வரம்-3

by ஸ்ரீ
1 comment 562 views
A+A-
Reset

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

விளக்கம்
உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..

மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.

அன்று இரவு வேலையை முடித்து வந்த அருணோடு தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் அன்பு.

“ஆனாலும் கூடவே சுத்துறனே செவ்வாழை ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல?!”

“டேய் நானும் காதலிச்சா உன்கிட்ட தான் முதல்ல சொல்லிருப்பேன்.அது இல்லாதப்போ..”

“மச்சான் புரியுது..ஆனாலும் நம்ம காயத்ரிக்குள்ள இப்படி ஒரு காதலியா?”,மீண்டும் மீண்டும் கிண்டல் செய்து கொண்டிருந்த நண்பனைப் பார்த்துக் கடுப்பாய் முறைத்தான் அன்பு.

“சரி சரி டென்சன் ஆகாத..என்ன பண்ணலாம்னு இருக்க?”

“அப்போ அவகிட்ட சொன்ன காரணங்கள் எதுவும் இப்போ தடையா இல்லை டா..நல்ல நிலைமைல இருக்கேன்.தம்பி தங்கச்சிக்காக தான் யோசிக்கணும்.”

“யார்றா இவன்.ஒரு பொண்ணு உனக்காக இத்தனை வருசமா காத்துக் கிடந்தேன்னு வந்து நிக்குறா.நீ என்னமோ தம்பி தங்கைச்சினுட்டு..”

“எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க முடியாதே டா அருணு.வீட்டுக்கு மூத்த புள்ளையா பொறுப்பு இருக்குல..”

“ம்ம் நீயெல்லாம் ஒரு அம்பது வருசம் முன்னாடி பொறக்க வேண்டியவன்ட்றா.”

“…”

“சரி யோசிச்சு நல்ல முடிவா எடு..என்னைய கேட்டா யோசிக்காம போய் அவகிட்ட சரண்டர் ஆகிருனு தான் சொல்லுவேன்.வீட்டுக்காக நீ யோசிக்கும் போது அவுகளும் உன் விருப்பத்தை மதிப்பாங்கடா..வரட்டுமா..”

“ம்ம்”,என்று தலையசைத்தவனின் மனம் மொத்தமாய் குழம்பிப் போயிருந்தது.அவள் கூறியது போல் ஒரு மிஸ்ட் கால் கொடுத்ததோடு சரி அதன் பின் அவனை தொந்தரவு செய்யவில்லை.ஏனோ அந்த இரு தினங்கள் கண் மூடித் திறப்பதற்குள் ஓடியிருந்தன.

அதற்கு மேல் அவளை காக்க வைக்க விரும்பாதவனாய் காலையிலேயே அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

“குட்மார்னிங் காயூ.”,அடுத்த நொடி அவளிடமிருந்து பதில் வந்திருந்தது.அவனது அழைப்பிற்காக எத்தனை காத்திருக்கிறாள் என்பது அதிலேயே புரிந்தது அன்புச்செல்வனுக்கு.

“சொல்லு அன்பு.வெரி குட் மார்னிங்..”

“உன் கூட பேசணும்.எப்போ ப்ரீயோ சொல்லு”

“எப்பவும் உனக்காக என் நேரம் காத்திருக்கும்,எங்கே வரணும்னு சொல்லு.”படித்தவனின் உதட்டில் அழகான ஒரு புன்னகை.

“சரி மருதமலை கோவிலுக்கு வந்துரு காயூ நான் கிளம்பிட்டேன்”

“நானும்..”,அதை ஒரு நொடி இமைக்காமல் பார்த்திருந்தவன் ஆழ்மூச்செடுத்துக் கொண்டு பைக்கைக் கிளப்பியிருந்தான்.

அன்புச்செல்வன் பைக்கை நிறுத்திவிட்டு பார்க்கிங்கில் இருந்து சற்று தூரத்தில் இருந்த நிழலான இடத்தில் அமர்ந்தான்.அடுத்த பத்து நிமிடத்தில் பைக்கில் கம்பீரமாய் வந்தவளை பார்த்து அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

தனக்கான பொருள் என்றதும் வருமே ஒருவித உரிமை அது அவனை லேசாய் ஆட்கொண்டிருந்தது அந்த நொடியில்.

வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் அவனைக் கண்டுகொண்ட நொடி தன் ஹெல்மெட்டைக் கழற்றியவாறே முகத்தில் ஒட்டிய புன்னகையோடு அவனை நோக்கி வந்தாள்.

ஐந்தரை அடிக்கும் சற்று அதிகமான உயரம் ஒல்லியுமல்லாத குண்டுமல்லாத உடல்வாகு.அதற்கு கணகச்சிதமாய் பொருந்தியிருந்த அவளது உடை நீலநிற ஜீன்ஸும் கருப்பு கட்டம் போட்ட கஷ்வல் சட்டையின் கையை பாதி மடித்து விட்டபடி முடியை சாதாரணமாய் போனிடெயில் போட்டிருந்தாள்.

அவன் அவளைக் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் அருகிலேயே வந்திருந்தவள் நிதானமாய்,

“பரவால்ல உனக்கு சைட் கூட அடிக்கத் தெரியுமா?”,என்றபடி அவனது அருகில் சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.

“என்னைப் பார்த்தா என்ன சன்னியாசி மாதிரியா தெரியுது உனக்கு?”

“எனக்கில்ல ஊருக்கே அப்படிதான் தெரியுது..”,என்றவள் பற்கள் தெரிய புன்னகைக்க வெட்கச் சிரிப்பு அவனிடத்தில்.

அவனது சிரிப்பையே அவள் பார்த்திருக்க அதை கவனித்தவனாய் அதே புன்னகையோடு பேச வேண்டியதை மனதிற்குள் யோசிக்க ஆரம்பித்தான்.

“சொல்லு அன்பு உன் பதில் என்னனு எனக்குப் புரிஞ்சுடுச்சு ஆனாலும் எதைதெல்லாம் தெளிவுபடுத்திக்க நினைக்கிறியோ அதையெல்லாம் சொல்லிடு”,என்றவளை ஆச்சரியம் அகலாமல் பார்த்தான்.

“உன்னோட இந்த அன்புக்கு நான் தகுதியானவனானு கேட்கணும் அதுதான் முதல் விஷயம்.”

“ஏன் அப்படி சொல்ற அன்பு..உன் முடிவை நீ அப்போவே சொல்லிட்ட ஆனாலும் என் மனசை மாத்திக்க முடியல..நீ நினைச்சுருந்தா என்னை பயன்படுத்தி இருந்துருக்கலாம்.முடிஞ்ச வரை ஊரை சுத்திட்டு கடைசில வீட்ல பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போயிருந்துருக்கலாம்.

ஆனால் அதெல்லாம் நீ பண்ணலையே.இதைவிட ஒருத்தங்களோட அன்புக்கு என்ன தகுதி வேணும்னு நினைக்குற.”

“….”

“….”

“காயூ என்னைப் பத்தின எல்லாமும் நீ கண்டிப்பா தெரிஞ்சு வைச்சுருப்ப..நீ சுதந்திரமா தனியா வளர்ந்தவ என் குடும்ப சூழல் உன்னை அப்படியே இருக்க விடுமானு எனக்கு தெரியல.

கண்டிப்பா உன் சந்தோசம் பிரதானமா தான் இருக்கும்.ஆனால் சில நேரங்களில் நீ விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை வரலாம்.அது உன் மனசைக் கஷ்டப்படுத்தலாம்.கல்யாணம்னு வரும்போது இதெல்லாமே நாம யோசிக்க வேண்டிய விஷயங்கள்..”

“அன்பு ஒருத்தங்களை நாம நேசிக்குறோம்னு வந்த அப்பறம் அவங்களை அவங்களோட எல்லாத்தையும் சேர்த்து தான் நேசிக்கணும்.நீ மட்டும் இல்லாம உன் குடும்பமும் அதில் அடக்கம்.

அதுக்காக அந்தக் காலத்து பொண்ணு மாதிரி நீ தான் கடவுள் உனக்காக நான் எதையும் தாங்குவேன்னு எல்லாம் அர்த்தம் இல்ல.

என்னை நீ பத்திரமா உன் மொத்த காதலோட பார்த்துக்கோ உன்னையும் உன்னை சார்ந்தவங்களையும் அதைவிட பல மடங்கு நான் நல்லா பார்த்துக்குறேன்.சிம்பிள்.”

“நல்லா பேசுற..”,அழகாய் ஒரு புன்னகை பெண்ணிடத்தில்.சில நொடிகள் அமைதியாய் கரைய தூரத்தை வெறித்துக் கொண்டிருந்தவளின் செவிகளில் அமுதமாய் நுழைந்தது அவனது வார்த்தைகள்.

“ஐ லவ் யூ காயூ..”,அதிசயித்து கண்களை விரித்தவளைப் பார்த்தவனுக்கு உதட்டின் புன்னகை பெரிதானது.

“இத்தனை வருசத்தில் உன்னை நினைச்சதேயில்லனு பொய் சொல் மாட்டேன்.என்னை விரும்புறதா சொன்ன முதலும் கடைசியுமான பொண்ணு நீ தான்.அப்பப்போ உன் முகம் மனசில் வந்து போகும்.உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கும்னு யோசிச்சு உடனே அதை மறக்க முயற்சி பண்ணிருக்கேன்.

அப்பா அம்மாவை சார்ந்ததாவே சின்ன வயசில் இருந்து வாழ்க்கை இருந்துருக்கு.படிப்புக்காக கூட வெளியில் போக வேண்டிய நிலைமை வரல..வசதி வாய்ப்பும் பெருசா இல்லாத காரணத்தால நல்ல நிலைமைக்கு வரணும்கிற எண்ணம் தான் பிரதானமா இருந்துடுச்சு.

எல்லாம் இரண்டு நாள் முன்னாடி உன்னைப் பார்க்குற வரைக்கும்.என்னை மாதிரி ஒருத்தனுக்காக காத்திருக்குறது எல்லாம் என் கனவில் கூட நடக்காத விஷயம்.இப்போ எனக்கு கடமைனு பெருசா எதுவும் இல்ல.இத்தனை வருசமா நல்ல ஒரு மகனா எல்லாமே பண்ணிருக்கேன்.

இந்த விஷயத்தை வீட்டில் எப்படி எடுத்துப்பாங்கனு ஒரு சின்ன தயக்கம் இருந்தது.இப்போ உன்னோட பேச ஆம்பிச்ச அப்பறம் அதுவும் இல்ல.கண்டிப்பா என்னைப் புரிஞ்சுப்பாங்க.,இல்லைனாலும் புரிஞ்சுக்க வைப்பேன்.

உன் அளவு காதலை உனக்குத் திருப்பி கொடுக்கணும்ங்கிறது மட்டும் தான் இப்போ எனக்கு இருக்குற ஒரே கவலை.”,என்றவன் புன்னகைக்க அழகாய் அதை தனக்குள் நிரப்பிக் கொண்டவள் அவனது பார்வையைத் தவிர்த்தாள்.

“…”

“என்னாச்சு எதுவும் பேச மட்ற?”

“ஐ லவ் யூ அன்பு..இந்த வார்த்தையை வேற யார்கிட்டேயும் சொல்லவிடாம பண்ணிணதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.”

“உண்மையா இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு..”

“வேணும்னா வீட்டுக்கு வாயேன் அம்மா உன்னை கவனிக்குறதுலேயே இதெல்லாம் நிஜம்னு புரிஞ்சுப்ப..”

“ஹே என்ன உங்க அம்மாக்கு தெரியுமா?”

“ம்ம் நம்ம காலேஜ் கடைசி நாள் அப்போவே தெரியும்.ஆனா இவ்வளவு சீரியசா இருப்பேன்னு நினைச்சுருக்க மாட்டாங்க..”

எதுவும் பேசத் தோன்றவில்லை அன்புச்செல்வனுக்கு.அவள் அவனையே பார்த்திருப்பதை உணர்ந்தவனாய்,

“இன்னையிலிருந்து ஒன்னு இல்ல ரெண்டு மாசம் டைம் கொடு உன்னோட காதலனா இருக்குறதுக்கு.அதுக்கப்பறம் வீட்டுல பேசுறேன் காயூ.

நீ தொலைச்ச இத்தனை வருசத்தை திருப்பி தர முடியுமா தெரியல.பட் கண்டிப்பா மோசமான காதலனா இருக்க மாட்டேன்னு நம்புறேன்.”,என்றவன் கை நீட்ட அப்படியாய் ஒரு திருப்தி காயத்ரியின் கண்களில். யோசிக்காது தன் கரத்தை அவனோடு கோர்த்தவளின் கண்கள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

நிமிடங்கள் அமைதியாகவே கரைய சிறிது நேரத்தில் தன்னை மீட்டெடுத்தவனாய் அவள் கையை தன் கைகளால் அழுந்தப் பிடித்து விடுவித்தான் அன்பு.

“டியூட்டி ஜாயின் பண்ணிட்டியா?”

“இல்ல அன்பு நாளைக்கு தான்.நீ கிளம்பு கடைக்கு கூட்டம் வர்ற நேரம்.”

“சரி நான் போயிட்டு ஒரு ஒன் அவர்ல வரேன் உனக்கு எங்கே போனுமோ சொல்லு போலாம் காயூ.எப்படியும் நாளையிலிருந்து நீ பிஸி ஆகிடுவ.”

“சரி நானும் நீ கூப்டியேனு அப்படியே வந்துட்டேன்.ரெடியாயிட்டு வரேன்.எங்க வேணும்னாலும் போலாம்.எனக்கு உன்னோட இருந்தாலே போதும்”,என்றவள் எழுந்து கொள்ள நிறைவான புன்னகையோடு அவளை வழியனுப்பி வைத்தான் அவளின் அன்புக் காதலன்.

அவள் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் வரையிலுமே அவளை விட்டு பார்வையை நகர்த்தவில்லை அன்புச்செல்வன்.கிளம்பும் நேரத்தில் சிறிதாய் ஒரு தலையசைப்பு அவளிடத்தில்.ஹெல்மெட் முகத்தை மறைத்திருக்க விழிகளின் விடைபெறுதலை அவ்வளவு ரசித்திருந்தான்.

புன்னகை மாறாத முகமாய் கடைக்கு வந்தவன் தேவையானவற்றை முடித்துவிட்டு கணக்குப்பிள்ளையை கல்லாவில் அமர்த்திவிட்டு நேராக வீட்டுக்கு கிளம்பியிருந்தான்.

அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர்பாராதவராய் ராகினி,”வாப்பா என்ன இந்த நேரத்துல வந்துருக்க..உடம்புக்கு ஒண்ணுமில்லையே?!”

“ம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல கொஞ்சம் வெளில போணும் அதான் கார் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.”

“சரிப்பா நீ வா காபி எடுத்துட்டு வரேன்..”,என்றவர் சமையலறைக்குச் செல்ல மாடியில் தனதறைக்குச் சென்றவன் மீண்டும் குளித்துவிட்டு அடர்நீல நிற ஜீன்சும் வெள்ளை டீஷர்டுமாய் கார் சாவியோடு இறங்கி வந்தான்.

மகனின் முகம் அந்த தாய்க்கு சொல்லாமல் எதையோ சொல்லியது இருந்தும் என்னவென்று கணிக்க முடியாதவராய் அவனையே பார்த்திருந்தார்.

“ம்மா காபியை கொடுக்காம என்ன யோசனை?”

“ஒண்ணுமில்ல கண்ணா இன்னைக்கு ஏதோ வித்தியாசமா தெரியுற அதான் பார்த்தேன்.”

“ம்ம் அதுசரி “,என்றவன் பேச்சை வளர்க்காது கிளம்பியிருந்தான்.அதற்குமேல் அன்னை எதுவும் கேட்டுவிட்டால் நிச்சயமாய் விஷயத்தை உளறி விடுவான் என்ற பதட்டத்திலேயே நிற்காமல் ஓடியிருந்தான்.

காயத்ரி வீடு அமைந்திருந்த தெருமுனையில் இருந்து அவளை அழைக்க,அழைப்பை ஏற்றவள் அவனை வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.

“ஹே அதெல்லாம் வேண்டாம்..அப்பறமா…”

“அப்பா இல்லை அன்பு,அம்மா உன்னை பார்க்கணும்னு கூப்டுறாங்க வா ஒண்ணும் பிரச்சனையில்ல.”

வீட்டு வாசலில் காரை நிறுத்தியவனின் மனம் எங்கும் ஒருவித பதட்டம் குடிகொண்டிருந்தது.

வரவழைத்த தைரியத்தோடு வீட்டு வாசலை அடைந்த நேரம் கதவைத் திறந்து புன்னகைத்தாள் காயத்ரி.அழகிய சிவப்பு வண்ண சுடிதாரில் அளவான ஒப்பனையோடு தலையில் சிறிது பூவுவோடு நின்றவளைப் பார்த்தவனுக்கு கல்லூரி கால காயத்ரி மனக்கண்ணில் வந்து போனாள்.

“வா அன்பு..”,என்றவள் முன்னே செல்ல அவளைத் தொடர்ந்து சென்றவனுக்கு ஹாலில் இருந்தவரைப் பார்த்து இதயம் கனத்துவிட்டது.

வீல்சேரில் அமர்ந்து அவனைப் பார்த்து புன்னகையோடு கையசத்தவரை சத்தியமாய் இந்த நிலைமையில் அவன் எதிர்பார்க்கவில்லை.

“ஆன்ட்டி..”

“வாப்பா எப்படியிருக்க..எத்தனை வருசம் ஆச்சு உன்னைப் பார்த்து..”

இயல்பாய் அவரருகில் தரையில் அமர்ந்தவன் கேள்வியாய் காயத்ரியைப் பார்க்க அவளோ நிதானமாய் அவனுக்கான பழச்சாறோடு அங்கே வந்தாள்.

“நாலு வருஷம் முன்னாடி திடீர்னு பாரலிடிக் அட்டாக்..கண்மூடி திறக்குறதுக்குள்ள எல்லாம் நடந்துருச்சு..முதல்ல ரொம்பவே கஷ்டப்பட்டாங்க..இப்போ எதார்த்தத்துக்கு பழகிட்டாங்க..அதோட அர்த்தம் தான் இந்த சிரிப்பு.நீ ஃப்ரியா இரு அன்பு.அவங்களும் அதைதான் விரும்புவாங்க.”

“அட இப்போ என் கதையெல்லாம் எதுக்கு..அன்பு ஒரு வழியா இவளை சமாளிக்குறதுக்கு தயாராய்ட்ட போலேயே..ஓகே சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா உன்னைய காப்பாத்திருப்பேனல்ல கண்ணு..”

“ம்மா..”,என்றவள் அன்னையை முறைக்க அவனோ சத்தமாய் சிரித்திருந்தான்.

“சரி சரி பாவம் அவன் விதி இத்தனை வருசம் கழிச்சும் உன்றகிட்ட தான் மாட்டணும்னு இருக்கு என்ன பண்றது.”

“ஆன்ட்டி உண்மையா நான் ரொம்ப லக்கி..அது உங்களுக்கும் தெரியும்.”,என்றவனை அன்பாய் பார்த்தவர் அவன் தலையில் லேசாய் கை வைத்தவாறு,

“இரண்டு பேரும் இதே மாதிரி சந்தோஷமா நூறு வருசம் சேர்ந்து இருக்கணும்.”

“தேங்க்ஸ் ஆன்ட்டி சீக்கிரமே வீட்ல பேசிட்டு சொல்றேன்.”

“நல்லதுப்பா..சரி நீங்க வெளியில போறதா சொன்னா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.நீங்க கிளம்புங்க.”

“சரிம்மா நீ பார்த்துப்ப இல்ல..சரண்யா அக்கா இப்போ வந்துடுவாங்க..”

“அதெல்லாம் நான் பார்த்துப்பேன்..நீ போயிட்டு வா காயூ..”

“வரேன் ஆன்ட்டி உடம்பை பார்த்துக்கோங்க.”,என்றவனுக்கு அதற்குமேல் என்ன சொல்வதென தெரியாமல் குழம்பியிருந்தான்.மனதில் ஏதேதோ சிந்தனை இருந்தும் அமைதியாய் அவன் முன்னே செல்ல காயத்ரி அவனைப் பின் தொடர்ந்தாள்.

கார் கிளம்பியதிலிருந்து கணத்த அமைதியே நிலவியது.காயத்ரி அவனுடனான நிமிடங்களை ரசித்திருந்தாள் என்றால் அன்புச்செல்வனோ மொத்தமாய் உடைந்திருந்தான்.

என்ன தோன்றியதோ சட்டென காரை ஓரமாய் நிறுத்தியவனை யோசனையாய் அவள் பார்த்திருக்க சிறிதும் தயக்கமின்றி அவள்புறம் திரும்பி தன் இடக்கையை லேசாய் நீட்டிய வண்ணம்,

“உனக்கு இது தேவைப்படுதானு எனக்குத் தெரியல.ஆனாலும் கேட்காம இருக்க முடியல..இரண்டு நிமிஷம் தோள்ல சாஞ்சுக்குறியா?”,பெரிதாய் ஒரு புன்னகை அவளிடத்தில் சிறு தயக்கம் கூட இல்லாத அந்த முகம் அது அப்படியே பதிந்து போனது அன்புச்செல்வனுக்கு.

கூடு கண்ட பறவையாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.முழுதான இரண்டு நிமிடங்கள் நிமிர்ந்தவளின் கண்களில் லேசாய் சிறு துளி நீர்.

“தேங்க்ஸ் அன்பு.உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டியே இதோ இது தான்..நான் சொல்லாமயே சில விஷயங்கள் உனக்குப் புரியுது இல்ல..அது எல்லாருக்கும் புரியாது..”,என்றவளின் முகத்தில் மீண்டுமாய் வந்து ஒட்டிக் கொண்ட புன்னகை அன்புச்செல்வனுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருந்தது.

“லைஃப்ல நிறைய தாங்கிட்டு இருந்துருக்க காயூ..இனி வாழ்க்கை மொத்ததுக்கும் உனக்காக ஒரு தோள் இருக்கு.வேணும் போதெல்லாம் ஓய்வு எடுத்துக்கோ..ம்ம்..”,என்றவன் அவள் முன் தலையை லேசாய் அசைத்து காரைக் கிளப்பினான்.

“காலேஜ் படிக்கும் போதே நோட் பண்ணிருக்கேன் நீ இப்படிதான் இல்ல…ரொம்ப பொறுமை நிறைய கேர் பண்ணிப்ப…பாத்துருக்கேன்.”

“அம்மாவோட லேட் பிரக்னென்சி ஒரு வேளை அதுக்கு காரணமா இருக்கலாம் காயூ.அவங்களை கவனிச்சுகிட்டே வளர்ந்ததுனால இயல்பாவே என் பழக்கம் அப்படி மாறிடுச்சு..”

“ம்ம்”

“அம்மாவை நார்மல் ஆக்கிறது ரொம்பவே கஷ்டமா இருந்துருக்கும் இல்ல..”

“ம்ம் நான் மறக்க நினைக்குற எட்டு மாசம் என் வாழ்க்கையில்..மனசளவுல ரொம்ப வீக் ஆகிட்டாங்க.எனக்கு ஏன் இப்படி நடக்கணும்னு தான் அவங்களோட மொத்த எண்ணமும்.அப்பா அதுக்கு மேல, அவங்களோடது காதல் திருமணம் தான்.அம்மாவோட துறுதுறுப்பு தான் எங்க வீட்டோட அடித்தளமே..அப்படியிருக்க அவங்களோட இந்த நிலைமை அவரை ரொம்பவே படுத்திருச்சு.

குடிப்பழக்கம் ஆரம்பிச்சது..கண்மண் தெரியாத அளவுக்கு.அதனால ஹெல்த் இஷுஸ்..இரண்டு பேர்ல யாரை கவனிக்குறதுனு தெரியாம குழம்பி நின்னது நான்.

எல்லாத்துக்கும் மேல தைரியமா இருக்குற மாதிரியே எப்போதும் காட்டிக்கணும் பாரு அதுதான் ரொம்ப கஷ்டமான வேலை.என்னோட யூனிபார்ம் அது கொடுத்த முகமுடி எல்லாம் சேர்ந்து அந்த கஷ்டத்தை கொஞ்சம் ஈசி ஆக்கிடுச்சுனு சொல்லலாம்.

ஒரு வழியாக இரண்டு பேரையும் நடைமுறையை புரிஞ்சுக்க வைச்சேன்.பட் இப்போ சொல்ற அளவு அது அத்தனை ஈசியா இருக்கல அன்பு.ஒண்ணு சொல்லவா?”

“..”,என்னவென்பதாய் வண்டியை ஓட்டியவாறே அவள்புறம் திரும்பியவனைப் பார்த்து சிரித்தவள்,

“அந்த நேரத்துல உன்னை ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன்.நிறைய தேடிருக்கேன்.உனக்கு போன் பண்ணி ஒரு ப்ரெண்டாவாவது இதையெல்லாம் ஷேர் பண்ணணும்னு நினைச்சுருக்கேன்.இப்போ நீ கொடுத்த இந்த இரண்டு நிமிஷத்துக்காக நிறைய ஏங்கிருக்கேன் அன்பு.

பட் இந்த இரண்டு நிமிஷம் எல்லாத்தையும் மறக்க வைச்சுருச்சு.நான் கேட்டு நீ பண்ணிருந்தா கூட பெரிய விஷயம் இல்ல.என் இடத்துல இருந்து எனக்காக யோசிச்ச பாரு…நான் காத்திருந்ததுல தப்பே இல்லனு தோணிடுச்சு அன்பு.தேங்க் யூ”,என்றவளை விசித்திர பிராணியாய் பார்த்திருந்தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

Meenakshi Subburaman July 15, 2026 - 12:12 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode