500
“வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு
மு.வ விளக்க உரை: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.”
முத்துப் பாண்டியும் இனியனும் வந்த தடம் தெரியாமல் கீழே சென்று விட்டிருந்தனர். இங்கு தாத்தாவை பார்த்துக் கொள்ள மாறணும் கார்த்தியும் இருந்து கொள்வதாய் கூறி மங்கையையும் திருமாவையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் கீழ் தளத்திற்கு வர தந்தையும் சித்தப்பாவும் இருப்பதைக் கண்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு நால்வருமாய் கிளம்பியிருந்தனர்.
இவர்கள் உள்ளே நுழைந்த நேரம் பூங்கோதை கண்ணீர் வடிய தன் இரு மகள்களுக்கும் தட்டில் உணவை வைத்து ஊட்டிக் கொண்டிருந்தார்.
“ஏய் ஃப்ளவர் எனக்கு?”, என்று மங்கை அவரிடம் குதித்தோட திருமா தன் அப்பாவையும் சித்தப்பாவையும் தயக்கமாய் பார்த்த வண்ணம்,
“வயசில் தான் அவ சின்னவ ஆனால் எல்லாரையும் விட மனசளவில் ரொம்ப பெரிய மனுஷிப்பா..”, என்றவன் உள்ளே சென்றுவிட அண்ணன்களைப் பார்த்த தங்கைகள் இருவரும் அவசரமாய் எழுந்து நின்றனர்.
ஆண்கள் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்றுவிட பூங்கோதை மீண்டுமாய் உணவை கையில் எடுத்தார்.
“அடியே நானே எம்மகளுக்கு இப்போ தான் சோறு ஊட்டுறேன். வந்துட்டா பங்குக்கு போய் உன் ஆத்தாகிட்ட ஊட்ட சொல்லு போ”
“நல்லா கேட்பேன். நீ உன் மவளுங்களையே கொஞ்சிட்டு கிட”, என்றவள் உணவு மேசைக்குச் செல்ல அங்கு தாமோதரனும் பலராமும் கிருஷ்ணனோடு உணவருந்திக் கொண்டிருந்தனர்.
“கிச்சு மாமா நாளைக்கு உன் சமையல் தான். என்ன எல்லாம் வேணும்னு சொல்லு அம்மாவும் சித்தியும் ரெடி பண்ணிடுவாங்க. என்ன?”
“நீ ரொம்ப மோசம் அண்ணி.”, என்றவன் அவளுக்கு முதுகுகாட்டி அமர்ந்த வண்ணம் உண்ண ஆரம்பித்தான்.
“ம்மா பசிக்குது எவ்வளவு நேரம்?”, என்ற நேரம் விஜயலட்சுமி பலராமின் தட்டில் தோசையை வைத்துவிட்டுத் திரும்பியவராய்,
“மாவு தோசையா ஆக வேணாமா பாப்பா.. இரண்டு நிமிசம் பொறு கொண்டு வரேன்”, என்று விட்டுச் செல்ல பலராம் ஒரு வாய் தோசையை எடுத்து மங்கையின் வாயருகில் நீட்டினார்.
“மாமா நான் சும்மா அவங்களை கடுப்பேத்துவேன் இப்படி தான். நீங்க சாப்பிடுங்க.”
“என்ட மோள் நான் கொடுத்தா வாங்க மாட்டாளா?”, என்றதில் தாமோதரனுக்கே சற்று ஆச்சரியமாய் போனது. அவருக்கும் மங்கை செல்லப் பிள்ளை தான் எனினும் பெண் பிள்ளை என்பதால் சற்று தள்ளி நின்று தான் வழக்கம்.
ஆனால் பலராம் இப்போது மகளென கூறி உணவை ஊட்ட நினைத்தது அவருக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாய் இருந்தது.
“அச்சா இதெல்லாம் அநியாயம். எனக்கு ஊட்டிவிடாமல்?”
“என்ட பார்வதியை சந்தோஷமாக்கி கொடுத்த இ கொச்சு என்ட ப்ரியப்பட்ட மோளு டா. ஞான் எல்லாம் செய்யும்.”, என்றதில் மகிழ்ச்சியாய் மங்கை உணவை வாங்கிக் கொள்ள அங்கு அனைவருக்குமே அதைப் பார்த்து உள்ளம் நிறைந்து போனது.
கிருஷ்ணன் அதை புகைப்படம் எடுத்து தமையனுக்கு அனுப்ப இங்கு சாப்பிட வந்த திருமா முத்துப் பாண்டி மற்றும் இனியனுக்குமே பலராமின் மீது பெரும் அபிப்ராயம் வந்திருந்தது.
இருந்த தோசையை அவளுக்கே ஊட்டி முடிக்க அவரோடு கதையளந்தபடி உணவு உண்ணும் மகளை ஏக்கமாய் பார்த்திருந்தார் முத்துப் பாண்டி.
சமையலறைக்குள் குணவதி மகிழ்ச்சியாய் வேலையை கவனிக்க விஜயலட்சுமி அவரிடம்,
“பாப்பா இங்கே இருந்ததை விட கல்யாணத்துக்கு அப்பறம் கெட்டு போக போறா அக்கா. அண்ணன் இப்படி செல்லம் கொடுத்தா என்னத்துக்கு ஆகும்?”
“ஆமா விஜி நான் நினைக்கவே இல்லை. எம்புள்ளை வாழ்க்கையை பத்தின பயம் விட்டுது. அது குணத்துக்கு நூறு வருசம் நல்லாயிருக்கணும்.”
“பார்த்தீங்களா மாமாவும் என் வீட்டுக்காரரும் கூட அமைதியா இருக்குறதை?”
“ஆமா நான் கூட பயந்தேன். வந்தவுகளை எதுவும் சொல்லிடுவாங்களோனு. என்னவோ எல்லாம் நல்லதா நடந்தா சரி.”
“போதும் மாமா. வயிறு ஃபுல்.”
“இன்னும் ஒரு வாய் மோளே.”
“ம்ஹும் போதும் மாமா. தேங்க் யூ நீங்க சாப்பிடுங்க.”, என்றவள் தந்தையின் தட்டில் இருந்த முருங்கை காயை எடுத்துக் கொண்டு கண்சிமிட்டிச் சென்றாள்.
ஆண்கள் ஆறுபேர் மட்டுமே உணவு மேசையில் அமர்ந்திருக்க கிருஷ்ணன் திருமாவைப் பார்த்து சிநேகமாய் சிரித்தான்.
அதைத் தாண்டி யாருக்குமே என்ன பேசுவது என்று தெரியாத நிலையில் பலராமே பேச்சைத் தொடங்கினார்.
“இன்னும் உங்களுக்கு கோபம் குறையலைனு தோணுது.”
“…”
“உங்ககிட்ட இருந்து பார்வதியை பிரிக்குறது என்னோட நோக்கம் கிடையாது. ஆனால் உங்க கோபத்துக்காக பயந்து தான் இத்தனை வருஷமும் உங்களை பார்க்க வரலை.”
“..”
“பார்வதி நீங்க எல்லாரும் இந்தளவு எதிர்ப்பீங்கனு நினைக்கலை. அது தெரிஞ்சுருந்தா நிச்சயமா என்னைத் திரும்பி கூட பார்த்துருக்க மாட்டா. அவளுக்கு உங்க மேல ஒரு பாடு நம்பிக்கை.”
“…”
“இத்தனை வருஷமும் நான் அவளை ரொம்ப நல்லா தான் பார்த்துக்கிட்டேன். அவ கேட்டு என்னால கொடுக்க முடியாத ஒரே விஷயம் நீங்க எல்லாரும் தான்.”
“…”
“அவ பாவம். அவளை நீங்க ஏத்துக்கிட்டா அதை விட எனக்கு பெரிய சந்தோஷம் எதுவுமில்ல. அவளுக்காக நான் உங்ககிட்ட ம..”
“பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம்.”, என்று முத்துப் பாண்டி சட்டென அவரை பேச விடாமல் தடுத்திருந்தார்.
“ஊரை விட்டு எதுவும் தெரியாமேயே இருந்துட்டோம். அதனாலேயே சரியா யோசிக்காம போயிட்டோம். நாங்களும் உங்களைப் பார்க்க எப்போவாவது முயற்சி பண்ணிருக்கணும்.. முடிஞ்சதைப் பத்தி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை.
எங்க வீட்டு பொண்ணை இவ்வளவு நல்லா பார்த்துகிட்ட உங்களுக்கு நாங்க தான் நன்றி சொல்லணும். எனக்கு கோபத்தை விட அவ மேல வருத்தம் தான். ஆனால் இப்போ யோசிச்சா அவ நிலைமையும் பாவமா தான் இருக்கு.
எது எப்படியோ எங்கே மேலே இருக்குற வருத்தத்தை எல்லாம் மறந்து நீங்க இங்கே வந்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்”, என்றவர் பலராமிடம் கைக் கூப்பினார்.
“அண்ணே..”, பார்வதி முத்துப் பாண்டி அருகில் வர இடத்தில் இருந்து எழுந்தவராய் அவ்வளவு நேரத்தில் முதல் முறையாய் தங்கையை முகத்துக்கு நேராய் நோக்கினார்.
“நீ நல்லாயிருக்கணும்னு நினைச்சு தான் உன்னை அனுப்பி வைச்சேன். அதை இப்போ கண்கூடா பார்க்கவும் பார்த்துட்டேன். நல்லாயிரு பாரு.”, என்றதும் நொடியும் தாமதிக்காமல் அண்ணின் மீது சாய்ந்து அழுது தீர்த்து விட்டார் பார்வதி.
இனியன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருக்க பூங்கோதை தன் இளைய மகனைத் தான் பர்த்திருந்தார்.
“அப்போ வயசு வேகத்தில் புத்தியில்லாம கையை நீட்டிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க”, என்று பலராமிடம் அவர் கூறியதைக் கேட்ட பூங்கோதை மேலே பார்த்து தாய் மீனாட்சிக்கு கோடி நன்றிகளை உரைத்தார்.
“அண்ணே..”
“நீ பேசாத. உன்னை மன்னிக்க முடியுமானு எனக்குத் தெரியலை. ஆனால் என் பிள்ளைகளோட பெரிய மனுசத்தனம் கொஞ்சமாவது எனக்கும் வேணும்னு தோணுது. இது உன் தாய் வீடு இனியாவது வந்து போய் இரு.”, என்றவர் சிறிய மருமகனின் முகத்தை வாஞ்சையாய் தடவி விட்டு உள்ளே சென்றுவிட்டார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
💞💞💞💞💞💞
Lovely😊
Very nice
Today is illaya sri ma