மலர்-31

by ஸ்ரீ
3 comments 447 views
A+A-
Reset

குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு

மு.வ விளக்க உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

தனதறைக்குச் சென்று உடைமாற்றி கையில் பையோடு மங்கை வர  பூங்கோதை பேத்தியிடம்,

“நிசமாவே போகப் போறியா டி?”

“ஏய் கிழவி பேசாம போயிரு. எல்லாம் உன்னால தான். எல்லாரையும் அடிச்சு வளர்த்துருந்தா உன் மவளுக்கும் எனக்கும் இன்னைக்கு இந்த நிலைமை வருமா? எங்கம்மாட்ட சொல்லி உன் சோத்துல விஷம் வைக்க சொல்லுறேன்.”

“அடிபோடி இவளே. என் பேரன் வந்து எல்லாரையும் என்னமா பேசிட்டு போனான் தெரியுமா. உன் தாத்தானே கொஞ்சம் அடங்கிப் போய் தான் கிடக்குறாரு.”

“ம்ம் ஆமா உன் புருஷன் இறங்கி வந்து எல்லாத்தையும் நடத்தும் போது எனக்கு நேரா அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும். இதுக்கு தான் இந்த காலத்தில் எவனும் கல்யாணமே பண்ணிக்குறதில்ல.

அப்படியே பிடிச்சவங்க கூட ஒண்ணா ஒரே வீட்டில் வாழ்ந்துட்டு போயிருராங்க. இதே இங்கே பாரு. கல்யாணம் பண்ணி வைனு வந்து நின்னா எல்லாம் நம்மளை போட்டு பந்தாடுதுங்க. குடும்பமா கிழவி இது?”

“விடு டி என்னத்த தான் பேண்ட்டையும் சட்டையும் மாட்டித் திரிஞ்சாலும் உள்ளே இருக்குற காட்டானுங்க அப்படியே தான் இருப்பானுங்க. நீ ஜாலியா போயிட்டு வா நான் பார்த்துகிடுதேன்.”

“எதே ஜாலியா போகவா?நல்லா எதாவது சொல்லிற போறேன். நான் என்ன என் புருஷனோட ஹனிமூனா போறேன். கோவிச்சுட்டு வீட்டை விட்டு போறேன்.”

“சரி டி ரொம்ப கத்தாத இந்த வெறியெல்லாத்தையும் மேட்ச்சில் காட்டு. கண்டிப்பா ஜெயிச்சுப்புடுவ.”

“எல்லாம் என் நேரம் வரேன்.”, என்றவள் திருமாவின் அறைக்குச் சென்றாள்.

“அண்ணி..”

“சொல்லு மங்கை.”

“அந்த மலைமாடு அதான் உங்க புருசன்  பணத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து தரீங்களா? அவனை அப்பாகிட்ட வாங்கிக்க சொல்லுங்க.”

“ஆனாலும் நீ ஒரு தனி பீஸ் மங்கை..”

“ஏன் அண்ணி நீங்க வேற. வர்ற ஆத்திரத்துக்கு… உங்க புருஷனை மட்டும் பத்திரமா பார்த்துக்கோங்க என் கையில் கிடைச்சான் சட்னி தான் அவன்.”, என்றவளிடம் பணத்தைக் கொடுத்தவளாய் பத்திரமாய் சென்று வரும்படி கூறினாள்.

மாறனின் மூலம் விஷயம் அறிந்த ஆண்கள் மூவரும் அடித்துப் பிடித்து வீட்டிற்கு வந்தனர்.

“மாறா? அவ போறவரை பார்த்துக்கிட்டா இருந்த தடுக்க மாட்டியா டா?”

“சாமி கொண்டாடி மாதிரி ஆடிட்டு போறவளை பிடிச்சு நிறுத்தி என்னை வாங்கி கட்டிக்க சொல்றீங்களா ப்பா?”

“!!”

“ஆனாலும் ரொம்ப தான் செல்லம் கொடுத்துருக்கோம். அந்த திண்ணக்கம் தான் அவளுக்கு.”

முத்துப் பாண்டி அவளது எண்ணிற்கு அழைக்க அணைத்து வைக்கப் பட்டிருப்பதாய் வந்தது. மாறன் தன் நண்பர்களிடம் கூறி உதவி கேட்கலாம் என்று கூற அங்கு வந்த பூங்கோதை,

“எப்போ எதுக்கு எல்லாரும் இந்த குதி குதிக்குறீக? என் பேத்திக்கு கொஞ்சமாவது நிம்மதி வேணும். விளையாடுற பிள்ளைக்கு மூளையும் மனசும் லேசா இருந்தா தான் கவனம் இருக்கும்.

இப்போ அவ வந்துட்டா மட்டும் எல்லாரும் பழைய படி பேசப் போறீகளா? இல்லைல? அப்பறம் என்னத்துக்கு தேடித் திரியுறீங்க. போய் பொழப்பை பாருங்கலே”

“அப்பத்தா எல்லாத்துக்கும் காரணம் நீ தான்.”

“வாலே சின்ன சண்டியரு. உங்க அப்பனே என்னைப் பார்த்து பேச பயப்படுவான். நீ என்னையே குத்தம் சொல்லுறியோ?”, என்று மாறனிடம் மல்லுக்கு நிக்க கடுப்பான முத்துப் பாண்டியோ,

“ம்மா நீ வேற ஆரம்பிக்காத போம்மா.. நானே பிள்ளையை நினைச்சு பதட்டத்தில் இருக்கேன்.”

“ம்ம் இந்த ஒரு வாரமும் அந்த பதட்டம் எங்கே போச்சாம்? பக்கத்தில் இருக்கும் போது அருமை தெரியாம ஆட வேண்டியது இப்போ என்னவோ வந்துட்டானுங்க. அவ நிசமாவே மன நிம்மதிக்காக தான் போயிருக்கா.

உன் மகளை எவனும் தூக்கிட்டு போயிர மாட்டான். அப்படி போனா அவனுக்கு தான் அழிவுகாலம் ஆரம்பம். அதனால ரொம்ப பிணத்தாம போய் தின்னுட்டு தூங்குங்க”, என்றவர் சென்றுவிட திருமா யோசனையோடு தனதறைக்கு வந்தான்.

கன்னிகாவால் எத்தனை முயன்றும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போக அவளைப் பார்த்தவனோ நிஜமாகவே கோபமாகி விட்டான்.

“எல்லாரும் என்ன பயத்தில் இருக்கோம். நீ சிரிச்சுட்டு நிக்குற?”

“அதில்லங்க..”, என்றவள் மங்கை பேசியதெல்லாம் கூற திருமாவிற்கே சிரிப்பு வந்திருந்தது.

“சின்ன கழுதைக்கு கொஞ்சம் கூட பயமே இல்லாம போச்சு.”

“எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு. இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் கூட தெம்பா தைரியமா இருக்குறது எல்லாம் எல்லாருக்கும் முடியாதுங்க. பாவம் முகுந்தன் அமுதினினு எல்லாருக்கும் மானாவாரியா திட்டு விழுந்துது.”, என்றவள் மீண்டுமாய் சிரிக்க திருமா அவளது நெற்றியில் தட்டி புன்னகைத்தான்.

விமானத்தில் அமர்ந்தவள் நேராய் வசந்த் அப்போது இருந்த கொல்கத்தாவை அடைந்திருந்தாள். அவளுக்காக ஏர்போட்டிலேயே காத்திருந்தான் வசந்த்.

“நண்பேன்டா.. சொன்னேன்ல நீ எனக்கு உதவி பண்ற சூழ்நிலை வரலாம்னு.”

“உன் மூஞ்சி, ஏன்டி இப்படி பண்ற. அம்மாகிட்டேயாவது இங்கே தான் வரேன்னு சொல்லிட்டு வந்துருக்கலாம்ல?”

“அம்மாவால அப்பாகிட்ட சொல்லாம இருக்க முடியும்னு நினைக்குறியா? நானே நொந்து போய் வந்துருக்கேன். நீயும் ஆரம்பிக்காத டா..”

“எல்லாம் நேரம் வந்து தொலை..”, என்றவன் அவளது பையை வாங்கிக் கொண்டு முன்னே நடந்தான்.

“எந்த ஹோட்டலில் ரூம் போட்டுருக்க டா?”

“அடிச்சேன்னு வை மூஞ்சி திரும்பிக்கும். பொட்டபிள்ளை தனியா ஹோட்டலில் தங்குவியா? என் டீம் பையன் ஒருத்தனோட ப்ரெண்ட் இங்கே ரூம் எடுத்து தங்கிருக்காங்களாம். அங்கே தான் விட போறேன் வா.”

“ஏலேய் வசந்து ரொம்ப அறிவாளி ஆகிட்டல..”

“இந்த வாய் மட்டும் இல்லை உன்னை நாய் தூக்கிட்டு போயிடும் டி.”, என்றவனோடு அவர்கள் போக வேண்டிய இடத்தை அடைய அந்தப் பெண்ணிடம் பேசி வசந்த் மங்கையை அங்கு விட்டுச் சென்றான்.

அந்தப் பெண்ணோடு பேசி அவள் கொடுத்த சிற்றுண்டியை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு அவளுக்கான அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்த போது தூக்கம் சுகமாய் வந்தது.

இருந்தும் தனது தங்கத்திடம் பேச வேண்டும் என்று முகுந்தனிற்கு அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படாமல் போக, மணி நள்ளிரவை நெருங்கியிருக்க தூங்கியிருப்பானோ என்று எண்ணியவளாய் மீண்டுமாய் அழைத்தாள்.

“எந்தா டி வேணும் உனக்கு?”, என்ற கோபத்தில் ஒரு நொடி கைப்பேசியைப் பார்த்து விழித்தவளாய்,

“தங்கத்துக்கு இவ்வளவு கோபம் வருமா?”

“அதான் போன் பண்ணி திட்டினியே இப்போ ஏன் கால் பண்ணுற? போய் தூங்கு போ.”

“உன்னியேட்டா…”

“உன்னை நான் கொன்னு கழிக்கும். போய்க்கோ டி”

“செல்லம் இல்ல என் தங்கம் இல்ல..”

“எதுவும் இல்ல நான் போனை வைக்குறேன் பை.”

“எடா மோனே..

பட்டணத்தில் கொட்டகையில் சினிமா காட்டித் தராம்

கொத்திரி பலகாரம் நம்மளு கொண்டு வந்துதராம்

நல்ல சிநேகம் காட்டித் தராம் நம்மளுடே

ஜீவன் தன்னே தாராம்..

கோபிக்கண்டா மோனே..”, என்று மலையாளப் பாடலைப் பாட முகுந்தன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியிருந்தான்.

“இ பாட்டு நினக்கு அறியுமோ?”

“எல்லாம் இன்ஸ்டா ரீலின் மகிமை. எப்போவாவது உன்னை சமாதானப்படுத்த யூஸ் ஆகும்னு வைச்சுருந்தேன் தங்கமே.”

“என்ன பொண்ணோ நீ. எப்போ மதுரை போன?”

“எப்போ மதுரையில் இருந்து கிளம்பினனு கேட்கணும்?”

“என்ன??? எங்கேயிருக்க இப்போ?”

“கொல்கத்தாவில் வசந்த் ப்ரெண்டோட பிஜியில்.”

“வாட்???”

“ஆமா.. அது இருக்கட்டும் உன்னை யாரு மதுரைக்கு போக சொன்னது?”

“என்ட மலருக்காக நான் போயி.”

“அத்தைக்கு தெரியுமா?”

“ஹே…”

“நாளைக்கு காலையில் முதல் வேலை இதை சொல்றது தான்.”

“கார்த்திக் சரியா தான் சொன்னான். நீ குட்டிச் சாத்தான் தான்.”

“ஓ அவ்வளவு ஆகிருச்சா??”

“சக்கரே. விளையாட்டு போதும் இப்போ ஏன் அங்கே போயிருக்க. கொஞ்சமும் பயமே இல்லை.”

“மாறா அண்ணன் போன் போட்டு கத்து கத்துனு கத்தினான். ரொம்ப கடுப்பாயிடுச்சு. அதை விட யாருமே இல்லாம கொஞ்ச நாள் தனியா இருந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு தங்கம் அதான் வந்துட்டேன்.”

“அதில் நானும் அடக்கமா மலரே?”

“ஏன் இப்படி பேசுற உன்னியேட்டா. உன்கிட்ட மட்டும் தான் நான் இங்கே இருக்குறதையே சொல்லிருக்கேன். நீ கார்த்திகிட்ட கூட சொல்லாத. என்னவோ அங்கே இருந்தால் ஒரு மாதிரி அந்நியமா இருக்கு”

“பொன்னு மலர் ரொம்ப பீல் பண்றா அல்லே?”

“தங்கமே இதெல்லாம் ஜஸ்ட் பாஸிங் க்ளவுட்ஸ் தான். அதனால தான் நான் இவ்வளவு தைரியமாவாது இருக்கேன்.”

“ஆனால் எல்லாமே இந்த காதல்னாலே தான மலரே”

“நான் நானாவே இருக்குறது அந்த காதல்னால தான தங்கம். அப்போ அதுக்கான விலையாய் சிலதை அனுபவிக்கலாம் தப்பில்லை. இதெல்லாம் எப்போ வீணாகும் தெரியுமா?”

“?!”

“நம்மோட காதல் பொய்யா போச்சுனால்,   நாம ஒருத்தர் மேலே இன்னொருத்தர்  வைச்சுருக்குற நம்பிக்கையை நாம கெடுத்துகிட்டோம்னால், இந்த அன்பு எதோ ஒரு கட்டத்தில் குறைஞ்சு போச்சுனால் அப்பவும் வீண்.

ஆனால் அதெல்லாம் நடக்குறதுக்கு நமக்கு வாய்ப்பு இல்லை. சோ இதெல்லாம் கஷ்டமே இல்லை தங்கமே.”

“…”

“அதை விட இவங்க எல்லாம் பண்ணின தப்பை அவங்க உணரணும். ஒரு பொண்ணை அவளோட அம்மாகிட்ட இருந்து பிரிச்சு இத்தனை வருஷம் தவிக்க விட்டுட்டாங்களே. அதை என்னால ஏத்துக்கவே முடியலை.

குடும்பத்தில் கோபம் சண்டை எல்லாம் சகஜம் தான் ஆனால் எதையாவது காரணமா வைச்சு அதை முடிவுக்கு கொண்டு வந்துரணும்.

சொந்தத்துக்குள்ளே என்ன ஈகோ வேண்டியது இருக்கு. இப்போ இவங்களுக்கு இருக்குறது கோபம் இல்லை, ஈகோ. அதனால யாருக்கும் எந்த பயனும் இல்லை தான.

நீ எதையும் நினைச்சு கவலைப்படாத. எல்லாரையும் வழிக்கு கொண்டு வந்துரலாம் தங்கமே.”

“உன்னைப் போல எதார்த்தத்தை ஏத்துகிட்டு வாழத் தெரியலை மலரே. ஒரு பாடு கஷ்டமாயிட்டுண்டு.”

“உன்னியேட்டா, எங்க அப்பாவை மாதிரியே என்னை பார்த்துப்பியா?”

“ம்ம்..”

“அப்போ நான் உன்னை அம்மாவைப் போல பார்த்துக்கணும். அம்மா சொன்னா பிள்ளை கேட்கணும். தேவையில்லாத கவலை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு என் மடியில் படுத்து கண்ணை மூடு பார்க்கலாம்.”

“என்ட சக்கரே..”

“நான் இருக்கேன் உனக்கு அப்பறம் என்ன. ஒழுங்கா தூங்கு தங்கமே..”, என்றவள் குழந்தை மனது கொண்ட தாயாய் தன்னவனை அரவணைத்துக் கொண்டாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan July 31, 2026 - 3:16 am

💞💞💞💞💞💞

suganyavel July 31, 2026 - 3:52 am

Malare master piece ma neeye

srichitra July 31, 2026 - 5:43 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode