684
“பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
வெகு நேரமாய் தன் கடந்தகாலத்தில் உழன்றவள் அப்படியே உறங்கியும் போனாள்.
காலை சீக்கிரமே எழுந்து வந்தவளை கையில் காபியோடு எதிர்கொண்டார் சிந்தாமணி அம்மா.
அவரது முகத்தில் அப்படியாய் ஒரு ஆர்வம் அதன் அர்த்தம் புரிந்தாலும் அவள் ஒன்றும் கூறாமல் அமைதி காக்க அவரே பேச்சை ஆரம்பித்தார்.
“தம்பி நேத்து நிகழ்ச்சி புல்லா இருந்தானாம்மா?”
“ம்ம் ஆமா சிந்தாம்மா. ”
“அவனே ட்ராப் பண்றேன்னு சொன்னானா எதுவும் பேசினானா?”
“சிந்தாம்மா உங்க ஆர்வம் புரியுது ஆனா அந்தளவு ஒண்ணும் நடக்கல. ஒரு வார்த்தைகூட நாங்க பேசிக்கல.
இறங்கும் போதுதான் அவரே குட்நைட் சொல்லிட்டு போனாரு அதை நா எதிர்பார்க்கல அந்த ஆச்சரியம் தான் வேற ஒண்ணுமில்ல சரியா?”,என அவர் கன்னம் கிள்ளி தலையை இடவலமாய் ஆட்டினாள்.
“போ பாப்பா ரெண்டு பேரும் என்னை போட்டு ஒரு வழி ஆக்குறீங்க.
நா கண்ணை மூடுறதுகுள்ள உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்கனும்னு ஆசை படுறேன். ஆனா நீங்க…”
“சிந்தாம்மா என்ன பேச்சு இதெல்லாம். நீங்களே பாக்குறீங்க தான நாங்க ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு நேசிக்கிறோம்னு.
பக்கத்துல இல்ல அவ்வளவுதான். நடந்த சில கசப்பான விஷயங்களை மறக்குறதுக்கு தான் இந்த பிரிவு.
எனக்கு தெரியும் இப்போ போய் நின்னா கூட என் திவா மறுபேச்சு பேசாம என்னை ஏத்துப்பாரு.
ஆனா கணவன் மனைவி உறவுல எப்பவுமே ஒருத்தர் மட்டுமே விட்டு கொடுத்துட்டே இருக்க கூடாது சிந்தாம்மா.
அது காதலே இல்லனு ஆய்டும். இந்த பிரிவு எனக்கு நா கொடுக்குற தண்டனை இது முடிஞ்சு திரும்ப என் திவாகிட்ட போகும்போது நூறு வருஷம் எந்த ப்ரச்னையும் இல்லாம சந்தோஷம் மட்டுமே இருக்கப் போற வாழ்க்கையை வாழத்தான் போவேன்.
தயவுசெஞ்சு புரிஞ்சுகோங்க. இன்னொரு தடவை இப்படி பேசி என்ன கஷ்டப்படுத்தாதீங்க.
ப்ளீஸ். ”,என்றவளின் கண்களில் நீர் கோர்த்திருக்க சிந்தாமணி பதறிவிட்டார்.
“ஐயோ கண்ணு என்ன சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு. நா ஏதோ பைத்தியகாரி உளறிட்டேன்.
நீ கஷ்டபட்டுகாத கண்ணு. உனக்கு எப்போ தோணுதோ அப்போ தம்பி கூட போ.
அதுவரை நா இருக்கேன் உனக்கு. ”,என அவள் கண்ணீரை துடைத்து சமாதானப்படுத்தினார்.
அதன் பின்னான நாட்கள் சாதாரணமாகவே செல்ல திவ்யாந்தும் வேலை விஷயமாய் வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறினார் சிந்தாமணி.
இருபது நாட்கள் கழித்து வந்த ஒரு வார இறுதியில் மனம் மிகவுமே சோர்வாய் இருப்பதாய் தோன்ற வெண்பா தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு எங்காவது சென்று வரலாமென கிளம்பினாள்.
ஏனோ வெகுதூரம் வண்டி ஓட்டும் மனநிலை இல்லாமல் போக அஷ்டலஷ்மி கோவிலுக்கு சென்றுவர முடிவு செய்தாள்.
கோவிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் அங்கிருந்து பீச்சை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள்.
எப்போதுமே அவளுக்கு பிடித்தமான இடம் இந்த கடற்கரை. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் அவளின் திவா.
மணலில் அமர்ந்தவளுக்கு அவளவனோடான முதல் கடற்கரை சந்திப்பு நினைவிற்கு வந்தது.
அன்று அவளை இறக்கி விட்டுச் சென்றபின் அவனின் அந்த தமிழ் இரவு வணக்கம் மட்டுமே மனதை நிரப்பியிருந்தது.
அதுவும் அவனது கணீர் குரலில் அதை கேட்க அப்படி ஒரு இனிமையும் குளுமையும் மனதில்.
அதன் பின்பு வழக்கம்போல் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போக ஒரு இளவேனிற் மாலை பொழுதில் கடற்கரைக்கு போக வேண்டுமென்று தோன்ற வகுப்பை முடித்துவிட்டு சென்றவள் தண்ணீரில் காலை நனைத்தவாறே இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
எத்தனை நேரம் கடந்ததோ சட்டென அருகில் அரவம் உணர்ந்து தன்னை மீட்டெடுத்தவள் திரும்பிப் பார்க்க வழக்கமான தன் அமைதிப் புன்னகையோடு திவ்யாந்த் அவளை பார்த்திருந்தான்.
“என்ன டாக்டர் சார் பக்கத்துல வந்து நின்னா ஒரு குரல் கொடுக்க வேண்டாமா?”
“இல்ல ரொம்ப சீரீயஸா ஏதோ யோசிச்சா மாதிரி இருந்தது சரி அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு அமைதியா இருந்துட்டேன். ”
“யோசிக்குறதெல்லாம் எனக்கு பிடிக்காத வேலை திவா. அதோ அந்த தொடுவானத்தை தான் பாத்துட்டு இருந்தேன்.
எப்பவுமே பீச் வந்தா என் கண் அங்க மட்டும் தான் இருக்கும். சுத்தி நடக்குறதெல்லாம் மறந்துடும்.
இந்த அலைகளோட சத்தமும் அந்த வானமும் ஏதோ எனக்கு சொல்லிட்டே இருக்கும் நானும் ஆசை தீர கேட்டுட்டே இருப்பேன். ”
“கலா ரசிகைனு நிருபிக்குறியே. என்ன அழகா எக்ஸ்ப்ளெயின் பண்ற. எனக்கு அந்தளவு எல்லாம் சொல்ல தெரில ஆனா தொடுவானமும் இந்த அலையும் மனசை நிம்மதியாக்கிடும்.
எனக்கு ரொம்ப பிடிச்ச அடிக்கடி வர இடம் இங்க மட்டும் தான். ”
“வாவ் சூப்பர் ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட் இல்ல. ஆமா என்ன சொன்னீங்க கலா ரசிகையா.
ஆனா நீங்க ஒரு தமிழ் ரசிகர்னு சொல்லவே இல்லையே. ”
இருவரும் பேசியபடியே மணல் பரப்பில் வந்து அமர, ”தமிழ் பிடிக்காதவங்க யாரு இருப்பா?இப்போ நீ கூட நம்ம ஊர் பிடிச்சு தான இங்க வந்துருக்க. ”
“உண்மைதான் ஆனா பேச்சு நடை வேற எழுத்து நடை வேற தான. அத்தனை தெளிவான உச்சரிப்பு உங்க வாய்ஸ்க்கு ரொம்பவே சூட் ஆச்சு. இன்னமும் எனக்கு கேட்டுட்டே இருக்கு. ”
“ம்ம் நிறைய தமிழ் புக்ஸ் படிப்பேன் கவிதைகள் கதை. பாரதியின் எழுத்து பார்த்து வந்த ஆர்வம் அப்படியே கன்ட்டினியூ ஆகுது.
என்னைக்காவது ரொம்ப சந்தோஷமாவோ இல்லை ரிலாக்ஸ்டாவோ இருந்தேன்னா கண்ணாடியில் எனக்கு நானே அப்படிதான் குட் நைட் சொல்லிப்பேன்.
அன்னைக்கு தான் முதல் தடவையா உன்கிட்ட சொன்னேன். என்னை அறியாம வந்துட்டுச்சு அதான் உண்மை. ”
“தேட்ஸ் சோ நைஸ். நிஜமா யூ ஆர் சோ இன்ட்ரஸ்டிங். மே பி பரதம் மேல ஆர்வம் இருக்கும்போதே இதெல்லாம் நா எதிர்பார்த்துக்கனுமோ. ”,என்றவள் புன்னகைத்தாள்.
“ஆமா பாரதியார்னு சொன்னவுடனே தான் நியாபகம் வருது அவரு கவிதைல எதாவது ரெண்டு லைன் சொல்லுங்களேன். உங்க குரல்ல கேக்க ஆர்வமா இருக்கு. ”
லேசாய் யோசித்தவன் பின் மெதுவாய் தொண்டையை சரிசெய்தவாறு,
“பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ எனக்குக் தும்பியடி நானுனக்கு;
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
இது எனக்கு ரொம்பவே பிடிச்ச வரிகள் வெண்பா. அதிலும் அந்த வீணையடி அந்த வரி அதைவிட உருக்கமா ரொமான்டிக்கா ஒரு காதலை சொல்லிற முடியுமா.
தன்னவளை வீணையாய் அதை மீட்டும் விரலாய் தலைவன் நினைச்சாலே ஒரு ப்ளசெண்ட் பீல் இருக்கு இல்ல. ”
“ம்ம் வாவ் திவா செம ரொமான்டிக் பெர்சனா இருப்பீங்க போலயே உங்க வருங்கால மனைவி ரொம்பவே லக்கி தான்”,என்றவள் சிரிப்போடு அவனை ஏறிட அவனுக்கோ ஏனோ மனதில் அவள் முகமே தோன்றியது தன் வருங்கால மனைவியாய்.
இருந்தும் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவளோடு இயல்பாகவே பேச்சைத் தொடர்ந்தான்.
சிறிது நேரத்தில் அவள் கிளம்பத் தயாராக அவன் சற்று நேரம் கழித்து கிளம்புவதாய் கூறி அங்கேயே அமர்ந்திருந்தான்.
கடலை வெறித்தவனுக்கு அவளின் முகம் மனதை மேலும் இதமாக்குவதாய் தோன்றியது.
இத்தனை வருடங்களில் எந்த பெண்ணிடமும் ஏற்படாத நட்பும் அதை தாண்டிய மனதளவிலான நெருக்கமும் நிச்சயம் புதிது.
ஒரு மருத்துவனாய் பல பேரிடம் பேசும் சூழல் இருக்கும் பார்க்கும் போது பேசுவதும் சிரிப்பதோடு சரி.
ஆனால் இவள் ஒருத்தி தான் மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஒரு பெண் அதுவும் எதேர்ச்சியாய் எந்த திட்டமிடலும் இன்றி.
இது ஒன்றே இவள் தனக்காக வந்தவள் தானோ என யோசிக்க வைத்திருந்தது திவ்யாந்தை.
இருந்தும் தன் மனதை வெளிப்படுத்த சிறு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவனின் வேலை.
ஏனெனில் மருத்துவமனையில் மிக முக்கியபொறுப்பில் இருப்பவன். எந்த இரவில் அழைப்பு வந்தாலும் சென்றாக வேண்டும்.
அவனுக்கான விடுமுறை எப்போது என்பது அவனுக்கே தெரியாது இப்போது வரை.
விடுமுறை என்றோ அதுதான் ஞாயிற்றுக்கிழமை. எந்த நேரம் உறங்குகிறானோ அதுதான் இரவு.
இப்படியான சூழலில் அவளுக்கு காதலனாய் கணவனாய் அவளுக்கு பிடித்த விதத்தில் அவனால் நடந்து கொள்ள முடியுமா என நிச்சயம் தெரியவில்லை.
ஏற்கனவே குடும்ப பாசத்தை தொலைத்து தான் இங்கு தனியாய் வாடுகிறாள் இதில் மேலும் தன்னால் எந்த வருத்தமும் வந்துவிட கூடாதே என்று சற்றே தயங்கினான்.
தானாய் எதையும் கூறப் போவதில்லை எது நடக்குமோ அது நல்லதாய் நடக்கட்டும் என விட்டுவிட வேண்டும் என முடிவெடுத்தான்.
நினைப்பதையெல்லாம் செய்ய முடிந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
அந்த நாளின் நினைவில் கரைந்தவள் அக்கம்பக்கம் உணராமல் அப்படியே அமர்ந்திருக்க மூன்று நான்கு ஆண்கள் அவளை விட்டு சற்று தூரத்தில் அமர்ந்து அவளைப் பார்த்து பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
தற்செயலாய் தன்னை சுற்றிப் பார்த்தவளுக்கு அவர்களின் முகபாவமே தன்னை பற்றி நல்ல பேச்சும் பார்வையும் அவர்களிடத்தில் இல்லை என்பதை உணர்ந்தவள் இயல்பாய் தன் கைப் பையை எடுத்து நடக்க ஆரம்பித்தாள்.
ஆள் நடமாட்டம் குறைவாய் இருக்க அவர்களும் இவளை பின் தொடர அப்போது தான் வண்டியை நிறுத்தியிருந்த இடத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டாள்.
இருப்பினும் பயத்தை மறைக்க நினைத்தவளுக்கு கை அதுவாய் தன் அலைப்பேசியை எடுத்து மறுயோசனையின்றி திவ்யாந்தை அழைத்தாள்.
தன் வீட்டிலிருந்து காரை கிளப்பி வெளியே செல்ல தயாரானவன் அலைப்பேசி அழைப்பில் அதை எடுத்துப் பார்த்தவனின் கண்கள் அடுத்த நொடி அவளுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்துவிட்டிருந்தான்.
“கண்ணம்மா எங்கயிருக்க என்னாச்சு?”
அத்தனை பதட்டத்திலும் அவனின் அந்த காதலும் அக்கறையும் கண்ணை நிறைத்தது.
“கண்ணம்மா லைன்ல இருக்கியா?”
“திவா பீச்க்கு வந்தேன். இங்கே மூணு பேரு. சமாளிச்சுருவேன் இருந்தாலும் பயமா இருக்கு. அதான். ”
“சரி டென்ஷன் ஆகாம நடந்துட்டே இரு. நா வீட்ல இருந்து கிளம்பிட்டேன் 5 மினிட்ஸ்ல அங்க இருப்பேன். ரிலாக்ஸ் டா. நா லைன்லயே தான் இருக்கேன். கவலபடாத. ”
அவன் வருவதாய் கூறியதே ஏதோ அவன் தன் கூடவே இருப்பதாய் ஒரு தைரியத்தை கொடுக்க அப்படியே நடையில் வேகத்தை கூட்டினாள்.
ஓட்டமும் நடையுமாய் அவள் செல்வதை உணர்ந்தவர்கள் அடுத்த இரண்டே எட்டில் அவளை நெருங்கியிருக்க ஒருநொடி அதிர்ந்து போனவள் சட்டென தன் பைக்குள் வைத்திருந்த அந்தபாட்டிலை எடுக்க,
“என்ன ஆசிட் பாட்டிலா பெரிய ஆளு தான் கையிலேயே பல விஷயம் இருக்கும் போலயே”,என ஒருவன் கேவலமாய் சிரிக்க மற்றவர்கள் கூட சேர்ந்து சிரித்தனர்.
“உன் மூஞ்சிக்கு ஆசிட் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி”,என்றவாறு பெப்பர் ஸ்ப்ரேயை அவர்கள் முகத்தில்அடிக்க அவள் கையை விடுவித்துவிட்டு அவர்கள் ஆளுக்கொருபுறம் அலற வேகமாய் அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.
சற்று தூரம் வந்து அவர்கள் வருகிறார்களா என உறுதிப்படுத்தியவாறு திரும்பிவள் யார் மீதோ மோதி நிற்க மீண்டுமாய் முகத்தருகில் பாட்டிலை அழுத்தப் போனவளை வேகமாய் தடுத்தவன்,
“கண்ணம்மா நா தான். ”
அடுத்த நொடி ஒரு வார்த்தை பேசாமல் அவனோடு அப்படியே தன்னை இறுக்கியிருந்தாள்.
“ரிலாக்ஸ் டா. ”
“ரொம்ப பயந்துட்டேன் திவா. உன்னை தவிர யாருக்கும் கால் பண்ண தோணல.
சிந்தாம்மா நீ ட்ரிப் போயிருக்குறதா சொன்னாங்களே? ஒரு வேளை நீ ஊர்ல இல்லாம போயிருந்தா. ”
“அதான் அப்படி ஒண்ணும் நடக்கலயே டா. இன்னைக்கு எர்லி மார்னிங்தான் வந்தேன் சிந்தாம்மாக்கு நா கால் பண்ணல.
அதான் அவங்களுக்கு தெரிஞ்சுருக்காது. சரி வா காருக்கு போலாம். ”
காரினுள் அமர்ந்தவளுக்கு அப்போதும் மனம் படபடக்க வியர்வை வழிய காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து குடிக்க வைத்தவன் மெதுவாய் வியர்வையை ஒத்தி எடுத்தான்.
மீண்டுமாய் அவன் தோளில் தஞ்சமடைந்தவளின் கண்கலங்க அவன் கையை இறுக்கிக் கொண்டாள்.
“மிஸ் யூசோ மச் கண்ணம்மா நம்ம வீட்டுக்கு வந்துரு டா. நீ இல்லாத ஒவ்வொரு நாளும் நரகம் டா. ”
“ஏன் திவா ஏன் இத்தனை காதலை எனக்கு கொடுக்குற. நா அதுக்கு தகுதயானவளா இல்லையே திவா.
இப்போ வர நா உங்ககிட்ட வராம இருக்குறதுக்கு காரணமும் என் மேல இருக்குற குற்றவுணர்ச்சியால தான். உனக்கான என் பழைய காதலை நானே அழிச்சுட்டேன் திவா. ”
“கண்ணம்மா ஏன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற.
மனுஷனா பிறந்த யாரும் தப்பு பண்றது சகஜம் தான். தெரிஞ்சே எத்தனையோ பேர் தப்பு பண்றாங்க.
நீ பண்ணது உன்னை அறியாம பண்ணிண தப்பு அப்படியிருக்க அதுக்காக ஏன் டா உன்னை நீயே போட்டு வருத்திக்குற.
இப்பவும் நீ என் பழைய கண்ணம்மா தான். போதும்டா எனக்கான தண்டனை என் கண்ணம்மாவா என்கிட்டேயே வந்துரு. ”
“வேணாம் திவா. நா பண்ண தப்பு இன்னும் என் மனசை விட்டு போக மாட்டேங்குது மத்தவங்க பேச்சை கேட்டு உன்னை கஷ்டபடுத்தினதுக்கு இது எனக்கு தேவை. கொஞ்ச நாள் போகட்டும் நானே வரேன் கண்டிப்பா. ”
“இப்பவும் உன்னை விட அதிக தண்டனை எனக்கு தான்னு உனக்கு புரில கண்ணம்மா. சரி நா உன்னை கம்பள் பண்ணமாட்டேன்.
டேக் யுவர் ஓன் டைம். ஆனா நா உனக்கு கொடுக்குற டைம் 15 நாள் தான். அதுகுள்ள நீ நம்ம வீட்டுக்கு வரலைனா நா இந்த நாட்டை விட்டு கொஞ்சநாள் தள்ளி இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.
கண்ணுக்கெட்டுற தூரத்துல உன்னை தனியாவிட்டுட்டு இருக்க என்னால முடியாது டா.
நல்லமுடிவா எடு. இல்லனா நீ எப்போ வர சொல்றியோ அது வரை நா இங்க இருக்க மாட்டேன். நானே வீட்ல விட்டுரவா உன்னை?”
“இல்லை வண்டில தான் வந்தேன் நா போய்க்குறேன் திவா. டேக் கேர். ”
அவள் அங்கிருந்து மறையும் வரையுமே பார்த்திருந்தவன் கண்மூடி ஸ்டியரிங்கை பிடித்தவாறு சாய்ந்துவிட்டான்.
நினைவுகள் தங்களின் காதல் நாட்களை கண்முன் விரித்து காட்ட ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Very nice
💞💞💞💞💞💞💞
Super💕