அந்த ஒரு வார காலத்தில் வெண்பா மிகவுமே சோர்ந்து போனாள்.

திவ்யாந்துடன் சேர்ந்து வாழவில்லை எனினும் அவன் எங்கோ தன்னருகில் தான் இருக்கிறான் என்றே உணர்வே அவளை இன்னும் உயிர்ப்பாய் வைத்திருக்கிறது அப்படியிருக்க அவன் தன்னைவிட்டு பிரிந்துவிட்டால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா என தன்னைத் தானே ஆயிரம் முறை கேட்டுவிட்டாள்.

இப்படிதான் திருமணமான புதிதில் ஒருமுறை ஒரு கான்ஃரென்ஸிற்காக திவ்யாந்த் யூரோப் செல்ல வேண்டியிருந்தது.

முதலில் தைரியமாய் சரி என்று கூறிவிட்டவளால் அவன் கிளம்பும் அன்று சாதாரணமாக இருக்க முடியவில்லை.

இருந்தும் கிளம்பும் நேரத்தில் கண்ணை கசக்கினால் நன்றாக இருக்காது என மனதை கட்டுப்படுத்தியவள் வலுகட்டாயமாக சிரிப்பை உதட்டில் ஒட்டிக் கொண்டு அவனை வழியனுப்பி வைத்தாள்.

சிந்தாம்மாவிடமும் சாதாரணமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டவள் இரவு தனதறைக்கு வந்து அழுதழுது ஓய்ந்து போனாள்.

அந்த ஒருவார காலமும் ஒழுங்காய் சாப்பிடாமல் தூங்காமல் ஆளே மாறிப் போனாள். அவளுக்கே வியப்பாய் தான் இருந்தது.

“இது என்ன சின்ன பிள்ளை மாதிரி இப்டி ஆய்ட்டேன் நா. சிந்தாம்மா என்ன நினைப்பாங்க. ”

சிந்தாம்மாவிற்கு அவள் நிலைமை புரிந்தாலும் திவ்யாந்தின் இந்த மாதிரி பயணங்களை அவன் தவிர்க்க இயலாது நிச்சயம் இவள் பழகிதான் ஆக வேண்டும் என்பதாலேயே அவளை முடிந்தவரை தேற்றினார்.

ஒன்றுக்கும் சமன்படாத மனதின் விழைவு சரியாய் திவ்யாந்த் ஊரிலிருந்து வரும் அன்று அப்படியான ஒரு காய்ச்சலில் விழுந்தாள்.

அதிகாலை 2 மணியளவில் வந்தவன் நிச்சயம் தனக்காக காத்திருந்து வந்து அவள்தான் கதவை திறப்பாள் என்ற ஆவலோடு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க சிந்தாம்மா தான் வந்து திறந்தார்.

“வாப்பா. பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்துதா. ”

“ம்ம் மா. எப்பவும் போல தான். நீங்க இன்னும் தூங்கலயா வெண்பா எங்க. ”

“பாப்பா என்ன படுத்துக்க சொல்லிட்டு தான் போச்சு ததண்ணி குடிக்கலாம்னு எழுந்தப்போ பாத்தா பாப்பா எழுந்த மாதிரியே தெரில அதான் நா அப்படியே உக்காந்துட்டேன்.

பாவம் கண்ணு நீயில்லாம தவிச்சு போச்சு. நீயே போய் பாரு வாடிப் போன பூவாட்டம் ஆயிட்டா. ”

“ம்ம் சரிம்மா நா பாத்துக்குறேன் நீங்க படுத்துக்கோங்க.”, என்றவனுக்கு தன்னவளை அள்ளி அணைத்துக் கொள்ள மனம் பரபரத்தது.

மெதுவாய் கதவை திறந்து  உள்ளே பார்த்தவனுக்கு இரவு விளக்கு வெளிச்சத்தில் போர்வையை கழுத்துவரை போர்த்தி ஒரு பக்கமாய் திரும்பி படுத்திருந்தவளை பார்த்து ஏதோ மனம் உறுத்த சட்டென அவளருகில் சென்று அமர்ந்தான்.

“கண்ணம்மா. ”

“திவா. மிஸ் யூ. ”, அத்தனை தூக்கத்திலும் அப்படி அவள் சட்டென கூறியதை கேட்டவனுக்கு மனம் இறகாய் இதமளிக்க அவள் கன்னம் தொட்டவன் அதிர்ந்து போனான்.

காய்ச்சல் அனலாய் அடிக்க அதன் தாக்கத்தில் தான் அவள் அனத்துகிறாள் என்பதே அப்போது தான் புரிந்தது.

ஒரு வாரத்திற்குள் இப்படி உடம்பை கெடுத்துக் கொண்டாளே என மனம் பாடாய்பட்டது.

கிட்சனிற்கு சென்றவன் சிந்தாம்மாவை எழுப்ப மனமின்றி தானே வெந்நீர் சூடுசெய்து எடுத்து வந்தான்.

சிறு கைக்குட்டையை நீரில் நனைத்து அவள் நெற்றியில் வைத்து ஒத்திக் கொடுத்தான்.

தெர்மாமீட்டரில் டெம்பரேச்சர் பார்க்க 102° காட்டியது. அப்படியே அவளை தன்புறம் திருப்பி தன் மார்போடு சேர்த்து அணைத்து வைத்துக் கொண்டான்.

அப்படியே அத்தனை வெப்பத்தையும் தனக்குள் எடுத்துவிட முடியாதா என்பது மாதிரியான தவிப்பை தாங்கியிருந்தது அந்த அணைப்பு.

விடிய விடிய துளியும் தூங்காமல் தன்னவளை தொட்டு தொட்டு பார்த்தவாறு அவனிருக்க வெண்பாவோ கூடுகண்டுவிட்ட பறவையாய் அவன் கையணைப்பில் தான் தொலைத்த ஒருவார தூக்கத்தையும் கண்டெடுத்து நிம்மதியடைந்தாள்.

அதிகாலையில் சூடு நன்றாகவே குறைந்திருக்க அந்த நிம்மதியும் பயணக் களைப்புமாய் சேர்ந்து திவ்யாந்தை சற்றே கண்ணயர வைத்தது.

லேசாய் விழிப்பு வந்தவளுக்கு தன்னவனின் வாசம் நாசியை தொட்ட அடுத்த நொடி சிறு அசைவுகூட இல்லாமல் அப்படியே படுத்துக் கொண்டாள்.

எங்கே தன்னிடமிருந்து பொம்மையை பறித்து விடுவார்களோ என்பது போன்ற குழந்தையின் பாவம் ஒருபுறம் எனில் தன் சிறு நெளிவும் தன்னவனின் தூக்கத்தை கலைத்துவிடும் என்ற பயத்தினாலேயே துளியும் அசையாது கண்மூடி அவன் அருகாமையை உணர்ந்து உணர்ந்து மனம் தேறினாள்.

ஏழுமணியளவில் கண்விழித்தவன் அவள் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்து காய்ச்சல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

“திவா. ”

“கண்ணம்மா. எப்படிடா இருக்க ஒரு வாரத்துக்குள்ள என்ன வேலை பண்ணி வச்சுருக்க பாத்து பயந்துட்டேன் டா. ”

“சாரி திவா. எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால மைண்டை மாத்தவே முடில மொத்தமும் உங்க நியாபகம் தான்.

அதை உங்ககிட்டேயும் காட்டிக்காம மனசுலயே வச்சுருந்தது காய்ச்சல்ல கொண்டுபோய் விட்டுருச்சு போல. இனி இப்படி பண்ண மாட்டேன் திவா. ப்ராமிஸ். ”

“கண்ணம்மா இனி நானும் எங்கேயும் உன்னை விட்டு போறதாயில்ல.

சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நா போய் சிந்தாம்மாகிட்ட காபி வாங்கி கொண்டு வரேன். ”

“ரெஸ்டா அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ஐ அம் பெர்பெக்ட்லி ஆல் ரைட். நீங்க தான் டயர்டா தெரியுறீங்க ஒழுங்கா நா தர்ற காபியை சாப்ட்டு தூங்குங்க. ”, என்றவள் எழுந்து நகர நினைத்த நொடி அவளை தன்புறம் இழுத்து நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன்,

”மிஸ்ட் யூ சோ மச் கண்ணம்மா.”, என்று கூறி அப்படியே படுத்து கொண்டான்.

சிவந்திருந்த அவன் கண்களும் சோர்வான முகமுமே இரவு அவன் தூங்காததை தெரிவிக்க வேகமாய் அவனுக்கான காபியை வாங்கச் சென்றாள்.

அதை அவனுக்கு கொடுத்து தூங்க வைத்தே பின்னே தனக்கான தேவையை கவனிக்கச் சென்றவளை சிந்தாம்மா புன்னகையோடு பார்த்திருக்க சிறு பிள்ளையாய் தலையை சொரிந்து கொண்டு நின்றாள்.

“நல்ல பிள்ளைங்க ஒரு வாரத்துக்கு நீங்க படுத்துற அட்டகாசம் தாங்க முடில. இருந்தாலும் இதெல்லாம் பாத்து கண்ணும் மனசும் நிறைஞ்சுபோய் இருக்கேன். நூறு வருஷம் நல்லாயிருக்கணும் ரெண்டுபேரும். ”

இத்தனையையும் சிந்தாம்மா இப்போது நினைப்பதற்கு காரணம் நேற்று இரவில் இருந்து விடாத காய்ச்சலில் தவிக்கும் வெண்பாவினால் தான்.

திவ்யாந்த் அவளுக்கு கொடுத்திருந்த பதினைந்து நாட்கள் முடிவடைய இன்னும் இரு தினங்களேயிருக்க அந்த பயத்தில் தான் வெண்பாவின் இன்றைய நிலைமை இது.

காலை பத்து மணி வரையுமே நிலைமை மாறாமல் இருக்க அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் திவ்யாந்தை அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சிந்தாம்மா. என்ன காலையிலேயே கூப்டுருகீங்க?”

“தம்பி வெண்பாக்கு நைட்லேயிருந்து ஒரே ஜுரம். கொஞ்சம் கூட குறையலப்பா. நீ கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?”

“இவளுக்கு இதுவே வேலையா போச்சு. தானும் நிம்மதியை தொலைச்சு என்னையும் உயிரோட கொன்னுட்டு இருக்கா.

இதுக்கு இன்னையோட ஒரு முடிவு கட்றேன். நீங்க பயப்படாதீங்கம்மா. நா கிளம்பிட்டேன். ”, என்றவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

வேகமாய் உள்ளே நுழைந்தவன் சிந்தாம்மாவிடம் விஷயத்தை கேட்டுவிட்டு வேகமாய் அவளறைக்குள் சென்று பார்க்க கண்கள் சொருகி கிடந்தவளை கண்ட  ஒருநொடி அதிர்ந்து தான் போனான்.

அவசரமாய் அவளை கைகளில் ஏந்தியவன் காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சிந்தாம்மா மடியில் படுக்க வைத்தவாறு வீட்டை பூட்டிவிட்டு காரை கிளப்பினான்.

மருத்துவமனையை அடைந்து அவளை கைகளில் ஏந்தியவாறே உள்ளே சென்றவனை கண்டு பதறியவர்களாய் அங்கிருந்த நர்ஸ் மருத்துவர் அறைக்குச் செல்ல அனுமதித்தனர்.

பரிசோதித்த மருத்துவரோ, ”மிஸ்டர் திவா ரொம்ப வீக்கா இருக்காங்க டெம்பரேச்சர் குறையவே இல்லையா.

இப்போதைக்கு இன்ஜெக்ஷன் போட்றேன். அட்மிட் பண்ணுங்க கொஞ்சம் ட்ரிப்ஸ் ஏறட்டும் அதுக்கப்பறமும் அப்படியே இருந்தா நாம சில டெஸ்ட் எடுக்கலாம்.

நத்திங் டு வொரி. ”, என தோள் தட்டிச் சென்றார்.

அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் ட்ரிப்ஸ் ஏற ஆரம்பித்திருக்க மெதுவாய் அவளருகில் அமர்ந்தவன் அவள் கையை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

மருந்தின் வீரியத்தில் நல்ல உறக்கத்திற்குச் சென்றவள் மெதுவாய் ஏதோ பேச ஆம்பித்திருந்தாள்.

“கண்ணம்மா”

“திவா. எ. ன். ன.  வி. ட். டு. போ. கா. த. ”

“நா உன்னைவிட்டு போனா என் உயிரை நா விடுறதுக்கு சமம் டா. உனக்கு ஏன் புரில.

ஏன் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குற கண்ணம்மா. நா வாழ்றதே உனக்காக தான் டா. ”

என்ன புரிந்ததோ கண்களின் விளிம்பில் கண்ணீர் வழிந்தது அவளிடம். ”தி. வா. என்ன வெ. று. த்து. டுவி. யா. எ. ன்ன. விட். டு. போகா. த. ”

“கண்ணம்மா. ”,என்றவன் அவள்மேல் சாய்ந்து கொள்ள அவன் விழியும் தானாய் கண்ணீரில் கரைய ஆரம்பித்திருந்தது.

மாலை வேளையில் சற்றே காய்ச்சல் குறைந்திருக்க லேசாய் கண் விழித்தவளுக்கு எங்கிருக்கிறோம் என்பதே குழப்பமாய் இருக்க ட்ரிப்ஸ் ஏறிய கையை அசைக்க முடியாமல் வலியில் முகம் சுளிக்கத் திரும்பியவளின் மறுகையை பற்றியவாறு அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் திவ்யாந்த்.

“கண்ணம்மா. ”

“திவா. ”

“ஒண்ணுமில்ல டா சீக்கிமே சரி ஆய்டும். ஏன் உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்திக்குற. ”

“என்னவிட்டு போக போறியா திவா. ”

“அந்த தைரியம் எனக்கு இருக்குனு நினைக்குறியா கண்ணம்மா. ”

“நீ சொன்னியே. ”

“நீ என்னோட வந்துரணும்னு கூடதான் சொன்னேன் அதை ஏன் யோசிக்கல நீ?”

“மனசாட்சி இடம் கொடுக்க மாட்டேங்குது திவா. உன்னையும் சிந்தாம்மாவையும் அவ்ளோ படுத்திட்டு மறுபடியும் அதே இடத்துல அதே வாழ்க்கைக்கு என்ன நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு திவா. ”

“கண்ணம்மா. நீ என் தேவதை டா இன்னோரு தடவை இப்டி பேசாத. நாளைக்கு நாம நம்ம வீட்டுக்கு போறோம் அவ்ளோ தான் புரியுதா. ”

“என்னை மன்னிச்சுட்டியா திவா??”

“என்னை நானே எதுக்கு மன்னிக்கனும் கண்ணம்மா. நானும் நீயும் வேற வேறனு நா எப்பவுமே நினைச்சதில்ல. ”

“இந்த காதல் தான் என்னை குற்றவுணர்ச்சியை மறக்க விடாம பண்ணுது திவா. ”

“போதும்டா நிறைய பேசியாச்சு நிறைய வருத்தப்பட்டாச்சு நிறைய கண்ணீர் விட்டாச்சு கொஞ்சம் தூங்குடா நா கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போய்ட்டு திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு வரேன்.

சிந்தாம்மாவையும் அழைச்சுட்டு போறேன் நீ ரெஸ்ட் எடுடா. ”

அவள் கண்ணயரும் வரை அவளருகிலேயே இருந்தவன் அதன்பின் வெண்பாவின் வீட்டிற்கு சிந்தாம்மாவோடு சென்று அனைத்தையும் பேக் செய்ய ஆரம்பித்தான்.

அவளறைக்குள் வந்தவன் அனைத்தையும் எடுத்து வைக்கத் தொடங்க அலமாரியில் இருந்து ஒரு புடவையை எடுத்தவன் அதிலிருந்து விழியகற்றாமல் கைகளால் வருடிக் கொண்டிருந்தான்.

அவனது முதல் திருமண நாளுக்காக அவனது கண்ணம்மாவிற்கு அவனே பார்த்து பார்த்து வாங்கியிருந்தான்.

அந்த புடவையும் அதன் பின்னான வாழ்க்கையின் முதல்  சலனமும் அவன் முன் நிழலாடியது.

அன்று,

அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா என்ற சிந்தனை தான் வந்தது திவாவிற்கு. ஏனெனில் அந்த 365 நாட்களும் அவன் வாழ்வின் சொம்ம சிப்பனமாக இருந்தது.

காதல் அன்பு இதை தவிர யோசிப்பதற்கு ஒன்றுமே இருந்திருக்கவில்லை.

தன்னவளுக்காக பரிசு வாங்க புடவை கடைக்குச் சென்றவன் பட்டுப்புடவை செக்ஷனில் பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த புடவையை கையில் எடுத்திருந்தான். அழகிய மஞ்சள் வண்ணப்பட்டு தங்க சரிகையோடு பார்த்தவுடன் பிடித்துவிட்டது அவனுக்கு.

அதுமட்டுமில்லாமல் வெண்பாவிற்கும் மஞ்சள் என்றால் விருப்பம் என்பதால் மறு யோசனையின்றி அதை வாங்கிவிட்டிருந்தான்.

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்தவள் திவாவிற்கான காபியோடு வர அதை அவன் கையில் கொடுத்துவிட்டு ஹாப்பி அர்னிவர்சரி திவா. என்றாள்.

“இன்னும் நிறைய நிறைய வருஷம் வேணும் கண்ணம்மா. உன் காதலை உன்னை எனக்கே எனக்காக பத்திரமா வச்சுக்கணும். ”

என்றவனின் நெற்றியில் இதழ் பதித்து எழுந்தவள் அலமாரியை திறந்து ஒருபெட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

இன்னைக்கு இந்த ட்ரெஸ் தான் போட்டுக்கணும் என்று அவனிடம் நீட்ட திறந்து பார்த்தவனின் கண்கள் விரிந்தது.

அழகான லெமன் எல்லோ நிற ஷர்ட்டும் ப்ளாக் பார்மல்ஸும் இருந்தது.

“என்ன திவா பிடிச்சுருக்கா?”

“ரொம்பவே டா. ஆனா அதுக்கு முக்கிய காரணம் என்றவன் தன் பரிசை எடுத்துக் கொடுக்க அதுவும் மஞ்சள் நிறம் என்றதை பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

“ஹே என்ன ஒரு கோஇன்சிடென்ஸ் இல்ல. லவ் யூ சோ மச்”,என்றவள் சலுகையாய் சாய்ந்து கொண்டாள்.

இருவருமாய் புது உடை உடுத்தி சிந்தாம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி எழ,”

அடுத்த வருஷம் மூணு பேரா கல்யாண நாளை கொண்டாடணும்.

சீக்கிரமே நல்ல செய்தி சொல்லு கண்ணு”,என அவள் முகத்தை தழுவிச் சென்றார்.

ஏனோ அந்தநொடி வெண்பாவின் மனம் ஒரு நொடி சுணங்கியது நிஜம்.

இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் திவாவோடு கோவிலுக்கு கிளம்ப அவளின் சிறு கண்ணசைவை கூட கணிப்பவனுக்கு அவளின் மனம் புரியாதா என்ன?

ஆதராவாய் அவள் கைப்பற்றியவாறே காரை செல்லுத்த ஆரம்பித்தவன்,

”என்ன யோசனை கண்ணம்மா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல திவா. சும்மா ஏதோ யோசிச்சுட்டு. ”

“அதான் என்னனு கேக்குறேன்டா. ”

“இல்ல சிந்தாம்மா சொன்ன விஷயம்தான். குழந்தை. ”

“கண்ணம்மா இப்போ தான் ஒரு வருஷமே ஆகியிருக்கு அதுக்குள்ள என்ன இவ்ளோ கவலைபடுற. வர்றப்போ வரட்டும் டா. ”

“கவலைனு இல்லை. ஒரு மாதிரி என்ன சொல்றது. ஒன் இயர் தான் ஆகுது ஆனாலும் நாம இப்போ குழந்தை வேண்டாம்னு நினைக்கலையே திவா. அதான். ஒரு வேளை ப்ராப்ளம் எதாவது. ”

“கண்ணம்மா. ”

“இல்ல திவா இந்த காலத்துல இதெல்லாம் சாதாரணமா வர பிரச்சனை ஆய்டுச்சே. புட் ஹேப்பிட்ஸ் வொர்க் எது வேணாலும் ரீசனா இருக்கலாம் இல்லையா. ”

“பரவால்லையே டாக்டர் பொண்டாட்டினு ப்ரூவ் பண்றியே. .

நீ சொல்றதெல்லாம் சரி தான் பட் நம்ம விஷயத்துல அப்படி ரொம்ப எல்லாம் யோசிக்காத. எல்லாம் நல்லதுதான் நடக்கும்.

இன்னைக்கு டேவை என்ஜாய் பண்ணு. ”,என்றவன் பேச்சை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

அவனின் பேச்சு அவள் காதை எட்டியதே தவிர மனதை தொட்டதாய் தெரியவில்லை. காரை ஓரமாய் நிறுத்தியவன்,

”கண்ணம்மா இப்போ என்ன பண்ணணும்னு நினைக்குற தயங்காம சொல்லு?”

“இல்ல திவா. வந்து ஏன் மெடிக்கல் செக்கப் பண்ணி பாக்க கூடாது. ”

திவாவிற்கும் அது ஒன்றும் தப்பான விஷமாய் தெரியவில்லை தான் இருந்தும் தன்னவளை அப்படி ஒருநிலைக்கு கொண்டு செல்ல மனம் விரும்வில்லை.

இருந்தும் அவளது விருப்பத்தை மதித்துதான் ஆக வேண்டும் என்றெண்ணியவன்,

”சரி டா நாளைக்கு நாம போலாம் ஹேப்பியா. இனியாவது கொஞ்சம் சிரிக்கலாமே?”

“தேங்க் யூ திவா. ”,என்றவள் கைப்பற்றி தோள் சாய்ந்து கொண்டாள்.

அதன் பின்னான அன்றைய தினம் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது வெண்பாவிற்கு.

கோவில் ஹோட்டல் ஷாப்பிங் என மொத்த நாளையும் அவளோடு அவளுக்காக ஒதுக்கியவனின் மேல் காதல் கரை காணாமல் தான் சுழன்று கொண்டு இருந்தது.

ஒரு வருடம்  சண்டையே இல்லாமல் அவ்வளவு ஏன் ஒரு வார்த்தை அவன் அதிர்ந்துகூட பேசியதில்லை அவளிடம்.

இப்படியும் வாழ்க்கை இருக்குமா. இப்படியும் ஒருவனால் இருக்க முடியுமா. இருந்தான் அவளின் திவ்யாந்த்.

மறுநாள் அவனின் மருத்துவமனையிலேயே பரிசோதனைக்காய் வந்திருந்தனர்.

மருத்துவரிடம் ஏற்கனவே அவன் பேசியிருக்க அவர்களை உள்ளே அழைத்த மருத்துவர் பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பின்,

“மிஸஸ் வெண்பா நீங்க சிஸ்டரோட போங்க உங்களை கைட் பண்ணுவாங்க. திவா ஹோப் யூ டோண்ட் நீட் எனி அசிஸ்டன்ஸ்”, என்றவர் சிரிக்க புன்னகையோடே எழுந்தவனை விழி விரிய பார்த்திருந்தாள் வெண்பா.

“திவா நீங்க ஏன்???”

“என்ன கண்ணம்மா நீதான டெஸ்ட் பண்ணிக்கலாம்னு சொன்ன?”

“ஆனா உங்களுக்கு எதுக்கு?”

“இது என்ன கேள்வி ப்ராப்ளம் ரெண்டு பேர்ல யாருக்கு வேணா இருக்கலாம் தான?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நா என் திருப்திக்காக தான்.”, அவளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தன்னவனை இப்படி ஒரு சூழலில் ஏற்க மனம் முரண்டு பிடித்தது.

“கண்ணம்மா எதையும் குழப்பிக்காம போ. ”, என்று தோள்தட்டி அனுப்பி வைத்தவன் தானும் தனக்கான பரிசோதனைக்காகச் சென்றான்.

அனைத்தையும் முடித்து காரில் அமர்ந்தவளுக்கு மனம் இன்னுமே நெருடலாய் இருந்தது.

கொஞ்சமும் வருத்தமின்றி கவலையின்றி அவன் வேலையிடத்திலேயே இந்த பரிசோதனையை அவனும் செய்து கொண்டது ஏனோ வருத்தமாகவே இருந்தது.

“கண்ணம்மா இதெல்லாம் இங்க சாதாரணம். என்ன நடந்தாலும் நம்ம சீக்ரெட்ஸ் வெளில போகாது கண்டிப்பா. சோ ரிலாக்ஸ். ”

“திவா ஒரு வேளை ஏதாவது ப்ராப்ளம்னு ரிசல்ட் வந்தா என்ன வெறுத்துடுவீங்களா?”

“அதே கேள்வியை நானும் கேட்கலாம் தான?”அத்தனை பொறுமாயாய் அவனின் எதிர்கேள்வி.

தன்புறமாய் இழுத்து ஒற்றை அழுத்தமான அந்த அணைப்பு அத்தனை ஆறுதலைக் கொடுத்திருந்தது அவளுக்கு.

மறுநாள் விடியும் போதே ஒருவித பதட்டம் வெண்பாவை சூழ்ந்திருந்தது.

அவளின் முகத்தை கண்டவன் உறுதியாய் அவளை தன்னுடன் வர வேண்டாம் என்று கூறிவிட்டான்.

மருத்துவ மனைக்குச் சென்று ஒரு மணி நேரத்தில் திரும்பியவனின் முகத்தை வைத்து ஒன்றையும் கணிக்க முடிவில்லை வெண்பாவால்.

அவன் நிதானமடைய நேரம் கொடுத்தவள் மெதுவாய்,

”திவா எங்க ரிப்போர்ட்டை எதையும் காணும்?இன்னும் ரெடிஆகலையா?”

“ம்ம். இல்ல கண்ணம்மா எடூத்துட்டு வர மறந்துட்டேன். என் ரூம்லயே விட்டுட்டு வந்துட்டேன். ”

“ஏன் என்னாச்சு திவா ரிப்போர்ட்ல என்ன வந்துருக்கு. ?”

“கண்ணம்மா உன் சந்தேகம் சரிதான். காம்ப்ளிகேஷன்ஸ் இருக்குடா  நமக்கு குழந்தை. . ”

சட்டென அவனருகில் அமர்ந்தவள் வெறித்து விழிக்க அவனே தொடர்ந்தான்.

“சாரி கண்ணம்மா. என்கிட்ட இப்படி ஒரு குறை இருக்கும்னு நினைக்கவே இல்ல. ”

“திவா!!!!!”

“ஆமாடா ப்ராப்ளம் எனக்குதான். ட்ரீட்மெண்ட் பார்க்கலாம் ஆனா எந்தளவு பாசிட்டிவ் ரிசல்ட் வரும்னு சொல்ல முடியாதுனு சொல்றாங்க. ”, உணர்ச்சி துடைத்த முகமாய் தான் அனைத்தையும் கூறினான்.

அடுத்த நொடி அவன் காலருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் முககத்தை கைகளில் ஏந்திக் கொண்டாள்.

“திவா நா இருக்கேன் உனக்கு. நீ எதையும் போட்டு நினைச்சு கஷ்டப்படாத. ப்ளீஸ். ”

“கண்ணம்மா!!”,என்றவன் கண்கள் பனிக்க அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

srichitra October 2, 2026 - 9:42 am

Nice

Kavi Natarajan October 2, 2026 - 10:06 am

💞💞💞💞💞💞💞

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode