435
“உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்
மு.வ விளக்க உரை: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.”
முந்தைய தினம் இரவில் கேரளாவில் அவர்களது திரிச்சூர் வீட்டை அடைந்திருந்தனர். இன்றைய தினம் அதிகாலையிலேயே அனைவருமாய் குருவாயூர் கிளம்புவதாய் ஏற்பாடு.
பார்வதி திருமணம் முடிந்த கையோடு மணமக்களை அங்கு அழைத்து வருவதாய் வேண்டியிருப்பதாய் கூறியிருக்க காலை நான்கு மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தனர்.
முகுந்தன் பட்டு வேட்டி சட்டையோடு அமர்ந்திருக்க தன்னருகில் சுடிதாரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து முறைத்திருந்தான்.
“தங்கமே.. கோவிலுக்கு போய் புடவை மாத்திக்குறேன்னு தான சொல்றேன். டென்ஷன் ஆகாத.”
“அதை வீட்டிலேயே கட்டி வர்றதுக்கு எந்தா பிரஷணம் உனக்கு?”
“அதெல்லாம் உனக்குப் புரியாது” என்றவள் அவன் தோள் சாய்ந்து விழி மூடிக் கொண்டாள்.
கோவில் அருகிலேயே ஹோட்டல் ஒன்றில் ரூம் போடப்பட்டிருக்க குடும்பத்தினர் அனைவருமாய் முதலில் கோவிலுக்குச் செல்வதாய் கூறிவிட முகுந்தன் அடுத்த அரை மணி நேரத்தில் தந்தையோடும் தம்பியோடும் கிளம்பியிருந்தான்.
மங்கையைப் பற்றி விசாரித்தால் யாரும் ஒழுங்காக எதுவுமே சொல்லாதிருக்க ஆண்கள் அனைவரையும் சட்டையை கழட்டிவிட்டு தரிசனத்திற்கு தயாராகச் சொல்ல முகுந்தன் தந்தை கொடுத்த அங்கவஸ்திரத்தை தோளைச் சுற்றி போர்த்திக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு பின்னிருந்து மங்கை அவனை அழைத்தாள்.
“உன்னியேட்டா..”, என்றதில் அவள் இத்தனை நேரம் எங்கு சென்றாள் என்பதை கேட்பதற்காக திரும்பியவன் பேச்சிழந்து போய் நின்றிருந்தான்.
கேரளத்தின் கசவு செட்டு முண்டில் தலைமுடி விரித்து விடப்பட்டு முடிகளுக்கு அடி வழியே கத்தையாய் மல்லிப் பூவை சூட்டியிருக்க பார்வதியின் கேரளத்து நகைகள் மங்கையின் கழுத்தை நிறைத்திருந்தன.
“சர்ப்ரைஸ்..”, என்று மாமியாரும் மருமகளும் கத்திக் குரல் எழுப்ப மொத்தக் குடும்பமும் முகுந்தனைச் சுற்றி நின்று புன்னகைத்தது.
தனது மலரை கேரளத்து உடையில் பார்க்க வேண்டும் என்பது முகுந்தனின் நீண்ட நாள் ஆசை. அவனை வெறுப்பேற்றுவதற்காகவே கேரளா சேலை கூட அணியாமல் சுற்றலில் விட்டவள் இன்று இப்படி வந்து நிற்பதை அவனால் கிரகித்துக் கொள்ளவே நெடுநேரம் எடுத்தது.
அதைவிட பெண்கள் அனைவருமாய் கையில் கொண்டு வந்திருந்ததைப் பார்த்த பலராம் மற்றும் முகுந்தனுக்கு கண்களில் நீர் கோர்த்திருந்தது.
ஆம் இருவருக்கும் தற்போது நடக்கப் போகும் திருமணத்திற்காக தான் அவர்களை அழைத்து வந்திருந்தனர். கல்யாண தேதி குறித்த போதே மலர் இதைக் கூறி விட்டாள் என்ன இருந்தாலும் மாமாவின் முறை என்பதையும் விட்டுவிடக் கூடாது என்று.
பார்வதியிடம் விஷயத்தைக் கூறி முகுந்தனுக்கும் பலராமிற்குமான மிகப்பெரிய பரிசாய் இது இருக்கட்டும் என்று கூறினாள்.
அதன்படி பார்வதி சிறிய மகனின் உதவியோடும் குடும்பத்தினரின் உதவியோடும் குருவாயூர் கோவிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முடித்திருந்தார்.
பலராமிற்கு மிகவும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாய் இருந்தது. அவருக்கு தன் மகனின் திருமணத்தை இங்கு நடத்த ஆசை இருந்தாலும் அதைப் பற்றி வெளியே வாய் திறக்கவே இல்லை.
ஆனால் தான் கூறாமலேயே தன் ஆசையை புரிந்து அதற்கு மதிப்பளித்த மருமகளை நினைத்து அப்படியாய் ஒரு மகிழ்ச்சி அவருக்கு.
அவரே இந்த நிலைமை எனில் உன்னி முகுந்தனைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? பிறந்து வளர்ந்த நாள் முதலே அவனுக்குத் தெரிந்த திருமணமென்றால் இது தான். தன்னவளைத் திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது இந்தக் கசவு உடையாகத் தான் அவன் மனதில் இருந்தது.
இருந்தும் தந்தையைப் போலவே இதைப் பற்றியெல்லாம் தாயிடம் கூட கூறியிருக்கவில்லை.
ஆனாலும் இன்று தன் ஆசையை நிஜமாக்கிய அந்த ஒருவளை சரணடைந்தே விட்டிருந்தான் அந்த நொடியில்.
“சக்கரே…”
“எப்படியிருக்கு புடவை..”
“கண்டிப்பா வீட்டுக்குப் போயிட்டு சொல்றேன் மலரே..”
“ஐயோ கோவில்.. வா போலாம்..”, என்றவள் மாமனாரிடம் வந்தவளாய்,
“மாம்ஸ் எப்படியிருக்கு சர்ப்ரைஸ். மாமா ஹேப்பியானோ?”
“என்ட மோளு எப்போ எங்க வீட்டு மருகள்னு தெரிஞ்சுதோ அப்போ இருந்தே மாமன் வல்ர ஹேப்பி டா. ஸ்பெஷல் தேங்க் யூ ஃபார் திஸ்”, என்றவர் மருமகளைத் தோளில் தட்டிக் கொடுத்தார்.
கடவுளின் முன்னிலையில் துளசி மாலை மாற்றி அவர்களது முறைப்படியான தாலியையும் அணிவித்தவனின் நிறைவான முகம் மலருக்கு முழு திருப்தியைக் கொடுத்திருந்தது.
வீட்டிற்கு வந்தவனுக்கு இத்தனை தினங்களாய் இருந்ததை விட ஒருவித கர்வமும் மகிழ்ச்சியும் தன்னவளை நினைத்து.
அவனைப் பற்றித் தெரிந்தவளாய் அறைக்குள் வராமல் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருந்தவளை ஒரு வழியாய் அறைக்குள் வைத்துப் பிடித்திருந்தான் முகுந்தன்.
“என்னை உன் பின்னாடி சுத்த வைக்குறதில் உனக்கு அத்தனை சந்தோஷம் அல்லே?!”
“அப்படியெல்லாம் இல்ல தங்கமே. இந்த ட்ரெஸ் உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும்.”
“அதனால கண்ணில் படாம சுத்தினியா?”
“உன்னியேட்டன் ரொம்ப சந்தோசமாய் இருந்தால் என்னை பைத்தியமாக்கும். அதான் இங்கே வரலை.”, என்று மங்கைக் கூறியதைக் கேட்டவனுக்கு முகம் ஒளிர்ந்தது.
“இ ஏட்டன் ரொம்ப படுத்துறான் அல்லே?!”
“ம்ஹூம்..”
“எனக்கறியாம். பட்சே இதுவே இத்தனை பேர் இருக்குறதால் கொஞ்சம் நல்லவனா நடிக்க வேண்டியதா இருக்கு.”
“…”
“நாலு வருஷம் என்ட பொன்னு மலரோட டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்ததிலேயே என்ட பொறுமை எல்லாம் போயி.”
“போதும் உன்னியேட்டா. நான் போகணும் எல்லாரும் தேடுவாங்க.”
“இதையே சொல்லி தப்பிக்குற உனக்கு இருக்கு. போய்க்கோ”, என்றவன் தள்ளி நிற்க தானாகவே அவனை அணைத்து விடுவித்தவளாய் வெளியே ஓடியிருந்தாள்.
அடுத்த இரு தினங்களில் இன்னும் பிரம்மாண்டமாய் திரையுலகின் நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் பங்குபெற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது அவர்களின் கேரளா வரவேற்பு.
அன்று வரையும் கூட எதுவும் தெரியாதவளுக்கு இப்போது அனைவரும் மதுரை கிளம்பும் நேரம் மனம் பாரமாகிப் போனது.
தாயும் மகளும் கட்டியழுவது தான் பெரும்பாலும் நடப்பது. ஆனால் இங்கோ முத்துப் பாண்டி அழுத அழுகை, ஒரு கட்டத்தில் மங்கை அவரைத் தேற்ற வேண்டியதாகிப் போனது.
திருமா மாறன் கார்த்தி மூவரும் முகுந்தனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறி அவளை வெறுப்பேற்றி திசை திருப்பினாலும் முகுந்தனிடம் ஆயிரம் பத்திரங்களை கூறாமல் இல்லை.
“ஏன்டி ஊர் உலகத்தில் இப்படி எங்கேயும் நடக்காது.”
“கிழவி எல்லார் அப்பாவும் என் அப்பாவா ஆகிட முடியுமா? நாங்க இப்படி தான்.”
“ப்பா உடம்பை பார்த்துக்கோ ஒழுங்கா சாப்பிடு.ஸ்வீட் நிறைய சாப்பிடாத என்ன?”
“சரி லே. நீ தினமும் போன் போடு.. அப்பாக்கு உன் நினைப்பாவே இருக்கும்.”
“உனக்கு எப்போ என்னை பார்க்கணும்னு தோணுதோ இங்கே ஓடி வந்துருப்பா இல்ல நான் அங்கே வந்துருவேன். வருத்தப்படாத சரியா?”
“பாப்பா அப்பப்போ போன் போடு என்ன?”
“சரி சித்தப்பா நீயும் கடையில் ரொம்ப டென்ஷன் ஆகாத என்ன அண்ணனுங்க பார்த்துப்பாங்க. வயசாகுதுல உடம்பை பார்த்துக்கோ.”
“பாப்பா ரொம்ப வெளியில் சாப்பிடாம வீட்டில் சமைச்சு கொடுக்கணும் சரியா?”
“சரி சித்தி உங்களுக்கு தான் போன் பண்ணுவேன் சந்தேகம் கேட்க. நீங்களும் அம்மாவும் கிச்சனிலேயே இருக்காம அப்பப்போ ரெஸ்ட் எடுக்கணும்..”
“இந்த தாத்தனை மறந்துறாத லே!”,என்ற கனியனின் கையைப் பிடித்துக் கொண்டவளாய் ,
“நான் அப்போ பேசினதெல்லாம் மனசில் வைச்சுக்காத தாத்தா. உனக்கு புரிய வைக்கணும்னு தான். மத்தபடி மனசார எல்லாம் எதுவும் பேசலை.”
“இத்தனை வருசமாகியும் அதெல்லாம் நியாபகம் வைச்சுட்டா கிடக்க. உன்னால தான் பாப்பா இன்னைக்கு எந்த பாவத்தையும் தலையில் சுமக்காம நான் இருக்கேன். நீ சந்தோஷமா இரு.”
“அப்பறம் மிஸர்ஸ் கலைச்செல்வி பிஏ கலக்குறீங்க போலேயே.”
“போடி கழுதை எப்போ பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணிகிட்டே இரு.”
“அத்தை படிக்குறதுக்கு வயசெல்லாம் ஒரு விஷயமே இல்லைனு நிருபிச்சுருக்க எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? உன் பையன் மருகளோட டூயட் பாடட்டும் நீயும் மாமாவும் அப்பபோ கிளம்பி உன் அக்கா வீட்டுக்கு வந்துருங்க என்ன மாம்ஸ்?”
“அவளே அந்த ப்ளான்ல தான் இருப்பா இதில் நீ வேற ஏத்தி விடாத பாப்பா”, என்ற தாமோதரனை முறைத்தார் கலைச்செல்வி.
இறுதியாய் தாயிடம் வந்தவள் குணவதியை இறுக கட்டிக் கொண்டாள்.
“வாழ்க்கையில் உன்னை மாதிரியே பொறுமைசாலியா நான் இருக்கணும் என் செல்ல குணா.”
“கண்ணு நல்ல மருமகளா புகுந்த வீட்டு பேரையும் சந்தோஷத்தையும் காப்பாதணும் என்ன. அத்தை தான்னு ரொம்ப செல்லம் கொஞ்ச கூடாது. இன்னும் நீ சின்னப் பிள்ளை இல்ல”
“சரிம்மா நான் ஒழுங்கா இருப்பேன். நீ என்னைப் பத்தி கவலைப்படாம அப்பாவோட ஜாலியா ஹனிமூன் எங்கேயாவது போயிட்டு வா என்ன..”, என்றதில் மகளை அடித்துச் சிரித்தார் குணவதி.
நான்கு வருடங்கள் கடந்தும் இப்போதும் பலராம் பார்வதி முகுந்தன் கிருஷ்ணன் நால்வரும் முதல்முறை பார்ப்பது போல தான் நடப்பதையெல்லாம் பார்த்திருந்தனர்.
இவர்களையெல்லாம் விட கன்னிகாவும் சித்ராவும் அவளை உடன் பிறந்தவளைப் போல் மிரட்டி திட்டி அறிவுரை கூறி, அழுது என நிற்கும் போது இந்தப் பெண் நிச்சயமாய் தெய்வாம்சம் பொருந்தியவள் தான் என்று தோன்றியது.
அனைவரையும் வழியனுப்பி விட்டு உள்ளே வந்த போது இவர்கள் ஐவர் மாத்திரமாய் இருந்த வீடு பெரும் நிசப்தத்தை தாங்கியதைப் போன்று இருந்தது.
“என்ன டா ரொம்ப வருத்தமா இருக்கா?”, என்ற அத்தையின் அருகில் அமர்ந்து கொண்டவளுக்கு உண்மையாகவே வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாது புன்னகைத்தாள்.
“கொஞ்ச நாளில் பழகிரும் அத்தே.. என்ன இருந்தாலும் அம்மா வீடு அம்மா வீடு தான் இல்ல..”
“ம்ம்..”
“நீ எப்படி அத்தனை வருஷம் அதில்லாம இருந்தியோ உனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் இல்ல..”
“அதை ஏன் இப்போ நியாபகப் படுத்திகிட்டு. உண்மையை சொல்லவா இந்த நாலு வருஷம், எல்லாத்தையும் மறக்க வைச்சுருச்சு டி. என்னோட சந்தோஷம் உன் மாமாவை இரட்டிப்பா சந்தோஷமாக்கிடுச்சு. எல்லாத்துக்கும் நீ தான் காரணம்.”, என்றபோது உள்ளிருந்து வந்த பலராம் மருமகளிடம் ஒரு பரிசுப் பெட்டியை நீட்டினார்.
“என்ட ப்ரியப்பட்ட மோளுக்கு இ அச்சனின்ட சிறு கிப்ட். எப்போதும் நீ சிரிச்சே இருக்கணும் மோளே.”
“அண்ணி நாளைக்கு நீ தான் சமைக்கணும் நியாபகம் இருக்குல?”
“என்னையும் மதிச்சு கேட்ட உன் மனசு இருக்கே அதான் சார் கடவுள். நாளைக்கு அப்பறம் நீ தப்பி தவறி கூட என்கிட்ட கேட்க மாட்ட கிச்சு மாமா.”, என்றதில் அனைவருமாய் சிரித்தனர்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Very nice.
💞💞💞💞💞💞💞
Super💕