தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்

மு.வ விளக்க உரை: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

அமைதியாய் தாய் கொடுத்த பால் டம்ளரை வாங்கிக் கொண்ட வண்ணம் அவரருகில் சோபவில் அமர்ந்திருந்தாள் விடியல்.

வாசந்தியும் அமைதியாய் மகளைத் தான் பார்த்திருந்தார். அவளுக்கு தந்தை என்றால் உயிர்.

அதைத் தாண்டி அவள் பேசும் ஒரு ஆண் என்றால் அது விஜய் மட்டும் தான் என்று அவருக்கு நன்றாகவேத் தெரியும்.

பெங்களுரில் பிறந்து வளர்ந்தாலும் இந்த காலத்து பெண்களைப் போல் அவளிடம் சோஷியலிசம் எப்போதுமே இருந்ததில்லை.

மேடை நாகரீகமாய் அனைவரோடும் நட்பு பாராட்டுவதோடு சரி.

நெருங்கிய ஆண் நட்பு என்று யாருமே அவளுக்கு கிடையாது என்பதில் தாயாய் பல நேரத்தில் அவருக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.

அப்படிபட்டவளின் மனதை ஒருவன் நெருங்கியிருக்கிறான் எனில் அதன் தீவிரம் அவருக்கு மட்டும் புரியாமலா போகும்.

இளங்கோவே கூட மனைவியிடம் கூறினாரே அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் என் பெண்ணின் மனதை வென்றவன் என்பது தான் என் முதல் எண்ணம் என்று.

“என்னாச்சு சின்னு..”

“ஒண்ணுமில்ல மா.. கொஞ்சம் மனசு சரியில்ல.. இப்போ ஓகே..”, என்றவள் புன்னகைக்க முயன்றாள்.

அந்த நேரம் அவளது கைப்பேசிக்கு விஜயிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

பணி பதினொன்றைத் தொட்டிருக்க இந்த நேரத்தில் என்னவென்பதாய் அவசரமாய் எடுத்துப் பார்த்தவள் மேகன் வந்துவிட்டான் என்ற செய்தி இருந்ததில் அத்தனை நேர பயமும் கரைந்து முகத்தை கரங்களுக்குள் புதைத்து அழுதிருந்தாள்.

“சின்னு..”

“…”

“இங்கே பாரு டி ஏன் அழற..”

“ம்மா..”

“சொல்லு என்னாச்சு..”

“ம்மா.. ஒரே ஒரு தடவை மேகனைப் பார்க்கணும் மா..”

“…”

“என்னால முடியலை மா.. அவரைப் பார்க்காம பேசாம.. வாழணும்ங்கிற ஆசை குறைஞ்சுட்டே வருது மா..”

“சின்னு!!”

“எனக்கு நீ முக்கியம் ஆனால் மேகனும் வேணும். ப்ளீஸ் மா..”, என்று அழுது கரைந்தவளைக் கண் கொண்டு காண முடியவில்லை வாசந்தியால்.

“அவர் வந்துட்டாரா?”, என்ற தாயின் கேள்வியில் அவரை அதிர்ந்து பார்த்தவள் ஆமென தலையசைத்தாள்.

“இப்போ பார்க்க போறியா?”

“ம்மா!!!!”

“பத்திரமா போயிட்டு வந்துரு. நான் விஜயை வர சொல்றேன்.”, என்றதில் அன்னையின் மடியில் முகம் புதைத்துக் கதறியிருந்தாள் விடியல்.

வாசந்தியுமே தன் கண்களைத் துடைத்துக் கொண்ட வண்ணம் மகளின் முதுகை வருடிக் கொடுத்தார்.

கையோடு விஜய்க்கும் அழைத்து வீட்டிற்கு வருமாறு கூறியிருந்தார்.

“ம்மா.. என்னை.. என்னை நீ புரிஞ்சுக்குற தான..”

“நீங்க இரண்டு பேரும் எனக்காக எப்போ ஒருத்தரை ஒருத்தர் பார்க்க கூட வேண்டாம்னு முடிவு பண்ணீங்களோ அப்போவே புரிஞ்சுகிட்டேன் தான்.”

“!!”

“ஆனால் சில விஷயங்கள் மனசை விட்டு போறதுக்கு இவ்வளவு நேரம் எடுத்துருச்சு சின்னு.

எப்பவும் உன் சந்தோஷம் மட்டும் தான் எனக்கு முக்கியம்.”, என்ற நேரம் விஜய் என்னவோ ஏதோ என்ற பதட்டத்தோடு வந்து நின்றிருந்தான்.

“சின்னுவை அங்கே கூட்டிட்டு போயிட்டு வாப்பா..”

“எங்கே மேம்???”

“அது…”

“மேகன் வீட்டுக்கு போகணும் விஜி..”, என்றவளின் முகத்தைப் பார்த்தவன் வாசந்தியைப் பார்க்க ஆமோதிப்பாய் தலையசைத்தவரைப் பார்த்து சந்தோஷமாய் தலையசைத்தவன் விடியலோடு அப்போதே கிளம்பியிருந்தான்.

அங்கு மஞ்சுநாத்தின் மொத்த குடும்பமும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க சித்தப்பா சித்தி தம்பிகளோடு சைத்ராவும் அவள் கணவரோடு அமர்ந்திருந்தாள்.

மேகனோ எதுவுமே நடக்காத வண்ணம் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.

“கொஞ்சமாவது எங்களை எல்லாம் நினைச்சு பார்க்குறியா மேக் நீ?”

“…”

“அண்ணாவே இப்போ தான் உடம்பு சரியாகி வந்துருக்கார். இப்போ இந்த டென்ஷன் எல்லாம் தேவையா?”, என்று எப்போதும் அவனுக்கு ஆதரவாய் பேசும் அவனது சித்தப்பாவே சற்று கோபமாய் தான் பேசினார்.

“இப்போ இப்படி ரியாக்ட் பண்ற அளவு என்ன நடந்தது? நான் என்ன குழந்தையா? போகணும்னு முடிவெடுத்த எனக்கு வரத் தெரியாதா?”

“அதை எங்க யார்கிட்டேயாவது சொல்லிட்டு போயிருக்கணுமா இல்லையா?”

“விட்டால் பெர்மிஷன் லெட்டர் வாங்க சொல்லுவீங்க போல..”

“கண்ணா..”, என்ற ராதிகாவின் குரலிலுமே சிறிது கண்டிப்பு இருந்தது.

“எதுக்கு இவ்வளவு ட்ராமா.. ஐ அம் டயர்ட்..”, என்றவனிடம் சிறு குற்றவுணர்வு கூட இல்லை.

“என்னை எமோஷனலா கார்னர் பண்ணனும் நினைக்குறியா மேக்?”, என்ற தந்தையைப் பார்த்தவன்,

“அந்த நிலைமைக்கு எல்லாம் நீங்க என்னை கொண்டு போக விட மாட்டீங்க டேட்..”

“பின்ன எதுக்காக இப்படி பண்ணின? கால்ஸ் கூட ட்ரக் பண்ண முடியாத படி எங்கேயோ போய் இருக்க வேண்டிய அவசியம் என்ன?”, என்றவரின் குரலில் இழுத்து பிடிக்கப்பட்ட பொறுமை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கேட்டும் அதற்கான எந்த பதிலும் மேகனிடத்தில் இருந்து வரவில்லை.

அந்த நேரம் வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்க அனைவருமே இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என்ற எண்ணத்தில் வாசலைப் பார்த்திருந்தனர்.

வாசலுக்கு முதுக்கு காட்டி அமர்ந்திருந்த மேகன் அசிரத்தையாய் தலையைத் திருப்ப வந்து நின்றவளைப் பார்த்து சட்டென இருக்கையில் இருந்து எழுந்திருந்தான்.

அழுத வண்ணம் வேகமாய் அவனருகில் வந்தவள் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தாள்.

அனைவரும் இருக்கையில் இருந்து பதறி எழ தம்பிகள் அண்ணனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற பயத்தோடு பார்த்திருக்க மேகனோ,

“ஐ அம் சாரி சின்னு..”, என்றவன் தனது கரங்களை லேசாய் விரிக்க உதடு துடிக்க நின்றிருந்தவள் அவனை ஆன மட்டும் இறுகக் கட்டிக் கொண்டு கதறினாள்.

“ஐ அம் சாரி இனி இப்படி பண்ண மாட்டேன்.”, என்றவனின் முதுகில் அடித்துக் கொண்டு தான் இருந்தாள் விடியல்.

“நானும் மனுஷன் தான டி. என்னால..”, என்றவனின் குரல் லேசாய் நடுங்க ஆரம்பிக்க அது யாருக்கும் தெரிவதற்குள் தன்னை சரி செய்து கொண்டான்.

சட்டென அவனிடமிருந்து விலகியவள் அவனைச் சேரில் அமர்த்தி அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் அவனது கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“உன் கில்ட் எப்போ போகும்?”, என்றதில் மேகனின் கண்களில் லேசான பளபளப்பு.

“நடந்த எதுக்கும் நீங்க காரணம் இல்ல மேகன்.”

“…”

“உனக்கு நீயே கொடுத்துக்குற தண்டனை போதும். உன் சின்னுவை இன்னொரு தடவை தனியா விட்டுறாத ப்ளீஸ்..”, என்றவளை அப்படியே தன் மார்பில் அழுத்திப் பிடித்திருந்தான் மேகன்.

ராதிகா தன் முன் இருப்பவளை ஆச்சரியமாய் பார்த்திருந்தார். தன் மகன் அவளின் விருப்பத்தையே கேட்காமல் அவளை விட்டு விலகியிருந்ததற்கு கோபப்படாமல் இத்தனை மாதத்து பிரிவிற்கு குற்றம் சாட்டாமல் மகன் அவனுக்கு அவனே தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்றதைக் கேட்டு சுற்றம் புரியாமல் நின்றிருந்தார்.

மஞ்சுநாத்தும் சித்தும் தன் மகன் இத்தனை நேரம் அமர்ந்திருந்த தோரணை என்ன இப்போது இந்த சிறு பெண்ணின் முன் இருக்கும் கோலம் என்ன என்று தான் பார்த்திருந்தனர்.

மொத்தத்தில் அங்கிருந்தவர்கள் யாருமே இப்படி ஒரு மேகனை இதுவரை பார்த்ததில்லை.

இப்படி மொத்தமாய் உடைந்து நானும் இரத்தமும் சதையும் உள்ள உயிர் தானே என்பதாய் அவன் நடந்து கொண்டதே கிடையாது.

அவள் ஒருத்தி அனைத்தையும் வெளிவர வைத்திருந்தாள். அந்த ஒருத்தி தான் அவனின் பலமும் பலகீனமும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருந்தாள்.

விஜய்க்கும் பார்த்திபனுக்கும் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது.

இத்தனை மாதங்களில் இருவரின் நிலையை அருகிலிருந்து பார்த்திருந்தவர்கள் ஆயிற்றே.

சற்றே நிதானத்திற்கு வந்தவளுக்கு தங்களைச் சுற்றியுள்ள அமைதி உரைக்க தன்னிலை உணர்ந்து மேகனை விட்டு பிரிந்து எழுந்து நின்றாள்.

“ஐ.. அம் சாரி.. இந்த நேரத்துல.. நான்.. வந்திருக்க கூடாது.”, என்றவள் தயக்கமாய் ராதிகாவைப் பார்த்து விட்டு மஞ்சுநாத்தை பார்த்தாள்.

அதற்குள் மேகன் தன்னை மொத்தமாய் மீட்டெடுத்திருந்தான். விஜயைப் பார்த்தவன்,

“இந்த நேரத்துல இப்படி கூட்டிட்டு வரணுமா? பார்த்து சேப்ஃபா கூட்டிட்டு போ..”, என்று விட்டு விடியலின் கரத்தை அழுத்தமாய் பற்றியிருந்தான்.

மற்றவர்களைக் கருத்தில் கொண்டவளாய் விடியல் தயக்கமாய் அவனைப் பார்க்க மேகனுக்கோ எதைப் பற்றிய கவலையும் இல்லை.

“ஆன்ட்டிக்குத் தெரியுமா நீ வந்தது.”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள் மெலிதாய் புன்னகைத்தாள்.

மீண்டுமாய் அவளது பார்வை ராதிகாவிடத்தில் தான் நிலைத்தது.

மெதுவாய் அவளருகில் வந்தவர் ஆதராவாய் அணைத்துக் கொள்ள மீண்டுமாய் கண்களைக் கண்ணீர் நிறைத்தது விடியலுக்கு.

“காட் ப்ளஸ் யூ கண்ணம்மா..”, என்றவரின் புன்னகை மேகனின் முகத்தில் இதத்தை கொடுத்திருந்தது.

அன்னையோடு சேர்த்து சைத்ராவும் விடியலை அணைத்துக் கொண்ட வண்ணம்,

“இந்த அண்ணன்கிட்ட நல்லா சண்டை போடுங்க அண்ணி.. யாரைக் கேட்டு உங்களைப் பார்க்காம பேசாம இருந்தார். எனக்கு இன்னுமும் கோவம் போகலை..”

“விடியல் இல்லாம மேகன் இஸ் நத்திங் சைத்து.. அப்பறம் எப்படி கோவம் வரும்.”, என்றதில் அதிர்ந்து அண்ணனை ஏறிட்டவளுக்கு மேகனும் இதையே அன்று சொன்னது நினைவில் வந்தது.

“ நான் வரேன் ஆன்ட்டி.. பை சைத்து..”

“பார்த்து போயிட்டு வாம்மா..”, என்றவர் கன்னம் கிள்ளி வழியனுப்பி வைத்தார்.

இரண்டடி நகர்ந்தவளை மஞ்சுநாத்தின் குரல் அப்படியே நிறுத்தியிருந்தது.

“இங்கே பாரும்மா..”

“…”

“நடந்ததுக்கு வருத்தப் படுறேன். என் தங்கச்சியும் அவ புருஷனும் பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.”

“நடந்ததை மாத்துறது கஷ்டம் ஆனால் மறக்குறது ஈசி அங்கிள். நான் அதையெல்லாம் மறந்துட்டேன்.

நீங்களும் மறந்துருங்க..”, என்றவளின் பெருந்தன்மை அவர் செய்த தவறின் தீவிரத்தை இன்னுமே அவருக்கு உணர்த்தியது.

தம்பிகள் அனைவருமாய் விடியலோடு வாசல் வரைச் செல்ல பல மாதங்களுக்கு பின்னான மகிழ்ச்சியோடு மேகன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

“செம அடி.. அண்ணி..”, என்ற சைதன்யாவை பாவமாய் பார்த்தாள் விடியல்.

“ஆனாலும் உங்க லவ்ஸ் கொஞ்சமில்ல ரொம்ப ஓவரா இருக்கு. இப்போ இதே மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நாங்க எங்கே போவோம்.”

“அண்ணி நீங்க வந்தப்பறம் அது உங்க பொறுப்பு தான் நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கணும் எங்களுக்கு.”

“கல்யாணம் முடிஞ்சதுமே என் பொண்டாட்டியை நாடு கடத்திருவேன் டா..”, என்ற மேகனின் குரலில் மூவருமாய் அவனை பார்த்து முறைத்தனர்.

“அப்பறம் நீங்க அடி வாங்கினா யார் காப்பாத்துறது?”, என்ற சுகனை கழுத்தோடு நெறித்த வண்ணம் மேகன் அவனிடம்,

“அவ என்னை கொன்னு போட்டாக் கூட யாரும் அவளைக் கேள்வி கேட்கக் கூடாது.. கேட்க முடியாது.”, என்றதில் தன்னவனைத் தான் ஆசை தீர பார்த்திருந்தாள் விடியல்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

srichitra September 20, 2026 - 4:42 pm

Super.

Mathy September 20, 2026 - 5:00 pm

Super update 🥰🥰🥰

Kiruthika M September 20, 2026 - 5:54 pm

Finally 😭🤌🏻❤️

Kavi Natarajan September 20, 2026 - 6:15 pm

Super ud ma

Hii

jemila Paul September 20, 2026 - 6:31 pm

Sema adi

EswariSkumar September 20, 2026 - 6:36 pm

Super dooper 👌👌👌👌

Fathima.ar September 20, 2026 - 7:24 pm

Well written update

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode