வரம்-26

by ஸ்ரீ
0 comments 107 views
A+A-
Reset

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

விளக்கம்
ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும் ,

போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப்
போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.

வலி அதிகமாகியிருக்க அபிநயா ஆனந்தனைத் தன்னோடே இருக்குமாறு கூறி அழைத்திருந்தாள்.

அபிநயாவின் பெற்றவர்களோடு சேர்ந்து அன்பும் காயத்ரியும் உச்சகட்ட பதட்டத்தில் இருந்தனர்.

“உன் மூஞ்சியைப் பார்த்தா எனக்கே பயமா இருக்குடி..”

“என்னடா குழந்தை பெத்துக்குறதுல இவ்வளவு இருக்கா..எனக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாம்..நான் பொறுமையாவே பெத்துக்குறேன்.”

“பயத்துல உளறுற காயூம்மா..”,என்றவன் லேசாய் சிரிக்க அவளோ அன்புவை முறைத்தாள்.

“உண்மையா தான் சொல்றேன்..இந்த பொண்ணு ரொம்ப டென்ஷன் பண்ணுறா..எனக்கு இதெல்லாம்..மஹூம்..”,இப்படி அவர்கள் தங்களுக்குள் பேசியபடியே அமர்ந்திருக்க ஆனந்தன் கையில் தன் மகளோடு வெளியே வந்தான்.

“பொண்ணு..”,என்றவன் அனைவரையும் பார்த்து புன்னகைக்க தன் பேத்தியை வாங்கி பார்த்த அபிநயாவின் தாயும் தந்தையும் காயத்ரியிடம் குழந்தையை நீட்டினர்.

“இருக்கட்டும் சித்தி..”

“பங்ஷன்ல நடந்ததை எல்லாம் மனசில் வைச்சுக்காத மா..வாங்கிக்கோ உன் மகளை..”,என்றதும் முகம் கொள்ளா புன்னகையோடு குட்டி பூவைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டாள்.

“அன்பு..அபி மாதிரியே இருக்கா இல்ல..தம்பி வாழ்த்துக்கள்..”

“வாழ்த்துக்கள் டா ஆனந்தா..”,என்றவன் தம்பியைக் கட்டிக் கொண்டான்.

சற்று நேரத்தில் அபிநயாவைப் பார்ப்பதற்கு அனைவருமாய் உள்ளே செல்ல காயத்ரி கையில் குழந்தையைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது அவளிற்கு.

“அபி உடம்பை பார்த்துக்கோ டா..”,என்ற அன்பு பெற்றோருக்கு அழைத்து விஷயத்தைக் கூறச் செல்ல காயத்ரி அவளருகில் குழந்தையைப் படுக்க வைத்தாள்.

“அபி உன்னை மாதிரியே க்யூட்டா இருக்கா..”

“ஆனால் உங்களை மாதிரியே தைரியமா வளரணும் அவ..”

“அதுக்கென்ன வளர்த்துடுவோம்..சித்தி பேசாம நாங்க இவளை நேரா எங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுறோம்.”,என்றவள் புன்னகைக்க அபிநயாவின் தாயோ,

“நீங்க இரண்டு பேரும் கூடப் பிறந்த அக்கா தங்கச்சி மாதிரி இருக்கீங்க..அதனால தான் அபிக்கு உங்களை எல்லாம் விட்டு இருக்க முடியல..”,என்றதைக் கேட்டு மற்றவர்கள் புன்னகைத்தனர்.

மறுநாள் அதிகாலையிலேயே ராகவன் குடும்பமாய் மருமகளையும் பேத்தியையும் பார்க்க வந்து விட்டிருந்தார்.

அவர்கள் வந்ததும் காயத்ரியும் அன்புவும் வேலைக்கு கிளம்புவதாய் கூறி கிளம்பினர்.

பதினாறாவது நாள் பேர் வைக்கும் வைபவம் சிறப்பாய் முடிந்திருக்க “ஆதர்ஷினி”,என்று பெயரிட்டு இருந்தனர்.

இரவு முழுவதும் அனைவரின் தூக்கம் கெடுத்து பகலில் சமத்தாய் தூங்கும் ஆதர்ஷினியை மடியை விட்டு இறக்கவில்லை காயத்ரி.

நாட்கள் அதன்போக்கில் நகர அன்பு தனது புதிய கிளையைத் திறந்திருந்தான்.பரப்பரப்பான இடம் ஆதலால் எந்நேரமும் கூட்டம் இருந்தது.அன்புவிற்கு அதில் அத்தனை மகிழ்ச்சி.தன் மனைவியின் மீது முழு பித்தனாகவே மாறிப் போயிருந்தான்.

நான்கு மாதம் முடிந்த கையோடு அபிநயா குழந்தையைக் கூட்டிக் கொண்டு புகுந்த வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள்.

மச்சினர் மாமனார் மாமியார்  கொழுந்தன் நாத்தனார் என அத்தனைப் பேரும் ஆதர்ஷினியை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர்.

அபிக்கு ஓய்வெடுப்பது மட்டுமே மிகப் பெரும் வேலையாய் இருந்தது கணவனின் வீட்டில்.

சர்ஜரி ஒன்றை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்தனின் கண்களில் பால்கனியில் தன் மகளைத் தோளில் போட்டு தட்டிக் கொண்டே நடந்து கொண்டிருந்த இன்பா பட்டான்.

“என்ன டா..”

“ஷ்ஷ்ஷ்ஷ்..ஏன்ண்ணே கத்துற ஒரு வழியா இப்போ தான் தூங்குறா..அண்ணி பாவம்..எழுப்பி விட்டுறாத..நீ போ நான் பாத்துக்குறேன்.”,என்று கிசுகிசுத்தவனைப் பார்த்து புன்னைகைத்தவாறு தனதறைக்குச் சென்றான்.

“அபி..”

“ம்ம் வாங்க..சாப்பிட எதாவது எடுத்துட்டு வரட்டுமா?”

“அதெல்லாம் வேண்டாம்..என்னாச்சு டயர்டா இருக்கா டா?”

“உங்க பொண்ணு எல்லாரையும் வைச்சு செய்யுறாங்க..அத்தையும் மாமாவும் தேன்மொழியோட ஒரு ஃபங்ஷனுக்கு போயிருக்காங்க..

இவ திடீர்னு ஒரே அழுகை..சமாதானப்படுத்தவே முடியல..பசியும் இல்லை..ஏன் அழறானு தெரியாம என்ன பண்றது..எனக்கு அழுகையே வந்துருச்சு..இன்பா தான் நான் பாத்துக்குறேன்னு சொல்லி வாங்கிட்டு போனான்..”

“ம்ம் தூங்கிட்டா..ஆனாலும் ஒரு குடும்பத்தையே வைச்சு செய்யுறா டி..”,என்றவன் மனைவியை ஆதரவாய் தோள் சாய்த்துக் கொண்டான்.

“ம்ம் எல்லாருக்கும் செல்லம் வேற..நாளுக்கு நாள் ரொம்ப பண்றா..”,என்றவள் இன்னுமாய் கணவனோடு சேர்ந்து கொண்டாள்.

“நீங்க எல்லாரும் எப்படி இப்படியிருக்கீங்க..”

“ஏன் டி..”,என்றவன் சிரித்தான்.

“ஆதுவுக்கே வீடு அமைதியா இருந்தா பிடிக்க மாட்டேங்குது..எப்பவுமே அவ பக்கத்துல யாராவது இருக்குறாங்களா அவளுக்கு அது தான் பிடிக்குது போல.அதைவிட என்னை எல்லாரும் இன்னும் நல்லா பார்த்துக்குறீங்க..”

“இப்போ தானா நல்லா பார்த்துக்குறோம்?”

“அப்படியில்லங்க..பொதுவா குழந்தை பெத்துக்க ஏன் அம்மா வீட்டுக்கு அனுப்புவாங்கனா,எல்லாரோட கவனமும் குழந்தை மேல தான் இருக்கும்.

குழந்தை சாப்ட்டுச்சா தூங்குச்சானு அதை தான் பார்த்துப்பாங்க.அம்மா மட்டும் தான் தன் மகளுக்கு என்ன தேவை அவ தூங்கினாளோ இல்லையோனு பெத்தவளைப் பத்தி கவலைப்படுவாங்க.

அதே நிலைமையை மாமியார் வீட்டுலேயும் யாராலேயும் எதிர்பார்க்க முடியாதுங்க..ஒரு டாக்டரா நானே எத்தனை பேர் ஹஸ்பெண்ட் கிட்ட சொல்லி அனுப்புவேன் தெரியுமா.

உங்க வைஃப்பை நல்லா பார்த்துக்கோங்க..அவங்களுக்கு தான் உங்க சப்போர்ட் நிறைய தேவைப்படும்னு.

ஆனால் இங்க எல்லாமே தலைகீழா இருக்கு.அத்தையும் மாமாவும் எப்பவும் என்னைப்பத்தி தான் கேட்குறாங்க.அன்பு அத்தான் அவங்க தங்கச்சி மாதிரி பார்த்துக்குறாரு.

காயத்ரி அக்கா கேட்கவே வேணாம் ஆதுக்கு அவங்க இருந்தா என்னை விட குஷி.இன்பாவும் தேனுவும் வேலை விட்டு வந்தாலே பாப்பாவை வாங்கி வைச்சுட்டு நீங்க கொஞ்ச நேரம் ஃப்ரீயா இருங்க அண்ணினு சொல்றாங்க..

குழந்தை பெத்து வந்தப்பறம் இந்தக் குடும்பத்தை இன்னுமின்னும் பிடிக்குது எனக்கு”,என்றவளுக்கு கண்கள் கலங்கியிருந்தது.

“அபிம்மா என்னடா..அழாத காய்ச்சல் வந்தா கஷ்டம்..ஏன் இப்படி இமோஷனல் ஆகுற நீ..”

“இல்லங்க எப்பவுமே ஒரு கல்யாண வாழ்க்கை குழந்தை வந்தப்பறம் நிறைய மாறும்.அதுக்கு காரணம் அந்த காலகட்டத்துல ஒரு தாயை அந்தக் குடும்பம் எப்படி நடத்துங்கிறது தான்.

அந்த ஆறு மாச காலத்துல நடக்குற எல்லாம் குழந்தை பெத்து வந்தவளுக்கு ஆழமா மனசுல பதிஞ்சுடும்.மாமியார் சரியா கவனிக்கவே இல்ல,புருஷன் குழந்தையை பார்த்துக்குறதுல உதவி பண்றதே கிடையாது.

நைட் தூக்கம் போய் காலையிலேயும் வீட்டு வேலை பார்த்து உடம்பும் மனசும் அலுத்துப்போகும்.

இவ்வளவு ஏன் பெண் குழந்தையைப் பெத்துட்டாங்கிறதுக்காக மனக்கசப்பை காட்டுற குடும்பங்கள் கூட இன்னும் இருக்க தான் இருக்குங்க..

இதெல்லாம், ரொம்ப சாதாரண விஷயம்னு நாம நினைச்சு அலட்சிப்படுத்துற மிகப்பெரிய உளவியல் பிரச்சனை.

ஊர் உலகத்துல யாருமே பிள்ளை பெத்துக்கலையானு ஈஸியா கேட்கலாம்.ஆனால் எல்லாருக்குமே அவங்களோட பிரசவ காலத்துல மனசை பாதிச்ச விஷயம்னு எதாவது ஒண்ணு கண்டிப்பா இருக்கும்.

எத்தனை வயசு ஆனாலும் அது மனசை விட்டு மறையவே மறையாது.எத்தனை வருஷம் ஆனாலும் சாதாரண சண்டையில் கூட அன்னைக்கு நான் பிள்ளையை பெத்துக் கிடக்குறப்போ இப்படி பண்ணிணவங்க தான நீங்கனு சொல்றதுக்கு ஒரு சின்ன விஷயமாவது இருக்கும்

ஆனால் எனக்கு சந்தோஷம் மட்டும் தான் இருக்கு.அதுக்கு காரணம் நீங்க எல்லாரும் தான் தேங்க் யூ”,என்றவள் கூறியதில் இருந்த உண்மைகளை புரிந்து கொண்டவனுக்குத் தன் குடும்பத்தின் மீதான பாசம் இன்னுமாய் பல மடங்கு அதிகரித்திருந்தது.

தேன்மொழிக்கு வேலை நன்றாகவே பழகியிருக்க IT வாழ்க்கைக்கு தன்னை நன்றாகவே மாற்றிக் கொண்டிருந்தாள்.முன்பு போல் அல்லாது சற்று தைரியமான பெண்ணாய் மற்றவர்களை எடைபோட்டு பழகும் திறனும் நிறையவே வந்திருந்தது.

ஹரிஷிற்கு முதலிலிருந்தே தேன்மொழியைப் பிடித்திருந்தது.கண்டும் காணாமல் அவன் பார்வை தன்னை உரசிச் செல்வதை தேன்மொழியும் உணர்ந்து தான் இருந்தாள்.

நட்புக்கு மேல் காதலுக்கு கீழ் எனும் மாதிரியான ஒரு நிலை.இருவருக்கும் அது பிடித்தும் இருந்தது.இருந்தும் அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருவருக்குமே துணிவில்லாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஹரிஷின் வீட்டில் கல்யாணப் பேச்சைத் தொடங்க அதற்கு மேலும் தாமதிக்காமல் தேன்மொழியிடம் பேச விழைந்தான்.

“தேன்மொழி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“சொல்லுங்க ஹரிஷ்..”

“வீட்ல எனக்குபொண்ணு பார்க்குறாங்க..”

“ஓ!!!”,என்றவள் அமைதியாகிவிட ஹரிஷே பேச்சைத் தொர்ந்தான்.

“எனக்கு உன்னை பிடிச்சுருக்கு தேன்மொழி.”

“!!!”

“உனக்கும் விருப்பம்னு தெரியும்..”

“இல்ல..அது..”

“என்னைப் பத்தி உனக்குத் தெரியும்.கண்டிப்பா உன்னை நல்லா பார்த்துப்பேன்.”

“அது..கொஞ்சம் பயமா இருக்கு..”

“ஏன்?”

“வீட்ல இதெல்லாம் எப்படி எடுத்துப்பாங்கனு தெரியல..எனக்கு அவங்களை மீறி எதுவும் வேண்டாம்.”

“அப்போ அவங்க சம்மதிச்சா உனக்கு ஓகே வா?”,லேசாய் விழியுயர்த்தி அவனைப் பார்த்தவள் ஆமோதிப்பாய் தலையசைக்க பெண்ணவளைப் பார்த்து புன்னகைத்தான்

“சரி உங்க அப்பா நம்பர் கொடு நான் எங்க வீட்ல சொல்லி பேச சொல்றேன்”

“நான்..அண்ணா நம்பர் தரேன்.அவர்கிட்ட பேசுங்க..அவர் அப்பாகிட்ட பேசுவார்.”,புன்னகையோடு தலையசைத்தவன் அன்புச் செல்லவனின் எண்ணை வாங்கிக் கொண்டான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode