521
அலைப்பேசி அழைப்பில் இருவருமே கண்விழித்தனர். ”சாரி சிந்தாம்மா ரொம்ப நேரம் தூங்கிட்டேனா எழுப்பியிருக்கலாம் தான?”
“பரவால்ல கண்ணு போ நீ போய் ரூம்ல படுத்துக்கோ”,என்றவர் மொபைலைப் பார்க்க திவ்யாந்த் தான் அழைத்திருந்தான்.
“சொல்லுப்பா. ”
“சாரிம்மா தூங்கிட்டீங்களா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. கேஸ் முடிச்சுட்டியாப்பா?”
“ம் முடிஞ்சுது. வெண்பா இப்போ எப்படியிருக்கா சாப்டாளா?”
“ம்ம் ஒரே அழுகை பாவம்யா அந்த பொண்ணு நீ வேற ஏன் அவளை கஷ்டப்படுத்துற.
பொறுத்தது பொறுத்துட்ட இன்னும் கொஞ்ச நாள் அவளே முழு மனசோட நம்ம வீட்டுக்கு வந்துரப் போறா. புரிஞ்சுக்கோப்பா. ”
“நா அவளை கஷ்டப்படுத்தணும்னு சொல்லல சிந்தாம்மா. நிஜமாவே வேலை விஷயமா பாரின் போக வேண்டியிருக்கும்.
ஆனா போகவா வேண்டாமானு நா இன்னும் முடிவு பண்ணல. அத தான் அவகிட்ட சொன்னேன்.
எனக்கும் அவளை இப்படி தவிக்க விட்டு இருக்க முடில சிந்தாம்மா. ”குரலடைத்தது அவனுக்கும்.
“கடவுளே என் பிள்ளைங்க ரெண்டுமே இப்படி தவிக்குதே கொஞ்சமாவது கருணை காட்ட கூடாதா.
கூடவே இருந்தும் ஒண்ணும் பண்ண முடியாம இருக்கனே. ”,என்று அவர் அழ ஆரம்பித்தார்.
சட்டென தன்னை மீட்டெடுத்தவன் அவரை சமாதானப்படுத்தி தூங்க அனுப்பிவிட்டு அழைப்பை கட் செய்தான்.
எப்படியான திருமண வாழ்க்கை எத்தனை எத்தனை அழகான நாட்கள் கட்டிலில் விழுந்தவனின் கண்கள் பக்கவாட்டில் இருந்த தன் திருமண புகைப்படத்திற்குச் சென்றது.
திருமணம் முடிந்த அன்று மாலை வேளையில் அக்கம் பக்கத்தினர் வந்து வெண்பாவை பார்த்து பேசிச் செல்ல சிந்தாம்மா இருவருக்குமாய் இரவு உணவை பரிமாறியபடி தானும் உண்ண ஆரம்பித்தார்.
அதன்பின் திவ்யாந்த் அலைப்பேசி அழைப்பை ஏற்று பேசியவாறே உள்ளே செல்ல எத்தனிக்க அவனை நிறுத்தியவர் சற்று நேரம் மொட்டைமாடிக்கு சென்று வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
வெண்பாவை மற்றொரு அறையிலிருந்த குளியலறையில் குளித்து தயாராகச் சொன்னவர் அவள் வருவதற்குள் அவர்கள் அறையை ஓரளவு தயார் செய்து முடித்தார்.
சமையலறைக்குச் சென்று பாலை சூடு செய்தவரை பார்த்தவளுக்கு அவர் தனியே கஷ்டப்படுவது புரிந்தாலும் எதையும் கேட்க தயக்கமாக இருந்தது.
கையை பிசைந்தவாறே அவள் அறையில் அமர்ந்திருக்க அவரே வேலைகளை முடித்துவிட்டு வந்தார்.
அதற்குள் திவ்யாந்தையும் கீழே வருமாறு அழைத்தவர் அவனுக்கு வேண்டியதை எடுத்து கொடுத்துவிட்டு வெண்பாவிடம் வந்தார்.
“இங்க பாரு கண்ணு எல்லா கஷ்டத்தையும் மறந்து சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிங்க ரெண்டு பேரும்.
இதுக்கு மேல நா முன்னுக்கு நிக்க கூடாது. நீயே கிச்சன்ல இருந்து பாலை எடுத்துட்டு உங்க ரூம்க்கு போடா.
நல்லாயிருக்கணும் ரெண்டு பேரும். ”தலையில் கைவைத்து ஆசீர்வதித்தவரை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“சிந்தாம்மா எல்லா உறவும் இருந்து அநாதை மாதிரி கல்யாணம் பண்ணிக்கனுமேனு எவ்ளோ கவலைபட்டேன் தெரியுமா ஆனா உங்களால தான் அந்த குறை இல்லாம போச்சு.
இப்படி மனசார ஆசீர்வாதம் பண்றதுக்கும் தனி மனசு வேணும். நீங்களே பால் சொம்பை கொண்டு வந்து என் கைல கொடுத்து வாசல் வர வந்தாதான் நா உள்ளே போவேன். ”
“கண்ணு இதெல்லாம் விளையாட்டு இல்ல. நீங்க சொன்னதுக்காக இவ்ளோ நேரம் எல்லாத்தையும் பண்ணிட்டேன்.
இது வேண்டாம் டா. எனக்காக இந்த ஒரு விஷயம் மட்டும் பண்ணும்மா. புரிஞ்சுக்கோ. ”
அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த விரும்பாதவளாய் அவர் அறைக்குச் சென்றபின் கிச்சனுக்குச் சென்றவள் இரு நொடிகள் ஆள் மூச்சுக்களை எடுத்தவளாய் பால் சொம்பை கையில் எடுத்துக் கொண்டு தங்களறைக்குச் சென்றாள்.
தன்னவனுடனான முதல் தனிமை பொழுது அதுவும் கணவன் மனைவியாய்.
அவனைப்பற்றியும் அவனது அன்பு பற்றியும் எவ்வளவோ தெரிந்திருந்தும் புதுமணப் பெண்ணுக்கேயுரிய ஒருவித பதட்டம் இல்லாமல் இல்லை வெண்பாவிற்கு.
உள்ளே சென்று கதவை தாழிட்டவள் சில நொடிகள் அப்படியே நின்றிருக்க கப்போர்டில் எதையோ எடுத்துக் கொண்டிருந்தவன் அவள்புறம் திரும்பி,
“என்னாச்சு கண்ணம்மா வா ஏன் அங்கேயே நிக்குற?”
அந்த ஒற்றை அழைப்பு போதுமே அவளுக்கு மனம் வெகுவாய் சமாதானமடைந்திருந்தது.
அவனும் கட்டிலின் அருகில் வர பாலை அங்கிருந்த டேபிளில் வைத்தவள் அவன் பாதம் பணிய குனிந்தாள்.
சட்டென அவள் கரம் பற்றி நிறுத்தியவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.
“காட் ப்ளஸ் யூ டா. சந்தோஷமா இரு எப்பவும். ”,என்றுகூறி விடுவித்தான்.
மேலும் அவளை இயல்பாக்க எண்ணியவனாய்,
”கண்ணம்மா நீ நம்ம ரூம்க்கு இப்போ தான வர்ற. எல்லாம் ஓ. கே வா எதாவது சேன்ஞ்ச்ஸ் பண்ணணும்னா சொல்லு.
அந்த கப்போர்ட் இப்போ தான் ஆர்டர் பண்ணி வர வச்சது உன் திங்க்ஸ் எல்லாம் அதுல வச்சுக்கோ.
அண்ட் இனி இது உன் பொறுப்பு என ஒரு பைலை அவளிடம் நீட்டினான்.
கையில் வாங்கியவள் கேள்வியாய் அவனைப் பார்க்க கட்டிலில் அமர்ந்தவாறே அவளையும் தன்னருகில் அமர்த்தி பிரித்து பார்க்குமாறு கூறினான்.
சில பல டாக்குமெண்ட்ஸும் ஒரு சாவியும் இருந்தது. இதெல்லாம் இப்போ வர என்னோட சேவிங்ஸ்னு நா வச்சுருக்குறது கண்ணம்மா.
ஒரு லேண்ட் டாக்குமெண்ட் அண்ட் பாங்க் அக்கவுண்ட் டீடெயில்ஸ் எல்லாம் இருக்கு.
இது நம்ம லாக்கர் கீ பொதுவா வீட்டில நிறைய கஷ் வச்சுக்க மாட்டேன் பட் எனக்கோ சிந்தாம்மாக்கோ மாச செலவுக்கு எது வேணாலும் இதுல இருந்து தான் எடுத்துப்போம்.
இனி இதெல்லாம் நீயே பாத்துக்கோ உன்னை பாத்துக்குறது மட்டும் தான் என் வேலை. சரி தான?”
“என்ன திவா இதுக்கெல்லாம் என்ன அவசரம். அதுட்டுமில்லாம சிந்தாம்மா இருக்கும்போது இந்த பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு?”
“கண்ணம்மா அவங்க இதெல்லாம் பாத்துக்க மட்டாங்க. எவ்வவளவோ சொல்லியும் கேட்கல.
இதெல்லாமே என் பொறுப்பில் இருந்தது தான். போதும்டா ரொம்பவே பொறுப்புகளை சுமந்தாச்சு. இனியாவது எனக்கு சாயுறதுக்கு தோள் தேவை அதுவும் நீ மட்டும். ”
அவனின் பாசத்திற்கான ஏக்கம் அப்பட்டமாய் அவளுக்கு புரிந்தது.
வெளியுலகில் எத்தனை கம்பீரமாய் தெரிந்தவன் பச்சை குழந்தையாய் பாசத்திற்கு ஏங்கும் மனதோடு தன்னை உயிராய் நினைப்பதை கண்கூட பார்த்தவளுக்கு அதற்கு மேல் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனை அப்படியே தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.
தாயாய் தன் பிள்ளையை தனக்கே தனக்காய் ஏற்றுக் கொள்ளத் துடிக்கும் பாவம் இருந்தது அதில்.
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவனுக்கு கண்கள் அதுவாய் கலங்கியது.
தன்னிடமிருந்து அவனை விலக்கியவள் கண்ணீர் துடைத்து முகமெங்கும் தன் காதலை பாசத்தை முத்தங்களாய் பரிசளித்தாள்.
ஒரு கட்டத்தில் பாசம் காதலாய் மாறி காதல் கணவனுக்கான உரிமையாய் மாற மனைவியாய் அவனோடு கலந்திடத் தயாரானாள் வெண்பா.
தாம்பத்தியம் என்பதே அழகு அதிலும் இரு மனங்கள் உரசி ஒருவர் தேவை மற்ற வர் உணர்ந்து தன்னவளுக்காய் எத்தனை உணர்ச்சிப் பெருக்கிலும் நிதானத்தை கைப்பிடித்து அவளின் முகபாவங்களுக்கும் முனகல்களளுக்கும் மதிப்பளிப்பது வெற்றி தோல்வி கர்வம் காமம் கடந்து தன் துணையும் துணையின் உணர்வுமே பிரதானமாய் நின்று நடக்கும் தாம்பத்யம் கவிதையினும் அழகாய் இல்லாமல் போய்விடுமா!
அந்த கவிதையை வெண்பா ஒவ்வொரு நொடியும் உணர்ந்தாள்.
காமம் என்ற ஒன்றை அவள் எந்தநிலையிலும் உணரவில்லை.
உணர்ச்சி வேகமும் ஹார்மோன் மாற்றங்களும் படுத்தி எடூத்தாலும் அனைத்தையும் கடந்த தன்னவனின் காதல் மட்டுமே பிரதானமாய் தெரிந்தது.
அதன்பின்னும் அவளை தன் கையைணைப்பிலேயே அவன் வைத்திருக்க களைத்து கசங்கியவளுக்கு அது இன்னுமே தேவையாய் இருந்தது.
பாதி உறக்கத்தில் விழித்தவள் லேசாய் திரும்ப முயற்ச்சிக்க அந்த சிறு அசைவிற்கே விழித்துக் கொண்டவன்,
“என்னாச்சு கண்ணம்மா. ஆர் யூ ஓ. கே?”
“ம்ம் திவா”,என்றவள் இன்னோமாய் அவனோடு மார் சாய்ந்து கொண்டாள்.
காலையில் சற்றே அயர்வாய் எழுந்து அமர்ந்தவளோடு தானும் எழுந்து கொண்டவன் மென்மையாய் அணைத்து நெற்றியில் இதழ்பதித்து,
“குட்மார்னிங் கண்ணம்மா ஹவ் அ குட் டே. ”
குட்மார்னிங் திவா. நீங்களும் ஏன் இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டீங்க லீவ்ல ரெஸ்ட் எடுத்தாதான் உண்டு. ”
“அதெல்லாம் பரவால்ல என் கண்ணம்மாவோட ஒவ்வொரு செகண்டும் நா என் நேரத்தை செலவழிக்கணும்.
அதுவே எனக்கு யானை பலம் கொடுக்கும். ரொம்ப சில்லியா இருக்கு இல்ல. பட் நிஜமா இனி உன்னை டார்ச்சர் பண்ணுவேன்.
உண்மையை சொல்லணும்னா நேத்துல இருந்து நா ஒரு ஸ்கூல் கோயிங் பையன் மாதிரி அவ்ளோ என்த்துவா பீல் பண்றேன் கண்ணம்மா.
அதனால ரெஸ்ட் எல்லாம் எனக்கு தேவையில்ல. உன்கூட உன் பக்கத்துலயே இருக்கனும். ”
வெட்கமும் பூரிப்புமாய் அவனை விட்டு நகர்ந்தவள் குளித்து தயாராகி வெளியே வர சிந்தாம்மா கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தார்.
“குட்மார்னிங் சிந்தாம்மா சீக்கிரமே எழுந்துடுவீங்களா?நாளையில் இருந்து நானும் சீக்கிரம் எழுந்துக்குறேன். ”
“அட என்ன கண்ணு அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இந்தா காபி சாப்ட்டு தம்பிக்கும் எடுத்துட்டு போ. ”
இருவருக்குமாய் காபியை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றவள்,
”திவா இந்தாங்க காபி. ”
“தேங்க் யூ கண்ணம்மா. சிந்தாம்மா கிளம்பிட்டாங்களா?”
“எங்க?என்கிட்ட ஒண்ணுமே சொல்லலியே?”
“ம்ம் அவங்க ஒரு வாரம் ஏதோ யாத்திரை போறதா சொன்னாங்க.
இங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்குறவங்க எல்லாம் சேர்ந்து ஆர்கனைஸ் பண்ணி போறாங்க போல. ”
“ஓ. அப்போ நா போய் எதாவது ஹெல்ப் பண்ணணுமானு கேட்குறேன் திவா. நீங்க ரெடி ஆய்ட்டு வாங்க. ”
“சிந்தாம்மா என்கிட்ட சொல்லவேயில்ல நீங்க ஊருக்கு போறத. எதாவது பேக் பண்ணணுமா?”
“அதெல்லாம் நானே பண்ணிட்டேன் கண்ணு. தம்பி உன்கிட்ட சொல்லிருக்கும்னு நினைச்சேன். வழக்கம் போல மறந்துட்டான் போல. ”
“ம்ம் டாக்டர்க்கு கொஞ்சமும் பொறுப்பேயில்ல. நீங்க ஸ்ட்ரிக்டா இல்லாம போய்ட்டீங்க சிந்தாம்மா.
அதான் இப்படி. ”,என்று கூறி சிரிக்க சிந்தாம்மா அவளுக்கு பின்னால் வந்த திவ்யாந்தை பார்த்து மென்னகைத்தப் படியே அங்கிருந்து நகர்ந்தார்.
“ம்ம் எனக்கு எவ்ளோ பொறுப்பு இருக்குனு இப்போ சிந்தாம்மா கிளம்பினவுடனே காட்றேன் என் கண்ணம்மாவுக்கு. ”,என மெல்லியதாய் அவள் காதில் உரைக்க அவனது மூச்சுக் காற்றிலும் மீசையின் குறுகுறுப்பிலும் சட்டென குழைந்தவள் தடுமாறி அவன் மீதே சாய இடைப்பற்றி அவளை நிறுத்தியவன் அவள் எதிர்பாரா நொடி இடுப்பில் குறுகுறுப்பு மூட்டி அங்கிருந்து மறைந்து விட்டான்.
சில நிமிடங்களில் சிந்தாம்மா கிளம்பத் தயாராக இருவருமாய் வாசல் வரை சென்று மற்றவர்களோடு வழியனுப்பி வைத்துவிட்டு வந்தனர்.
அவர்களுக்கு தேவையான காலை உணவை அவரே தயார்செய்து வைத்துச் சென்றிருக்க இருவருமாய் சேர்ந்து அமர்ந்து உண்டு முடித்தனர்.
அதன்பின் வெண்பா மதிய உணவிற்கு சமைக்க ஆரம்பிக்க அவளுக்கு உதவி செய்தவாறே ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ ஆரம்பித்திருந்தான்.
சமையலை முடித்து பாத்திரங்களை அவள் தேய்த்து கொடுக்க அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து அடுக்கி வைத்தான்.
“திவா ஆனாலும் நீங்க என்னை இப்படி பேம்பெர் பண்ண கூடாது. உங்களை கவுக்குறது எனக்கு ரொம்ப சுலபம் போலயே. ”
“ம்ம் என்ன பண்றது கண்ணம்மா எனக்கு இப்படி இருக்குறதுக்கு தான் பிடிச்சுருக்கு. ”
அடுத்து வந்த ஒரு வார காலமும் அவர்கள் வாழ்வின் மறக்க முடியா நாட்களாய் மாறிப் போனது.
வீட்டை விட்டு எங்கும் நகரவில்லை. நான்கு சுவர்களுக்குள்ளேயே உலகின் அத்தனை அழகையும் காதலையும் தேடித்தேடி கண்டுபிடித்து களைத்தனர்.
திவாவோ தன் கண்ணம்மாவிடம் மொத்தமாய் சரணடைந்திருந்தான்.
தன் மொத்த காதலையும் அவளுக்கு திகட்ட திகட்ட பகிர்ந்து கொண்டே இருந்தான். வெண்பாவிற்கோ தான் ஏதோ நாட்டு ராணி என்றே உணர்வே இருந்தது.
திவா அவளை ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் அத்தனை அக்கறையாய் அத்தனை பாசமாய் தன் வாழ்வின் தேவதையாகவே பாவித்தான்.
பயணம் முடிந்து சிந்தாம்மா வருவதற்கும் இவர்கள் இருவரும் வேலையில் சேர்வதற்கும் சரியாய் இருந்தது.
காலை முதல் மாலை வரையிலான தன் பிரிவை அதன் பிறகான நேரங்களில் அப்படியே ஈடு கட்டிவிடுவான் தன் கண்ணாம்மாவிடம்.
அன்றைய நாளின் விஷயங்களை அவள் காலை மென்மையாய் அழுத்தியபடியே கதையாய் கேட்டு கூறி முடிப்பான்.
அதே நேரம் சிந்தாம்மாவுடனான பொழுதுகளையும் தவிர்க்காமல் மூவருமாய் பேசி சிரித்தவாறு இரவு உணவை சமைத்து முடித்து சாப்பிட்டு சமையலறையை சுத்தம் செய்யும் வரை உதவி பின் தங்களறைக்கு வருவர்.
அதன் பின்னும் எத்தனை சோர்வு இருப்பினும் அவளுக்கே அவளுக்கான நிமிடங்களை அவன் மறந்ததேயில்லை.
தன்னோடு அமர்ந்து சிறு பிள்ளையாய் கதை பேசுபவளை ஆசை தீர பார்த்திருப்பான்.
“ஏன் திவா இந்த போலீஸ்காரங்க தான் எப்பவும் விரைப்பாவே இருப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனா சம் டைம்ஸ் டாக்டர்ஸ் கூட அப்டி ஆய்டுவாங்களோ?”
“அது அப்படியில்ல கண்ணம்மா. போலீஸ்காரங்க நாள் மொத்தமும் பாத்து பழக வேண்டியது க்ரிமில்ஸ்கிட்ட சோ அவங்க மேனரிசமே மாறிடுது.
அதே மாதிரி நாங்க பாக்குற பேஷண்ட்ஸ் ஒவ்வொருத்தரும் ஒருவிதம். அவங்க அவங்களுக்கு ஏத்தமாதிரி பேசி பக்குவபடுத்தி ஒரு ஸ்டேஜ்ல பேச்சுல ஒரு நிதானமும் பொறுமையும் அதுவாவே வந்துடும்.
அதிலும் என்ன மாதிரி நேச்சரே அமைதியா இருக்குறவங்க இன்னும் அமைதியாயிடுறோம். என்ன டா பண்றது. ”
“ம்ம் உண்மைதான் திவா. ஆனாலும் என் நல்ல நேரம் என்கிட்டயாவது இவ்ளோ பேசுறீங்களே.
கல்யாணத்துக்கு முன்னாடி நா இங்க வந்தப்போவே அந்த கொஞ்ச நேரத்துலயே தோணும். சிந்தாம்மாவும் நீங்களும் எவ்ளோ பொறுமையா மெதுவா பேசிக்கிறீங்கனு.
நானும் ரொம்ப அடாவடினு எல்லாம் சொல்லிட முடியாது தான் அதே நேரம் உங்க அளவு சாப்ட் நேச்சர் எல்லாம் நினைச்சுகூட பாக்க முடியாது. ”
அழகாய் புன்னகைத்தவாறே தன் மேல் சாய்ந்திருப்பவளின் தலைகோதி கொண்டே அந்த நிமிடங்களை தனக்குள் பதித்துக் கொள்வான்.
மறுநாள் காலை திவ்யாந்த் எழுந்தபோதும் வெண்பா உறக்கத்தில் இருக்க அவளை எழுப்பாமல் குளிக்கச் சென்றவன் குளித்து முடித்து சிந்தாம்மாவிடம் சென்று காபி வாங்கி வந்தான்.
வெண்பாவோ கால் சுருக்கி ஒரு ஓரமாய் கட்டிலில் படுத்திருக்க சற்றே பதறியவனாய் அவளருகில் அமர்ந்து,
”கண்ணம்மா. என்னாச்சு!!”,என்றவாறு காய்ச்சல் இருக்கிறதா என அவசரமாய் கழுத்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.
“இல்ல திவா பீவர் எல்லாம் இல்ல. இது வேற. ”
அவள் தயக்கத்தை உணர்ந்தவனாய் சட்டென விஷயத்தை புரிந்தவன்,
“என்ன கண்ணம்மா. என்கிட்ட எதுக்கு தயக்கம். எப்பவுமே இந்த டேஸ்ல இப்படிதான் இருக்குமா?”
அவன் கேட்ட பிறகே அவன் மருத்துவர் என்பதை மறந்ததே வெண்பாவிற்கு உரைத்தது. சட்டென அவனின் இடையோடு கட்டிக் கொண்டு இன்னுமாய் கால் சுருக்கிப் படுக்க பதறிப் போனான்.
“திவா எப்பவுமே இப்படியெல்லாம் இருக்காது. என்னனே தெரில இப்போ ஒரு இரண்டு மாசமா தான் இவ்ளோ மோசமா இருக்கு. ஒரு மூணு மணி நேரத்துக்கு ஒண்ணுமே பண்ண முடில. ”
“ரிலாக்ஸ் கண்ணம்மா. உடம்பு வீக் ஆய்ருக்கும். நத்திங் டூ வொரி.
கொஞ்சம் ஹெல்தி புட்ஸா இனி எடுத்துக்கனும். சரி இரு நா போய் உனக்கு மோர் எடுத்துட்டு வரேன். கொஞ்சம் பெட்டரா இருக்கும். ”,
என்றவன் சென்று மோரில் உப்பு காயம் போட்டு சிறிது வெந்தயத்தை கையில் எடுக்க சிந்தாம்மாவும் அவனோடு வந்து அவளை சாப்பிட வைத்து படுத்துக் கொள்ள உதவினார்.
அன்று அவளை விடுமுறை எடுத்துக் கொள்ள சொன்னவன் முக்கியமான கேஸ் இருப்பதால் முடிந்தளவு சீக்கிரம் சென்று வருவதாய் கூறிக் கிளம்பினான்.
அத்தனை நாட்கள் காதலனாய் கணவனாய் இருந்தவன் அந்த மூன்று நாட்களில் அவளுக்கு அன்னையுமாய் மாறிப் போனான்.
முடிந்தளவு வேலைகளைக் குறைத்து மனதை இலகுவாய் வைத்துக் கொள்ள உதவினான்.
சிந்தாம்மாவும் அவளை தன் மகள் போலவே பார்த்துக் கொண்டார்.
அன்று வெண்பாவே பொறுக்கமாட்டாமல் அவனிடம்,
”ஏன் திவா ஆனாலும் இப்படி லேடீஸ்க்கான சாதாரண ஒரு விஷயம் இதுக்கே என்னவோ ப்ரெக்ணெண்ட் லேடியை பாத்துக்குற மாதிரி பாத்துக்குறீங்க.
பட் எப்பவும் விட இந்த டைம் நா ரொம்பவே ரிலாக்ஸ்டா பீல் பண்ணேன் தான் இருந்தாலும் இதை கேக்காம இருக்க முடில. ”
“கண்ணம்மா. சாதாரண வழக்கமான விஷயமா இருக்கலாம் ஆனா அப்போ உங்களோட உடலும் மனமும் வழக்கத்தை விட ரிலாக்ஸ்டா இருக்குறது முக்கியம் டா.
மேபி ஒரு டாக்டரா எனக்கு இது ரொம்பவே புரியுதோ என்னவோ.
பட் இதே இது நாம இப்போ ஒரு ஜாய்ண்ட் பேமிலில இருக்கோம்னு வை.
இந்தளவு என்னால உன்னை கவனிச்சுக்க முடியாம போய்ருக்கலாம்.
ஆனா சிந்தாம்மாவுக்கே நா இந்த நேரத்துல என்னால முடிஞ்ச உதவிகளை கண்டிப்பா பண்ணுவேன்.
அவங்க முக சோர்வே காட்டிக் கொடுத்துரும் பல நேரத்துல அதுக்கு மேல அவங்களை அநாவசியமா தொல்லை பண்ணமாட்டேன்.
அதனால தான் நா இப்போ உன்னை கவனிச்சுக்குறதும் அவங்களுக்கு தப்பாவோ வித்யாசமாவோ தெரில.
இந்த ஆறுதலும் அரவணைப்பும் நிச்சயம் மனசு எதிர்பார்க்குற ஒரு விஷயம்தானடா.
நிறைய கணவர்களுக்கு அது புரியாது. எனக்கு அது புரியும் போது அதை ஏன் வெளிக்கட்டாம இருக்கணும்.
என் கண்ணம்மாக்கு எல்லாமுமா நா இருக்கேன்னு சொன்னா மட்டும் போதாது செயல் படுத்தியும் காட்டணும். சரி தான?”
இமைக்கவும் மறந்து திவ்யாந்தை பார்த்திருந்தவள் அவன் கேள்வியில் சம்மதமாய் தலையசைத்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
💞💞💞💞💞💞💞💞💞
திவ்யாந்த் ரொம்ப ரொம்ப நல்லவன். Nice