397
“பொறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
மூங்கில் விட்டு சென்ற பின்னே
“ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
மு.வ விளக்க உரை: தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.”
திருமணம் என்றாலே கொண்டாட்டத்திற்கு குறைவில்லை தான் இதில் இரு வீட்டாரும் ஒரே வீட்டில் இருப்பதென்பதைப் பற்றி கேட்கவா வேண்டும்.
பலராம் பார்வதி கிருஷ்ணனோடு தங்களின் வருங்கால மருமகனுக்கு ஆரத்தி எடுத்து மொத்த குடும்பமும் வாசலில் இருந்து வரவேற்றுச் சென்றது.
இந்த நான்கு வருடங்களில் பலமுறை வந்திருந்தாலும் இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து மருமகனாய் உள்ளே வந்தவனுக்கு மனம் ஒருவித உற்சாகத்தில் இருந்தது.
அமுதினி தனது இரண்டு வயது மகனுடனும் கன்னிகா தனது ஒரு வயது மகளோடும் இருக்க கார்த்திகேயனின் மனைவி ஸ்வப்னா ஏழுமாத கர்பிணியாய் இருந்தாள்.
மாறனுக்கு திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகியிருக்க அவனது மனைவி சித்ராதேவியும் இளையவர்களோடு நின்றிருந்தாள்.
பெருமளவில் சொந்தங்கள் மறுநாள் தான் வரவிருப்பதால் முகுந்தன் இயல்பாய் தன்னவளைத் தேட அமுதினி மொட்டை மாடியைக் கண் காட்டினாள். அதில் புன்னகை பெரிதாக அவளுக்கு கண்சிமிட்டி நன்றி தெரிவித்தவன் மற்றவர்கள் கண்களை உறுத்தாத வண்ணம் மாடிக்குச் சென்றிருந்தான்.
இரவின் நிலவொளியில் அழகிய இளஞ்சிவப்பு வண்ண பட்டுடுத்தி சுவரின் மேல் அமர்ந்தவாறு கால்களை ஆட்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன் குரல் கொடுக்க,
“மலரே…”
“தங்கமே..”, என்றவள் வேகமாய் இறங்கி அவனருகில் வந்திருந்தாள்.
“கவனம். ஏன் இப்படி அவசரம்.”
“ஏன் சொல்லமாட்ட நீ பாட்டுக்கு ஒரு மண்டலத்துக்கு சாமியாகி உட்காந்துட்ட என் கஷ்டம் எனக்கு தான் தெரியும்.”, என்றவள் ஆசை தீர அவனது இரு கன்னங்களையும் கைகளுக்குள் அழுத்திக் கொண்டாள்.
“மலர் என்னை மிஸ் எய்தோ?”
“உனக்குத் தெரியாதா உன்னியேட்டா..”, என்றவள் அவனை இடுப்போடு கட்டிக் கொண்டாள்.
“அமுதினி பரைஞ்சு அஞ்சு மின்ட்டில் கீழே வரணும்னு.”
“அவ கிடக்குறா. அதெல்லாம் சமாளிப்பா. இங்கே பாரு”, என்றவள் தன் இரு கைகளையும் அவன் முன் நீட்டினாள்.
அழகாய் அரக்கு வண்ணத்தில் பதித்திருந்த மருதாணியின் நறுமணத்தை மூக்கின் அருகில் வைத்து மோப்பம் பிடித்தவனாய்,
“மெஹந்தி வைக்கலையா மலரே?”
“உன்னியேட்டனுக்கு இது தான இஷ்டம்.”
“அதுக்காக.. வெட்டிங்க்கு எல்லாரும் அதுதான வைப்பா?”
“நம்ம கல்யாணம் நமக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும். எனக்கு இதுதான் பிடிக்கும்.”, என்றவளின் மூக்கைத் திருகிச் சிரித்தான்.
“இன்னும் இரண்டு நாளில் என்ட சுந்தரிகொச்சு என்ட பாரியா ஆகப் போறா. எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?”
“…”
“நாலு வருஷம்.. இட்ஸ் நாட் ஈசி மலரே. ஒரு பாடு மிஸ் பண்ணிணேன்.”
“ஆனால் எனக்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்குனு பயமா இருக்கு.”, என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க அர்த்தமாய் புன்னகைத்தவனாய் இன்னுமாய் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“இப்படியே வெளியில் போய் சொன்னால் என் மானம் போகும் டி..”
“இருந்தாலும் அதான் உண்மை. நீ சரியான கேடினு யாருக்குத் தெரியும்.”
“என் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா மதி.”, என்றதில் சிணுங்கியவளாய் செல்லமாய் அவனை அடித்தாள்.
இருவருமே தங்களது வேலைகளில் பிசியாக இருந்ததால் பாதிக்கு மேல் திருமண ஏற்பாடுகளாய் என்ன செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் தான் சுற்றி வந்தனர்.
அதிலும் அத்தனை பேரின் செல்லமானவளின் விருப்பப்படியே அவரது தந்தை திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது அறியாமலேயே தன் பிறந்த வீட்டைச் சுற்றி வந்தாள் மங்கை.
மாலை வரவேற்பு, சொந்த பந்தங்களால் வீடே நிறைந்திருக்க சட்டென வீட்டினுள் ஒலிப்பெருக்கி சத்தம் எழுப்ப மங்கை முகுந்தனோடு மற்ற உறவினர்களும் கூடத்திற்கு வர அவர்களது மொத்த குடும்பமும் அவளைத் தான் பார்த்திருந்தனர்.
“ஹே என்னவோ பண்ணி வைச்சுருக்கீங்க எல்லாருமா? என்னது?”, என்றபோது கூட்டத்தின் நடுவில் இருந்து ஆணும் பெண்ணுமாய் ஆறு பேர் வந்து அவளிடம் பூங்கொத்தை நீட்ட ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவளாய் தன் வீட்டினரைத் தான் பார்த்திருந்தாள்.
“பொறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
பொறந்து வரும் போதே சிலரு வரம் தரவே வருவாங்க”
“வரமா வந்தம்மா வாஞ்சை உள்ள தங்கம்மா
சித்தெரும்ப நசுக்காத சிங்கந்தான் எங்கம்மா”
“மறு பிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும்
இந்த மகளுக்கே நானும் தான் மகனாகவேணும்”
என்று இரு இரு வரிகளுக்கும் திருமா மாறன் கார்த்தி என வந்து நின்று அவளுக்கு பூ கொடுக்க கண்களை கண்ணீர் நிறைக்க புன்னகைத்து நின்றவளைத் தோள்பற்றி நின்றிருந்தான் முகுந்தன்.
மகள் முகத்தைப் பார்க்க திறன் இல்லாதவராய் முத்துப் பாண்டி ஒதுங்கி நிற்க அடுத்த பாடலாய்,
மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள் அந்தப் பெண்ணோடு
தந்தைக்குள்ள உரிமை என்ன”,
என்றதிலேயே மங்கைக்கு கண்ணில் நீர்கோர்த்து விட பள்ளி செல்லும் பிள்ளையாய் தந்தையை தான் தேடினாள்.
“ப்பா..”, என்றவள் கைநீட்ட முத்துப் பாண்டி வந்து தன் மீனாட்சியைத் தாங்கிக் கொண்டார். அவள் மீதான அன்பை வெளிப்படுத்த நினைத்தவர்களாய் சிறியவர்கள் இதெல்லாம் ஏற்பாடு செய்திருக்க நினைத்த அளவு எளிதாய் இருக்கவில்லை.
அத்தனை பேருக்குமே கண்கள் கலங்கியிருக்க தந்தையையும் மகளையும் உருட்டி மிரட்டி பூங்கோதையும் குணவதியும் தான் சரி கட்டினர்.
“ஏலேய் உன் தங்கச்சி வீட்டுக்கு வாழ அனுப்ப இந்த அக்கப்போரா?”
“என் பிள்ளை இனி அந்த வீட்டு பொண்ணு தான மா?”
“ம்ம் நான் உன் பொண்டாட்டி எல்லாரும் அப்படிதான வந்தோம். உன் மவ போற இடம் சந்தோஷம் செழிச்சு கிடக்கும்னு சந்தோஷப்படுறதை விட்டுட்டு என்னலே இது.”, என்றவருக்குமே குரல் கரகரத்து தான் இருந்தது.
“கிழவி என் இம்சை இல்லாம ஜாலியா இருப்பல?”
“ஆமாடி எவ்வளவு நிம்மதியா இருப்பேன் தெரியுமா?”
“எங்கப்பா என்னை கொஞ்சுறதில் உனக்கு ஏன் இம்புட்டு வயித்தெறிச்சலோ?”
“தேவை தான் எனக்கு. கல்யாணம் கட்டி போய் அடுத்த வருசமே பிள்ளையை பெத்துக் குடு டி. உன்னையே ஆயுசுக்கும் வளர்த்துட்டு கிடப்பாகளா?”, என்றதில் பாட்டியை அநியாயத்திற்கு முறைத்து வைத்தாள்.
“ம்மா நீ இந்த கிழவிக்கு வக்கணையா சமைச்சு கொடுக்குறல அந்த கொழுப்பு தான்.”
“கண்ணு அப்பத்தாவை அப்படி எல்லாம் பேசாத. அங்கேயும் போய் துடுக்கத்தனமா பேசிப்புடாத என்ன? பார்த்து சூதானமா நடக்கணும்.”
“மதினி எம்மருமகளுக்கு இல்லாத உரிமையா என் வீட்டில? எதுக்கு இப்படி எல்லாருமா பிள்ளையை பயமுறுத்துறீங்க. நீ கண்ணைத் துடை டி மங்கை.”
“ஏன் டா நான் கல்யாணம் பண்ணி போனப்போ யாராவது அழுதீங்களா? இன்னைக்கு என்னவோ குடம் குடமா கண்ணீர் விடுறீங்க!”, என்ற அமுதினியைப் பார்த்த திருமா தன் கைக்குட்டையைக் கொடுத்தவாறு,
“முதல்ல உன் கண்ணைத் துடைச்சுட்டு பேசு டி.”, என்றதில் அமுதினி தன் மங்கையை ஆரத் தழுவிக் கொண்டாள்.
பின் மதியத்தில் மண்டபத்திற்கு வந்த மங்கை அருகில் இருந்த சிறு இடத்தில் பந்தல் போடப்பட்டு மக்கள் வந்து போன வண்ணம் இருந்ததைக் கவனித்துத் தந்தையிடம் கேட்க,
“நீ தானலே மீனாட்சித் திருக்கல்யாணத்தை போல உன் கல்யாணம் நடக்கணும்னு சொன்ன அஞ்சு ஆசிரமம் முதியோர் இல்லத்துக்கு எல்லாம் இன்னைக்கு காலையில் இருந்து நாளைக்கு ராத்திரி வரை இங்கே இருந்து தான் சாப்பாடு போகுதுலே.
ஊருக்கே போட ஆசை தான். இப்போதைக்கு என்னால முடிஞ்சுது. சந்தோசமா?”, என்ற தந்தைக்குப் பதில் சொல்லக் கூட முடியாமல் நின்றிருந்தாள் மங்கை.
மாலை வரவேற்பு கோலாகலமாய் தொடங்கியிருக்க மாப்பிள்ளை அழைப்பு முடிந்து வாசலில் இருந்து முகுந்தன் உள்ளே நுழைந்த நேரம்,
“போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு..
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு..
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு…
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு..”
என்ற பாடல் தொடங்க முகம் கொள்ளா புன்னகையோடு மேடையை அடைந்தவன் தன்னவளுக்காக வாசலையேப் பார்த்திருக்க, திருமாவும் மாறனும் முன்னே பிடித்திருக்க கார்த்திகேயனும் கிருஷ்ணனும் பின்னே பிடித்திருந்த தாமரை வடிவ பல்லக்கின் நடுவில் தேவதையாய் அமர்ந்திருந்தாள் மாமலர் மங்கை.
முகுந்தன் விழிவிரித்து பற்கள் தெரிய புன்னகைத்து நிற்க மொத்தக் குடும்பமும் தங்கள் வீட்டு பெண்ணின் அழகை கண்குளிர பார்த்து மகிழ்ந்தனர்.
“பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
என்ற பாடலுக்கு தாமரையின் நடுவில் ஆரஞ்ச் வண்ணப் பட்டுப்புடவையில் தங்க நகைகள் மட்டுமே கழுத்தை நிறைத்திருக்க மெலிதான ஒப்பனையில் தலையை வரவேற்பிற்கு ஏற்றவாறு அலங்கரித்து விரித்து விட்டிருந்தவளின் முகத்தில் அத்தனை நாட்களும் அவள் அறியாத நாணம் மேலும் அழகூட்டுவதாய்.
“மாறாத அன்பு வெச்ச மகராசி..
மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது……”
என்றவள் அண்ணன்களின் கைப்பிடித்து மேடையேறி தன்னவனின் அருகில் நின்ற நொடி முகுந்தன் தனது இடக்கையை அவளது வலக்கையோடு கோர்த்துக் கொண்டான்.
“ஆரானு இது. இத்தர சௌந்தர்யமாய் இத்தர அமைதியாய்.”
“தங்கமே.. செம டென்ஷனா இருக்கு.”
“நாங்க எல்லாம் இருக்கும் போது என்ன டென்ஷன் மலரே. இது உனக்கான நாள். ஹேப்பியா இருக்கணும் என்ன?”
“ம்ம்..”, என்றவள் மென்னகைக்க மணமக்களுக்கான மாலை கொண்டு வரப்பட்டது.
முகுந்தனும் மங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் நின்றிருக்க மங்கையின் அந்த கருகரு விழிகளில் நோக்கியவனாய் அசையாமல் நின்றிருந்தான் முகுந்தன்.
அவளே முதலில் மாலை போடலாம் என்று கையை உயர்த்த சற்று தலையை பின்னே இழுத்தவன் புன்னகைத்து நின்றான்.
“ஏட்டா..”, என்றவள் வெட்கத்தில் குனிந்து நிமிர அவளையே பார்த்தவன் இடவலமாய் தலையசைத்து தன் இடக் கன்னத்தை அவள்புறம் திருப்பி ஒற்றை விரலால் சுட்டிக் காட்ட மங்கை மொத்தமாய் முகம் சிவந்து போனாள்.
அருகில் மொத்தக் குடும்பமும் ஆரவாரம் செய்ய யாரையும் நிமிர்ந்து பார்க்கக் கூட திரானி இல்லாதவளாய் லேசாய் உதடு பதித்து நகர்ந்தாள்.
முகுந்தனின் புன்னகை பெரிதாக ஒற்றைக்கால் மடக்கி அமர்ந்தவன் அவள் மாலையிட வாகாய் தலை குனிந்திருந்தான்.
மங்கைக்கு கண்கள் அதுவாய் கலங்க அவளைப் பார்த்து இரு கண்களையும் சிமிட்டிவனாய் மாலையை அணிவிக்குமாறு செய்கை செய்தான்.
மாலையை அணிவித்தவள் இப்போது எவ்வித தயக்கமும் இன்றி அவனது கன்னம் பற்றி நெற்றியில் அழுந்த இதழ் பதித்து நகர்ந்து நின்றாள்.
“என்ன முகுந்தா நீ இப்படி சரண்டர் ஆகிட்ட?”
“இப்போவா? அது ஆச்சு அஞ்சு வருஷம்.”, என்றதில் பெரிதாய் ஒரு சிரிப்பலை அவ்விடத்தை நிரப்பியது.
அடுத்ததாய் விருந்தினர்கள் எல்லாம் பரிசுப் பொருட்களைக் கொடுத்து முடித்திருக்க, டிஜேவிற்கு செய்கை செய்தபடி முகுந்தன் மங்கையின் கைப்பிடித்து கீழே அழைத்துச் செல்ல இளையவர்கள் மங்கையை சுற்றி நின்ற வண்ணம் சிரித்திருந்தனர்.
“ஐயோ இதெல்லாம் வேணாம்..”
“அப்போ சொன்னது தான். இது உனக்கான நாள் சக்கரே. உனக்கு எப்போ நிறுத்தணும்னு தோணுதோ அப்போ ஆடுறதை நிறுத்து. என்ன ரெடியா?”, என்றதற்கு சம்மதமாய் தலையசைத்தவள் தன்னவனோடு சேர்ந்து போட்ட ஆட்டத்தில் மற்றவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் ஆடுவதையே நிறுத்தியிருந்தனர்.
வசந்த் கார்த்தி திருமா மாறன் கிருஷ்ணன் என இளசுகளின் விசில் சத்தத்தில் இன்னுமாய் பரவச நிலைக்கு சென்றிருந்த மங்கையை இடுப்போடு சேர்த்து சுற்றியிருந்தான் உன்னி முகுந்தன்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞
Super💕
Very nice