மலர்-9

by ஸ்ரீ
4 comments 253 views
A+A-
Reset

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை

விளக்க உரை: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

திருமண வேலைகள் ஒரு புறம் ஆரம்பித்திருக்க திருவிழாவும் நெருங்கியது. கலைச்செல்வி தாமோதரனோடு கார்த்திகேயனுமே இந்த வருடத் திருவிழாவிற்காக மதுரை வந்து விட்டிருந்தனர்.

இளசுகளின் பேச்சும் சிரிப்புமாய் வீடு நிறைந்திருக்க பெரியவர்கள் அனைவரும் பேச்சும் சமையலும் என பொழுது கழிந்தது.

“அப்பறம் கார்த்தி.. தங்கச்சி என்ன சொல்றா?!”

“ஒரு வழியா இரண்டு வீட்டுகாரங்களும் பேசி சம்மதிச்சுட்டாங்க டா மச்சி.. ஷப்பா ரொம்ப கஷ்டம் டா இவங்களோட”

“ஓய் கார்த்தி மாமா எங்களுக்கு எல்லாம் ட்ரீட் வைக்குறேன்னு சொல்லிருந்த தான?”

“அதுக்கென்ன கொடுத்துட்டா போச்சு இன்னைக்கு ராத்திரி ஹோட்டல் சாப்பாடு என் செலவு.”

“சூப்பர் அண்ணே இரண்டு பேரும் கடையிலிருந்து சீக்கிரம் வந்துருங்க..”

“இல்ல பாப்பா நீங்க போங்க திருவிழா நேரம் கூட்டம் அதிகமா இருக்கும்.”

“ஆமா இவனுங்க இல்லைனால் அப்படியே கடையே ஓடாது பாரு. உன்ட்ட என்ன பேச்சு.. நான் அப்பாட்ட சொல்றேன்.”, என்றவள் தந்தைக்கு அழைத்துப் பேசுவதற்காக ஓடினாள்.

“ஜாலி இனி பெரியப்பா ஒண்ணும் சொல்ல முடியாதே நான் இப்போ இருந்தே பட்டினி அப்போ தான் நைட் ஒரு கட்டு கட்டலாம்.”, என்று மாறன் கூற மற்ற இருவரும் சிரித்தனர்.

தன்னைத் தாண்டி ஓடியவளைப் பிடித்து நிறுத்தினார் கலைச்செல்வி.

“அந்தக் காலு நிக்கவே நிக்காதா டி. இங்கே வா”, என்றவர் மல்லிச் சரத்தை மங்கையின் தலையில் சூட்டிவிட்டார்.

“தேங்க்ஸ் அத்தே. நைட் நாங்க எல்லாம் வெளியில் சாப்பிட போறோம் அப்பாகிட்ட சொல்லிட்டு வரேன்.”, என்றவள் தனது கைப்பேசியை எடுக்க ஓடினாள்.

“பாப்பா ஊருக்கெல்லாம் போனால் உங்களுக்கு எல்லாம் வீடே வெறிச்சோடி போகும் இல்லை மா?”

“ஆமா ஆமா எப்போ பாரு தைய்ய தக்கானு குதிச்சுகிட்டே தான இருக்கா! பொட்ட புள்ளையா ஒரு அடக்க ஒடுக்கமும் கிடையாது.”

“ஆனாலும் நீ அவளை எதாவது சொல்லிட்டே இரு மா. தங்கம் போல இருக்குற பிள்ளையைச் சொல்ல எப்படி தான் மனசு வருதோ?””

“அடிப்போடி கூட இருந்து பாரு அவ பண்ணுற அழிச்சாட்டியம் எல்லாம் தெரியும்.”

மாலை, திருமா வளவனும் நெடுமாறனும் நேராக ஹோட்டலுக்கு வந்து விடுவதாய் கூறிவிட கார்த்திகேயனும் மங்கையுமாய் வீட்டிலிருந்து கிளம்பினர்.

வழக்கமான தனது உடையான ட்ரக்ஸூம் ஓவர் சைஸ் டிஷர்ட்டுமாய் கிளம்பி நின்றவளை சக்தி இருந்தால் பூங்கோதை பார்வையாலேயே எரித்து விடுவதாய் பார்த்து வைத்தார்.

கண்ணாலேயே கெஞ்சி கொஞ்சி பாட்டியை சரிகட்டிவளாய் கார்த்திகேயனோடு காரில் ஏறிக் கொண்டாள்.

ஆனாலும் உன்னையும் அம்மாச்சியையும் உட்கார வைச்சா எங்களுக்கு எல்லாம் நல்ல பொழுது போகும் பாப்பா..”

“நீ வேற மாமா எனக்கே கொஞ்சம் பயம் தான் என்னைக்கு என்னை கட்டையை எடுத்து அடிக்கப் போகுதோ தெரில. பேர் தான் ஃப்ளவர் ஆனால் வெரி டெரர்.”, என்று நக்கல் செய்தவளோடு சிரித்தவனாய் காரை அந்த ஹோட்டல் வாசலில் நிறுத்தினான்.

சரியாய் மற்ற இருவரும் வந்துவிட அனைவருமாய் உள்ளே சென்று தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து தேவையானதை ஆர்டர் செய்தனர்.

அடுத்த இரண்டு மணி நேரமும் உணவோடு யுத்தம் செய்யாத குறையாய் கழிய இறுதியாய் ஐஸ்க்ரீமோடு அமர்ந்திருந்தாள் மங்கை.

“உன் உருவத்தை பார்த்து தப்பா கணக்கு போட்டு கார்த்தி வந்துட்டான் டி..”, என்ற நெடுமாறனை முறைத்தவளாய் ஐஸ்கீரிமை விழுங்க ஆரம்பித்தாள்.

“ஒரு வகையில் உண்மைதான் டா மாறா. இவ ப்ளேயர்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க போலே. சோத்து மூட்ட ஒரே நாள்ல இவ்வளவு சாப்பிடாத பாப்பா.. உடம்புக்கு நல்லதில்ல.”

“அதெல்லாம் ஒரு அரை மணி நேரம் எக்ஸ்ட்ராவா வாம்அப் பண்ணிக்கலாம் மாமா.”, எனும் போதே மங்கையின் பார்வை தங்களுக்கு முன் இரண்டு டேபிள் தள்ளியிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் மீது போக தொப்பி அணிந்திருந்தவன் லேசாய் அவளை நோக்கி கையசைத்தான்.

“அட ஹீரோ..”, என்றவள் இருக்கும் இடம் உணர்ந்து சத்தத்தைக் குறைத்தவளாய் ஆண்களிடம் கூறிவிட்டு அவனது இருக்கைக்குச் சென்றாள்.

“எப்போ வந்தீங்க ஒரு போன் கூட பண்ணலை. இப்போவாவது வந்து பேசிருக்கலாம்ல?”

“மலரே ரிலாக்ஸ். ஆரு என்னனு அறியாம எங்கன வந்நு சம்சாரிக்கும்?”

“சரி நீங்க முதல்ல அங்க வாங்க..”, என்றவள் தங்களது டேபிளுக்கு அழைத்துச் சென்றாள்.

முகுந்தனின் மேனேஜர் ப்ரவீன் இன்னும் திறந்த வாய் மூடாத குறை தான். என்னடா நடக்குது இங்கே மோடிலேயே அமர்ந்திருந்தான்.

“இது என் அண்ணன் திருமா இது இன்னொரு அண்ணன் நெடுமாறன். இது என் அத்தை பையன் கார்த்திகேயன்.”, என்றவள் மற்றவர்களிடம் முகுந்தனை அறிமுகம் செய்தாள்.

“ஹாய் எல்லாரும் சுகமானோ?”

“?!”

“சாரி நல்லாயிருக்கீங்க..ளா?”

“நாங்க நல்லாயிருக்கோம் சார். நீங்க எப்படி இருக்கீங்க?”

“ஐயோ சார் ஒண்ணும் வேண்டா கால் மி முகுந்தன்.”

“ஆமா எங்கே தங்கிருக்கீங்க? எங்க வீட்டுக்கு தானே வர சொன்னேன்..”

“இல்லா மலரே அது நல்லாயிருக்காது. இங்கே தான் ரூம் போட்டுருக்கேன். நான் காலையிலே வந்ததானு.”

“எல்லாம் நல்லாயிருக்கும். அண்ணே சொல்லு நீ..”

“எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எங்க தங்கச்சியோட ப்ரெண்டா போயிட்டீங்க வீட்டில் தங்குறதில் என்ன தயக்கம்.”

“இல்லா அது..”

“ஒண்ணும்  பேச வேண்டாம் நான் சொன்னால் சொன்னது தான் வாங்க வீட்டுக்கு.”

“ஷெரி ஞான் நாள் மொத்தம் அவ்விட இருக்கும் ராத்திரிக்கு ஹோட்டலுக்கு வந்துரேன். ஓகே எனக்கு அங்கே யாரையும் தெரியாதல்லே.. ப்ளீஸ்.”, என்றதில் அவன் தயக்கம் உணர்ந்தவளாய் சம்மதமாய் தலையசைத்தாள்.

“சரி அப்போ நாளைக்கு காலையில் சாப்பாடே எங்க வீட்டில் தான் டீல்?”

“டீல்”, என்றவன் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றான்.

காரில் ஏறியது முதல் மூவருமாய் மங்கையை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.

“திருமா இவளுக்கு எப்படி  இப்படி ஒரு ப்ரெண்டு.”

“அதே சந்தேகம் தான் மாறா.. மனுஷன் பேசவே காசு கேட்பாராட்டும் இருக்காரு. இவளை எப்படி ப்ரெண்டா சேர்த்துருக்கார்.”

“இதுவே இவ கேரளா போனா எதுக்கு ரூம்க்கு செலவு பண்ணணும்னு நேரா போய் அவர் வீட்டில் தான் நின்னிருப்பா..”

“அவருக்கு என்ன போறாத காலமோ இவளோட அறிமுகம் ஆகணும்னு இருந்துருக்கு.”

“இன்னும் ஒரு வார்த்தை பேசிப் பாருங்க காரை கொண்டு போய் சாக்கடையில் விட்டுருவேன்”, என்றவள் ஸ்டியரிங்கை உலுக்க மூவருமாய் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

மறுநாள் காலையில் வீடே மங்கையிடம் பாடாய் பட்டது. அதிலும் முத்துப் பாண்டியின் நிலை!

“ப்பா ரொம்ப பண்ணாத கொஞ்ச நேரம் இருந்து பார்த்துட்டு கிளம்புறதில் என்ன பிரச்சனை உனக்கு?”

“கண்ணு திருவிழா நேரம் தலைக்கு மேலே வேலை கிடக்குதுலே.”

“பெரிய வேலை. எல்லாரும் ரொம்ப தான் பண்றீங்க. என்னவோ பண்ணு போ”, என்றவள் மாடியேறிச் சென்றுவிட மனம் பொறுக்காதவராய் மகள் பின்னேச் சென்றார்.

“சரி கண்ணு நான் பார்த்துட்டே போறேன் போதுமா? இதுக்குப் போய் கோபப்படுறியே..”, எனும்போதே அவருக்கு அழைப்பு வர அதை எடுத்து பேச ஆரம்பித்திருந்தார்.

அடுத்த பத்து நிமிடத்தில் வந்து இறங்கியவனை வாசலுக்கேச் சென்று வரவேற்றாள் மங்கை. வழக்கமான உடையில்லாமல் சுடிதாரில் மெலிதான ஒப்பனையோடு இருந்தவளையேப் பார்த்த வண்ணம் அவளோடு வீட்டிற்குள் நுழைந்தான் உன்னி முகுந்தன்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களைப் பார்த்த உன்னி முகுந்தனோ ஒரு நொடி அதிர்ந்து போனான். அனைவரும் இன்முகமாய் அவனை வரவேற்க ஏனோ பார்த்ததும் பிடித்தவிட்டது முத்துப் பாண்டிக்கு.

“வாங்க தம்பி..”

“நமஸ்காரம்..”

“உட்காருங்க..”, என்றதில் கனியனுக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவரைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான்.

குணவதி அவனுக்கு குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக் கொண்டவனாய் அப்போது தான் கீழே வந்த சிறியவர்களைப் பார்த்து கையசைத்தான்.

“பாப்பா உங்களைப் பத்தி நிறைய சொன்னா.. உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.”, என்று முத்துப் பாண்டி கூற ஒவ்வொருவரையாய் அறிமுகப் படுத்தினாள் மங்கை.

“கண்ணு அவரை சாப்பிட உட்காரச் சொல்லு. நான் வரட்டுமா?!”

“சரிப்பா நீ கிளம்பு. நீங்க வாங்க ஹீரோ சார் சாப்பிடலாம்.”, அனைத்திற்குமே புன்னகை மட்டுமே உன்னி முகுந்தனிடத்தில்.

காலை உணவிற்கே விருந்து சமைத்திருந்தார்கள் என்று தான் கூற வேண்டும். பெண்கள் பார்த்து பரிமாற முகுந்தன் தாமோதரனோடும் கார்த்திகேயனோடும் பேசிய படி உண்ண ஆரம்பித்தான்.

“என்ன அப்பத்தா விருந்தாளியை வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க. என்ன விஷயம்?”

“இந்தப் பையனோட சாடை எங்கேயோ பார்த்த முகமா பரிட்சையமா இருக்கு அதான் பார்க்குறேன்.”

“ஆமா அப்பத்தா எனக்கு கூட முதல் தடவை பார்க்குற மாதிரியே இல்லை.”

“ம்ம்..”

“அப்புறம் எத்தனை நாள் இங்கே தங்குறீங்க?”

“பத்து நாள்னு நினைச்சுருக்கேன் அதுக்குள்ளே கால் எதுவும் வந்துட்டா போகணும் அங்கிள்.”

“ஓ அப்பா அம்மா எல்லாம்?”

“திரிச்சூர்ல இருக்கா அப்பாக்கு அங்கே ஸ்பைஸ் ஆர்கனிக் ஃபார்ம் இருக்கு. ஃபேமிலி பிஸினஸ். குறு மிளகு ஏலக்கா எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணுவா. அம்மா காலேஜ் ப்ரோபசர். தம்பி ஷெஃப்பா இருக்கான்.”

“ஓ நைஸ். எல்லாருமே வித்தியாசமான வேலையில் இருக்கீங்க. நீங்க எப்படி சினிமாக்குள்ளே?”

“என்ட அச்சனோட ப்ரெண்ட் ஒருத்தர் ஜஸ்ட் லைக் தட் ஒரு படத்துக்காக கேட்டது. ஓகே சொல்லி அப்படியே அது பஷன் ஆகிடுச்சு.”

“கேட்க வேண்டாம்னு நினைச்சாலும் முடியலை. உங்களைப் பார்த்தா ரொம்ப சைலண்டா தெரியுது இவளோட எப்படி ப்ரெண்ட்”, என நெடுமாறன் முடிப்பதற்குள் அருகிலிருந்த கரண்டியைத் தூக்கி அவன் மீது எறிந்தாள் மங்கை.

“மங்கை!!”

“அப்பத்தா உன் பேரனை ஒண்ணுமே சொல்லாத. என்னையே திட்டு.. பாரு என் மானத்தை வாங்குறான்.”

“அது லேங்குவேஜ் ப்ராப்ளம் ஒரு ரிசன். இல்லைனாலும் மலர் அளவு பேச வராது. சத்தியம் பரையனும்ங்கில் எனக்கும் அறியில்லா எப்படி இவளடே ப்ரெண்ட் ஆனதுனு.”, என்று சிரித்தவனைப் பார்த்து விளையாட்டாய் முறைத்தாள் மங்கை.

கனியன் அனைத்தையும் பார்வையாளராய் மட்டுமே பார்த்திருக்க திருமாவும் மாறனும் கடைக்குக் கிளம்பியிருக்க கார்த்திகேயன் அவசர அழைப்பை ஏற்று பேசச் சென்றுவிட்டான்.

“பாப்பா தம்பிக்கு வீட்டைச் சுத்திக் காட்டு. கார்த்தி வந்தவுடனே வெளியில் கிளம்புங்க.”

“சரி சித்தி. வாங்க ஹீரோ எங்களோட அரண்மணையைச் சுத்திக் காட்டுறேன்.”, என்றவளோடு உள்ளே சென்றான்.

“மலர் இத்தன வல்லிய பேக்ரவுண்ட் ஆள்னு அறியில்லா!”

“ஒரு பேக்ரவுண்டுமே இல்லை. குடும்பத் தொழில் ஜவுளிக்கடை அண்ணணுங்களும் அதையே பார்த்துக்குறாங்க. ஆனால் எனக்கு நானே சம்பாதிக்க போற பேரு தான் பேக்ரவுண்ட்.”

“அடிப்பொலி. மை பெஸ்ட் விஷஸ் டூ யூ.”,என்றவனைப் பார்த்து மென்னகைத்தவளாய்  அடுத்த அறையை நோக்கி அழைத்துச் சென்றாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

4 comments

Fathima.ar July 17, 2026 - 3:06 am

Unalkkena iruppen paatu mattum thaan ketkuthu

Kavi Natarajan July 17, 2026 - 5:32 am

👌👌👌👌👌👌

suganyavel July 17, 2026 - 7:56 am

Super💕

srichitra July 17, 2026 - 9:03 am

Very nice.

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode