523
சீதாவை எனக்கு இரண்டு மாசம் முன்னாடி தான் தெரியும் நம்ம ஹோம்ல அருணா தெரியும் தான அவளோட ஸ்கூல்ல தான் படிச்சா.
வேலூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம் அவளோடது.
விவசாய குடும்பம் தான் ஆனா ரொம்ப நல்லா படிப்பா. இங்க ஹாஸ்ட்டல தங்கி தான் +12 வர படிச்சிருக்கா.
அவளோட எய்ம் மெடிசின் தான் சோ கவுன்சிலிங் போய் கவர்மெண்ட் கோட்டால கஷ்டப்பட்டு இந்த காலேஜ்ல சீட் வாங்கிருக்காங்க.
இப்போ செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்கா. உனக்கே தெரியும் கவர்மெண்ட் காலேஜ் விட ப்ரைவேட்ல வசதியான பசங்க நிறையவே படிப்பாங்க.
அவங்க பழக்கவழக்கம் லைஃப் ஸ்டைல் எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.
அது மட்டுமில்லாம என்ன தான் ரக்கிங் எல்லாம் இல்லைனு வெளில சொன்னாலும் உள்ளுக்குள்ள அது நடந்துட்டுதான் இருக்கும்.
முதல் வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கா. வீட்லயும் சொல்ல முடியாம யார்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றதுனு புரியாம ரொம்பவே.
அப்பறம் இரண்டாவது வருஷத்துல ஒரு நாள் தான் அருணாவை தற்செயலா பாத்துருக்கா.
பொதுவான பேச்சுகளுக்கு அப்பறம் அவ காலேஜ் பத்தி அருணா விசாரிச்சுருக்கா சட்டுனு அழ ஆரம்பிச்சுட்டாளாம்.
என்னனு விசாரிச்சதுல அவ சொன்னதை கேட்டு அருணாக்கு என்ன பண்றதுனு ஒண்ணும் புரியாம இருந்தப்போ என் நியாபகம் வந்துருக்கு அவளை சமானதப்படுத்தி அனுப்பி வச்சுட்டு ஹோம்ல இருந்து எனக்கு கால் பண்ணா.
“அண்ணா நா அருணா பேசுறேன் ஹோம்ல இருந்து. ”
“சொல்லும்மா என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க எதுவும் பிரச்சனையில்லையே.”
“இல்லனா எனக்கு ஒண்ணுமில்ல என் பிரெண்ட்க்கு தான்…”
“என்னாச்சு தயங்காம சொல்லு. ”
“இல்லண்ணா போன்ல வேண்டாம். நாளைக்கு நீங்க ஹோம்க்கு வரீங்களா நா அவளை வர சொல்லிருக்கேன். ”
“ம்ம் சரி வரேன் மா. ”
அடுத்த நாள் காலையிலேயே கிளம்பியவன் முதலில் ஹோமிற்கு சென்றான்.
வாசலிலிருந்த புல்வெளியிலேயே அருணா இன்னொரு பெண்ணோடு காத்திருந்தாள்.
“அருணா மா என்னாச்சு நேத்து உன் குரலே சரியில்ல. ”
“அண்ணா இவ என் ப்ரெண்ட் சீதா. மெடிசின் செகண்ட் இயர் படிக்கிறா. ”
“வணக்கம் ணா. சாரி சார். ”
“அண்ணானே சொல்லு மா. நீயும் எனக்கு அருணா மாதிரி தான்.
சரி என்ன விஷயம் சொல்லு. ஸ்டடீஸ்க்கு எதுவும் ஹெல்ப் வேணுமா?”
“அதெல்லாம் இல்ல ணா. இது வேற விஷயம். ”, என்றவள் வெகுவாய் தயங்க திவ்யாந்த் அவளை பேசுமாறு ஊக்கினான்.
“அண்ணா நா படிக்குறது ப்ரைவேட் காலேஜ் ஆனா கவர்மெண்ட் கோட்டா தான். அதுவும் என் பேட்ஜ்ல நானும் இன்னும் ரெண்டு பசங்களும் தான்.
மோஸ்ட்லி அங்க இருக்குற ஸ்டண்ட்ஸ் எல்லாமே வசதியான வீட்டு பசங்க தான்.
சோ எங்களை எல்லாம் கொஞ்சம் மோசமாதான் ட்ரீட் பண்ணுவாங்க ணா. காலேஜ்,ஹாஸ்ட்டல் எல்லா இடத்துலயும் ரேகிங். ”
“ம்ம் புரியுது மா. அது எல்லா இடத்துலயுமே நடக்குற ஒரு விஷயம் தான். எத்தனை ரூல்ஸ் போட்டாலும் இது நடந்துட்டேதான் இருக்கு. ”
“உண்மை தான் அண்ணா. நானும் அப்படி நினைச்சு தான் ரொம்பவே பொறுத்துகிட்டேன்.
இதனால படிப்புக்கு எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்னு கவனமா இருந்தேன். ஆனா. ”
“ஆனா?”
“இப்போ இருக்குற பிரச்சனை அது இல்லனா. எப்படி சொல்றதுனு கூட தெரில உடம்பெல்லாம் கூசுது.
ஒருநாள் எங்க ஹாஸ்ட்டல் வார்டன் என்னை கூப்பிட்டு விட்டாங்க நானும் போனேன்.
நல்லாதான் பேச ஆரம்பிச்சாங்க திடீர்னு என்னனென்னவோ சொன்னாங்க.
நீ ரொம்ப கஷ்டபடுற பேமிலினு எனக்கு தெரியும். எவ்ளோ கஷ்டப்பட்டு பீஸ் கட்டுறனும் தெரியும்.
நா சொல்றத கேட்டனா நிறைய பணம் கிடைக்கும் நீயும் நிம்மதியா படிக்கலாம். உன் மேல இரக்கப்பட்டு தான் இதை உன்கிட்ட சொல்றேன்.
எத்தனை பேர் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காம இருக்காங்க தெரியுமா.
இதுமாதிரி நிறைய பேருக்கு நா உதவி பண்ணிருக்கேன். நா கூப்பிடுற அப்போ கூப்பிடுற இடத்துக்கு சத்தமில்லாம வந்துட்டு போனா போதும்.
நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி ஜாலியா என்ஜாய் பண்ணலாம் நினைச்ச ட்ரெஸ் வாங்கலாம் நினைச்ச மாதிரி செலவு பண்ணலாம்னு.”, எனும் போதே கண்களில் நீர் கோர்த்திருந்தது.
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ தர்ம சங்கடமாய் போய்விட்டது.
என்ன கொடுமை இதெல்லாம் சின்ன பெண்களிடம் பேச வேண்டிய பேச்சா அதுவும் ஒரு பெண்ணே இப்படி என்றால்.
“அதுக்கு மேல அவங்க பேசுறத கேக்க முடியாம நா அவங்களை எதிர்த்து பேசினேன்.
என்ன மேம் இப்படியெல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் எவ்ளோ பெரிய தப்புனு தெரியுமா.
காசு இல்லாதவங்கனா என்ன வேணா பேசுவீங்களா. நீங்க நினைக்குற மாதிரியான பொண்ணு நா இல்லனு கத்திவிட்டேன்.
“ஆனா அதுக்கெல்லாம் அவங்க கொஞ்சமும் அசைஞ்ச மாதிரி இல்ல. ரொம்ப கூலா இங்க பாரு உன்னை மாதிரி எத்தனையோ பேரை பாத்துருக்கேன்.
இப்படி பேசுனவங்க எல்லாம் அப்பறம் அதே வாயால என்னை வாழ்த்திட்டு தான் போய்ருக்காங்க.
சோ பொறுமையா யோசிச்சு முடிவு எடு. அதிர்ஷடம் எப்போவாவது தான் உன்னை தேடி வரும் மிஸ் பண்ணிடாதனு சொன்னாங்க.”, என குலுங்கி அழ ஆரம்பித்திருந்தள்.
“அழாதம்மா. என்னால முடிஞ்ச உதவியை நா கண்டிப்பா பண்றேன்.
அதுக்கப்பறம் உன்கிட்ட பேச முயற்சி பண்ணாங்களா?நீ ப்ரின்சிபால்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருக்கலாம் தான?”
கசந்த முறுவலை உதிர்த்தவள், ”அண்ணா அடுத்து ஒரு வாரத்துக்கு அவங்க எதுவும் பேசிக்கல நானும் விட்டா போதும்னு அமைதியாய்ட்டேன்.
அடுத்த இரண்டு நாள்ல மறுபடியும் என்னை கூப்பிட்டவங்க என்ன முடிவு பண்ணிருக்கனு கேட்டாங்க.
எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு என்ன மேம் அன்னைக்கே என் முடிவை சொல்லிட்டேன்.
ஏன் மறுபடியும் மறுபடியும் டிஸ்டர்ப் பண்றீங்க. இன்னோரு தடவை இப்படி பண்ணீங்கனா நா ப்ரின்சிபல்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருவேன்னு சொன்னேன்.
ஏளனமா என்னை பர்த்து சிரிச்சாங்க. இப்படி ஒரு காரியத்தை அவருக்கு தெரியாம பண்ண முடியுமா.
சொல்ல போனா சில நேரங்களில் அவருக்கு கூட கம்பனி கொடுக்க வேண்டியது இருக்கும்.
நானாவது உன்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன்.
அந்த ஆள்கிட்ட போனா உன்னையெல்லாம் ஒரு வழி ஆக்காம விடமாட்டான்னு சொல்லி கேவலமா பாத்தாங்க.”, என்று தலை குனிந்து கொண்டாள்.
“ஷிட்!!!”
“இப்போ வர நா செத்துருவேன் தற்கொலை பண்ணிப்பேன்னு சொல்லி தான் தப்பிச்சுட்டு இருக்கேன் ணா.
அவங்க பேசுறத வச்சு பார்த்தா இந்த விஷயம் எங்க கரஸ்பாண்டட்க்கு தெரியாம தான் நடக்குதுனு நினைக்குறேன்.
உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் அவரு ரெண்டு மூணு இன்ஸ்ட்டியூஷன் நடத்திட்டு இருக்காருஅதனால அவருக்கு இங்க நடக்குறதெல்லாம் தெரிய வாய்பில்ல.
அது மட்டுமில்லாம ஏதோ ஒரு கட்டத்துல சில பொண்ணுங்களை சம்மதிக்க வச்சுராங்க இல்லனா சில பணக்கார பொண்ணுங்க அவங்களாவே.
அதனால இப்போ வர இது பெரிய பிரச்சனை ஆகல போல. அப்பறம் எங்க வார்டனோட கான்டாக்ட்ல இருக்குறதுல பாதிக்கு மேல பெரிய புள்ளிங்க போல. அவங்க ஆள் பலம் பணபலம் எல்லாம் கொடுக்குற தைரியத்துல தான் இவங்ளும் இப்படி ஓபனா பொண்ணுங்ககிட்ட பேசுறாங்க.
இப்போதைக்கு எனக்கு இருக்குற டைம் இந்த செமஸ்டர் மட்டும் தான் அண்ணா. எக்ஸாம் முடிச்சுட்டு அவங்க சொல்றத கேக்கணும்னு சொல்லிருக்காங்க எல்ல எக்ஸாம் மார்க்ஸை கம்மி பண்ணி படிப்பை நிறுத்துற மாதிரி பண்ணுவேன்னு சொல்லிடாங்க.
நேத்து தற்செலா தான் அருணாவை பார்த்தேன். மனசு பாரம் குறையட்டும்னு அவகிட்ட கொட்டி தீர்த்தேன் ணா. அவ உங்களைபத்தி சொன்னதுனால தான் நா இங்க வந்தேன்.
ஆனா உண்மையை சொல்லணும்னா அவங்க எல்லாம் பெ. ரிய இடம் ணா. நம்மளால எதுவும் பண்ண முடியாது அதுதான் எதார்த்தம். நானே படிப்பை விட்டுட்டு ஊருக்கே போயிரலாம்னு இருக்கேன் ணா. நமக்கு எதுக்கு இந்த படிப்பெல்லாம். ”,எனும்போதே அவள் குரல் கரகரத்தது.
“இங்க பாரும்மா. அப்படியெல்லாம் தைரியத்தை விட கூடாது. தனியாவே இத்தனை நாள் போராடியிருக்க இப்போ அண்ணா நா இருக்கேன். இன்னும் தைரியமா இரு. கண்டிப்பா இந்த பிரச்சனையை நா முடிவுக்கு கொண்டு வரேன். அதுவர நீ எந்த தப்பான முடிவும் எடுக்காம இருந்தா போதும் சரியா?”,என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.
அவனுக்குத் தெரியும் இது அத்தனை சுலபமான காரியம் இல்லையென. இருந்தும் அவனுக்கான ஒரே நம்பிக்கை அந்த கல்லூரியின் தாளாளர் தான். அவரை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான். நிச்சயம் நல்ல மனிதர் தான் அவன் பார்த்தவரையில்.
இப்படிபட்ட விஷயத்திற்கு நிச்சயம் ஒரு போதும் துணை போக மாட்டார் என்றே தோன்றியது அவரிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் சிந்தனையிலேயே கரைந்தவன் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த தாளாளரை போனில் அழைத்து அப்பாயிண்மெண்ட் வாங்கினான்.
மறுநாள் அவரை சந்திக்கச் சென்றவன் சில நிமிடங்கள் வெளியே காத்திருக்க பின் அவர் உள்ளே அழைத்தார்.
“வாங்க டாக்டர் எப்படியிருக்கீங்க?”
“நல்லாயிருக்கேன் சார். நீங்க எப்படியிருக்கீங்க?”
“நல்லாயிருக்கேன். என்ன இவ்ளோ தூரம் சொல்லுங்க என்ன விஷயம்?”,என நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“சார் கொஞ்சம் பர்சனல். ”,என்றவன் அருகிலிருந்த அவர் பீஏ வை பார்த்து தயங்கி நிறுத்த அவரை வெளியே இருக்குமாறு பணித்தார்.
“சொல்லுங்க டாக்டர் ஏன் இவ்ளோ தயங்குறீங்க?”
“சார் நா சொல்ல வர்றதை உணர்ச்சிவசப்படாம கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இது உங்க மெடிக்கல் காலேஜ் சம்மந்தபட்ட விஷயம். உங்க கவனத்திற்கு வராத ஒரு பெரிய தப்பை பத்தி தான் பேசனும். ”
“வாட் யூ மீன் மிஸ்டர் திவ்யாந்த். !!?”
“சார் ப்ளீஸ். ரிலாக்ஸ். உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பகையும் கிடையாது அப்படியிருக்க அநாவசியமா உங்க பேரை கெடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. அந்த பாயிண்ட் ஆப் வியூ ல நா சொல்ல வர்றதை கேட்டீங்கனா உங்களுக்கு புரிஞ்சுக்க முடியும். ”
“சரி சொல்லுங்க. ”
“சார் இந்த விஷயம் இரண்டு நாள் முன்னாடி தான் எனக்கு தெரியும். வேற எங்கேயாவது நடந்துருந்தா என்னால இந்தளவு பேச முடியுமானு தெரில பட் நாம மீட் பண்ணத வச்சு உங்க மேல பெரிய நம்பிக்கை இருக்கு அதனால தான் டேரக்டா உங்ககிட்ட வந்துட்டேன்.
எப்படி ஆரம்பிக்குறதுனு கூட தெரில உங்க காலேஜோட லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் பொண்ணுங்களை தப்பான பாதைக்கு வர சொல்லி வற்புறுத்துறதாகவும் அதுக்கு உங்க பிரின்சிபல் முதற்கொண்டு இன்னும் சிலரின் தலையீடு இருப்பதாவும் சொல்றாங்க.
அதுமட்டுமில்லாம அப்படி அவங்க வழிக்கு வராத பொண்ணுங்களை காலேஜை விட்டு அனுப்பிருவோம்னும் பேரை கெடுத்துருவோம்னும் மிரட்ராங்களாம். இது ரொம்ப நாளா நடக்குற விஷயம் மாதிரி தான் தெரியுது சார். ”
“என்ன திவ்யாந்த் என்னென்னவோ சொல்றீங்க என் காலேஜ் பேரை கெடுக்க யாரோ இப்படி ஒரு வதந்தியை பரப்பிருக்காங்க. ”
“சார் அப்படி யாரோ சொல்லிருந்தா எனக்கு ஏன் வம்புனு நா பாட்டுக்கு போய்ருப்பேன். விஷயத்தை சொன்னது பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணு அதுவும் ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பம். அந்த பொண்ணு படிப்பை தொலைச்சுருவோமோனு கண்ல வலியோட என்கிட்ட பேசின ஒவ்வொரு வார்த்தையும் தான் நா இப்போ உங்க முன்னாடி உக்காந்து பேசிட்டு இருக்கிறதுக்கு முக்கிய காரணமே. ”
கேட்டவரோ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார். சில நொடிகள் அவர் சிந்தனையில் சுழலவிட்டவன் அமைதி காத்தான். இரண்டு நிமிடத்தில் தலை நிமிர்ந்தவர்,
“இன்னுமும் என்னால நம்ப முடில திவ்யாந்த். என் மூணு இன்ஸ்டியூஷனும் தான் என் உயிர் அப்படியிருக்க எப்படி இது என் பார்வைக்கு படாம போச்சு. இல்ல மத்த ரெண்டும் என் டேரக்ட் கன்ட்ரோல தான் இருக்கு இந்த காலேஜோட பிரின்சிபலா இருக்குறது என் மனைவிக்கு அண்ணன் முறையில் இருக்குறவரு.
ஓரளவு நெருங்கிய சொந்தம் தான் அந்த நம்பிக்கைல தான் அசால்டா இருந்துட்டேன்னு நினைக்குறேன். நா எப்பவோ செஞ்ச புண்ணியம் தான் உங்க மூலமா விஷயம் நேரா என் காதுக்கு வந்துருக்கு. மீடியா ப்ரஸ்னு போயிருந்தா. கடவுளே அந்த அவமானத்துலயே நா உயிர் விட்டுருப்பேன் நிச்சயமா. ”
“ஐயோ சார் அதான் அப்படி ஒண்ணும் ஆகலயே ஏன் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. ”
“இல்ல திவ்யாந்த் இப்போ என் மனநிலைமை அந்தமாதிரி இருக்கு கூட இருக்குற நம்பிக்கையானவங்கனு நினைச்சவங்களே இப்படி பண்ணிணா இதுக்கு மேல நா யாரை நம்பணும் நம்ப கூடாதுனு யோசிச்சாலே பைத்தியம் பிடிக்குது. ப்ளீஸ் திவ்யாந்த் இந்த ப்ராப்ளம் முடியுற வரை உங்க ஹெல்ப் எனக்கு தேவை கண்டிப்பா. ”
“நிச்சயமா என்னால முடிஞ்ச உதவியை பண்றேன் சார். நீங்க முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க. இன்னைக்கு ஒருநாள் கொஞ்சம் ஃபீரியா விடுங்க அதுகுள்ள என்ன பண்ணலாம்னு நானும் யோசிக்குறேன். அண்ட் ரொம்ப முக்கியம் இதை யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிடாதீங்க. நீங்க சொல்ற மாதிரி இதுல யாரை நம்புறதுனு எனக்குமே தெரில. ”
“ம்ம் சரி டாக்டர். இந்த உதவிகளை என்னைக்கும் நா மறக்கமாட்டேன். நீங்க என்ன வேணா திட்டம் சொல்லுங்க. அவங்களை ஆதாரத்தோட கையும் களவுமா பிடிக்கணும். அதே நேரம் காலேஜ் பேரை முடிஞ்சவரை காப்பாத்த பாக்குறேன் நா.
நாம அடிக்கடி இங்க மீட் பண்ண வேணாம் டாக்டர் நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்னு உங்களுக்கு எஸ் எம் எஸ் பண்றேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம வந்துருங்க ப்ளீஸ். ”
“சார் என்ன சார் ப்ளீஸ் எல்லாம் சொல்லிகிட்டு கண்டிப்பா வரேன் நீங்க டென்ஷன் ஆகாம இருங்க வரேன் சார். ”
அதன்பிறகு வெகுவாய் யோசித்தவன் மேலோட்டமாய் ஒரு திட்டத்தை வகுத்திருந்தான். மறுநாள் அவர் கூறியது போலவே சந்திக்க வேண்டிய இடத்தையும் நேரத்தையும் திவ்யாந்திற்கு மெசேஜ் அனுப்பியிருந்தார்.
அதன்படி அந்த கெஸ்ட் கவுஸை அடைந்தவன் அவரிடம் தன் யோசனையை விவரிக்க ஆரம்பித்தான்.
“சார் இது ஜஸ்ட் என் ஐடியா தான். இதை விட பெட்டரா எதாவது வேணும்னாலும் பண்ணலாம். எனக்கு இந்த விஷயம் யார் மூலமா தெரிய வந்ததோ அந்த பொண்ணை வச்சே ஆதாரங்களை தயார் பண்ணுவோம். ஆடியோவோ இல்ல வீடியோவோ அது அந்த நேரத்துல பாத்துக்கலாம்.
இந்த ஆதாரங்கள் நம்ம கைக்கு வர்ற வர உங்களுக்கு நம்பிக்கையான ஒண்ணு ரெண்டு ப்ரொபசர்ஸை வச்சு அந்த பொண்ணை கான்டாக்ட் பண்ணலாம். என்ன சார் சொல்றீங்க?”
“ம்ம் நல்லா தான் இருக்கு தம்பி ஆனாலும் நேத்தே சொன்ன மாதிரி யாரை நம்பணும் யாரை நம்பக் கூடாதுனு எனக்கு தெரில. ம்ம்ம் வேணா ஒண்ணு பண்ணலாம் ஒரு மாசத்துக்கு ஸ்பெஷல் டியூட்டரா நீங்களே அங்க போனா என்ன?
அந்த பொண்ணும் உங்களை அங்க பார்த்தா கொஞ்சம் தைரியமா இந்த விஷயத்துல உதவ வாய்ப்பு இருக்கு இல்லையா?”
“நீங்க சொல்றதும் சரிதான் சார் ஆனா யாருக்கும் சந்தேகம் வந்துராதா?”
“இல்ல திவ்யாந்த் அப்படி ஒண்ணும் ஆகாது எப்போவாவது இந்த மாதிரி ஸ்பெஷல் க்ளாஸஸ் அரேண்ஞ் பண்ணுவோம் என்ன மினிமம் 6-7 மாசம் ஒத்துக்குவோம். உங்களுக்கு ஒரு மாசம் ஆனா அதனால ஒண்ணும் யாருக்கும் பெரிய சந்தேகம் வராதுனு தான் தோணுது.
நாம பண்ண போற ஒரே விஷயம் நீங்க என் ரெக்கமண்டேஷன்ல உள்ளே வந்தமாதிரி தெரியாம வேற ஏற்பாடு பண்ணணும். ”
“தட் சவுண்ட்ஸ் குட் சார். அப்போ அப்படியே பண்ணிருவோம். நா அந்த பொண்ணையும் அலார்ட் பண்றேன். நீங்க வேற யார் மூலமாவது எனக்கான ரெக்கமண்டேஷன் லெட்டர் மட்டும் ரெடி பண்ணுங்க சார். கவலபடாதீங்க எல்லாம் நல்லபடியா முடியும். ”
அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடந்தது. தாளாளர் கூறியபடியே திவ்யாந்திற்கான லெட்டரை தயார் செய்து அதை அவன் தன்னிடம் காட்டிவிட்டதாக கல்லூரி பிரின்சிபலிற்கு தகவல் அனுப்பிவிட்டார்.
அதற்கு நடுவில் தனக்கு தெரிந்தவர் மூலம் கமிஷ்னரை தொடர்பு கொண்டு பிரச்சனையையும் அதற்கு தான் எடுக்க போகும் முயற்சியையும் கூறினார். கல்லூரியின் பெயர் பொதுவாய் கெட்டு போய்விடாமலிருக்கவே இந்த ஏற்பாடு என்றும் கூறினார்.
முதலில் மிகவுமே தயங்கியவர் பின் ஒருவழியாய் ஒத்துக் கொண்டார். வெளியில் அனைத்தையும் திடமாக திட்டமிட்டபின் கல்லூரிக்குள் நுழைந்தான் திவ்யாந்த்.
ஏனோ அவனை பார்த்த முதல் சந்திப்பிலேயே பிரின்சிபலிற்கு அவனை பிடிக்காமல் போனது. அதுவும் அவன் குறிப்பாய் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தான் வகுப்பெடுக்க போவதாய் கூறியது இன்னமும் கடுப்பேற்றியது.
அவன் உள் நுழைந்த இரண்டு நாட்கள் சாதாரணமாய் தான் சென்றது. மூன்றாவது நாளிலிருந்து தான் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான். சீதாவின் மூலம் தெரிந்த பெண்களிடமிருந்து வாக்குமூலமாய் விஷயத்தை பெறுவதற்காக அவர்களிடம் கிடைத்த நேரத்தில் சுருக்கமாய் விஷயத்தை கூறி ஒரு மொபைல் நம்பரை பகிர்ந்து ஆடியோ மெசெஜாக அனுப்புமாறு கூறினான்.
மதிய வேளையில் ஹாஸ்ட்டல் காவலாளியிடம் பேச்சு கொடுத்தவன் விஷயத்தை வாங்க பார்க்க அவனோ ஒன்றும் தெரியாது என அடித்துக் கூறினான்.
ஐந்நூறு ஆயிரம் என கொடுத்து அவனை வழிக்குக் கொண்டு வந்து அவனிடமும் தேவையான தகவலைப் பெற்றான். அனைத்து தரப்பிடமும் பெறப்பட்ட ஆதாரங்களில் முக்கியமாய் அவன் காட்ட வேண்டியிருந்தது,இந்த தவறுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பதையே.
ஓரளவு அனைத்துமே சரியாய் இருப்பதாய் எண்ணி நிம்மதி அடைந்த நேரம் ஒரு பெண்ணிடம் இருந்து அவர்களுக்கு கிடைத்த தகவல் ஒரு பேராசிரியர் அவளை அழைத்து இந்த விஷயம் குறித்து மிரட்டியதாய் கூறியது.
திவ்யாந்திற்கு தலையே சுற்றியது இன்னும் எத்தனை பேர் தான் இதில் சம்மந்தப்பட்டவர்கள்?யார் யாரென சந்தேகப்படுவது ஒன்றும் புரியவில்லை.
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தாளாளரிடம் பேசிவிட்டு தன் திட்டத்தை செயல்படுத்த எண்ணி சீதாவிடம் விஷயத்தை விவரித்து அனுப்பினான்.
அதன்படி அடுத்த பத்து நாட்களில் அவளை அழைத்த ஹாஸ்ட்டல் வார்டன் மறுபடியும் அதே விஷயத்தை பத்தி பேச ஆரம்பிக்க அனைத்தையும் தன் டிரஸில் பொருத்தியிருந்த பட்டன் கேமராவில் படமாக்கினாள் சீதா.
வழக்கத்தை விடவும் மிகவும் மோசமான விதத்தில் அவளிடம் அவர் பேசிக் கொண்டிருக்க அத்தனை அழுகை அவமானத்தையும் உள்ளடக்கி இதில் சம்மந்தப்பட்ட இரு பேராசிரியர்கள் மற்றும் பிரின்சிபாலின் பெயரை அவர் வாயிலேயே வாக்கு மூலமாக பெற்றுக் கொண்டாள்.
எப்போதுமே கல்லூரியில் அவளை சந்திப்பதை முடிந்தவரை தவிர்க்கும் திவ்யாந்தை மறுநாள் பார்த்தே தீர வேண்டும் எனக் கூறி மறைவாய் ஓரிடத்தில் சந்தித்தவள் அவன் கொடுத்த கேமராவை அவனிடம் ஒப்படைத்து நடந்தை மேலோட்டமாய் கூறி அழ ஆரம்பித்திருந்தாள்.
“ரொம்ப அவமானமா இருக்குண்ணா. அவங்க பேசுறதை எல்லாம் காது கொடுத்து கேக்க முடில. செத்துரலாம் போல இருக்கு. ”
“என்னம்மா உனக்காக தான நா இவ்ளோ ரிஸ்க் எடுத்து இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன். இப்படியெல்லாம் பேசலாமா?மிஞ்சி போனா நாலு நாள் எல்லா பிரச்சனையும் முடிஞ்சுரும் தைரியமா இருக்கணும்”,என சமாதானம் கூறி அனுப்பி வைத்தான்.
அன்றே தாளாளரை சந்தித்து மொத்த ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து அவரிடம் கொடுத்தான். எக்காரணம் கொண்டும் அந்த வீடியோவும் மற்ற பெண்கள் கொடுத்த தகவலும் மீடியாவின் கையில் சிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்திக் கூறினான்.
எதற்கும் கடைசியாய் ஒருமுறை அந்த வார்டனிடம் பேசிப் பார்ப்பதாய் கூறியவன் மறுநாள் அந்த டிரைவின் ரெஸ்டாரண்டில் அவளை சந்தித்து முடிந்த அளவு வழிக்கு வர வைக்க பார்த்தான் ஆனால் அவளோ எதற்கும் பணியும்படி தெரியாத காரணத்தால் அவருக்கு அழைத்து தன் பேரும் சீதாவின் பேரும் முக்கியமாய் வெளியில் வராதவாறு பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.
இதற்கிடையில் திவ்யாந்தின் மேல் சந்தேகம் எழுந்திருந்த நிலையில் தான் பிரின்சிபலை சுலோச்சனா அழைத்தது. இருந்த கடுப்பில் அவரால் முடிந்தவரை அவனைப் பற்றி அவதூறு பரப்பியிருந்தார்.
அனைத்து குளறுபடிகளையும் தாண்டி கல்லூரி தாளாளர் மூலம் கமிஷ்னரிடம் அனைத்து ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டது. தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி உண்மையை ரகசியமாகவே வைத்திருந்து ஆதாரங்களை வெளியாடாமல் சம்மந்தபட்டவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே கைது செய்யப்பட்டிருந்தனர்.
என்னதான் மறைத்தாலும் மீடியா தங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் போட்டு கல்லூரி புகைப்படத்தையும் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டு தான் இருந்தனர்.
திவ்யாந்திற்கோ எடுத்த பொறுப்பை ஒரு வழியாய் முடித்தோம் என்ற திருப்தி ஒருபுறம் இருந்தாலும் தனக்கும் வெண்பாக்குமான பிணக்குகளை இன்றே சரி செய்ய வேண்டும் என்பது தான் பிரதானமாய் இருந்தது. அந்த நினைவுகளிலேயே வீட்டிற்கு வந்தவனிடம் தான் தன் உணர்வுகளை கொட்டித் தீர்த்திருந்தாள் வெண்பா.
அனைத்தையும் கூறி முடித்துவிட்டு அவன் அவள் முகம் பார்த்திருக்க அவளோ கண்களின் கண்ணீர் கன்னத்தில் நழுவ அதை துடைக்க ககூட தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அந்த இரவு நேர நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அலறியது வெண்பாவின் அலைப்பேசி.
தன்னருகில் இருந்ததை எடுத்தவன் அழைத்தது அவளின் தந்தை என்றவுடன் அவளிடம் நீட்ட சற்றே தன்னை மட்டுப்படுத்தியவள் அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தாள்.
“வெண்பா மா அப்பா பேசுறேன் டா. நியூஸ் எல்லாம் பாத்தேன். நேத்து உங்கம்மா விசாரிச்சப்போவே எனக்கு தெரிஞ்சவங்களை வச்சு விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன். மாப்பிள்ளை மேல எந்த தப்பும் இல்ல டா. உங்கம்மா என்ன சொன்னாலும் நம்பாத. என்னால எதையும் வெளிப்படையா சொல்ல முடியாத சூழ்நிலைல இருக்கேன். உங்கம்மா அங்க வந்த நோக்கம் நிச்சயமா நல்லதுக்காக இல்ல டா. நீ தெளிவான பொண்ணு புரிஞ்சுப்பனு நம்புறேன்.
உன் வாழ்க்கை உன் கையில பாத்து நடந்துக்கோ டா. அம்மா இன்னைக்கு நைட் கிளம்பிருவா. சோ நீ நிம்மதியா இரு. மாப்பிள்ளையை விசாரிச்சதா சொல்லு டா”,என்று அவரே அனைத்தையும் பேசிவிட்டு பதில்கூட எதிர்பார்க்காமல் வைத்து விட்டிருந்தார்.
மொபைலை கட்டிலில் எறிந்தவள் முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்திருந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Nice
💞💞💞💞💞💞
Nice👍