417
“மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு
மு.வ விளக்க உரை: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.”
“என்னை என்ன வேணாலும் சொல்லுங்க. ஆனால் இந்த வீட்டோட அழகே மலர் மட்டும் தான். அவளை எல்லாருமா சேர்ந்து நோகடிச்சுட்டு இருக்கீங்க. உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்த மட்டுமே தெரிஞ்ச ஒரு உயிரை எல்லாருமா சேர்ந்து வதைக்குறீங்க.
உங்க பொண்ணா மட்டும் அவ இருந்தா நீங்க என்ன பண்ணிணாலும் யாரும் கேட்கப் போறதில்லை. ஆனால் அவ என்ட உயிர். அவளை கஷ்டப்படுத்துறவங்க யாரா இருந்தாலும் பொறுத்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.”
“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு?”
“யாருக்கு எப்படி புரியுமோ அப்படி தன்னே பேச முடியும். ஒண்ணு மட்டும் சொல்றேன். உங்களை எல்லாம் ரொம்ப உயர்வா நினைச்சுருந்தேன். ஆனால்..
என்ட அம்மைக்கு நீங்க பண்ணிணதைக் கூட நான் மறக்கும் மன்னிக்கும் ஆனால் என்ட மலரை அழ வைச்சால் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டேன்.”, என்றவன் முத்துப் பாண்டியின் அருகில் வந்த வண்ணம்,
“மாமா..”
“!!”
“எல்லாரையும் விட நீங்க உங்க மகளை கஷ்டப்படுத்திருக்கக் கூடாது. உங்க துணை இருந்திருந்தா அவ இந்த உலகத்தையே கூட எதிர்த்து நின்னுருப்பா.
கண்டிப்பா அடுத்த முறை பேச எல்லாம் மாட்டேன். என்னோட மலரை என்னோடவே கூட்டிட்டு போயிட்டே இருப்பேன். வார்னிங்கா தான் இதையெல்லாம் சொல்றேன். அப்படி என்ன உங்க பொண்ணு மேலேயே இவ்வளவு கோபம் உங்களுக்கு?
நீங்க நாலு அடி அடிச்சா கூட அவளால சந்தோஷமா அதை ஏத்துக்க முடியும். ஆனால் இப்படி பேசாம இருந்து அவளை..
நீங்க எல்லாரும் அவளை மீனாட்சினு சொல்லுவீங்களே அது பேச்சுக்கு சொல்லுறீங்களானு தெரியலை. ஆனால் நான் மனசார நம்புறேன் அவ தெய்வத்தின்டே குழந்தை தான்.
எங்களட காதல், உங்க தங்கச்சியோட பிரச்சனை எல்லாத்தையும் மறந்து மலர்னு ஒருத்தியைப் பத்தி முதலில் யோசிங்க.
உங்க எல்லாரோட இமோஷனல் அட்டாக்கால் அவளோட கவனம் சிதறுது. எல்லாத்தையும் விட என்ட மலரோட கனவு லட்சியத்தை அவள் அடையணும். அது எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.
சில மாசமா தெரிஞ்ச எனக்கே அவளைப் பத்தி இத்தனை அக்கறை இருக்கும் போது. நீங்க எல்லாம் அவளை எப்படி பார்த்துருக்கணும்.”
“போதும் டா. விட்டா பேசிகிட்டே போற? என்ன ஆனாலும் உன் அம்மாவும் இங்கே வரப் போறது கிடையாது. எங்க பொண்ணும் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறது கிடையாது. வெளியே போ முதல்ல.”, என்ற இனியன் அவனை நோக்கி கையை ஓங்கியிருந்தார்.
பெண்கள் பயந்து போய் நிற்க சட்டென தம்பியின் கையைப் பிடித்து தடுத்தவராய் முத்துப் பாண்டி முகுந்தனிடம்,
“இவ்வளவு பேசுற நீங்க மனசு வைச்சால் அவ இப்போ படுற கஷ்டத்தையெல்லாம் மாத்த முடியுமே..”
“???”
“அவளை மறந்துட்டு போய் உங்க வேலையைப் பாருங்க. எங்க பொண்ணை நாங்க பார்த்துக்குறோம்.”
“அது அத்தனை சுலபம் இல்லையே மாமா..”
“!!!”
“காதல்னால் உங்களைப் பொறுத்த வரை என்னனு எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அது ஒரு பொண்ணு என் மேல வைச்ச நம்பிக்கை. ஒரு ஆம்பளையா நான் அந்த நம்பிக்கையை காப்பாத்தலைனால் அது எனக்கு அசிங்கம்.
தன்னோட அச்சனுக்கு அடுத்து அவரை மாதிரியே இவனும் என்னை வாழ்க்கை மொத்தமும் நல்லா பார்த்துப்பான்னு ஒருத்தனை தேர்ந்துடுக்குறதுக்கு எத்தனை யோசிச்சுருக்கணும்.
அதிலேயும் மலர் மாதிரியான ஒரு பொண்ணுக்கு ஒருத்தர் மேல வர்ற நம்பிக்கை எல்லாம் சாதாரண விஷயம் இல்லை மாமா.
அந்த நம்பிக்கைகாக கடைசி வரை நான் அவளோட தன்னே நிக்கும். என் அச்சன் என்ட அம்மைக்கு நின்னது போல.”, என்றவனின் உறுதி பெண்களுக்கு மனதில் நிம்மதியைக் கொடுக்க முத்துப் பாண்டியின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பூங்கோதை மற்றும் குணவதியிடம் விடைபெற்றவனாய் முகுந்தன் வெளியேறிவிட அங்கு பெரும் அமைதி நிலவியது.
“என்ன தான்லே உங்களுக்கு எல்லாம் வேணும்? ஏன் இப்படி வெறிபிடிச்சு அலையுறீக? இத்தனை வருசமா என் மகளை பார்க்க விடாம பண்ணுனீங்க. இப்போ என் பேத்தி வாழ்க்கையையும் கெடுக்க பார்க்குறீங்களே அப்படி என்னவே சாதி முக்கியமா போச்சு உங்களுக்கு எல்லாம்?”
என்று பூங்கோதை கத்த ஆரம்பிக்க குணவதி அழுதபடி உள்ளே சென்றிருந்தார். கன்னிகா தன் மாமியாரைச் சமாதானப்படுத்த உள்ளே செல்ல ஆண்கள் மூவருமாய் அப்படியே இருக்கையில் அமர்ந்தனர். இனியன் தான் கடுகடுவென அமர்ந்திருந்தார்.
“சின்னப் பய என்ன பேச்சு பேசிட்டு போறான். குடும்பத்துக்கே இது தான் பொழப்பு போல. இத்தனை வருசம் கழிச்சு இதுங்க கண்ணில் படலைனு யாரு கேட்டா? மனுசனுக்கு நிம்மதியே போச்சு. ச்சை..”, என்றவர் கிளம்பிச் சென்றுவிட முத்துப் பாண்டி தந்தையைப் பார்த்தார்.
“உங்களுக்கு அவனோட பேசணும்னு ஆசை தானப்பா? அப்பறம் ஏன் கோபப்பட்டீங்க?!”, என்றதில் சிறு அதிர்வு பெரியவரிடம்.
“சொல்லுங்கப்பா உங்க மகளைப் பார்க்கணும்னு தோணலையா?”
“கண்டதை உளறாம போய் பொழப்பைப் பாரு.”, என்றபடி கனியின் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
இரவு வீட்டிற்கு வந்த சிறியவர்களுக்கு விஷயம் தெரிய வர மாறன் கத்த ஆரம்பித்திருந்தான். திருமா அமைதியாய் அறைக்குள் செல்ல அவனுக்காகவே காத்திருந்தவளாய் கன்னிகா,
“ஏங்க..”
“ம்ம்?”
“நீங்களும் ஏன் மங்கையைப் பார்க்காம பேசாம இருக்கீங்க? கோபமா இருந்தா நாலு திட்டு திட்டிட்டு அடுத்தது என்னனு பார்க்கணும்.
ஒரு வகையில் மங்கை அதை தான் பண்ணிணாள். அவளால மனசில் வைச்சுக்க முடியாம தான் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்துட்டு பழைய படி உங்க எல்லாரோடயும் இருக்கணும்னு நினைச்சா. ஆனால் இப்போ நீங்க பண்றது தப்புனு தோணுதுங்க.”, என்றதைக் கேட்டு இரு கைகளையும் கட்டிலில் ஊன்றியபடி தரையை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் திருமா.
“அப்பத்தா சொன்னது மாதிரி தான நீங்க எல்லாம் பண்றீங்க. நேத்து வரை அவளை அத்தனைப் பேரும் தலையில் தூக்கி வைச்சு ஆட்டிட்டு இப்போ காதல்னு வந்தவுடனே கீழே தூக்கி எறிஞ்சுட்டீங்களே. பாவம்ங்க மங்கை.”
“என் பிள்ளையை பத்தி நீயே இம்புட்டு யோசிக்கும் போது நான் யோசிக்க மாட்டேனா டி?”, என்றவனின் குரல் கம்மியதில் பதறிப் போனவளாய் கணவனின் அருகில் அமர்ந்து தோள் தொட்டாள்.
“என்னங்க???”
“பாப்பா என்னைப் பார்த்து நீ தான்ண்ணே அப்பாகிட்ட பேசணும்னு சொல்லிட்டா என்னால அதை மீற முடியாது டி. அவளுக்காக இந்தக் குடும்பத்தையே கூட நான் எதிர்த்து நிப்பேன். அந்தப் பயத்தினால தான் அவளை பார்க்காம இருந்தேன்.
நமக்கு எத்தனை பிள்ளை பிறந்தாலும் எனக்கு என் பாப்பா தான் முதல் பிள்ளை. அவளுக்காக அவ சந்தோஷத்துக்காக நான் எதுவும் செய்வேன். ஆனால் குடும்பம் உடைஞ்சுரும்.
சித்தப்பாவும் மாறனும் அம்புட்டு கோவத்தில் இருக்காங்க. மாறன் இப்படி இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை. இந்த நிலைமையில் நான் பாப்பா பக்கம் பேசிட்டேன்னால் தப்பா போயிடும்.
பரிதவிச்சு போய் நிக்குற என் பிள்ளை முகத்தை பார்க்க பிடிக்காம தான் கோழை மாதிரி ஓடி ஒளியுறேன். எங்க எல்லாரையும் விட அவளுக்கு இப்போ முகுந்தன் இருக்காரு.
அதனால தான் வலிச்சாலும் வெளியே காட்டாம பொறுத்துகிட்டு இருக்கேன்.”, என்ற கணவனைத் தோள் சாய்த்துக் கொண்டவளுக்கு மனம் பாரமாகிப் போனது.
மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்க்கும் பெண்கள் கண்ணீருக்கு நிகரான வலியை உள்ளுக்குள் போட்டு மாய்ந்து போகும் ஒவ்வொரு ஆணும் சுமந்து கொண்டு தானே இருக்கிறான் என்று தோன்றியது.
மறுநாள் மேட்ச் முடிவதற்காய் பொறுத்திருந்த மாறானால் அதற்கு மேல் முடியாமல் மங்கைக்கு அழைத்து கண்மண் தெரியாமல் கத்தினான்.
“என்ன டி நினைச்சுட்டு இருக்கான் உன் அத்தை மவன்? என்னவோ அப்பாவையும் பெரியப்பாவையும் எதிர்த்து குரல் கொடுத்துட்டு போனானாம்?
உன்னை எப்படி பார்த்துக்கணும்னு க்ளாஸ் எடுத்தானாமே? அவன் சொல்லி தான் இத்தனை வருசம் நீ வளர்ந்தியா? ஒண்ணும் சரியா படலை மங்கை. பார்த்து இருக்க சொல்லு. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது.”, என்றதைக் கேட்டவளுக்கு தனக்காக முகுந்தன் அங்கு சென்றான் என்பதே அதிர்ச்சி எனில் இப்போது அண்ணனின் இந்தக் கோபம் அதைவிட அதிர்ச்சியாய் இருந்தது.
ஒரு முடிவிற்கு வந்தவளாய் தனது உடைகளை பையில் வைத்தவள் கார்த்திகேயனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அத்தையிடம் விடைபெற்று கிளம்பியிருந்தாள்.
வீட்டிற்குள் வந்தும் யாரையும் அழைக்காமல் அவள் போக்கில் தனதறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். வரவேற்பறையில் யாரும் இல்லாததால் அவள் வந்ததே யாருக்கும் தெரியாமல் போயிருக்க அவளது குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்ட கார்த்தி குணவதிக்கு அழைத்து அவள் எப்படியிருக்கிறாள் என்று விசாரித்தான்.
“பாப்பா கிளம்பிட்டாளா!?”
“என்ன அத்தை சொல்லுறீங்க. இந்நேரம் அவ வீட்டுக்கு வந்துருக்கணுமே.”, என்றதில் பதறியவராய் அவளது அறைக்கு ஓடினார்.
குளித்து வெளியே வந்தவளைப் பார்த்தபோது தான் போன உயிர் வந்ததாய் தோன்றியது குணவதிக்கு. கார்த்திகேயனிடம் விவரத்தைத் தெரிவித்து விட்டு மகளிடம் வந்தவர்,
“ஏன் கண்ணு நீ வந்ததே தெரியாது. சொல்லிருக்கலாம்ல?”
“எதோ யோசனையில் வந்துட்டேன் மா. நீ போ நான் வரேன்”, என்றவள் தனது கைப்பேசியோடு கீழே வர சரியாய் மாறன் உள்ளே நுழையும் நேரம் முகுந்தனுக்கு அழைத்தாள்.
“மலரே.. மேட்ச் ஜெயிச்சோ?”
“உன்னை யாரு இங்கே வர சொன்னது?”, என்று கத்திய கத்தில் பெரியவர்கள் வெளியே எட்டிப் பார்க்க, மாறன் அவளைத் தான் முறைத்து நின்றான்.
“எந்தா மலரே?”
“இங்கே எல்லார்கிட்டேயும் பேச்சு வாங்க தான் உன்னை பெத்துப் போட்டுருக்காங்களா? நான் உன்னை விரும்புறேன் தான் அதுக்காக எல்லாராயும் எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது.
இன்னொரு தடவை இது மாதிரி எதாவது பண்ணிண அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.”, என்றவள் மாறனை முறைத்தவாறே அழைப்பைத் துண்டித்திருக்க அங்கு முகுந்தன் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தான்.
சரியாய் அந்த நேரம் அமுதினி மங்கைக்கு அழைக்க கடுப்போடு அழைப்பை ஏற்றவளாய்,
“ஹலோ என்ன டி வேணும் உனக்கு. சும்மா நொய் நொய்னு போன் போட்டுட்டு இருக்க?”
“ஏய் லூசு மங்கை எதுக்குடி இப்படி கத்திட்டு இருக்க?”
“ஆமாண்டி உனக்கு உன் அண்ணனுக்கு எல்லாம் என்னைய பார்த்தா லூசா தான் இருக்கும். நீங்க எல்லாரும் தான் ரொம்ப அறிவாளி. குடும்பமாடி இது ச்சை. இப்போ தான தெரியுது என் அத்தை ஏன் தைரியமா வெளியே போனானு.
இந்த பைத்தியகாரக் கூட்டத்துகிட்ட மாட்டிகிட்டு எவன் அவஸ்தை படுறது. வை டி வந்துட்டா மங்கை நொங்கைனு.”, என்றவள் தாயை பெருங்குரலெடுத்து அழைத்தாள்.
“ஏன் கண்ணு இப்படி கோபப்படுற..”
“இந்தக் காட்டானுங்களோட உட்காந்து நீ குப்பை கொட்டு என்னால முடியாது. மேட்ச்க்கு செலெக்ட் ஆயிருக்கேன். இவங்க படுத்துற அக்கப்போரில் நான் ஜெயிச்சா மாதிரி தான். நான் போறேன். எனக்கா எப்போ வரத் தோணுதோ அப்போ வருவேன்.
பாப்பா பீப்பானு யாராவது தேடி வந்தீங்கனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது. டேய் கருவாப்பயலே உனக்கு இருக்கு டி ஆனாலும். ஒரு நாள் சிக்குவ”, என்றவள் மாறனை மிரட்டிவிட்டு தனதறைக்குச் சென்றுவிட ஓரமாய் நின்ற கன்னிகா லேசாய் சிரித்திருந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Mangai is back💐
Nice