதாரித்து அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான்.

“ராதாம்மா..”

“கண்ணா நான் எப்பவும் கேட்குறது தான்..வாழ்க்கையில் நான் எந்தநிலையில் என்ன தப்பு பண்ணிணாலும் என்னை வெறுத்துறாதே..

எது எப்படியிருந்தாலும் இந்த ராதா உன்னையே ஒவ்வொரு பொழுதும் நினைச்சு ஜெபிச்சுண்டு தான் இருப்பா..”

“இங்க பாரு…என்னைப் பாரு ராதா…. இந்த லோகமே அழியப் போற நிலையிலும் அந்த கடைசி நொடியிலும் என் மனம் உச்சரிக்குற ஒரே பெயர் உன்னோடது தான்.

நீ தான் என் சர்வமும்.இதுக்கு மேல எப்படி உனக்கு சமாதானம் சொல்றதுனு தெரியலை.”, என்றவன் அவள் நெற்றியில் அழுந்த இதழ் பதித்து விடுவித்தான்.

ஒரு வழியாய் தன்னவளை சமாதானப்டுத்தி அவளிடம் விடைபெற்று ஊருக்குக் கிளம்பியிருந்தான் கிருஷ்ணன்.

அவன் சென்ற அடுத்த நாள் ராதா தன் தாய் வேதவல்லியோடு கோவிலுக்குச் சென்றிருந்த நேரம் பத்மினி தன் மகனோடு ராமனைச் சந்தித்துப் பேச வந்திருந்தார்.

“வா பத்து..என்ன காலையிலேயே புள்ளையையும் அழைச்சுண்டு வந்துருக்காய்?”

“ஏன் ணா நம்ம ஆத்துக்கு நான் வரப்டாதா?”

“அட அப்படி யாரு சொன்னா.. இது உன் ஆம் எப்போ வேணா வரலாம் பத்து..”

“ம்ம் அண்ணா ஒரு நல்ல காரியத்தைப் பத்தி பேசலாம்னு வந்துருக்கேன்.

நம்ம ராதாக்கு படிப்பு முடிய போறது.. அடுத்து அவ கல்யாணத்தைப் பத்தி என்ன யோசிச்சுருக்காய்?வரன் ஏதேனும் பார்த்துருக்கியா?”

“இல்ல மா..இனி தான் ஆரம்பிக்கணும். அவளன்டயும் ஒரு வார்த்தை கேட்கனுமே..”

“என்ன ணா இது புது பழக்கமா இருக்கு..அவ சின்ன குழந்தை அவளுக்கு என்னத் தெரியும்.

பெரியவா நாம தான் குழந்தைகளுக்கு தேவையானதைப் பார்த்து பண்ணனும்.”

“அதுவும் சரி தான்.அவ இன்னும் குழந்தையா தான் இருக்கா..”

“அண்ணா என் மனசுல ரொம்ப நாளாவே இருக்குற ஒரு விருப்பம்..

நம்ம உறவு கடைசி வரையும் பிரியாம இருக்கணும்னு தான் இதைச் சொல்றேன்.

உன் தங்கையான என்னை உன் சம்மந்தியா ஏத்துப்பியா?”

“பத்து!!”

“என்ன ணா நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?”

“இல்லை இல்லை அதெல்லாம் இல்லை..இத்தனை நாள் இப்படி ஒரு யோசனை நேக்குத் தோணவேயில்லையே.. நம்ம அபிமன்யூக்கு இதில் சம்மதமா?”

“என்ன அண்ணா இப்படி கேட்டுட்டாய்..தங்கசிலை மாதிரி இருக்குற என் மருமகளை கட்டிக்க அவனுக்குக் கசக்குமா..

என்ன டா அமைதியா இருக்காய்?!மாமா கேட்குறாரோனோ வாயைத் திறந்து பேசு..”

“மாமா நேக்கு ராதான்னா ரொம்பவே இஷ்டம்.. அவளை கல்யாணம் பண்ணிண்டா ரொம்ப நன்னா பார்த்துப்பேன்..”

ராமனுக்கோ மகளையும் மனைவியையும் நினைத்து யோசனையாய் இருந்தது.

ஆனால் அதைப் புரிந்து கொண்ட பத்மினியோ அவரின் யோசனைக்கு எப்படி தடை போடலாம் என்று நினைத்தவராய்,

“என்ன ணா ஏதோ யோசிக்குற மாதிரி இருக்கு..அம்மா அப்பா காலத்துக்கு அப்பறம் நேக்கு இருக்குற ஒரே பொறந்தாத்து சொந்தம் நீ தான்.

நாளை பின்ன வாழ்க்கை குழந்தைகளுக்காக எப்படி வேணா மாறிடும். நம்ம சொந்தம் விட்டுப் போய்டுமோனு நேக்கு கவலையா  இருக்கு ணா..

எத்தனை நாள் இதை நினைச்சு தூக்கம் இல்லாம தவிச்சுருப்பேன் தெரியுமா!

ஒரு அண்ணா வா நீ எனக்கு பண்ணிணதெல்லாம் நம்ம ராதாக்கு நான் பண்ணி அழகு பார்க்கணும் ணா..”,என்றவர் வராத கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்ள அதில் இருந்த சிறு குழப்பமும் பறந்துவிட்டிருந்தது ராமனுக்கு.

“என்ன பத்து குழந்தையாட்டம் அழுதுண்டு இருக்காய்…நேக்கு மட்டும் என் பொண்ணு என் தங்கை ஆத்து மருமகளா போறதில் விருப்பமில்லாம போகுமா..

இருந்தாலும் உன் மன்னியையும் ஒரு வார்த்தை கேட்கனும் இல்லையா?!

“அதுக்கென்ன ணா தாராளமா கேளு.. கேட்டு நல்ல பதிலா சொல்லு..”,எனும் நேரம் உள்ளிருந்து வெளிவந்த அவர்களின் தாயார்,

“பேசினதெல்லாம் கேட்டுண்டு தான் இருந்தேன்.. ஏன் டா நீ எப்போ பொண்டாட்டி தாசனானாய்.. அவளன்ட கேட்டு தான் எல்லாம் முடிவெடுப்பாயா?

என் பேரனுக்கு உன் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க இத்தனை யோசிப்பியா..

இதோ பாரு டீ இங்க மதுரை ஆட்சி தான் நடக்கற்து..அவ என்ன சொல்றாளோ அதான் சட்டம்..

நீ வந்து அண்ணன் தங்கை பாசம் கொண்டாடிண்டு இருக்காய்..போ போ போய் புள்ளைக்கு வேற நல்ல இடமா பாரு..”

“ம்மா இப்போ ஏன் சின்ன விஷயத்தை இத்தனை பெருசாக்குறாய்?

நாங்க ஏதோ பேசிண்டு இருக்கோம்.. ஏதேதோ பேசி சண்டை மூட்டி விடாதே..”

“ஆமாம் டா நான் பெத்த பிள்ளைங்களை நானே சண்டை போட தூண்டுறேன்…

நேக்கு வேற வேலையில்லை பாரு..நீ பெரிய மனுஷனாய்டாய் என்ன வேணுமோ பேசு..”,என்றவர் கோபத்தோடு உள்ளே சென்றுவிட ராமனோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

“மன்னிச்சுரு ணா..நான் வந்த நேரம் தான் சரியில்லை.நீ சங்கடப்பட்டுக்காதே..

நேக்கு கிடைச்ச ப்ராப்தம் அவ்ளோ தான்னு நினைச்சுக்குறேன்..”

“நீயும் உன் பங்குக்கு என்னை நோகடிக்காதே பத்மினி..இப்போ என்ன என் பொண்ணை உன் மாட்டுப் பொண்ணாக்கிகனும் அவ்வளவு தானே..

ஒரு நல்ல நாளா பார்த்து தட்டு மாத்திக்கலாம் போதுமா..”

“அண்ணா..என்னால நம்பவே முடியலை..அவ்வளவு சந்தோஷமா இருக்கு..

இப்போவே போய் அடுத்த முகூர்த்தத்தைப் பார்க்குறேன். நிச்சயம் பண்ணின்டு படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுப்போம்..

வாடா அபிமன்யூ மாமா காலில் விழுந்து சேவிச்சுக்கோ…”,என்றவர் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்ப வாசலில் ராதாவும் அவள் தாயும் வருவதைக் கண்டார்.

“என் தங்கம்..என் ஆத்து மாட்டுப்பொண்ணா வரப் போறாய் எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமோ..

சீக்கிரம் இந்த அத்தை ஆத்துக்கு வந்துரு டீ குழந்தே..”,என்றவர் நகர அபிமன்யூவோ வெற்றிச் செருக்கோடு அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துச் சென்றான்.

ராதாவுக்கும் வேதவல்லிக்கும் ஒன்றும் புரியவில்லை அவசரமாய் மகளை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவர் கூடத்தில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த கணவரின் அருகில் சென்றார்.

“ஏன்னா பத்து என்னென்னவோ சொல்லிண்டு இருக்கா?என்ன நடக்குது இங்கே..”

“அடுத்து நீ ஆரம்பிக்காதே வேதா..எல்லாரும் சேர்ந்து மனுஷனை வதைக்காதேள்.”

“என்ன நடந்துதுனு தானே கேட்குறேன்..”,என்றவருக்கு நடந்தவற்றை ராமன் விளக்க வேதவல்லிக்கு அதிர்ச்சி எனில் ராதாவிற்கோ காலின் கீழ் பூமி நழுவுவதைப் போன்ற உணர்வு.

தான் சரியாகத் தான் கேட்டோமா!என்ன கூறிவிட்டார் தந்தை.. என்ன நடக்கிறது..

ஒரு நொடியில் வாழ்வே அஸ்தமித்துப் போய்விட்டதே என என்னென்னவோ யோசித்தவள் ஒன்றும் கூறாமல் பிரமை பிடித்தவளாய் தனதறைக்குச் சென்று அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள்.

இங்கு வேதவல்லியோ மாமியாரின் மீதிருந்த கோபத்தையும் சேர்த்து ராமனிடம் காட்டிக் கொண்டிருந்தார்.

“இப்போ என்ன பண்ணணும்னு சொல்றாய்..நம்ம கிருஷ்ணாக்கு வரன் பார்க்குற உரிமை நேக்கு இல்லையா..

நான் பெத்த மகள் தானே அவள்..இப்படி ஆளாளுக்கு என்னைப் படுத்துறதுக்குப் பதில் ஒரேடியா நேக்கு காரியம் பண்ணிடுங்கோ நிம்மதியாப் போய் சேர்றேன்”,என்று கத்திவிட வேதவல்லியோ அவரின் வார்த்தையில் காயம் பட்டவராய் கண்ணீரோடு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

Hii

Jemila Paul November 23, 2026 - 7:27 am

Pls sri ma story start panninathula irunthu pakku pakku nu than irukku adhulla endha lakshmi vediye thangala edhula jodi ah pirichu குண்டு pottutathinga plsssss 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode