அதிகாலை நான்கு மணி திவ்யாந்தின் கையணைப்பிலேயே இருந்தவள் துளியும் உறங்கியிருக்கவில்லை.

அத்தனை நாட்களின் மன பாரத்தையும் பேசித் தீர்த்திருந்தனர்.

“கண்ணம்மா கொஞ்சமாவது தூங்கு. ரொம்ப டயர்டா தெரியுற. ”

“இல்ல திவா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆனா நீ சீக்கிரமே கிளம்பனுமே உன் தூக்கத்தை தான் கெடுத்துட்டேன்.

நா இன்னும் ஒரு டென் டேஸ் லீவ் எடுக்கலாம்னு இருக்கேன். கொஞ்சம் மைண்ட் சேஞ்ச் கிடைக்கும். ”

“உனக்கு எத்தனை நாள் எடுக்கனுமோ எடுத்துக்கோ டா. சரி இப்போ நீ ஒழுங்கா தூங்கு. அம்மாவோட வெளில போறனு சொன்னல.

நீ சொன்ன அதே பத்து நாள் நானும் எல்லா பொறுப்பையும் முடிச்சுட்டு கொஞ்சம் ரிலீவ் ஆய்டுவேன். ”

அவளை ஒருவழியாய் உறங்க வைத்தவன் தானும் சற்று கண்ணயர்ந்தான்.

அடுத்த மூன்று மணி நேரத்தில் எழுந்தவன் குளித்து தயாராக அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள் வெண்பா.

அவளை எழுப்பாமல் கிளம்பிச் சென்றவன் அவளுக்காக ஒரு பேப்பரில் ஏதோ எழுதி வைத்துவிட்டுச் சென்றான்.

பத்து மணியளவில் எழுந்தவள் கண்களை கசக்கிவாறே தன் மொபைலைத் தேடி எடுக்க அதன் மேல் ஒட்டியிருந்த பேப்பரைப் பார்த்தவளுக்கு இதழ்களில் புன்னகை அதுவாய் வந்து ஒட்டிக் கொண்டது.

“அழகு கண்ணாமாவிற்கு அழகிய காலை வணக்கம். -திவா. ”

அதையெடுத்து தன் தலையணைக்கு அடியில் வைத்தவளுக்கு அன்றைய விடியல் நிஜமாகவே அழகானதாய் தோன்றியது.

அதன்பிறகு பொறுமையாய் குளித்து தயாரானவள் தன் அன்னையை காணச் சென்றாள்.

இருவருமாய் மால் ஷாப்பிங் என்று அன்றைய நாள் இனிமையாகவே கழிந்தது. சுலோச்னாவும் அவளோடு இயல்பாக இருப்பதாகவே காட்டிக் கொண்டார்.

தேவையின்றி திவாவை பற்றியோ அவள் திருமணத்தை பற்றியோ வாய் திறக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அன்றைய நாளின் அத்தனை நேரத்திலும் வெண்பா தனக்கென ஒரு பொருள்கூட வாங்கிக் கொள்ளவில்லை.

சுலோச்னா எவ்வளவோ கேட்டும் அவரிடம் வாங்க மறுத்துவிட்டாள்.

ஒரு கடையில் அவளுக்கு பிடித்த மாடலில் இருந்த ஹேண்ட்பேக்கை எடுத்தவள் அதற்கும் தானே தான் பணம் செலுத்தினாள்.

அதுவே சுலோச்சனாவிற்கு பல விஷயங்களை புரிய வைத்தது.

என்ன தான் தாய் என சிரித்து மகிழ்ந்து செல்லம் கொஞ்சினாலும் மனதளவில் திவாவின் மனைவியாகத் தான் இருக்கிறாள் என்பதை குறித்துக் கொண்டார்.

மாலை நேரமாய் வீட்டிற்கு வந்தவள் மிகுந்த களைப்பின் காரணமாய் சீக்கிரமே உறங்கிவிட்டாள்.

தற்செயலாய் விழிப்பு வந்தவள் கையை நீட்ட அருகில் திவா இல்லை. மணி என்னவென பார்க்க இரவு 1:30 என்று காட்டியது.

போனை எடுத்து அவனுக்கு அழைக்கச் சென்ற நேரம் மெதுவாய் அறைக் கதவை திறந்து திவா வந்தான்.

“கண்ணம்மா இன்னும் தூங்காம என்ன பண்ற?”

“இல்ல திவா இப்போ தான் எழுந்தேன் உன்னை காணுமேனு கால் பண்ண வந்தேன். என்ன இவ்ளோ லேட்.”, என தூக்க கலக்கத்தில் அவன் தோளில் சாய்ந்து கொண்டவளை கட்டிலில் படுக்க வைத்தவன்.

“ஒரு ரெண்டு மூணு நாள் அப்படி தான் இருக்கும் டா. நீ தூங்கு மார்னிங் பேசிக்கலாம்.”, என்றவாறே தலையை வருடிக் கொடுக்க அப்படியே உறங்கிப் போனாள்.

மறுநாள் அவள் விழிக்கும் முன்பே திவா கிளம்பியிருந்தான். மனம் ஏனோ ஒருவித வெறுமையை உணர்ந்தது.

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தியவள் வழக்கம் போல் தயாராகி அன்னையை காணச் சென்றாள்.

வரும்போதே மகளின் முக வாட்டத்தை கவனித்தவர் மெதுவாய்,

“என்ன வெண்பா முகமே சரியில்ல என்னாச்சு. உடம்புக்கு எதுவும் பண்ணுதா?”

“ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல மா. மனசு தான் ஒருமாதிரி இருக்கு. ”

“ஏன் என்னாச்சு திடீர்னு. ”

“இல்லம்மா கொஞ்ச நாளாவே இப்படிதான் ஐ அம் மிஸ்ஸிங் திவா அ லாட்.

நேத்துகூட மிட் நைட்க்கு மேல தான் வந்தாரு. மார்னிங் சீக்கிரமே கிளம்பிட்டாரு போல. அதான் ஒரு மாதிரி இருக்கு. ”

“ம்ம் அப்படி என்ன பெரிய வேலையோ பொண்டாட்டியை விட. முறைக்காத வெண்பா சும்மா.

நானும் பாத்துட்டு தானே இருக்கேன். நீதான் திவா திவானு உருகிட்டு இருக்க அவரு அப்படி ஒண்ணும் இருக்குற மாதிரி தெரில.

என்னவோ உன்னை கண்ணால பாத்தா மட்டும் கொஞ்சி கெஞ்சினு சமாளிக்குறாரு.

ஒரு நாள்ல ஒரு போன் இல்ல மெசெஜ் இல்ல. இதுல வீட்லயும் இருபத்தி நாலு மணி நேரமும் உன் மாமியார் இருக்காங்க.

உங்களுக்குனு எப்போ தான் டைமோ தெரில. டைம் கிடைக்கலையா இல்ல வேணும்னே அவாய்ட் பண்றாங்களா. ”

“ம்மா போதும் நிறுத்துறியா எதோ மனசு கஷ்டமாயிருக்கேனு உன்கிட்ட பொலம்பிட்டேன்.

உடனே இதான் சாக்குனு ஆரம்பிச்சுருவியே. உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல.

அதுவும் திவாவை சுத்தமா பிடிக்கல அதுக்காக அப்படியே நீயே அளந்து விடாத புரியுதா.

இந்த பேச்சை இத்தோட விடு. நாம எங்கேயாவது போறோமா இல்ல நா கிளம்பவா?”

“சரி சரி கத்தாத என் ப்ரெண்ட் ஒருத்தி இங்க ஒரு கோவில் பத்தி சொன்னா கொஞ்சம் டிஸ்டன்ஸ் தான் பட் இன்னைக்கு கண்டிப்பா போலாம். ”

இருந்த எரிச்சலில் வேறு எதையும் கேட்காமல் அவரோடு கிளம்பிச் சென்றாள்.

பாதி வழி போன பின்னர் தான் கவனித்தவள் அது திவா செல்லும் கல்லூரிக்கான வழி என்பது புரிந்தது.

“ம்மா திவா காலேஜ் இங்க தான் இருக்கு ஒரு தடவை பாத்துட்டு போலாமா?”

“இப்போவா?”

“ம்ம் அவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த மாதிரி இருக்கும் ப்ளீஸ் ஒரு டென் மினிட்ஸ் தான். ”

“சரி கோவில் நடை சாத்திட கூடாது அதனால போய்ட்டு ரிடன் வரும்போது வரலாம். ”

“ம்ம்”,என்றவள் கோவிலுக்குச் சென்று திரும்பும் வரையுமே அமைதியாகவே வந்தாள்.

அதன்பின் காலேஜ் வாசலில் இறங்கியவள் உள்ளே செல்ல எத்தனிக்க தானும் வருவதாய் கூறி சுலோச்னா உள்ளே சென்றார்.

சற்றுதூரம் நடந்து காலேஜின் மைய பகுதியை அடைந்தவர்கள் கேன்டீனிற்குச் சென்று அங்கிருந்து திவாவை அழைக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

தங்களுக்கான இருக்கை பார்த்து வெண்பா அமர சுலோச்சனா இருவருக்குமாய் குடிப்பதற்கு ஜுஸ் வாங்கி வரச் சென்றார்.

வெண்பா திவாவிற்கு அழைக்க முழு அழைப்பும் சென்று கட்டானது.

மறுபடியும் அழைக்க நினைத்தவள் தற்செயலாய் மறுபுறம் திரும்ப சற்று தூரத்தில் திவா எதோ ஓர் பெண்ணோடு பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

பெண் சிறிவளாய் இருக்க மாணவியாய் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் மீண்டும் திவாவை அழைக்க அழைப்பை பார்த்தவன் அட்டெண்ட் செய்து,

“கண்ணம்மா முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். கொஞ்ச நேரத்துல நானே கூப்டுறேன் டா.”, என்றவன் பதிலை எதிர்பாராது கட் செய்திருந்தான்.

வெண்பாவிற்கு ஒரு நொடி அப்படட்டமான அதிர்ச்சி தாக்க அப்போது தான் அவர்கள் நின்ற இடத்தை கண்டவள் அது ஒதுக்குப்புறமாய் இருப்பதை உணர்ந்தாள்.

இவளிருக்கும் இடத்திலிருந்தும் கூட சட்டென யார் கண்ணுக்கும் தெரிந்துவிட மாட்டார்கள் என்றே தோன்றியது.

நிச்சயமாய் திவா மேல் சந்தேகம் என்ற ஒன்று தோன்றவில்லை எனினும் சொல்ல முடியாத ஒருவித சஞ்சலம் மனதை ஆட்கொண்டிருந்தது.

சரியாய் சுலோச்சனா இருவருக்குமான ஜுஸோடு அவளருகில் அமர பிரமை பிடித்தவளாய் எங்கேயோ வெறித்திருந்தவளின் பார்வை சென்ற திசையை கண்டவருக்கு மனதில் சிறு பொரி தட்டியிருந்தது.

அவர் காணும் நேரம் திவா அந்த பெண்ணை சற்றே தன்னோடு சாய்த்தவறு ஏதோ கூறிக் கொண்டிருக்க அந்தபெண் கண்களைத் துடைத்தவாறு அவனைவிட்டு விலகி நின்றாள்.

“இது தான் உன் புருஷனோடா ஓவர் டைமா?”, என பட்டென கேட்டேவிட்டார்.

“ம்மா வாய் கூசாம இப்படி பேசாதம்மா. ”

“ம்ம் என்ன அடக்குறது முக்கியம் இல்ல. உன் வாழ்க்கை கேள்வியாகாம இருந்தா சரி. ”

அடுத்து அவள் ஏதோ பேச வருவதற்குள் அவர்களின் பக்கத்து டேபிளில் நவநாகரிகமாய் ஒரு பெண்கள் குழு வந்து அமர்ந்தனர்.

“என்ன மச்சி அந்த கிராமத்து கிளியை ஆளையே காணோம் போன க்ளாஸ்ல. ”

“ம்ம் வேற எங்க போய்ருப்பா அந்த புது டாக்டரோட தான் போய் கண்ணீர் வடிச்சுட்டு இருப்பா.

அவரு செம ஹண்ட்சம் டீ ஆனாலும் ஏன் இப்படி ஒரு மட்டமான டேஸ்டோ தெரில. ”

“மச்சி உனக்கு அவ மேல ஏற்கனவே காண்டு அதனால தான் இவ்ளோ பீல் பண்ற. ”

“ம்ம் என்ன வேணா சொல்லு அந்த டாக்டரோட அவளை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. வாட் எவர் ஈவ்னிங் ஹாஸ்ட்டலுக்கு தான வரணும் அப்போ பாத்துக்கலாம். ”

வெண்பாவிற்கு தலை சுற்றியது எங்கோ மொழி தெரியா உலகத்தில் சிக்கி கொண்டதாய் ஒரு பிரமை.

இருந்தும் சுலோச்சனாமுன் எதையும் காட்ட விரும்பாதவளாய் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.

இருந்தும் அவளின் தாயோ இதான் சமயம் என வீட்டிற்கு வரும் வரையுமே அவளை உண்டு இல்லை என ஆக்கிக் கொண்டிருந்தார்.

மாலை வருவதாய் கூறியவள் மதியமே வந்ததை கண்டு சிந்தாம்மா என்னவென கேட்க தலைவலியாய் இருப்பதாய் கூறி அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் அழைப்பதாய் கூறியவனிடமிருந்து ஒரு பதிலும் வராமல் போக அது மேலும் மேலும் அழுகையை கொண்டு வந்தது.

முந்தைய நாளை விட சற்று சீக்கிரமாகவே வந்தவன் உடைமாற்றிய வாறே அவளிடம்,

“சாரி கண்ணம்மா இன்னைக்கு டே ரொம்பவே ஹெக்டிக் அதனால தான் திரும்ப கால் பண்ணவே இல்ல.

நீ கால் பண்ணும் போது கூட சீனியர் ப்ரோபசர் ஒருத்தரோட முக்கியமான மீட்டிங்ல தான் இருந்தேன். எதுக்கு டா கால் பண்ணிருந்த. ”

வீட்டிற்கு வந்த பின் நிச்சயம் உண்மையை கூறுவான் என்று நினைத்தவளுக்கு அவனின் விளக்கம் பெரும் அடியாக விழுந்தது.

ஒன்றுமே கூறாமல் அவள் அமைதியாய் இருப்பதை கண்டவன் அவளருகில் வர சட்டென அங்கிருந்து எழுந்து கொண்டாள்.

“கண்ணம்மா.  அதான் சாரி சொல்லிட்டனே இன்னுமா கோவம். ”

“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல. கொஞ்சம் டயர்டா இருக்கு நா தூங்க போறேன். ”

“ஓ. சரி டா நல்லா தூங்கு. ,டேக் கேர். ”, என நெற்றியில் இதழ்பதித்து நகர்ந்தான்.

அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளுக்கோ கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

அவனிடமிருந்து அதை மறைக்க எண்ணியவள் அவன் உறங்கும் வரை கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இரவு முழுவதும் சற்றும் உறங்காமல் இருந்தவளுக்கு மனம் ஏதேதோ எண்ண ஆரம்பித்திருந்தது.

யாரிடமும் எதையும் கூறவும் முடியாமல் தனக்குள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவித்துப் போனாள்.

தன்னவனை சந்தேகிக்க கூடாது என ஒரு மனம் வாதம் பண்ண மற்றொரு மனமோ என்னிடம் மறைக்கும் அளவு அப்படியென்ன ரகசியம் என முரண்டு பிடித்தது.

அதிகாலை திவாவிற்கு முன்னதாகவே எழுந்தவள் குளித்து தயாராகி அனைவருக்குமாய் காபி கலந்து சிந்தாம்மாவிற்கு கொடுத்துவிட்டு திவாவிற்கு எடுத்துச் சென்றாள்.

“குட்மார்னிங் கண்ணம்மா என்ன இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட. ”

“அம்மாவோட காஞ்சிபுரம் வரை போறேன். கோவிலுக்கு போலாம்னு சொன்னாங்க. ”

“ஓ பட் ரொம்ப அலைச்சல் கண்ணம்மா உடம்பையும் பாத்துக்கணும் டைம்க்கு சாப்டு.

அப்பப்போ ஜுஸ் எதாவது சாப்ட்டுக்கோ டீஹைட்ரேட் ஆய்டாம பாத்துக்கணும். புரியுதா. ”

“ம்ம். ”

திவ்யாந்திற்கு ஏதோ வித்தியாசமாய் தோன்றினாலும் என்னவென அவனால் கணிக்க முடியவில்லை.

அவன் கிளம்பும்போதே அவளையும் ட்ராப் செய்வதாய் கூற பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.

அதன்பிறகு தாயோடு கிளம்பி காஞ்சிபுரம் நோக்கிய பயணம் முழுவதுமே மனம் பாடாய் பட்டது.

அங்கு கோவிலுக்குச் சென்று இறைவனை மனதார வேண்டிவிட்டு திரும்ப மனம் சற்றே சமாதானமடைந்ததாய் உணர்ந்தாள்.

மனதின் கவலையில் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தது என்னவோ செய்ய சென்னையை நெருங்கியிருந்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.

சற்றே அமைதியான அந்த ட்ரைவின் போன்ற ரெஸ்டாரண்டில் வார நாள் என்பதால் அத்தனை கூட்டம் இருக்கவில்லை.

சுலோச்சனாவே ஆர்டர் செய்யட்டும் என அமைதியாய் இருந்தவள் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாய் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அங்கிருந்து வெளியே வந்தவளுக்கு அங்கிருந்த செடிகளுக்குப் பின் இருந்த டேபிளில் இருந்து பேச்சுக் குரல் கேட்டது.

“சார் மறுபடியும் சொல்றேன் நீங்க நினைக்குற மாதிரியான ஆள் நா இல்ல. ”, ஏதோ ஒரு பெண் குரல்.

“நா எப்படி நினைக்குறேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”, நிறுத்தி நிதானமாய் கேட்டது சாட்சாத் அவளின் திவா தான்.

உலகமே தட்டாமாலை சுற்றியது வெண்பாவிற்கு. இதென்ன சோதனை தினமும் ஏதோ ஒரு அதிரிச்சியை தாங்கியாக வேண்டிய கட்டாயம்.

இந்த நேரத்தில் இந்த இடத்தில் திவாவிற்கு என்ன வேலை. அதுவும் ஏதோ ஒரு பெண்ணோடு!!

“சார் என் பேக்ரவுண்ட் தெரியாம என்னை உங்க வழிக்கு கொண்டுவர பாக்குறீங்க. உங்களுக்கு இது நல்லதில்ல. ”

“அது என் பிரச்சனை அதைபத்தி நீ கவலைபட வேண்டாம். நா கேட்டதுக்கு ஒத்துக்க முடியுமா முடியாதா?சே எஸ் ஆர் நோ. ”

“நா உயிரோட இருக்குற வரை அது நடக்காது உங்களால ஆனத பாத்துக்கோங்க.”, என்றவள் விறுவிறுவென சென்றுவிட திவா யாருடனோ மொபைலில் பேசுவது காதில் விழுந்தது.

“நா நல்லவிதமா சொல்லி பாத்துட்டேன் அவ காதுல வாங்கிகுற மாதிரி தெரில. இதுக்கு மேல நீங்க என்ன பண்ணணுமோ பாத்துகோங்க. ”

“……”

“ம்ம் கரெக்ட் தான் ஆனா இதுக்காக தான் நான் என் சுய விருப்பத்துல இந்த ஒரு மாசமா அலைஞ்சுட்டு இருக்கேன்.

இதுக்கான முடிவு தெரியாம நிச்சயமா நா அமைதி ஆகுறதாயில்ல. நா அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்துருக்கேன்.

அதை காப்பாத்தாம விட முடியாது. நீங்க நடக்க வேண்டியதை பாருங்க ஆனா எக்காரணத்தை கொண்டும் என் நேமோ அந்த பொண்ணோட பேரோ வெளில வர கூடாது.

பிரச்சனைக்காக பயப்படல ஆனா இது எனக்கு மட்டுமே தெரிஞ்சதா இருக்கட்டும்னு நினைக்குறேன். ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட். ”

“…. ”

“தேங்க்ஸ் இன்னும் நாலு நாள்குள்ள எல்லாம் முடிஞ்சுரும். பை. ”

அவன் தன்னை பார்த்துவிடாமலிருக்க மறுபடியும் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்து கொண்டவளுக்கு மனம் அடித்துச் சொன்னது அவளது திவா ஏதோ தவறு செய்கிறான் என.

கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய முகத்தை நீரீல் அடித்து அடித்து சமன் செய்ய முயன்றாள்.

அவள் சென்று நேரமானதை உணர்ந்து சுலோச்சனா அங்கே வர அவளின் நிலை கண்டு பயந்துவிட்டார்.

“ஹே வெண்பா என்ன கோலம் இது?என்னாச்சு நல்லாதான இருந்த?”

“ம்மா”,என்றவளுக்கு அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அவர் தோள் சாய்ந்து அழுது தீர்த்திருந்தாள்.

என்னவென புரியாத போதும் மகளை சமாதானப்படுத்த வேண்டும் என உணர்ந்தவர் ஒருவாறு அவளை சமாளித்து டேபிளுக்கு அழைத்துச் சென்று இரண்டொரு வாய் உணவு உண்ண வைத்து அங்கிருந்து வேகமாய் தன் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“இப்போ சொல்லு வெண்பா என்னாச்சு?”

“ம்மா. திவா ஏதோ தப்பு பண்றாரோனு தோணுது.”, என்றவளுக்கு மீண்டும் அழுகை கண்களை நிறைக்க சுலோச்சனா அவளை அதட்டினார்.

“சும்மா சும்மா அழாம விஷயத்தை சொல்லு வெண்பா. எதைவச்சு இப்படி சொல்ற?”

அன்றைய கல்லூரி நிகழ்வையும் இன்று ஹோட்டலில் அவன் பேச்சுவார்த்தையையும் தாயிடம் அப்படியே கூறினாள்.

அதுதான் வெண்பா செய்த மிகப் பெரிய தவறு என்று தான் கூறவேண்டும்.

நேரே சென்று திவாவிடமே கேட்காமல் அலைபாய்ந்த மனதிற்கான பற்றுகோலாய் தன் தாயை நாடியிருந்தாள்.

ஆனால் அதுதான் அவளை இன்னுமாய் குழப்பிவிடும் என்பதை பாவம் அறியவில்லை.

“அன்னைக்கு உன்கிட்ட ஏன் அப்படி சொன்னாருனு நீ கேக்கலையா?”

“இல்லம்மா எப்டியும் வீட்டுக்கு வந்து அவரே சொல்லுவாருனு நினைச்சேன் ஆனா அப்பவும் அவர் அதே பொய்யை சொல்லவும் எனக்கு என்ன பண்றதுனு தெரில. ”

“ம்ம் நல்லா பதிலுக்கு பதில் பேசு புருஷன் எங்க போறான் என்ன பண்றான்னு கூட தெரியாம என்னத்த குடும்பம் நடத்துரியோ.

சரி வெயிட் பண்ணு என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.”, என்றவர் வேகமாய் யோசித்து தன் கணவருக்கு அழைத்து சுருக்கமாய் விஷயத்தை கூறி திவா வேலை செய்யும் காலேஜ் பிரின்சிபாலின் நம்பரை பெற்றுத் தரச் சொன்னார்.

“சுலோ எனக்கென்னவோ இதெல்லாம் சரியா படல. என்ன இருந்தாலும் இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை அதுல நீ தலையிடுறது நல்லாயிருக்கும்னு நினைக்குறியா.

நேரா போய் அவர்கிட்டேயே கேக்க சொல்லு அதைவிட்டுட்டு இந்த மாதிரி வேவு பாக்குற வேலை எல்லாம் வேணாம்.

எனக்கு மொதல்ல இருந்தே நீ பண்ற வேலை பிடிக்கல சுலோ. என்ன தான் நாம இல்லாம நடந்துருந்தாலும் அது ஒண்ணும் பொம்மை கல்யாணம் இல்ல.

கடவுள் போட்ட முடிச்சை நாம ஏன் பிரிக்க நினைக்கனும். முடிஞ்சவரை அவளுக்கு நல்ல புத்தி சொல்லி அவங்க மனகசப்பை தீர்த்து வைக்க பாரேன். ”

“முடிச்சுடீங்களா. எல்லாம் எனக்கு தெரியும் நா கேட்டதை மட்டும் பண்ணுங்க. ”,என்றவர் அழைப்பை துண்டித்திருந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பிரின்சிபால் நம்பர் கைக்கு கிடைக்க அவரை தொடர்பு கொண்டார்.

சுருக்கமாய் தன்னை அறிமுகப்படுத்தியவர் திவாவின் மாமியார் என்று கூறி அவன் கல்லூரிக்கு வந்த கதையை கேட்டார்.

“ம்ம் அந்த டாக்டர் பெரிய கை போல மேடம். எதோ பெரிய ரெக்கமண்டேஷன் பிடிச்சு அவராவே தான் இங்க வந்தாரு.

வந்த ஒருமாசத்துல கிளாஸ் எடுத்த நேரத்தை விரல் விட்டு எண்ணிரலாம்.

யாரோடையும் பேச மாட்டாரு. எப்போ பாத்தாலும் நாலு க்ளேர்ஸோட தான் பேச்சு அவங்களும் ஸ்டண்ட்ஸ்.

என்ன பண்றது நாம சொல்லி ஒண்ணும் எடுபடாது. கண்டும் காணாமையும் தான் இருந்தாகனும்.

இல்லனா என் வேலைக்கே ஆப்பு வந்துடும்”, என அவன் மீதான தனிப்பட்ட விரோதத்தை நன்றாகவே தீர்த்துக் கொண்டார் அவர்.

இங்கு ஸ்பீக்கரில் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வெண்பாவோ உச்சகட்ட அதிர்ச்சியில் அப்படியே மயங்கிச் சரிந்திருந்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan October 4, 2026 - 6:36 am

💞💞💞💞💞

srichitra October 6, 2026 - 2:07 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode