459
“தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
அதிகாலையிலேயே விழித்தவள் ஒருவித மகிழ்ச்சியோடு ஹாலுக்கும் ரூமிற்குமாய் சுற்றிக் கொண்டிருந்தாள்.
கண்விழித்தவன் தன்முன் சிறுபிள்ளையாய் சுற்றித் திரிபவளை பார்த்து புன்னகைத்தவாறே எழுந்தமர்ந்தான்.
“கண்ணம்மா இங்க வாயேன். ”
அத்தனை நாள் இருந்த கலக்கம்கூட சற்று பின் சென்றதாய் தோன்றியது வெண்பாவிற்கு.
“சொல்லு திவா. ஏன் சீக்கிரமே எழுந்துட்ட?”
அவளின் இந்த ஒருமை அழைப்பே அவளின் மகிழ்ச்சியை அவனுக்கு தெரிவித்தது.
மிகுந்த மகிழ்ச்சியிலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டாலோ அன்றி அப்படி அழைக்கமாட்டாள்.
“ரொம்ப அழகா இருக்க டா கண்ணம்மா இன்னைக்கு. ”
“அப்போ இத்தனை நாள் மோசமா இருந்தேனா. ”, வாய் இப்படி கேட்டாலும் விழியும் முகமும் அவனின் அந்த பாராட்டுக்கு சிவந்து குழைந்துதான் போனது.
“இதுக்கான பதில் உனக்கே தெரியும்னு உன் கண்ணே சொல்லுதே கண்ணம்மா.” ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிதானமாய் கூறியவாறே விழியால் பருகிக் கொண்டிருந்தான்.
“திவா. ”,என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள ஈர முடிக்கற்றையும் அவளது வாசனையும் இன்னுமாய் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்ள தூண்டிவிட அப்படியே தன்னோடு இழுத்து சாய்த்துக் கொண்டான்.
“மிஸ் யூ சோ மச் டா. நமக்கான நேரமே இல்லாத மாதிரி இருக்கு பேசாம காலேஜ்க்கு வரலனு சொல்ல போறேன்.
உன்னை இப்போ இப்படி பாக்கும் போதுதான் இத்தனை நாள் நீ நீயா இல்லைங்கிறது ரொம்ப உறுத்துது. சாரிடா கண்ணம்மா. ”
“திவா என்ன இது இப்படியெல்லாம் பேசுறீங்க. வேலைனா முன்ன பின்ன தான் இருக்கும் அதுக்காகவெல்லாம் பீல் பண்ணலாமா.
அதுவும் உங்களோடது சாதாரண வேலைனு சொல்லி விட்ற விஷயமா?கடமையும் பொறுப்பும்.
அதனால இன்னொரு தடவை இப்படி பேசாதீங்க.” என்றவள் அவன் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொள்ள இறுக அணைத்து விடுவித்தவன் என்ன தோன்றியதோ சட்டென அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.
“என்னாச்சு திவா?எதாவது ப்ராப்ளமா?நீங்க இப்படியெல்லாம் இருந்து நா பார்த்ததேயில்லையே. ”
“தெரில கண்ணம்மா. மனசு ஒரு மாதிரி சஞ்சலமாவே இருக்கு. எதோ நீ என்னை விட்டு தூரமா போயிட்ட மாதிரி ஒரு பீல். ”, என இன்னுமாய் அவள் இடுப்பை வளைத்துப் படுத்துக் கொண்டான்.
“என்ன டாக்டரே மாமியார் வர்றதுக்குள்ளயே இப்படி பீல் பண்ணா அவங்க வந்து என்னை சாதாரணமா கொஞ்சினா கூட அவ்வளவுதான் போலேயே!”, என விளையாட்டாய் கூறினாலும் அவன் தலைகோத மறக்கவில்லை.
சில நிமிடங்களில் தானாகவே எழுந்தவன் முகத்தை அழுந்த துடைத்து நிமிர்ந்து அவளிடம்,
”நீ போய் வேலையை பாருடா கண்ணம்மா. நா மாமியார் வர்றதுக்குள்ள ரெடியாய்ட்டு வரேன். பர்ஸ்ட் இம்ப்ரஷன் ரொம்பவே முக்கியம் இல்லையா.”, கன்னம் கிள்ளி தோள்தட்டி அனுப்பி வைத்தான்.
எட்டரை மணியளவில் திவா காலை உணவிற்காக உணவு மேஜையில் அமர்ந்திருக்க சிந்தாம்மா கொண்டு வந்து வைத்த உணவை வெண்பா பரிமாறிக் கொண்டிருந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மூவருமாய் வீட்டிலிருக்க ஏதோ பேசிச் சிரித்தப்படி உணவருந்த ஆரம்பித்திருந்தான் திவ்யாந்த்.
சரியாய் அந்த நேரம் அழைப்பு மணி ஒலிக்க மூவருமாய் வாசலைப் பார்த்தனர்.
ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணி ஆடம்பரத்தோடு ஆணவமாய் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க நின்றிருக்க வெண்பா தான் வாசலை நோக்கி ஓடினாள்.
“ம்மா…”
“ஹாய் வெண்பா டார்லிங்.”, என்றவரின் முகத்தில் ஒப்பனைக்கும் புன்னகை என்ற ஒன்றிருக்கவில்லை.
அதுவும் இத்தனை வருடம் கழித்து பார்க்கும் மகளை ஆரத்தழுவி சேர்த்துக் கொள்ளும் எண்ணம் என்ற ஒன்று இல்லவேயில்லை.
“எப்படிமா இருக்க. ”
“எனக்கு என்ன ராணி மாதிரி சந்தோஷமா இருக்கேன். ஆனா நீதான் இப்படி எலிப் பொந்து மாதிரி ஒரு வீட்ல உக்காந்துட்டு ஓகாட்.
இந்த அப்பார்மெண்டை கண்டுபிடிக்குறதுக்குள்ள.
யோசிச்சு பாரு நம்ம வீடு இந்த மொத்த அப்பார்ட்மெண்டை விட பெரிசு. என்னவோ போ.”, எனும்போதே திவா கை கழுவிவிட்டு அங்கு வர பேச்சை அப்படியே நிறுத்தியவர் வந்தவனை அளவெடுக்க ஆரம்பித்திருந்தார்.
“வாங்க அத்தை. ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது?இது என் அம்மா சிந்தாமணி. ”
“வாங்க சம்மந்திம்மா. எப்படியிருக்கீங்க. ”
“தலையெழுத்து இவளுக்கெல்லாம் நா சம்மந்தியா. எல்லாம் நா பெத்ததை சொல்லணும்.
ஊருல வேற ஆளேயில்லனு இப்படி ஒரு கூட்டத்துல வந்து மாட்டிருக்கா பாரு. கடவுளே. ”
“ம்ம் ஹாய் ஐ அம் சுலோச்சனா. நீங்க தான் திவ்யாந்தா?”
வெண்பாவிற்கே சற்று எரிச்சல் வந்துவிட்டிருந்தது. மருமகன் என்ற மரியாதையின்றி என்ன பேச்சு இது.
வந்த பத்து நிமிஷத்துக்கே மூச்சு மண்டியது வெண்பாவிற்கு.
சிந்தாம்மாவிற்கோ ஏனோ அவரை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது.
இருந்தும் இயற்கையாகவே யாரையும் குறைகூறி அறிந்திராதவர் அதை தனக்குள்ளேயே அப்படியே வைத்துக் கொண்டார்.
திவ்யாந்திற்கோ நிச்சயமாய் அவர் சாதாரணமாக மகளை காண வரவில்லையோ என்றே தோன்றியது.
அதிலும் ஒரு மருத்துவனாய் அவர் உடல்நலனில் எந்தபிணக்கும் இல்லையோ என்றுதான் தோன்றியது.
இருந்தும் அவனும் தன் வெண்பாவின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக அமைதி காத்தான்.
இப்படியாய் மூவரும் அவரவர் மனநிலையில் இருக்க அதற்குள் சுலோச்சனா சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தார்.
“வாம்மா சாப்ட்டுடே பேசலாமே. உனக்கு பிடிச்ச பொங்கல் கொத்சு செஞ்சுருக்கேன்”
“ஹா. நா வரும்போதே ஹோட்டல சாப்ட்டு தான் வந்தேன்.
ஆமா நீங்க மூணு பேர் மட்டும் தானா?வேலைக்கு மெய்ட் எல்லாம் இல்லையா?நீயா சமைக்குற உனக்கு அதெல்லாம் செட் ஆகாதே?”
“ம்மா இது இன்னைக்கு பண்றது இல்ல. நாம வீட்டை விட்டு வந்ததிலிருந்து பண்றது.
இங்கயாவது எனக்கு சிந்தாம்மா ஹெல்ப் பண்ணுவாங்க கல்யாணத்துக்கு முன்னாடி வரை நானே தான எல்லாம் பாத்துக்கணும். ”
“என்ன இது மாமியாரை இப்படி பேர் சொல்லி கூப்பிடுற அத்தைனு சொல்ல மாட்டியா?”
தலை சுற்றியது வெண்பாவிற்கு வந்ததிலிருந்து அவரின் அளவிடும் பார்வையே பாதி கோபத்தை கிளப்பியிருக்க இப்படி தொடதிற்கெல்லாம் தேவையற்ற ஆராய்ச்சி கேள்வி அதைவிட படுத்தி எடுத்தது.
அதைவிடவும் கொடுமை திவ்யாந்தையோ சிந்தாம்மாவையோ பார்த்து ஒரு வார்த்தை பேசியிருக்காதது.
அந்த நேரம் திவ்யாந்திற்கு அலைப்பேசி அழைப்பு வர அவன் தங்கள் அறைக்குள் நுழைந்து கொள்ள சிந்தாமணி அம்மாவும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
“ஏன்மா ஏன் மா இப்படியிருக்க உடம்பு சரியில்லனா கூட உன் குணம் கொஞ்சமும் மாறவேயில்லையே.
அவங்க முன்னாடி இப்படியா நடந்துப்ப. மருமகனாச்சேனு கொஞ்சமாவது மனசுல நினைப்பு இருக்கா?”
“ஹே வெண்பா எப்போ இருந்து நீ இப்படி ஆன. கடஞ்செடுத்த பட்டிக்காடு மாதிரி பேசிட்டு இருக்க.
இந்திய வாழ்க்கை உன்னை ரொம்வே மாத்திருச்சு போல. ஹம்ம்ம் சரி லீவ் இட் அப்பா உன்னோட பேசணும்னு சொன்னாங்க. வீடியோ கால் போட்றேன் பேசு. ”
அழைப்பு ஏற்கப்பட்டு திரையில் தன் தந்தையை கண்டவளுக்கு கண்களில் நீர்கோர்க்க குரல் உடைந்து பேச எத்தனித்த நேரம் அவரருகில் இருந்து புதியவன் ஒருவன் ஹாய் என்றான்.
சட்டென தன்னை தேற்றியவள் வரவழைக்கப்பட்ட புன்னகையை அவனுக்கு பதிலளித்துவிட்டு தந்தை புறம் திரும்பி,
“எப்படிப்பா இருக்கீங்க. ”
“நா நல்லாயிருக்கேன் வெண்பா. நீ எப்படி இருக்க?இவரு நம்ம பிஸினஸ் பார்ட்னர் கிஷோர்.
நம்ம வீட்டுக்கு வந்தா எப்பவும் உன்னைப் பத்தி தான் விசாரிப்பார். ”
“ஓ. ஹாய். ஹவ் ஆர் யூ. ”
“டூயிங் குட். ஹவ் ஆர் யூ மிஸ் வெண்பா. யூ ஆர் கார்ஜியஸ். ”
“நாட். ”
“ஓ. சரிங்க நா அப்பறமா கால் பண்றேன் பொறுமையா பேசலாம். நானே இப்போ தான் வந்துருக்கேன். வச்சுட்றேன். ”
வெண்பா வாய் திறப்பதற்குள் அவரே அழைப்பை துண்டித்திருந்தார்.
“என்னம்மா என்ன தான் ஆச்சு உனக்கு. ஏன் ஏதோ பரபரப்பாவே இருக்க. ”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. ட்ராவல் டயர்ட்னு நினைக்குறேன். சரி சொல்லு எப்படியிருக்க சந்தோஷமா இருக்கியா?
கல்யாணம் ஆகி வருஷம் ஆச்சு இல்ல. எதுவும் நல்ல செய்தி இருக்கா. இல்ல இப்போதைக்கு வேண்டாம்னு தள்ளி வச்சுருக்கீங்களா?”
“ஐயோ ம்மா. திஸ் இஸ் த லிமிட். என்ன பேச்சு பேசிட்டு இருக்க. அதெல்லாம் என் பெர்சனல் இப்படி ஓபனா கேட்டுட்டு இருக்க.
இதுமட்டும் ரொம்ப டீசெண்டா இருக்கா உனக்கு?”, கிட்டதட்ட கத்த ஆரம்பித்திருந்தாள் வெண்பா.
“ஏன் வெண்பா அம்மாவை தப்பாவே நினைக்குற. செத்து பொழச்சு வந்துருக்கேன். அடுத்து எப்போ என்ன ஆகுமோனு பயம் கிடந்து பாடா படுத்துது.
அதான் அதுகுள்ள அத்தனை நல்லது கெட்டதும் பாத்துரணும்னு மனசு துடிக்குது.
என்ன தான் நா பொறுப்பான அம்மாவா இல்லாம போனாலும் அம்மா இல்லனு ஆய்டுமா.
என் பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்குனு தெரிய வேணாமா. ”
“ப்ச்ச் சாரிம்மா. இப்போ எதுக்கு தேவையில்லாதத பேசுற. அதெல்லாம் நீ இன்னும் ரொம்ப வருஷம் நல்லாயிருப்ப.
அப்பறம் என் வாழ்க்கை தான ரொம்ப ரொம்ப அழகாயிருக்கு. இத்தனை வருஷமுமம் இல்லாத அளவு சந்தோஷமா இருக்கு. சொல்ல கஷ்டமா தான் இருக்கு ஆனாலும் பெருமையா சொல்றேன் நீயும் அப்பாவும் கூட என்னை இப்படி பாத்துகிட்டது இல்ல போதுமா.
அந்தளவு திவா என்னை பாத்துக்குறாரு. சந்தேகம் எல்லாம் தீர்ந்துதா இனியாவது காபி டீ எதாவது சாப்டு வா. ”
அதன்பின் சில பல நிமிடங்கள் அமர்ந்து அவளோடு பேசிவிட்டு அவர் கிளம்ப சிந்தாம்மா மட்டும் மரியாதைக்காய் ஹாலிற்கு வந்து வழியனுப்பி வைத்தார்.
வெண்பாவிற்கு தங்களறைக்குச் செல்லவே தர்ம சங்கடமாக இருந்தது. என்ன சொல்லி திவாவை சமாதானப்படுத்துவது என யோசித்தவாறே கதவை திறந்தளுக்கு முதுகுகாட்டி அமர்ந்து இன்னமும் அலைப்பேசியில் பேசிக் கொண்டுதான் இருந்தான்.
அமைதியாய் கட்டிலில் அமர்ந்தவள் தன்னை மறந்து ஏதோ சிந்தித்து கொண்டிருக்க அழைப்பை முடித்து வந்தவன் லேசாய் அவள் தோள் தட்டி உயிர்ப்பித்தான்.
“கண்ணம்மா. அம்மா கிளம்பிடாங்களா?சாரிடா முக்கியமான கால் கட் பண்ண முடில. ”
அவளின் திவாவை பற்றி தெரிந்தும் தான் பயந்தது தவறோ என்றே எண்ணிணாள்.
எந்த கோபமோ கடுப்போ எதுவும் இல்லை அவனிடத்தில்.
“சாரி திவா. அம்மா அப்படி பிகேவ் பண்ணுவாங்கனு. ”
“கமான் கண்ணம்மா. உன்னோட அம்மா அந்த ஒரு விஷயம் போதும் அவங்க எப்படி பிகேவ் பண்ணாலும் நான் கவலைபட மாட்டேன்.
ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் பாத்துருக்க அவங்களை இங்கேயே ஸ்டே பண்ண சொல்லு டா. பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். ”
“இல்ல திவா நானும் எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன் ஆனா பிடிவாதமா ஹோட்டல்ல தான் தங்குவேன்னு சொல்லிட்டாங்க.
டெய்லி இங்க வந்துட்டு போறேன்னு சொல்றாங்க. இன்னைக்கு அவங்க நடந்துகிட்டத பாத்தா அதுவே நல்லதுனு தான் தோணுது. ”
“என்ன கண்ணம்மா. ஒருசின்ன விஷயம் அதுக்கு இவ்ளோ அப்செட் ஆகுற. ”
“இல்ல திவா. சிந்தாம்மாவ பேஸ் பண்ணவே கஷ்டமாயிருக்கு. என்ன நினைச்சுருப்பாங்க.
இன்னும் டெய்லி இப்படி ஒரு நிலைமைனா ரொம்ப கஷ்டம். இன்னைக்காவது நீங்க வீட்ல இருக்கீங்க.
நாளைக்கு நீங்க வேலைக்கு போய்ட்ட அப்பறம் எனக்கு இவங்க ரெண்டு பேரையும் பேலண்ஸ் பண்ண முடியும்னு தோணவேயில்ல.
கண்டிப்பா சிந்தாம்மா அமைதியா தான் இருப்பாங்க ஆனா எங்கம்மாவால சும்மா இருக்க முடியாது. அதாவது சண்டை வந்துருமோனு மனசு பதட்டமாவே இருக்கு. ”
அவளருகில் அமர்ந்து ஆதரவாய் தோள் பற்றிக் கொண்டவன்,
”ரொம்ப போட்டு குழப்பிக்காத டா. கோ வித் அ ப்ஃளோ அவ்ளோதான். நாம நினைச்சு எதுவும் மாற போறதில்ல.
இல்ல உனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருந்தா டெய்லி அவங்களை கூட்டிட்டு எங்கேயாவது வெளில போய்ட்டு வாடா.
இல்ல நீ போய் அவங்களோட ஹோட்டல இருந்துட்டு வா. எனிதிங் இஸ் பைன் பார் மீ. நீ ரிலாக்ஸ்டா இருந்தா போதும். சரியா?”
வழக்கம்போல் அவன் அன்பில் கரைந்துருகித்தான் போக முடிந்தது வெண்பாவால்.
குழந்தையாய் அவன் கூறிய அனைத்திற்கும் தலையசைத்தவள் இன்னுமாய் அவனை தன்னோடு சேர்த்துக் கொண்டாள்.
மறுநாள் காலை வழக்கம்போல் திவ்யாந்த் சீக்கிரமே கிளம்பிச் சென்றுவிட பொறுமையாய் எழுந்து தயாரானவள் சிந்தாம்மாவோடு அமர்ந்து காலை உணவை முடித்துவிட்டு நடனப்பள்ளிக்கு கிளம்பினாள்.
அதற்குமுன் மறக்காமல் சுலோச்சனாவிற்கு அழைத்து தானே வகுப்பு முடிந்து அவரை சந்திக்க வருவதாய் கூறினாள்.
மதியம் வரை வகுப்பை முடித்தவள் விடுப்பு கூறிவிட்டு கிளம்பி தாய் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றாள்.
“ஹே வெண்பா டியர். என்ன இது இந்த கோலத்துல வந்து நிக்குற ஓ காட் கொஞ்சமும் ப்யூட்டி கான்ஷியஸே இல்லாம போச்சு உனக்கு. ”
“ஹா ம்மா. வந்தவுடனே ஆரம்பிக்காத. வெயில வந்தது தலை வலிக்குது. ப்ளீஸ் சாப்ட எதாவது ஆர்டர் பண்ணு. ”
“ம்ம் சரி சரி உக்காரு. ”,என்றவர் அவளுக்காக சிற்றுண்டியை வரவழைத்து அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தார்.
அதன்பின் இன்டர்காமை எடுத்து அங்கிருந்த ப்யூட்டிஷினை வரவழைத்தார்.
“ம்மா. என்ன பண்ண போற. இதெல்லாம் ஒண்ணும் வேணாம். ”
‘நீ பேசாம இரு வெண்பா. அம்மாக்கு தெரியும். ”,என்றவர் அவளுக்கு பேஷியல் மெனிக்யூர் பெடிக்யூர் என அனைத்தையும் பண்ண சொல்ல அடுத்து வந்த மணி நேரங்கள் அப்படியே கரைந்தது.
துபாயில் இருந்தவரை இதெல்லாம் வெண்பாவிற்கு வழக்கமான விஷயம்தான். அம்மாவும் அக்காவும் செய்துகொள்ளும் போது தானும் செய்ய வேண்டுமென்றே பழகிப் போனவள் தான்.
ஆனால் இந்தியா வந்தபிறகே அதன் ஆடம்பரம் புரிந்தது. அதுமட்டுமில்லாமல் தன் வருமானத்திற்கு இது கட்டுப்படி ஆகாது என நிறுத்திவிட்டாள்.
அதிகபட்சம் சாதாரண பார்லருக்குச் சென்று த்ரெட்டிங் செய்து வருவாள் அவ்வளவே.
இன்று இந்த நட்சத்திர ஹோட்டல் அனுபவமும் அவர்களின் செய்முறையும் மனதை வெகுவாய் இலகுவாக்கி இருந்தது வெண்பாவிற்கு.
அனைத்தும் முடிந்தபின் தன்னை கண்ணாடியை பார்த்தவளுக்கு இன்று திவா தன்னை கண்டால் எப்படி ரியாக்ட் செய்வான் என்ற கேள்வியே முதலாய் வந்தது.
“வாவ் வெண்பா பாத்தியா எப்படியிருக்க வேண்டிய பொண்ணு இவ்ளோ நாள் எப்படியிருந்துருக்க. ”
“ம்ம் ஆமா ம்மா உண்மையா ரொம்ப ரிலாக்ஸ்டா பீல் பண்றேன்.
இன்னைக்கு திவா என்னை பார்த்தா அவ்ளோதான் அப்படியே ஷாக் ஆகப் போறாரு. ”
“ம்ம் நியாயமா இதெல்லாம் அவரு தான் பண்ணிருக்கனும். பெரிய டாக்டர் ஆகா ஓகோனு சொன்னா பத்தாது. ”
“ம்மா இதெல்லாம் எனக்கு தேவைனு படல பண்ணிக்கல அவ்ளோ தான்.
அப்படியே நா கேட்டுருந்தாலும் திவா ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிருக்க மாட்டாரு. ”
“அப்படி என்ன காதலோ அம்மாகிட்ட கூட விட்டுக் கொடுக்க முடில…ம்ம்ம். ”
“சரி ம்மா நா கிளம்புறேன். ரொம்ப லேட் ஆச்சு நாளைக்கு நா லீவ் தான் மார்னிங் வரேன் நாம எங்கேயாவது வெளில போலாம். ”
“ம்ம் ஓகே ஷுவர். ”
வீட்டிற்கு வந்தவளை சிந்தாம்மா கண்ணில் ஆச்சரியத்தோடு பார்த்தார்.
”பாப்பா ஒரே நாள்ல ஆளே மாறிட்ட. அழகாயிருக்க கண்ணு. சுத்தி போடனும் தம்பி வரட்டும். ”, என்று திருஷ்டி கழித்துச் சென்றார்.
ஒருவித எதிர்பார்ப்போடே முகம் கழுவி உடைமாற்றியவள் ஜன்னல் வழியே பார்க்கிங்கை வெறித்திருந்தாள்.
சில நிமிடங்களில் திவ்யாந்தின் கார் வர வேகமாய் தன்னை கண்ணாடியில் சரிபார்த்தவளுக்கு தன்னை நினைத்தே சிரிப்பாய் இருந்தது.
வழக்கம் போல் சிந்தாம்மாவிடம் இண்டொரு நிமிடம் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்தவனுக்கு முதுகு காட்டி கைகளை பிசைந்தவாறே நின்றிருந்தவளை கண்டு ஒரு நொடி குழம்பியவனாய்,
“கண்ணம்மா என்னாச்சு?”,எனக் கேட்க விழிகளில் மின்னிய ஆர்வத்தோடு அவன்புறம் திரும்பினாள்.
அடுத்த நொடி திவ்யாந்தின் கண்களில் ஒரு ரசனைப் பார்வை குடிக் கொண்டது.
“என்ன டா இது என் மாமியார் வந்த இரண்டாவது நாளே என் பொண்டாட்டியை இப்படி மாத்திட்டாங்க. ”, என விளையாட்டாய் கூறினாலும் கைநீட்டி அவளை தன்புறம் இழுத்தவன் இடைப்பற்றி இன்னுமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
“நான் வேண்டாம்னு தான் சொன்னேன் அம்மா தான். ஆனா முடிச்ச அப்பறம் பார்த்தா எனக்கே கொஞ்சம் ப்ரஷ் பீல் திவா.
மேபி ரொம்ப நாளுக்கு அப்பறம் ப்யூட்டி கேர் எடுத்ததுனால ஐ அம் பீலிங் சில்லி நிஜமா.
நீங்க எப்போ வருவீங்கனு பாத்துட்டே இருந்தேன் தெரியுமா.
எனக்கே சிரிப்பு வந்துருச்சு ஏதோ நியூலி மேரிட் மாதிரி பிகேவ் பண்றோமேனு. ”
அவள்போக்கில் பேசிக் கொண்டிருக்க திவாவோ மொத்தமாய் அவளிடம் தொலைந்து கொண்டிருந்தான்.
“எத்தனை வருஷம் ஆனாலும் நீ எனக்கு புதுப் பொண்டாட்டி தான் கண்ணம்மா.
எனக்கே எனக்கான என் காதல் கண்ணம்மா. ”, விரல்கள் அதுவாய் கன்னம் அழுத்த பேச்சின் சத்தம் குறைந்து விரல்களின் பாஷை அதிகரித்திருந்தது.
வெகு நாட்களுக்குப் பிறகான ஒரு இலகுநிலையை இருவருமே மனசார உணர்ந்திருந்தனர்.
கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவனின் காதுகளில் மென்மையாய், ”மிஸ்ட் யூ சோ மச் திவா. ”
“கண்ணம்மா. ”, அவளின் குரல் திவ்யாந்தை ஏதோ செய்தது.
நிமிர்ந்து அவள் முகம் பார்க்க முயற்ச்சித்தவனை விடாமல் மேலும் தன்மேல் சாய்த்துக் கொண்டவளுக்கு கண்களில் நீர் கோர்த்திருந்தது.
“தெரில திவா. என்ன சொல்லறதுனு தெரில ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் திவா.
இப்போ இந்த செகண்ட் கூட அப்படியே உங்களை எனக்குள்ள ஒளிச்சு வச்சுக்கணும்னு தோணுது.
எங்கேயும் போகவிடாம என்னை விட்டுநகர விடாம பிடிச்சு வச்சுக்கணும்னு தோணுது.
நா ஏன் இப்படி ஆய்ட்டேன்னு எனக்கே தெரில. கண்டிப்பா நீங்க என்கூடவே இருக்க முடியாது தான்.
ஆனா பார்த்து பேச கூட முடியாத அளவு ஒருநாள் நகரும்போது மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு திவா.
லவ் யூ லவ் யூ லவ் யூ”, என்றவள் அவன் முகம் மொத்தமும் இதழ் பதித்திருந்தாள்.
“கண்ணம்மா. ரிலாக்ஸ். நீ சொல்லிட்ட நா சொல்லல அவ்ளோ தான்.
ஒவ்வொரு நிமிஷமும் உன் நினைப்பு மட்டும் தான் டா என்னை நடமாட வச்சுட்டு இருக்கு. சில தவிர்க்க முடியாத காரணத்துனால தான் இதை பாதில விட முடில மிஞ்சி போனா ஒரு பத்து நாள் டா.
அதுக்கப்பறம் நாம கண்டிப்பா ஒரு ட்ரிப் போய்ட்டு வரலாம். நமக்கே நமக்கான நேரம். சரியா. ப்ளீஸ் நீ அழாத. என்னால தாங்கிக்க முடியாது டா. ”
இன்னுமாய் அவனோடு இறுகிக் கொண்டவளை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் முதுகை ஆதரவாய் தடவியன் மென்மையாய் அவள் செவிகளில் இதழ் உரச,
“தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!”
சட்டென அவன் விழி கண்டவள் சிறிதும் தாமதியாது தன் அதரங்களை அவனோடு இணைத்திருந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
💞💞💞💞💞💞
Nice👍
Nice