மறுநாள் காலையிலேயே ஸ்ரீகாந்தின் தாய் தந்தை தங்கையோடு வந்திருந்தனர்.குழந்தையை பார்த்து மகிழ்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்தவர்கள் ஏதோ பேச்சு வர ஸ்ரீகாந்தின் தாய் பட்டென மரகதத்திடம்,

“ஆனாலும் சம்மந்தி எங்க குடும்பத்துலயே இதுதான் முதல் பெண் வாரிசு.எங்க எல்லாருக்குமே முதல் குழந்தை பையன்தான் பிறந்துருக்கு.அதுவும் போக எல்லாருக்குமே சுக பிரசவம் தான்.

ம்ம் என்ன பண்றது ஒவ்வொருத்தர் உடல்வாகு போல..வேலை வெளி சாப்பாடுனு உடம்பு போய்டுது..நானெல்லாம் அதனாலேயே என் பொண்ணுக்கு சத்தானதாதான் சமைச்சு கொடுக்குறேன்.”

இருந்த உடல் வலியில் அவர்களின் பேச்சு வேறு எரிச்சலை  வரவழைத்திருந்தது மதுவிற்கு.அவள் ஸ்ரீகாந்தை முறைக்க நிலைமை உணர்ந்தவனாய் குழந்தை பசியாறட்டும் என்று கூறி அவர்களை வெளியே அழைத்துச் சென்றான்.

மரகதம் குழந்தையை எடுத்து அவள் கையில் கொடுக்க அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள்.

“இப்போ இவங்களுக்கு என்ன பிரச்னையாம்.செத்து பொழச்சு வந்துருக்கேனேனு கொஞ்சமாவது கவலை இருக்கா..அவங்க பொண்ணை நல்லா கவனிச்சுக்குறாங்களாம்.அப்போ நீ என்னை ஒழுங்கா கவனிக்கலையா..

கடைசி நிமிஷம் சிசேரியன் ஆச்சுனா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்.இவங்க இப்போ என்னை பார்க்க வரலைனு கேட்டேனா..இருக்குற வலி இவங்க வேற.ஸ்ஸ் ஆ அம்மா பாரும்மா இவ ஒழுங்காவே ஃபீட் எடுக்க மாட்றா பல்லே இல்ல இப்படிகடிச்சு வைக்குறா வலிக்குதும்மா.ஸ்ட்ரிச்போட்ட இடத்தை வேற உதைச்சுட்டே இருக்கா..மொத்தமும் ரணம்..”,என்றவள் அழ ஆரம்பித்திருந்தாள்.

“மது அம்மானா சும்மா இல்லடா எல்லாத்தையும் தாங்கித் தான் ஆகணும் கொஞ்சம் பொறுத்துக்கோ டா..டாக்டர் வரட்டும் என்ன பண்றதுனு கேக்கலாம்..”,என்றவர் சமாதானப் படுத்திவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கண்ணீர் வடித்தார்.

எத்தனை செல்லமாய் வளர்ந்த மகள் அத்தனையும் சாதாரணம் தான் என்றாலும் தன் மகள் படும் வேதனையை அவரால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.இருந்தும் அவள் முன் உடைந்து விட கூடாது என்று எண்ணியவறாய் தன்னை தேற்றிக் கொண்டு வெளியே வந்தார்.

டாக்டரிடம் பிரச்சனையை கூற பால் புகட்டும் போது உபயோகிக்க ஷீல்ட் ஒன்றை பரிந்துரை செய்தார்.அதில்லாமல் குழந்தை பால் அருந்தினால் இன்பெக்ஷன் ஆகிவிடும் என்றும் கூறினார்.முதல் ஒரு வாரத்திற்கு குழந்தைக்கு சரியாய் பால் அருந்த தெரியாது அதன்பின் சரி ஆகிவிடும் என்று கூறினார்.

கிடைத்த தனிமையில் ஸ்ரீகாந்திடம் அழ ஆரம்பித்திருந்தாள்.

“ஸ்ரீகா முடில என்னால உன் பொண்ணு ரொம்ப படுத்துறா என்னை..”

“அழாத மதும்மா..என்ன டீ இப்படி புண் ஆகிருக்கு..பேசாம பாட்டில் பால் கொடுக்கலாம்.இதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு டீ..”

“இல்ல சிக்ஸ் மந்த்ஸ் வர ஒன்லி மதர் ஃபீட்னு தான் சொல்லிருக்காங்க..அதான் பாப்பாக்கு நல்லதாம்.”

“என்ன நல்லதோ அதுகுள்ள நீ ஒரு வழி ஆகிடுவ போலயே..உடம்பை பாத்துக்கோ மது..”,என்றவன் அவளின் கன்னம் தாங்கிக் கொண்டான்.

ஒரு வாரம் கழித்து மது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.இரவும் பகலுமாய் ஒழுங்காய் பாலும் அருந்தாமல் கண்டநேரத்தில் குழந்தை அழ ஆரம்பித்திருந்தாள்.மரகதம் தான் பல நாட்கள் முழு இரவும்கூட விழித்திருந்து குழந்தையை பார்த்துக் கொண்டார்.

அவரது கவனிப்பில் வெகுவாய் உடல் தேறிவந்தாள் மதுமிதா.சிசேரியன் என்பதால் முப்பதாம் நாள் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.அதற்குள் இரண்டு மூன்று முறை போனில் பேசியபோது குடும்பப் பெயர் குலதெய்வப் பெயர் என குழந்தை பெயரைப் பற்றி ஆரம்பிக்க நியூமராலஜி படி தாங்களே பார்த்துவிட்டதாய்கூறி அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.

“என்ன மது அம்மாகிட்ட பேரெல்லாம் நாமளே பாத்துக்குறோம்னு சொல்லிட்டியாம்?”

“ஆமா சொன்னேன் பின்ன குழந்தை பிறந்த அன்னைக்கு பாத்துட்டு போனதோட சரி பத்தாததுக்கு ஆயிரம் பேச்சு வேற..இதுல பேர் மட்டும் இவங்க சொல்றதை வைக்கனுமா..பெத்துகிட்ட எனக்கு பேர் வைக்கத் தெரியாதா..”

“சரி சரி மதும்மா விடு நா அவங்ககிட்ட பேசிக்குறேன்.. ,என்றவன் அவளை மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என முடிவெடுத்துக் கொண்டான்.

 

அடுத்து மூன்று மாத காலங்களும் தாய் வீட்டில் இருந்ததால் பெரிய அளவில் எந்த பிரச்சனையுமின்றியே கழிந்தது.குழந்தையை மது தனியாய் பார்த்துக் கொள்ளுமளவு தேறியிருந்தாள்.

நான்காவது மாதத்தில் நல்ல நாள் பார்த்து மதுவை அவள் வீட்டில் கொண்டு விடுவதாக முடிவு செய்தனர்.அடுத்த ஒரு மாதத்திற்கு அவள் மாமியார் வந்து அவளை பார்த்துக் கொள்வதாய் ஏற்பாடு.

மதுவிற்கோ கிளம்புவதற்கு முந்தைய நாள் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“என்ன டா மது சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு..”

“இல்லப்பா என் கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா சொன்னாங்களே நியாபகம் இருக்கா நமக்கு குழந்தை வந்தப்பறம் தான் அம்மாவோட அருமை தெரியும்னு அது அவ்ளோ உண்மை பா..

அம்மா இல்லாம இவளை நா எப்படி பாத்துக்க போறேனோனு கவலையா இருக்கு..ரியலி கோயிங் டூ மிஸ் யூ மா..”,என மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“மது அம்மா சொல்றத கேளு கொஞ்சம்.நீ எத்தனை ஸ்ட்ராங்கான பொண்ணு இப்படி அழலாமா..அது மட்டுமில்லாம லைஃப்ல இதெல்லாமே ஒரு ஸ்டேஜ் டா..நாம தான் ஃபேஸ் பண்ணி ஆகணும்.

மங்கயராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டுமம்மானு சொல்றாங்களே..அதுல தாய்மைங்கிறது தான் உச்சகட்ட விஷயம்.பத்து மாசம் வயித்துல சுமந்து கஷ்டப்பட்டு பெத்து எடுக்குறதோட முடியுற விஷயம் இல்ல.முதல் ஒரு வருஷம் ரொம்பவே கஷ்டமான காலம் தான்.குழந்தை எப்போ ஏன் அழறதுனு தெரியாது.பால் கொடுத்தா சாப்டாது.

அந்த நேரத்துல நமக்கே கையும் ஓடாது காலும் ஓடாது.தவழும்போது ஒரு வித பாதுகாப்பு கொடுக்கணும் எழுந்து நிற்கும் போது ஒருவிதம் நடக்க ஆரம்பிச்சா ஒரு விதம்னு குழந்தைக்கு மொத்தமும் நாம தான் டா..நம்மள நம்பி வந்த உயிர்..அதோட ஒவ்வொரு அசைவும் பெத்தவளுக்குத் தான் புரியும்.அதே மாதிரி எத்தனை பேர் கூட இருந்தாலும் அந்த குழந்தையும் அம்மாவை தான் தேடும்.

ஒரு அழகான நாட்கள் இதெல்லாம்..ஒண்ணும் பயப்படாத தேவையில்லாம யோசிக்காத..ஒவ்வொரு நிமிஷமும் குழந்தையோட என்ஜாய் பண்ணு..அதுவுமில்லாம உனக்காக மாமியார் வந்துகூட இருக்க போறாங்க அப்பறம் என்ன?”

“அதுதான் மா இன்னும் கொடுமையே..எப்போ என்ன சண்டை வருமோனு பயமா இருக்கு..வழக்கம்போல நீ சொல்றதெல்லாம் கேட்டு கொஞ்சம் தைரியமா தான்இருக்கு..பாப்போம் சமாளிச்சுருவேன்னு நினைக்குறேன்..”

மறுநாள் தன் வீட்டிற்கு வந்தவளுக்கு மனமே வெறுமையாய் இருந்தது.மாமியார் மறுநாள் வருவதால் இன்று இவர்கள் இருவர் மட்டுமே குழந்தையோடு.ஸ்ரீகாந்தும் விடுமுறை எடுத்திருக்க குழந்தையோடு தன் மொத்த நாளையும் செலவழித்தான்.

மதுவிற்கும் அதனால் ஓரளவு வேலை செய்ய நேரமிருந்தது. ஸ்ரீகாந்தின் தாய் வந்த பின்பு வேலை என்று ஒன்றும் அவளுக்கு இல்லை எனினும் அவரது பேச்சுகள் அவளை வெகுவாய் பாதித்திருந்தது.

குழந்தை பசி எடுத்து அழுதால் வேகமாய் அறைக்குள் வருபவர் மது உணவூட்டுவதை பார்த்துவிட்டு,

“இப்போ தான ஃபீட் பண்ண மது..திரும்பவும் அழறானா வயித்துக்கு போதலயோ என்னவோ.மூணு மாசம் முடிஞ்ச குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் எப்படி பத்தும்.புட்டிப் பால் பழக்கலையா நீ.உங்கம்மாவும் ஒண்ணும் சொல்லலையா.”

“அத்தை ஆறு மாசம் வரை வேற எதுவும் கொடுக்க கூடாதுனு டாக்டர் ஸ்ட்ரிக்டா சொல்லிடாங்க..அதுவும் போக எனக்கு பீட் பண்ற அளவு இருக்கும் போது ஏன் நிறுத்தனும்.”

ஒரு முறை இரு முறை கூறியவளுக்கு அதற்கு மேல் பொறுமையில்லாமல் போனது.தடுப்பூசி போட போகும்போது அவரையும் கையோடே அழைத்துச் சென்றவள் மருத்துவரிடம் கூற,

“ஏம்மா நாலு மாச குழந்தைக்கு என்ன புல் மீல்ஸ் சாப்டுற வயிறா இருக்கும் தாய்ப்பால் பத்தாம போறதுக்கு?இதுவே அவாங்களுக்கு தேவையான உணவு தான்.ஒவ்வொருத்தங்களும் குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையேனு கவலபடுறாங்க நீங்க என்னனா நல்லது பண்ற பொண்ணையும் சேர்த்து குழப்பிட்டு இருக்கீங்க..”

என்று ஒரு கொட்டு வைத்த பின்பே அமைதியானார்.இப்படி புதிது புதிதாய் ஒரு பிரச்சனை இருவருக்கும்.குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க மாட்டியா?நாட்டு மருந்துனு ஒண்ணும் கொடுக்க மாட்டியா?உங்கம்மா சொன்னாங்கனு பெருங்காயம் பூண்டு எல்லாம் மட்டும் உரசிக் கொடுக்குற.

இப்படி தினம் தினம் ஒரு பிரச்சனை மதுவிற்கோ மொத்தமாய் வெறுத்துப் போனது.அந்த கோபமெல்லாம் ஸ்ரீகாந்திடம் திரும்ப வழக்கம்போல் அவன் இரு புறமும் மாட்டிக் கொண்டு முழித்தான்.வெளியில் அழைத்துச் சென்று வந்தால் அவளுக்கு சற்று மாறுதலாய் இருக்கும் என எண்ணியவன் அந்த வார இறுதியில் அவளை அருகில் கடைக்கு அழைத்துச் செல்வதாய் கூற அவன் தாயோ,

“டேய் நீ பாட்டுக்கு கிளம்பி போனா குழந்தையை யார் பாக்குறது உன் மக வேற எப்போ எதுக்கு அழுவானே தெரியாது.வயசான காலத்துல நா என்ன பண்றது.இருக்குற ஒரு மாசமும் ஒழுங்கா பாத்துட்டு ஊர் போய் சேர்றேன்.உனக்கு புண்ணியமா போகும் டா..”

“ஏம்மா குழந்தை வர்றதுக்கு முன்னாடி என்னவோ அந்த பேச்சு பேசுன..பெத்து குடுத்துட்டு எங்க வேணா போங்க நா பாத்துக்குறேன் அது இதுனு..இப்போ என்னடானா ஒரு அரை மணி நேரத்துக்கு இந்த பேச்சு பேசுற?”

“டேய் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இந்த பேச்சு பேசுற.புள்ளையை பாத்துக்குறதை விட உங்களுக்கு ஊர் சுத்துறது முக்கியமா போச்சா..”

“ஏங்க இதுக்குதான் நா எங்கேயும் வரலனு சொன்னேன் கேட்டீங்களா..போய் வேற வேலை இருந்தா பாருங்க”,என கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள் மது.

ஸ்ரீகாந்தோ நிச்சயமாய் இது சரிப்படாது என்று தோன்ற அடுத்த நான்கு நாட்களில் அவரை ஊருக்கு அனுப்பியிருந்தான்.இன்னும் ஒரு மாதத்தில் மதுவும் வேலைக்கு சேர வேண்டிய நிலைமையில் குழந்தையை பார்க்க ஆள் தேட வேண்டிய கட்டாயம் இருவருக்கும்.

மரகதம் குழந்தையை யாரையோ நம்பி விடுவதற்கு தன்னிடம் விட்டுச் செல்லுமாறு கூறினார்.ஆனால் இருவருக்குமான ஆபீஸிற்கும் தங்கள் வீட்டிற்கும் வைரவனின் வீட்டிற்கும் தூரம் அதிகம் என்பதால் அது சரிப்டாது என்று கூறினர்.

ஆளே கிடைக்காத நிலையில் லாஸ் ஆப் பேயில் ஒரு மாதம் விடுமுறையை எக்ஸ்டெண்ட் செய்தாள் மது.அந்த ஒரு வாரத்தில் இன்னுமே அவள் நடவடிக்கைகள்  மாறியிருந்தது.

எதற்கெடுத்தாலும் ஒரு சிடுசிடுப்பு எப்போதும் சண்டை என ஸ்ரீகாந்திற்கோ ஒன்றும் புரிவில்லை.வார இறுதியில் கிடைத்த நேரத்தில் அவளை அமர்த்தி பேசிப் பார்த்தான்.

“மதும்மா என்னாச்சு இப்போ எல்லாம் நீ நீயாவே இல்ல.எதோ டென்ஷன்லயே இருக்க.என்ன உன் மைண்ட்ல இருக்கு..யாரும் எதுவும் சொன்னாங்களா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஸ்ரீகா.ரொம்ப ஸ்டெர்ஸ்டா பீல் பண்றேன்.தனியா வீட்டுகுள்ளயே குழந்தையை கவனிச்சுகிட்டு சரியான தூக்கம் இல்ல..நினைச்ச நேரம் வெளிய கூட போக முடில..லைஃபே வெறுத்து போன மாதிரி இருக்குங்க..

டெய்லி காரணமே இல்லாம அழுகையா வருது.அரைமணி நேரமாவது அழுறேன் தெரியுமா..பயமா இருக்கு ஸ்ரீகா எதாவது ப்ராப்ளமா இருக்குமோனு.”

“மது ஏன் ஏதேதோ பேசுற..அதெல்லாம் ஒண்ணுமில்ல..நாம நாளைக்கே டாக்டரை மீட் பண்ணலாம் ஓ.கே வா எல்லாம் சரி ஆய்டும் டோண்ட் வொரி.”

டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியவன் அவளை அழைத்துச் சென்றான்.அவர்கள் பேசி முடிக்கும் வரை அமைதிகாத்த மருத்துவர் பின்பு மெதுவாய் விஷயத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

“இங்க பாருங்க மது நீங்க சொல்ற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்ல அதுவும் இந்த காலத்துல.இதை போஸ்ட்பார்டம் டிப்ரஷன்னு சொல்லுவோம்.பொதுவான காரணம்னு பார்த்தா ஹார்மோன் சேஞ்சஸ் தான்.

டயர்ட்னெஸ் லேக் ஆப் ஸ்லீப் இப்படி நிறைய காரணங்கள்.அதுமட்டுமில்லாம நீங்க வொர்கிங் வுமனா இருக்குற பட்சத்துல இது இன்னும் கொஞ்சம் சிவியரா ஆகுது.எப்பவுமே எதோ ஒரு வேலை இல்ல ப்ரெண்ட்ஸ் அவுட்டிங்னு இன்டிபெண்டண்டா இருந்துட்டு சடனா வீட்டுக்குள்ளயே குழந்தையை மட்டுமே பார்த்துகிட்டு கன்டினியூஸ் ஃபீட் பண்ணிட்டு இருக்கும் போது மனசு உங்களை அறியாம ஒரு வெறுமை ஸ்டேட்க்கு போகத்தான் செய்யும்.

இதுக்கு பேமிலி மெம்பர்ஸ் கூட பல நேரங்கள்ல காரணமா ஆய்டுறாங்க..அவங்களை ஹர்ட் செய்யுற மாதிரியான சின்ன பேச்சு கூட அவங்களை பொறுத்தவரை பெரிய விஷயமா மாறிடும்.பட் அட்லீஸ்ட் முதல்லயே இந்த விஷயத்தை கண்டுபிடிச்சு இங்க வந்துருக்கீங்க.

இதை இப்படியே விட்டுருந்தா பல வொர்ஸ்ட் ஸ்ச்சுவேஷன்க்கு கொண்டு போய் விடுறதுக்கான வாய்ப்பு கூட இருக்கு.மது, முடிஞ்ச அளவு மைண்டை ஃப்ரீயா வச்சுகோங்க மெடிடேஷன் பண்ணுங்க..உங்களுக்கான டைம்னு கொஞ்சம் ஸ்பெண்ட் பண்ணுங்க.ஸ்ரீகாந்த் முடிஞ்சளவு அவங்களுக்கு வீட்டு வேலைகள்ல உதவி பண்ணுங்க.குழந்தையை பாத்துக்கோங்க.

அப்பப்போ அவங்களை கொஞ்சம் வெளில கூட்டிட்டு போய்ட்டு வாங்க.மத்தபடி நத்திங் டு வொரி..”,என்று கூறி அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு தன்னால் முடிந்த அளவு அவளை சாதாரணமாக வைத்துக் கொண்டான்.குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் கிடைக்காமல் குழந்தையை க்ரீச்சில் விட்டு செல்வதாய் முடிவெடுத்தனர்.

மரகதத்திற்கு இதில் சிறிதும் உடன்பாடு இல்லை எனினும் மகளும் மருமகனும் அவர்கள் முடிவில் உறுதியாய் இருந்ததால் ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டார்.

மது வேலைக்குச் சென்று ஒரே வாரத்தில் குழந்தைக்கு கடும் காய்ச்சல் வர இரவோடு இரவாய் குழந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் ஓடினர்.மரகதமோ மகளிடம் கத்த ஆரம்பித்திருந்தார்.

“உனக்கு பிள்ளையை விட அப்படி என்னடி வேலை முக்கியமா போச்சு.பக்குவமா பார்த்து வளர்த்த பிள்ளை ஒரே வாரத்துல எப்படி ஆயிடுச்சு பாரு.அப்படி என்ன பெரிய புடலங்கா வேலை உனக்கு பெருசா போச்சு?நீ சம்பாதிச்சுதான் இங்க கோடீஸ்வரங்க ஆக போறோமா?”

“ம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சுபோடுற.நா வேலைக்கு போறதுனால அவளுக்கு காய்ச்சல் வந்த மாதிரி பேசுற.நா வேலைக்கு போறது சம்பாதிக்க இல்ல என்னோட ஐடெண்டிடிக்காக அதை முதல்ல புரிஞ்சுக்கோ.நீ சொல்றறத பார்த்தா குழந்தைனு ஒண்ணு வந்துட்டா வாழ்க்கைல வேற எதைபத்தியும் யோசிக்ககூடாதா எனக்கான நேரமே இருக்க கூடாதா?

இவ்ளோ பேசுறியே ஏன் நீ கொஞ்ச நாள் இங்க வந்து குழந்தையை பார்த்துக்கோனு சொன்னா உன்னால முடிஞ்சுதா.உன் வீட்டை விட்டு பொண்ணு வீட்டுல இருக்க முடியாதுனு பிடிவாதம் பிடிக்குற இல்ல.நீங்க சொன்னாஅதுல அர்த்தம் இருக்கும் நா பண்ணா பிடிவாதமா?

எல்லாத்தையும் விடு உனக்கும் சரி என் மாமியாருக்கும் சரி எங்களோட பாட்டிங்க கூட இருந்தாங்க இல்ல.கஷ்டமோ நஷ்டமோ கொஞ்சமாவது உதவியா இருந்துருப்பாங்க இல்ல.நா தானியா தான கஷ்டபடுறேன்.

இரண்டுபேர்ல யாராவது ஒருத்தர் நா பாத்துக்குறேன் குழந்தையைனு ஒரு ஆறுதலுக்காவது சொன்னீங்களா?இப்போ ஏதோ ஒரு பிரச்சனைனு வந்தவுடனே முதல் ஆளா என்னை குறை சொல்ல வந்துட்ட இல்ல..

யாரும் என்னை குத்தி காமிச்சு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க வேணாம்.குழந்தையை பார்க்க கெஸ்ட் மாதிரி தான வந்துட்டு போறீங்க பாத்துட்டு கிளம்புங்க.என் பொண்ணை நானே வளர்த்துக்குறேன்”,என்றவள் கண்மண் தெரியாமல் கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட மரகதமோ கண்கலங்கிவிட்டார்.

“ஐயோ அத்தை அவளே குழந்தைக்கு முடிலனு வருத்தத்துல இருக்கா அதான் நீங்க ஏதோ சொன்னவுடனே கண்டபடி பேசுறா.பெருசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.அவளும் பாவம் தான அத்தை.வீட்டையும் பார்த்து குழந்தையும் கவனிச்சு வேலைக்கும் போறா.

நாம ஒரு செகண்ட்ல அவளை தப்பு சொல்லிட்டு போய்டுறோம்..என்னதான் சொன்னாலும் அவ அவளோட அத்தனை வேலையையும் பெர்பெக்டா தான் பண்றா.உங்களுக்கு எனக்கு என் அப்பா அம்மாக்குனு அத்தனையும் அவ தான் கவனிச்சுக்குறா.அப்படியிருக்க இப்படி சொன்னா அவளால எப்படி தாங்கிக்க முடியும்.

எல்லாத்துக்கும் மேல ஒரு அம்மாவா அவளுக்கு தான அத்தை குழந்தையை நினைச்சு இன்னும் கவலையா இருக்கும்.நீங்களே யோசிச்சு பாருங்க.நானும் உங்களை ஹர்ட் பண்றேன்னு நினைக்க வேண்டாம்.புரிஞ்சுகோங்க ப்ளீஸ்.”

“ஐயோ மாப்பிள்ள எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு எனக்கும் அவ நிலைமை புரியாம இல்ல இருந்தாலும் குழந்தைக்கு முடிலனு பாத்தவுடனே கோபம் வந்துருச்சு..விடுங்க நா போய் அவளை சமாதானப்படுத்திக்குறேன்.”

என்றவர் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்.அடுத்த ஒரு வாரத்தில் தேடி அலைந்து ஒரு வயதான பெண்மணியை குழந்தையை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர்.அவரோடு குழந்தை பழகிக் கொள்ளும் வரை மரகதம் கூட இருந்து பார்த்துக் கொள்வதாய் முடிவு செய்தனர்.

மீண்டும் மது வேலைக்கு கிளம்பும் அன்று காலை சீக்கிரமே எழுந்தவன்,”மதுடியர் எந்த வொரியும் இல்லாம ஆபீஸ் போய்ட்டு வா மதியானம் வரை நானும் இருப்பேன்.அப்பறம் பாப்பா தூங்கிருவா அதுக்கப்பறம் கொஞ்சநேரம் தான சமாளிச்சுரலாம்..கவலபடாம இரு ஓ.கே வா.உனக்கு சப்போர்டிவ்வா நா இருக்கேன்.சரியா?”

“தேங்க் யூ சோ மச் ஸ்ரீகா..நிஜமா இப்போ நீ சொல்ற இந்த வார்த்தையெல்லாம் எனக்கு எத்தனை பலத்தை கொடுக்குதுனு உனக்குதெரியாது.இப்படி ஒரு ஆதரவை மட்டும்தான் மனசு எதிர்பார்க்குது மத்தபடி எத்தனை வேலையா இருந்தலும் சமாளிச்சுருவேன்..தேங்க்ஸ் அகெயின் லவ் யூ..”,என்றவள் ஆதரவாய் தோள் சாய்ந்து கொண்டாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

suganyavel November 20, 2026 - 8:02 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode