எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்

மு.வ விளக்க உரை: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

விடியலும் வாசந்தியும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை. பத்து நாட்கள் கடந்திருக்க சொந்த பந்தங்கள் கிளம்பிய பின் தாயும் மகளுமான வீடு இன்னும் வெறுமையாய் இருந்தது.

தந்தையின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அறையில் அமர்ந்து கொள்பவள் தோன்றும் போது வெளியில் வருவாள் மீண்டும் அறைக்குள்ளேயே அடைந்து விடுவாள்.

தன் வாழ்க்கையின் முக்கியமான இரு ஆண்களும் இப்போது உடன் இல்லாததில் மொத்தமாய் உடைந்திருந்தாள் விடியல்.

விஜய் என்பவன் தான் அந்த குடும்பத்திற்கான ஒரே பிடிமானமாய் அந்த நேரத்தில் இருந்தான்.

தொழிலை மொத்தமாய் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டவன் தேவையில்லாமல் விடியலைத் தொந்தரவு செய்வில்லை. அவனுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தவன் பார்த்திபன் தான்.

ஆம் இளங்கோவின் இறப்பிற்கு பின் தினமும் விஜயை அழைத்துப் பேசி தேற்றி என அவனை பழைய படி கொண்டு வர ஆன மட்டும் முயன்ற நல்ல நண்பனாகிப் போனான்.

“கிளம்பிட்டியா டா?”

“ம்ம் ஆபீஸ்ல தான் இருக்கேன் பார்த்தி..”

“அதுக்குள்ளேயா? எப்போ எழுந்த காலையில?”

“…”

“சொல்லு டா?”

“தூக்கமே வர மாட்டேங்குது பார்த்தி..”, என்றவனின் குரல் உடைந்திருந்தது.

“டேய்..”

“ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் மறுபடியும் அநாதைங்கிற எண்ணம்..”

“செருப்பால அடிப்பேன் டா உன்னை..”

“…”

“அந்தக் குடும்பம் உன்னை நம்பி தான் இருக்கு. அதுமட்டுமில்ல..”

“..”

“விடியல் மேம்மை உன்னை நம்பி தான் எங்க சார் விட்டுருக்கார்.”, என்றதில் விஜய்க்குள் சொல்ல முடியா உணர்வு.

“தேவையில்லாம இனி எதாவது பேசுன கொன்னுருவேன்.”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க விஜயிடத்தில் லேசான நிம்மதியுணர்வு.

அன்று மாலை விடியலின் வீட்டிற்கு விஜய் வந்த நேரம் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தாள்.

“விடியல்..”

“வாங்க விஜி..”

“இதெல்லாம் பார்த்து கையெழுத்து போட்டீங்கனால்..”

“ம்ம் கொடுங்க..”

“உங்க நிலைமை எனக்குப் புரியுது. ஆனாலும் மீண்டு வர முயற்சி பண்ணுங்க விடியல்.”

“நிறையவே முயற்சி பண்றேன். வழி தான் தெரியலை…”

“அம்மாவுக்கு நீங்க தான ஆறுதல் சொல்லணும்..”

“என்னனு சொல்றது? எனக்காவது வெளியுலகம்னு ஒண்ணு இருக்கு. அம்மாவோட மொத்த உலகமும் அப்பாவும் நானும் தான்.”

“…”

“பாப்போம் விஜய் காலத்தை விட பெரிய மருந்து என்ன இருந்துற போகுது.”

விடியல்..மேகன் சார்ட்ட பேசலையா?”

“இல்ல..”

“அம்மாவுக்கு புரிய வைக்கலாம் விடியல். நீங்க அவர்கிட்ட பேசுங்க..”

“அப்பாவோட இறப்பு என்னை விட அவரை அதிகமா பாதிச்சுருக்கு விஜய்.”

“விடியல்!!”

“அதனால தான் இந்த முடிவெடுத்துருக்கார். அவரால அம்மாவை ஃபேஸ் பண்ண முடியலை.

ஒரு வகையில் என்னையும் தான். இப்போ நம்பிக்கையும் இல்லனு தெரிஞ்சதும் தள்ளியிருக்க நினைச்சுட்டார்.”

“ஆனா அதுக்காக இப்படி மொத்தமா முகத்தை கூட பார்க்காம..

இப்போ தான் அவர் உங்களுக்குத் தேவைனு புரிஞ்சுக்காம இருக்கார்..”, என்றதில் இருக்கையிலிருந்து எழுந்தவள் எங்கோ வெறித்த படி,

“அதை விட அவருக்கு நான் இப்போ ஆயிரம் மடங்கு தேவை. குற்றவுணர்ச்சியில் தனக்கு தானே தண்டனை கொடுத்துக்குறார்.”

“விடியல் நீங்க சொல்றதெல்லாம்?!”

“உங்க எல்லாருக்கும் இதெல்லாம் புரியுதானு தெரியலை. எனக்கு புரியுது.

இதை வெளிப்படையா ஒத்துக்க அவரோட ஈகோ தடுக்குது.

இளங்கோங்கிற யாரோ ஒருத்தருக்காக அவர் உள்ளுக்குள் உடைஞ்சு போயிருக்குறதை இந்த உலகத்துக்கு காட்ட விட மாட்டேங்குது.”

“..”

“எல்லாத்துக்கும் மேல அப்பா அவர்கிட்ட கேட்டாராமே என்னோட சந்தோஷமான வாழ்க்கை, அது அம்மாவோட முழு சம்மதத்தில் மட்டும் தான் கிடைக்கும்னு அவருக்குத் தெரியும்.”

“இருந்தாலும் இந்தப் பிரிவு!!”

“எதையும் மாத்தப் போறதில்ல விஜய். எங்களை ஒருத்தரோட ஒருத்தர் இன்னும் நெருக்கி தான் பிடிக்கும்.”

விடியல் பேசுவதையெல்லாம் கேட்டவனுக்கு மேகனின் மீதும் இவர்களது காதலின் மீதும் பெரும் மதிப்பு வந்திருந்தது.

மேகனை காதலிப்பதாய் விடியல் கூறிய போது சில நேரங்களில் நினைத்திருக்கிறான் பணத்தில் புரளும் அந்த நபர் எப்படி விடியலை எப்படி தேர்ந்தெடுத்தார் என்று.

அதை விட அவனது குணத்திற்கு விடியலால் தாக்கு பிடிக்க முடியுமா என்றும் நினைத்து கவலைப் பட்டிருக்கிறான்.

ஆனால் இப்போது இந்தப் பெண்ணின் பேச்சின் முதிர்ச்சி அவர்களது காதலின் ஆழத்தை அல்லவா காட்டுகிறது.

ஆனால் இந்த அழகான காதலின் முடிவு வாசந்தியின் கையில் இருப்பது தான் விதியின் விளையாட்டு.

அங்கு மேகனின் வீட்டிலோ அவன் தந்தையோடு பேசுவதை வெகுவாய் குறைத்திருந்தான். அலுவல் தவிர எதையும் பேசுவதில்லை.

இளையவர்களின் மூலம் விடியலின் வீட்டில் நடந்தது தெரிந்த ராதிகாவிற்குமே மகன் ஏன் எப்படி செய்தான் என்று வருத்தமாய் இருந்தது.

இதற்கிடையில் அன்று முழுவதுமாய் மேகன் அங்கு இருந்ததும் விடியல் அவனது கையணைப்பிலேயே இருந்ததும் தொழில் வட்டாரத்தில் பலவாறாய் பேசப்பட்டது.

மஞ்சுநாத்திற்கே இரண்டு நாட்களுக்கு அழைப்பு மேல் அழைப்பு வந்தது.

இருந்தக் கடுப்பில் இவையெல்லாம் எண்ணெய் ஊற்றும் விஷயங்களாய் மாறிப் போக அவர் இன்னுமே மகன் மீது அதிருப்தியில் இருந்தார்.

அவரது தங்கை வேறு போனில் அழைத்து தனது மகன் யுவன் அவனது தந்தையோடு பெரிய அளவில் சண்டையிட்டதாய் கூறி ஒரு புறம் புலம்பியிருக்க எல்லாப் பக்கமும் தலைவலி தான் மிஞ்சியது அவருக்கு.

யுவன் மூலம் நடந்ததெல்லாம் அறிந்த நேத்ராவுமே பெற்றோரிடம் சண்டையிட்டிருந்தாள்.

ஏதோ தனக்கு மேகன் துரோகம் செய்து விட்டது போலவும் அதற்கு வஞ்சம் தீர்ப்பது போல நீங்கள் போய் இப்படியெல்லாம் செய்ய வேண்டுமா என்று அண்ணனோடு சேர்ந்து பெற்றோரைக் குற்றம் சாற்றியிருந்தாள்.

அனைத்தையும் விட இளையவர்களுக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்தது மேகனும் விடியலும் பிரிந்திருப்பது தான்.

இளையவர்கள் மூவரும் யுவனோடு மேகனின் அறைக்கு வந்திருந்தனர்.

அவர்களைக் கவனித்தவனின் பார்வை என்ன விஷயம் என்ற கேள்வியைத் தாங்கி நிற்க தைரியத்தை வர வரவழைத்துக் கொண்டவனாய் யுவன்,

“மேக் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் நாங்க தான் டா.”

“தேவையில்லாம நீ இதுக்குள்ளே ஏன் வர்ற? உன் அம்மா அப்பா பண்ணிணதுக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும். போய் வேலையைப் பாரு.”

“அண்ணா.. திஸ் இஸ் நாட் ஃபேர்.”, என்ற சைதன்யா அண்ணனின் பார்வையில் சற்றே பயந்தாலும்,

“அண்ணியை நீங்க அப்படி விட்டுட்டு வந்துருக்க கூடாது ண்ணா..”

“..”

“அவங்க இருக்குற நிலைமைக்கு நீங்களும் கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க.”

“திஸ் இஸ் நான் ஆஃப் யூவர் பிசினஸ் சைதன்யா..”

“அவன் மேல ஏன் கோபப்படுறீங்க. அவன் சரியா தான் பேசுறான். போனு சொன்னா நீங்க பாட்டுக்கு வந்துருவீங்களா?

அண்ணி மனசு எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கும்.”

“நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் எங்களால அண்ணியை அப்படி விட முடியாது. நாங்க அவங்களுக்காக இருக்கோம். இருப்போம்.”

“இப்போ உங்களுக்கு எல்லாம் என்ன வேணும்?”, என்றவன் எழுந்த வேகத்தில் நால்வரும் சற்று பின் நகர்ந்தனர். ஆனால் ரகுவந்தோ,

“இப்படி கோபப்பட்டா நீங்க செய்யுறதெல்லாம் சரினு ஆகிடுமா?”

“!!”

“எல்லாமே உங்க இஷ்டம். நீங்க நில்லுனால் நிக்கணும் உட்காருனால் உட்காரணுமா? அதனால தான் அண்ணியோட அம்மாவும் பயப்படுறாங்க.”

“ரகு இவ்வளவு தான் உன் லிமிட்..”

“எனக்கு என் லிமிட் எப்பபவோ தெரிஞ்சு போச்சு. என்கிட்ட கூட சொல்லாம ஹோட்டல்ஸ் பொறுப்பை திரும்பவும் பெரியப்பாட்ட கொடுக்கும் போதே எல்லாம் தெரியும்.”

“ரகு நாம என்ன பேச வந்தோம். நீ என்ன பேசிட்டு இருக்க?”

“ஏன் பேசினால் என்ன தப்பு. யாரையும் மதிக்குறதில்ல. யாரோட மனசையும் புரிஞ்சுக்குறதில்ல.

நீங்க பாட்டுக்கு என் பொறுப்பைத் தூக்கிட்டால் எவன் என்னை மதிப்பான்?

நானும் ஒண்ணும் பச்சக் குழந்தை இல்ல. நீங்க சொல்றதுக்கு மட்டுமே தலையாட்டிட்டு இருக்க முடியாது.”

“இருக்காத.. நான் சொன்னேனா.. உனக்கு என்ன தோணுதோ செய். ஆனால் பிரச்சனைனு என் முன்னாடி வந்து நின்னால் கொன்னு போட்டுருவேன்.”

“எல்லாமே உங்க அப்பா சம்பாத்தியம்னு ஓவரா பேசிட்டு இருக்கீங்க..”, என்றதில் சுகன் தம்பியை ஓங்கி அடித்திருந்தான்.

“என்ன டா வாய் நீளுது? என்ன நிலைமையில் இருக்கோம். நீ என்னத்த பேசிட்டு இருக்க. முதல்ல அண்ணாகிட்ட மன்னிப்பு கேளு.”

“நான் ஏன் கேட்கணும். இல்லாததை ஒண்ணும் நான் சொல்லலையே?”

“ரகு ஏன் டா இப்படி பேசிட்டு இருக்க?”, என்ற சைதன்யாவும் ரகுவந்தை சமாதானப்படுத்த நினைக்க அவனோ யாருக்கும் அடங்குவதாய் இல்லை.

“சும்மா என்னை அடக்கப் பார்க்காதீங்க. என் நிலைமை உங்களுக்கு வந்திருந்தால் தெரியும். கூடிய சீக்கிரம் அதுவும் நடக்க தான் போகுது.

சுகன் நல்லா கேட்டுக்கோ உன்னையும் எப்போ வேணாலும் தூக்கி போட தான் போறாரு.”

“உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சுருக்கு ரகு..”

“உங்களுக்கு தான் டா கண் மூடித்தனமான பாச பைத்தியம் பிடிச்சுருக்கு.

உயிருக்கு உயிரா நேசிச்ச பொண்ணையே இப்படி கை விட்டுட்டு வந்தவரை இன்னும் நீங்க நம்புறீங்க..”, என்றதில் மேகன் அவனது சட்டையைப் பிடித்திருந்தான்.

“இன்னொரு தடவை என்னையும் அவளையும் பத்தி நீ பேசினால் நடக்குறதே வேற ரகு. போயிடு..”, என்றதில் அனைவருமாய் இருவரையும் பிரித்து ரகுவை வெளியே இழுத்துச் சென்றிருந்தனர்.

பதினைந்து தினங்களுக்குப் பின் அலுவலகத்திற்கு கிளம்பியிருந்தாள் விடியல்.

தந்தையின் புகைப்படத்தின் முன் நின்றவளுக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்தது இருந்தும் தனக்குள் அடக்கிக் கொண்டவளாய் தாயிடம் சென்று நின்றாள்.

“டிபன் வைச்சுருக்கேன் டி. சாப்பிடு..”, என்றவர் அடுப்பில் கவனமாய் இருக்க அடுப்பை அணைத்தவள் அன்னையைத் தன்புறம் திருப்பினாள்.

அத்தனை நேரம் கடுப்பத்திக் கொண்டு நின்றவரால் அதற்கு மேல் முடியாமல் அழுதிருந்தார் வாசந்தி..

“அழாத மா…”

“உன் இழப்பு ரொம்ப பெருசு தான். ஆனால் மீண்டு வந்து தான் ஆகணும். அட்லீஸ்ட் எனக்காக. இப்போ எனக்குனு இருக்குறது நீ மட்டும் தான் மா.”

“சின்னு..”, என்றவர் மகளைத் தன் மார் சாய்த்துக் கொண்டார்.

“அப்பா என் கண் முன்னாடி இல்லையே தவிர உன் சாயலில் என் கூடவே தான் இருக்கார்.

அந்த நம்பிக்கையில் தான் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன். நான் இருக்கேன் உனக்கு.”, என்று தன் அத்தனை வருத்தங்களையும் தனக்குள் புதைத்தவளாய் அன்னைக்கு ஆறுதல் கூறி கிளம்பியிருந்தாள்.

பார்ப்பவரெல்லாம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறி என அவளை கடந்துச் செல்ல தனது அறைக்குள் வந்து அமர்ந்தவளுக்கு மனமெல்லாம் ஒருவனின் நினைவு ஆட்டிப் படைத்தது.

அந்தக் குரலுக்கும் அணைப்பிற்கும் ஸ்பரிசத்திற்கும் மனம் பாடாய் பட்டது.

அனைத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். திடமானவளாய் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் அதை கர்ம சிரத்தையாய் செய்யத் தயாராகியிருந்தாள்.

அவள் அலுவலகம் வந்தது தெரிந்ததில் இருந்து தினம் ஒருவர் என சுகனோ சைதன்யாவோ தங்கள் வேலைகளை அந்த கட்டிடத்தில் இருந்தே கவனித்துக் கொண்டனர்.

அதோடு தினமும் இருமுறை விடியலைச் சென்று பார்த்து பேசி விட்டு தான் வேலையைக் கவனித்தனர்.

ரகு அவ்வப்போது வந்து செல்பவன் விடியலைப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்ப மாட்டான்.

யுவன் அலைபேசியில் அழைத்துப் பேசிக் கொள்ள சைத்ரா வார இறுதியில் கண்டிப்பாக விடியலை வீட்டிற்குச் சென்று பார்த்து பேசிவிட்டு வருவாள்.

மஞ்சுநாத்தின் எதிர்ப்பையும் மீறி அந்தக் குடும்பத்தின் இளைய தலைமுறை மொத்தமும் மேகனின் காதலிக்கு ஆதரவாய் தோள் கொடுத்து நின்றிருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

Fathima.ar September 17, 2026 - 8:15 am

Nice update

EswariSkumar September 17, 2026 - 9:07 am

Nice update 👍

Kavi Natarajan September 17, 2026 - 9:23 am

Nice ud ma

Krishnav September 17, 2026 - 9:48 am

Nice ud sis

suganyavel September 17, 2026 - 10:56 am

Super💕

srichitra September 17, 2026 - 4:43 pm

Nice

Mathy September 18, 2026 - 11:47 am

நைஸ்…

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode