பழைய நினைவுகளோடே உறங்கியிருந்தவளின் அலைப்பேசி அலறிய சத்தத்தில் வேகமாய் எழுந்து அமர எங்கிருக்கிறோம் என்று உணரவே சில நொடிகள் பிடித்தது வெண்பாவிற்கு.

சற்றே நிதானமடைந்தவள் அலைப்பேசியை எடுத்து காதில் வைக்க சிந்தாம்மா தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சிந்தாம்மா”

“என்ன கண்ணு இன்னும் கிளம்பலையா லேட் ஆகுமா?”

“ம்ம் கிளம்பிட்டேன் இப்போ வந்துருவேன் சிந்தாம்மா. ”என்றவள் எழுந்து வாஷ் ரூம் சென்று முகம் கழுவி வெளியே கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்தவளின் முகத்தை கண்டு பயந்தவர் அவள் உடைமாற்றச் சென்ற இடைவெளியில் திவ்யாந்திற்கு அழைத்தார்.

“தம்பி என்னனே தெரில நேத்துல இருந்து பாப்பா சரியே இல்ல இத்தனை சோர்வா அவளை பார்த்ததே இல்ல நீ வேணா கிளம்பி வரியா. ”

“சிந்தாம்மா கொஞ்சம் மூச்சு வாங்கிகோங்க. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க. ஒண்ணுமில்ல எல்லாமே சீக்கிரம் சரி ஆய்டும்.

நேத்து அவளை பார்த்து பேசினேன் அந்த யோசனைல தான் இருப்பா. கவலபடாம இருங்க சீக்கிரமே நாம மூணு பேரும் பழைய வாழ்க்கையை வாழ தான் போறோம். சரி ஒரு எமர்ஜென்சி கேஸ் இருக்கு நா கிளம்புறேன். ”

என்ன தான் அவன் சமாதானப் படுத்தினாலும் சிந்தாம்மாக்கு தான் மனது ஆறவேயில்லை. உடைமாற்றி வெளியே வந்தவள்,

“சிந்தாம்மா எனக்கு பசியே இல்லை. நீங்க சாப்ட்டு படுத்துக்கோங்க. நா போய் படுத்துக்குறேன். ”

“பாப்பா ஒரு நிமிஷம் உன்கூட பேசனும் இங்க வரியா?”

தரையில் அமர்ந்திருந்தவரின் அருகில் வந்து அமர்ந்தவள் அவர் முகம் பார்க்க தவிர்த்து தலை குனிந்தே அமர்ந்திருந்தாள்.

“ஏன் கண்ணு என்னவோ போல இருக்க. மனசுகுள்ள எதையோ போட்டு குழப்பி கஷ்டப்படுற என்னனு சொல்லு. தம்பி என்ன சொன்னான்?”

அவர் முடித்ததுதான் தாமதம் அவர் மடியில் விழுந்து புடவையை இறுக்கிப் பிடித்தவள் அழுத்தம் தீர அழுது தீர்த்தாள்.

சில நிமிடங்கள் ஆதரவாய் தலை வருடிக் கொடுத்தவர் மென்மையாய் முதுகை தடவிக் கொடுத்தார்.

“ஏன் கண்ணு போதும் எவ்வளவோ அழுதாச்சு ஏன்டா உன்னை நீயே கஷ்டப் படுத்திக்குற. ”

“ஏன் சிந்தாம்மா நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க. என் அம்மா ஏன் உங்களை மாதிரி இல்லாம போனாங்க.

அவங்க ஏன் என் வாழ்க்கையை கெடுக்க நினைச்சாஙங்க. எத்தனை அழகா நடந்த கல்யாணம் எங்களோடது.

எத்தனை நிம்மதியா நாம வாழ்ந்தோம் ஏன்ம்மா எல்லாமே மாறிப் போச்சு. என் விதி எல்லா உறவுகளும் இருந்தும் இப்படி தனியா துடிக்கணும்னு எழுதிருக்கு. ”

“வெண்பா கண்ணு இப்போ ஏன் பழசையெல்லாம் போட்டு நினைச்சுட்டு இருக்க.

இப்பவும் தம்பி உனக்காக தான் காத்துட்டு இருக்கு. அந்த வீட்டு ராணி டா நீ. ”

“அதான் இன்னமும் கஷ்டமா இருக்கு சிந்தாம்மா. உங்களுக்கும் திவாக்கும் அன்பு காட்றத தவிர எதுவுமே தெரில.

அதுதான் என் குற்றவுணர்ச்சியை இன்னும் இன்னும் அதிகமாக்குது.

திவா இன்னும் பதினைஞ்சு நாள்குள்ள என்ன வீட்டுக்கு வர சொல்லிருக்காரு இல்லனா இந்த நாட்டை விட்டு என்னைவிட்டு உங்களைவிட்டு கொஞ்ச நாள் தள்ளியிருக்க போறாராம். ”

“இது அவனால முடியும்னு நினைக்குறியா வெண்பாம்மா. அவனோட உயிரும் உலகமும் நீதான் அதை விட்டு அவன் எங்க போவான். !?”

“இல்ல சிந்தாம்மா அவரு உறுதியா சொல்லிட்டாரு. அவரு முடிவெடுத்தா கண்டிப்பா மாத்திக்க மாட்டாரு. ”

அப்படியே அவள் போக்கில் புலம்பியவள் சிந்தாம்மாவின் எந்த ஆறுதலையும் காதில் வாங்குவதாய் இல்லை.

அப்படியே புலம்பிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் உறங்கியும் போனாள்.

அவளை மடியில் கிடத்தியிருந்தவருக்கு அவள் கூறியதுபடி எத்தனை அழகான கல்யாணம் அவர்களுடையது என்றே யோசிக்கத் தோன்றியது.

அன்று அந்த கெட்டு கெதருக்குப் பின்னான நாட்கள் இன்னும் இன்னும் இனிமையாய் மாறியிருந்தது.

அத்தனை வேலை பொறுப்புகளுக்கு நடுவிலும் திவ்யாந்த் அவளிடம் தன்னையும் தன் காதலையும் உணர்த்திக் கொண்டேயிருந்தான்.

இருவருக்குமாய் கிடைத்த விடுமுறை நாளில் கல்யாண ஷாப்பிங் செல்லலாம் என முடிவு செய்து இருவருமாய் கிளம்பினர்.

சிந்தாம்மா வழக்கம் போல் நல்ல காரியங்களுக்கு நான் முன்னிருப்பது சரி வராது என மறுத்துவிட வேறு வழியின்றி திவ்யாந்தும் வெண்பாவும் மட்டுமே  சென்றனர்.

முகூர்த்த புடவை செக்ஷனையே தலைகீழ் ஆக்கிக் கொண்டிருந்தாள் வெண்பா.

திவ்யாந்த் வழக்கம் போல் அமைதியாய் அங்கு பார்வையாளனாகவே இருந்தான்.

சட்டென திவ்யாந்தின் கண் ஒரு புடவையில் நிலைகொள்ள அதே நேரம் மிகச் சரியாய் வெண்பாவும் அதையே கையில் எடுத்திருந்தாள்.

“திவா இது எப்படியிருக்கு. டிஃபெரெண்ட் கலரா இருக்குல எடுத்துக்கலாமா?”

“ரொம்ப நல்லாயிருக்கு கண்ணம்மா. எடுத்துக்கலாம்”

அதன் பிறகு மத்த சடங்குககளுக்கும் ரிசெப்ஷனுக்குமான புடவைகளையும் எடுத்துவிட்டு திவ்யாந்திற்கு பட்டு வேஷ்டி சட்டை எடுத்து அங்கிருந்து கிளம்பினர்.

பின் ரிசெப்ஷனுக்கான கோட் சூட் எடுப்பதற்கு  ப்ரத்யேக பொட்டிக்கிற்கு சென்று அளவெடுத்து துணியையும் செலெக்ட் செய்து கொடுத்து வந்தனர்.

இதற்கிடையில் கல்யாண மண்டபம் சாப்பாட்டு மத்த வேலைகள் அனைத்தையும் திவ்யாந்த் பார்த்து பார்த்து அரேண்ஞ்ச் செய்திருந்தான்.

வெண்பா தனக்கான உடைகள் ஸ்ட்ரிச்சிங் பார்லர் என அவளும் பிசியாய் இருக்க இருவருமாய் அடுத்து சந்திக்க நேர்ந்தது திருமணத்திற்கு முந்தைய நாள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த மெஹந்தி பங்ஷனில் தான்.

திருமண மண்டபத்திலேயே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க அரங்கமே மழலை குரல்களால் நிரம்பி வழிந்தது.

அங்கு வந்திருந்த மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களுக்கு அப்படியாய் ஒரு ஆச்சரியம்.

ஏனெனில் அவர்களையும் ஆசிரம குழந்தைகளையும் தவிர சத்திரத்தில் யாருமிருக்கவில்லை.

என்னவென்று பேச்சு எழுந்தபோது திவ்யாந்தின் கீழ் பணிபுரியும் ஆண் செவிலி ஊழியர் கூறினார்,

“டாக்டர் எல்லாருக்கும் தனித்தனியாதான் இன்விடேஷன் வச்சுருக்காரு.

இன்னையோட அழைப்பு நம்மளை மாதிரி ஸ்டாப்ஸ் அண்ட் ஹெல்பர்ஸ் அப்பறம் அவரு வளர்ந்த ஆசிரமத்தின் குழந்தைங்களுக்கு மட்டும் தான்.

நா கூட இப்படி பிரிச்சு பார்த்து கூப்பிடுறாரே மனுஷன்னு அவர்டயே கேட்டேன்.

அதுக்கு அவரு துளியும் கோபடாம சொல்றாரு. நம்ம ஹாஸ்பிட்டல யாரு எப்படினு எனக்கு நல்லா தெரியும்.

சில டாக்டர்ஸ் எல்லாரையும் சமமா பார்ப்பாங்க சிலருக்கு ப்ரெஸ்டீஜ் இஷு இருக்கும்.

எல்லாரையும் ஒரே நேரத்துக்கு கூப்பிட்டு யாராவது என் குழந்தைங்களை தப்பா பேசிட்டா எனக்கு ரொம்ப கஷ்டமாய்டும்.

அதே நேரம் அவங்களை மட்டும் கூப்பிட்டா அதுவும் வித்தியாசமா தோணும். அதான் யோசிச்சேன் அவங்களை சாதாரணமா பார்த்து நகர்ந்து போக யாரால முடியும்னு. கண்டிப்பா அது நீங்க எல்லாரும் தான்.

கல்யாணத்துக்கு வர்ற யாராவது இவங்க மனசு கஷ்டபடுற மாதிரி எதாவது சொல்லிட்டா ரொம்ப கஷ்டமாய்டும்.

அதனால தான் இந்த பங்ஷன் பத்தி யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்கல. கல்யாணம் முடிஞ்சு நாங்க உடனே திருப்பதி போறதா சொல்லிட்டேன்.

என் கல்யாணத்துல எல்லாருக்கும் வயிறும் நிறையணும் மனசும் நிறையணும் அதனால தான் இந்த ஏற்பாடு தப்பா எடுத்துக்காம கண்டிப்பா வந்துருங்கனு சொன்னாரு. ”

அவர் கூறியதை கேட்ட அனைவருக்குமே அங்குள்ள குழந்தைகளின் உதடுச் சிரிப்பும் குதுகலிப்பும் மனதை மயக்குவைதாய் இருந்தது.

குழந்தைகளுக்காகவே மெஹந்தி டட்டூ போட தனி தனி ஆட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பானி பூரி பஞ்சுமிட்டாய் பாப் கார்ன் ஐஸ்கீரிம் என அத்தனை அத்தனை உணவுப் பொருட்களும் அரங்கத்தை அழகுபடுத்தியது.

அங்கு குழந்தைகள் மட்டுமே பிரதானமாய் இருக்க கேட்டரிங் சர்வீஸ் செய்தவர்களும் அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

குழந்தைகள் மட்டும் அல்லாது மருத்துவமனை ஊழியர்களுமே ஏதோ தன் குடும்ப விழாவிற்கு வந்தது போன்றே உணர்ந்தனர்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடின்றி யாரையும் பார்த்து எழுந்து மரியாதை கொடுத்து ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் சகஜமாய் இருக்க முடிந்தது.

சற்று நேரத்தில் ஆட்டம் பாட்டம் என கலைகட்ட அழகிய மஞ்சள் வண்ண லெஹெண்காவில் ஆரணங்கள் அனைத்துமே பூவால் செய்ப்ட்டிருக்க எந்த ஒப்பனையுமின்றி கண்ணுக்கு மையிட்டு வந்தமர்ந்தாள் வெண்பா.

அவளுக்கு சற்றும் குறையாது சாதாரண சந்தன நிற பைஜாமா ஜிப்பாவில் அத்தனை கம்பீரமாய் தன் அறையிலிருந்து வெளிந்தான் திவ்யாந்த்.

வந்தவன் நேராய் விருந்தினர்களிடம் வந்து அவர்களை மனதார வரவேற்று குழந்தைகளிடம் பேசிவிட்டு மெதுவாய் மேடையேறினான்.

மேடையேறியவன் சிந்தாம்மாவை தேட முதல் வரிசையில் அமர்ந்து கண்கொள்ளா மகிழ்ச்சியோடு அவர்களையே பார்த்திருந்தார்.

சரியாய் அந்நேரம் வெண்பாவும் அவரை அழைக்க திவ்யாந்த் கீழே சென்று அவரை தன்னோடு வருமாறு அழைத்தான்.

“என்ன சிந்தாம்மா சின்னபுள்ள மாதிரி பிடிவாதம் பண்றீங்க. ஒழுங்கா வாங்க மேடைக்கு. ”

“தம்பி சொன்னா கேளு நல்ல காரியம் நடக்குற இடத்துல நா எதுக்கு நா அங்க எல்லாம் வரக் கூடாதுப்பா. நீ போய் பாப்பா பக்கத்துல நில்லு. ”

அதற்குள் வெண்பாவே இங்கி வந்து அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னருகில் நாற்காலியைப் போட்டு அமர வைத்துக் கொண்டாள்.

“நாளைக்கு தாலி கட்டி முடியுற வர என் பக்கத்துலயே தான் இருக்கணும் சொல்லிட்டேன்.

திவா நீங்க போய் வந்தவங்களை கவனிங்க.

நா பாத்துக்குறேன்.”, என்றவளைப் பார்த்து விழி நிரம்பிய காதலோடு புன்னகைத்துச் சென்றான்.

ஒவ்வொருவராய் கவனித்து அவர்களை உணவருந்த அனுப்பிவிட்டு குழந்தைகளிடம் வேண்டியதை கேட்டு அவர்களுக்கு அதை வாங்கிக் கொடுத்து என முகத்தில் ஒட்டிய புன்னகை மாறாது வலம் வந்தான்.

சிந்தாம்மா மெதுவாய் வெண்பாவிடம், ”கண்ணு அப்பா அம்மா வந்துருவாங்கனு சொன்ன இன்னும் காணுமே போன் பண்ணியா?”

“ம்ம் ப்ளைட் எதுவும் மிஸ் பண்ணிட்டாங்களோ என்னவோ வருவாங்க சிந்தாம்மா. ”,என்றவளுக்கு இரு தினங்களுக்கு முன் திவாவிடம் இதுப் பற்றி பேசியது நினைவிற்கு வந்தது.

“திவா ஐ அம் சாரி. ”

“என்னாச்சு கண்ணம்மா. எதுக்கு சாரி?”

“இல்ல உங்காகிட்ட ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன். அதான். ”

“என்னடா எதுவாயிருந்தாலும் சொல்லு. ”

“நா நம்ம கல்யாணத்தை பத்தி அப்பா அம்மாகிட்ட சொல்லல திவா. ”

ஏன் கண்ணம்மா. உன் கல்யாணத்தை பத்தி அவங்களுக்கு எத்தனை கனவு இருக்கும். இப்டி பண்ணலாமா?”

“இல்ல திவா கண்டிப்பா அவங்க வந்தா என் நிம்மதி நம்ம நிம்மதி போய்டும். ப்ளீஸ் திவா.

இந்த ஒரு விஷயம் மட்டும் என்ன கட்டாயப் படுத்தாதீங்களேன்.

நீங்க வேற என்ன சொன்னாலும் நா கேக்குறேன். இது மட்டும் வேணாம் ப்ளீஸ். ”

“சாரி கண்ணம்மா உன் இஷ்டம். எதுக்காகவும் நா உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் எப்பவுமே.

ஆனா கல்யாணம் முடிஞ்சவுடனே கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லிடணும் சரியா. ”

“ம்ம் அதானே எத்தனை பேஷண்டை வழிக்கு கொண்டு வர்றரு என்ன சமாளிக்கத் தெரியாதா நல்லா பேசுறீங்க. சரி சொல்லிட்றேன். போதுமா. ”

“என்ன பண்றது கண்ணம்மா கல்யாணம்னு சொன்னவுடனே பொண்டாட்டியை சமாளிப்பது எப்படினு அதுவா தெரிய வந்துடுது. ”என்று இலகுவாய் பேச்சை முடித்துக் கொண்டான்.

அந்த நினைவுகளில் இருந்தவளை திவ்யாந்த்தின் அழைப்பு மீட்டுக் கொண்டுவர என்னவென்பதாய் விழியால் கேட்டவனுக்கு ஒன்றுமில்லையென தலையசைத்தவள் புன்னகையோடு மெஹந்தியை கவனிக்க ஆரம்பித்தாள்.

பங்கஷன் ஒரு வழியாய் முடிந்து அனைவரையும் வழினுப்பிவிட்டு திவ்யாந்த் உள்ளே நுழைய சிந்தாம்மா கையில் உணவோடு வெண்பா அறைக்கு அருகில் நின்றார்.

“நீங்க சாப்டீங்களா சிந்தாம்மா?”

“இல்ல கண்ணு பாப்பாக்கு கொடுத்துட்டு அப்பறம் சாப்ட்டுக்குறேன். ”

தட்டை அவரிடமிருந்து வாங்கியவன்,”நா அவளுக்கு கொடுக்குறேன் முதல்ல நீங்க போய் சாப்டுங்க. ”

“உனக்கும் எடுத்துட்டு வந்து தரட்டுமாப்பா. ”

“வேண்டாம்மா நா அங்க வந்து சாப்ட்டுக்குறேன். நீங்க போய் சாப்டுங்க. ”,என்றவன் அவளறைக்குச் சென்றான்.

சுவரில் சாய்ந்தவாறு கால் நீட்டி கட்டிலில் அபர்ந்திருந்தவள் அவனைக் கண்டதும் முகம் சிவக்க புன்னகைத்தாள்.

அவளருகில் அமர்ந்தவன் அவளையே பார்த்திருக்க மெதுவாய் தலை குனிந்தவள்,

“என்ன திவா அப்படி பாக்குறீங்க?”

“என் கண்ணம்மா இன்னைக்கு அத்தனை ரம்மியமா இருக்காளே.

உன்னை இப்படி பார்க்கும் போது ஒண்ணு சொல்ல தோணுது சொல்வா கண்ணம்மா?”

“ம்ம்”

“நீயென தின்னுயிர் கண்ணம்மா — எந்த
 நேரமும் நின்றனைப் போற்றுவேன் — துயர்
 போயின, போயின துன்பங்கள் — நினைப்
 பொன்னெனக் கொண்ட பொழுதிலே — என்றன்
 வாயினி லேயமு தூறுதே — கண்ணம்
 மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே — உயிர்த்
 தீயினி லேவளர் சோதியே — என்றன்
 சிந்தனையே என்றன் சித்தமே!”

“என் எல்லாமுமாய் வாழ்வு முழுவதுக்கும் நீ தான் கண்ணம்மா. அதே மாதிரி என்னோட கடைசி மூச்சு வரையுமே என் சிந்தனையும் செயலும் உனக்காக உன்னை முன்னிருத்தியே தான் இருக்கும் டா. இது உனக்கான என் சத்தியம். ”

“திவா. ”

“சொல்லுடா. ”

“நிஜமாவே வாழ்க்கையையே ஜெயிச்சுட்ட ஒரு உணர்வு இப்போ இந்த நொடி இருக்கு திவா.

என் வாழ்க்கையில இதுக்கு மேல இதைவிட ப்ரஷியஸ் மொமெண்ட் இருக்க போறதேயில்ல. லவ் யூ ஆல்வேஸ். ”

லேசாய் அவள் முன் தலையில் முத்தம் பதித்தவன் கொண்டு வந்த உணவை ஊட்ட ஆரம்பித்தான்.

அவனையும் சாப்பிடுமாறு அவள் கூற இருவருமாய் உணவை உண்ண ஆரம்பித்தனர் காதல் கதை பேசும் விழிகளோடு.

மறுநாள் காலை சீக்கிரமே முகூர்த்தம் என்பதால் மண்டபமே களைகட்ட ஆரம்பித்திருந்தது.

மருத்துவர்கள் கல்லூரி கால நண்பர்கள் தன் பேஷண்ட்ஸாய் அறிமுகமான சில பல பெரிய புள்ளிகள் என மிதமான கூட்டம் எனினும் பெரிய புள்ளிகளுக்கே உரிய ஆடம்பரமும் வாசனைகளும் மண்டபத்தை நிறைத்தது.

மணமகன் பட்டு வேட்டிச் சட்டையில் மேடைக்கு வந்து அமர சில நிமிடங்களில் அழகிய பேல் பிங்க் வண்ண புடவையில் கடல் நீல நிற பார்டரோடு கூடிய பட்டுப் புடவை சரசரக்க அமைதியாய் வந்தமர்ந்தாள் வெண்பா.

இருவருமாய் சிந்தாம்மாவை தங்களுக்கு நடுவிலேயே நிற்குமாறு கூறி பின்னாடி நிறுத்திக் கொண்டனர்.

குறித்த சுப முகூர்த்தத்தில் மந்திங்கள் முழங்க மஞ்சள் சரடு கட்டி திவ்யாந்த் தன் கண்ணம்மாவை தனதாக்கிக் கொண்டான்.

அனைவரின் ஆசிகள் பரிசுகள் பெற்று வந்தவர்களை கவனித்து அனுப்பிவிட்டு பதினோரு மணியளவில் இருவருமாய் திவ்யாந்தின் வீட்டை அடைந்தனர்.

சிந்தாமணி அம்மாவே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார்.

அவர்கள் மூவரை தவிர யாரும் இருக்கவில்லை திருமண ஆட்டபாட்டங்கள் அனைத்தும் முடிந்து இப்போது பார்த்தால் சாதாரண ஒரு நாள் போன்றே தோன்றியது.

ஹால் சோபாவில் இருவருமாய் அமர திவ்யாந்த் தன் அலைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

கேள்வியாய் பார்த்தவள் விஷயம் புரிந்து விருப்பம் இல்லையெனினும் உதட்டில் ஒட்டிய புன்னகையோடு அவனிடமிருந்து அதைப் பெற்று தன் தந்தையை அழைத்தாள்.

“ஹலோ”

“அப்பா நா வெண்பா பேசுறேன். ”

“ஓ. ஒரு நிமிஷம் டா அம்மாட்ட கொடுக்குறேன். முக்கியமான வேலை இருக்கு. ”

“ம்ம் சொல்லு எப்போ இங்க வர்ற?இப்போவாவது பணம் வாழ்க்கைகக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுதா?”

“இல்லை அன்பும் காலும் எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சுது.

எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கல்யாணம் முடிஞ்சுது. அவரு பேரு திவ்யாந்த் டாக்டரா இருக்காரு. ”

“ஓ. உங்கப்பா நினைச்சா ஹாஸ்பிட்டல் ஓனரையே கல்யாணம் பண்ணி வைப்பாரு நீ என்னடானா கையேந்தி சம்பளம் வாங்குற ஒருத்தர கல்யாணம் பண்ணிருக்க. வாட் எவர். இட்ஸ் யுவர் லைப். டேக் கேர். பை. ”

போனை வைத்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. இருந்தும் திவ்யாந்திற்காக தன்னை கட்டுப்படுத்த முயன்றாள்.

ஆனால் அவனுக்கா அவள் நிலைமை புரியாது மெதுவாய் தனதறைக்கு அழைத்துச் சென்றவன் தன்மேல் ஆதரவாய் அவளை சாய்த்துக் கொள்ள அடுத்த நொடி அவன் சட்டையை கண்ணீரால் நனைத்திருந்தாள்.

“கண்ணம்மா. சாரி நா தான் உன்னை பேச சொன்னேன். இப்படி ஆகும்னு நினைக்கல. ”

“நா நினைச்சேன் திவா அதனால தான் அம்மா அப்பாக்காக மனசு எவ்ளோ ஏங்கினாலும் அதை மறைச்சு கல்யாணத்தை பத்தி சொல்லாம இருந்தேன்.

விடுங்க இனி நா அழமாட்டேன். இனி வாழ்க்கை மொத்தமும் நீங்க போதும் எனக்கு.”, என்றவளை இன்னுமாய் தன்னோடு சேர்த்து தாயுமானவனாய் மாறிப் போனான் அந்த அன்புக் கணவன்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan September 30, 2026 - 5:19 pm

💞💞💞💞💞💞💞💞

srichitra October 1, 2026 - 11:10 am

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode