தூரத்தில் கேட்ட சிறுவர்களின் குரலில் கலைந்தவன் தலையை உலுக்கியவாறு கடற்கரையிலிருந்து கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் இன்னுமே படபடப்பாய் தான் இருந்தது. அந்த ரௌடிகளிடம் சிக்கியது ஒரு காரணம் எனில் திவாவின் அருகாமை தந்த பதட்டமே அதிகம்.

அத்தனை மாதங்களில் சற்று தெம்பாய் இருப்பதாய் நினைத்த இதயம் எத்தனை பலகீனமாக உள்ளது என்பதை இன்றே உணர்ந்திருந்தாள் வெண்பா.

அவன் கூறியது போல் இன்னும் பதினைந்து தினங்களில் தன்னால் அனைத்தும் மறந்து அவனோடு செல்ல முடியுமா என்பது பெரிய கேள்விக் குறியே.

ஆனால் அப்படி போகாவிட்டால் திவாவின் முடிவு அதை ஏற்றுக் கொள்ளவும் மனம் முடியாமல் பாடாய்பட்டது.

ஏதேதோ காரணம் கூறி இரவு சீக்கிரமே அறைக்குள் சென்று படுத்துக் கொண்டவள் மனபாரம் குறைய அழுது தீர்த்தாள்.

மறுநாள் விடியும்போதே மனதில் ஒருவித பயம் அப்பிக் கொண்டது. அவன் கூறிய பதினைந்து தினங்களில் ஒன்று குறைந்துவிட்டதே என.

சிந்தாம்மாவோடும் பேசத் தோன்றாமல் அமைதியாகவே கிளம்பி நடனப் பள்ளிக்குச் சென்றாள்.

அன்றைய நாள் முழுவதுமே ஒருவித பதட்டத்தோடும் சலிப்போடுமே செல்ல மதியத்திற்கு மேல் தலைவலி எடுக்க ஆரம்பித்தது.

அவள் முகத்தை பார்த்த மற்ற ஆசிரியர்கள் அவளை வீட்டுற்கு கிளம்புமாறு கூற தேவையில்லாமல் சிந்தாம்மாவை வருத்தப்பட வைக்க வேண்டாம் என எண்ணியவள் அங்கேயே ஓய்வறைக்குச் செல்வதாய் கூறிச் சென்றாள்.

சென்று கட்டிலில் படுத்தவளுக்கு அத்தனை நேரம் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த கண்ணீர் அதுவாய் கன்னம் நனைக்க ஆரம்பித்திருந்தது.

அழகான வாழ்க்கை அன்பான கணவன் அனைத்தையும் தானே அழித்துக் கொண்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி மருகி தீர்க்கவே முடிந்தது அவளால்.

அன்று.

சிந்தாம்மாவிடம் உடனே விஷயத்தை கூறி சம்மதம் வாங்குவான் என சற்றும் எதிர்பாராதவளுக்கு மனதில் காதலையும் தாண்டிய அவன் மீதான நம்பிக்கை பலமடங்கு அதிகரித்திருந்தது.

அதன் பின்னான ஒருவார காலம் காதலுக்கும் காதலர்களுக்குமே உரிய செல்ல செல்ல உரையாடல்களோடு இனிமையாய் நகர்ந்தது.

திவ்யாந்த் கிடைத்த நேரங்களில் எல்லாம் அவளோடு குறுஞ்செய்தி வழியாகவோ அழைப்பு விடுத்தோ பேச ஆரம்பித்திருந்தான்.

அவனின் அந்த ஒவ்வொரு அழைப்புமே அவள் மீதான தன் காதலையும் அக்கறையையும் பிரதிபலிப்பதாகவே இருந்தது. அவளின் தனிமையை போக்க எண்ணுகிறான் என்பது நன்றாகவே புரிந்தது.

வெண்பாவுமே அவன் வாழ்வில் கிடைக்காத அத்தனை உறவுகளையும் அவனுக்கு கொடுத்துவிடவே துடித்தாள் இருந்தும் எதோ ஓர் விதத்தில் அவளால் நிச்சயம் திவா அளவிற்கு அன்பை வெளிக்காட்ட முடியாமல் தான் போனது.

இதற்கிடையில் சிந்தாம்மா தனக்கு தெரிந்த ஜோசியரிடம் தேதி கேட்கச் சென்று வந்தார் ஆடி மாதம் நடந்து கொண்டிருக்க அது முடிந்து வரும் முதல் முகூர்த்தமே நன்றாக இருப்பதாய் கூறினார்.

அவருக்கு அந்த தேதியே திருப்தியாய் இருக்க திவாவிடமும் வெண்பாவிடமும் அவர்களின் விருப்பத்தை கேட்க அவர்களுக்குமே சம்மதமாய் இருந்தது.

மிகுந்த ஆடம்பரம் ஏதுமின்றி அதே நேரம் மருத்துவ நண்பர்களை அழைக்க வேண்டியிருப்பதால் ஓரளவு சாதாரணமாய் ஒரு திருமண மண்டபத்தில் எளிமையாய் நடத்தலாம் என முடிவு செய்தனர்.

ஓரளவு திவா வட்டத்தில் விஷயம் தெரிய வர அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதோடு ட்ரீட் பார்ட்டி என அவனை ஒரு வழி ஆக்க ஆரம்பித்தனர்.

இறுதியாய் சரி என ஒத்துக் கொண்டவன் அந்த வார இறுதியில் அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் அனைவருக்குமாய் ஒரு கெட் டூ கெதருக்கு ஏற்பாடு செய்தான்.

“கண்ணம்மா இந்தவாரம் கெட் டூ கெதர் இருக்கு. நாம கொடுக்குற பார்ட்டி தான் சோ நீயும் வரணும். ”

“ஐயோ திவா நானா. எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நிறைய பேர் வருவாங்களா?’

“ஹார்ட்லி ஒரு 30-35 மெம்பர்ஸ் தான். லேடிஸும் வருவாங்க சோ நோ ப்ராப்ளம் டா. அதுமட்டுமில்லாம நா இருக்கேன் அப்பறம் என்ன?”

“ம்ம் ஓ. கே தான் இருந்தாலும். ”

“அட நீயெல்லாம் துபாய் பொண்ணுனு சொல்லிராத. ஒரு கெட்டு கெதருக்கு இவ்ளோ யோசிக்குறியே!”

“யாரு சொன்னா நா துபாய் பொண்ணுனு நா தமிழ்நாட்டு பொண்ணு தான். பக்கா பட்டிகாடு. இதெல்லாம் அலர்ஜியான விஷயம்தான். ”

“என் நாட்டிய மோகினிக்கு எவ்ளோ கோபம் வருது. நான் தான் சொல்றேன்ல நா இருக்கேன்னு அப்பறம் என்ன?”

“ம்ம் ஓ. கே திவா போலாம் டைமிங் அண்ட் அட்ரஸ் டெக்ஸ்ட் பண்ணிடுங்க”

“அதெல்லாம் எதுக்கு என் கண்ணம்மாவை நானே பிக்கப் பண்ணிக்குறேன். சோ சர்டர் டே 7 பி எம் ரெடியா இரு ஓ. கே!பாய் டேக் கேர். ”

அவனின் ஒவ்வொரு கண்ணம்மாவும் அவளை அவன் மீது பித்து கொள்ளச் செய்து கொண்டேயிருந்தது.

அவன் அழைக்கும் போது அதிலிருக்கும் காதல், வாழ்வின் அர்த்தமே நீ என்பதாய் இருக்கும் அந்த உச்சரிப்பு, நீயின்றி நானில்லை என்பதுவான குரல் ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாய் அவனிடத்தில் தன்னை தொலைக்க வைத்தது.

அவனை காதலிப்பதாய் கூறி அவன் காதலை பெற்றுவிட்ட இத்தனை நாட்களில் காதல் என்பதை உணர்ந்ததேயில்லை என்று தான் எண்ணிணாள்.

அதையும் கடந்த அவனின் அக்கறை அன்பு அதையும் கடந்த அவனுக்கு கிடைத்த பொக்கிஷமாகவே அவளை பாவிக்கிறான் என்பது கண்கூடாய் தெரிந்தது.

பிறந்ததில் இருந்து இப்படியான ஒரு பாதுகாப்பு உணர்வையும் கள்ளங்கபடமற்ற அன்பையும் தனக்கே தனக்கான உறவையும் மொத்தமாய் திவாவிடத்தில் உணர்ந்தாள் அவனது வெண்பா.

தனிமையில் வளார்ந்தவனுக்கே உரிய பொறுமையும் மென்மையும் பக்குவமும் அவனது ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது.

அந்த சனிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து சீக்கிரமே வந்தவள் தன்னிடம் இருந்ததில் பார்ட்டிக்கு ஏற்றவாறான ஒரு டிசைனர் புடவையை எடுத்துக் கட்டினாள்.

மிதமான ஒப்பனைகளோடு அழகாய் தயாராகி திவாவிற்கு அழைத்தாள்.

“சொல்லு கண்ணம்மா ரெடி ஆய்டியா?”

“எப்படி திவா நீங்க இத்தனை பொறுமையா அழகா பேசுறீங்க ஓ காட் உங்க குரலுக்கே நான் ப்ளட். ”,இருந்த புத்துணர்வில் துள்ளலாய் அவள் கூற அதை கேட்டவனின் உதடுகளோ அழகான புன்னகையை உதிர்த்தது.

“நா கிளம்பிட்டேன் டா. இன்னும் 10 மினிட்ஸ்ல வந்து நேர்ல உனக்கு பதில் சொல்றேன். பை. ”

போனை வைத்தவளுக்கு அப்போது தான் அறிவுக்கு உரைத்தது. அவனுமே சற்று உற்சாகமாய் இருந்ததாய் தோன்றியதோ!!

காரணம் சில நொடிகள் யோசித்தவளுக்கு சட்டென விஷயம் விளங்கியது காதலர்களாய் முதன்முறை அவனோடு வெளியே செல்லப் போகிறாள்.

அன்றைய தினத்திற்கு பிறகு இப்போது தான் அவனை சந்திக்கப் போகிறாள். அந்த நொடியே மனம் படபடக்க ஆரம்பீத்தது வெண்பாவிற்கு.

அவள் தன்னை சீர்படுத்திக் கொள்வதற்குள் வாசலில் கார் சத்தம் கேட்க தன் தோழியிடம் கூறிவிட்டு கிளம்பி வெளியே வந்தவளை காரினுள் அமர்ந்து ஆசைதீர விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான்.

அழகிய அடர்நீல நிற டிசைனர் புடவையில் வெள்ளை கற்கள் அலங்கரித்திருக்க முந்தானையை ஒற்றையாய் விட்டு தலையை விரித்துவிட்டு சென்டர் கிளிப் போட்டிருந்தாள்.

அளவான ஒப்பனை காந்த கண்களை கருப்பு வைரமாய் மின்னச் செய்ய அத்தனை பாந்தமாய் தோன்றினாள் திவாவின் கண்களுக்கு.

உள்ளே அமர்ந்தவள் சிநேகப் புன்னகையோடு ஹாய் என்றுகூற சற்றே தெளிந்தவன் பதில் மென்னகையோடு ஹாய் கண்ணம்மா லுக்கிங் ஆசம் டா. என்று ரசித்து கூறினான்.

அங்கிருந்து ஹோட்டலை அடையும் வரையுமே அமைதி மட்டுமே பிரதானமாய் இருக்க அவ்வப்போது ஓரப்பார்வை பார்த்தவாறே வெளியே பார்த்து வந்தாள் வெண்பா.

இதமான இசை மனதை நிறைக்க அத்தனை ரம்மியமாய் ஒவ்வொரு நொடியும் நகர்ந்தது இருவருக்கும்.

ஹோட்டலை அடைந்து காரை வெலட் பார்க்கிங்கிற்கு கொடுத்துவிட்டு இருவருமாய் தங்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஹாலிற்குச் செல்ல எந்த விளக்குகளுமின்றி அறை முழுவதும் இருட்டாய் இருந்தது.

திவ்யாந்த் தன் மொபைல் டார்ச்சை கொண்டு விளக்குகளுக்கான ஸ்விட்சை போட பாப்பர்ஸ் ஒலிகளோடு ஹே என்ற ஆரவாரத்தில் வெண்பா ஒரு நொடி திகைத்து மீண்டாள்.

அறை மொத்தமும் பலூன்களால் நிறைந்திருக்க நடுவிலே போடப்பட்டிருந்த டேபிளில் அவர்களுக்கான கேக் இருந்தது அனைவரும் கைதட்டி அவர்களை வரவேற்க திவ்யாந்தே இத்தகைய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை.

முதன்முறையாய் லேசாய் ஒரு நாணம் கலந்த புன்னகை குடிகொண்டது அவன் முகத்தில்.

ஒவ்வொருவராய் வந்து இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை கூற ஆரம்பித்தனர்

அனைவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்தியவன் அவள் தோள் பற்றிய கரத்தை மட்டும் விடவேயில்லை.

வெண்பாவிற்கு மனம் மொத்தமும் மகிழ்ச்சியும் பூரிப்புமே. அதிலும் அனைவரும் திவ்யாந்தை பற்றி அத்தனை நல்லவிதமாய் கூறக் கேட்டவளுக்கு தன்னவன் மீதான காதல் இன்னமும் அதிகரித்தது.

“மிஸ் வெண்பா திவ்யாந்த் மாதிரி ஒரு பெர்சன் மை காட் நீங்க பாத்துருக்கவே முடியாது. எவ்ளோ கூல் கய் தெரியுமா.

அத்தனை பொறுமை அவருக்கு. பேஷண்ட்ஸ் கிட்டேயும் சரி ஸ்டாஃப் கிட்டேயும் சரி அவரு கோபமா பேசி இதுவரை நாங்க யாருமே பார்த்ததில்லை.

அது எத்தனை மோசமான சூழ்நிலையா இருந்தாலும் சரி. அந்த நேரத்திற்கு மன்னிக்கவே முடியாத தப்பை பண்ணியிருந்தாலும் சரி அவரு குரல் உயர்த்தி கூட பேசி நாங்க கேட்டதில்ல.

எப்பவுமே சொல்லுவோம் நாங்க ,சீக்கிரம் கல்யாணம் பண்ணிகோங்க டாக்டர் அந்த லக்கி கேர்ள் யாருனு பார்க்க நாங்க ரொம்ப ஆவலா இருக்கோம்னு. அதுக்கும் அவரோட பதில் இந்த ட்ரேட்மார்க் ஸ்மைல் தான்.

ரொம்ப ஓவர் பில்டெப் எல்லாம் கண்டிப்பா கொடுக்கல நிஜமாவே எங்க எல்லாருக்குமே பிடிச்ச ஒரு நல்ல ப்ரெண்ட் நல்ல ஹியூமன் பீயிங் நிச்சயமா திவ்யாந்த் தான். ”

இப்படியான பாராட்டுகளை தவிர அவனைப் பற்றி வேறு எதுவும் கேட்கவில்லை வெண்பாவிற்கு. எல்லாருக்கும் நல்லவனாய் ஒருவரால் இருந்திட முடியுமா அப்படிபட்ட ஒருவன் வாழ்வு முழுவதும் தனக்கே தனக்கானவனாய் இருந்திட போகிறான் என நினைக்க நினைக்க அவன் மீதான காதல் கரைகடந்து கொண்டேயிருந்தது.

அதன்பின் இரவு உணவு முடிந்து பேச்சும் சிரிப்புமாய் இருந்தவர்கள் ஒலிக்க ஆரம்பித்திருந்த இசைக்கு தங்கள் துணையோடு ஆட ஆரம்பித்தனர்.

சில நிமிடங்களில் திவ்யாந்த் வெண்பாவையும் அழைத்து நடுவே நிறுத்த திவ்யாந்த் தன்னவளை நோக்கி கை நீட்டினான்.

நாணத்தையும் மீறிய ஆச்சரிய பார்வையை அளித்தவள் தன் இடக் கரத்தை நீட்ட அதைப் பற்றி அவளை சுற்றி தன்புறம் இழுத்தான்.

அவளது வலக்கையை தன் இடக்கையில் கோர்த்தவன் மற்றொரு கையை தன் தோள்மீது வைத்து அவளின் இடையை மென்மையாய் பற்றி ஆட ஆரம்பித்திருந்தான்.

கண்கள் கூறும் பாஷை புரிய வேண்டுமெனில் காதலில் முங்கி முத்தெடுக்க வேண்டுமோ!இருவரின் கண்களும் விடாமல் பல செய்திகளை பரிமாறிக் கொண்டேயிருந்தன.

ஆட்டம் பாட்டம் அனைத்தும் முடிந்து ஒரு வழியாய் அனைவரும் கிளம்பத் தயாராக அனைவரையும் வழியனுப்பிவிட்டு இறுதியாய் வெண்பாவோடு கிளம்பினான் திவ்யாந்த்.

பற்றிய அவள் கையை விடாமல் அப்படியே நடக்க ஆரம்பித்திருந்தான்.

வெளியே வந்தவர்களை கண்டு டிரைவர் காரை எடுத்து வருவதற்காக செல்ல எத்தனிக்க அவரை தடுத்தவன் தானே எடுத்துக் கொள்வதாய் கூறி பேஸ்மெண்டிற்குச் சென்றான்.

நேரம் பதினொன்றை தாண்டியிருந்ததால் அவ்வளவாக கார்கள் இல்லாமல் இருக்க அமைதியாகவே காரை ரிமோர்ட் கொண்டு ரிலீஸ் செய்தவன் அவளுக்கான கதவை திறந்துவிட்டு அருகில் நிற்க அவனை பார்த்தவாறே உள்ளே அமர எத்தனித்தவளை சட்டென கைப்பற்றி தன்புறம் திருப்பி நிறுத்தியிருந்தான்.

திறந்திருந்த கதவில் ஒரு கையும் அவள் இடைப்பற்றியவாறு இன்னொரு கையுமிருக்க அவளை கிட்டதட்ட அணைத்தவாறு நெருங்கி நின்றிருந்தான்.

இந்த திவ்யாந்த் வெண்பாவிற்கு மிகவும் புதியவன் கண்கள் முழுதும் காதலில் திளைத்திருக்க தன்னவளை கண்கொட்டாமல் பார்த்திருந்தான்.

அவன் விழி வீச்சை தாங்க முடியாதவளோ தலை குனிந்தவாறே,”திவா!!போலாம். ”,என மென்மையாய் உரைத்தாள்.

“போலாம் கண்ணம்மா. அதுக்கு முன்னாடி. ”,என்றவன் சட்டென அவளை தன்புறம் இழுத்து நெற்றியில் அழுந்த இதழ்பதித்தான்.

பிடிமானத்திற்காய் அவனை கையை பற்றியவள் இறுக்கமாய் பற்ற சற்று இடைவெளிவிட்டு அவள் விழிகளுக்குள் நோக்கியவன் அவள் இதழ்களை விரலால் வருடியவாறே,”ஷல் ஐ?”,என வார்த்தைகளுக்கு வலிக்காமல் கேட்டு அவள் பதிலுக்கு காத்திருந்தான்.

சாதாரணமாகவே அவன் பேச்சில் உருகுபவள் இப்போது அவன் கேட்ட விதத்தில் மொத்தமாய் குழைந்து தான் போனாள்.

சம்மதமாய் விழிமுடி அவனைப் பற்றியிருந்த கையை லேசாய் இறுக்கினாள்.

உதடுகளை நெருங்கியவன் தன் இதழ்களால் மலரிதழ் கொண்டு ஒற்றியெடுத்தது போன்று ஒற்றியெடுத்தான்.

மென்மையோ வன்மையோ முதல் இதழ் முத்தம் என்பது உணர்வுபூர்வமான ஒன்றாய் வாழ்வு முழுவதுக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒன்றுதான் நிச்சயமாய்.

வெண்பா அதை உணர்ந்தாள் அவன் அவள் அதரங்களை விடுவித்த அடுத்த நொடி அவன் தோள் சாய்ந்து கொண்டாள். ஆதரவாய் அவள் முதுகைப் பற்றியவன் அவள் செவிகளில்,

“லவ் யூ சோ மச் டா கண்ணம்மா. என் மனசு எந்தளவு சந்தோஷத்துல இருக்குனு என்னால வார்த்தையால சொல்ல முடியுமானு தெரில அதனால தான் இப்படி சொல்லிட்டேன்.

எனக்கே எனக்கான ஒரு உறவு வாழ்க்கை முழுவதுக்கும்.  நமக்கு குழந்தைங்க அவங்களுக்கு குடும்பம், இப்படி யாருமே இல்லாம வளர்ந்த என்னோட எதிர்காலத்தை எத்தனை அழகா மாத்திருக்க தெரியுமா.

சிந்தாம்மா என் அம்மா மாதிரி தான் இருந்தாலும் சில நேரங்களில் நா தூங்கிட்டேன்னு நினைச்சு அவங்க குடும்பத்து போட்டோ பார்த்து அழுவாங்க.

இப்படி எல்லாருக்குமே அவங்களுக்கான ஒரு உறவுகள் இருக்காங்க ஆனா இதுவரை எனக்கு அப்படி யாருமே இல்லை.

என் சொந்தம்னு யாரையும் தேடி போகணும்னு கூட நா நினைச்சதில்ல.

அவ்ளோ ஏன் எந்த உறவையும் நா எதிர்பார்த்ததும் கிடையாது ஆனா இப்போ இந்த செகண்ட் நீ இல்லாத ஒரு லைஃப் நினைக்க கூட விரும்பாத ஒரு சிந்தனையா தான் நா நினைக்குறேன் கண்ணம்மா.

இனி நீ தான் என் வாழ்க்கை. நீ தான் என் எல்லாமும் எந்த சூழ்நிலையிலேயும் என்னை தனியா விட்டுற மாட்ட தான?”

ஆயிரம் ஆயிரம் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவன் குழந்தையாய் தான் பெறாத பிள்ளையாய் அவள் கண்ணுக்குத் தெரிந்தான்.

அவனை தன்னிடமிருந்து விலக்கி அவன் முகத்தை கையில் ஏந்தியவள்,

”திவா இப்படிபட்ட அன்பை விட்டுட்டு எனக்கு வாழ்க்கைல என்ன இருக்கும் சொல்லுங்க.

நீங்களே என்னை உங்க வாழ்க்கையில் இருந்து தள்ளி வச்சாலும் நா போகமாட்டேன். ”,என்றவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

ஆனால் விதியின் வலிமையை யார் அறிவார் அவனே அவளை போகாமல் இருக்க கெஞ்சியும் அவள் அவனைப் பிரிந்துவிடுவாள் என்பதை அப்போது இருவருமே அறிந்திருக்கவில்லை.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

Kavi Natarajan September 30, 2026 - 8:12 am

Lovely ud ma

srichitra September 30, 2026 - 9:46 am

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode