கடற்கரை சந்திப்பிற்குப் பின் திவ்யாந்த் மனம் அத்தனை தயக்கம் குழப்பத்தையும் தாண்டி வெண்பாவை தனக்கானவளாகவே எண்ண ஆரம்பித்திருந்தது.

கிடைத்த நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பினான். அதை அனுப்பிவிட்டுபதிலுக்காக காத்திருக்கும் நேரம் ஏதோ கல்லூரி மாணவன் போல் மனம் அத்தனை படபடப்பாய் ஒரு வித உற்சாகத்தோடு துள்ளித் திரிந்ததது கண்டு அவனுக்கே சிரிப்பாய் இருந்தது.

அதை விட அவனை முகம்சிவக்க வைத்த விஷயம் மனதிற்குள்ளேயே வைத்திருந்த விஷயத்தை சிந்தாமணி அம்மா கண்டு கொண்டதுதான்.

கிட்டதட்ட இருபது நாட்களுக்குப் பிறகு ஒரு மாலை வேளையில் திவ்யாந்த் வீட்டில் அமர்ந்து டீவி சேனலை மாற்றி மாற்றி போட்டவாறு எதிலும் நாட்டமில்லாமல் அமர்ந்திருக்க வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது.

இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என்றவாறே எழுந்து சென்று கதவை திறந்தவன் எதிரில் நின்றவளை கண்டு உலகமே மறந்து போனான்.

அழகிய ஆரஞ்சு வண்ண சில்க் காட்டன் புடவையில் அளவான ஒப்பனையோடு அம்சமாய் நின்றிருந்தாள் வெண்பா.

“ஹலோ வெண்பா என்ன ப்ளஸெண்ட் சர்ப்ரைஸ். வா உள்ளே வா. சிந்தாம்மா யாரு வந்துருக்கா பாருங்க. ”

“திவா நீங்க ஹாஸ்பிட்டல் போய்ருப்பீங்கனு நினைச்சேன். லீவா?”

“இல்ல மார்னிங்கே ஓபி நிறைய பாத்தாச்சு நைட் ஒரு சர்ஜரி வேற இருக்கு அதான் கொஞ்ச நேரம் வீட்டுக்கு வந்துட்டு போலாம்னு வந்தேன். ”

“ஓ. மார்னிங் கோவில்ல சிந்தாம்மாவ பாத்தேன். வீட்டுக்கு கூப்டுருந்தாங்க அதான் க்ளாஸ் முடிச்சுட்டு அப்படியே வந்துட்டேன். ”

“வா வா வெண்பா ம்மா. தம்பி இன்னைக்கு அவ பிறந்தநாளாம். அதான் வீட்டுக்கு வர சொன்னேன். ”

“ஓ சொல்லவே இல்ல. எனி வே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்பா. ”,கண் பார்த்து கை நீட்ட அந்த கண்களை கண்டவளோ ஒருவித மாய உலகில் சிக்கித்தான் போனாள்.

அதுவும் அவனது அந்த தமிழ் அது ஒன்று போதுமே.

இருந்தும் சூழ்நிலை உணர்ந்தவளாய் தன்னை மீட்டெடுத்து அவனிடம் கை குலுக்கி நன்றியை தெரிவித்துவிட்டு சிந்தாமணியிடம் ஆசிர்வாதம் பெற்று சிறிதுநேரம் அங்கிருந்து பேசிவிட்டுச் சென்றாள்.

வீட்டிற்கு வந்தவளுக்கு திவா கதவை திறந்த நொடி தன் மனம் அடைந்த உற்சாகமும் ஆர்பரிப்பும் நினைவிற்கு வந்தது.

அவன் இருக்கமாட்டான் என்று தெரிந்துதான் சென்றாலும் ஏதோ ஒரு மூலையில் அவனை எதிர்பார்த்தது மனம்.

அதுவும் அவன் வாழ்த்து கூறி கைகுலுக்கிய அந்த நொடி அவன் கண்களுள் புதைந்து எழுந்தபோது அப்படியாய் ஒரு சிலிர்ப்பு மனதில்.

கிளம்பும் வேளையிலும் அவன் கண்களாலேயே விடையளித்து தலையசைத்தது எல்லாமே சாதாரணமாகவே இருந்தாலும் வெண்பாவிற்கு அத்தனையும் மனதில் புது புத்துணர்வையே கொடுத்திருந்தது.

ஆனால் அதாற்கான பதில் மட்டும் உடனே அவளுக்கு கிடைத்ததாய் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவள் அதைப்பற்றி மேலும் யோசிக்கத் தோன்றாமல் அப்படியே விட்டுவிட்டாள்.

இங்கு திவாவின் நிலையோ மனம் கொள்ளா உற்சாகத்தோடு கண்கள் டீவியில் பதிந்திருக்க இதழோரம் அழகான புன்னகையோடு வேறு உலகத்தில் இருந்தான்.

அவனை பார்த்தவாறே அவனருகில் வந்து அமர்ந்த சிந்தாமணி மெதுவாய் அவனிடம்,

“தம்பி உன்கிட்ட ஒண்ணு கேக்கவா?”

“என்ன சிந்தாம்மா புதுசா தயக்கமா பேசுறீங்க. என்கிட்ட கேக்க என்ன தயக்கம்??”

“இல்ல விஷயம் அப்படி அதனால தான். ”

“அப்படி என்ன விஷயம் சொல்லுங்க கேட்போம். ”

“நீ அந்த வெண்பா பொண்ணை விரும்புறியா?”

“சிந்தாம்மா!!!”

“நா உன்னை பத்து மாசம் சுமந்து பெத்ததில்லையே தவிர நீ என் புள்ள தான்ய்யா. உன் மனசு எனக்கு புரியாதா!

இப்போ எல்லாம் உன் முகத்துல ஒரு சிரிப்பு எப்போதுமே இருக்கு. அதுவும் வெண்பா பொண்ணை பத்தி பேசினா அத்தனை பிரகாசம்.

இதுக்கெல்லாம் வேற என்ன அர்த்தம் இருக்க போகுது!!”

சட்டென அவன் மடி சாய்ந்து கொண்டவன்,

”உண்மைதான் ம்மா. பெண்களோட பேசாதவன் இல்ல நா. ஆனா வெண்பா அளவு யாரையும் நினைச்சதில்ல.

அதுமட்டுமில்லாம அவ அளவுக்கு நானா யார்கிட்டேயும் பேசினதும் இல்ல.

முதல்ல கொஞ்சம் குழப்பம் இருந்தது ஆனா அப்பறம் 100% இது காதல் தான்னு புரிஞ்சுகிட்டேன். ”

“அப்பறம் என்ன தம்பி அவகிட்ட பேச வேண்டியது தான. ”

“இல்ல ம்மா. அதுல தயக்கம் நிறையவே இருக்கு என் வேலை பொறுப்பு இதெல்லாம் அவளுக்கு எந்தளவு ஏத்துக்க முடியும்னு தெரில.

எல்லாத்துக்கும் மேல நம்ம உறவை அவ எப்படி புரிஞ்சுப்பானு தெரில. அவளையும் என் காதலையும் விட எனக்கு நீங்க முக்கியம் மா.

அதான் கண்டதையும் பேசி அவளை குழப்ப வேண்டாம்னு பாக்குறேன். ”

“தம்பி எனக்கு இன்னும் எத்தனை காலம் கடவுள் போட்டுருக்காரோ எனக்காக பாத்து உன் வாழ்க்கையை கெடுத்துக்காத அப்படி அந்த பொண்ணுக்கு பிடிக்கலனா நா நம்ம ஹோம்ல இருந்துட்டு போறேன்.

இதுல என்ன இருக்குய்யா. எனக்கு நீ நல்லா இருக்கணும் குழந்தை குட்டியோட நூறு வருஷம் சந்தோஷமா இருக்கனும் அதுவே போதும். ”

“சிந்தாம்மா ப்ளீஸ் இன்னொரு தடவை இப்படி பேசாதீங்க. இந்த விஷயத்தை இப்படியே விடுங்க அதுவே என்ன நடக்கணுமோ நடக்கட்டும்.”, என கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.

மருத்துவமனைக்கு வந்தவனுக்கு ஏனோ மனம் முழுதும் சிந்தாம்மாவின் கேள்வியே உழன்று கொண்டிருந்தது.

ஏனோ இன்னதென கூறமுடியாத ஒரு உணர்வு. தன் சிந்தனையில் உழன்றவனை வெளிக் கொண்டு வந்தது அவனின் அலைபேசி அழைப்பு.

திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டு மனம் அதுவாய் மலர்ந்தாலும் இருக்கும் மனநிலையில் அவளிடம் எப்படி என்ன பேசுவதென சிறு குழப்பம்.

அழைப்பு நின்றுவிட வேகமாய் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“ஆன் டியூட்டி. ஷல் ஐ கால் யூ அஃப்டர் அன் அவர்?எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”, அனுப்பியவனுக்கு நிஜமாகவே பதட்டம் அவளாய் ஒரு நாளும் குறுஞ்செய்தியோ அழைப்போ செய்ததில்லை விஷயமின்றி,பதிலுக்காக காத்திருக்க குறுஞ்செய்திக்கான ஒலி எழுப்பியது.

“ப்ராப்ளம் இல்ல. ஆனா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். நாளைக்கு ஃப்ரீயா பேச முடியுமா?”

“ஷுவர் ஈவ்னிங் மீட் பண்ணலாம். ப்ளேஸ் நீயே சொல்லு. ”

“தேங்க்ஸ். பெசண்ட் நகர் பீச்லயே மீட் பண்ணலாம். பை. நாளைக்கு பாக்கலாம். ”

படபடப்பான மனம் மேலும் படபடத்தது. என்னவாய் இருக்கும் என ஆயிரம் கோணங்களில் யோசித்தாலும் விடைமட்டும் தெரியவில்லை.

அப்படி இப்படியாய் பொழுதை நகர்த்தியவன் மறுநாள்  மாலை கூறிய படி பீச்சை அடைந்திருந்தான்.

அவனுக்கு முன் வந்து எங்கோ வெறித்தபடி அவள் அமர்ந்திருக்க அருகே வந்தவன் சற்று இடைவெளிவிட்டு அவளருகில் அமர்ந்தான்.

“ஹாய் வெண்பா. ”

“ஹாய் திவா. ”

எப்போதும் இருக்கும் உற்சாகம் குரலில் இல்லாததைப் போல் தோன்றியது திவ்யாந்திற்கு.

“என்னாச்சு குரலே சரியில்ல. ஆர் யூ ஓ. கே?”

“ஐ அம் நாட் அட் ஆல் ஓ. கே திவா. ரொம்ப குழப்பமா இருக்கு. ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு தான் வர சொன்னேன்.

ஆனா இப்போ நீங்க என்ன நினைப்பீங்களோனு ஒரு மாதிரி இருக்கு. ”

“என்ன வெண்பா ஏதோ புது ஆள்கிட்ட பேசுற மாதிரி பேசிட்டு இருக்க. எதுவாயிருந்தாலும் சொல்லு. ”

“திவா. வந்து ஐ திங்க் அம் இன் லவ் வித் யூ. ”,கூறியவளின் பார்வை அவள் கைகளிலேயே இருக்க திவ்யாந்திற்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

“என்ன சொன்ன??”

“நீங்க என்னை எப்படி வேணா நினைச்சுகோங்க திவா பட் இதுக்கு மேல என்னால மனசுக்குள்ளயே வச்சுக்க முடில.

கொஞ்ச நாளாவே உங்ககிட்ட நா சாதாரணமா பேசலையோனு தான் தோணுது.

யார்கிட்ட பேசும் போதும் இப்படி தடுமாற்றம் வந்ததில்ல. ஆனா உங்க கண்ணும் அந்த குரலும் எனக்கு என்னவோ ஆயிரம் பலத்தை கொடுக்குற மாதிரி மனசு ஒரு அமைதி அடையுற மாதிரி ஒரு பீல்.

இப்போ இந்த நிமிஷம் கூட மனசு அத்தனை அமைதியா இருக்கு. இதை நா எப்பவும் உணர்ந்தது இல்லை.

இதெல்லாம் வாழ்க்கை மொத்தத்துக்கும் கிடைக்கணும்னு ஆசை பட்றேன்.

என்ன பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியும் சோ நீங்க யோசிச்சு சொல்லுங்க. ”,என்று முடித்த பின்புதான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

வழக்கமான உதட்டோர மென்னகையோடு கடலை வெறித்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து தலை திருப்பி அவள் கண்களை ஏறிட்டான்.

“நீ சொன்னதெல்லாம் கேட்க கேட்க இப்போ இந்த செகண்ட் இறுக்கமா என் தோள்ல சாய்ச்சு உனக்கு எல்லாமுமா நா இருக்கேன்னு சொல்லனும்னு தோணுது வெண்பா. ஆனா. ”

“பரவால்ல சொல்லுங்க திவா எதுவாயிருந்தாலும். ”

“நீ சொன்ன மாதிரி எனக்கும் கொஞ்ச நாளாவே மனசு ஒரு நிலையில் இல்ல தான். யார் மேலேயும் தோணாத ஒருவித அன்பு உன்மேல.

வாழ்க்கையின் சரிபாதியா நல்லது கெட்டதுல நல்ல தோழியா கடைசிவரை நீ என்கூட இருக்கணும்னு தான் என் ஆசையும்.

ஆனா என் ஆசையை தாண்டினதா என் பொறுப்புகள் இருக்குறதுனால தான் ஒரு தயக்கம் உன்கிட்ட என் மனசை வெளிப்படையா சொல்லவிடாம தடுக்குது.

உனக்கே தெரியும் என் வேலை தான் எனக்கு எல்லாமே. அதுக்கு அடுத்ததா சிந்தாம்மா. திவ்யாந்த்னு ஒருத்தனுக்கான அடையாளமே இந்த இரண்டும் தான்.

இதுல நிறைய ப்ளஸும் இருக்கு சில மைனஸும் இருக்கு.

எனக்கு எல்லோரையும் மாதிரி 9 அவர்ஸ் வொர்க் கிடையாது வாரத்துல ரெண்டு நாள் லீவ் கிடையாது.

நடு ராத்திரில எமர்ஜென்சினாலும் நா ஓடனும். திடீர்னு மூணு நாள் லீவு எடுக்க முடியும் சில நேரம் மாசம் மொத்தமும் வேலை இருக்கலாம்.

ஒரு டாக்டரா இதெல்லாம் சாதாரணம் என் கடமையும் கூட ஆனா உனக்கான நமக்கான நேரம்ங்கிறத நாம டிசைட் பண்ண முடியாது.

நீ எதிர்பாக்குற பல விஷயங்களை அந்த நேரத்துல என்னால பூர்த்தி பண்ண முடியாம போகலாம்.

ஆனா உன் மீதான என் அன்பும் காதலும் என் ஆயுசுக்கும் இப்படியே தான் இருக்கும்.

நீ ஒரு விதத்துல உறவுகளுக்காக ஏங்குறனா நா உறவுகளே இல்லாம வளர்ந்து உன்னை தான் என்னோட மொத்த வாழ்க்கைக்கான உறவா நினைக்குறேன்.

சோ சாதாரண காதலர்கள் தம்பதிகளுக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷமும் ஊடலும் கூடலும் நமக்குள்ள இருக்கலாம் இல்லாமயும் போகலாம்.

எதுவாயிருந்தாலும் ஏத்துக்குற பக்குவம் உனக்கு இருக்கானு நீதான் முடிவு செய்யணும்.

இதை எதையுமே சொல்லாம என் காதலை மட்டுமே முன்னிருத்தி நம்ம வாழ்க்கையை தொடங்க முடியும் ஆனா அது பின்னாடி அர்த்தமில்லாம போனா நம்ம ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான். அதுக்காக தான் இத்தனை விளக்கம் கொடுக்குறேன்.

அடுத்ததா சிந்தாம்மா அவங்க என்ன பெத்த அம்மா இல்லையே தவிர இந்த ஜென்மத்துல அவங்க தான் என் அம்மா உன் மாமியார்.

எக்காரணத்தை கொண்டும் அவங்க நம்மள விட்டு தள்ளி போக கூடாது போகவும் விடமாட்டேன்.

நீ என் மனைவியா வர்றது அவங்களுக்கு மனப்பூர்வமானன சம்மதம் சந்தோஷம் அதே மாதிரி உன்னாலயும் அவங்களை ஏத்துக்க முடியுமானு எனக்கு தெரில வெண்பா.

நா உன்னை தப்பு சொல்லல இது தான் திவ்யாந்த்னு நீ புரிஞ்சுகிட்டு அப்பறமும் உன் முடிவுல மாற்றம் இல்லனா அடுத்த முகூர்த்தத்துலயே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.

உனக்கு இதெல்லாம் கஷ்டம்னு நினைச்சாலும் நோ ப்ராப்ளம் கண்டிப்பா என்னோட முதலும் கடைசியுமான காதல் நீயா தான் இருப்ப. யோசிச்சு நீயே பொறுமையா சொல்லு. ”

என்றவன் அவளையே பார்த்திருக்க மயக்கத்தில் இருந்து விழித்தவளாய் அவனையே பார்த்திருந்தவள் முகம் திருப்பி கடலை வெறித்தாள்.

முகத்தில் மெலிதாய் ஒரு நாணச் சிவப்பு, ”திவா இந்த உண்மையான முகமூடி இல்லாத மனசுக்காகவே உங்களோட வாழ ஆசைப்படுறேன்.

நீங்க சொன்ன எல்லாமே புரியுது கண்டிப்பா பெஸ்ட் வைப்பா இருக்க ட்ரைப் பண்றேன். அதேநேரம் நல்ல மருமகளாவும் இருப்பேன் நிச்சசயமா.

நீங்க சிந்தாம்மாட்ட பேசிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. ”

“உன் பேரண்ட்ஸ்கிட்ட பேச வேணாமா?”

சற்றே வாடிய முகத்தை மறைத்தவள், ”அதெல்லாம் நா பாத்துக்குறேன் நீங்க டேட் பிக்ஸ் பண்ணுங்க. ”

இத்தனை பெரிய விஷயத்திற்கும் அவனிடம் வந்த பதில் மெல்லிய புன்னகை சற்றே பற்கள் தெரிய அவ்வளவே.

தன் கரத்தை அவளை நோக்கி நீட்ட முகம் மலர தன் கரத்தை அவனோடு இணைத்துக் கொண்டவள் அவனையே பார்த்திருக்க என்ன நினைத்தானோ அவள் விழி கலந்தவன் மென் குரலாய்,

“பீடத்திலேறிக் கொண்டாள் – மன

பீடத்திலேறிக் கொண்டாள்

கண்ணன் திருமார்பிற் — கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் — வீரச் சிங்கா தனத்தே,
நண்ணிச் சிவனுடலை — நாடுமவ ளென்கோ?
எண்ணத் திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம்
பெண்ணி லரசியிவள் — பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணியெனக்குக் — காத லிரதியிவள்
பண்ணி லினியசுவை — பரந்த பொழியினாள்
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா”

“லவ் யூ சோ மச் ஃபார்எவர் மை கண்ணம்மா…வில் யூ மேரி மீ. ”

சம்மதமென தலையசைத்தவள் வெட்கத்தில் விழி தாழ்த்திக் கொள்ள பற்றியிருந்த விரல்களை அழுத்திப் பிடித்தவன் அவளையே நோக்கியிருந்தான்.

“லவ் யூ டூ திவா. ரியலி இப்போ இந்த செகண்ட் இந்த பீல் வாழ்க்கைல ரொம்பவே மறக்க முடியாதது. அதுலயும் உங்களோட கண்ணம்மாவா. இட்ஸ் அமேசிங். ”

“எப்பவுமே இந்தபெயர் மேல ஒருவித தாபம் உண்டு. ஓவர் ரொமண்டிங்கா இருக்குற மாதிரி தோணும்.

கல்யாணம் பத்தி ரொம்ப யோசிச்சது இல்ல. பட் ஒருவேளை அது நடந்து மனைவினு ஒருத்தி வந்தா கண்டிப்பா இதுதான் அவளுக்கான பேர்னு. ”

“இத்தனை நாள் இப்படியெல்லாம் தோணிணது இல்ல. ஆனா இப்போ அப்படி தான் தோணுது திவா.”, தன்னவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் அப்படியே நகர, ”ரொம்ப லேட் ஆச்சு கண்ணம்மா கிளம்பலாம். நீயும் என்னோட நம்ம வீட்டுக்கு வா சிந்தாம்மா விஷயம் தெரிஞ்சா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. ”

“திவா நானா. எனக்கு ஒரு மதிரி இருக்கு நீங்களே அவங்ககிட்ட பேசுங்க அப்பறமா நா வரேனே. ”

“அட வெண்பா ஜி இவ்ளோ வெட்கபடுவாங்களா?இருந்தாலும் பரவால்ல நீயும் வா கண்ணம்மா. ”

“என்னை மடக்குற வழியை நல்ல தெரிஞ்சுகிட்டீங்க திவா. ”

“அப்போ குடும்பஸ்தன் ஆக நா முழுதாக தயார்னு சொல்லு.”, என்று சிரித்தவன் அவள் கை கோர்த்து அழைத்துச் சென்றான்.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க கதவை திறந்தவர் இருவரையும் ஒரு சேரை பார்த்து உளம் குளிர்ந்து போனார்.

இருந்தும் முகத்தில் எதையும் காட்டாமல் இயல்பாய் அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல திவ்யாந்த் அவளை சோபாவில் அமருமாறு கூறிவிட்டு சிந்தாம்மாவின் அருகில் சென்றான்.

பின்னிருந்து அவர் தோள் பற்றி, ”ம்மா உங்க மருமக எப்படி இருக்கா உங்களுக்கு பிடிச்சுருக்கா?”, என முடிக்க வெண்பா அதிர்ச்சியும் ஆர்வமுமாய் அவரைப் பார்க்க அவரோ திவ்யாந்தை தன் மீது சாய்த்துக் கொண்டார்.

“என் வாழ்க்கையோட மிகப் பெரிய சந்தோஷம் தம்பி இது. அவ்ளோ சந்தோஷமா இருக்கு.

என் காலத்துக்கு அப்பறம் உனக்குனு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையனும்னு நா வேண்டாத தெய்வம் இல்ல. அந்த கடவுள் என்னை கை விடல.

வெண்பாம்மா ரொம்ப சந்தோஷம் ரெண்டு பேரும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் இருப்பீங்க.”, என்றவர் கண்கலங்கி நின்றார்.

“சிந்தாம்மா சந்தோஷமா இருக்கீங்கனு சொல்லிட்டு இப்படி கண்கலங்கலாமா.

இவ்ளோ வீக்கான மாமியாரா இருந்தா என்னோட எப்படி சண்டை போடமுடியும். மாமியார் மருமகளா நாம போடுற சண்டைல திவா மிரண்டு போக வேணாமா?”, என்று கண்ணடித்துச் சிரித்தாள்.

“என்னம்மா இப்படி சொல்லிட்ட சண்டையெல்லாம் போட வராது எனக்கு அதுவும் என் புள்ளையோட மனம் கவர்ந்தவளோட சண்டையா அட போம்மா. ”

“அடடா இப்படி சப்புனு முடிச்சுடீங்களே. சரி போங்க உங்க ரெண்டு பேருக்கும் நா நிறைய டியூஷன் எடுக்க வேண்டியிருக்கு அப்போ கத்து தரேன் எல்லாம். ”

“நல்ல பொண்ணு. நாளைக்கே நா போய் ஜோசியரை பார்த்து தேதி குறிச்சுட்டு வரேன்.”, என்றவாறே அவர்களுக்கு உணவு எடுத்து வர சிந்தாமணி உள்ளே செல்ல அவளருகில் வந்தவன்,

“நா கூட நிறைய சொல்லி தரணும் என் கண்ணம்மாக்கு இல்ல. ”, காதுக்குள் ஒலித்த அந்த மென்குரலில் மொத்தமாய் கரைந்திருந்தவள்,

“ச்ச டாக்டரே ரொம்ப மோசம் நீங்க. ”,என்றவள் அவன் கையில் லேசாய் அடித்தவாறு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan September 29, 2026 - 9:57 am

💞💞💞💞💞💞💞💞

srichitra September 29, 2026 - 1:05 pm

Very very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode