அன்றைய நாள் அழகாய் ஆரம்பிக்க தன் வழக்கமான கம்பீரத்துடன் கீழேயிறங்கி வந்தவனை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள் நிர்பயா.

அழகிய லைட் எல்லோ நிற முழுக்கை சட்டையை நேர்த்தியாய் மடித்து விடப்பட்டிருக்க வேட்டியை ஒருபுறம் மடித்து பிடித்தவாறே வந்தவன் தன்னவளை கண்டு புன்னகைக்க சுயநினைவிற்கு வந்தவள் பதிலுக்குச் சிரித்தாள்..

ட்ரெஸ் ஓ.கே வா என அவன் செய்கையில் கேட்க பதிலுக்கு கட்டை விரலை உயர்த்திச் சிரித்தாள்.

தன்னவளை ரசித்தவாறே உள்ளே சென்றவன் மாறனை கவனியாது அவன்மேல் முட்டிக் கொண்டான்..

“டேய் புது மாப்ள கொஞ்சம் முன்னாடி பாத்து நட நானா இருக்குறதால பரவால்ல பெருசுங்க யாராவது வந்துருந்தா தாங்காதுடா தம்பி”, என தலை தட்டி அனுப்பினான்..

புதுமண தம்பதிகளுக்கான விருந்து தயாராய் இருக்க நிர்பயாவையும் தமிழையும் அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது..

அனைவருமாய் சுற்றி தங்களையே பார்த்திருக்க நிர்பயாவின் முகம் மேலும் மேலும் சிவந்து கொண்டேயிருந்தது..

“மாறா நீயும் ராஜியும் அவங்கள நம்ம நெல்லையப்பர் கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அர்ச்சனை பண்ணிட்டு வந்துருங்க..

முதன்முதலா வெளில போறது கோவிலுக்கா இருக்கட்டும்.”, என சரோஜா கூற நால்வருமாய் கிளம்பினர்..

மாறனும் ராஜியும் குழந்தையோடு முன்னிருக்கையிலும் தமிழ் ஜோடி பின்னிருக்கையிலுமாய் அமர்ந்தனர்.

போகும் வழியெங்கும் தன் சிறு வயது நியாபகங்களை தன்னவளோடு பகிர்ந்தவாறு பேசிக் கொண்டே வந்தான்..

அனைத்திற்கும் ஒரே பதிலாய் உதட்டோர புன்னகையோடு சேர்ந்த தலையசைப்பே அவளிடமிருந்து வந்தது..

கோவிலையடைந்து அனைவருமாய் உள்ளே செல்ல கோபுரத்தை பார்த்தவளே வியந்து போனாள்..

நெல்லையப்பர் காந்திமதி தாயாரோடு அருள்பாலிக்கும் அற்புத தலம் திருநெல்வேலியின் மைய பகுதியில் ப்ரம்மாண்டமாய் அமைந்துள்ளது நெல்லையப்பர் கோவில்.

அதன் கோபுரங்களும் பிரகாரங்களும் அந்த காலத்தின் கட்டிட கலையின் ப்ரம்மாண்டத்தை பறைசாற்றுவதாய் இருந்தது..

மனமுருக ஈசனையும் தாயாரையும் வேண்டி நின்றவளை தோள்தொட்டு நினைவிற்கு கொண்டு வந்தவன் கண்களாலேயே தைரியம் கூறி அழைத்துச் சென்றான்.

கோவிலைச் சுற்றி எத்தனை கடைகள் எத்தனை மனிதர்கள்..

அதிலும் இவர்களை தெரிந்தவர்கள் என பாதிபேர் வந்து வாழ்த்து கூறி தங்களால் முடிந்தது என அங்கிருந்த பூக்கடையில் பூ வாங்கி ராஜிக்கும் நிர்பயாவிற்கும் கொடுக்க சிலர் இனிப்பு வாங்கித் தருவதாய் திருநெல்வேலிக்கே பெயர் போன அல்வாவை வாங்கி கொடுத்துச் சென்றனர்..

நிர்பயாவிற்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது..எத்தனை பாசமான மனிதர்கள்..

எப்பேர்பட்ட குடும்பத்தில் தான் வாழ வந்திருக்கிறோம் என நினைத்து நினைத்து உவகை கொண்டாள்..

வீட்டிற்கு திரும்பும் போது அவள் முகத்தின் மலர்ச்சியைப் பார்த்தே அமைதியாகிவிட்டான் தமிழ்..

எப்போதுமே சற்று இடைவெளிவிட்டு அமருபவள் இப்போது தமிழின் மேல் தன் தோள் உரச நெருங்கி அமர்ந்திருந்தாள்.

அதுமட்டுமில்லாமல் சற்றாய் அவனை ஓரப்பார்வை பார்க்க தமிழ் வெளியே பார்த்துக் கொண்டு வந்ததை பார்த்தவள் சட்டென அவன் கையை தன் இரு கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டாள்..

திடீரென அவள் செய்கையில் பயந்தவன் சட்டென அவளை ஏறிட அவன் தோள்மேல் தலை சாய்த்து இன்னுமாய் கையை இறுக்கிக் கொண்டாள்..

மாறனும் ராஜியும் இருப்பதை மறந்து அவள் உரிமை காட்டியது மனதிற்கு வெகுவாய் ஆனந்தமளித்தது அவனுக்கு..

இருந்தும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே பயணத்தை ரசித்தான்..

வீட்டை அடைந்ததும் அவனை பார்க்க முடியாமல் வெட்கத்தோடு கீழேயிறங்கியவள் உள்ளே ஓடிவிட தமிழ் சிரிப்போடே பின்னே சென்றான்.

இரண்டு மூன்று பெண் குரல்கள் கிட்சனில் கேட்க ஹாலிற்கு வந்தவன் வேண்டுமேன்றே சத்தமாய்,

” நிர்பயா நா ஒரு கேரி பேக் ஊர்ல இருந்து வரும்போது பத்திரமா வச்சுக்கோனு கொடுத்தனே அத கொஞ்சம் எடுத்துதர்றியா உன் பேக்ல தான் இருக்கும்னு நினைக்குறேன்”, என சீரிஸாய் கூற

கேசவன் அவளை ஏறிட ஒன்றும் பேசாமல் எந்த பேக் என்பதே புரியாமல் மாடிக்குச் சென்றவளை பின்னே சென்று இழுத்து கதவோடு சாய்த்து நிறுத்தினான்.

சட்டென இழுத்ததில் தடுமாறியவள் அவன் மார்பில் கைவைத்து நிற்க தலையை மட்டும் நிமிர்த்தவேயில்லை..

“என்ன மேடம் ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல??”

ஆம் என்பதாய் தலையசைத்தவள்,

”நா கீழே போறேன்ங்க எல்லாரும் தேடுவாங்க..”

“அப்படியா எனக்கு தெரிஞ்சு கல்யாணம் ஆன இரண்டாவது நாள் பொண்ணை புருஷன் மட்டும் தான் தேடுவான் “, என மீசையை முறுக்கி விட்டவாறு கூற நிர்பயாவிற்கு இன்னமும் வெட்கமாகிவிட்டது.

அறைவாசலில் நிற்பதால் அவனை மீறி உள்ளேயும் செல்ல முடியாமல் வெளியேவும் நகர முடியாமல் இன்ப அவஸ்தயாய் இருந்தது பெண்ணவளுக்கு…

நா போகணும் என மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்க்க,தோளை குலுக்கியவாறு லேசாய் நகர்ந்தவன் போ என்பதாய் தலையசைக்க மெதுவாய் அவனை விட்டு நகர்ந்தவள் அவனைப் பார்த்தவாறே நிற்க..

“என்ன போகலையா??”

வேகமாய் இரண்டடி அவனை நோக்கி வந்தவள் சட்டென கைப்பற்றி அவனை இழுக்க லேசாய் சாய்ந்தவனின் கன்னத்தில் இதழ் பதித்து ஓடிவிட்டாள்.

தமிழுக்கு நடந்ததை இன்னமும் நம்பமுடியவில்லை.. கன்னத்தை தடவியவாறே  கீழே சென்றான்..

அன்றைய பொழுது முழுவதும் தமிழின் கண்கள் அவளை வண்டாய் வட்டமிட்டுக் கொண்டு தான் இருந்தது.

மற்றவர்களின் கேலிப்பார்வை அவர்களை நோட்டமிடுவதை கண்டவள் அவனை விட்டு விலகி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள்..

இரவு அனைவருமாய் உறங்கச் செல்ல நிர்பயா மெதுவாய் மாடிக்குச் சென்றாள்.

காலையில் தான் அப்படி நடந்து கொண்டது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது..

தமிழுக்கு எப்படியிருந்திருக்கும்..

நேத்துதான் மனசு இன்னும் பக்குவபடல அதுஇதுனு சொல்லிட்டு இன்னைக்கு நானே..

ஆனா இப்பவும் என் மனசுல பயம் அப்படியேதான் இருக்கு..எனக்கே ஒண்ணும் புரில அவரை மட்டும் தப்பு சொல்ல முடியாது..

என ஏதேதோ யோசித்தவாறே உள்ளே வந்தவள் வழியில் நின்றவனை கவனியாது அவன்மேல் மோதிக் கொள்ள,

“ஸ்ஸ் ஸாரிங்க..கவனிக்கல..”

“அது பரவால்ல நீ இடிச்சு எனக்கு ஒண்ணும் ப்ரச்சனையில்ல உன் எலும்புக்கு சேதாரம் ஆகலனா சந்தோஷம் தான்..

சரி அப்படி எதை பத்தி இப்படி யோசிசுட்டு வர??”

“அது..அது..ஒண்ணுமில்லங்க சும்மாதான்..”

“ம்ம் சரி நிரு நீ போய் ரிபெப்ரெஷ் ஆய்ட்டு வா  கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கலாம்..”

உடைமாற்றி வந்தவளை ஒன்றும் பேசாமல் தன் மடியில் சாய்த்து கொண்டான்.

மென்மையாய் அவள் தலைமுடியை வருடிவாறே அவளை பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“நிரு..”

“ம்ம்”

“காலைல இருக்குற நிரு தான் நிஜமானவ..அந்த சந்தோஷம் தான் அவளுக்கானது..

ஆனா நேரம் ஆகஆக ஏன் ஒரு மாதிரி குழப்பமா பயத்தோட இருக்க??”

சட்டென எழ எத்தனித்தவளை பிடித்து மீண்டுமாய் சாய்த்து கொண்டவன் இப்படியே பேசு என்றான்..

நா மனசுல நினைச்சத நீங்க எப்படி???என நிறுத்தியவள் மீண்டும் அவளே தொடர்ந்தாள்..

“தெரிலங்க என்ன நினைக்குறேன் என்ன பண்றேன் எனக்கே ஒண்ணும் தெரில..”

“ம்ம் குட் சரி இப்போ நா சொல்றேன் கேட்டுக்குறியா??”

“ம்ம்”

நிரு கல்யாணம்ங்கிறது ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரே வாழ்க்கை பாதைல அவங்க சுக துக்கம் எல்லாத்தையும் ஷேர் பண்ண வைக்குற ஒரு அழகான விஷயம்..

கிட்டதட்ட இதுவும் ப்ரெண்ட்ஷிப் தான்..ஒருவேளை அதோட இறுதிப்படினு கூட சொல்லலாம்..

கல்யாணம் ஆன எல்லாருக்கும் அவங்க அவங்க பார்ட்னர்ஸ்தான் பர்ஸ்ட் பெஸ்ட் ப்ரெண்டா இருக்கணும்..

சோ இப்போ உன் ப்ரெண்டை நீ கோபபட்டா அடிக்கலாம் வருத்தப்பட்டா தோள் சாய்ஞ்சு அழலாம் சந்தோஷமா இருந்தா அதை உனக்கு பிடிச்ச விதத்துல வெளிப்படுத்தலாம் உதாரணத்துக்கு காலைல நீ எக்ஸ்பெரஸ் பண்ண மாதிரி..

அதுல தப்பா நினைக்கவோ இல்ல பார்ட்னரா இருக்குறவங்க என்ன நினைப்பாங்கனோ கவல பட கூடாது..

உன் பெஸ்ட் ப்ரெண்ட் கண்டிப்பா உன்னை தப்பா நினைக்க மாட்டேன் தான..என நிறுத்த நிர்பயா இன்னுமாய் சிறு குழந்தையாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்..

 நீ என்கிட்ட உனக்கு தோணுறத தோணுற விதமாவே வெளிப்படுத்தலாம்..

அதேதான் எனக்கும் நிச்சயமா அப்பப்போ உன்னை சீண்டிட்டு தான் இருப்பேன் ஆனா ஐ நோ மை லிமிட்ஸ்.. சோ மொதல்ல நீ என்கூட சகஜமா இரு..

மேபி நாம சென்னை போனப்பறம் உனக்கு அது இன்னமும் கொஞ்சம் ஈஸியா இருக்கலாம்..

இங்க இவ்ளோ பேரு இருக்குறதால அவங்க பேசுற விதம் லைக் ஹஸ்பண்ட்னா இப்படி அப்படினு அதனாலேயே நீயும் தயங்குறியோனு தோணுது..

உனக்காக உன்னை விட அதிகமாவே நா யோசிச்சு வச்சுருக்கேன்..

இதெல்லாம் எதிர்பாத்த விஷயமும்கூட ..உன்னை நல்லா பாத்துப்பேன்ங்கிறத விட உனக்கு கம்பர்டபிளா இருக்குற மாதிரி பாத்துப்பேன்னு சொல்லலாம்.. என்ன குழப்பம் போச்சா??என குறும்பாய் அவளை பார்க்க,

“ஏன்ப்பா என்ன இவ்ளோ லவ் பண்றீங்க???”

“நிரு..”

“இல்ல செல்வா நிச்யமா இதெல்லாம் சாதாரண விஷயமோ சாதாரண காதலோ கிடையாது..

அம்மா அப்பாவுக்கு அப்பறம் சொல்லபோனா அவங்களை விடவும் பல மடங்கு என் கண்ணை வச்சே நா நினைக்குறத புரிஞ்சுகிட்டு..

எனக்காக உங்க ஆச பாசங்களையெல்லாம் ஒதுக்கிவச்சு..ஏன் செல்வா???”

“ஏ ரசகுல்லா ரொம்ப யோசிக்காத..இருந்தாலும் இனி இந்த கேள்வியை நீ கேக்க கூடாதுங்கிறதுக்காக சொல்றேன்..

எனக்கு அம்மானா ரொம்ப இஷ்டம்.. அப்பாவும் பிடிக்கும் தான் இருந்தாலும் அம்மாவோட க்ளவர்நெஸ் ரொம்ப பிடிச்ச ஒண்ணு..

அம்மா ரொம்பலா படிக்கல ஆனா அவங்க வில்பவர்க்கு இணையே கிடையாது..

நாங்க இப்போ இந்த நிலைமைல இருக்கோம்னா அதுக்கு முழுகாரணமும் அம்மா மட்டும்தான்..

அது அப்பாவுக்கும் தெரியும்..அடுத்ததா நா சந்திச்சு ப்ரமிச்சது ஷாலினியை பாத்து..

ஆனா முதல் ரெண்டு தடவையும் உன்னை பாத்தப்போ கொஞ்சம் கோபம்தான் வந்தது..

யாருனே தெரியாதவங்கள பாத்தா இப்படி பயப்படுறியேனு..

அடுத்து உன் அம்மா அப்பா பத்தி சொன்னப்போ கொஞ்சமே கொஞ்சமா பாவம்னு தோணிச்சு..

ஆனா நாளடைவுல அந்த பயமே அழகா தெரிஞ்சுது அதுவும் என்கிட்ட இந்த முட்டைகண்ணை உருட்டி பேசும்போது ரொம்பவே பிடிச்சுது..

கல்யாணம் பண்ணா இன்டிபெண்ட்டா யோசிக்குற தைரியமான அப்படி ஒரு இமேஜ் தான் மைண்ட் ல இருந்தது..

உன்கூட பழகுற வர.. அண்ட் உன்னைபத்தி முழுசா என்கிட்ட சொன்ன அன்னைக்குதான் உண்மையாவே எல்லாரையும் விட உனக்கு தைரியம் அதிகம்னு தோணிச்சு..

அத்தனை வருத்தங்களையும் உள்ள போட்டு புதைச்சு வாழறதவிட கஷ்டம் எதாவது இருக்குமா என்ன..

அந்த செகண்ட்லயிருந்து உனக்காக உன்னை பத்தி மட்டும்தான் நிறைய யோசிச்சேன்..

அப்படியே நீ ஆணி அடிச்ச மாதிரி என் மனசுல வந்து உக்காந்துட்ட பட் இத்தனை நாளா அதை எக்ஸ்ப்ரஸ் பண்ணாம இருந்துருப்பேன்..

இப்போ தான் அதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சுருக்கு சோ ஒவ்வொரு செகண்டும் உன்கிட்ட எதாவது சொல்லி போரடிச்சுட்டேயிருக்கேன்.. போதுமா விளக்கம் என அவள் மூக்கை விரலால் தட்ட

 எழுந்தமர்ந்தவள் தன்னவன் முகத்தை கையில் ஏந்திக் கொண்டாள்..

“தேங்க் யூ அண்ட் லவ் யூ சோ மச்ங்க..”,என தன்னவன் கன்னம் வருட,குறும்பாய் அவள் விரல் அகற்றி கன்னம் காட்டினான்..

அடுத்த நொடி சற்றும் தாமதிக்காமல் அழுத்தமாய் இதழ் பதித்திருந்தாள்..

ஓரடி இடைவெளியில் அமர்ந்திருந்தவளை இடைபிடித்து இன்னுமாய் தன்னருகில் அமர்த்திக் கொண்டவன் தன் மார்பில் அவள் பின்னந்தலை சாய்த்தவாறு கை கோர்த்து விரல் உரச நிறைய நிறைய பேசினார்கள்..

ஸ்வீட் நத்திங்ஸ்தான் ஆனாலும் அனைத்திற்குமே அவர்களிருவருக்கும் ஆயிரம் அர்த்தமிருந்தது..

மறுநாள் வழக்கம்போல் தன்னவனின் இரும்புபிடியை விலக்கி எழுந்தவள் சில நிமிடம் அவனையே பார்த்திருந்திருந்தாள்..

டிப்பார்மெண்டில் முரடனாய்  வீட்டிற்கும் உறவுகளுக்கும் கோபகாரனாய் இருப்பவன் தன்னிடம் நண்பனாய் காதலனாய் காட்டும் அன்பு அவளை மலையுரத்தில் மகிழ்ச்சியடைய செய்திருந்தது..

 குளித்து தயாராகி கீழே சென்றவள் அவனுக்கான காபியோடு வர அப்போதும் அவன் உறங்கி கொண்டிருந்தான்..

மென்மையாய் அவன் நெற்றியில் இதழ் பதித்தவள்,

“ குட்மார்னிங்ப்பா..காபி கொண்டு வந்துருக்கேன் “,என கூற அரைகுறை தூக்த்தில் எழுந்து அர்ந்தவன்..

“குட்மார்னிங் ரசகுல்லா..ஹே என்ன இன்னைக்கு புடவை கட்டிக்கல குடு நா ஹெல்ப் பண்றேன்..”

“ஒண்ணும் வேண்டாம் நா ஆல்ரெடி கீழே போய்ட்டு வந்துட்டேன் அம்மா ஒண்ணும் சொல்லல”, என மெதுவாய் கூற..

“ம்ம் எங்கம்மா வர வர ரொம்ப பேடா ஆய்ட்டாங்க”, என போலியாய் சலித்தவன் அவளை பார்த்துச் சிரித்தான்..

“நீ சாப்டியா??”

“ம்ம் ஆச்சு..என அவனருகிலேயே நின்றவள் அவன் குடித்து முடித்ததும் டம்ளரை கையில் வாங்கிக் கொண்டாள்..

வேகமாய் அவனுக்காக அலமாரியிலிருந்து டவலை எடுத்துக் கொடுத்தாள்..

அவன் வருவதற்குள் அவனுக்காக சட்டை வேஷ்டியையும் எடுத்து வைத்து வேறென்ன வேண்டுமென பார்த்துக் கொண்டிருக்க அவன் வரும் சத்தம் கேட்டு திரும்பியவள் இடுப்பில் கட்டிய துண்டோடு வந்து நின்றவனை பார்த்து பதறித்தான் போனாள்..

என்ன செய்வதென தெரியாமல் திரும்பியவள் விழிகளை இறுக மூடி நிற்க,வேண்டுமென்றே அவளருகில் வந்தவன் தலையை இடவலமாய் அசைக்க நீர் அனைத்தும் அவள்மேல் தெறிக்க சட்டென திரும்பியவள் அவன் மேல் கைவைத்து தள்ள எத்தனிக்க அவள் கையை பற்றியவன் விளையாட்டாய் விடாமல் பிடித்திருக்க மெதுவாய் விழி திறந்தவள் அத்தனை அருகில் அவனின் அந்த சிஸ் பேக் வயிறையும் ஆர்ம்ஸையும் பார்த்து பயந்து போனாள்..

பார்வையின் வித்யாசம் உணர்ந்தவன் மெதுவாய் விலகி நின்று,

”ஏ ரசகுல்லா,ரொமாண்டிக்கா லுக் விடுவனு பாத்தா இப்படி பயப்படுற”, என்றவாறு தன் சட்டையை கையிலெடுக்க,

“இல்லங்க படத்துல வர்ற போலீஸ்தான் இப்படி இருப்பாங்கனு நினைச்சேன்..”, என அவன் கையை பாவமாய் லேசாய் ஒரு விரல் கொண்டு அழுத்திப் பார்த்தவளை பார்த்தவனுக்கு அடக்க மாட்டாத சிரிப்பு வந்தது..

“நிஜ போலீசை பாத்துதான்ம்மா படத்துலயே அப்படி கொண்டு வராங்க..

எல்லா போலீஸூம் தொப்பையோட இருக்க மாட்டாங்க சரியா”, என மீண்டும் தன் தலையை உலுக்க,

“என்னப்பா நீங்க முதல்ல தலையை துவட்டுங்க “,என தன் துப்பட்டாவால் தலையை துவட்டினாள்..

“என்ன மேடம் கவனிப்பு எல்லாம் பயங்கறமா இருக்கு??போலீஸ்காரன் மேல இருந்த பயம் போய்டுச்சா??”

“அப்படியில்ல ஆனாலும் இனி இதெல்லாம் டெய்லி நான் தான் பண்ணுவேன்..எனக்கு பிடிச்சுருக்கு”, என பாதி குரலில் கூறியவளை  குனிந்து பார்த்தவன் எனக்கு கூட என ராகம் பாடி அவள் கன்னம் கிள்ளி கீழே அழைத்துச் சென்றான்..

மகனையும் மருமகளையும் முகத்தில் அத்தனை பூரிப்போடு சேர்ந்தாற் போல பார்த்த சரோஜாவிற்கு மனம் நிறைந்து போனது.. இருவருக்குமாய் உணவை பரிமாறியவர்,

“எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்களேன் தமிழு.. அவளும் ஊரை சுத்தி பாத்த மாதிரி இருக்கும்ல..”

“ம்ம் காரை எடுத்துட்டு சும்மா ட்ரைவ் போய்ட்டு வரோம்மா.. ஒரு ஒன் ஆர் டூ அவர்ஸ் வந்துருவோம்..”

“ம்ம் சரி டா பாத்து போய்ட்டு வாங்க..”

திருநெல்வேலியின் பைபாஸ் ரோடில் லாவகமாக தமிழ் காரை ஓட்டிக் கொண்டிருக்க,அடிக்கும் காற்றிற்கும் புது இட சூழலுக்கும் அடிக்கும் வெயில் கூட இனிமையாய் தோன்றியது நிர்பயாவிற்கு..

“எங்க ஊரு எப்படியிருக்கு???”

“ரொம்பவே அழகாயிருக்குப்பா..அப்பா தமிழ்நாட்டை பத்தி சொல்லும் போதெல்லாம் லைவ்ல ஒரு தடவையாவது வரணும்னு நினைச்சுருக்கேன்..

பட் இப்போ லைவ்வே இங்கதான்னு மாறிடுச்சு.”.

“ம்ம் ஆனாலும் எப்படி நீ இவ்ளோ நிதானனா பொறுமையா பேசுறியோ தெரில.. சரி எதாவது சாப்டுறியா இளநீர் ஜுஸ்???”

“இல்லங்க ஒண்ணும் வேண்டாம்..மார்னிங் சாப்டதே ஹெவியா இருக்கு..”

“எப்படி எப்படி நீ சாப்ட இரண்டு இட்லி ஒரு வடை ஹெவியா???அடேங்கப்பா..”, லேசாய் சிரித்தவள் மறுபடியும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தாள்..

“ஏன்ங்க கேக்கனும்னு நினைச்சேன் ஹரிஷ் அண்ணா வரவேயில்லேயே???”

“ம்ம் ஷாலினி க்கு லைட்டா பெயின் இருந்துதாம் செக் பண்ணதுல பால்ஸ் பெயின்னு சொன்னாங்களாம்..

இருந்தும் இவனுக்கு விட்டுட்டு வர்றதுக்கு மனசு வரல சரி சென்னைக்கு வந்தப்பறம் மீட் பண்ணலாம்னு சொல்லிட்டேன்..”

“ஓ..கெட் டூ கெதருக்கு என்ன ப்ளான் பண்ணிருக்கீங்கப்பா??”

“நாம கம்மிங் வெட்னெஸ் டே கிளம்பலாம் நிரு..சோ அந்த வீக்கெண்ட் மே பி சட்டர் டே நைட் எல்லாரையும் கூப்டலாம் நிறைய பேர் இல்ல..

ஒரு ஃபை பேமிலீஸ் அதுபோக யாரும் கூப்டனுமானு ஹரிஷ் கிட்ட கேட்டுக்கனும்டா ஓ.கே தான??”

“ம்ம் ஒ.கேப்பா..”

ம்ம் அதானே ஓ.கே சரி வேற ஒண்ணும் சொல்லிட மாட்டியே..

ரொம்ப கஷ்டம் என்றவாறு தலையசைக்க இணைந்து புன்னகைத்தவள் அமைதியாகிவிட்டாள்..

மதிய பொழுது அப்படி இப்படியாய் நகர மாலை வேளையில் அனைவருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க பேச்சுவாக்கில் சரோஜா இன்று பௌர்ணமி என்று கூறினார்,

“ஹே அப்போ இன்னைக்கு நிலா சோறு சாப்டலாம்” என ராஜி கூற,

அப்டினா என ரகசியமாய் நிர்பயா மாமியாரின் காதை கடிக்க,

“ஃபுல் மூன் டே அன்னைக்கு டின்னரை மொட்டை மாடிக்கு எடுத்துட்டு போய் நிலா வெளிச்சத்துலயே சாப்டுவோம்..

இப்போ எல்லாரும் வேலை அது இதுனு பிஸியானதால அப்படியே விட்டாச்சு.. இன்னைக்கு எல்லாரும் இருக்குறதால போலாம்னு சொல்றா..”

“ம்ம் சூப்பர் அப்போ இன்னைக்கு லேடீஸ்க்கு ரெஸ்ட் நா சமைக்குறேன் “, என தமிழ் கூற,

“அதெல்லாம் வேண்டாம்டா நானே பண்றேன் நீ உக்காரு..”

“ம்மா சொன்னா சொன்னது தான்..மாறா வாடா “, என அழைக்க,

“ஏன்டா வயசான காலத்துல என்ன மாட்டி விடுறீங்க”, என கேசவன் கூற,ராஜியே வாய் பிளந்தாள்..

”மாமா நீங்க சமைப்பீங்களா???”

“அண்ணி இவ்ளோ ஷாக் ஆகாதீங்க நாதான் சமைப்பேன் அப்பாவும் மாறனும் எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க “, என்றவாறு ஆண்கள் சமையலறைக்குச் செல்ல,

சரோஜா சிரித்தவாறே , ”தமிழ் வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடி வர எல்லா பௌர்ணமியுமே இப்படிதான்..

என்ன கிச்சன் பக்கமே விடமாட்டாங்க ஆனா சும்மா சொல்லகூடாது தமிழோட கைப்பக்குவம் அப்படியே எங்க மாமியாரோடது மாதிரியே இருக்கோம்..

இப்படி ஒரு முரடனுக்கு எப்படி சமைக்குறதுல ஆர்வம் வந்ததுனு இப்போ வரையுமே எனக்கு தெரில ஆனா அதே நேரம் நாம செய்றது நல்லாயிருக்கோ இல்லையோ அமைதியா சாப்ட்டு எழுந்து போய்டுவான்..

அவன் சாப்ட்ற அளவ வச்சே நல்லாயிருக்கா இல்லையாநு கண்டுபிடிச்சுறலாம்…

அனைத்தையும் கவனமாய் கேட்டு கொண்டிருந்தவள் தன்னவனை எட்டிப் பார்க்க மும்மரமாய் ஏதோ செய்து கொண்டிருந்தான்..

அடுத்த ஒரு மணி நேரத்தில் சமையல் முடித்து வெளியே வந்தவன் குளித்து தயாராகி வர அனைவருமாய் மொட்டை மாடிக்குச் சென்றனர்..

வட்டமாய் அனைவரும் அமர சரோஜா நடுவில் அமர்ந்து  ஒரு பாத்திரத்தை  கையிலெடுத்தார்..

சாதத்தில் குழம்புவிட்டு பிசைந்து உருட்டி ஒவ்வொருவருக்காய் கையில் வைக்க உணவு தானாய் உள்ளே சென்றது..

அடுத்ததாய் தயிர் சாதமும் கொடுக்க நிர்பயாவிற்கு மனம் அந்த சந்திரனைவிட குளுமையாய் இருப்பதாய் தோன்றியது..

அந்த அழகான கூட்டில் தன்னையும் இணைத்ததற்கு கடவுளுக்கு மனமாற தன் நன்றிகளைத் தெரிவித்தாள்..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

Kavi Natarajan August 27, 2026 - 8:26 am

💞💞💞💞💞💞💞💞

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode