113
“தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
விளக்கம்
“தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி
விளக்கம்
ஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மன்னனே (மனிதர்களே) ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்? ,
ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.”
காயத்ரிக்கு அதன் பின்னான நாட்கள் அத்தனையும் மகிழ்ச்சியின் உச்சமாய் இருந்தது.ஒவ்வொரு நொடியும் தன் மகவுகளோடு கழிக்கத் தயாராகிக் கொண்டு இருந்தாள்.
அதைவிட மொத்த குடும்பமும் அவளைப் பார்த்துக் கொண்ட விதம்,அதிலும் அவளைப் பார்க்க வந்திருந்த தாய் தந்தையிடம் ராகினி பேசியது இன்னமும் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
விஷயத்தைக் கூறிய அன்று காயத்ரியின் தாயும் தந்தையும் அவளைப் பார்க்க வந்திருக்க மகள் தாயாகப் போகிறாள் என்பதை விட என்ன மகிழ்ச்சி இருந்துவிட முடியும் பெற்றோருக்கு.
அப்படியாய் காயத்ரியை அமர்த்தி பேசிக் கொண்டிருக்க அவர்களின் எதிர் இருக்கையில் அமர்ந்தவராய் ராகினி தயக்கமாய் அமர்ந்திருந்தார்.
“அண்ணி எதோ சொல்ல நினைக்குறீங்க?என்னனு சொல்லுங்க..”,என்று காயத்ரியின் தாய் அவரை கேட்க மற்றவர்களும் ராகினியைப் பார்த்தனர்.
“ஒண்ணுமில்ல அண்ணி..வந்து காயத்ரியோட பிரசவத்தை இங்கேயே வைச்சுக்கலாம்னு என் எண்ணம்..”
“!!”
“இல்ல பாவம் உங்களுக்கும் கஷ்டம்.தப்பா எடுத்துக்காதீங்க..வேணும்னா மூணு மாசம் நீங்க இங்க வந்துருங்களேன்..”
“புரியுது அண்ணி..இருந்தாலும் முறைனு ஒண்ணு இருக்கே..யாரும்..”
“யாரும் என்னவும் நினைக்கட்டும்..நிறைய பார்த்தாச்சு அண்ணி..பேசுற யாரும் எதுவும் பண்ண போறதில்ல..நம்ம பசங்களுக்கு எது நல்லதோ அதைப் பார்ப்போம்.உங்களுக்கு சம்மதமா சொல்லுங்க அது போதும்.
காயூவை உங்க அளவுக்கு இல்லைனாலும் கண்டிப்பா நான் நல்லா பார்த்துப்பேன்.என்ன அண்ணா சொல்றீங்க?”,என்ற மனைவியை ராகவன் புன்னகை முகமாய் பார்த்திருக்க அன்புவும் காயத்ரியும் எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தனர்.
காயத்ரியுமே அதைப் பற்றி யோசித்திருந்தாள் தாயின் நிலைமை இப்படியிருக்க உதவிக்கு என்று சித்தி வந்தாலும் அவர் குடும்பத்தை விடுத்து எத்தனை நாள் இருந்துவிட முடியும் என்றே தோன்றியது.
ஆனால் இன்று ராகினியாகவே பேசியதை அவளால் கிரகித்துக் கொள்ளவே இன்னும் நேரம் தேவைப்பட்டது.பெண் வீட்டில் பார்த்து பார்த்து செய்து அனுப்பும் போதே ஆயிரம் குறை கூறும் புகுந்த வீட்டு மக்களுக்கு நடுவே தன் மாமியாரை நினைத்து பெருமை படாமல் இருக்க முடியவில்லை.
“என்னை விட நீங்க தான் அவளை நல்லாவே பார்த்துப்பீங்க அண்ணி..அதில் சந்தேகமே இல்லை..”
“எத்தனை பேர் பார்த்தாலும் அம்மா போல வருமா?ஆயிரம் சொன்னாலும் அம்மா அம்மா தான்.என்ன காயூ நீ என்ன சொல்ற?”
“ரொம்ப கரெக்ட் தான் மா..அம்மாவும் மாமியாரும் எப்பவும் ஒண்ணு ஆக முடியாது.ஆனால் நான் விதிவிலக்கு எனக்கு மட்டும் இரண்டு அம்மா இரண்டு பிறந்த வீடு..”,என்றவள் சிரிக்க காயத்ரியின் பெற்றவர்களுக்கு மனம் நிறைந்து போனது.
அத்தனை மகிழ்ச்சியையும் மீறி மசக்கையினால் துவண்டு போனாள் காயத்ரி.அன்புவிற்கோ ஒரு ஒரு நாள் காலையும் நரகமாய் இருக்கும்.
அவள் அடிவயற்றிலிருந்து வாந்தி எடுக்கும் ஒரு ஒரு நேரமும் துடித்து தான் போனான்.ஒரு மாதத்தில் காயத்ரி எடையே சற்று குறைந்து விட்டிருந்தாள்.
அபிநயாவிற்கு வேலை குழந்தை என நேரம் சரியாய் இருக்க ராகினிக்கு வீட்டு வேலை சரியாய் இருந்தது.பெண்களின் நிலை உணர்ந்தவர்களாய் ஆண்கள் சில பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டனர்.
வேலைக்கு வேண்டுமானால் ஆள் வைத்து கொள்ளலாம் என்று ராகினி கூற தங்களால் முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டான் அன்பு.
அபிநயா மருத்துவமனைக்கு கிளம்புவதற்குள் காலை சமையலோடு சிறியவர்களுக்கு மதிய உணவு வரை செய்வதில் உதவி விட ஆனந்தன் வீட்டை சுத்தம் செய்து விடுவான்.
அன்பு ஒன்பது மணிக்கு வரும் நேரம் துணிகளை மிஷினில் போட்டு மாடியில் உலர்த்தி விட ராகவன் காய்கறி வீட்டு சாமான்கள் வாங்கும் வேலைகளைப் பார்த்து கொண்டார்.
இன்பாவும் தேன்மொழியும் காலையும் இரவும் இருக்கும் பாத்திரங்களை தேய்த்து வைப்பதோடு ஆது பாப்பாவைப் பார்த்துக் கொண்டனர்.
அனைவருக்கும் சுறுசுறுப்பாய் வீட்டைச் சுற்றித் திரியும் காயத்ரியைத் தான் தேடியது.மதியத்திற்கு மேல் வந்து கீழே அமர்ந்தாலும் அதீத களைப்போடவே இருந்ததால் அமைதியாகவே பொழுதை கழித்தாள்.
“ம்மா என்ன இவ்வளவு படுத்துது..உங்களுக்கும் சின்னதுங்க பிறக்குற அப்போ இப்படி தான் இருந்துதா?”
“ஆமா காயூ.மூணு பிரசவத்துல இவங்க தான் என்னை ஒரு வழி ஆக்கினது.கிட்டத்தட்ட உன் வயசுல தான் எனக்கும் பிரசவம்.காலையில் எழுந்துக்குற நேரம் ஆனாலே ஏன் டா விடியுதுனு இருக்கும்.
அதை விட சமையல்கட்டு பக்கத்தில் கூட போயிட முடியாது.தாளிச்ச வாசத்துக்கே பிரட்டிட்டு வரும்.முழுசா மாமாவும் அன்புவும் தான் பார்த்துப்பாங்க..
அன்புக்காவது கொஞ்சம் விவரம் தெரியும் ஆனந்தனும் சின்னவன் தானா..ஆனால் என்ன இரண்டு பேரும் கொஞ்சம் கூட படுத்த மாட்டாங்க..அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு இவங்க ரெண்டு பேரும் சரியான வாலுங்க..”
“நீங்க சொல்றதை பார்த்தா எனக்கும் அதே நிலைமை தான் போலயே..என் புருஷன் மாதிரி சமத்தா வராதுங்களா?”
“எங்களைப் பார்த்துக்க ஆள் இல்ல அதனால அன்பு மாதிரி இருந்தா நல்லது.உனக்கு தான் நாங்க இத்தனை பேர் இருக்கோமே அப்பறம் என்ன?சேட்டை பண்ணா தான் குழந்தை.”,என்றவர் ஆது பாப்பாவிற்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்தார்.
“ஏன் மா குடும்பம் புருஷன் குழந்தைங்க இப்போ பேரக் குழந்தைங்க..இதை தாண்டி உங்களுக்குனு நீங்க எதுவும் யோசிச்சது இல்லையா?”
“நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு காயூ.என் குடும்பமும் அபி வீடு மாதிரி தான்.ரொம்பவே கட்டுப்பாடுகள் உண்டு.பதினெட்டு வயசில் கல்யாணம்.ஆனால் அப்பா என்னை பாத்துக்கிட்ட மாதிரி என் வீட்டில் கூட பாத்துகிட்டது கிடையாது.
எனக்கு என்ன வேணும் எனக்கு என்ன பிடிக்கும்னு என்னை பிரதானப்படுத்தி தான் அவர் யோசிப்பார்.இந்தகாலத்துல இதெல்லாம் சாதாரணம் ஆனால் அப்போ எல்லாம் பொண்டாட்டினா ஒருபடி கீழே வைச்சு பார்க்கணும்ஙௌகிறது தான் வழக்கம்.
நான் நானா இருந்தேன்.எனக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையா இது இருந்தது.அதனாலேயே அவரைத் தவிர வேற எதை பத்தியும் யோசிக்கல.அப்பா கூட கேட்டார் எதாவது படிக்கிறியா?உனக்குனு எதுவும் ஆசை இருந்தா சொல்லுனு.
அதெல்லாம் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.என் ஆசை கவனம் மொத்தமும் இந்த குடும்பம் தான்.அதுவும் தனியா வளர்ந்த எனக்கு நாலு பசங்க வீடு நிறைஞ்சு இருக்கும் போது வேற ஒண்ணுமே தோணல.
ஆனால் வீட்டோட பொறுப்பு மொத்தமும் நான் தான்.சொல்ல போனால் கல்யாணம் ஆன புதுசில் அப்பாவுக்கு சேமிப்புனு பெருசா எதுவுமே கிடையாது.
நான் வந்தப்பறம் சம்பள பணத்தை அப்படியே என் கையில் கொடுத்துருவார்.நீ பார்த்துப்பங்கிற அவரோட அந்த நம்பிக்கை அதையே என் முழு நேர வேலையா எடுத்துகிட்டேன்.
வண்டிக்கு பெட்ரோல் போடுறதில் இருந்து ஒரு டீ சாப்பிடனும்னாலும் என்கிட்ட கேட்டு தான் வாங்கிட்டு போவாரு.
இன்னமும் நியாபகம் இருக்கு அவரோட சம்பளத்தில் நாங்க ஆரம்பிச்ச முதல் ஆர்டி பணம் நூறு ரூபாய்.கொஞ்சம் கொஞ்சமா வருமானத்துக்கு ஏத்த மாதிரி சேமிச்சு இந்த வீட்டை கட்டி குடி வந்தப்போ அவர் முகத்தில் தெரிஞ்ச அந்த சந்தோஷமும் நிம்மதியும் வாழ்க்கை மொத்ததுக்கும் எனக்கு போதும்னு தோணிடுச்சு.
உண்மையை சொல்லணும்னா வெளி வேலைனு போகாத பெண்களோட வேலை இன்னும் அதிகம் தான்.வீட்டை பத்தின எந்த கவலையும் இல்லாம எல்லாம் என் பொண்டாட்டி பார்த்துப்பாங்கிற நிம்மதியில் ஆண்கள் அவங்க வேலையை முடிச்சு வராங்களே அதெல்லாம் ஒரு தனி சந்தோஷம்.
ஆனால் உன்னை அபியை எல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்.எவ்வளவு அழகா வெளிஉலகத்தை எதிர்கொள்றீங்கனு.
என் ரெண்டு மருமகளும் ரொம்ப கெட்டிக்காரிங்கனு அப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பேன்.அதைவிட நீங்க இரண்டு பேரும் குடும்பத்தோட ஒத்து வாழறது தான் அப்பாக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்.
என்னை மாதிரி வெளி உலகமே தெரியாம குடும்பத்தை நல்லா பார்த்துக்குறது வேற.ஆனால் நீயும் அபியும் ஒரு நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிச்சாலும் இந்த மாதிரி இருக்குறது தான் பெருமையான விஷயம்.”,என்றவரை எப்போதும் போல் பாசமாய் பார்த்திருந்தவள் சட்டென எதோ தோன்ற,
“எல்லாம் சரி தான் என்ன இரண்டு மருமகளும் அப்படி இப்படினு சொல்றீங்க.மூணாவதும் அதே ரகம் தான்”,என்றவள் சிரிக்க ராகினி அதிர்ந்து பார்த்தார்.
“பொண்ணை பார்க்குறீங்களா மா?ஆனால் நான் சொன்னேன்னு யாருகிட்டேயும் சொல்லக் கூடாது.”
“உன்னை என்ன பண்ணலாம் மாமியாரோட பேசுறோம்னு கொஞ்சமவது பயம் இருக்கா?”
“அப்பப்போ நீங்க வேற அதை நியாபகப்படுத்திகிட்டு..இப்போ மூணாவது மருமகளை பார்க்கணுமா வேணாமா?”
“இந்த இன்பா பையன் இந்த வேலையெல்லாம் பண்றானா?அப்போ மூணாவது மருமக இன்ஜினியாரா?!”
“ஹா ஹா நீங்க தான் மாமியார்னு நீங்களே சொன்னா தான் உண்டு எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றேன்.இதான் உங்க ரியாக்ஷனா..என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா..”,என்றளைப் பார்த்து சிரித்தவராய்,
“அப்பாக்கு அவன் மேல ஒரு டவுட் உண்டு.விளையாட்டா என்கிட்ட சொல்லுவாரு உன் மூணாவது புள்ளைக்கு பொண்ணு தேடுற வேலையெல்லாம் இருக்காதுனு நினைக்குறேன்னு.அது உண்மை ஆகிருச்சு.”,என்றவரோடு சிரித்தவள் தன் மொபைலில் இருந்த கிருத்திகாவின் புகைப்படத்தைக் காட்டினாள்.
“என்ன வேலையெல்லாம் பாக்குறீங்க?அந்த பொண்ணும் வந்துச்சா அன்னைக்கு!”
“உங்க பொண்ணு தான் சிபாரிசு..எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை மா..”,என்றவள் சிரித்தாள்.
“அதனால உங்களுக்கான பொறுப்புகள் எல்லாம் ஒண்ணு ஒண்ணா முடியுது.கஷ்டப்பட்டு ஒரு வயசு வரை என் புள்ளைங்களை வளர்த்து கொடுத்துட்டு அப்பாவோட டூர் டூரா போறதுக்கு தயாராகணும்.அதுக்கு உடம்பை நல்லா பார்த்துக்கணும்.டீலா?”
“ஆமா நாங்க டூர் போற வயசுல தான் இருக்கோம் பாரு..”
“ம்மா பொய் சொல்லல நிஜமாகவே.வெளிநாடு எல்லாம் நாம போவோமோ இல்லையோ தெரியாது இந்தியா மொத்தமும் இரண்டு பேரும் ஒரு ரவுண்ட் போயிட்டு வாங்க.அது கோவில் குளமா இருந்தாலும் சரி ஹனிமூன் ஸ்பாட்டா இருந்தாலும் சரி.”,என்றவளை செல்லமாய் அடித்தவர்,
“பார்க்கலாம் பார்க்கலாம்.”
“சொன்னால் சொன்னது தான்.அன்புகிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்.டிக்கெட் போட்டு தர வேண்டியது எங்க வேலை சுத்தி பார்த்துட்டு வர வேண்டியது உங்க இரண்டு பேர் வேலை.போதும் நாலு பசங்களையும் நல்ல படிக்க வைச்சு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவங்களுக்கு அழகான வாழ்க்கையும் அமைச்சு கொடுத்துட்டீங்க.
அப்பாவுக்கும் உங்களுக்கும் இனி ஓய்வோட சேர்த்து உங்களுக்கான நேரமும் தான் வேணும் மா.”,என்ற மருமகளை எப்போதும் போல் அதிசயித்துப் பார்த்திருந்தார் ராகினி.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!