218
“குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு
மு.வ விளக்க உரை: மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.”
அனைவருமாய் மங்கையோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அண்ணன்களோடு கார்த்தியையும் அழைத்தவளுக்கு இப்போது முகுந்தனிடம் சாதாரணமாய் பேச முடியால் போயிருந்தது.
கார்த்திகேயனே அவனையும் அழைத்து தன்னோடு நிறுத்திக் கொள்ள அந்த அழகிய தருணம் கேமராவில் அற்புத நினைவாய் பதிக்கப்பட்டது. தன் கைப்பேசியை எடுத்தவனாய் முகுந்தன் மங்கையிடம்,
“ஒரே ஒரு செல்பி மலரே..”, என்றதில் மங்கைக்கு முகமெல்லாம் சிலிர்த்து போனது. வீட்டில் அனைவரும் கிளம்பத் தயாராக முகுந்தன் தானும் கிளம்புவதாய் கூறினான்.
“காலையிலே நேரமே சாப்பிட வந்துருங்க தம்பி”, என்று குணவதி கூற தயக்கமாய் விழித்தவனாய்,
“பரவால்ல ஆன்ட்டி தேவையில்லாத தொந்தரவு உங்களுக்கு. இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் இது போதும்.”
“நல்லாயிருக்கே பாப்பா உங்களை நம்ம வீட்டிலேயே தங்க சொல்லிச்சு. நீங்க என்னடானா.. ஊருக்கு கிளம்புற வரை எங்க வீட்டில் தான் சாப்பாடு உங்களுக்கு.”, என்று முத்துப்பாண்டியும் இனியனும் உறுதியாய் கூறிவிட்டதில் மறுத்துப் பேசத் தோன்றாமல் சம்மதமாய் தலையசைத்து விடை பெற்றான் உன்னி முகுந்தன்.
இரவு வீட்டிற்கு வந்தவளுக்கு பெண்கள் திருஷ்டி கழித்து உணவு கொடுத்து அன்றைய நாளின் நிகழ்வுகளை பற்றிப் பேசி என மங்கையைச் சுற்றி அத்தனை விஷயங்கள் நடந்த போதும் அவளது மனம் மொத்தமும் ஒருவனிடத்திலேயே நிலைத்திருந்தது.
மங்கையின் ஒரு நாள் என்பது பெண்களை விட ஆண்களோடு தான் அதிகமாய் நகரும் அப்படி இருந்தும் இதுபோன்ற தடுமாற்றங்களோ உணர்வுகளோ அவளுக்கு இதுவரை யார் மீதும் வந்ததில்லை.
அப்படியிருக்க காலை முதலே அவனோடு சுற்றியிருந்தாலும் அந்த நொடி அவனது குரலும் பார்வையும் கொடுத்த உணர்வு இன்னும் அவளுள் தித்திப்பாய்.
இத்தனை நேரமும் ஒருவித கனவுலகில் சஞ்சரித்தவளுக்கு தனதறைக்குள் வந்த பின்பு கிடைத்த தனிமை உருப்படியான ஒரு கேள்வியை எழுப்பியது.
“உனக்கு ஏதோ தோணுது சரி. ஆனால் அவருக்கும் அப்படியாவா இருக்கும்? இதுவரை வரம்பு மீறி ஒரு வார்த்தை பேசிருப்பாரா உன்கிட்ட? அதுவுமில்லாம இந்தக் குடும்பத்தில் காதலெலல்லாம் சாத்தியம்னு நினைக்குறியா?”
என்றதான சுய சிந்தனையில் அத்தனை நேரம் இருந்த மோன நிலை கலைந்து சோர்ந்து போனாள். தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு எப்போதும் போல் சாதாரணமாய் இருக்க வேண்டும் என்று ஆயிரம் முறை தனக்குள் கூறிக் கொண்டவளுக்குத் தெரியவில்லை முகுந்தன் தனது தனிமை தொலைத்து அவளோடு உரையாடுவதே அவனைப் பொறுத்தமட்டில் வரம்பை மீறிய நிலை தான் என்று.
மறுநாள் காலையில் எழுந்தவள் கைப்பேசியைப் பார்க்க இரவே அவன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் முகுந்தன் அனுப்பியிருந்தான்.
அவற்றைப் பார்த்த நொடி உதட்டில் புன்னகை அதுவாய் வந்து ஒட்டிக் கொள்ள அவர்களது செல்பியை பெரிது படுத்தி இருவரையுமாய் பார்த்த வண்ணம் சில நொடிகள் அமர்ந்திருந்தாள்.
நேற்றே முகுந்தனுக்கு வெயில் ஒத்துக் கொள்ளாததால் இன்று மாலை மட்டும் வெளியே செல்லலாம் என்று கார்த்திகேயன் கூறியிருக்க பொறுமையாய் எழுந்து குளித்து வழக்கமான தன் பாவாடை சட்டையை அணிந்து கீழே வந்திருந்தாள்.
முத்துப்பாண்டி அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவரருகில் வந்து அமர்ந்தவளாய் தாயிடம் காபிக்காக குரல் கொடுத்தாள்.
“போய் வாங்கிக்கோலே அம்மா பாவம் வேலையா இருப்பா தான?”
“பொண்டாட்டியை வேலை ஏவினால் வந்துர வேண்டியது..”, என்றவள் பழிப்பு காட்டி அவரது மீசையைத் திருகி விட்டுச் சென்றாள்.
காபியை அருந்தி விட்டு சமையலறையில் இருந்து வெளியே வர கனியன் அவர் அறையில் இருந்து மங்கைக்கு குரல் கொடுத்தார்.
“சொல்லு தாத்தா..”
“இங்கன வா அப்பத்தா உனக்கு ஏதோ வைச்சுருக்கா..”
“என்ன ஒரு அதிசயம். எனக்கா? அப்படியெல்லாம் தர்ற ஆள் இல்லையே..”, என்றபடி உள்ளே வந்தவள்,
“ப்ளவர் என்ன வைச்சுருக்க?”, என்று அவருக்கு முன் கட்டிலில் எட்டிப் பார்த்தாள்.
அழகிய காபி பொடி நிற பட்டில் ரோஸ் நிற பார்டர் கொண்ட அழகிய பட்டுப்பாவாடை தாவணியும் இரட்டை வடச் சங்கிலியும் இருந்தன.
“இந்தா இதை வாங்கிக்கோ. இந்த வருச திருவிழாக்கு இதைத் தான் போட்டுக்கணும்.”
“என்ன அப்பத்தா திடீர்னு அதான் எங்கப்பா எடுத்து வைச்சுருப்பாரே..”
“உங்கப்பன் வருசத்துக்கு ஒண்ணா எடுப்பான். கொண்டு வந்து கொட்டுவான் உனக்கு. இது என்னவோ எனக்கு கொடுக்கணும்னு தோணிச்சு வாங்கிக்கோ டி ஆயிரம் கேள்வி கேப்பா..”
“சரி சரி நோ டென்ஷன். என்னை ஆசீர்வாதம் பண்ணு”, என்றவள் சட்டென தாத்தாவையும் பூங்கோதையோடு நிறுத்தி காலில் விழுந்திருந்தாள்.
“நல்ல மகராசியா மனசுக்கு பிடிச்சவனோட நூறு வருசம் வாழணும்.”, என்று இருவருமாய் விபூதி பூசிவிட்டனர்.
இது அவர்கள் எப்போது ஆசீர்வாதம் செய்தாலும் கூறுவது தான். ஆனால் இன்று ஏனோ அது மிகவும் முக்கியமாய் பட்டது மங்கைக்கு.
அதைக் கொண்டு போய் தனது அறையில் வைத்துவிட்டு கீழே வந்த நேரம் கார்த்திகேயனும் தாமோதரனும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
“ஹாய் மாம்ஸ்!”
“வா பாப்பா அப்பறம் எங்கே உன் ப்ரெண்டை காணும்?”
“வந்துருவாரு மாமா..”
“அவருக்கு நம்ம குடும்பத்தை ரொம்ப பிடிச்சுருச்சாம் பா. நேத்து சொல்லிட்டு இருந்தார். நீங்களும் இனி எங்க குடும்பத்தில் ஒருத்தர் தான்னு திருமா சொல்லிட்டு இருந்தான்.”
“நல்ல பையன் டா. அன்னைக்கு பாப்பா சொன்னப்பறம் அவரோட வீடியோ எல்லாம் பார்த்தேன். கொஞ்சம் கூட பெருமை எல்லாம் இல்லாம நல்ல தன்னடக்கமா இருக்காரு.”
“ஆமா பா என்னோட அவ்ளோ நல்லா பேசிட்டு இருந்தார்.அவ்வளவு ஏன் நம்ம பெரிய மாமாவும் அவரும் அவ்வளவு பேச்சு நேத்து.”, எனும்போதே வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்க மங்கை வேகமாய் சென்று கதவைத் திறந்தாள்.
“மலரே குட்மார்னிங்.”
“ஹா..ஹாய் வாங்க”, என்றவள் வழிவிட்டு நிற்க அவளது உடல்மொழியில் வித்தியாசம் கண்டவனாய் ஒரு நொடி அவளைப் பார்த்தவன் பின் அமைதியாய் உள்ளே சென்றுவிட்டிருந்தான்.
“ஹே ஹாய் முகுந்தன் நூறாயுசு உங்களுக்கு.”, என்ற கார்த்திகேயனோடு கை குலுக்கியவனாய் அவர்களோடு அமர இனியனும் முத்துப் பாண்டியும் கூட வந்திருந்தனர்.
“வாங்க தம்பி நேத்தெல்லாம் சரியா பேச முடியலை. ஹோட்டல் எல்லாம் வசதியா இருக்கா? இங்கேயே தங்கலாம்ல?”
“பரவாயில்லா அங்கிள். அவ்விட வஷதியாய்யிட்டுண்டு. இதுவே உங்களை டிஸ்டர்ப் பண்ற போலே உண்டு. நான் இதுமாதிரி எல்லாம் எங்கேயும் தங்கினதேயில்லா.”
“என்ன தம்பி நீங்க. எங்க வீட்டு பிள்ளை போல தான் நீங்க. ஒரு சங்கோஜமும் படாம எல்லா வருஷமும் திருவிழாக்கு வந்துருங்க. என்னண்ணே?”
“சரியா சொன்ன இனியா. சரி பிள்ளைக சாப்பிடாம இருக்கு பாரு போங்க எல்லாரும் சாப்பிடுங்க”, என்றதில் சிறியவர்கள் அனைவருமாய் உணவு மேசையில் அமர்ந்தனர்.
“அப்பறம் மீனாட்சி தாயி என்ன முதல் ஆளா சாப்பிட உட்கார்ந்துட்ட. எங்களுக்கெல்லாம் உன் கையால பரிமாறிட்டு தான அம்மா உன் பசியைப் பார்க்கணும்.”, என்று மாறன் ஏற்ற இறக்கத்தோடு பேச அனைவருமாய் சிரித்தனர்.
“உனக்கு பசிச்சா நீ எடுத்துப்போட்டு கொட்டிக்கோ அம்மானால் இப்படி தான் இருக்கணும்னு நீங்களாவே ஒண்ணு உண்டாக்கி அதை எங்க தலையிலே கட்டிற வேண்டியது. நாங்க தியாக செம்மல் பட்டத்தை வைச்சுட்டு நாக்கு தான் வழிக்கணும்.”
“ஐயோ பெண் போராளியா மாறிட்டா டா மாறா.. தப்பிச்சுரு..”
“ஒரு வேலை செய்யத் தெரியலைனாலும் காட்டானுங்களுக்கு வாயைப் பாரு.”
“மானமே போகுது டா மாறா.. முகுந்தன் நீங்க எப்படி சமைக்கத் தெரியுமா?”
“ம்ம் அம்மாவும் வொர்க்கிங் அல்லே அதனால நானும் தம்பியும் ஸ்கூல் போகும்போதே அம்மே பழக்கி. அது தான் அவன் ஷெஃப் ஆறதுக்கு கூட காரணம்.”
“கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.. இங்கே ஒரு சுடு தண்ணிக்கே வழியில்லை.”
“ஆமா மேடம் அப்படியே அறுசுவை உணவு சமைச்சு கிழிச்சுருவாங்க. வாசம் பிடிக்குறதை தவிர எதுக்காவது கிச்சன் பக்கம் போயிருக்கியா டி?!”
“அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குண்ணே..”
“ம்ம் ஆமா உன் புள்ளையோட சேர்ந்து நீயும் கத்துக்கோ. ஆனாலும் உன்னை கட்டிக்க போறவன் செத்தான். பட்டினி தான் கிடக்கணும் நாள் மொத்தமும்.”
“அதெல்லாம் சமைக்கத் தெரிஞ்சவனா பார்த்து கட்டிக்கலாம்.”, என்று உளறியவள் சட்டென முகுந்தனைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான்.
அதற்கு மேல் பேசாமல் தலையை குனிந்து கொண்டவளாய் தட்டைப் பார்த்து உண்ண ஆரம்பித்திருந்தாள்.
உணவை முடித்து ஆண்கள் கடைக்குக் கிளம்பி விட பெண்கள் மூவருமாய் கோவிலுக்குச் சென்று வருவதாய் கூறிவிட்டு கிளம்பியிருந்தனர்.
கார்த்திகேயன் மங்கை முகுந்தன் மூவருமாய் கேரம்போர்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தனர்.
“அப்பறம் உங்க இன்டஸ்ட்ரீயை பத்தி சொல்லுங்களேன். நீயூஸ் மீடியாவில் வர்றது எல்லாம் உண்மையான செய்திகள் மட்டும் தானா?”
“கண்டிப்பா கிடையாது. அதுவும் இப்போ எல்லாம் இட்ஸ் மோர் டேண்ஜரஸ். நிறைய யூடியூப் சேனல்ஸ் இன்ஸ்ட்டகிராம் ப்யூப்பிள்னு ஆளாளுக்கு இஷ்டப்பட்டதை எழுதுறாங்க.
நானே மூணு படம் சக்கஸ் ஆனதில் என் சம்பளத்தை ஒரு கோடி ஆக்கிட்டேன்னு எல்லாம் போட்டாங்க. இதனால இரண்டு நல்ல ஆஃபர் கூட போச்சு.
அப்பறம் ப்ரொடியூசர் டைரக்டரோட பேசி புரிய வைச்சு இப்போ சைன் பண்ணிருக்கேன். இதுக்கெல்லாம் நாங்க, முக்கியமா நான் ஃபாலோ பண்றது ஒரே ரூல் தான் ஜஸ்ட் இக்னோர்.”
“இன்னும் கொஞ்ச வருஷம் போனால் ஹிரோயினோட எல்லாம் காசிப் வரும் இல்ல?”, என்றதில் மங்கை கார்த்திக்கை முறைக்க முகுந்தன் புன்னகைத்தவாறே,
“நான் எல்லாம் யாரோடயாவது பேசினால் தானே காசிப் வர்றதுக்கு. அதனால் பிரஷ்ணமிருக்காது.”
“ஏன் அப்படி? உங்களுக்கு ப்ரெண்ட்ஸ் எல்லாம்?”
“ம்ஹும் பேட்ச் மேட்ஸ்னு வாட்ஸ் குரூப்பில் இருக்குறதோட ஷெரி. மத்தபடி க்ளோஸ் ப்ரெண்ட்ஸெல்லாம் இல்லை.”
“அதே தான் இவளும். இத்தனை வருஷத்தில் இவளுக்கு ஒரு பொண்ணு ப்ரெண்ட் கூட கிடையாது. வசந்துக்கும் இவளுக்குமே கிரிக்கெட்னால ஒத்துப் போச்சு.
திருமாவும் மாறனும் கூட கிண்டல் பண்ணுவாங்க, இவ ப்ரெண்டுனு ஒரு பொண்ணு கூட வீட்டுக்கு வந்ததில்ல டா. ஏன் டா இவ இப்படி இருக்கானு.”
“ஓ மே பி அதனால தான் எனக்கும் மலருக்கும் செட் ஆகுதோ?”
“இருக்கும். இருக்கும்.”, எனும்போதே கார்த்திகேயனுக்கு அழைப்பு வர அவன் எழுந்துச் செல்ல காத்திருந்தவனாய்,
“மலரே..”
“??”
“எந்தா எதோ ஒரு வித்தியாஷம் தெரியுது. ஒண்ணும் குழப்போயில்லல்லோ?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை நான் எப்பவும் போல தான் இருக்கேன்.”
“மலரை எனக்கு நன்னாயிட்டு அறியும்!”, என்றதில் அவன் முகத்தை நோக்கியவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.
“நேத்து ஈவ்னிங் என்னால மறக்கவே முடியாது. மலர் வலர சுந்தரியாயினின்னு.”
“…”
“நீ ஒரு பாடு வித்தியாசமான பொண்ணாயிட்டு இருக்கே மலரே. என்ட அம்மைக்கு அப்பறம் நான் சம்சாரிக்கும் ஒரே பெண்குட்டி நீயானு.”
“…”
“ஹோப் திஸ் வில் கன்டினியூ ஃபார்எவர்.”, என்ற எதற்குமே மலரிடத்தில் பதிலில்லாமல் போயிருந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
Very nice