மயங்கி விழுந்தவளை பார்த்தவருக்கு ஒரு நொடி ஒன்றும் ஓடவில்லை.

தொலைப்பேசி அழைப்பை அப்படியே நிறுத்திவிட்டு மகளை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டார்.

டீப்பாயில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க அப்போதும் அவள் கண் திறக்காமல் இருக்கவும் கொஞ்சம் பயந்து தான் போனார்.

சரியாய் அந்நேரம் திவா அவள் மொபைலிற்கு அழைக்க அவனிடம் பேச விருப்பமில்லை எனினும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்று உணர்ந்தவர் அழைப்பை ஏற்று காதில் வைத்த நொடி,

“கண்ணம்மா. நல்லாயிருக்க தான. எங்க இருக்க. ஏனோ மனசே சரியில்ல. ஹலோ கேக்குதா. ”

“நா சுலோச்னா பேசுறேன். ”

“ஓ. சாரி அத்தை. வெண்பா உங்ககூடதான் இருக்காளா. ஒண்ணுமில்ல ஏதோ மனசு படபடப்பாவே இருக்கு அதான் அவ நல்லாயிருக்காளானு.

அவ பக்கத்துல இருந்தா ஒரு நிமிஷம் போனை கொடுங்களேன். ”

அத்தனை பதட்டத்திலும் சுலோச்சனாவிற்கு அவனை எண்ணி அதிசயமாகத் தான் இருந்தது.

அதேநேரம் இத்தனை அன்பிருப்பவன் எதற்த்காக மனைவியிடம் எதையோ மறைக்க வேண்டும் என்றும் தோன்றியது.

“ஹலோ அத்தை. ”

“ஆங்ங் அது வந்து வெண்பா. என்னனு தெரில நல்லா தான் இருந்தா திடீர்னு மயங்கிட்டா. தண்ணி தெளிச்சு கூட பாத்துட்டேன். ”

“என்ன!!!என்ன சொல்றீங்க. இதை தான நீங்க முதல்ல சொல்லிருக்கனும். சரி டென்ஷன் ஆகாதீங்க நா ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன். ”

போனை வைத்தவருக்கே ஒரு நொடி தலை சுற்றியது இருந்தும் அடுத்த நிமிடம் தன்னை சீர்படுத்தியவர் ஏசி டெம்பரேச்சரை சரி செய்து அவளருகிலேயே அமர்ந்திருந்தார்.

சொன்னபடியே பத்து நிமிடத்தில் வந்தவன் கதவை திறந்தவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நேரே வெண்பாவின் அருகில் ஓடியவன் அவளை எழுப்ப முயற்ச்சிக்க கண் விழித்தாளில்லை.

“என்னாச்சு சடனா?எதோ ஷாக்ல மயங்கிருக்க மாதிரி இருக்கு என்னாச்சு. ”

“அது. வந்து. ”

அவர் அடுத்து பேசுவதற்குள் வெண்பா கண்விழிக்க திவாவின் கவனம் அவள்புறம் திரும்பியது.

“கண்ணம்மா. ”அவன் முடிப்பதற்குள் அவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

“என்னடா”,என அவள் முகம் பற்ற போனவனை தவிர்த்து மெதுவாய் எழுந்து அமர்ந்தாள்.

அவள் பின் சாய்ந்து அமர்ந்து தன் விரலல்களிலேயே பார்வையை பதித்திருக்க இந்த வெண்பா அவனுக்கு பரிட்சையமில்லாதவள் நிச்சயமாய்.

“ஒண்ணுமில்ல. மார்னிங் சாப்பிடல மதியானமும் கம்மியாதான் சாப்ட்டேன் அதான் மயக்கம் வந்துருச்சு. ”

“மார்னிங் தான சொல்லி அனுப்பினேன். மே பி டீஹைட்ரேட் ஆயிருப்ப தண்ணீர் சாப்டியா இல்லையா.

கொஞ்சமா சாப்டு”, என டம்ளரை அவளருகில் எடுத்துச் செல்ல அதை அப்படியே கையில் வாங்கியவள் அவளே பருகினாள்.

தன்னை ஒதுக்குகிறாள் என்பது அப்பட்டமாய் தெரிந்தாலும் காரணம் புரிபடாமல் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தான் திவ்யாந்த்.

சரி எதுவாயினும் வீட்டிற்குச் சென்று பேசிக் கொள்ளலாம் என அவன் சில நிமிடங்கள் அமைதி காத்தான்.

“இப்போ பெட்டரா கண்ணம்மா. கிளம்பலாமா?”

“எங்க??”

“என்ன கேள்வி இது நம்ம வீட்டுக்கு தான்…”

“இல்ல நா ஒரு ரெண்டு நாள் அம்மாவோட இருந்துட்டு வரேன். ”, அவனை பார்க்காமல் சுரத்தே இல்லாத குரலில் அவள் கூற அவனுக்கோ சொல்ல முடியா வலி அவளின் இந்த பதிலால்.

“சரிடா மார்னிங் கொண்டு வந்து விட்றேன். சிந்தாம்மாகிட்ட வேற ஒண்ணும் சொல்லல. ”

“ஏன் எங்கம்மாவோட இரண்டு நாள் இருக்கணும்னா கூட அத்தனை பேர் பெர்மிஷன் வேணுமா எனக்கு. அம்மாவோட தான இருக்கேன். இல்ல வேற யாரா. ”

“கண்ணம்மா போதும். ”,அந்த வார்த்தையை கேட்ட பின்பும் அவனின் குரல் சாதாரணமாகவே ஒலித்தது.

ஆனாலும் இழுத்துப் பிடித்த பொறுமை வெண்பாவை ஒரு நொடி அவன் முகம் பார்க்க வைத்தது. இருந்தும் அமைதியாய் இருந்தாள்.

“நா கிளம்புறேன் உனக்கு எப்போ வரத் தோணுதோ வா கண்ணம்மா. டேக் கேர்.”, என்றவன் சுலோச்சனாவிடம் தலையசைப்போடு விடைபெற்று விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்.

அவன்அங்கிருந்து நகர்ந்ததும் வெண்பாவின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது.

ஒரே நாளில் தன்னைச் சுற்றி இருந்த அனைத்தும் பொய்த்துவிட்டதாய் ஒரு பிரமை. என்ன நடக்கிறது என புரியாத போதும் அதை திவாவிடம் தெளிவுபடுத்த வேண்டும் என ஒரு மனம் முரண்டினாலும் அந்த பிரின்ஸிபாலின் பேச்சு அவளை ரொம்பவே நோகடித்திருந்தது.

முகம் கூட பார்த்திராதவர் ஏன் தங்களிடம் பொய் கூற வேண்டும் என எண்ணிணாள்.

அதற்குள் அவளருகில் வந்த அன்னையின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அந்த நேரத்தில் அவளுக்கான ஆறுதலாய் அவரை எண்ணிணாள்.

”ம்மா ஏன் மா எனக்கு மட்டும் சந்தோஷம்னு ஒண்ணு நிலைக்கவே மாட்டேங்குது. முதல்ல உன்னையும் அப்பாவையும் பிரிஞ்சேன்.

இப்போ திவா மேல இப்படி ஒரு பழி. நம்பவா வேண்டாமானு கூட தெரில. மனசு தவிக்குதும்மா.

நா பாத்தது கேட்டது எல்லாமே பொய்யா இருக்க கூடாதானு தவிப்பா இருக்கு. ”

“அழாத டா. கண்ணால நீயே பார்த்த அப்பறமும் அது பொய்யாகும்னு எப்படி நம்புற.

ஆனா நீ அவரை பார்த்து நேராவே கேட்டுருக்கலாம் ஏன் இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணாருனு. ”

“முடியலையே மா. அவரு முகத்தை பார்த்து என்னால வாயை திறக்க முடில பேச ஆரம்பிச்சா கண்டிப்பா உடைஞ்சுருவேன்.

நா கேட்டு அதை சமாளிக்க அவரு ஒரு பொய்யை சொல்லி அது பின்னாடி தெரிய வந்தா நா உயிரோடையே இருக்க மாட்டேன் மா. ”

அத்தனை அழுகையிலும் அவனுக்காக பேசும் மகளை பார்க்க எரிச்சலாக இருந்தது.

“சும்மா இப்படி கோழை மாதிரி பேசாத வெண்பா. உன்னை மாதிரி பொண்டாட்டிங்க இருக்குறதுனால தான் இந்தமாதிரி சில ஆண்கள் தைரியமா தப்பு பண்றாங்க பொண்டாட்டி கிட்ட பொய் சொல்றாங்க.

என்ன இருந்தாலும் பெரியவங்க பார்த்து வைக்குற கல்யாணம் போல வருமா. நீ இதெல்லாம் அனுபவிக்கனும்னு விதி போல. சரி விடு கொஞ்ச நேரம் தூங்கு. மார்னிங் பேசிக்கலாம். ”

அங்கு வீட்டிற்குச் சென்றவனை கண்ட சிந்தாம்மா,

”என்னப்பா பாப்பா எங்க??”

“அவ அவங்க அம்மாவோட தங்கிட்டு வரேன்னு சொலிட்டா சிந்தாம்மா.

நீங்க சாப்ட்டு படுங்க. நா வெளிலேயே சாப்ட்டேன்.”, என்றவன் சட்டென தனதறைக்குள் புகுந்து கொண்டான்.

கட்டிலில் விழுந்தவனுக்கு வெண்பாவின் வார்த்தைகளே காதில் உழன்றது.

“என் கண்ணம்மாவுக்கு இப்டியெல்லாம் கூட பேச தெரியுமா. அப்படி என்ன என் மேல கோவம்.

எதுவாயிருந்தாலும் அதை நேரடியாக பேசித் தீர்த்திருக்கலாமே. ஒரு வேளை அந்த பைலை பார்த்துவிட்டாளோ!!”

என்றவன் வேகமாய் கப்போர்டை திறந்து தேட அந்த பைல் அவன் வைத்த இடத்திலேயேதான் இருந்தது.

வேறு என்னதான் பிரச்சனையாய் இருக்கும் என குழம்பித் தவித்து தூக்கத்தை தொலைத்தான்.

காலையில் எழுந்தவள் பல்துலக்கி காபி குடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்புவதாகக் கூறினாள்.

“என்ன உன் ரோஷமெல்லாம் அவ்ளோ தான அதுக்குள்ள அவரை பார்க்காம இருக்க முடியலையா?”

“ம்மா நீயும் என்ன உன் பேச்சால கொல்லாத. ”

“பின்ன என்ன நேத்து அப்படி பேசிட்டு காலையிலே விடிஞ்சும் விடியாமயுமா கிளம்பி நிக்குற. வேற எப்படி பேச சொல்ற?”

“தப்பு பண்ண அவரே தைரியமா இருக்கும் போது நா ஏன் இங்க ஓடி ஒழியணும். அதனால தான் போறேன்.

என்னதான் நடக்குதுனு பாக்குறேன். எத்தனை நாள் அவரு என்னை ஏமாத்துறாருனு பாப்போம்.

நா வரேன் முடிஞ்சா நீ ஊருக்கு கிளம்பிடு மா. இனி நா இங்க வரமாட்டேன். ”

“என்ன உளர்ற வெண்பா. அங்க உன்னை தனியா விட்டுட்டு என்னால எப்படி போக முடியும் பேசாம நீயும் என்கூடவே வந்துரு.

நீ கஷ்டபட்டதெல்லாம் போதும். உனக்கான வாழ்க்கை இது இல்ல. ”

“என்ன சொல்ல வர்ற? ?என்னையும் அவரு மாதிரி இந்த தாலிக்கு துரோகம் பண்ண சொல்றியா.

இந்த ஜென்மத்துல அவரு தான் என் புருஷன். அதுக்காக அவரு என்ன தப்பு பண்ணாலும் பொறுத்துப்பேன்னு அர்த்தம் இல்ல.

அதுக்கு அவருக்கான தண்டனையை அவரு கூட இருந்து நா கொடுப்பேன்.

நீ உன் வேலையை மட்டும் பாரு. தேவையில்லாம இதுல தலையிடாத. நா வரேன். ”

ஏதோ ஒரு உந்துதலில் தாயிடம் பேசிவிட்டு வந்தவளுக்கு அவனை எப்படி எதிர்கொள்வது என்று தவிப்பாகவே இருந்தது.

வாழ்க்கை நொடியில் இப்படியெல்லாம் மாற வேண்டுமா என தன் விதியை நொந்து கொண்டவளாய் தன் பிளாட் வாசலை அடைந்தாள்.

கால்கள் பின்னிக் கொள்ள கஷ்டப்பட்டு நடையை போட்டவள் அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஒரு நெடு மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.

சிந்தாம்மா வந்து கதவை திறக்க ஒன்றும் கூறாமல் அவரை கடந்து உள்ளே செல்ல எத்தனித்தவளை,

“என்ன கண்ணு ஒரு வார்த்தை சொல்லிட்டு போய்ருக்கலாம்ல நா பயந்தே போய்ட்டேன். தம்பி முகமே சரியில்ல எதுவும் பிரச்சனையோ என்னவோனு. ”

“எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டா இருக்காங்க. ஏதோ ஒரு நாள் அங்க இருக்கணும்னு தோணிச்சு அதை ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ பெரிய பிரச்சனை ஆக்குறீங்க.”, பட்டென பொரிந்து தள்ளினாள்.

சிந்தாம்மா ஒரு நொடி அதிர்ந்துவிட்டார். என்னவாயிற்று தான் ஒன்றும் அத்தனை தவறாய் பேசியிருக்கவில்லையே.

அது மட்டுமில்லாமல் இது வெண்பாவின் இயல்பு இல்லையே இப்படி அவள் எடுத்தெறிந்து பேசி அவர் அறிந்ததேயில்லை.

அவர் பதில் கூறும் முன் அவரை கடந்து தனதறைக்குச் சென்றிருந்தாள்.

அங்கு திவா வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்க கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன் இரண்டே எட்டில் அவளை நெருங்கினான்.

“கண்ணம்மா எப்படிடா இருக்க?இரண்டு நாள் இருந்துட்டு வரேன்னு சொன்னியே?”

“சொன்னேன் இப்போ வரணும்னு தோணிச்சு வந்துட்டேன். வரலாமா கூடாதா.”

“என்ன கேள்வி இது கண்ணம்மா. இது உன் வீடு. சரி விடு உன் மனசை ஏதோ ஒரு விஷயம் போட்டு அழுத்து அதை என்னனு சொல்லு. ”

என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். அவன் கேட்ட நொடி விழிகளுக்குள் ஆழ்ந்து நோக்கியவளின் பார்வையை எந்த தயக்கமும் இன்றி எதிர் நோக்கினான்.

அந்த பார்வையின் நேர்மை கொடுத்த தைரியத்தில் பட்டென கேட்டாள்.

“நேத்து மதியானம் ஒரு மணிக்கு எங்க இருந்தீங்க?”

“ம்ம் லஞ்ச்க்காக ஒரு ஹோட்டலுக்கு போயிருந்தேன்.”

“உங்க காலேஜ் பக்கத்துலயேவா?”

“இல்ல ப்ரெண்ட் ஒருத்தர் வரேன்னு சொன்னதால ஒரு ட்ரைவின் ஹோட்டல்க்கு போய்ருந்தேன். ஏன் கண்ணம்மா யாரு என்ன சொன்னாங்க?”

அவன் ஹோட்டலில் இருந்ததை ஒத்துக் கொண்டது சற்று நிம்மதியை கொடுத்திருந்தாலும் அடுத்த நொடி அவன் ஆண் நண்பர் என்று கூறியது எரிச்சலை அதிகப்படுத்தியது.

“யாரும் ஒண்ணும் சொல்லல. இல்ல அப்படி சொல்ற அளவு எதாவது இருக்கா எனக்கு தெரியாம?”

இப்படியான கேள்வியை எதிர்பாராதவனாய் ஒரு நொடி தயங்கியவன்,

”இல்ல அப்படியெல்லாம் எதுவுமில்ல. ஜஸ்ட் கேட்டேன்.”, எனும்போதே அலைப்பேசி அழைப்பு வந்தது.

அதை கட் செய்தவாறே,

”சாரி கண்ணைம்மா அவசர வேலை. இன்னைக்கு காலேஜ் கிடையாது ஹாஸ்பிட்டல் தான் போறேன் ஈவ்னிங் சீக்கிரம் வந்துட்றேன். நீ எதையும் போட்டு குழப்பிக்காத சரியா. பை. ”

என்றவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பியிருந்தான். அவன் பேசிய எதுவும் அவள் காதில் விழுந்திருக்கவில்லை.

ப்ரைவேட் நம்பர் என்று வந்த அந்த அழைப்பும் அதை அவன் தன் முன் பேசாமல் கட் செய்ததுமே மூளைக்குள் சுற்றி வந்தது.

அதன்பின் அறையை விட்டு வெளியே வராமல் ஏதோ மூலையை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள்.

காலையில் அவள் அப்படி பேசிச் சென்றது வேறு சிந்தாம்மாவிற்கு அவளிடம் பேசுவதற்கு தயக்கத்தை கொடுத்திருந்தது.

இருந்தும் வெகு நேரமாய் ஒன்றும் உண்ணாமல் இருக்கிறாளே என அவள் அறைக்குள் நுழைந்து,

”பாப்பா எதாவது சாப்டுறியா?கொண்டு வரவா?”

“கொஞ்ச நேரம் தனியா விட மாட்டீங்களா?கதவை தட்டிட்டு வர மாட்டீங்களா?இல்ல உங்க அருமை புள்ள என்னை வேவு பார்க்க சொன்னாரா?

எனக்கு எப்போ தோணுதோ நா சாப்டுப்பேன். நீங்க ஒண்ணும் அக்கறை பட வேணாம். கொஞ்ச நேரம் என் கண் முன்னாடி வராதீங்க. ப்ளீஸ்”

திவாவின் மேல் காட்ட வேண்டிய காட்ட முடியாத அத்தனை கோபமும் சிந்தாம்மாவிடம் திரும்பியது.

இருந்த மன உளைச்லில் வார்த்தைகள் தடித்து விழுந்தது. சிந்தாம்மாவிற்கு ஒரு நொடி கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

அதை மறைத்தவராய் அங்கிருந்து நகர்ந்தவர் சமையலறைக்குள் சென்று கண்ணீர் வடித்தார்.

சில நொடிகளில் தன் பின் அரவம் கேட்க அங்கு வெண்பா நின்றிருந்தாள்.

“வெளியே போறேன். எப்போ வருவேன்னு தெரியாது. வரேன். ”, என்றவள் விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள்.

வழக்கம்போல் நிம்மதியை தேடி கடற்கரையை அடைந்தவள் அத்தனை வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்க அவள் கைப்பேசி அலறி அவள் நினைவுகளை கலைத்தது.

சுலோச்சனா தான் அழைத்திருந்தார். ஐயோவென்று இருந்தது வெண்பாவிற்கு.

இருந்தும் அழைப்பை ஏற்றுகாதில் வைத்த நொடி மூச்சுவிடாமல் பேச ஆரம்பித்திருந்தார்.

“எங்க இருக்க வெண்பா நீ. என்ன நடக்குதுனு நியூஸை பார்த்தியா இல்லையா.

உன் புருஷன் இப்படி ஒரு கேவலமான ஆளா இருப்பாருனு நினைக்கவே இல்ல. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை.

இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிருக்கான்.”

“ம்மா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின நா மனுஷியாவே இருக்க மாட்டேன். என்ன பேச்சு பேசுற என்னாச்சு?”

“இன்னும் என்ன ஆகணும். அந்த காலேஜ் தான் இன்னைக்கு தமிழ்நாடு மொத்தமும் ஹெட்லைன்ஸ்ல போய்ட்டு இருக்கு.

பொண்ணுங்களை அந்த காலேஜ் ப்ரொபசர் அண்ட் வார்டனே தப்பான வழிக்கு கூப்டதா ஆதாரத்தோட ப்ரூவ் பண்ணிருகாங்க.

நேத்து அந்த பிரின்சிபல் சொன்னதையும் இதையும் சேர்த்தா நினைக்கவே கூசுது. ”

“ம்மா. வாயை மூடு. உன் லிமிட்டை ரொம்பவே க்ராஸ் பண்ற. என்ன தைரியத்துல இந்த மாதிரியெல்லாம் பேசிட்டு இருக்க.

என்னை பெத்தத தவிர எனக்காக நீ எதுவும் பண்ணல மா அதான் உண்மை.

அதனால அம்மானு உரிமை காட்றேன் அது இதுனு தேவையில்லாத உரிமையை நீ எடுத்துக்காத.

இதுக்கு மேல பேசினா மரியாதை இல்லாம எதாவது பேசிருவேனோனு பயமா இருக்கு.

தயவுசெஞ்சு போனை வச்சுரு. முடிஞ்சா இன்னைக்கே ஊருக்கும் கிளம்பிடு. என்னை கொஞ்சம் தனியா விடு.

எல்லாருமா சேர்ந்து என்னை நோகடிக்காதீங்க.”, போனை வைத்தவள் இருக்கும் இடம் கூட மறந்து அழுது தீர்த்தாள்.

திவா அன்று ஹோட்டலில் போனில் கூறியது வேறு தேவையில்லாமல் நினைவிற்கு வந்தது.

”என்ன ஆனாலும் என் பேர் வெளில வரக்கூடாது. ”

வேகமாய் கண்ணீரை துடைத்தவள் யூடீயூபில் செய்திகளைப் பார்க்க அந்த கல்லூரி செய்தி தான் ஓடிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு பெண்ணை முகத்தை மறைத்தவாறு போலீஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆத்திரத்தை மட்டுப் படுத்தியவள் திவாவிற்கு அழைக்க மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

அவன் மருத்துவமனைக்கு அழைத்து அவனுக்கு இணைக்கச் சொல்ல அவன் இன்று டியூட்டிக்கே வரவில்லை என்று கூறினர்.

வருத்தம் பயம் அனைத்தையும் தாண்டி ஒருவித ஆத்திரம் புத்தியை ஆட்டிப் படைக்க கோபமாய் வீட்டை அடைந்தவள் தனதறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தினாள்.

சிந்தாம்மாவிற்கு அவளை நெருங்கவே பயமாய் இருந்தது. எதற்கு இத்தனை கோபம் என்று அவருக்கு துளியும் புரிபடவில்லை.

அவரும் திவ்யாந்திற்கு அழைத்துப் பார்க்க சுவிட்ச் ஆப் என்று தான் வந்தது.

மாலை ஏழு மணியளவில் திவ்யாந்த் வீட்டை அடைய வாசல் கதவு திறந்தே இருந்தது.

ஒருவித அமைதி ஆட்கொண்டிருந்தது. கதவை அவன் பூட்டிய சத்தத்தில் சிந்தாம்மா வேகமாய் தனதறையில் இருந்து வந்து எட்டிப் பார்த்தார்.

“தம்பி. நம்ம பாப்பா. ”,என்று அவர் முடிப்பதற்குள் ஹாலிற்கு வந்தவள்,

“ஒரு குற்றப்பத்திரிக்கையும் வாசிக்க அவசியம் இல்ல. நானே வந்துட்டேன். ”

“கண்ணம்மா என்ன பேச்சு இது. ”, குரல் சற்றே உயர்ந்திருந்தது திவ்யாந்திற்கு.

“நா ஒழுங்கா பேசுறதும் பேசாததும் நீங்க கொடுக்குற பதில்ல தான் இருக்கு. நா உங்ககிட்ட பேசணும். ”

சிந்தாம்மா பிரச்சனையின் தீவிரம் உணர்ந்தவராய் உள்ளே செல்ல எத்தனிக்க திவ்யாந்த் அவரை தடுத்தான்.

“உங்ககிட்ட மறைக்குற அளவு ஒண்ணும் இல்லம்மா நீங்க இங்கேயே இருங்க. ”

“ம்ம் ஆமா ஆமா எதையும் மறைக்கவே மாட்டாரு. ”

பதிலுக்கு பதில் குதற்கமாகவே பேசியவளை பார்த்து நொந்து கொண்டிருந்தான்.

“என்ன கேக்கணுமோ நேரா கேளு டா. ”

“இரண்டு நாள் முன்னாடி நா உங்களுக்கு கால் பண்ணப்போ ஏன் அட்டெண்ட் பண்ணல. ”

“அதான் சொன்னனே மீட்டிங். ”

“போதும் திவா. ஒரே பொய்யை அகெயின் அண்ட் அகெயின் சொல்லி உண்மையாக்காதீங்க.

மீட்டிங் காலேஜ்ல ஒதுக்குப்புறமா தான் நடக்குமா. அதுவும் ஒரு பொண்ணோட. ”

சிந்தாம்மா அப்பட்ட அதிர்ச்சியோடு முழித்து நிற்க திவாவிற்கோ மரணவலி வந்திருந்தது.

“யாரு சொன்னா?”

“யாரும் சொல்லி நா நம்புற அளவு பச்சை குழந்தையில்லை. என் கண்ணால பார்த்ததான் கேக்குறேன். ”

“சந்தேகப்படுறியா கண்ணம்மா. ”, குரலில் அப்படியாய் ஒரு உணர்ச்சிக் கலவை.

“நீங்க தான் பட வைக்குறீங்க. உங்க மேல தப்பு இல்லைனா உண்மையை சொல்ல வேண்டியதுதான.

பொண்டாட்டிகிட்டேயே மறைக்குற அளவு அப்படியென்ன ரகசியம்?”

“ரகசியம் தான் ஆனா என்னோடது இல்ல. என்னப்பத்தி மறைக்குற அளவு எந்த விஷயமும் உன்கிட்ட கிடையாது.

இது அடுத்தவங்களோடது அப்போ அந்த ரகசியத்தை காப்பாத்தி தான் ஆகணும். ”

“ம்ம் உங்களுக்கா பேச கத்துக் கொடுக்கணும்?சரி நேத்து ஹோட்டல்ல யாரை மீட் பண்ண போயிருந்தீங்க?”

“இதுக்கும் பதில் தெரிஞ்சே தான் கேக்குறியா. நேரடியா என்கிட்ட நேத்தே கேட்டுருக்கலாமே. ”

“ம்ம் கேட்டுட்டா மட்டும் உண்மையா சொல்லிருப்பீங்க. வழக்கம் போல எதாவது ஒரு பொய் தான்.

காலையிலே சொன்னீங்களே ப்ரெண்ட் ஒருத்தர் வந்தார்னு”, என அந்த ஒருத்தரில் அழுத்தம் கொடுத்து கூறினாள்.

திவா அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான். வெண்பாவிற்கோ இரண்டு நாளின் ஏமாற்றங்கள் சுலோச்சனாவின் பேச்சுகள் என அனைத்துமாய் வெறிபிடித்தவளாய் மாற்றி இருந்தது.

“இதோ பாரு திவா இப்பவும் உன்னை நா சந்தேகப் படுறேனா எனக்கு தெரில ஆனா ஒருவித ஏமாற்றம் வலி.

என் திவா என்கிட்ட உண்மையா இல்ல. என்கிட்ட கூட மறைக்குற அளவு ரகசியங்கள் அவன்கிட்ட இருக்குனு நினைச்சு நினைச்சு கடுப்பாகுது. இன்னும் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கல.

எப்படியும் என் கேள்வி அத்தனைக்கும் ஒரு பதில் வச்சுருப்ப அதையும் சொல்லிடு. நானும் நம்புவேன். அதான் அதிகபடட்ச காமெடியே. ”

பேசி முடித்தவள் தங்களறைக்குள் சென்று மெத்தையில் விழுந்து குலுங்கி அழத் தொடங்கியிருந்தாள்.

திவ்யாந்திற்கு இன்னமும் அவளின் வார்த்தைகளில் இருந்து மீள முடியவில்லை.

இப்படி ஒரு கோணத்தை அவன் யோசித்திருக்கவில்லை என்பதே உண்மை.

என்ன இருந்தாலும் இது அவன் வேலை வட்டாரம் சம்மந்தப்பட்ட விஷயம் அதுமிட்டுமில்லாமல் இதை கூறி வெண்பா வீணாக பயந்துவிட கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம்.

ஆனால் இதற்கு அவள் இத்தனை வருத்தப்படுவாள் என எண்ணியிருக்கவில்லை.

முகத்தை அழுந்த துடைத்தவன் இருக்கையில் இருந்து எழுந்து சிந்தாம்மாவை பார்த்தான்.

“தம்பி என்கிட்ட சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. என் பிள்ளை எது பண்ணிணாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.

பாவம் பாப்பா ரொம்ப பாசம் வச்சுருக்கா உன் மேல அதனால தான் இத்தனை கோபப்படுது. போ போய் சமாதானப்படுத்துயா. ”

தங்களறைக்குள் நுழைந்தவன் வெண்பாவின் அருகில் அமர்ந்து அவள் தலை தொட சட்டென எழுந்து அமர்ந்தாள். அழுதழுது முகமே வீங்கியிருந்தது.

“கண்ணம்மா உன் எல்லா கேள்விக்கும் நா பதில் சொல்றேன் ஆனா நீ இப்படி இருக்காத உன் உடம்பை கெடுத்துக்காத.

என்னை நாலு அடி கூட அடிச்சுரு தாங்கிப்பேன். ஆனா நீ இப்படி இருக்குறத என்னால பார்க்க முடில டா. ப்ளீஸ். ”

சிறு பிள்ளையாய் முகத்தை துடைத்தவள் தலையை கோதி கொண்டையை போட்டவாறு தலை குனிந்தே அமர்ந்திருந்தாள்.

“நீ அன்னைக்கு பார்த்த பொண்ணு பேரு சீதாலட்சுமி. எனக்கு தங்கச்சி மாதிரி. ”

அந்த ஒரு பதிலே வெண்பாவை கன்னத்தில் அறைந்தார்போல் இருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan October 5, 2026 - 7:56 am

😍😍😍😍😍😍

srichitra October 6, 2026 - 2:16 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode