மலர்-7

by ஸ்ரீ
3 comments 248 views
A+A-
Reset

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

மு.வ விளக்க உரை: மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

இரு தினங்களில் அனைத்தும் உறுதியாகி பெண் பார்த்து பூ வைத்து வருவதற்காக அன்று அனைவரும் கிளம்புவதாய் முடிவானது.

“அப்பத்தா இந்த பாவாடையில் எது நல்லாயிருக்குனு சொல்லு?”

“நல்லா எதாவது சொல்லிப்புடுவேன். அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம். பாவாடை சட்டையைத் தூக்கிட்டு வந்து நிக்குறா! போய் ஒழுங்கு மரியாதையா தாவணியைக் கட்டுடி.”, என்று கத்திய கத்தில் காதை மூடிக் கொண்டு வெளியே வந்தவளை கனியன் பிடித்து நிறுத்தினார்.

“எப்போ பார்த்தாலும் ஏன் பாப்பா அவளோட மல்லுக்கு நிக்குற நீ?”

“தாத்தா அதெல்லாம் ஒரு தனி சுகம். வர வர அப்பத்தாகிட்ட திட்டு வாங்கலைனால் பொழுதே போகாத மாதிரி இருக்கு அதான்.”

“சின்ன கழுத ரொம்ப சேட்டை உனக்கு. போ போய் ரெடியாகி வா.”

“இரண்டே நிமிஷம் வந்துரேன்..”, என்றவள் கூறியது படியே சில நிமிடங்களில் தயாராகி தாயின் அறைக்குள் வந்தாள்.

“ம்மா எனக்கு எதாவது செயின் தர்றியா?”, என்று வந்த மகளைப் பார்த்தவருக்கு திருப்தியாய் இருந்தது.

தீபாவளி பொங்கல் பிறந்தநாள் என அனைத்திற்கும் ஒரு பட்டுபாவாடை தாவணி நிச்சயமாய் கடையிலிருந்து கொண்டு வந்து விடுவார் முத்துப் பாண்டி.

ஆனால் மகளோ அந்த வருடத்தில் வந்த புது மாடல் சுடிதார் அதுவுமில்லை எனில் பாவாடை சட்டை என்றே போட்டுத் திரிவாள்.

இப்படி ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒருமுறை தான் அவளே மனமுவந்து தாவணியைக் கட்டுவது. அப்போதெல்லாம் தாயுக்கும் தகப்பனுக்கும் மகளை அழகு பார்த்து மாளாது என்று தான் கூற வேண்டும்.

“கண்ணு எம்புட்டு அழகாயிருக்க தெரியுமா?”

“தெரியுமே என் குணா மாதிரியே! இல்ல?”, என்றவள் செல்லம் கொஞ்சியபடி தாயின் நகைகளை நோட்டம் விட்டுவிட்டு ஒன்றும் திருப்தியாகாமல்,

“ம்மா நான் சித்தியோட பச்சை கல் அட்டிகை வாங்கிகுறேன். இதுக்கு எடுப்பா இருக்கும்.”

“என்ன கண்ணு? நாலஞ்சு சங்கிலி போட்டுக்கோ.”

“நான் என்ன நகை கடை விளம்பரத்துக்கா போறேன். போம்மா..”

“சரி இந்த ஒரு செயினை போட்டுக்கோ”, என்றவர் தன் நீளமான சங்கிலியில் தாமரை டாலர் பதித்ததை மகளுக்குப் போட்டு விட்டார்.

“சித்தி..”

“சொல்லு பாப்பா..”

“சித்தி எனக்கு உங்களோட பச்சை கல் அட்டிகை வேணும். இதுக்கு மேட்ச்சா இருக்குமில்ல..”

“அதுக்கென்ன நீ எது போட்டாலும் அழகாதேன் இருக்கும். இரு கொண்டு வரேன்.”, என்றவர் அவள் கேட்ட நகையை மாட்டிவிட்டு கையிலிருந்த மல்லிச் சரத்தை மொத்தமாய் தலையில் சூட்டிவிட்டார்.

“என் அழகு பிள்ளைக்கு எம்புட்டு வேணாலும் சுத்திப் போடலாம்.”, என்று திருஷ்டி கழித்து அனுப்பி வைத்தார்.

தனதறைக்கு வந்தவள் லேசாய் பவுடர் இட்டு பொட்டை வைத்து கண்ணுக்கு மையிட்டுக் கொண்டு இந்த அரிய நிகழ்வை எல்லாம் சேமித்து வைக்கும் நோக்கில் தன் கைப்பேசியில் செல்பி எடுத்துக் கொண்டாள்.

அதனை வாட்ஸ்ப் டீபியாகவும் வைத்து முடித்த போது தான் அன்றைய அலங்காரம் திருப்தியானதாய் ஒரு உணர்வு எழுந்தது.

படிகளில் கேட்ட கொலுசு சத்தத்தில் கீழேயிருந்த பெரியவர்கள் அனைவரும் நிமிர்ந்து பார்க்க அத்தனை அம்சமாய் வந்த தங்கள் வீட்டுப் பெண்ணை வைத்த கண் வாங்காமல் பர்த்திருந்தனர்.

“ஃப்ளவர் எப்படியிருக்கு?”, என்றவள் பாவாடையைப் பிடித்து சிறு பிள்ளை போல் நின்று காட்ட பூங்கோதையே லேசாய் சிரித்திருந்தார்.

“எம்புட்டு லட்சணமா இருக்கு. இதை விட்டுட்டு அந்தக் குழாயை மாட்டிகிட்டு திரியுறியே. தினமும் இப்படியே போடலாம்ல?”

“அது சரி இதைப் போட்டுட்டு மேட்ச் ஆடவா. போ அப்பத்தா..”

“ப்பா நான் ரெடி”

“ஏலே ஏன் வெறுங் கழுத்தா வர்ற அம்மைட்ட இன்னும் இரண்டு செயின் வாங்கி போட்டுக்கோ..”

“போப்பா இதுவே என்னவோ போல இருக்கு.. என்னை அழகு பார்த்தது போதும். போலாமா என்ன? அண்ணன் பாவம் பொண்ணை கண்ணுலேயே காட்ட மாட்டீங்க போல..”, என்றவள் கார் சாவியை எடுத்துக் கொண்டு முன்னே ஓடினாள்.

 பெண் வீட்டார் மதுரையில் நகைத்தொழில் செய்து வரும் குடும்பம். இவர்களின் குடும்ப அளவிற்கு செல்வாக்கு இல்லை எனினும் அவர்களின் மரியாதையான குடும்பத்திற்காகவே சம்மந்தத்திற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அனைவருமாய் இரண்டு கார்களில் சென்று இறங்க பெண் வீட்டார் அனைவரும் வாசலுக்கே வந்து வரவேற்றுச் சென்றனர்.

பரஸ்பர நல விசாரிப்புகள் பேச்சுகள் எல்லாம் முடிந்து பெண்ணை அழைத்து வரச் சொல்ல, கன்னிகா அனைவருக்குமாய் வணக்கம் வைத்து கீழே விழுந்து நமஸ்கரித்தபடி  அனைவருக்கும் நடுவில் அமர்ந்தாள்.

“அண்ணே, அண்ணி சூப்பர். நிமிர்ந்து பாரு..”

“ஏன் டி மாட்டி விடுற?”

“ஓ அப்போ தனியா தான் அண்ணியைப் பார்ப்பேன்ங்கிற?”

“நான் எப்போ டி அப்படி சொன்னேன்??!”

“ஆனால் நான் சொல்லுவேனே!”

“பாப்பா பேசாம இரு!!”, என்பதற்குள் தந்தையின் அருகில் சென்றிருந்தாள் மங்கை.

“ப்பா அண்ணனைப் போய் அண்ணிகிட்ட பேசிட்டு வரச் சொல்லு.”

“ஏலே என்ன இல்லாத பழக்கம் எல்லாம்?! அவங்க எதாவது நினைச்சுக்க போறாங்க..”

“எந்த காலத்தில் ப்பா இருக்க நீ. சொல்லு ப்பா..”, என்பதற்குள் பெண்ணுடைய அப்பா என்னவென்று கேட்க வேறு வழியில்லாமல் முத்துப் பாண்டி விஷயத்தை அவரிடம் கூற கனியனும் பூங்கோதையும் பேத்தியை முறைத்தனர்.

“நல்ல வேளை நான் எப்படி கேட்கனு நினைச்சுட்டு இருந்தேன். படிச்ச பிள்ளைங்க இல்ல. இதெல்லாம் எதிர் பார்க்கத் தான் செய்யும். நீ அண்ணனைக் கூட்டிட்டு போ மா அந்தப்பக்கம் தோட்டம் இருக்கு”, என்றவர் மங்கையைப் பார்த்து புன்னகைத்தார்.

திருமாவளவனைப் பார்த்து கண் சிமிட்டியவளாய் அவனது கைப்பற்றி அழைத்துச் சென்றவள் கதவருகிலேயே நின்று கொள்ள மணமக்கள் இருவருமாய் தோட்டத்தில் நின்றிருந்தனர்.

“ஹாய்..”

“ஆங் ஹாய்..”

“என்னாச்சு ஏன் அன்கம்பர்டபிளா இருக்கீங்க?!”

“இல்லை அதெல்லாம் ஒண்ணுமில்ல பேசணும்னு எல்லாம் நினைச்சு வரலை. உனக்கு எதுவும் கேட்கணும்னால் சொல்லு”

“அது..”

“என்ன எதுவாயிருந்தாலும் சொல்லு?”

“இல்ல நான் சென்னையில் வேலை பார்க்குறேன் கல்யாணத்துக்கு அப்பறம் வேலையை விட்டுட போறேன் தான். அதனால…”

“??!”

“இங்க நான் ஒரே பொண்ணு அப்பாக்கு அப்பறம் குடும்பத் தொழிலை நான் பார்க்கலாம்னு இருக்கேன். இது முழுக்க முழுக்க என்னோட விருப்பம் தான். இன்னும் அப்பாகிட்ட கூட சொல்லலை.

அதுக்கு மட்டும் உங்களுக்கெல்லாம் சம்மதமானு கேட்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு அதில் எதுவும் பிரச்சனை இல்லையே?!”

“ரொம்ப நல்ல விஷயம் தான். அதுவும் உள்ளூரிலேயே இருக்கும் போது அதைப் பார்க்குறதில் யாரு என்ன சொல்லிட போறாங்க?”

“இல்ல உங்க அம்மா சித்தி தங்கச்சினு யாருமே வேலைக்கு எல்லாம் போனதில்லையே அதான் என்ன சொல்லுவாங்களோனு..”

“உன் தயக்கம் புரியுது ஆனால் என் தங்கச்சி கிரிக்கெட் விளையாடுறது உனக்குத் தெரிஞ்சுருக்குமே. அவளோட விருப்பம்ங்கிற ஒரே காரணத்துக்காக தான் நாங்க எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்றோம்.

இனி உன் விருப்பத்துக்கும் சப்போர்ட் பண்ணுவாங்க.”, என்றதில் ஒரு நொடி அவனின் விழி நோக்கியவள் மீண்டுமாய் தலை குனிந்துக் கொண்டாள்.

“வேறெதுவும் இருக்கா?” , என்றதற்கு மறுப்பாய் தலையசைத்தவளைப் பார்த்தவன் புன்னகையோடு மங்கையை அழைத்தான்.

“பாப்பா இங்கே வாயேன்..”

“சொல்லுண்ணே.. ஹாய் உங்களுக்கு அண்ணனைப் பிடிச்சுருக்கா?”

“ஆரம்பிச்சுடுவா பெரிய மனுஷி.. உனக்கு எதாவது காரியம் ஆகணும்னால் இவளை ப்ரெண்டாக்கி வைச்சுக்கோ உன் மாமனாரே இவ சொன்னால் எதிர்பேச்சு பேச மாட்டாரு.”, என்றதில் அவர்களின் சம்மதத்தை மறைமுகமாய் தெரிந்து கொண்டதில் மங்கையின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

“அடடா அப்படி போகுதா… வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்..”, என்றவள் இருவரையுமாய் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

உள்ளே புன்னகையோடு வந்த மகளைப் பார்த்து முத்துப் பாண்டிக்குத் திருப்தியாக இருந்தது.

“ப்பா ரொம்பத் தள்ளி போடாம நல்ல முகூர்த்தமா சீக்கிரமா வர்ற மாதிரி பார்த்துச் சொல்ல சொல்லுங்க”, என்றதில் அனைவரின் முகமும் நிம்மதியிலும் சந்தோஷத்திலும் பிரகாசித்தது.

பெண்ணுக்கு பூ வைத்து உறுதி செய்து, அடுத்த மாதம் சித்திரை திருவிழா வேறு வரவிருப்பதால் இரண்டு மாதத்திற்குப் பின் வரும் முகூர்த்தத்தில் திருமணம் என்று முடிவானது.

வீட்டிற்கு வந்ததும் பாவாடையைத் தூக்கி கட்டிய படி பின்னியிருந்த தலைமுடியைத் தூக்கி கொண்டை போட்டவளாய் ஹாலின் சோபாவில் அமர்ந்த மங்கை,

“ஷப்பா.. எப்படி தான் நாள் மொத்தமும் இந்தக் கெட்டப்பில் சுத்துறீங்களோ சித்தி இந்தாங்க உங்க அட்டிகை.”

“ஒரு நிமிசம் இரேன் டி திருஷ்டி சுத்தணும்னு நினைச்சேன் அதுக்குள்ளே அவசரத்தைப் பாரு. குணா உம்மவளுக்கு சுத்திப் போடு.”, என்றபடி பூங்கோதை அவளருகில் வந்து அமர்ந்தார்.

கனியன் பேத்தியிடம்,” ஏலே மங்கை எல்லார் முன்னாடியும் இப்படியா சொல்லுவ?”

“நான் என்ன பண்ணினேன் தாத்தா??”

“பொண்ணையும் பையனையும் பேச சொல்ற?”

“அதில் என்ன தப்பு இருக்கு. அவங்களுக்கு கேட்குறதுக்கு சொல்றதுக்கு எதாவது இருக்கும் தான?”

“எதுவானாலும் கல்யாணத்துக்கு பிறவு பேசிட்டு போறாங்க..”

“அதெல்லாம் உங்க காலம் தாத்தா. இப்போ எல்லாம் பொண்ணுங்க மாப்பிள்ளைக்கு இன்டர்வியூவே வைக்குற அளவுக்கு காலம் மாறிடுச்சு. பேசி பழகிப் பார்த்து பிடிச்சுருந்தா தான் பெத்தவங்களைப் பேசவே சொல்றாங்க தெரியுமா?”

“உலகம் என்னத்தையோ மாறிட்டு போட்டும் நம்ம குடும்பம் இப்படியே தான் இருக்கணும்.”

“அட போ தாத்தா நீ பாட்டுக்கு சொல்லிட்டு கொஞ்ச வருஷத்தில் டிக்கெட் வாங்கிட்டு போயிடுவ அதுக்கப்பறம் 40-50 வருஷம் வாழப் போறது என் அண்ணன் தானே.

பிடிக்காத கல்யாணத்தைப் பண்ணிகிட்டு வாழ்க்கை பூரா அவனை கஷ்டப்படுற சொல்றியா?”, என்றதில் பூங்கோதை கணவனைப் பார்க்க அதிர்ந்து அமைதி காத்தார் கனியன்.

இவர்களின் உரையாடலைக் கேட்ட வண்ணம் உள்ளே வந்த முத்துப் பாண்டியனும் இனியனும் கூட ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் உள்ளே சென்றனர்.

“சரி சரி பேச்சை விடு. குணா உப்பு மிளகா எடுத்து வர இவ்வளவு நேரமா??”

“இதோ வந்துட்டேன் அத்தை.”, என்றவர் மகளோடு மகனையும் அமர்த்தி திருஷ்டி சுத்தினார். பெரியவர்கள் உள்ளே சென்று விட திருமா தங்கையிடம்,

“என்ன டி தாத்தாட்ட இப்படி பேசிட்ட..”

“பின்ன என்னண்ணே கல்யாணம்னால் இவங்களுக்கு சும்மா போச்சா?!”

“சரி இத்தோட இந்த பேச்சை விடு மங்கை. அப்பறம் அப்பத்தா வெடுக்குனு எதாவது சொல்லிட போகுது. இப்போவே அமைதியா போனது பெரிய விஷயம்.”

“சரிண்ணே நீ இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாத. அப்பறம் இந்த நம்பரை நோட் பண்ணிக்கோ..”

“என்ன நம்பர்? யாரோடது?”

“அண்ணியோடது தான். உன் நம்பரையும் அவங்ககிட்ட கொடுத்துட்டேன்.”, என்றதில் பதட்டமாய் சுற்றும் முற்றும் பார்த்தான் திருமா வளவன்.

“அதெல்லாம் யாரும் இல்லை இந்தா பிடி”, என்றவள் கண்சிமிட்டிச் சிரிக்க அவளது தலையில் செல்லமாய் தட்டிச் சிரித்தான் திருமா.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

srichitra July 15, 2026 - 9:20 am

Super

Kavi Natarajan July 17, 2026 - 5:11 am

👌👌👌👌👌👌👌👌

suganyavel July 17, 2026 - 6:34 am

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode