693
“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
மு.வ விளக்க உரை: தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.”
கண்மூடித் திறப்பதற்குள் ஒரு மாதம் ஓடியிருந்தது. நடந்த அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அவரவர் அன்றாடம் கழிந்தது. மேகன் என்பவன் மொத்தமாய் மாறியிருந்தான்.
முன்பிருந்த பேச்சுக்களோ சிரிப்போ எதுவும் அவனிடத்தில் இல்லை. கடுமை அளவுக்கு அதிகமாய் ஏறியிருந்தது. பார்த்திக்கே சில நேரத்தில் அவனை நெருங்க பயமாய் இருந்தது.
வெறி பிடித்தவன் போல் வேலைப் பார்த்தான். விளைவு, அனைத்திலும் முன்பை விட அதீத லாபமும் முன்னேற்றமும். ரகுவிற்கும் அவனுக்கும் சுத்தமாய் பேச்சு வார்த்தை இல்லாமல் போனது.
சுகனும் சைதன்யாவும் ஒவ்வொரு வேலையையும் பிழையில்லாமல் முடித்து அண்ணனிடம் கொடுப்பதற்குள் விழி பிதுங்கி நின்றனர்.
விடியலும் வாசந்தியும் ஒரு வகையில் இந்த வாழ்க்கைக்கு பழகி விட்டிருந்தனர். இருவர் மட்டுமான வீடு. அளவான பேச்சு வார்த்தைகள் என்று நாட்கள் கழிந்திருந்தன.
முன்பு இளங்கோ பார்த்திருந்த பெரு வாரியான வேலைகளும் இப்போது விடியலின் வசம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைப்பது பெண்ணவளுக்கு சுலபமாய் போனது.
ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரம் பத்தாது என்று கூறுமளவு கூட சில நாட்கள் வேலை கழுத்தை நெறிக்கும்.
அனைத்திற்கும் பழகிக் கொண்டாள். தந்தையை இழந்த பெண் பிள்ளைகளுக்கு ஒரு தனித் திறமையை அல்லவா கடவுள் கொடுத்து விடுகிறார்.
கடவுளை விட இந்த சமூகமும் சுற்றமும் கற்றுத் தரும் பாடங்கள் அசாத்திய திடத்தைக் கொடுத்து விடும்.
அப்பா இல்லாத பொண்ணு, ஆம்பளை இல்லாத வீடு இது மாதிரியான பேச்சுகள் அவர்கள் அறியாமலேயே அந்தப் பெண்ணை அந்தக் குடும்பத்திற்கான ஆணாக உருமாற்றி விடும்.
கீழே விழுந்தால் தூக்கி விடுவதற்கு இப்போது தந்தை இல்லை என்பது உரைக்கும் போது அந்த பெண்ணிற்கு தானே எழுந்து கொண்டு தன்னை நிலைப் படுத்தும் பக்குவம் வந்து தானே ஆக வேண்டும்.
செல்லம் கொடுத்து கொஞ்சுவதற்கு ஆள் இருந்தால் எறும்புக் கடிக்கு கூட கத்தி அழுது ஆர்பாட்டம் செய்யலாம் ஆனால் ஆதரவில்லாத நேரத்தில் பாம்பே கடித்தாலும் அதன் விஷத்தை வெளியேற்றி வாழ்க்கையைப் பார்ப்பதற்கு கற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.
விடியலும் இதையெல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
அன்று ஒரு புது கான்ட்ரெக்ட்டிற்கான மீட்டிங் இருந்தது விடியலுக்கு. இளங்கோ இல்லாமல் முதன்முறையாய் தனது கம்பெனிக்காக அவளே பேச வேண்டிய கட்டாயம்.
என்ன தான் அனைத்தையும் அவள் தான் எப்போதுமே தயார் செய்வாள் என்றாலும் மேடையேறி கம்பெனி சார்பில் சமர்பிப்பது இளங்கோவாகத் தான் இருக்கும்
அலுவலகத்தில் தனறையில் இருந்து கிளம்பியவள் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டு விஜயுடன் கிளம்பியிருந்தாள்.
மேடையோ கூட்டமோ அவளுக்கு புதிதில்லை ஆனால் தந்தையை அன்று மனம் அதிகமாய் நாடியது. விஜயால் அவளது மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.
இருந்தும் அவனுக்கே ஆறுதல் தேவைப்படும் நேரத்தில் அவன் எங்கு விடியலுக்கு ஆறுதல் கூறுவது என்ற நிலையில் அமைதியாகவே காரில் பயணம் தொடர்ந்தது.
மீட்டிங் நடக்கும் இடத்தை அடைந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர சைதன்யா அவனது கம்பெனி சார்பாக வந்திருந்தவன் நேராக வந்து இவர்களின் மேசையில் அமர்ந்து கொண்டான்.
“ஹாய் அண்ணி..”
“வாங்க சைதன்யா..”, என்றவளின் பார்வை ஒரு முறை அந்த அறையைச் சுற்றி வந்தது.
“என்னாச்சு அண்ணி?”
“ஆங். ஒண்ணுமில்ல..”, என்றவள் மெலிதாய் புன்னகைத்து அமர்ந்து கொண்டாள்.
விடியலின் கம்பெனி பெயர் அழைக்கப்பட தனது ப்ரசென்டேஷனை ஆரம்பித்திருந்தாள்.
ஏனோ மனம் ஒரு வித படபடப்பை உணர்ந்து கொண்டேயிருந்தது.
மேகனைப் பார்க்க போகிறோம் என்று உள்ளுணர்வு அடித்துக் கூறியது.
வேக வேகமாய் அவள் தனது உரையை முடித்து மேடையை விட்டு இறங்குவதில் குறியாய் இருந்தாள்.
அவள் தனது ப்ரசென்டேஷனை முடித்த பின்பு ஒரு சிலர் சில சந்தேகங்களைக் கேட்கத் தொடங்க விஜய்க்கு அவளிடம் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்ற அனைத்தையும் தான் விளக்குவதாய் கூறி முன் வந்ததில் நன்றியோடு கீழே இறங்கியிருந்தாள் விடியல்.
தனதிடத்தில் அமர்ந்தவள் இருந்த பாட்டில் தண்ணீரை மொத்தமாய் குடித்து முடித்திருந்தாள்.
“சைதன்யா..”
“சொல்லுங்க அண்ணி..”
“அது..”
“..”
“அவர் இங்கே வந்துருக்காரா?”
“அண்ணாவை கேட்குறீங்களா?”
“..”
“இல்ல அண்ணி நான் தான் வந்துருக்கேன். அவர் சுகனோட பாம்பே வரைக்கும் போயிருக்கார்.”
“ஓ..”
“என்னாச்சு அண்ணி? நீங்க ஓகே தான?”
“நான்.. நான் ஓகே தான். எனக்காக ஒரு சின்ன உதவி மட்டும் பண்ணுங்க ப்ளீஸ்..”
“என்ன செய்யணும்னு சொல்லுங்க.”
“அவர் இங்கே தான் இருக்கார். எனக்கு நிச்சயமா தெரியும். எனக்கு ஒரே ஒரு தடவை அவரை பார்க்கணும்.”, என்றவளின் குரல் உடைந்து கரகரத்தது.
“அண்ணி!!”
“ப்ளீஸ் எனக்காக இதை அவர்கிட்ட சொல்லுங்க. நான் பேசவோ அவர் பக்கத்தில் போகவோ நிச்சயமா முயற்சி பண்ண மாட்டேன்.”
“…”
“மேகன் ப்ளீஸ் டோண்ட் திஸ் டு மீ..”, என்றவளின் பார்வை சைதன்யாவின் கைப்பேசியில் இருந்தது.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த மீட்டிங் ஹாலின் கதவு திறக்கப்பட பார்த்தியின் பின் உள்ளே நுழைந்தவன் விடியலின் பார்வைக்கு ஏற்ற படி சற்று தள்ளியிருந்த இடத்தில் அமர்ந்திருந்தான்.
சற்று இளைத்திருந்தான். விடியல் பார்த்திராத அதீத கடினமான முகமும் பார்வையும்.
அதை விட அவளுக்குப் பிடித்தமான அவனின் நீள் முடி காணாமல் போயிருந்ததில் விடியலின் கண்களை கண்ணீர் மறைத்திருந்தது.
சீராக திருத்தப்பட்ட முடியும் லேசாய் வளர்ந்திருந்த ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் அவனை என்னவோ இன்னும் அழகனாய் தான் மாற்றியிருந்தது.
ஆனால் விடியலுக்குத் தான் அதை முழுதாய் ரசிக்க முடியவில்லை.
ஆசை தீர ஒரு ஐந்து நிமிடங்கள் அவனைப் பார்வையில் நிரப்பிக் கொண்டவள் எழுந்து விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.
அத்தனை நேரமும் கடினப்பட்டு அவள்புறம் பார்வையைத் திருப்பாமல் இருந்தவன் எழுந்து செல்பவளை விழி சிமிட்டாமல் பார்த்திருந்தான்.
பார்த்தி தயக்கமாய் குனிந்து மேகனிடம் ஏதோ கேட்க ஒன்றும் கூறாமல் மேகன் அமைதியாய் இருந்ததில் வேகமாய் வெளியேறியிருந்தான்.
சற்று தள்ளியிருந்த பால்கனி போன்ற கண்ணாடித் தடுப்புகள் இருந்த இடத்தில் நின்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருந்தாள் விடியல்.
“மேம்..”, என்ற பார்த்தியின் குரலில் முகத்தைச் சரிசெய்து கொண்டவளாய் புன்னகைத்து அவன்புறம் திரும்பினாள்.
“எப்படியிருக்கீங்க பார்த்தி?”
“நீங்க எப்படியிருக்கீங்க மேம்?”
“நல்லாயிருக்கேன்..”
“ஒண்ணும் பிரச்சனையில்லையே எல்லாம் ஓகே தான மேம்?”
“இதுக்கு பதில் உங்களுக்குத் தெரியாதா?”
“…”
“என்னை விட என்னை நீங்க ரொம்ப நல்லா கவனிச்சுக்குறீங்க பார்த்தி.. போங்க..”
“அது என் கடமை மேம்..”, என்றவன் நகர எத்தனிக்க அவளது குரலில் திரும்பினான்.
“தேங்க்ஸ் பார்த்தி..”
“மேம்?”
“நீங்களும் விஜயும் இல்லைனால் நாங்க இல்ல.”, என்றவளின் புன்னகை மனதிற்கு சற்று திடத்தைக் கொடுத்தது.
மீட்டிங் முடித்து பார்த்தியோடு காரில் அமர்ந்த மேகன் கணினியில் வேலையைக் கவனித்த படியே வர பார்த்தி தான் பொறுக்க மாட்டாதவனாய் அனைத்தையும் கூறினான்.
அதற்கும் மேகனிடத்தில் எவ்வித எதிர்வினையும் இல்லை. ஒருமுறை மேகனைப் பார்த்தவன்,
“ஆனால் மேம் உங்களை விட மோசமா எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சுருக்காங்க சார்.”, என்று கூறித் திரும்பிக் கொள்ள யாரும் அறியாத வகையில் மிக மெலிதான புன்னகை மேகனிடத்தில்.
தினமும் அவளின் அத்தனையையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். தள்ளியிருப்பதாய் கூறி விட்டவனுக்கு அது அத்தனை சுலபமானதாக நிச்சயம் இருக்கவில்லை.
ஒவ்வொரு நாளும் ஒளியிழந்து இருக்கும் அவளது முகத்தைப் பார்க்கும் திடமே அவனுக்கு இல்லை.
ஆனால் அனைத்திற்கும் மேல் அவனை மகிழ்ச்சிப் படுத்துவது அவனைச் சுற்றியிருப்பவர்கள் விடியலின் மீது காட்டும் அன்பு தான்.
பார்த்திபன் தொடங்கி அவனது தம்பிகள் வரை அவளை ஒவ்வொரு விதத்தில் அரவணைத்துக் கொண்டே அல்லவா இருக்கிறார்கள்.
சொல்லப் போனால் மேகனின் அனுமதிக்காக கூட யாரும் காத்திருப்பதில்லை. சைத்ராவே விடியலுக்காக அண்ணனிடம் அவ்வளவு திட்டி சண்டையிட்டாள்.
ஒரு வாரம் ஆகியிருந்தது சைத்ரா அண்ணனுடன் சண்டையிட்டு இன்னும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
இது போன்ற விஷயங்கள் மட்டுமே மேகனுக்கான ஆறுதல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
இப்படியான நிகழ்வுகளைத் தனக்குள் ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு அழைப்பு வர அதை எடுத்துப் பேசியவனின் முகத்தில் மீண்டுமாய் கடுமை ஏறியிருந்தது.
“பார்த்தி..”
“சார்..”
“யுவனோட கெஸ்ட் ஹவுஸ்க்கு போகணும்.”, என்றதில் வண்டியை ஓட்டுநர் திருப்பியிருந்தார்.
மேகன் காரில் இருந்து இறங்கி உள்ளே செல்ல சுகன் யுவன் சைதன்யா மூவரும் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தனர்.
“எங்கே அவன்?”
“இப்போ தான் தூங்குறான் ண்ணா.. அவன் இப்படி குடிச்சு நான் பார்த்ததேயில்ல.
வாந்தி எடுக்குற அளவு கண்மன் தெரியாம குடிச்சுருக்கான்.”, என்றதில் அறையைத் திறந்து பார்க்க ரகுவந்த் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
“இதுக்கு மேல இவனை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது..”, என்ற மேகனின் யோசனை தாங்கிய முகம் மற்றவருக்குள் கிலியைப் பரப்பியது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Sikiram sethu vainga ka 🤧 inaiku innoru update please
Mumbai poirukkuravan 5 mins la epdi da varuvaan.. nalla solringa da poiiii
Nice update sis
Megan vidiyal purithal nalla iruku. Vidiyal appa, avar wife fa convince pannitu, avar mudivaiyum theliva solli irundha, atleast Megan support / presence neradiya irundhu irukum. Innum evlo naal ippadi thani thaniya kastapadanumo?
Nice 👍
Mumbai ponavan eppadi udane vanthan
Enna oruttu sri ma
Nice👍
Very nice
மேகன் இருக்குற நிலையில இந்த ரகு வேற…