94
அந்த வார இறுதியில் நிச்சயதார்த்தப் புடவை எடுத்துவிட்டதாய் ஸ்ரீகாந்தின் தாய் மதுவின் அம்மாவிற்கு அழைத்துக் கூறினார் அளவு ஜாக்கெட்டை வாங்கி வராததால் ப்ளௌசை கொரியர் அனுப்பி வைப்பதாகவும் மதுவிற்கு பிடித்தமாதிரி தைத்து வைத்துக் கொள்ளுமாறும் கூறினார்.
அவர் கூறியபடியே அடுத்த இரண்டு நாட்களில் கொரியர் கைக்கு கிடைத்து விட பிரித்து பார்த்தவளின் முகம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அங்கிருந்தே சமையலறையிலிருக்கும் தாய்க்கு குரல் கொடுத்தாள்.
“ ம்மா என்ன கலர் மா இது நல்லாவே இல்ல பிளவுஸ் இப்படினா புடவை எப்படி இருக்குமோ தெரியல.. எனக்கு பிடிக்கவே இல்லை மா..”
“அவங்க தான் உனக்கு என்ன கலர் பிடிக்கும்னு கால் பண்ணி கேட்டாங்க இல்ல சொல்லாம இருந்தது உன் தப்பு இப்ப வந்து அவங்கள தப்பு சொல்ற அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி தான் எடுத்திருப்பாங்க வாய மூடிட்டு ஒழுங்கா கொண்டுபோய் தைக்க கொடுத்துட்டு வா”
“அதானே நீ எப்ப தான் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருக்க..என்னவோ போ எனக்கு புடிக்கல புடிக்கல புடிக்கல”
“எல்லாம் உங்க அப்பாவ சொல்லணும் ஒரேடியா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கார்”
துணியை தைக்க கொடுத்துவிட்டு வந்தவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். வைரவன் வந்ததும் மறுபடியும் பஞ்சாயத்தை ஆரம்பித்திருந்தாள்.
“அப்பா ஸ்ரீகாந்த் வீட்ல எடுத்த புடவை எனக்கு பிடிக்கவே இல்லை நல்லாவே இல்ல எப்படிப்பா கட்ட முடியும்”
“மது கண்ணா நான் வேணா சம்பந்தி கிட்ட பேசி பார்க்கட்டுமா வேற புடவை எடுத்துக்கலாமானு கேட்கலாமா”
சமையலறையிலிருந்து வேகமாய் வந்த மரகதம்,”நான் எதாவது திட்டிற போறேன் ரெண்டு பேரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க அப்பாவும் பொண்ணும் நிச்சயத்துக்கு எடுத்த புடவையை வேண்டாம்னு சொல்லுவீங்களா? இதை தான் கட்டியாகணும் உங்க பொண்ணு செல்லம் கொஞ்சிகிட்டு மாமியார் வீட்ல எல்லாம் இருக்க முடியாது.. அப்புறம் உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்கனு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க ஒருநாள் தானே கட்டினா ஒண்ணும் ஆகிடபோறதில்ல கட்ட சொல்லுங்க”
அதன்பின் மகளை சமாதானப்படுத்தி சாதாரணமாக்குவதற்க்குள் ஒரு வழி ஆகிவிட்டிருந்தார் வைரவன்.
அப்படி இப்படியாய் நிச்சயதார்த்தமும் வந்தது காலை முதலே மரகதம் காலில் ரெக்கை கட்டி கொண்டு பறக்க மதுவோ தலை அலங்காரம் பார்லர் என பிஸியாக இருந்தாள் மாலை 5 மணி அளவில் மாப்பிள்ளை வீட்டாரும் சொந்த பந்தங்களோடு வந்துவிட வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின் மாலை சிற்றுண்டி முடிந்து நிச்சயதார்த்தம் நல்லபடியாக ஆரம்பித்தது.
பெரியவர்கள் நிச்சயதார்த்த பத்திரிகையை வாசித்து தட்டை மாற்றிக்கொண்டனர்.மணமக்களுக்கு புது உடை கொடுத்து மாற்றிவர சொல்ல மதுவும் ஸ்ரீகாந்தும் தனித் தனி அறைக்குச் சென்று மாற்றி வந்தனர்.
அதன் பின் இருவரையும் நாற்காலியில் அமரவைத்து பெரியோர்கள் விபூதியிட்டு ஆசீர்வாதம் செய்து தங்களது பரிசுப் பொருள்களை அவர்களுக்கு அளித்து வாழ்த்தினர்.அதன்பின் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து மதுவிற்காக கொண்டு வந்திருந்த தங்க நெக்லஸ் செயினை ஸ்ரீகாந்தின் தங்கை மதுவிற்கு அணிவித்தாள்.
மதுவின் அண்ணன் முறையில் இருந்தவர் மாப்பிள்ளைக்காக வாங்கிய கைச் செயினை அவனுக்கு அணிவித்தார். அதன்பின் போட்டோ ஏற்பாடுகள் செய்து முடித்து அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
மதுவோடு அமர்ந்து ஸ்ரீகாந்த் உணவு உண்ண கிடைத்த தனிமையில் மெதுவாய் அவளிடம்,”லுக்கிங் குட் மது..இந்த புடவை உனக்கு ரொம்ப நல்லா சூட் ஆய்டுச்சு..என் செலெக்ஷன் தான்..”
“ஓ..ரொம்ப நல்லாயிருக்கு”,என்றவள் புன்னகைக்க அதற்குள் ஸ்ரீகாந்தின் தாய் அவளருகில் வந்து பேச ஆரம்பித்திருந்தார்.
“மதும்மா ரொம்ப அழகாயிருக்க..ப்யூட்டிஷியன் யாரு கல்யாணத்துக்கும் அவங்களேயே வர சொல்லலாம்..ரொம்ப நீட்டா போட்டுருக்காங்க..”
“ம்ம் ஓ.கே அத்தை என் ப்ரண்ட்தான் பார்லர் வச்சுருக்கா..”
“ஓ சரி சரி..ஒழுங்காவே சாப்ட மாட்டியா இவ்ளோ ஒல்லியா இருக்கியே நல்லா சாப்ட்டு உடம்பை தேத்து கல்யாணத்துக்குள்ள.உடம்பை பாத்துக்காம ரொம்ப வேலை வேலைனு இருப்பியோ?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அத்த…”,என்றவள் சிரித்து வைத்தாள்.அதன் பிறகும் சில நிமிடங்கள் அவளை அருகில் அமர்த்தி பேசிக் கொண்டிருந்தார்.
அனைத்தும் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும் நேரம் அவனது தங்கை மதுவின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு அண்ணணின் நம்பரை அவளிடம் கொடுத்துச் சென்றாள்.
உடைமாற்றி அனைவரும் கிளம்பிய பின் வழக்கம்போல் தாய் தந்தையிடம் அமர்ந்து வம்பளந்து கொண்டிருந்தாள் மது.
“ம்மா..என் மாமியார் ஆனாலும் கொஞ்சம் அதிகமா தான் பேசுறாங்களோ?தலையை ஆட்டி ஆட்டி கழுத்தே வலிக்குது..”
“மது நீ ஏன் இப்படி இருக்க..பெரியவங்க அப்படிதான் இருப்பாங்க..அதுமட்டுமில்லாம அத்தனை வெகுளியா இருக்காங்க அவங்க..அவங்க பையனோட பொண்டாட்டி ஆகப் போறவனு உன்கிட்டேயும் அவ்ளோ பாசமா பேசுறாங்க பார்த்தாலே தெரியுது..”
“என்னவோ சொல்ற எனக்கு மூச்சு முட்டுது இதெல்லாம் நினைச்சா..நானெல்லாம் நல்ல காலத்துலயே ரொம்ப பேச மாட்டேன்..என்னவோ போ..”
“மது இப்போவே ஏன் இத்தனை நெகட்டிவா யோசிக்குற..ரொம்ப தப்பு.உனக்கெல்லாம் கொடுமைகார மாமியார் வந்தா அவ்ளோதான் போலேயே..போ போய் தூங்கு..ரொம்ப டயர்டா தெரியுற..”,என பேச்சை முடித்துக் கொள்ள ஏதோ கூற வாய் திறந்த கணவரை கண்பார்வையிலேயே அடக்கினார்.
தனதறைக்குள் வந்தவள் மொபைலை கையில் எடுக்க ஸ்ரீகாந்திடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.முகம் அதுவாய் பல்ப் எரிய அதற்கு பதில் செய்தி அனுப்ப ஆரம்பித்தாள்.
“என்ன பண்ற மது??”
“இப்போதான் தூங்கலாம்னு ரூம்க்கு வந்தேன்..நீங்க என்ன பண்றீங்க?”
“தூங்கலாம்னுதான் நினைக்குறேன் என் பொண்டாட்டி முகம் கண் முன்னாடியே இருந்து தூங்க விட மாட்டேங்குது..”
இற்கு பதில் அனுப்பாமல் சிரிக்கும் ஸ்மைலி அனுப்பியவளுக்கு நிஜமாகவே முகத்தில் சிரிப்பு மலர்ந்திருந்தது.
அடுத்த நிமிடம் அவனிடமிருந்து அழைப்பு வர என்ன செய்வதென புரியாமல் முழித்தவள் பின்பு தயக்கத்தோடே எடுத்து பேச ஆரம்பித்திருந்தாள்.
திருமண வேலைகள் ஒருபுறம் பரபரப்பாய் நடந்து கொண்டிருக்க இங்கு காதல் ஜோடி தங்களின் வாழ்க்கையை தொலைப்பேசி அழைப்பிலேயே வாழ ஆரம்பித்திருந்தனர்.ஒரு வாரம் பத்து நாட்கள் சொர்க்கமாய் நகர்ந்தது. அதன்பின் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வர ஆரம்பித்திருந்தது இருவருக்கும்.அப்படியாய் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு டீவியை பார்த்துக் கொண்டிருந்த மகளை கவனித்தவாறே வைரவன் அவளருகில் அமர்ந்தார்
“என்னடா மது முகமே சரியில்ல என்னாச்சு உடம்பு சரியில்லையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லபா..”
“ம்ம் வாய்தான் ஒண்ணுமில்லனு சொல்லுது..கண்ணு ஏதோ இருக்குனு சொல்லுதே என்னடா??”
“ப்ச்ச் ஸ்ரீகா வோட சண்டை ப்பா..”
“ஏன் டா என்ன பிரச்சனை?”
“பிரச்சனைனு எல்லாம் இல்ல சும்மா ஏதோ பேசினோம் அது அப்படியே ஆர்க்யூமெண்டா போய்டுச்சு..”
“ம்ம் அதானே உன் வாயெல்லாம் சும்மா இருக்குமா??பதிலுக்கு பதில் வக்கீல் மாதிரி வாதாடிருப்ப..”,என்றவாறு மரகதம் உள்ளே வந்தார்.
“ம்மா என்ன பிரச்சனைனே தெரியாம என்னை தப்பு சொல்லாத..”
“சரி சரி கத்தாத டீ..இதுக்குதான் அந்த காலத்துல எல்லாம் பொண்ணு மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு முன்னாடி பேசிக்க விடுறதே இல்ல..எல்லாத்தையும் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிட்டு அப்பறம் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுட்டு இருக்குறது..நல்ல புள்ளைங்க..”,என்றவர் மதுவை முறைத்தவாறே உள்ளே சென்றார்.
சரியாய் அந்த நேரம் ஸ்ரீகாந்த் அவள் மொபைலிற்கு அழைக்க வைரவன் சிரித்தவாறே உள்ளே சென்றுவிட அழைப்பை ஏற்றவள் மொட்டை மாடிக்குச் சென்றாள்.
“மது..”
“…..”
“ஏய் ரொம்ப பண்ணாத டீ ஒரு கிஸ் கேட்டதுக்கு நீ பண்றதெல்லாம் ரொம்ப டூ மச்..”
“ஓகோ அப்போ வேற எதுக்கு கோபபடனும்?”
“ஏய் என் பொண்டாட்டிகிட்ட கிஸ் கேட்டது தப்புனு வாதாடுற கொடுமையெல்லாம் இங்க மட்டும் தான் நடக்கும்..ஆனாலும் ரொம்ப தான் பண்ற கல்யாணத்துக்கு அப்பறம் இருக்கு உனக்கு..”
“என்ன டா மிரட்டுறியா??”
“என்னது டா வா??”
“ஆமா பின்ன நீ டீ சொல்லலாம் நா டா சொல்ல கூடாதா..”
“ம்ம் சரிதான் இதே மாதிரி மத்த விஷயத்துலயும் ஏட்டிக்கு போட்டி பண்ணா நல்லாயிருக்கும்..”
“ஐயே ஸ்ரீகா எப்போ பாத்தாலும் இப்படியே பேசிகிட்டு அப்பறம் நா போனை வச்சுருவேன்..”
“அம்மா தாயே நா ஒண்ணும் சொல்லல மறுபடியும் மலையேறிடாத..”,என்றவனின் பதட்டத்தில் சிரித்திருந்தவள் இயல்பிற்கு திரும்பிருந்தாள்.
அடுத்ததாய் முகூர்த்த புடவை எடுக்கும் படலம்.காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பியிருந்தனர் டீநகருக்கு.
முகூர்த்த புடவை செக்ஷனில் மது தனக்கு பிடித்த புடவையை எடுக்க ஸ்ரீகாந்தின் தாயோ முகூர்த்த புடவை சிகப்பு நிறத்தில் இருப்பதுதான் நல்லது எனக் கூறி ஒரு புடவையை காட்டி எடுக்கச் சொன்னார்.அடுத்ததாய் ரிசெப்ஷனுக்கு ஸ்ரீகாந்திற்கு ஷெர்வானி எடுக்கலாம் என மது கூற அவரோ கோட் சூட் தான் பிரமாதமாய் இருக்குமென்று அதையே வாங்கிக் கொள்ள வைத்தார்.
அடுத்ததாய் நகை கடைக்குச் செல்ல வாயே திறக்க கூடாது என முடிவெடுத்தவளாய் மது அமைதி காக்க அவள் அமைதியின் அர்த்தம் உணார்ந்தவனாய் ஸ்ரீகாந்த் செய்வதறியாது நின்றான்.அவன் அம்மாவே இருவருக்குமான மோதிரத்தையும் மாங்கல்யத்தையும் தேர்ந்தெடுக்க மொத்தமாய் கடுப்பின் உச்சத்தில் இருந்தாள் மது.
இது பத்தாதென கடைசி நேரத்தில் வெள்ளி பாத்திரம் அது வேண்டும் இது வேண்டுமென வாங்கச் சொல்லி வைரவனிடம் கூற அவரும் வாங்கிக் கொடுத்தார்.
வீட்டிற்குள் வந்த அடுத்த நொடி அவள் கைப்பை சோபாவிற்கு பறந்தது.மரகதமே எதுவும் கூறாமல் கொஞ்சம் அடங்கித் தான் போனார்.
“இதுக்குத்தான் இந்த கல்யாணமெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..அவங்க இஷ்டத்துக்கு எல்லாத்துக்கும் தலையாட்ட முடியாது..வாங்கினதுல பாதிக்கு மேல லிஸ்ட்லயே இல்ல சும்மா அதை வாங்கு இதை வாங்குனு..
நீங்களாவது வாயை துறந்து பேச மாட்டீங்களா இதென்ன கடைசி நிமிஷம் கார்னர் பண்றது கடையில வச்சு கேட்டா மாட்டோம்னு சொல்ல மாட்டோம்னு தான இப்படி பண்றாங்க..இன்னைக்கு ஸ்ரீகா வுக்கு இருக்கு..”
“மது இதெல்லாம் பெரியவங்க விஷயம் நீ உன் தலையில போட்டுக்காத..கல்யாணம்னா அப்படிதான் முன்ன பின்ன இருக்கும்.அவங்க வேணும்னு பண்ற மாதிரியெல்லாம் தெரில டா..ஊர்காரங்க இல்ல ஏதோ இன்னொசண்டா பண்றாங்க..”
“ம்மா வேணாம் எதாவது சொல்லிருவேன்..கொஞ்ச நேரம் எதுவும் பேசாம போய்ருங்க..நீங்களும் உங்க கல்யாணமும்..”,என்றவள் அறைக்குள் நுழைந்து கொண்டு கதவை அறைந்து சாத்தினாள்.
சற்று நேரத்தில் ஸ்ரீகாந்த் அவளை அழைக்க அதை அட்டெண்ட் செய்தவள் பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்,
“ஸ்ரீகா நீ இப்படி இருப்பனு நா கொஞ்சமும் எதிர்பார்க்கல..கொஞ்சம் கூட வாயை திறந்து பேச மாட்டியா..அவங்க இஷ்டத்துக்கு தான் எல்லாமே பண்ணுவாங்கனா அவங்க இஷ்டத்துக்கு வேற பொண்ணை பாத்துக்க சொல்லு..நா கட்டிக்க போற புடவை கூட நா செலக்ட் பண்ணிக்க கூடாதுனா என்ன நியாயம்??”
“மது உன் பீலிங்க்ஸ் எனக்கு புரியுது பட் அப்பா உங்க அப்பா அம்மா எல்லார் முன்னாடியும் என்ன பண்ண சொல்ற..கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ டா..”
“ம்ம் நல்லா வாய் கிழிய என்கிட்ட பேசு..எனக்கு சுத்தமா பிடிக்கல..நினைச்சு நினைச்சு அதை குடு இதை குடுனு..வரதட்சனை வாங்குறதே தப்பு இதுல டிமண்ட் பண்ணி வாங்குறதெல்லாம் ரொம்ப கேவலம்..”
“மது கோவத்துல வார்த்தையை விடாத..இங்க எதுவும் இல்லாம உங்ககிட்ட இருந்து வாங்கல ஏதோ சம்பிரதாயம் சாங்கியம்னு சொல்லி தான் வாங்க வேண்டியதா போச்சு..”
“அதான என்ன இருந்தாலும் உங்கம்மாவ விட்டு கொடுப்பீங்களா..சம்பிரதாயமெல்லாம் சும்மா கண் துடைப்பு நல்லா ப்ளான் பண்ணி தான் எல்லாம் பண்றாங்க உங்கம்மா..எதுக்கு இப்படி சில்லியா பிகேவ் பண்றாங்களோ..”
“ஸ்டாப் இட் மது போதும்..யாரும் என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க..இத்தனை நேரம் உனக்காக தான் அவங்ககிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன்.இதெல்லாம் சாஸ்திரம் டா அதான் வாங்க சொன்னேன் மத்தபடி நம்மகிட்ட இல்லாததானு பாவமா கேட்டு அழறாங்க..
இங்க வந்தா நா எது சொன்னாலும் குதர்க்கமா பேசி சண்டை போட்டுட்டு இருக்க நீ..என்னவோ பண்ணிக்கோங்க..கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ச்ச..”
போனை வைத்தவளுக்கே அவன் பேச்சை கேட்டு மனம் சற்று இளகித்தான் போனது.தானாவது கொஞ்சம் பொறுத்திருக்கலாமோ என்றே யோசித்தாள்.இருந்தும் தனக்கான பிடிவதம் அவளை இறங்கி வர வைக்க மறுத்தது.
இரண்டு நாட்கள் இப்படியே கழிய இருவரும் சரியாய் பேசிக் கொள்ளவேயில்லை.குட் மார்னிங் குட் நைட் சாப்டாச்சா இப்படியே பொழுது கழிந்தது.
ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தே இறங்கி வந்து அவளுக்கு போனில் அழைக்க அடுத்த நொடி இருந்த கோபமெல்லாம் இடம் தெரியாமல் போயிருந்தது மதுவிற்கு.
அதன்பின் எத்தனை முயன்றும் மதுவால் அவள் மாமியாரிடம் இயல்பாய் பேச முடியவில்லை..தன் தாய் கூறியது எத்தனை உண்மை என்பதை உணர்ந்தாள்.ஏதோ ஒரு அபிப்ராயம் ஒருவர் மேல் பதிந்துவிட்டால் அடுத்தடுத்த அத்தனையும் அதை பொறுத்தே அமைகிறது என்பது எத்தனை பெரிய உண்மை.
எல்லாம் புரிந்தும் அந்த தருணங்களை அவளால் மாற்ற முடியவில்லை.ஏதோ பேருக்கு பேசி சிரித்து என ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தாள்.
அதன் பின்னான நாட்கள் தாய் தந்தையை பிரிய போகிற எண்ணத்திலேயே ஒருவித சலிப்போடு கழிந்தது மதுவிற்கு.வைரவன் மரகத்தின் நிலைமையோ அதைவிடவும் மோசம்.இரவு மகள் உறங்கச் சென்ற பின் இருவருமாய் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் தங்கள் மனதை தேற்றிக் கொண்டிருந்தனர்.
“கைக்குள்ளயே இருந்துட்டா இல்ல அதான் கல்யாண நாள் நெருங்க நெருங்க ரொம்ப ஒருமாதிரி இருக்கு..”
“ம்ம் இதோ இருக்கு திருவான்மியூர் நினைச்சா போய் பாத்துட்டு வரப் போறோம்..ஏன் உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்குறீங்க..”
“மரகதம் நீ எனக்கு ஆறுதல் சொன்னாலும் உன் மனசும் அதே நிலைமையில தான் இருக்குனு எனக்கு தெரியும்..”,எனும்போதே மரகதத்தின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது.
“உண்மை தாங்க..செல்லமாவே வளர்ந்துட்டா..அங்கபோய் எப்படி சமாளிக்க போறாளோனு கவலையா இருக்கு..அதுவும் சம்மந்தியம்மா என்ன பண்ணாலுமே குத்தம் கண்டுபிடிக்குறா..பக்குவமான பொண்ணு தான் இருந்தாலும் ஒரு அம்மாவா பயப்படாம இருக்க முடில..”
“அதெல்லாம் மது கெட்டிக்காரி பாத்து பக்குவமா நடந்துப்பா மரகதம்..நீ சொன்ன மாதிரி இதோ இருக்கு அவ வீடு நினைச்சா போய் பாத்துர போறோம்..”,என இருவரும் மாறி மாறி மனதை தேற்றிக் கொண்டிருந்தனர்.
அந்த அழகான திருமண நாளும் வந்தது.முந்தைய நாள் மாலை வரவேற்பு நடக்க ஆரம்பித்திருக்க அங்கு மணமகள் அறைக்குள் பெரிய களேபரமே நடந்து கொண்டிருந்தது.வைரவனின் மாமா முறையில் இருப்பவர் தன்னை ஒழுங்காக கவனிக்கவில்லை மரியாதையில்லை என கோவமாய் கத்திக் கொண்டிருக்க ஓரளவு பொறுத்துப் போன வைரவன் ஒரு கட்டத்தில் மகளின் திருமணத்தில் இப்படி பிரச்சனை செய்கிறாரே என்ற கோவத்தில் பதிலுக்கு கத்த ஆரம்பித்திருந்தார்.
மரகதம் என்ன செய்வதென புரியாமல் கண்கள் கலங்கி நிற்க மேலும் இரண்டு பேர் சேர்ந்து ஒரு வழியாய் பிரச்னையை முடிவிற்கு கொண்டு வந்தனர்.அறையை விட்டு வெளியே வந்த அன்னையை கண்டவளுக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்ற அவரை மேடைக்கு அழைத்தாள்.
என்ன ஏதென விசாரிக்க, முடிந்த மட்டும் ஒன்றும் கூறாமல் கீழே இறங்கியிருந்தார் மரகதம்.வந்திருந்த கூட்டத்தில் அதற்கு மேல் அவரிடம் பேசும் வாய்ப்பே இல்லாமல் போனது மதுவிற்கு.அதன் பின் குடும்ப புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க ஸ்ரீகாந்தின் தாய்தந்தை தங்கையோடு வளைத்து வளைத்து போட்டோ எடுத்து முடித்தனர்.
மதுவிற்கோ சொல்லில் அடங்காத கோபம் நீண்டநேரமாய் தேடியும் தாயும் தந்தையையும் காணவில்லை.ஒரு வழியாய் அவர்களை அழைத்து வந்து மேடையில் நிறுத்தி புகைப்படம் எடுத்து முடித்தனர்.
இரவு தனதறைக்கு வந்ததுதான் தாமதமென இருவரையும் உண்டு இல்லையென ஆக்கிக் கொண்டிருந்தாள் மது.
“ம்மா இரண்டு பேரும் ரொம்ப கடுப்பேத்துறீங்க..ஒரு போட்டோக்கு கூட வந்து நிக்காம அப்படி என்ன வேலை..அதான் மொத்த கான்ட்ராக்ட் விட்டாச்சுல..அப்பறமும் ரெண்டு பேரும் இப்படி சுத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்?”
“மது வேலைக்கெல்லாம் கான்ட்ராக்ட் விட்டா ஆச்சா வந்தவங்களை கவனிக்க வேண்டாமா இப்படி கவனிச்சே ஆயிரம் கெட்ட பேரு..இதுல உன்னோட வந்து போஸ் கொடுத்துட்டு இருந்தோம் என்ன என்ன சொல்லுவாங்களோ”,என கடுப்பாய் மரகதம் கூறினார்
“அதான பாத்தேன் யாரு அப்பாவோட மாமா தான தெரியுமே உன் முகம் சரியில்லாதப்போவே நினைச்சேன்..இதுக்கு மேலயும் என்ன பண்ணணுமாம் எல்லாருக்கும்..நீயும் அப்பாவும் இப்படியே எல்லாருக்கும் தலையாட்டிகிட்டே இருங்க எல்லாரும் வேற என்ன பண்ணுவாங்க..”
“மது கண்ணா நீ எதுக்கு இதெல்லாம் தலையில போட்டுக்குற..பிரச்சனை சண்டை இல்லாத கல்யாணம் உண்டா..விடு நம்ம வீட்டு முதல் விசேஷம் யாரும் எந்த குறையும் சொல்லிற கூடாது..அப்பா நா பாத்துக்குறேன்..”
“என்னவோ போங்கப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..ஒரே நாள்ல நீங்களும் அம்மாவும் ஏதோ என்னை விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருக்கு..நா உங்க பொண்ணாவே நிம்மதியா இருந்துட்ட்றனே ப்ளீஸ்..”,என்றவள் மரகத்தின் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்திருந்தாள்.
ஒவ்வொரு பெண்ணின் திருமணத்தின் முந்தைய இரவும் நிச்சயம் இப்படித்தானே நகரும்.சிலர் வெளிப்படுத்தி விட இயலும்.பலர் மனதிற்குள்ளேயே போட்டு நொந்து கொள்ளத்தான் முடியும்.இருபது இருபத்திரெண்டு வருடம் செல்லமாய் பெற்றோரின் மகளாய் சகோதர சகோதரிகளுக்கு சகோதரியாய் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து வரும் பெண்களை அடியோடு ஒரு மரத்தை பெயர்த்தெடுத்து அப்படியே வேறிடத்தில் நடுவதைப் போல் அவர்களின் வேரையே கையிலெடுத்து இன்னொரு குடும்பத்தின் ஒருத்தியாய் மாற்றி விடுவது தான் இந்த திருமணம்.
இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என சாதாரணமாய் நகர்ந்து விட்டாலும் சம்மந்தப்பட்ட தாய் தந்தை மகளுக்கு அந்த நாள் அனைத்து சந்தோஷங்களையும் கடந்த சற்றே மனபாரத்தை சுமக்கும் நினைவுகளோடு கூடிய ஒன்று தான்.
அதிலும் ஒற்றைப் பெண் பிள்ளை இருப்பவர்களின் நிலைமை சாதாரணமானது அல்ல.இதுதான் நடக்கும் இதுதான் எதார்த்தம் என அனைத்தும் அறிந்தாலும் அந்தநாளில் மனம் நிச்சயம் வெறுமையை உணர்ந்துதான் விடுகிறது.
மறுநாள் காலை முதல் திருமண பரபரப்பு ஒட்டிக் கொண்டது அனைவருக்கும்…குறித்த நேரத்தில் மதுமிதாவின் கழுத்தில் ஸ்ரீகாந்த் தாலிகட்ட அவளின் கண்களோ தாய் தந்தையை தழுவி மீண்டது.அப்போது வரையும் சரி அதன் பிறகும் சரி மரகதமும் வைரவனும் அத்தனை பேர் சொல்வதற்கும் செவி சாய்த்து யார் மனமும் கோணாமல் பார்த்து விடைகொடுத்து அனுப்பினர்.
மதிய உணவு முடித்து மாலை நலுங்கு முடித்து மணமக்கள் மது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.அதற்குள் இரவு சடங்கை மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யலாம் என ஸ்ரீகாந்த் பக்க உறவினர் ஆரம்பிக்க அதில் ஒருசலசலப்பு தொடங்கி அடங்கியது.
மதுவிற்கோ தலையே சுற்றியது இப்படி ஒவ்வொன்றிலுமா பிரச்சனைகள் இருக்கும்.சிஇஓ ஆவதை விட கஷ்டமான விஷயம் இந்த சொந்த பந்தங்களை சமாளிப்பது என்ற முடிவுக்கே வந்துவிட்டாள்.
சொந்தபந்தம் தலை மறைந்து வீட்டிற்கு வந்த பின்னரே அவளால் சற்று நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.அதற்குள் இரவுக்கான ஏற்பாடு இப்படியிரு அப்படியிரு என அத்தைகளின் அறிவுரை வேறு..விட்டால் போதுமென எங்காவது ஓடிவிடலாமா என்றிருந்தது.
இவையனைத்தையும் கடந்து ஸ்ரீகாந்துமே ஒருவித எதிர்பார்ப்பில் தான் இருக்கிறான் என்பது அவள் அறிந்தே ஒன்றே நிச்சயம் அதில் தவறில்லை தான் ஆனால் தான் அதற்கு தயாராகிவிட்டோமா என்று கேட்டால் நிச்சயம் பதில்லில்லை அவளிடம்.
ஸ்ரீகாந்திடம் திருமணத்திற்கு முன்பே பேசியிருக்கிறோம் அவனைப் பற்றி தெரியும் தான் இருந்தாலும் முதல் தனிமை சற்றே பயத்தை தான் கொடுத்தது மதுவிற்கு.அதற்குள் அவள் சிந்தனை கலைத்து அவளை தயார்படுத்தி அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
பாலை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் காலைத் தொட்டு வணங்கியவளை கைப்பிடித்து எழுப்பி கட்டிலில் அமர்த்தினான்.அவள் ஒன்றுமே கூறாமல் அமர்ந்திருக்க அப்போது தான் அவளை சரியாய் கவனித்தவன் எதோ பதட்டத்தை அவளிடத்தில் உணர்ந்தான்.
“ஹே மது ஏன் என்னவோ போல இருக்க??”
“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்லயே..”
“இது எதுவும் பிடிக்கலையா?”,நேரடியாகவே கேட்டவனிடம் சற்றே தைரியம் வந்தவளாய்,
“ஸ்ரீகா அது..தப்பா எடுத்துக்காதீங்க..ஒரு சிக்ஸ் மந்த்ஸ் இல்ல ஒன் இர்க்கு அப்பறம் நாம பேபி பத்தி யோசிக்கலாமே..எல்லாமே அவசர அவசரமா தேவைதானா..எனக்கு உங்க வீட்ல பழகிக்கவே கொஞ்சம் டைம் தேவைப்படும்..”
“ம்ம் புரியுது ஆனாலும் குழந்தைக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லையே மது..இப்போ எத்தனையோ வழியிருக்கு பேபி ஃபார்ம் ஆகாம பாத்துக்க அப்பறம் என்ன..”,சற்றே அதிருப்தி இருந்ததாய் தோன்றியது அவன் குரல்.
“ம்ம் நீங்க சொல்றது சரிதான்..ஆனாலும் இதெல்லாம் ப்யூச்ர்ல எதுவும் சைட் எபெக்ட் ஆகிற கூடாதே..நா இதுவரை தேவையில்லாம மெடிசின்ஸ் எடுத்ததேயில்ல..”,என தயங்கித் தயங்கி கூறினாள்.
“ம்ம் நீ எதுவும் எடுத்துக்க வேணாம் நா பாத்துக்குறேன்..இப்போ தூங்கு..இன்னைக்கு ஒரு நாள் தான் சொல்லிட்டேன்..”,என்றவன் அவள் எதிர்பாரா நேரத்தில் இழுத்து இதழோடு இதழ் சேர்த்திருந்தான்.அவள் முழுதாய் உணர்வதற்குள் விடுவித்தவன் அவளை படுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு டீவியை உயிர்பித்தான்.
மறுபுறம் திரும்பி படுத்தவளுக்கு என்னவோ போல் இருந்தது.ஸ்ரீகாந்த் மேல் தவறில்லை தான் ஆனால் தான் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு.இருந்த களைப்பில் அப்படியே உறங்கியும் போனாள்.
காலையில் முதலில் எழுந்தவள் குளித்துவிட்டு வந்து கணவனை எழுப்ப கண்களை கசக்கிய வாறே எழுந்தமர்ந்தவன் லேசாய் புன்னகைத்தவாறே குட்மார்னிங் என்றான்.
“சாரி டா மது நைட் கொஞ்சமே கொஞ்சம் மூட் அவுட் அதான் ஒண்ணும் பேசாம தூங்க சொல்லிட்டேன்..நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத..பர்ஸ்ட் நைட்னா அப்படி இப்படினு பசங்க கிளப்பி விட்டுருந்தாங்க..நீ வந்து என்னவோ பேசினதும் ஒரு மாதிரி கடுப்பாயிடுச்சு அப்பறம் யோசிச்சப்போ உன் பாயிண்ட் புரிஞ்சுது.
நீ என்ன கொடுமைகாரன்னு எல்லாம் நினைச்சுறாத..இத்தனை வருஷத்துல ரொம்ப கேர்ள் ப்ரெண்ட்ஸ் கூட கிடையாது எனக்கு..வைஃப்னு உரிமை இருக்குனு ரொம்ப எதிர்பார்த்துட்டேன்னு நினைக்குறேன்..என்ன நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ ஒண்ணும் சொல்ல மாட்ற?”
“இல்லங்க அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..நானுமே உங்களை டிஸ்அப்பாய்ண்ட்மெண்ட் பண்ணிருக்க கூடாது.ஐ அம் சாரி..”
“நோ ப்ராப்ளம் மது..ஹவ் அ குட் டே..நா போய்ட்டு ரெடி ஆய்ட்டு வரேன்..”,என்றவன் குளிக்கச் செல்ல மதுவுக்குமே ஓரளவு அவனின் நிலை புரிந்தது.இரவு இருந்த கடின நிலை மறைந்து சற்றே இலகுவாய் உணர்ந்தாள்.
கிட்சனிற்குச் சென்று கணவனுக்கும் தனக்குமாய் காபி வாங்கச் சென்றவளை அத்தையும் அக்கா முறை பெண்கள் இருவரும் பிடித்து வைத்துக் கொண்டு என்னெனன்னவோ கேட்க ஆரம்பிக்க அவளுக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“ஐயோ அத்தை இதெல்லாமா கேட்டுட்டு இருப்பாங்க..கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம..”
“அடிப் போடி இதெல்லாம் தாண்டி வந்தவங்க தான் நாங்களும்..ரொம்பதான் சலிச்சுக்குற..”,என மேலும் அவளை ஒரு வழியாக்கி விட்டுத்தான் நகர்ந்தனர்.
அதற்குள் கிடைத்த தனிமையில் தாயிடம் எரிந்து விழுந்தாள்,”ம்மா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என்ன இதை பத்தியெல்லாம் பேசுறாங்க..கல்யாணம் பண்ணா அடுத்து புள்ள தானா எங்க பெர்சனல் இல்லையா அது..”
“மது கத்தி பேசாத காதுல விழுந்துற போகுது..இதெல்லாம் சாதாரண விஷயம் தான் எங்க காலத்துல எல்லாம் இன்னுமே மோசம்..போ போய் மாப்பிள்ளைக்கு காபி குடு..மண்டபத்துக்கு கிளம்பணும் ரெண்டு பேரும் சீக்கிரம் தயாராகி வாங்க..”
“ம்ம்”,என வாய்க்குள்ளேயே முனகியவள் இருவருக்குமான காபியை எடுத்துக் கொண்டு சென்றாள்.
அதன் பின் சிறு சிறு சீண்டல்களில் தொடங்கிய அவர்களின் உரையாடல் மதுவை ஓரளவு சாதாரணமாக்கி இருந்தது.அதன்பின் மறுவீடு முடிந்து மணமக்களை ஸ்ரீகாந்த் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வருவதற்காக கிளம்பினர்.
அத்தனை நேரம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திவளுக்கு வைரவனும் மரகதமும் கிளம்பத் தயாரான நேரம் அழுகையை அடக்க முடியாமல் போனது.வைரவனுமே சற்று கலங்கித்தான் போனார்.பின் அனைவருமாய் ஓரளவு அவர்களை சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.
இன்றும் நாளையும் இங்கிருந்துவிட்டு நாளை இரவு இரயிலில் ஸ்ரீகாந்தின் பெற்றோரோடு ஊருக்குச் செல்வதாய் ஏற்பாடு அங்கு சிறிதாய் ஒரு ரிசெப்ஷன் இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.
அன்று முழுவதும் ஸ்ரீகாந்தின் தங்கை அவளோடு கதை பேசியபடி அவளின் பொருட்களை அடுக்கி வைக்க உதவிக் கொண்டிருந்தாள். மதுவிற்கு மனம் மொத்தமும் பெற்றவர்களிடம் இருந்தாலும் ஓரளவு தன்னை சமாளித்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
அதிலிருந்த ஒரு சுடிதார் மெட்டிரியலை கையில் எடுத்த அவனின் தங்கை அவளிடம்,
“வாவ் அண்ணி இது ரொம்ப நல்லாயிருக்கே எங்க வாங்கினீங்க?”
“இதுவா அப்பா வேலை விஷயமா போயிருந்தப்போ மும்பைல வாங்கிட்டு வந்தாரு.எனக்கு ரொம்ப பிடிச்ச ட்ரெஸ் அதனாலேயே ஸ்ட்ரிச் பண்ணாம வச்சுருக்கேன்..”
“ஓ..எனக்கும் ரொம்ப பிடிச்சுருக்கு இதை நா எடுத்துக்கவா?”
“இதுவா இல்ல டா இது எனக்கு க்ளோஸ் டு ஹார்ட்..இன்னும் ரெண்டு மூணு மெட்டிரியல் இருக்கு பாரு அதுல எதாவது ஒண்ணு எடுத்துக்கோ..”
அவள் காட்டிய மற்றதையும் பார்த்தவளின் பார்வை மீண்டும் அதே சுடிதாரில் நிலைத்து நிற்க அதை கொடுக்க மனமில்லாதவளாய் விலையுயர்ந்த ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்து வைத்துக் கொள்ளுமாறு கூறினாள்.
அமைதியாய் அதை வாங்கிக் கொண்டவள் தன் தாயிடம் என்ன கூறினாளோ சற்று நேரத்தில் அந்த சுடிதாரோடு வந்தவர் அவளிடம் கொடுத்துவிட்டு,
“அந்த கழுதைக்கு அறிவேயில்ல மா..எத்தனை வாங்கிக் கொடுத்தாலும் ஆசை அடங்காது.என்னவோ இதுதான் உலகத்துலயே பெருசு மாதிரி வாங்கிட்டு வந்துருக்கா பாரு..இந்தா மா நீ வச்சுக்க..”
“ஐயோ அத்தை இதுல என்ன இருக்கு சின்ன பொண்ணு தான வச்சுக்கட்டும் கொடுங்க..”
“அதெல்லாம் வேணாம் எப்பவும் நினைச்சதெல்லாம் கிடைக்காதுனு புரியட்டும்..இந்தா நீ இதை உள்ளே வச்சுட்டு சாப்ட வா..”,என்றவர் விறுவிறுவென சென்றுவிட மொத்தமாய் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் மது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
Nice👍