அனைவருமாய் தயாராகி கோவிலை அடைய சாதாரண நாள் என்பதால் கூட்டம் இல்லாமல் இருந்தது. அவர்களுக்காக காத்திருந்த அர்ச்சகர் அவர்களை பார்த்ததும் பூஜையை தொடங்கினார்.

கடவுளை மனமாற வேண்டிக் கொண்டவள் தன்னருகில் வேஷ்ட்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்திருப்பவனை அவ்வப்போது கடைகண் பார்வையால் தனக்குள் பதித்து கொண்டாள்.

அடிக்கடி அவள் பார்வை தன்னை உரசிச் செல்வதை அவனும் உணர்ந்து கொண்டு தான் இருந்தான்.

கொஞ்சம் கொஞ்சம் அவள் மனதில் தனக்கான இடம் அமைவது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது..

பூஜையை முடித்து மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்து அவர்கள் சாப்பிட்டு விட்டு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

வீட்டிற்கு வரும்போது மணி மூன்றை எட்டியிருக்க பெரியவர்கள் சற்று ஓய்வெடுக்கச் teசெல்ல தமிழும் வெற்றியும் மண்டப அலங்கார சம்மந்தமாய் வெளியே சென்றிருக்க காவியாவை தான் பார்த்துக் கொள்வதாய் கூறி ராஜியை தூங்கச் செல்லுமாறு அனுப்பினாள் நிர்பயா..

“காவியா குட்டி இன்னைக்கு சித்தி கூட விளையாடுவாங்களாம் ஓ.கே வா??”

“ஹே ஜாலி ஓ.கே நிபி சித்தி.. என்ன விளையாடலாம்.. ம்ம் நீ ஓடு நா உன்னை பிடிக்குறேன் ஓ.கே யா??”

ஓ.கே மை பேபி கேர்ள் ரெடி என்னை பிடி பாப்போம் என மெதுவாய் ஹாலைச் சுற்றி வர பிஞ்சு கால்களின் கொலுசொலி ரம்மியமாய் கேட்க அவளை சுற்றி வந்தாள் குட்டி தேவதை.

சிறிது நேரத்தில் அவளுக்கு அது போரடித்து விட சென்று சோபாவில் அமர்ந்து விட்டாள்..

“நிபி இந்த கேம் போரடிக்குது..”

“அச்சச்சோ ம்ம் என்ன பண்ணலாம்??”, என அவளை போலவே யோசிக்க,

“நாம ஹைட் அண்ட் சீக் விளையாடலாம்.. நீ கண்ணை கட்டிகிட்டு என்னை பிடிக்க வா பாக்கலாம்..”

ம்ம் சரி ஓ.கே நா கண்ணை கட்டிக்குறேன் என தன் துப்பட்டாவை எடுத்து கண்ணை கட்டியவள் அவளை கைகளால் தேடியவாறே சுற்ற அவளிடம் மாட்டாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தாள் சிறியவள்..

ஏதேதோ பேசியவாறே தேடிக் கொண்டிருந்தவளுக்கு கொலுசு சத்தம் கேட்காதது உரைக்க சட்டென கண்கட்டை அவிழ்த்து காவியா என திரும்ப வாசலில் தமிழ் நின்று கொண்டிருந்தான். அசடு வழிந்தவளாய் காவியா.. என இழுக்க,

மாடிக்குச் சென்று விட்டதாய் விரலுயர்த்தி காட்டினான்.. சற்றே அருகில் வந்தவன்,

“காவியாவோட சித்தப்பா அவள விட நல்லாவே விளையாடுவான் உனக்கு ஓ.கேனா நா ரெடி”, என அவள் துப்பட்டாவை கையிலெடுக்க,

சற்றே பின்னாடி பார்த்தவள் இதோ வரேன்ம்மா என கூற பின்னே திரும்பி அவன் பார்ப்பதற்குள் துப்பட்டாவை உருகிக் கொண்டு ஓடிவிட்டாள்..

போலீஸ்காரனையே ஏமாத்துறியா அடுத்த தடவை மாட்டும் போது இருக்கு என அவன் கூறியதை கேட்டவளுக்கு உதட்டோரமாய் புன்னகையெழுந்தது.

அன்று மாலையும் சரோஜா அவளுக்கு அலங்காரம் பண்ணிவிட தமிழ் இருவரையும் கிண்டலடித்துக் கொண்டிருந்தான்..

இப்படியாய் அடுத்த இரண்டு நாட்களும் கழிய நிர்பயாவிற்கு மெஹந்தி இடுவதற்கு பார்லர் பெண்கள் வந்திருக்க அவள் கை கால்கள் முழுவதும் வடஇந்திய முறையிலேயே மெஹந்தி போட்டுவிட்டனர்..

அனைவரும் பரபரப்பாய் திருமண வேலைகளில் ஈடுபட்டிருக்க தான் இப்படி அமர்ந்திருப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது..

இருந்தும் யாரும் எதுவும் கூறவில்லை..ராஜி அவ்வப்போது அவளுக்கு தண்ணீர் சாப்பாடு என கொண்டுவந்து கொடுத்தாள்..

தமிழ் வழக்கமான அவன் பாணியில் அவளை சீண்டிக் கொண்டிருந்தான்..

ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை மிக மிக அழகானதாய் மாறிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தாள்..

நாளை திருமணம் என்ற நிலையில் ஓரளவு நெருங்கிய சொந்தங்கள் காலையிலேயே வீட்டிற்கு வந்து விட பேச்சும் அரட்டையுமாய் ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர்..

நிர்பயா வயதொத்த பெண்கள் இருவர் வந்திருக்க அவர்களோடு அவளுக்கு பொழுது கழிந்தது காலையிலிருந்து தமிழ் கண்ணிலேயே படவில்லை..

மண்டபத்தில் தன் நண்பர்களை சந்திக்கச் சென்றிருப்பதாக மெசெஜ் அனுப்பியிருந்தான்..

மதிய உணவு முடிந்து சிறிது நேரத்தில் பார்லரிலிருந்து பெண் வந்துவிட்டிருந்தார்..

மாடியில் தனதறையில் வைத்து ஒப்பனையை ஆரம்பிக்க நேரம் ரெக்கை கட்டி பறந்தது..

மேக்கப் முடித்து அப்போது தான் சரோஜா கொடுத்த உடை பையையே திறந்தாள்..

அழகிய அரக்கு நிற லெஹன்கா சோலியில் தங்க ஸரி வேலைப்பாடுகள் அமைந்திருக்க தங்க நிற ப்ளவுஸும் இரண்டு வண்ணமும் கலந்தவாறான துப்பாடாவும் கொண்டு அழகாய் இருந்தது..

மனம் கொள்ளா பூரிப்போடு அதை அணிந்தவளுக்கு தேவையான குந்தன் நகை செட் முழுவதையும் அணிந்துவிட்டார் அந்த பெண்..

தலையை உயர்த்தி கொண்டை போட்டிருந்ததால் துப்பட்டாவின் ஒருமுனையை பின்தலையை மறைத்தவாறு போட்டு பின் செய்ய நிர்பயாவிற்கு தன் அன்னை நியாபகம் வந்தது..

அவரின் திருமணத்தின் போது இப்படிதான் அவர் உடையணிந்திருந்த நியாபகம்..

கண்கள் ஈரத்தால் நனைய சட்டென தன்னைதானே தேற்றிக் கொண்டவள் கட்டிலின் நுனியில் மெதுவாய் அமர்ந்தாள்..

ப்யூட்டிஷியன் அவளிடம் விடைபெற்று கிளம்ப கதவை லேசாய் சாத்தி விட்டு செல்ல கூறினாள்..

அவள் சென்ற சில நிமிடங்களில் கதவை யாரோ லேசாய் தட்ட,சரோஜாவாக இருக்கும் என்றெண்ணி,கதவு திறந்துதான்ம்மா இருக்கு என குரல் கொடுத்தாள்..

அப்படியாம்மா??என உள்ளே வந்தவன் வாய் பேசவும் மறந்து நின்றான்..

“நீங்களா சாரி.. ட்ரெஸ் ரொம்ப ஹெவியா இருந்ததால..”

“அடப்பாவிங்களா ஊருக்கு வந்த ஆறே நாள்ல என் அழுமூஞ்சி பொண்டாட்டிய இப்படி மாத்தீட்டீங்களே..

ஏ ரசகுல்லா அடையாளமே தெரில.. இப்படிதான் கல்யாணத் தன்னைக்கு பொண்ணுங்க எல்லாரும் புருஷன ஏமாத்துரீங்களா??”

“ஏன் செல்வா ரொம்ப மேக்கப் போட்டுருக்காங்களா??நல்லாயில்லையா??”, என முகம் சுருங்க கேட்டவளை நெருங்கியவன் தோள்பற்றி தன்னருகில் இழுத்தான்..

“ஏன் உடனே ஆப் ஆகுற.. தேவதை மாதிரி இருக்க போதுமா??ஆனா எனக்கு எப்பவுமே அழுமூஞ்சிய தான் பிடிக்கும்”, என அவளுயரத்திற்கு குனிந்து கூற, சற்றும் தாமதிக்காமல் தன்னவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள். ஒருமுறை இறுக அணைத்து விடுவித்தவன்,

“சரி நிரு நா போய் ரெடி ஆய்ட்டு வரேன்..ம்ம்??நா என்னோட ஷெர்வானிய எடுத்துட்டு போக தான் வந்ததே..

இன்னைக்கு ஒருநாள் தான் இந்த உள்ளே வெளியே விளையாட்டு..

நீ கீழே இருக்குறப்போ நா ரூம்க்கும் நா கீழே இருக்குறப்போ நீ இங்கேயும்னு.. முடில. கரெக்ட் தான?”, என கேட்க, குனிந்தவாறே சம்மதமாய் தலையசைத்தாள்..

கீழிறங்கி வந்தவளை பார்த்த சரோஜாவிற்கும் ராஜிக்கும் தமிழின் ஒரு முடிவு ஒரு பெண்ணின் வாழ்வை எத்தனை அழகாய் மாற்றிவிட்டது என பெருமையாய் தோன்றியது..

அவளோடு அதை பகிர்ந்து கொள்ள தோன்றினாலும் இருக்கும் உறவினர்கள் முன் அதை காட்டிக் கொள்ளாமல் அவளை அழைத்துச் சென்றனர்..

அதன் பிறகு அவள் அவனை சந்தித்தது மணமேடையில் தான்..

தங்கநிற ஷெர்வானி அவன் உயரத்திற்கும் உடல்வாகுக்கும்மிகப் பொருத்தமாய் இருந்தது..

அவள் பெற்றோரும் காதல் திருமணம் என்பதால் அவ்வளவு சொந்தபந்தங்களை அவள் பார்த்ததேயில்லை..

எவ்வளவு உறவுகள் எவ்வளவு பரிசுகள் எத்தனை எத்தனை ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும் இப்படி ஒரு அற்புதமான நிகழ்வுகளை தன் மனப் பெட்டிக்குள் பத்திரமாய் பூட்டி வைத்துக் கொண்டாள்..

ஒருவழியாய் ரிசெப்ஷன் போட்டோ ஷீட் என அனைத்தையும் முடித்து கீழிறங்க மணி இரவு 10 ஆகிவிட்டது..

நிர்பயா மிகவும் சோர்வாய் தெரிய மணமகள் அறையில் சென்று அவளை உறங்கச் சொல்லி சரோஜா அனுப்பி வைத்தார்..

நீண்ட நாட்களுக்குப் பின் படுத்தவுடன் அன்று தான் உறங்கியிருக்கிறாள்..

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு ராஜியின் குரல் எங்கோ ஒலிப்பதாய் தோன்ற லேசாய் அசைந்தவள் ராஜியை பார்த்து எழுந்தாள்..

“அண்ணி..”

“எழுந்துக்கோடா மணி 4 ஆய்டுச்சு இப்போவே குளிச்சாதான் தலை கொஞ்சமாவது காயும்.. போ குளிச்சுட்டு வா”, என்று கூறி அனுப்பி வைத்தாள்.

குளித்து முடித்து வந்தவளை ஃபேனிற்கு கீழே உக்கார வைத்து தலையை உலர வைத்து குடிப்பதற்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்..

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி..”

“இதுல என்னடா இருக்கு என் கல்யாணத்துல எங்க அண்ணி பண்ணாங்க நா உனக்கு பண்றேன்..

ஆமா எங்க கஸ்டம்ஸ்லா எப்படியிருக்கு??உனக்கு ரொம்பவே புதுசா இருக்கும் இல்ல?”

“ம்ம் ஆமா அண்ணி ரொம்பவே..பட் எல்லாமே அழகாயிருக்கு..இப்போதான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன்..”

ம்ம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே சரோஜா உள்ளே வந்தார்..

”ரெண்டு மருமகளும் காலைலேயே என்ன கதை பேசிட்டு இருக்கீங்க??”

“அது வேற ஒண்ணுமில்ல நம்ம அத்தை ரொம்ப கொடுமைகாரங்க என்ன ரொம்ப வேலை வாங்குறாங்கனு சொல்லிட்டு இருக்கேன்”, என ராஜி சிரிக்க,

“அதுசரி நீயே நேத்து கல்யாணம் பண்ணி வந்தமாதிரி விளையாடிட்டு இருக்க உனக்கு 5 வயசுல பொண்ணு இருக்குனா நம்புற மாதிரியா இருக்கு.. “

“என்ன பண்றது அத்தை நீங்க அப்படி செல்லம் குடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க”, என மீண்டும் அவரை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்..

சிறிது நேரத்தில் யாரோ அழைப்பதாய் சரோஜா செல்ல,

“எப்படி அண்ணி அம்மா இவ்ளோ ஜாலி டைப்பா இருக்காங்க..மாமியார் மாதிரியே பழக மாட்றாங்களே..”

உண்மைதான் நிர்பயா..எங்கம்மா கூட என் மேல கோப பட்டுருக்காங்க ஆனா அத்தை இத்தனை வருஷத்துல ஒருதடவை கூட குரல் உயர்த்தி கூட பேசினது இல்ல..

அவங்களுக்கு பசங்கதான் உலகமே..அதுமட்டுமில்லாம பொண்ணுணா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம் சொன்னா நம்பமாட்ட காவியா பொறந்தப்போ என் வீட்டு ஆளுங்ககூட பொண்ணானு வருத்தப்பட்டாங்க ஆனா அத்தை அத்தனை பேருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினாங்க தெரியுமா..

கேட்டதுக்கு எல்லாருமே பையனை பெத்துட்டா வருங்காலத்துல பையனுக்கு பையனே கல்யாணம் பண்ணி வைப்பீங்களா என்ன அப்படினு நோஸ்கட் கொடுத்துட்டாங்க..

என்கிட்ட வந்து பொலம்புவாங்க என்ன உலகமோ தன்னை பெத்தவ ஒரு பொண்ணு,கட்டிட்டு வந்து குடும்பம் நடத்த பொண்ணு ஆனா பிறக்குற குழந்தை மட்டும் ஆணா இருக்கனுமாம் என்ன உலகமோனு சொல்லுவாங்க..

இந்த மாதிரி சௌத் சைட்ல இருக்குறவங்கல ப்ராட் மைண்ட்டா இருக்குறவங்க ரொம்ப ரேர் தான்..அவ்ளோ ஸ்வீட் அவங்க..

கேட்டவளோ வாயடைத்து போனாள்..”ரொம்பவே க்ரேட் அண்ணி..நாம ரெண்டு பேரும் முக்கியமா நா ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவ அண்ணி..”

ம்ம் என்றவள்,” அடடா இன்னைக்கு உனக்கு தான கல்யாணம் நா பாட்டுக்கு உக்காந்து கதை பேசிட்டு இருக்கேன்..

நா போய் ப்யூட்டிஷியன் எப்போ வருவாங்கநு கேக்குறேன்..”, என வெளியே ஓடினாள்..

அதன்பின் கல்யாண பரபரப்பு அனைருக்குமே ஒட்டிக் கொள்ள யாருக்கும் நிற்காமல் நேரம் பறந்து கொண்டிருந்தது..

மணமகன் மேடையில் பட்டுவேஷ்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்து மந்திரங்களை கூட விரைப்பாய் கூறிக் கொண்டிருந்தான்.. ராஜி மெதுவாய் அவனருகில் சென்று,

“அதெப்படி தம்பி நிர்பயாட்ட மட்டும் அவ்ளோ ஜாலியா ரெமோவா இருக்கீங்க,ஐயர் என்ன உங்க சொத்தையா கேட்டாரு மந்திரம் தான கொஞ்சம் சிரிச்ச முகத்தோட தான் சொல்றது உங்க அந்நியன் லுக்க பாத்து பயந்து போய் இருக்காரு பாருங்க..”,என்றவளை பார்த்து அசடு வழிந்தவன் சற்றே முகத்தை தன்மையாய் வைத்துக் கொண்டான்…

மணபெண்ணை அழைத்து வர ஐயர் கூற அழகிய மாதுளை விதை நிற பட்டுபுடவையில் தங்க ஜரி வேலைகள் நிறைந்திருக்க அதற்கேற்றவாறு தங்க நிற நகைகள் அலங்கரிக்க அழகாய் தன்னருகில் வந்து அமர்ந்தவளை பார்த்து மெல்லிதாய் அவன் புன்னகைக்க லேசாய் சிரித்தவளின் முகத்தில் அதையும் மீறிய கவலையேதோ இருப்பதாய் தோன்றியது..

 இருப்பினும் அப்போது எதையும் பேச முடியாது என்பதால் அமைதியாகிவிட்டவன் ஐயர் கொடுத்த திருமாங்கல்யத்தை அனைவரின் ஆசீர்வாதமும் அட்சதைகளாய் தங்கள் மேல் விழ நிர்பயாவின் கழுத்தில் அணிவித்தான்..

கண்கள் குளமாய் தன்னவனை ஏறிட்டவளுக்கு அவனின் கண்களே ஆயிரம் சமாதானங்களை அளித்தது..

அதன்பின் அனைத்து சம்பிரதாயங்கள், வந்தவர்களின் வாழ்த்துக்கள் என நேரம் ஓடிவிட இருவருக்கும் தனிமையில் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது.

அனைத்தும் நல்லபடியாய் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.. நிர்பயாவை அழைத்து பூஜையறையில் விளக்கேற்ற கூற விளக்கேற்றி முடித்தவள் அதன் பின்னும் ராஜி அல்லது சரோஜாவை விட்டு அங்கு இங்கு நகரவில்லை..

இரவு சம்பிரதாயத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இருந்த ஓரிரண்டு விருந்தனர்கள் வழக்கமான நகைச்சுவையோடு அவளை கிண்டலடித்துக் கொண்டிருக்க அவளுக்குத் தான் நெருப்பின் மேல் நிற்பதாய் இருந்தது.

அதன் பின் ராஜி வழக்கம்போல் பேச்சை மாற்றி அவளுக்கு சாதாரண புடவை அணிவித்து தளர பின்னி பூ வைத்து தயார் செய்ய சரோஜா பால் சொம்பை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து திருஷ்டி கழித்து நெற்றியில் முத்தம் கொடுத்து அனுப்பினார்..

நிர்பயாவோ மொத்தமாய் தனக்குள் உடைந்து போயிருந்தாள்..தன் நிலைமையை யாரிடம் கூறுவது..தன் மனநிலை யாருக்கும் புரிகிறதா இல்லையா?? வழக்கமான சடங்குகளுக்கு தயார் பண்ணுவதில் எந்த மாற்றமும் இல்லாமல் தனக்கும் செய்கிறார்களே என ஏகப்பட்ட பயத்தோடும் குழப்பத்தோடும் மாடிக்குச் சென்றாள்..

வெளிக்கதவை பூட்டிவிட்டு திரும்பியவள் தனதறையை பார்க்க லேசாய் திறந்தவாறு இருந்தது..கட்டில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க ஊதுபத்தியின் நறுமணம் நாசியை துளைத்தது..

கைகள் நடுங்க கதவை திறந்தவள் அவளுக்கு முதுகுகாட்டி அமர்ந்தவனை கண்டு இன்னுமாய் நடுக்கம் கொண்டாள்.. மெதுவாய் கதவை தாழிட்டு திரும்பியவளை கண்டு தமிழ் எழுந்து அவளருகில் வந்தான்..

அவளை பார்த்தவனுக்கோ மனம் வலித்தது..எத்தனை பயம் எத்தனை நடுக்கம் அவளிடத்தில் விரல் படாமல் அவள் கையிலிருந்து சொம்பை வாங்கியவன் அங்கிருந்த டேபிளில் வைக்க இன்னமும் அவளிருந்த இடத்தை விட்டு நகரவில்லை..

“நிரு…”

“ஆஆங்ங் சொல்லுங்க..”

“ஏன் இப்படி பயப்படுற நத்திங் டூ வொரி கம் டவுண்.. மொதல்ல உக்காரு”, என கட்டிலை காட்ட, மறுப்பேதுமில்லாமல் அமர்ந்தாள்.. சற்று தள்ளியே அமர்ந்தவன் மெதுவாய் அவளிடம்,

“எனக்காக ஒண்ணு பண்றியா??”

“சொல்லுங்க..”

“எதையும் போட்டு குழப்பிக்காம உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காம என் மடில தலை சாய்ச்சு நிம்மதியா தூங்குறியா??”

அவன் முடித்த அடுத்த நொடி கண்கள் விரிய அப்பட்டமான அதிர்ச்சியோடும் நிம்மதியோடும் அவனைப் பார்த்தாள்..

“ப்ப்பாபா எவ்ளோ பெரிய கண்ணு..நானே உள்ளே போய்டுவேன் போல இருக்கே..”

என்றவனிடம் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அவன் தோள் சாய்ந்து கதற ஆரம்பித்திருந்தாள். நிச்சயமாய் இது அவளுக்கு தேவையென உணர்ந்தவன் மறுக்காமல் தன்னோடு சேர்த்துக் கொண்டான். சில நிமிடங்களில் அவன் கண்களே லேசாய் சிவக்க ஆரம்பிக்க அதை கட்டுப்படுத்தியவன் அவளை நிமிர்த்தி,

“போதும் நிரு..ரொம்பவே அழுதாச்சு இனி நீ அழவே கூடாது அதுக்காகதான் இப்போ உனக்கு டைம் கொடுத்தது..

நா இருக்கும்போது நீ எதை நினைச்சு இப்படி பயப்படுற..  காலைலேயே உன் முகம் சரியில்ல.. அம்மா அப்பாவ மிஸ் பண்றியோனு நினைச்சேன்.. பட் இப்போ வர உன் முகம் ஏன் இப்படியிருக்கு..”

“செல்வா..”

“ம்ம் அப்பப்போ இப்படி கூப்டே சரி கட்டிருவியே சரி சொல்லு”, என தன் தோள் சாய்த்துக் கொண்டான்..

நீங்க நினைச்சது சரிதான் அப்பா அம்மாவ ரொம்பவே மிஸ் பண்ணேன்தான்..ஆனா நேரம் ஆக ஆக வேற மாதிரியான பயம் வந்துடுச்சு..

கல்யாணத்துக்கு என் மனசு மாறினதுக்கு காரணமே நீங்க தான் ஆனா குடும்ப வாழ்க்கைக்கு நா இன்னும் மனசளவுல தயார் ஆகல..அதை யார்கிட்ட சொல்றதுநு தெரில..சொல்லவும் பிடிக்கலை..

ஈவ்னிங்ல இருந்தே இந்த அலங்காரம் இதெல்லாம் பாத்தவுடனே ரொம்ப கஷ்டமாய்டுச்சு..அம்மா புரிஞ்சுப்பாங்கனு நினைச்சா அவங்களும் ஒண்ணும் சொல்லாம பாலை கையில கொடுத்து அனுப்பிட்டாங்களா.. அதான்.. என்றுகூறி தலை நிமிர்த்தி அவனைப் பார்க்க..

ம்ம் புரியுது நிரு..பட் அம்மா என்கிட்ட உனக்காக நிறையவே பேசினாங்க அதுவும் போக இருக்குற ஒண்ணு ரெண்டு ரிலேட்டிவ்ஸ்க்கு எதுவும் தப்பா பட்றகூடாது.. அதைவிட அப்பாவுக்கும் மாறனுக்குமே எதுவும் உறுத்திட கூடாதுல அதுக்காக தான் இதெல்லாம்…

மத்தபடி..ஐ வில் ப்ராமிஸ் யூ உன் விருப்பமில்லாம நம்ம ரூம்குள்ள உன் மேல புருஷனா நா எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன்..தைரியமா இரு சந்தோஷமா இரு..

உன்னோட நல்ல ப்ரெண்டா அட்த சேம் டைம் அப்பப்போ கொஞ்சம் டீஸ் பண்ணிட்டு சமத்தா இருப்பேன்..ஓ.கே தான??போலீஸ்காரன் ம்மா சொன்ன பேச்சை காப்பாத்துவேன் நம்பலாம்,என தன்னை பார்த்தவனை கண்டு பேச நா எழாமல் இறுக்கமாய் அவனை கட்டிக் கொண்டாள்..

அதை எதிர்பாராதவனோ இன்னுமாய் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..சில நொடிகளில் தன் பிடியை தளர்த்தியவன் அவள் இன்னமும் அசையாமல் இருப்பதை கண்டு,

“ஹே ரசகுல்லா,இன்னுமும் இப்படியே இருந்தா லத்தி பிடிக்குற கை..முருங்கைக்காய் மாதிரி இருக்குற உன் எலும்பு உடைஞ்சுரும் பரவால்லையா??”,என காதில் கிசுகிசுக்க சட்டென விலகியவள் முகத்தை திருப்பியவாறே சுவரருகே போய் நிற்க,

“போ நிரு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து படு காலைல லேட்டா எழுந்தா அதுக்கும் உன்னைதான் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க”, என்றவாறு தனக்கான உடையை கையில் எடுத்தான்.

இரவு உடைக்கு மாறியவள் அவன் கூறியவாறே அவன் மடியில் தலைசாய்த்து உறங்கத் தொடங்கினாள்..கண்களில் வழிந்த நீர் அவன் கால் தொட அதை துடைத்தவாறே தன் மடியிலிருந்தவளை கணவனாய் தந்தையாய் நல்ல நண்பனாய் வாழ்வு முழுவதும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெண்ணியவாறே தட்டிக் கொடுத்தான்..

காலையில் அரைகுறையாய் விழித்தவள் எழ எத்தனிக்க ஏதோ கடினமாய் தோன்ற தன்னவனின் கரம் என்பதை உணர்ந்தவளுக்கு முகம் தானாய் சிவந்தது..

இரவு முழுவதும் இப்படி அவன் கையணைப்பிலேயே தூங்கியிருக்கிறோம் என்பதை நினைத்தவளுக்கு அவனை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என வெட்கம் எழ மெதுவாய் அவன் கையை விலக்கியவள் எழுந்துகுளிக்கச் சென்றாள்..

குளித்து தன்னிடமிருந்த நல்ல சுடிதாராய் ஒன்றை எடுத்து அணிந்து வந்தவள் தலையை உலர வைத்து கீழே செல்ல எத்தனிக்க தமிழ் மெதுவாய் புரண்டு படுத்தான்..பக்கத்தில் தன்னவளை காணாமல் அறையில் பார்க்க

“அதுகுள்ள ரெடி ஆய்டியா குட் மார்னிங்”, என சாதாரணமாய் கூற,

“குட்மார்னிங்க..நா கீழே போறேன்..”

“இப்படியே வா???”

“ஏன் என்னாச்சு??”

கண்களை கசக்கிய வாறே எழுந்தமர்ந்தவன்,”என்னாச்சா??கல்யாணம் ஆன மறுநாள் சுடிதாரோட கீழே போன பக்கத்து வீட்டு கிழவி இருக்கே அது ஒண்ணு போதும் ஊரை கூட்டி தேரை இழுத்துரும்.. எதாவது பட்டு புடவையை எடுத்து கட்டிட்டு போ..”, என சோம்பல் முறிக்க,

பெண்ணவளோ தலையை சொரியாத குறையாய் நின்றாள்.

“அது வந்து…”

“என்னாச்சு?”

“இல்ல வந்து எனக்கு புடவை கட்டத் தெரியாது.”,.என திக்கித் திணறி கூற கேட்டவனோ சிரித்தே விட்டான்..

“அடிப்பாவி அப்போ போனவாரம் புல்லா புடவை கட்டியிருந்தியே????”

“அது அம்மா கட்டிவிட்டாங்க..”

“சரியா போச்சு போ..சரி எதாவது புடவையை எடுத்துட்டு வா..நா கட்டிவிட்றேன்..”

“ஆஆஆங்ங்ங்ங்”

“ஏ ரசகுல்லா கண்ணை உருட்டாத நா வேணா கண்ணை மூடிட்டே கட்டிவிட்றேன் எடுத்துட்டு வா..”,என கூற என்ன செய்வதென தெரியாமல் அலமாரியை துழாவினாள்..

“அய்யோ இதெல்லாம் முதல்லயே யோசிச்சு அம்மாகிட்ட கத்துருக்க வேண்டாம்..எனக்கு அறிவேயில்ல..என்ன பண்றது இப்போ..”, என அர்ச்சனை செய்தவாறே ஒரு புடவையை கையிலெடுக்க அதற்குள் அவன்,

“எடுத்துட்டியா எவ்ளோ நேரம்”,என விழி மூடி நிற்க மெதுவாய் அவன் கைப்பிடித்து புடவையை அவன் கையில் கொடுத்தாள்..

புடவையை விரித்து தடவிப் பார்த்து சரியாய் எடுத்தவன் அவளிடம் கொடுத்து அணிய சொன்னான்..கொசுவ மடிப்பு வைத்து அவளிடம் கொடுத்து முந்தானையை சிங்கிள் ப்லீட்டாக விட்டு பின் செய்து விட்டு கண் திறந்தான்..

பெண்ணவளோ மொத்தமாய் உருகிப் போயிருந்தாள்..அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தவன் கீழ்மடிப்பை சரிசெய்துவிட பொறுக்கமாட்டாமல் அவனையே கேட்டாள்..

“எப்படி நீங்க இவ்ளோ நல்லா…”,எனும் போதே எழுந்தவன் அவளை கண்ணாடி முன் நிறுத்தி அவள் பின் நின்று,

“அக்சுவலா ஸ்கூல் காலேஜ்ல என்சிசி கேம்ப் போறப்போ கல்சுரல்ஸ்காக எங்க பசங்களுக்கு லேடி கெட்அப் போடுவோம்..

அதுக்காக அம்மாகிட்ட கத்துகிட்டது..ரொம்ப வருஷம் ஆச்சு..நீ அம்மாகிட்ட போய் சரியா கட்டிக்கோ..ம்ம்..அப்பறம் நாதான் கட்டிவிட்டேன்னு போய் சொல்லிடாத தலையில் இடித்து திருப்பியவன் நெற்றியில் இதழ் பதித்து அனுப்பினான்.. நீ போ நா ரெடி ஆய்ட்டு வரேன்..”, என்றவனுக்கு தலையசைத்து வெளியே சென்றாள்..

அவளைப் பார்த்த சரோஜாவும் ராஜியும் அர்த்தமுள்ள பார்வை பார்த்து சிரிக்க இன்னுமாய் முகம் சிவந்து போனது பெண்ணவளுக்கு..

“அத்தை பாத்தீங்களா உங்க மருமகப் பொண்ணு ஒரே நாள்ல புடவை கட்டிக்க படிச்சுட்டா??”,என ராஜி கூற,

“அண்ணிணிணி..”

அடடா ஒரு நாளுக்கே இவ்ளோ வெட்கமா ம்ம் ஆனாலும் அந்த போலீஸ்காரன் அடங்கி போற ஒரே ஆளு நீயாதான் இருப்ப போல.. இதேபோல எப்பவுமே சந்தோஷமா இருங்க அதுபோதும் எங்களுக்கு என சரோஜா தன் இரு மகள்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

Kavi Natarajan August 26, 2026 - 4:45 pm

👌👌👌👌👌👌👌👌👌

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode