285
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்
மு.வ விளக்க உரை: கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.”
மறுநாள் மதியத்தில் வசந்த் டிஸ்சார்ஜ் ஆகியிருக்க அவனை ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு மீண்டுமாய் சென்னைக்கு கிளம்பியிருந்தாள் மங்கை.
ஏர்போட்டிற்கு வருவதற்குள் மாற்றி மாற்றி குடும்பமே அழைத்துப் பேசியிருக்க பொறுமையிழந்தவளாய் மொபைலை சைலண்ட்டில் போட்டுவிட்டு தனது விமானத்திற்காக காத்திருந்தாள்.
விமானத்தில் தனது இருக்கையில் அமர்ந்தவள் தற்செயலாய் மொபைலை எடுக்க முகுந்தனிடமிருந்து இரண்டு அழைப்புகளும் குறுஞ்செய்தியும் வந்திருந்தன.
முகத்தில் புன்னகை அதுவாய் அரும்ப அவள் மீண்டுமாய் அழைக்க நினைத்த நேரம் கைப்பேசியை அணைத்து வைக்குமாறு கூறிவிட ப்ளைட் மோடில் போட்டுவிட்டு அமர்ந்து விட்டாள்.
அந்த இரண்டு மணி நேரமும் ஏனோ சாதாரணமாய் கடத்த முடியவில்லை மங்கைக்கு. ஒரு வித பரபரப்பு சந்தோஷம். இனம் புரியாத ஒரு உணர்வு. எப்போதடா தரையிறங்குவோம் என பொழுதை நெட்டித் தள்ளி முதல் வேலையாய் முகுந்தனை அழைத்தாள்.
அழைப்பு நிற்கும் நேரத்தில் ஏற்கப்பட உற்சாகமாய் பேச ஆரம்பித்தாள்.
“ஹலோ!”
“மலர் சுகமானோ? ஆல் ஓகேல்லே?”
“ம்ம் நான் சென்னை வந்துட்டேன். ஜஸ்ட் இப்போ தான் லேண்ட் ஆனேன்.”
“ஓ தட்ஸ் க்ரேட். உன் கூட்டுக்காரன் இப்போ ஓகே தானே?”
“அவனுக்கென்ன லூசுப் பய நல்லா தான் இருக்கான்.”, என்றதில் முகுந்தனுக்கு புன்னகை அரும்பியது.
“நேத்து அவனுக்காக மலர் கரைஞ்சுது இப்போ திட்டுறியே?”
“இப்போ இல்லை நேத்து அவனை பார்த்தப்போவே திட்ட தான் செஞ்சேன். சாரி நேத்து டென்ஷனில் உங்களுக்கு அப்டேட் பண்ணவே இல்லை.”
“நோ ப்ராப்ளம். ஷெரி மலரே ஞான் வைக்கட்டே. கீப் இன் டச் ப்யூசர் செலிப்ரட்டி..”
“ம்ம் யூ டூ டேக் கேர். அப்பறம் திருவிழாக்கு கண்டிப்பா வரணும். உங்களை எதிர்பார்ப்பேன்.”
“கண்டிப்பா வரும். நோக்காம்.. பை..”
“ம்ம் பை..”, என்றவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி உணர்வு வாழ்வில் முதன்முறையாய்.
உரையாடலை மீண்டும் அசை போட்டவாறே வெளியே வந்தவள் கார்த்திகேயனைத் தேட அவளுக்காக காத்திருந்தவன் கையசைத்தான்.
“என்ன பாப்பா நீ. தனியா நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்டே..”
“இல்ல கார்த்தி மாமா நியூஸ் கேட்டவுடனே ரொம்ப டென்ஷன் ஆகிடுச்சு.”
“அதனால உன் டென்ஷனை எங்களுக்கு பாஸ் பண்ணிட்டு போனியா? அதுவும் அம்மா பொலம்பல் தாங்கவே முடியலை. அவன் இப்போ ஓகே தான?“
“ம்ம் ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு தான் நான் கிளம்பினேன். நாளைக்கு வந்துருவான் ஊருக்கு.”
“சரி சரி நீயும் நாளைக்கே கிளம்பனுமா?”
“ஆமா மா ப்ரெண்ட்ஸ் எல்லாரோடயும் போட்ட டிக்கெட்டிலேயே கிளம்புறேன். இல்லைனால் உன் சர்ஜரி எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு நீ தான் வரணும் பரவாயில்லையா?”
“அதென்னவோ கரெக்ட் தான். இந்த வருஷம் என்ன ஆனாலும் திருவிழாக்கு போயே ஆகணும்னு வேற சொல்லிருக்காங்க அதுக்கு லீவ் எடுக்கணும்.”
“ஹே அப்படி போடு. இந்த வருஷம் அப்போ செம ஜாலியா இருக்க போகுது. உனக்கு வீட்டுக்கு போய் ஒண்ணு காட்டுறேன்.”, என்றவளோடு பேசிபடியே வீட்டை அடைந்தனர்.
கலைச்செல்வியும் தாமோதரனும் அங்கு நடந்த விவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டு உணவு மேஜையில் நால்வருமாய் அமர்ந்தனர்.
“என்னோட ரேஞ்சே வேற பார்க்குறீங்களா?”, என்றபடி தன் போனை மூவருக்குமாய் காட்டினாள்.
“யாரு பாப்பா இது?”, என்று மூவரும் ஒரு சேர கேட்க கடுப்பாகிவிட்டாள் மங்கை.
“உங்களையெல்லாம் வைச்சுகிட்டு. இவர் பேர் உன்னி முகுந்தன். மலையாள ஹீரோ.”
“அடடே அப்படியா?”, என்று போனை தன் கையில் வாங்கிய கலைச்செல்வி ஒரு நொடி உற்று பார்த்துவிட்டு,
“எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கு. ஆனால் சட்டுனு நினைவுக்கு வரலை.”
“ஆமா அத்தை எனக்கும் அப்படி தான் தோணிச்சு.”
“கேரளாகாரங்கனாலே ஒரு தனி பொலிவு வந்துரும் போல பையனே இப்படி மொழு மொழுனு இருக்கான் பாரு.”
“மாம்ஸ் அத்தை சைட் அடிக்குறாங்க இதெல்லாம் கேட்குறதில்லையா?!”
“ஐய்யே ச்ச என்னடி பேச்சு இது..”, என்றதில் ஆண்கள் இருவருமாய் சிரித்தனர். இப்படி பேச்சும் சிரிப்புமாய் பொழுது கழிய மறுநாள் மாலை மதுரைக்கு கிளம்பியிருந்தாள் மங்கை.
வீட்டிலும் சென்று அனைவரிடமும் முகுந்தனின் புராணம் பாடி அண்ணன்களுக்கு எல்லாம் காதில் ரத்தம் வர வைக்காத குறை தான்.
அவள் தனியே மும்பை சென்று வந்ததை எல்லாம் பெரிதாக்க விடாமல் இதைப் பேசியே அனைவரையும் ஓட வைத்திருந்தாள்.
மதியத்திற்கு மேல் உணவோடு கடைக்கு வந்தவள் தந்தையைத் தேடி அவரது அறைக்குச் சென்றாள்.
“ப்பா”
“வா லே என்ன விசயம்?”
“ப்பா வசந்துக்கு இங்கேயே நல்ல இடமா எதாவது பார்த்து வாடகைக்கு பிடிச்சு குடு பா. கொஞ்ச நாள் பசங்களுக்கு கோச்சிங் எடுனு சொல்லிருக்கேன். நீ என்னப்பா சொல்ற?”
“எனக்கு என்னத்தா தெரியும் நீ சொன்னா சரிதான். நேத்து கூப்பிட்டு நானும் பேசினேன். இனி ஒழுங்கா இருப்பேன் மாமானு சொன்னான். நான் இடத்தைப் பார்த்துட்டு சொல்லுறேன். மத்ததை நீ பார்த்துக்கோ என்ன?”
“சரிப்பா அவன் வர்ற பீஸ் வைச்சு கொஞ்சம் கொஞ்சமா பணத்தை திருப்பிக் கொடுத்துருவான். நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத என்ன?”
“கழுத. அவனும் உன்னை மாதிரி தான் எனக்கு. அதெல்லாம் பார்த்துகிடலாம்.”
“அப்பா னா அப்பா தான்.”, என்றவள் அவரது மீசையை இருபுறமும் திருகி விட்டாள்.
அப்படியாய் நாட்கள் நகர ரஞ்சி ட்ராபிக்கு தேர்வானவர்கள் பட்டியலில் மங்கையின் பெயரும் இடம் பெற்றது.
இதற்கிடையில் திருமாவளவனிற்கு ஒரு சம்மந்தம் வந்திருக்க அனைவருக்கும் திருப்தியாய் இருந்ததோடு திருமாவிற்கும் பிடித்திருந்தது.
அன்று இரவு கடையில் இருந்து வந்தவனுக்காக உறங்காமல் காத்திருந்தாள் மங்கை.
“அண்ணே..”
“என்ன டி தூங்கலையா இன்னும்? காலையிலே சீக்கிரமே எழுந்துருப்பியே?!”
“அதெல்லாம் விடு முதல் இங்கே வா உட்காரு.”
“என்ன பாப்பா?”, அத்தனை பேருக்கும் பாப்பா தான் எனினும் வெகு சில நேரத்தில் மட்டுமே திருமா அவளை அவ்வாறு அழைப்பான்.
“உனக்கு பொண்ணை பிடிச்சுருக்கா?”
“உனக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் தான்”, என்றவன் புன்னகைக்க மங்கை அவனை முறைத்தாள்.
“நானா கல்யாணம் பண்ணிக்க போறேன்? சொல்லுண்ணே”
“எல்லாருக்கும் திருப்தியா இருக்கு டி அப்பறம் என்ன ஓகே தான்.”
“என்ன நீ இப்படியிருக்க கல்யாணம்னு ஒரு எதிர்பார்ப்பு ஆசை ஒண்ணுமே இல்லையா? குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணுறதா இருந்தா நீ கல்யாணமே பண்ணாத சொல்லிட்டேன். அந்த பொண்ணு பாவம்.”
“லூசு போட்டோ பார்த்ததை வைச்சு இதுக்கு மேலே என்ன சொல்ல சொல்ற. நம்ம அம்மா அப்பா எல்லாம் பார்த்து பழகி ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அது மாதிரி தான். இன்னும் சின்ன பிள்ளையாவே இரு நீ.”
“நீ சொல்றதெல்லாம் சரி தான் இருந்தாலும் உனக்குனு ஒரு விருப்பம் இருக்குமோனு கேட்டேன்.”
“புரியுது ஆனால் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல பாப்பா. வர்ற பொண்ணு நம்ம அம்மா சித்தி மாதிரி இருந்தா போதும். “
“ம்ம் அநியாயத்துக்கு நல்ல பையனா இருக்கியே நீ. நம்ம கார்த்தி மாமா மாதிரி எதாவது கதை வைச்சுருப்பனு நினைச்சேன்.”
“ம்ம் வைச்சுருக்காங்க.. சரி சொல்லு என்ன திடீர்னு கேட்குற?”
“கேட்காம?? என் அழகு அண்ணனுக்கு கல்யாணம்னால் சும்மாவா! ஆட்டம் பாட்டம் எல்லாம் ஊருக்காக அந்த மூணு நாள் தான். அப்பறம் வாழ்க்கை பூராவும் வாழ போறது நீ தான. அதான் கேட்டேன்.”
என்றதைக் கேட்டவனுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி உள்ளுக்குள் அடைத்தது. திருமணப் பேச்சு என்றதுமே ஆளாளுக்கு அத்தனை வரன்களைத் தேடினார்களே தவிர அவனது விருப்பம் எதிர்பார்ப்பு என எதைப் பற்றியும் யாரும் கேட்கவில்லை.
முத்துப் பாண்டியின் முடிவே இறுதி எனும்போது இவனும் அதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்கவில்லை. ஆனால் இப்போது தங்கை தனக்காக கேட்டபோது அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது.
“ரொம்ப பெரிய மனுஷி ஆயிட்ட பாப்பா.”
“அப்படி இல்லைண்ணே அப்பா அம்மா எல்லாம் அந்த காலத்துகாரங்க. இப்போ நடக்குறதும் கேட்குறதெல்லாம் பத்தி நமக்கு தான தெரியும். நீ பொண்டாட்டி குடும்பம் குழந்தைனு ரொம்ப வருஷம் நல்லா வாழணும் நான் அதை பார்க்கணும்.”
“நீ என்ன இப்படி ஒரு நாத்தனாரா இருக்க டி”,என்று கேலி செய்தாலும் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது திருமாவிற்கு.
“எனக்கு என் அண்ணனைப் பிடிக்கும் அப்போ வரப்போற அவன் பொண்டாட்டியையும் அதே அளவு பிடிக்கணும்ல.”, என்றவள் நிஜமாகவே தாய் மீனாட்சியாய் தான் தெரிந்தாள் அந்த தமையனுக்கு.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
5 comments
🥰🥰🥰🥰🥰🥰 intha sty allready kettachu 🥰🥰🥰
Very nice.
Friday eppoda Monday aachu.. Naan three days miss pannittean
Very nice ud ma
Super